அத்திம்பேர்

This entry is part 4 of 4 in the series 1950 களின் கதைகள்

1958 மழைக்காலம் 

மெட்ரிக் அளவு முறை (மீட்டர், லீட்டர், கிலோக்ராம்) அமலுக்கு வந்தது. 

நீங்க எல்லாம் வீட்டுக்குன்னு சொல்லாம ஆத்துக்குன்னு சொல்றீங்களே, அமராவதியைப் போல அங்கே தண்ணி ஓடுதா? 

அப்படி இல்ல. அகத்துக்குன்னு முன்னொரு காலத்தில சொன்னோம். இப்ப ஆத்துக்குன்னு மாறிடுத்து. தமிழ் இலக்கியத்தில கூட வீடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் அகம். 

அது சரி. நீங்க அக்கா கணவரை அத்திம்பேர்னு கூப்பிடறது? அத்திம்பேர்னா அத்தையின் அன்பர். நான் என் அக்கா புருஷனை மாமான்னு சொன்னா, அவர் நிஜமாலுமே எனக்கு மாமா. அம்மாவின் சொந்தத்தம்பி. 

ம்ம்ம்… 

வாரத்தின் முதலில் தீபாவளி வருவது குமரநாதனுக்கு மிகவும் பிடிக்கும். பள்ளிக்கூடத்துக்கு ஐந்து நாள் தொடர்ச்சியாக விடுமுறை. நான்கு நாள் முந்தியே பட்டாசு வாங்கி வரலாம். நமுத்திருந்தால் வெயிலில் உலர்த்த நேரம் கிடைக்கும். 

சனிக்கிழமை அவன் அப்பாவுக்கு பாதி நாள். 

“வேலையிலேர்ந்து வந்து உன்னை பட்டாசு வாங்கக் கூட்டிண்டு போறேன்” என்று கிளம்பினார் அப்பா.  

குமரநாதனின் குறுகிய வாழ்க்கையில் அது மிக மகிழ்ச்சிகரமான செயல். சொல்லப்போனால் அது தொடர்பான இன்னும் சில காரியங்களும் சந்தோஷமானவை. (அத்தை பெண்) சங்கரியும் அவனும் சேர்ந்து என்னென்ன வாங்குவது என்று பட்டியல் போடுவது முதல் கட்டம். சங்கரியை விட இரண்டு வயது மூத்த சௌந்தரம் அதில் தலையிடமாட்டாள். 

பொருள்களின் விலை ஏறியதாலும், சிறுவர்களுக்கு ஒரு வயது கூடியதாலும், கார்த்திகைக்குக் கொஞ்சம் மத்தாப்பு மிச்சம் வை என்று அம்மா தவறாமல் சொல்வதாலும் முந்தைய ஆண்டுகளின் கணக்கான ஐந்து ரூபாய்க்கு பதில், இந்த தடவை பத்து ரூபாய் என்று அப்பாவிடம் வாதம் செய்து சம்மதம் வாங்கி இருந்தான். 

ஒரு வாரம், இரவு தூங்கப்போகுமுன் சங்கரிக்கும் அவனுக்கும் மனக்கணக்கு. கொடுத்த பணத்துக்குள் அதிகப்படியான வாணங்களை அடக்கும் விளையாட்டு. வெள்ளிக்கிழமையே அரைப்பக்கத் தாளில் சங்கரி பட்டியலைத் தயார் செய்துவிட்டாள்.   

பட்டாசு கட்டு எட்டு. ஒவ்வொன்றும் 25 பைசா – 2.00 

ஊசிப்பட்டாசு ஒரு பாக்கெட்,  50 பைசா –  0.50

சிவப்பு, பச்சை, பூ மத்தாப்புப் பெட்டிகள் ஒவ்வொன் றும் ஒரு டஸன். 50 பைசா – 1.50 

கம்பி மத்தாப்பு ஆறு பெட்டிகள். ஒன் று 30 பைசா – 1.80 

விஷ்ணு சக்கரம், தரைச்சக்கரம் ஒவ்வொன்றிலும் ஒரு டஸன். 1.00 – 2.00   

புஸ்வாணம் ஒரு டஸன். 10 பைசா – 1.20 

குதிரை வால், ஏரோப்ளேன், எலெக்ட்ரிக் பென்சில் … 

பட்டாசு கொளுத்த நீண்ட கரிவத்தி இரண்டு, 10 பைசா – 0.20

ஆக மொத்தம் 10 ரூபாய், 20 பைசா. 

தீபாவளிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே ஜவஹர் பஜாரின் இரண்டு பக்கங்களிலும் தாற்காலிகமாக உருவாக்கிய கடைகள். அவற்றில் பட்டாசுகளை அடுக்கி வைத்திருக்கும் அழகே அழகு. நடுவில் கஜ அளவுகோல் நீளத்தில் கம்பி மத்தாப்புகள். அவற்றுக்குக் கீழே வாழைப்பழ அளவில் லஷ்மி யானை வெடிகள், புஸ்வாணக் கூம்புகள். இரண்டு பக்கங்களிலும் வெடிவகைகள், எலெக்ட்ரிக் பென்சில். 

கும்பல் குறைவான கடையில், பட்டியலைப் பார்த்து குமரநாதன் சொல்லச்சொல்ல கடைக்காரன் ஒவ்வொன்றாக எடுத்துக்கொடுக்க, கடைசியில் அப்பா பேரம் செய்ய, 

வீட்டிற்கு ஆளுக்கொரு பையுடன் நடக்கும்போது அமராவதிப் பாலமும், பாலத்தின் முடிவில் இருந்து ஊருக்குள் சென்று முடியும் தெருவும் பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பும்போது இருக்கும் நீளத்தில் பாதியாகக் குறைந்திருக்கும். அது எப்படி என்று அவன் எதிர்காலத்தில் விஞ்ஞானியாக ஆனதும் ஆராய வேண்டும். 

வாங்கிவந்ததை மர அரமாரியின் ஒரு அடுக்கில் சங்கரி அளவு பார்த்து சீராக வைப்பாள். தீபாவளி வரையில் தினத்துக்கு நான்கைந்து முறை வண்ணக்காகிதம் சுற்றிய ஒவ்வொன்றையும் எடுத்து அழகு பார்த்துத் திரும்ப அதே வரிசையில் வைப்பது எதிர்பார்ப்பின் ஆனந்தம். அவற்றைக் கொளுத்தும் போது வரும் பரவசம் தொடர்கதையின் உச்ச கட்டம். 

அப்பா வந்து சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்து கிளம்புவதற்கு மூன்று மணி ஆகிவிடும். அதுவரை நேரத்தை ஓட்டியாக வேண்டும். 

காலை சாப்பாடு ஆனதும் வாசல் திண்ணையில் சோம்பேறித்தனமாக உட்கார்ந்தான். பள்ளிக்கூடப் பாடங்கள் செய்ய மனம் இல்லை. சூரியநாராயண ஐயர் வீட்டில் தலை தீபாவளி. பட்சணங்கள் பொறிப்பதில் ஒத்தாசை செய்ய சௌந்தரம் கிளம்பினாள். அவன் முகத்தைப் பார்த்து, 

“பொழுது போகலைன்னா…” முந்தைய வருஷத்து ‘கண்ணன்’ தீபாவளி மலரை எடுத்துவந்து கொடுத்துவிட்டுப் போனாள். அவன் வாசிக்க ஆரம்பித்தான். ஏற்கனவே படித்தது என்றாலும் ஒரு வருஷகாலத்துக்குப் பிறகு புதிதாகத் தோன்றியது. 

ஒரு சிறுவன் யானை வெடியில் தீ வைக்கப்போகிறான். ஒரு யானை, ‘அம்மாடியோவ் யானை வெடி!’ என்று பயந்து நடுங்குகிறது. 

நல்ல தமாஷ்!        

முதல் கட்டத்தில் சங்கு சக்கரத்துடன் விஷ்ணு. முன்னால் நிற்கும் சிறுவனைப் பார்த்து, 

‘தீபாவளிக்கு உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்கிறார். 

அடுத்த கட்டத்தில் அந்த குறும்புப்பயல், 

‘உங்கள் கையில் சுழலும் சக்கரம்’ என்கிறான். 

மூன்றாம் கட்டத்தில் விஷ்ணு சக்கரத்தை இறுக்கப்பிடித்து ஓடுகிறார். 

சிவன் இதை விஷ்ணுவிடம் காட்டி அவரைக் கேலி செய்யலாம்.           

கரிக்கடையில் அதன் உரிமையாளர், எதிரில் நிற்கும் அவர் பையன். 

‘அப்பா! இந்த வருஷம் ஐந்து ரூபாக்கு பட்டாசு வாங்கணும்.’ 

‘நான் கரியைக் காசாக்கறேன். நீ காசைக் கரியாக்கணும்னு சொல்றே.’

வருஷத்துக்கு ஒரு தடவை தானே. காசைக் கரியாக்குவதில் எத்தனை சந்தோஷம்! 

விடிந்தால் தீபாவளி என்று சில கதைகள். 

அத்திம்பேர் பற்றி ஒரு வித்தியாசமான கதை. 

குமரநாதன் வயதில் ஒரு பையன். அதற்கு ஓவியர் வரைந்த படத்தை வெகுநேரம் ரசித்தான். தலை தீபாவளிக்கு அத்திம்பேர் வரப்போகிறார். அவன் அக்காவை அவர் பறித்துக்கொண்டதாக அவர் மேல் அவனுக்குக் கோபம். அவரை ரயில் நிலையத்தில் இருந்து அழைத்துவர அப்பாவுடன் போகவில்லை. வீட்டிற்கு வந்ததும், ‘அவருடன் பேசமாட்டேன். அவர் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட மாட்டேன். அவருக்குப் பிடித்த சேமியா பாயசம் எனக்கு பாய்சன்’ என்று எதிர்ப்பு காட்டுகிறான். அவர் அவன் மனநிலையைப் புரிந்துகொண்டு அவனை அன்புடன் நடத்துகிறார். அவனுடன் பரிவாகப் பேசுகிறார். கடைசியில் அவன் சமாதானமாகப் போகிறான். 

குமரநாதனுக்கு அத்திம்பேர் இருந்தால்… அவன் கதையின் பையன் போல அவர்மேல் கோபப்பட மாட்டான். கல்யாணம் ஆனதும் கணவன் மனைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்வது உலக நியதி. அவளும் பிறந்தகத்தைவிட்டுப் போயாக வேண்டும். அதற்காக அக்காவுக்கோ அத்திம்பேருக்கோ அவன் மேல் அன்பு இல்லை என்று அர்த்தம் இல்லை. அவருடன் சேர்ந்து பட்டாசு வெடிப்பான். அவர் யானை வெடி கொளுத்த ஒவ்வொன்றாக எடுத்துத் தருவான். அவருக்குக் காப்பி கொண்டு கொடுப்பான். அவருடன் செக்கர்ஸ் ஆடுவான். 

அவனுக்கு ஒரு அத்திம்பேர்… சௌந்தரத்துக்குக் கல்யாணம் ஆனால்தான்.  

அவள் இப்போது தான் தெரசம்மாள் பள்ளிக்கூடத்தில் நான்காம் படிவம் (ஒன்பதாவது) சேர்ந்து இருக்கிறாள். ம்ம்.. கல்யாணம் ஆக இன்னும் மூன்றுநான்கு வருஷம் இருக்கிறது. 

என்ன ஆச்சரியம்! வீட்டிற்குள் இருந்து காதில் விழுந்த வார்த்தைகளிலும் அதைப்பற்றியே பேச்சு. 

காமாட்சி மாமி அவனைக் கடந்து வீட்டிற்குள் சென்றதை வாசிக்கும் சுவாரசியத்தில் அவன் கவனிக்கவில்லை. அவளுக்குத் தெரியாத உலகப்பாடம் இல்லை. அனுபவப்படாத விஷயம் கிடையாது. அவள் பார்வையில் எதுவும் தப்பாது. சௌந்தரம் மேலாக்கு போட்டுக்கொள்ள வேண்டிய வயது வந்ததை அவள் கவனித்து இருக்க வேண்டும். 

“சௌந்தரத்துக்கு பதின்மூணு தானே நடக்கறது. கல்யாணத்துக்கு என்ன அவசரம்?” என்கிறாள் அத்தை. 

காமாட்சி சத்தமான குரலில், 

“ரெண்டு, மூணுன்னு வருஷம் ஓடிப்போயிடும். சௌந்தரத்துக்கு ரெண்டாம் தாரமான்னு யோசிக்காதே! சுமாரான ஆள் கிடைச்சா கல்யாணத்தைப் பண்ணி அனுப்பிடு! நீ முதல் தாரமா போனே என்ன ஆச்சு? நான் ரெண்டாவதா வாழ்க்கைப்பட்டேன். என்ன குறைஞ்சு போயிட்டேன்?”   

அத்தையின் மௌனம். அது மறுப்பு மற்றும் சம்மதம், இரண்டில் எதைக் காட்டுகிறது? 

பத்து வயது என்றாலும் குமரநாதனுக்கு சில விஷயங்கள் தெரியும். அந்த ஆண்டு வாசுவின் அக்காவுக்கு கல்யாணம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வந்தபோது வாசுவுடன் அவனும் கூடத்தின் வாசலில் நின்றிருந்தான். அலங்காரத்துடன் தலைகுனிந்து வந்து அவள் பாயில் அமர்ந்தாள். ‘நகுமோ’ என்ற தியாகராஜர் கீர்த்தனையை நன்றாகவே பாடினாள். எழுந்துபோவதற்கு முன் மாப்பிள்ளையை ஓரக்கண்ணால் அளந்தாள். பிறகு, சூரியநாராயண ஐயர், ‘முப்பது சவரன் நகை, கையில் ஐநூறு ரூபாய் வரதட்சணை’ என்று லௌகீகப் பேச்சை ஆரம்பித்தார். விமரிசையாக நடந்த திருமணம், ஒவ்வொரு பண்டிகைக்கும் குளித்தலையில் இருந்த மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பிய சீர்வரிசை எல்லாம் அவன் கண்ணில்பட்டு இருக்கிறது. அவர்கள் நிழலில் வசிக்கும் அத்தையின் நிதிநிலைமை தெரியும். அவள் வசம் பத்து சவரன் நகை இருந்தால் அதிகம். வெள்ளிப் பாத்திரங்களை விரல்விட்டு எண்ணலாம். ரொக்கம் என்பது அவளும் சௌந்தரமும் வசதியானவர்கள் வீடுகளில் சுற்றுக்காரியம் செய்து சம்பாதிக்கும் ஒருசில ரூபாய் நோட்டுகள். 

இரண்டாம் (சிலசமயங்களில் மூன்றாம்) தாரம் என்றால் என்ன என்பதும் பசுபதியின் அக்கா கௌரியின் கணவர் கஜபதியின் தோற்றத்தில் இருந்து அவனுக்குத் தெரியும். அவளைவிட இரண்டு மடங்கு உருவம், வயது. அவளுக்கு முழநீளப் பின்னல். அவருக்கு முழு வழுக்கை. பிள்ளையார் கோவில் படிகளைக் கம்பத்தைப் பிடித்துக்கொண்டு தான் ஏறமுடியும். அந்த சித்திரம் அத்தையின் ஆத்துக்காரர் அத்திம்பேருக்குத் தான் பொருத்தம். அக்காவின் கணவர் அவன் படித்த கதையின் படத்தில் இருந்த அத்திம்பேர் போல. இருபது வயது இளைஞர். வளைவான அடர்ந்த தலைமயிர். பிள்ளையார் முன் குனிந்து தோப்புக்கரணம் போடும் பச்சை உடல். 

காமாட்சி மாமியின் பலத்த குரல் குமரநாதனின் மூளையில் தனித்தனியாக இருந்த பல தகவல்களை ஒன்று சேர்த்தது. 

அத்தையிடம் சௌந்தரத்துக்கு நல்ல வரன்தேட பணமோ தங்கமோ கிடையாது. ‘சௌந்தரம் இருக்கற அழகுக்கு எவனாவது அவளைக் கொத்திண்டு போயிடுவான்’ என்று அடுத்த வீட்டுப் பாட்டி சொல்லிக் கேட்டு இருக்கிறான். நிஜ வாழ்வில் அது எவ்வளவு உண்மை? 

கஜபதி போல ஒருவர் அவனுக்கு அத்திம்பேர்? 

முடியாது. அப்படி நடக்கவிட மாட்டான். 

அப்பா சைக்கிளில் இருந்து இறங்கியதும் முதல் காரியமாக அவரிடம், 

“பட்டாசு கடைக்குப் போக வேண்டாம்ப்பா.”   

“எண்டா?”  

“காசைக் கரியாக்க இஷ்டமில்ல. பத்து ரூபாயை ஒரு முக்கியமான காரியத்துக்கு சேர்த்துவைக்கப் போறேன்.”  

Series Navigation<< ஏகபோகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.