
அவளு’ம்’
“பேசவேண்டாம் போதும் “
என்றாள் அவள்.
அந்த ம் ல் நிற்கிறது அவள் கை.
ஐவிரல் கதவில் எதை அடித்துச் சாத்தி
செல்கிறாள்..
சென்றபின்னும் உள்ளங்கை
அங்கேயே நிற்கிறது
அருளிக்கொண்டு..
தீபச்சுடரில் தீயை தேடுவதுபோல்
ஐ விரல் அமைவில்
கோபத்தையும் காணமுடியாது
போலும்.
இப்படி இருப்பவள்
இப்படித்தான் இருக்கிறேன்
மிகவும் மிகவும்
பேசிக்கொண்டு
சிரித்துக்கொண்டு
படபடத்துக்கொண்டு
..
ஏன் இப்படி என்று கேட்டுக்கொண்டு
ஆனாலும் இப்படித்தான் இருக்கிறேன்
…
கூடவே வேறொருத்தி இருக்கிறாள்.
உச்சந்தலையில் கொட்டிக்கொண்டே.
வலிக்கும்போது மட்டும்
கண்ணீரோடு அன்னாந்து பார்ப்பதுண்டு.
மற்றபடி
அவள்யாரோ நான்யாரோ ..
மெத்த மௌனத்தை நடிக்கும் சில நாட்களில் ..
காவல்தாண்டி கை ஒன்று
சத்தத்தை திருகிப் போய் விடுகிறது .
பேரிரைச்சலின் மீநொடிகளில் மேலிருக்கும்
அவளின்காளி கை
கழன்றோடிவிடுகிறது.
வரும்போது
ஒரு கருக்குழந்தையின்
கபாலத்தோடு..
எப்படியிருப்பினும் ஒன்றில் ஒட்டியிருக்கும்
ஒன்று உதிர்ந்தாக வேண்டும்..
எந்த ஒன்று என்பதில்
இருக்கிறது ..
இரைச்சலுக்கும்
மௌனத்திற்குமான
இடைவெளி.
இசைஞன்
வானில் அமர்ந்து
பாடலிசைப்பவன் ஒருவனை
தெரியும் எனக்கு..
அவனிடம் கேட்க ஆயிரம்
கேள்விகள் வைத்திருக்கிறேன்.
கேட்கப்படும் போதெல்லாம்
இசைத்துக்கொண்டே வேறு மேகத்தில்போய் அமர்ந்துகொள்கிறான்.
வரிகளின் ஜாலத்தில்
நம்பிக்கைக்
கொண்டிருக்கும் அவனுக்கு
தெரியாதுபோலிருக்கிறது..
இசைக்கின்ற
எச்சொல்லுக்குமான
பொருள்.