அதிரியன் நினைவுகள் – 6

This entry is part 6 of 6 in the series அதிரியன் நினைவுகள்

தமிழாக்கம் : நா. கிருஷ்ணா

பிறர் என்னை அதிகம் நேசிப்பதிலை, அவ்வாறு அவர்கள் இருப்பதற்கு ஏதேனும் காரணம் உண்டாவெனில் அதுவுமில்லை. சில தனிப்பண்புகள், உதாரணத்திற்குக் கலைகளின் மீதான எனது ஆர்வத்தையே எடுத்துக்கொள்வோம் அது ஏதென்ஸ் நகரில் பள்ளிச் சிறுவர்களின் கவனத்தைப் பெற்றதில்லை, அரசவை என வருகிறபோது பொதுவில் ஓரளவு அங்கீகரிக்கப்படும் என்பது தெரிந்ததுதான். மாறாக அதிகாரத்தின் முதற்படியில் நான் இருந்த கால கட்டங்களில் அங்கிருந்த நீதித்துறையும், நிர்வாகமும் கலைகளின் மீதான எனது ஈடுபாட்டை இடையூறாகப் பார்த்தன. எனது ஹெலனிசம் (Hellénisme-கிரேக்க பண்பாடு ய்)22 கூட ஏளனத்திற்கு உள்ளானது, இத்தனைக்கும் அதனை எப்போதாவதுதான் வெளிப்படுத்த நேரும். செனட் பார்வைக்கு நான் கிரேக்க மாணவன். என்னைப் பற்றிய கட்டுக்கதைகளும் உருவாயின; பொதுவில் அவை ஒருபாதி நம்முடைய உண்மையான செயல்பாடுகளாலும், மறுபாதி அவை பற்றிய வதந்திகளாலும் புனையப்பட்டு, விசித்திரமாகவும், கவர்ச்சியுடனும் எதிரொலித்து உபயோகத்திலிருப்பவை. செனெட்டர் ஒருவரின் மனைவிடம் எனக்கு தகாத உறவு இருந்தது, அதுபோல இளம் அவிநயக் கலைஞன் ஒருவனிடம் வெறித்தனமாக இச்சைகொண்டிருந்தேன், இதனைக் கேள்வியுற்ற வழக்குரைஞர்கள் சிலர் தங்கள் மனைவி அல்லது மகனை சிறிதும் வெட்கமின்றி என்னிடம் அனுப்புவதுண்டு. இவ்விஷயத்தில் என்னைப்பற்றிய இம்மனிதர்கள் மதிப்பீட்டை அலட்சியம்செய்து அவர்களைக் குழப்பத்தில் வைத்திருந்ததில் உண்மையில் எனக்கும் மகிழ்ச்சி. இவர்களைக் காட்டிலும் பரிதாபத்திற்குரிய கூட்டமொன்று இருந்தது, அவர்கள் வேறுயாருமல்ல என்னை மகிழ்விக்க விரும்பி என்னோடு இலக்கியம் பேசியவர்கள். ஆரம்பகால சாதாரணப் பணிகளில் நான் உருவாக்கி பயன்படுத்திய நுட்பம் பின் நாட்களில் அரசவையில் பார்வையாளர் சந்திப்பிற்கு எனக்கு உதவியதென்பதையும் இங்கு தெரிவிக்கவேண்டும். அரசவையில் பார்வையாளர்களைச் சந்திக்கும் நேரம் மிகவும் குறுகியது, அக்குறுகிய நேரத்தில் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பிற்கும் உரிய பதிலைத் தருகிற வகையில் அனைத்துமாக இருந்து; இதற்கு முந்தைய நேர்காணலை மறந்து, தற்போதைக்கு யார் எதிரில் இருக்கிறார்களோ: உதாரணத்திற்கு ஒரு வங்கியாளர் இருக்கலாம், ஒரு துறையின் விற்பன்னர் இருக்கலாம், ஏன் கைம்பெண் ஒருத்திகூட எதிரில் நிற்கலாம், அவரவர் தன்மைக்கேற்ப (இயற்கையாகவே குறுகிய வரம்பிற்குள் அடைந்து கிடப்பவர்கள் இவர்கள் என்பதைக் கருத்தில்கொண்டு) சில நல்ல தருணங்களில் நம்மீது செலுத்தும் கண்ணியமான அக்கறையை அவர்களிடத்திலும் நான் வெளிப்படுத்துகிறபோது, கற்பனைப் புனைவுகளில் வருகிற தவளைபோல அவர்கள் உடல் புடைப்பதைக் காணும் வாய்ப்பு எனக்குத் தவிர்க்க முடியாதது; இறுதியாக, அரசவையில் இவ்வாறான நேர்காணலும், விசாரணையும் மனிதர்களின் பிரச்சனைகள் அல்லது சொந்த விவகாரம் பற்றிச் சிந்திக்க சில தருணங்களை உண்மையாகவே அர்ப்பணிக்க உதவுவதாகும். கிட்டத்தட்ட இங்கும் மருத்துவமனைகளில் நமக்கேற்படும் அதே அனுபவம். அச்சம்தருகிற புழுத்துப்போன பழையவெறுப்புகளை கட்டவிழ்த்துக் காணவேண்டிய நெருக்கடி இங்கும் உருவாகலாம். மனைவிகளுக்கு எதிராக கணவன்கள்; பிள்ளைகளுக்கு எதிராக தந்தைகள், கிளை வாரிசுகள் என்று கூறிக்கொண்டு மேற்கண்ட அனைவருக்கும் எதிராக நீதிகேட்டு நிற்பவர்கள் இப்படி எல்லாவகையினருக்கும் இந்த அரசவை பேட்டியில் இடமுண்டு: இதன்காரணமாக குடும்பம் என்ற அமைப்பின்மீது நான் கொண்டிருந்த அற்ப மரியாதையும் நொடித்துப்போனது.

மனிதர்களை நான் வெறுப்பதில்லை. அவ்வாறு செய்திருந்தால், அவர்களை அரசாள முயன்றதற்கு எனக்கு எவ்வித உரிமையோ, நியாயமோ இருந்திருக்காது. மனிதர்கள் பொதுவாக பொறுப்பும், விவேகமும் அற்றவர்கள், பேராசை கொண்டவர்கள், கவலையில் தோய்பவர்கள் என்பதையெல்லாம் நான் அறியாதவனல்ல; அவர்கள் தங்கள் வெற்றிக்காகவும், பிறமனிதர்களுடைய பாரவையில் மட்டுமன்றி, தங்கள் கண்களுக்கே கூட தங்களை உயர்ந்தவர்களாக காட்சிப்படுத்திக் கொள்ளவும் அல்லது வெறுமனே தமது பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கவேண்டும் என்பதற்காகவும் எதற்கும் துணிந்தவர்கள். இப்படிப்பட்ட மனிதர்களை நானும் நன்கறிவேன். எப்படி என்கிறாயா? அவர்களில் குறைந்தபட்சம் சிற்சில சமயங்களிலேனும் நானும் ஒருவனாக இருந்திருக்க வேண்டும் என்கிற உண்மையின் அடிப்படையில். இறுதியில் கூட்டிக் கழித்துப்பார்த்தால் மற்றவர்களுக்கும் எனக்குமிடையே உணரப்படும் வேறுபாடுகள் மிகக் குறைவு. விளைவாக, சீசரின் அகந்தையும், ஒரு மெய்யியியல்வாதியின் ஈரமற்ற தத்துவமும் எனக்கொன்றுதான், இரண்டியிலிருந்தும் முடிந்த அளவு விலகியிருக்க முயற்சிக்கிறேன். அடர்ந்த இருளில் கிடக்கும் மனிதனுக்கும் சிறிதளவு ஒளி கிடைக்க வாய்ப்புண்டு; கொலையாளி எனக் கருதப்படும் ஒருவன் புல்லாங்குழலைச் சரியாக வாசிக்கக் கூடும்; தனது சவுக்கடியால் அடிமைகளின் முதுகுத் தோலை உரிக்கும் கங்காணிக்குப் பிறந்த மகன் நல்லவனாக இருக்கலாம்; முட்டாளென நினைக்கிற மனிதனொருவனின் கையில் எஞ்சியுள்ள ரொட்டித்துண்டை பகிர்ந்துண்ணும் நேரம் எனக்கும் வரலாம். உலகில் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் ஏதோ ஒன்றை நாம் கற்க முடியும், அப்படி இல்லாதவை அரிது. நம்மிடமுள்ள மிகப்பெரிய குறை, இருக்கின்ற நற்பண்புகளை வளர்த்துக்கொள்ளப் போதாமல் புறக்கணிப்பதும், இல்லாதவற்றைத் தேடிப்பெற முயற்சிப்பதுமாகும். முன்னதாக, பண்புநலனிலுள்ள பல்வேறு கூறுகளைப் பற்றி பேசியிருந்தேன். அவற்றுக்கான தேடலென இதை நீ எடுத்துக்கொள்ளலாம், அதாவது உணர்ச்சிமிக்க அழகுத் தேடல். எல்லையற்ற பண்புகளைக்கொண்ட உன்னதமான மனிதர்களையும், என்னிலும் பார்க்க அப்பழுக்கற்றவர்களையும் நான் கண்டதுண்டு, உதாரணத்திற்கு உன்னுடைய தந்தை அன்டோனினைப் போல; அவ்வாறே எண்ணற்ற மாவீரர்களிடமும் எனக்கு அறிமுகமுண்டு, ஏன் ஞானிகள் சிலரையும் அறிந்திருக்கிறேன். நல்லவைகளோடு பெரும்பாலான மனிதர்களுக்குள்ள பிடிமானத்தை நிலையானதென்று சொல்வதற்கில்லை, தீயவற்றோடும் இதுதான் நிலைமை. உதாரணத்திற்கு தங்களுடைய அவநம்பிக்கையையும், ஏறக்குறைய குரோதத்திற்கு நிகரான முகம்கொடாமையையும், கிட்டதட்ட விரைவாக, « வெட்கக்கேடு » என பிறர் விமர்சிக்கின்றவகையில் நன்றிக்கடனாகவும், மரியாதையின் பொருட்டும் சமரசம்செய்துகொள்கிற மனிதர்கள் இருக்கிறார்கள். மேலும், இக்குணம் ஐயத்திற்கிடமின்றி இவர்களிடம் அதிக காலம் நீடிப்பதுமில்லை; ஏன் மனிதர்கள் தங்கள் சுயநலத்தைக்கூட பயனுள்ள நோக்கங்களை முன்னிட்டு மாற்றிக்கொள்ளும் அதிசயமும் நடக்கலாம். நான் அதிகம் மனிதர் வெறுப்புக்கு ஆளானதில்லை, என்பதென்னை எப்போதும் ஆச்சரியமூட்டும் விஷயம்; எனக்கு கடுமையான எதிரிகள் என்று சொன்னால் அவர்கள் இரண்டு அல்லது மூன்றுபேர் மட்டுமே, எப்போதும்போல இப்பிரச்சனைக்கு ஓரளவு நானும் பொறுப்பு. ஒரு சிலர் என்னை நேசிக்கவும் செய்தனர்: உண்மையில் அவர்களிடமிருந்து எதையும் கேட்டுப்பெறும் உரிமையோ, எதிர்பார்ப்போ எனக்கில்லை, இருந்தும் அவற்றுக்கெல்லாம் மேலாக, தங்கள் உயிரையும் ஒரு சில சமயங்களில் தங்கள வாழ்க்கையையும் எனக்காக அர்ப்பணித்திருக்கிறார்கள். இத்தகையோர் இறக்கும் தருவாயில் அவர்கள் நெஞ்சில் சுமக்கும் இறைவன் அன்னாரின் பெருமையை வெளியுலகிற்கு உணர்த்துகிறார்.

எந்த அளவிற்கு சுதந்திரமானவனாகச் செயல்பட்டேனோ அந்த அளவிற்குப் அடிபணியவும் செய்தேன், இத்தகைய முனைப்பை பிறரிடம் காணமுடியாது என்பதொன்றுதான் சராசரி மனிதர்களைக் காட்டிலும் என்னை உயர்ந்தவனாக நான் உணரும் புள்ளி. ஏறக்குறைய மனிதர்கள் அனைவருமே தங்களுக்குரிய சுதந்திரத்தை மட்டுமின்றி உண்மையான அடிமைப் பண்பையும் அறியத் தவறியவர்கள். விலங்கிடப்பட்ட தங்கள் வாழ்க்கையைச் சபிக்கிற மனிதர்களே சிலநேரங்களில் அவ்வாழ்க்கையை எண்ணிக் கர்வப்படுகிறவர்களாகவும் உள்ளனர். இருந்தும் அர்த்தமற்ற உரிமங்களைத் தேடிக் காலத்தை செலவிடுகின்றனரேயன்றி இலகுவான நுகத்தடி எதுவென அறிந்து தங்களைப் பிணைத்துக்கொள்ள உண்மையில் அவர்களுக்குப் போதாது. என்னைப் பொறுத்தவரை, நான் அதிகாரத்தைக் காட்டிலும் சுதந்திரத்தைக் கூடுதலாகத் தேடினேன், அதிகாரத்தை நான் விரும்பியதற்கும் அதனொரு பகுதி சுதந்திரத்திற்கு என்னை வழிநடத்தியதே காரணம். எனக்கு ஆர்வத்தை அளித்த விஷயம் சுதந்திர மனிதன் ஒருவனுடய தத்துவமல்ல (அதை முயற்சித்த அனைவருமே எனக்கு எரிச்சலைத் தந்துள்ளனர்) மாறாக அதில் பொதிந்துள்ள நுட்பம்: அதாவது எங்கே விருப்பம் விதியோடு பிணைக்கப்பட்டு, எங்கே ஒழுக்கம் வலுப்பெற்று தங்குதடையின்றி இயற்கையில் இயங்க சாத்தியமோ அங்குள்ள மூட்டு அல்லது ‘சுழலாணி’ எதுவோ அதனைப் புரிந்துகொள்ள விரும்பினேன். ஒன்றை நீ புரிந்துகொள்ளவேண்டும், அதிகாரத்தை மிகைப்படுத்திப்பார்க்க உனக்குதவும் உறுதிப்பாட்டுவாதம் (Stoicism)23 தெரிவிக்கிற கடுமையான விருப்பம் குறித்தோ அல்லது இவ்வுலகையும், அதன் வடிவம் உள்ளடக்கம் ஆகியவற்றையும் அவமதிக்கிற ‘தெரிவு’கள் அல்லது மறுப்புகள்பற்றியோ இங்கு நான் விவாதிக்கவில்லை, நான் கனவுகண்டது ஒருவகையில் மறைமுகமான ஒப்புதல் அல்லது மிகவும் இசைவானதொரு மறுமொழி இரண்டிலொன்றிற்கு வாய்ப்புள்ள சுதந்திரம். வாழ்க்கையும் எனக்கொரு குதிரை, இவ்விலங்கின் இயக்கத்துடன் நாம் கைகோர்ப்பது முடிந்த அளவிறகு அதற்குப் பயிற்சியளித்து திருப்திபட்ட பின்பே. மொத்தத்தில் எல்லாமே மனதின் முடிவு, ஆனால் மெதுவாகவும், உணரமுடியாதவகையிலும் எடுக்கப்படுகிற அம்முடிவு உடலின் இசைவையும் உள்ளடக்கியது, கிட்டத்தட்ட பரிசுத்தமான இச்சுதந்திர நிலையைப் படிப்படியாகவோ அல்லது முழுமையாகப் பணிந்தோ அடைய முயற்சித்தேன். என்னுடைய உடற்பயிற்சி அப்பியாசங்கள் அதற்குதவின; நியாயவாதமும் எனது முயற்சிக்குப் பாதகமாக இல்லை. முதலில் நான் தேடியதென்னவோ ஒர் எளியவிடுமுறைக் காலத்திற்குரிய சுதந்திரம் அல்லது சுதந்திரமான தருணங்கள். நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒவ்வொரு வாழ்க்கைக்கும் இப்படியான காலமும்நேரமும் சொந்தமாக உண்டு, அவற்றுக்கு இடம்கொடாதவர் வாழத் தெரியாதவரென்றுதான் கூறவேண்டும். இவ்விஷயத்தில் ஒருபடி நான் மேலே சென்றிருக்கிறேன்; அதொரு உடன்நிகழ்வு சுதந்திரத்திற்கான கற்பனை; ஒரே நேரத்தில் இரண்டு நிலைகளில் இரண்டு வினைகளைப் புரிவது: உதாரணமாக, என்னை சீசராக உருவகித்துக்கொண்டு ஒரே நேரத்தில் பல ஆணைகளைப் பிறப்பிப்பது அல்லது வாசித்துக்கொண்டே உரையாடுவது போன்றவை அதிலடங்கும். அவ்வாறே மிகவும் கடுமையானதொரு பணியை முழுவதுமாக என்னை ஈடுபடுத்த்திக்கொள்ளாமல் வெகு கச்சிதமாக நிறைவேற்றும் வகையைக் கண்டறிந்து அதனையும் பின்பற்றியுள்ளேன். உடற்சோர்வு என்கிற கருத்தாக்கத்தை என்னிலிருந்து வேரறுக்கும் துணிவும் சிற்சில சமயங்களில் என்னிடமிருந்தது. வேறு சில சந்தர்ப்பங்களில் நான் மாற்று சுதந்திரத்தை(une liberté d’alternance) பயிற்சி செய்தேன் அதாவது முதலில் ஒன்றையும் பின் மற்றொன்றையும் தெரிவு செய்து நடைமுறை படுத்தினேன்: உள்ளுணர்ச்சிகள், சிந்தனைகள் தவிர எந்தநேரமும் முடக்கப்படவும் பின்னர் மீண்டும் தொடங்கவும் சாத்தியமுள்ளவைகள். இவற்றை விரட்டவும் அல்லது அடிமைகளாகத் திரும்ப அழைக்கவும் இயலுமென்ற நிலையில் அதிகாரத்திற்குரிய கொடிய குணத்தை அவற்றிடமிருந்து பறித்து அதேவேளையில் அனைத்து அடிமை உணர்வையும் என்னிடமிருந்தும் விடுவித்துக்கொள்ளும் உறுதிப்பாடும் அவற்றில் இருந்தது. முடிந்தவரை அதனை நன்றாகச் செய்திருக்கிறேன்: ஒருநாளை முழுமையாக, தெரிவு செய்த யோசனைக்கென்று ஒதுக்கியபின் அதிலிருந்து என்னை விலக்கிக் கொள்வதில்லை; அந்நாளில் என்னை அதைரியப் படுத்தக்கூடியவையும், எனது கவனத்தைத் திசைதிருப்பக்கூடியவையும், வேறுவரிசையில் காத்திருக்கும் பிற திட்டங்களும் அல்லது பணிகளும், வீண் பேச்சுகளும், பிற சில்லறை பிரச்சனைகளும் இலைகள், குலைகள் என்றிருக்கும் திராட்சைக்கொடி கொழுகொம்பில் பாரத்தை இறக்கிவைப்பதுபோல அந்த நாளைச் சுற்றிக்கொள்ளும். சில நேரங்களில், மாறாக, மனதில் தோன்றும் ஒவ்வொரு சிந்தனையையும் ஒவ்வொரு உண்மையையும் அவற்றை நன்கு கையாளவேண்டும் என்பதற்காக முடிந்த அளவு சிறு சிறு துண்டுகளாகவும் துணுக்குகளாகவும் பிரித்து நோக்குவதுண்டு. இதன் காரணமாக, முடிவெடுக்கவியலாமல் திணறடிக்கிற பிரச்சனை நொறுங்கி பொடிபிரச்சனையாக மாற, அவை ஒவ்வொன்றின் சிறு முடிவும் கண்டறியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட, படிப்படியாக அந்த ஒன்று மற்றொன்றுக்கு இட்டுச்செல்லும் நிகழ்வு ஒருவகையில் எளிதான அணுகுமுறை மட்டுமல்ல தவிர்க்க முடியாததும் ஆகும்.

அனைத்துவகை சுதந்திரத்திலும் கடைபிடிப்பதில் மிகவும் கடினமான விட்டுக் கொடுத்துப் போகிற சமரச சுதந்திரத்தையே எனது விவகாரங்களில் பயன்படுத்தினேன். விட்டுக்கொடுக்க நேர்ந்தாலும் எந்த நிலையில் இருந்தேனோ அதில் முடிந்தமட்டும் நன்றாக இருக்க விரும்பினேன். பிறரைச் சார்ந்திருந்த வருடங்களில், அவ்வாழ்க்கையையும் ஒரு பயனுள்ள பயிற்சியாக நான் எடுத்துகொண்டதால், அப்போதைய எனது சுதந்திரமின்மையின் கசப்பையும், அதில் ஒவ்வாதவற்றையும் தொலைக்கமுடிந்தது. எனக்கென்று உணர்ந்தவைகளைத் தெரிவு செய்தேன், ஒட்டுமொத்தமாக எனதாக்கிக்கொள்ளும் கட்டாயத்திற்கு ஆளாகி முடிந்தவரை அவற்றை சுவைக்கவும் செய்தேன். மிகவும் அலுப்பினைத் தரக்கூடிய பணிகள் என்கிறபோதும் அவற்றைக் காதலுடன் செய்கிறபோது சிரமங்கள் தெரிவதில்லை. ஒரு பொருள் எனக்கு வெறுப்பை அளிக்குமெனில் மறுவினாடி அதனை எனது பார்வைக்குட்படுத்தி, சாமர்த்தியமாக அதிலிருந்து மகிழ்ச்சியைப் பெறுவதற்கு ஒரு காரணம் கிடைக்குமா என முயற்சிப்பதுண்டு. தற்காத்துகொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுத்தாயிற்று இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில், கண்முன்னே எதிர்பாராத அல்லது அவநம்பிக்கைக்குரிய சம்பவம் உதாரணத்திற்கு ஒரு திடீர்தாக்குதல் அல்லது புயல், நிகழ்கிறதென வைத்துக்கொள் அப்போது குருட்டுப்போக்கில் ஒன்றை முயற்சி செய்து, கிடைக்கும் பலன் எதுவென்றாலும் அதில் மகிழ்ச்சி அடைந்துள்ளேன், பலனாக திடீர்தாக்குதலோ, புயலோ எதுவாக இருந்தாலென்ன அவை எனது திட்டங்களில் அல்லது கனவுகளில் சேதம் விளைவிக்காமல் ஒன்றிணைந்துவிடும். இதுபோன்ற மோசமான பேரிடரை நான் எதிர்கொண்டபோதுகூட எக்கணம் சோர்வு அச்சத்தின் ஒரு பகுதியைக் களைகிறது, எக்கணம் என் பங்கிற்கும் அதனை ஏற்கமுடியும், உடன்பட்டு செயல்பட முடியும் என்பதையெல்லாம் கண்ட அனுபவங்களுண்டு. எப்போதாவது நான் வதைபட நேர்ந்தால், எனது நோயும் நிச்சயம் அதற்கு துணைபோகுமெனில் ஒரு திரேசியாஸ்(Tirésias)24போல சகித்துக்கொள்ளும் பொறுமைக்கு என்னிடம் வழியுண்டா என்பதை உறுதியாக என்னால் கூற முடியாது, ஆனால் குறைந்தபட்சம் எனது கதறலுக்குப் பதில் சொல்லப் போதுமான சக்தி என்னிடமுண்டு. ஆக இப்படித்தான் இறுதியில் தயக்கம், துணிவு, அடிபணிதல் மற்றும் கவனமுடன் ஒழுங்கு செய்யப்பட்ட கிளர்ச்சி, கடுமையான கோரிக்கை மற்றும் விவேவகத்துடனான சலுகை, ஆகியவற்றின் கலவை குணத்துடன் என்னை நானே வழிநடத்த அறிந்திருந்தேன்.

ரோமில் இந்த வாழ்க்கை அதிக காலம் நீடிக்கவில்லை, நீடித்திருப்பின் நிச்சயமாக அது கசந்திருக்கும், நைந்திருக்கும், குட்டிச்சுவராகியிருக்கும். அதிலிருந்து மீண்டு இராணுவத்திற்குத் திரும்பியது என்னைக் காப்பாற்றியது. இங்கும் சில சமரசங்களை செய்துகொள்ள வேண்டியிருந்தது என்கிறபோதும், அவை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல. இராணுவம் சார்ந்ததொரு பணிக்குப் புறப்படுதல் என்பது ஒரு வகையில் முக்கியமான பயணம்; எனவே ஒருவித மிதப்பு என்னிடத்தில் இருந்தது, திரிபூனுஸ் என்கிற தீர்ப்பாயநடுவர் பதவிஉயர்வுபெற்று, இரண்டாவது லீஜியன் அட்ஜுட்ரிக்ஸ்(la Deuxième Légion, l’Adjutrice) படைப்பிரிவில் இணந்தேன். கூதிர்பருவ மழைக்காலத்தின் சிலமாதங்களை அங்கு தன்யூபு நதியின் மேற்பகுதியில்(Haut-Danube) கழித்தபோது எனக்கிருந்த ஒரே தோழன் நம்முடைய தத்துவஞானி புளுடார்க் (Plutarch) எழுதிய ஒரு புதியநூல். ஐந்தாவது மாதத்தில் அங்கிருந்து, மாசிடோனிய படை 5வது பிரிவுக்கு (la cinquième Légion Macédonique) மாற்றல் கிடைத்துச் சென்றேன். அந்நேரத்தில் அப்படைக்குழு (தற்போதும் கூட) அதே நதியின் முகத்துவாரத்தில் மாயெசிக்குக் (Moésie)25 கீழாக முகாமிட்டிருந்தது. சாலைகளைப் பனி மூடியிருக்க, தரை மார்க்கப் பயணம் தடைப்பட்டது, எனவே போலாவில்(Pola)26 கப்பல் ஏறினேன்; பிற்காலத்தில், நான் வாழஆசைப்பட்ட ஏதென்ஸ் நகரை வழியில் ஒருமுறை இறங்கிப் பார்த்திருக்கலாம், நேரம் போதவில்லை. டொமீத்தியான்(Domitien) படுகொலைச் செய்தி, இப்புதிய படைமுகாமுக்கு வந்த சிலநாட்களில் தெரியவந்தது, ஒருவருக்கும் அச்செய்தி வியப்பளிக்கவில்லை, தவிர அத்தகவல் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது. திராயான்(Trajan) தாமதமின்றி நெர்வா(Nerva)27வால் தத்தெடுக்கப்பட்டார்; டொமீத்தியனுக்குப் பிறகு பதவியேற்ற புதிய அரசரின் (நெர்வா) தள்ளாத வயது, ஆட்சியில் நீடிக்க சில மாதங்களே அனுமதிக்குமென்ற நிலையில் இவ்வாரிசுத் தேர்வு. நாடுபிடிக்கும்கொள்கை அடிப்படையில் ரோமாபுரி பேரரசைக் கொண்டுசெல்ல எனது ஒன்றுவிட்ட சகோதரர்(திராயான்) விரும்பினார் என்பது தெரிந்த செய்தி. துருப்புக்களை ஒருங்கிணைத்தல், இராணுவ ஒழுங்குமுறைகளில் கெடுபிடிகளை படிப்படியாக அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் படையினரை ஒர் உற்சாகமான எதிர்பார்ப்பு நிலையில் வைத்திருந்தது. இப்புதிய நடவடிக்கையால் தன்யூபு லீஜியன் (les Légions danubiennes) படைப்பிரிவுகள் எண்ணையிடப்பட்ட போர் எந்திரத்தின் துல்லியத்துடன் இயங்கின; ஸ்பெயினில் நான் முன்பிருந்தபோது, படைவீரர்கள் அங்கு சுறுசுறுப்பின்றி இருந்தனர், இங்கு அவ்வாறில்லை; குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது, இராணுவம் அரண்மனைத் தகராறுகளில் கவனம் செலுத்துவதிலிருந்து விலகி பேரரசின் வெளி விவகாரங்களில் கவனம் செலுத்தியது; இனி எந்தஒரு மனிதரையும் சூழ்ந்துகொண்டு ஆரவாரம் செய்யவோ அல்லது கழுத்தை அறுக்கவோ தயார் செய்யப்பட்ட லிக்டெர்ஸ்(licteurs)28 வகையினர் தாங்கள் அல்ல, என்பதையும் படைவீரர்கள் உறுதிசெய்தனர்.

மிகவும் புத்திசாலிகளாக இருந்த அதிகாரிகள், தாங்கள் பங்கேற்ற இந்த மறுசீரமைப்பில் தங்கள் எதிர்கால நலனுக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த ரோமானியப் பேரரசின் எதிர்கால நலனையும் கருத்தில்கொண்டு, பொதுவானதொரு திட்டத்தைக் கண்டறிய முயன்றார்கள். இருந்தபோதிலும் வளர்ச்சியின் முதற் கட்டத்தின்போது இச்சீரமைப்புகள் குறித்து நிறைய அபத்தமான கருத்துக்களைப் பரிவர்த்தனை செய்துகொண்டதாகவும், அதோடன்றி இரவுஉணவின்போது கூட செயல்திட்டங்கள் என்ற பெயரில் மலிவான, பொருளற்ற யோசனைகளை பரிமாறிக்கொண்டு உணவுமேசைகளை அசுத்தம் செய்ததாகவும் கேள்விப்பட்டேன். நம்முடைய அதிகார அமைப்பின் நற்காரியங்களிடத்திலும், உலகமக்கள் மொத்தப் பேரையும் ஆளவிழையும் ரோமாபுரியின் நோக்கத்திடமும் அசைக்கமுடியாத நம்பிக்கைகொண்டிருந்த ரோமானியரின் தேசபக்தி, இவ்வல்லுனர்களைப் பொறுத்தவரை கொடிய அவதாரங்களை எடுக்கவல்லது, என்கிற உண்மைக்கு இன்றளவும் நான் பழகியவனில்லை. எல்லைகளில், சில நாடோடித் தலைவர்களை சமரசம் செய்துவைக்க குறுகியகாலத்திற்கேனும் சாதுர்யம் அவசியம் என்றுணரப்பட்ட நேரத்திலுங்கூட அரசியல் விற்பன்னர்களுக்குப் பதிலாக இராணுவத்தினர் முன்நிறுத்தப்பட்டனர். அதுபோல முறைகேடுகளுக்கு வழிவகுத்த கட்டாய பணிகளும், அவற்றுக்கு ஈடான பிறவும் நடைமுறைபடுத்தப்பட, அவற்றை இயல்பாக எடுத்துக்கொண்டார்கள். அதற்கேற்றார்போல பேரரசின் வடகிழக்குப் பகுதியில் இனியொருவாய்ப்பு இப்படி அமையாது என்பதுபோல காட்டுமிராண்டிகளிடையே நிலவிய ஓயாத சண்டை சச்சரவுகள் சாதகமாக இருந்தன: பின்னர் நிலமை சீரடைந்ததற்கு, அதைத் தொடர்ந்து நடந்த யுத்தங்கள் காரணமாக இருந்திருக்குமோ என்கிற ஐயம் எனக்கு இன்றைக்குமுண்டு. எல்லைப்புறச் சம்பவங்களால் நமக்குண்டான இழப்புகள் அதிகமில்லை, இருந்தும் தொடர்ந்து அவற்றைச் சந்திக்க நேர்ந்ததால் கவலை அளித்தது, அன்றியும் இதனால் தக்கவைத்திருந்த நிரந்தர விழிப்புணர்வு குறைந்தபட்சம் இராணுவ உத்வேகத்தைக் கூர்மைப்படுத்த உதவியது என்பதை நாம் மறுக்கவியலாது. இருப்பினும், இதுபோன்ற மனிதர் கூட்டத்தில் ஒரு சில தலைவர்களை அடக்கிவைக்கவும் வேண்டும், வேறு சிலரிடம் சமாதானம் பேசவும் வேண்டும், அதற்கு என்னைப்பொறுத்தவரை சிறுபங்கு முனைப்பும், மூளைக்கு கணிசமான பயிற்சியும் இருந்தால் போதுமானது. இவ்வ்விரண்டு வழிமுறைகளில், இறுதியில் குறிப்பிட்ட பலரும் அலட்சியப்படுத்துகிற வழிமுறைக்கே என்னை அர்ப்பணிப்பதென்று நான் முடிவு செய்தேன்.

இப்படியொரு எண்ணத்திற்கு நான் தள்ளப்பட புதிய அனுபவங்களில் எனக்கிருந்த ரசனையும் ஈடுபாடும் காரணமாகும், விளைவாக காட்டுமிராண்டிகள், மிலேச்சர்கள் போன்றவர்களிடமும் விரும்பிப் பழகினேன். இப்பெரிய பிரதேசம் தன்யூபு மற்றும் போரிஸ்தீனஸ் நதிகளின் முகத்துவாரங்களுக்கு இடையில் அமைந்த ஒரு முக்கோண நிலப்பரப்பு, இதன் மூன்று பக்கங்களில் இரண்டு எனக்கு நன்கு பரிச்சயமானவை. நிலத்தை ஊடுருவிய கடலின் கரையோரங்களில் பிறந்து, இயற்கையாக அமைந்த இப்பகுதியின் தூய்மை, வறட்சி, குன்றுகள், தீபகற்பத்தையொத்த நிலப்பகுதிகள் அனைத்தையும் நன்கறிந்த நமக்கு, உலகின் அதிசயிக்கத் தக்க பிராந்தியங்களில் இதுவுமொன்று என்கிற எண்ணத்தை இப்பகுதி தரும். அங்கிருந்த நாட்களில் பூமி தேவதையை வணங்கும் சந்தர்ப்பங்கள் எனக்கு வாய்ப்பதுண்டு, அதாவது இங்கே நாம் ரோமாபுரி தேவதையைக் கொண்டாடுவதுபோல. அறுவடைக்கு முன்னோடியென கருதப்படுகிற மிகவும் தொன்மையான வேளாண்மைதேவதை சேரெஸைக்(Cérès) குறித்து இந்த அளவிற்கு நான் பேசுவதில்லை. நம்முடைய கிரேக்கம் அல்லது லத்தீன் நிலப்பகுதி, பாறைகள் என்கிற எலும்புகளால் கட்டமைக்கப்பட்ட ஒரு பூமி, தனித்துவமான நேர்த்தியைக் கொண்ட ஓர் ஆணுடல். அதற்கு நேரெதிராக சித்தியன்(la terre scythe)29 பூமியோ கிழே கிடத்தப்பட்ட வளப்பமும், சற்றே தடித்தும் உள்ள ஒரு பெண்ணுடல். இவற்றின் சமவெளியோ எங்கே ஆகாயத்தின் ஆரம்பமோ அங்கே முடிவதுபோல நீண்டுபரந்தது. நதிகளின் அற்புதத்திற்கு முன்னால் எனது பிரமிப்பிலிருந்து நான் விடுபடுவதில்லை: பரந்திருக்கும் இந்த வெட்டவெளி, நதி நீருக்கு சரிவுத் தளமும், படுகையும் ஆகும். நமது ஆறுகள் குறுகியவை; அவை தங்களின் ஊற்றுமுனைகளிலிருந்து விலகி வெகு தூரத்தில் இருப்பதைபோன்ற உணர்வு நமக்கு எப்போதும் வருவதில்லை. ஆனால் இங்கே கழிமுகங்களில் பிரம்மாண்டமாக நீரோட்டம் முடியும்போது அறியப்படாத கண்டமொன்றிலிருந்து சுமந்துவரும் சேற்றையும், மனிதர் வசிக்கவியலாத பிரதேசங்களிலிருந்து சுமந்துவரும் பனிக்கட்டிகளையும் கொட்டுகிறது.

தொடரும்……

***

பிற்குறிப்புகள்

22. ஹெலனிசம் (Hellénism) ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்களைக்கொண்ட கிரேக்க சமயம். கிரேக்கமக்களின் நாகரீகம் மற்றும் பண்பாடும் இதே பெயரில் அழைக்கப்பட்டது

23. உறுதிப்பாட்டுவாதம் (Stoicism) – நான்காம் நூற்றாண்டில் ஸெனோ (Zeno) என்பவரால் உருவான கோட்பாடு, சமூகத்தில் ஓர் அங்கமான மனிதன் அதன் குறை நிறைகளை பெரிதுபடுத்தாமல் இணக்கமாக வாழ முயற்சிக்கவேண்டும் என்கிற கொள்கைக்குரியது.

24. திரேசியாஸ் (Tirésias) கிரேக்க புராணத்தின்படி தெய்வத்தன்மைமிக்க ஒரு குருடர். இளம் வயதில் தேவதை அதேயனா ( கிரேக்கக் தொன்மவியலில் கூறப்படும் ஒரு கன்னி தேவதை, கல்வி, அறிவு, போர் ஆகியவற்றின் கடவுள்) நிர்வாணமாக குளித்ததைப் பார்த்ததால் அத்தேவதை கோபமுற்று இவர் கண்களைத் தொட பார்வையை இழந்தவர் , பின்னர் பறவைகள் பேசும் மொழியையும் புரிந்து கொள்ளும் வரத்தை அதே பெணதேவதையிடம் வரமாகப் பெற்றவர்.

25. மொயீசி (Moésie) தற்போதைய செர்பியா, பல்கேரியாவின் வடக்கு, மாசிடோனியாவின் வடக்கு, ருமேனியாவின் சில பகுதிகள் சேர்ந்த பண்டையப் நிலப்பகுதி.

26. போலா (தற்போதைய குரேஷியாவிலுள்ள) இஸ்ட்ரியா தீபகற்பத்தைச் சேர்ந்த கடலோர நகரம்.

27. நெர்வா – Nerva (BC 96 – BC98) தமது 65 வயதில் பட்டத்திற்கு வந்து சாகும் வரை ( இரண்டாண்டுகள்) ரோமப் பேரரசின் மன்னராக இருந்தவர்.

28. லிக்டொர்கள் (Licteurs). பண்டைய கிரேக்கத்தில் மாஜிஸ்ட்ரேட்டுகளின் பாதுகாவலர்கள். மாஜிஸ்ட்ரேட் ஆணையின் பேரில் குற்றவாளிகளைத் தண்டிக்கவும் உரிமை பெற்றிருந்தனர்.

29. சித்தியன் பூமி (la terre Scythe) இந்தொ யூரோப்பிய மக்களும் அவர்கள் நிலப்பகுதியும். இவர்கள் பேசியமொழி பாரசீகம் (ஈரானிய நிலப்பகுதி)

***

Series Navigation<< அதிரியன் நினைவுகள் – 5

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.