ரிஸின்

லண்டனில் 1978 ன் செப்டபர் மாதம் 14 ம் தேதி மாலை கியோர்கி மார்கோவ் (Georgi Markov) தான் பணிபுரிந்த பி.பி.சி. (பல்கேரிய சேவை) நிறுவன அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் வாட்டர் லூ  பாலத்தின் வழியே பேருந்து நிலையத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கையில், நல்ல ஆகிருதி கொண்ட  ஒரு மனிதர் எதிர் திசையிலிருந்து வேகமாக வந்து அவர் மீது மோதினார். பின்னர் தன் கையிலிருந்து தவறி கீழே விழுந்த குடையை எடுத்துக்கொண்டு மோதியதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டு, அவரருகில் வந்த ஒரு காரில் ஏறி சென்று விட்டார்.

மார்கோவிற்கு அம்மனிதர் மோதியபோது தொடைக்கு கீழ் சுருக்கென்று ஒரு வலி உண்டானது. ஆனால் அவர் அதை பொருட்படுத்தவில்லை. வீடு திரும்பிய மார்கோவுக்கு நல்ல உடல் வலியும் உடல் சோர்வும் 4 மணி நேரத்தில் உண்டாகியது.

 மறு நாள் மார்கோவின் மனைவி அன்னபெல்லும் அவரது நண்பர்  டியோ’வும், மார்க்கோவின் உடல்நிலை மேலும் பலஹீனமானதால்  தெற்கு லண்டனில்  புனித  ஜேம்ஸ் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச்சென்றனர் அவரை கவனிக்க வந்த மருத்துவர்களிடம் டியோ ’’இது சாதாரண நிகழ்வல்ல  மிகுந்த கவனத்துடன் கையாளப்பட வேண்டிய ஒன்று’’   என்று எச்சரித்தார். ஏனெனில்  மார்கோவ் பல சமயங்களில் தன் உயிருக்கு பல்கேரிய அரசால் அச்சுறுத்தல் இருப்பதை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.1

அதற்கு முன்பும் மார்கோவிற்கு கொலை முயற்சி நடந்திருந்தது. 1978 ன் துவக்கத்தில்  அவர் பருகவிருந்த பானத்தில் நஞ்சு கலக்கப்பட்டு அவரை கொல்ல முயற்சி நடந்து அதை அவர் தப்பித்திருந்தார். இரண்டாம் முறையாக இத்தாலிய தீவு ஒன்றில் குடும்பத்துடன் கோடை விடுமுறையை கழிக்க சென்றிருந்த போதும் ஒரு முயற்சி நடந்தது, அதிலும் அவர் தப்பித்திருந்தார்.

பல்கேரியரும் மார்கோவின் நெருங்கிய நண்பருமான டியோ லிர்கோஃப்* (Teo Lirkoff), தனக்கு நிகழ்ந்தது என்ன என்று அவரிடம்  மார்கோவ் விளக்கியதை  விரிவாக   ஊடகங்களுக்கு தெரிவித்தார். அவரது வலது தொடைக்கருகில் சிறு துளை  இருந்ததும் அத்துளை வழியே ரிஸின் என்னும் கடும் தாவர  நஞ்சை கொண்டிருந்த நுண் குருணை ஒன்று செலுத்தப்பட்டு  அவர் படுகொலை செய்யப்பட்டதும் அவராலும் சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினராலும் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டது

அவர் உடம்பில்  செலுத்தப்பட்டிருந்த ரிஸின் என்னும்  அரிய  நஞ்சு அவரது இரத்தத்தில் கலந்ததால் லண்டன் மருத்துவக்குழுவினரின் பெரு முயற்சிக்கு பின்னரும் மார்கோவ் மிகுந்த வலியும் வேதனையுமாக, மெல்ல மெல்ல இருதயம் செயலிழந்து இறந்தார். 

பல முறை பல்கேரியாவிற்கு  சென்றும் பலரிடம் விசாரணை நடத்தியும், புலனாய்வு செய்த ஸ்காட்லாந்து காவல்துறை, பேருந்துக்காக காத்திருந்த மார்கோவின் மீது மோதுவதுபோல வந்த மர்ம மனிதரின் கையில் இருந்த விஷ அம்பை மறைத்துவைத்திருந்த  குடையிலிருந்து ரிஸின் என்னும் நஞ்சு தொடையில் குத்தப்பட்டு கொல்லப்பட்டார் என்று தெரிவித்தது.  

49 வயதான மார்கோவின்  படுகொலை ஜேம்ஸ் பாண்ட்  படங்களில் வரும் காட்சிகளை காட்டிலும்  மர்மம் நிறைந்தது. ஸ்காட்லாந்து யார்டு சிறப்பு புலனாய்வுக் குழு  ஏன், எப்படி , எதற்கு நடந்ததென்று என்று மார்கோவின் மரணத்தை விரிவாக ஆராய்ந்தார்கள்.

லண்டன் காவல்துறைக்கு பல்கேரியாவின் கம்யூனிஸ்ட் அரசின்  ரகசிய உளவுத் துறையின் மீதிருந்த கடும் அச்சத்தினால் பிரேத பரிசோதனை உடனே நடைபெறவில்லை. தாமதமாக நடைபெற்ற பிரேத பரிசோதனை நுண்ணிய உலோக உருண்டையொன்றின்  இரு  சிறு துவாரங்களில் ரிஸின் அடைக்கப்பட்டு அவரது உடம்பில் ஊசி மூலம் செலுத்தப்பட்டிருந்ததை  கண்டறிந்தது.

 90 சதவீத பிளாட்டினம் 10 சதவீதம் இரிடியம் கலந்து செய்யப்பட்ட  1.52 மி மீ அளவிலிருந்த அந்த உலோக உருண்டைகளில் அடைக்கப்பட்டிருந்த  ரிஸினால் மார்கோவ் இறந்ததும் உறுதி செய்யப்பட்டது.

 ’டார்ட்’ எனப்படும் சிறு எறிஈட்டி வகை கம்பியொன்றின் நுனியில் இக்குருணையை பொருத்தி வெளியே கருப்புத்துணி கொண்டு மூடப்பட்டிருந்த குடை கொலைக்கருவியாக பயன்படுத்த பட்டிருந்து. சாதாரண மழைக்குடையை சிறு பொத்தானை அழுத்தி  விடுவித்து திறப்பது போல அந்த குருணையை விடுவித்து மார்கோவின் உடலில் ரிஸினை செலுத்தித்தான் அவர் கொல்லப்பட்டார்.

 பல்கேரியாவின் புகழ்பெற்ற எழுத்தாளரான மார்கோவ் பெரும் வாசகப்பரப்பை கொண்டிருந்தவர்.

உயர் இலக்கிய பரிசுகளை  பெற்ற அவரது பல படைப்புக்கள் திரைப்படங்களாகின. அவரது நாடகங்கள் தலைநகரின் முக்கிய அரங்குகளில் நடந்தன.  அவரது   At Every Kilometre  என்னும் நாடகம் பல்கேரியாவில் பிரபலமான வெற்றி நாடகமாக இருந்தது

மார்கோவின் எழுத்துக்கள் அவரை பெரும் செல்வந்தராக்கி இருந்தன. ஆடம்பர  கார்கள், கேளிக்கைகள், சூதாட்டங்கள், உயர் மட்ட அரசியல்வாதிகளுடன் விருந்துகள் என அவரது வாழ்க்கை கொண்டாட்டமாக இருந்தது பல்கேரிய உயர் அடுக்கு மக்கள் அனைவருடனும் அவருக்கு நட்பும்  செல்வாக்கும் இருந்தது. எனினும் அவர் தனது எழுத்துக்களில் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை தொடர்ந்து எழுதி பொதுவெளியில் அவற்றை கொண்டு வந்துகொண்டே இருந்தார். அதனால் அவருக்கு பல்கேரிய அரசிடம் இருந்து கடும் நெருக்கடிகள் வரத்துவங்கின

 அவர் எழுதுவதை நிறுத்தவேண்டி  அரசுத்தரப்பிலிருந்து பல பிரச்சனைகள் உண்டாக்கப்பட்டன.  எனவே மார்கோவ் தனது பெரும்புகழ், செல்வம்,தொழில் அனைத்தையும் துறந்து தாய்நாடான பல்கேரியாவை விட்டு வெளியேறி லண்டனில் 1968ல் குடியேறினார்

 லண்டன் அவரது எழுத்துலகத்தின் மற்றுமோர் கதவை திறந்து வைத்திருந்தது. லண்டனிலிருந்து  பல்கேரியாவிலிருந்த  தனது முன்னாள் மனைவி  ஸ்ட்ரைவ்கா லெகோவாவிற்கு (Zdravka Lekova)  மார்கோவ் எழுதிய கடிதமொன்றில் ’’நல்லவேளையாக நான் லண்டனைத் தேர்ந்தெடுத்தேன். கடினமான நாட்களை இன்னும் கடக்க வேண்டி இருக்கிறது என்றாலும்  எந்த நிர்பந்தமும், எவருடைய அனுமதியும் இல்லாமல் என்னால் இனி எழுத முடியும், அந்த வகையில் நிச்சயம் நான் அதிர்ஷ்டக்காரன்தான்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

 அதுவரை ஆங்கிலம் அறியாமலிருந்த  மார்கோவ் விரைவாக ஆங்கிலம் கற்றுக்கொண்டார், லண்டன் BBC’s Bulgarian service’ல் நிரந்தர செய்தி தொடர்பாளர் பணியும் கிடைத்தது. பல மொழிகளில் பல நாடுகளின்  அரசியல் செய்திகளை ஒலிபரப்பி வெளியிட்ட அந்நிறுவனத்தில்  பல்கேரிய நிகழ்ச்சிக்கு மார்கோவ் பொறுப்பேற்றார்.

கம்யூனிஸ ஆட்சியில் பல்கேரிய அதிபரின் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் தெரிவிக்க முடியாதவற்றை எல்லாம் துணிந்து தனது   ’’Absentia Reports About Bulgaria’’  என்னும் தணிக்கையற்ற  தொடர் நிகழ்ச்சியில் ஒலிபரப்பினார் மார்கோவ்

 மார்கோவ் BBC யின் ஆங்கில வானொலி நிலையத்தின் முன்னாள் தலைவரின் மகளான அன்னபெல்லை மணந்து கொண்டிருந்தார் அவருக்கு அப்போது   2 வயதான  மகள் இருந்தாள்

அமெரிக்கா நிதி உதவியளித்து வந்த ரேடியோ ஃப்ரீ யூரோப் என்னும் ஊடகத்தின் வழியாகவும் மார்கோவ் பல்கேரிய கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிரான பல நிகழ்ச்சிகளை நடத்தினார். தான் பல்கேரியாவில் இருந்த போது நடந்தவை அனைத்தையும்  அவர்  நிகழ்ச்சிகளாக தயாரித்து ஒலிபரப்பினார். அவை பல்கேரிய அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பெரும் சங்கடங்களை உருவாக்கிக்கொண்டிருந்தன.

 அதன் பிறகே அவர் பல்கேரிய அரசின் முதன்மை எதிரியானார். அவரது நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாவதை தடுக்க ரேடியோ அலைக்கற்றையின் வீச்சை குறைப்பது, அலைக்கற்றைத் தடுப்பான்களை (Jammers) உபயோகிப்பது என பலதும் செய்த பல்கேரிய அரசு அவை அனைத்திலும் தோல்வியை சந்தித்தது.

பல்கேரியா, லண்டன் மற்றும் உலகின் பல நாடுகளிலும் மார்கோவின் நிகழ்சிகளை லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து கவனித்தார்கள்.  narrative journalism எனப்படும் அவ்வகை செய்தி ஒலிபரப்பில் தனது சொந்த திறனையும் சில கதைகளையும் இணைத்து அவரளித்த நிகழ்ச்சிகள் பல பல்கேரிய உயரதிகாரிகளின் ரகசிய வாழ்க்கையை, ஊழலை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. 

 அத்தோடு பல்கேரியாவின் அடித்தட்டு மக்கள், மாணவர்கள், பாலியல் தொழிலாளிகள் ஆகியோரையும் அவர் மறக்கவில்லை அவர்களுக்காக  அவர் பல நூல்கள் முன்பு  எழுதியிருந்தார். எனவே கல்வி, ஆரோக்கியம், பாலியல் தொழில் போன்ற பல சூடான தலைப்புக்களையும் அவர்  எடுத்துக்கொண்டார் .  பல்கேரிய அதிபரான Todor Zhivkov, மீதான மார்கோவின் தாக்குதல் மிக நேரடியாக இருந்தது

பல்கேரியாவில் அப்போது புகழ்பெற்ற நகைச்சுவை ‘’ ஏன் பல்கேரிய பொலிட்பீரோ அதிகாரிகள் அலுவலகங்களுக்கு வியாழக்கிழமைகளில் செல்வதில்லை? ஏனென்றால் அன்று அவர்கள் மார்கோவ் என்ன, யாரைப்பற்றி சொல்லப் போகிறார் என்று ரேடியோ  ஃப்ரீ யூரோப்  (RFE) கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்’’ என்பதுதான்

 அவரைப்போலவே பல்கேரிய அரசுக்கு எதிரான பிரச்சாரங்களை  மேற்கொண்டிருந்த  விளாதிமிர் ரோஸ்டோவுக்கும் நடந்தது எனினும் அவருக்கு செலுத்தப்பட்ட நஞ்சு குறைவான அளவில் இருந்தால் அவர் பிழைத்துக்கொண்டார். அந்த வழக்கு விசாரணை ஸ்காட்லாந்து யார்டின் சிறப்பு பிரிவினரால் இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

அப்போதைய சோவியத்  யூனியன் இவ்வாறான எதிரெழுத்தாளர்களை நாடு கடத்தியது அல்லது சிறையிலடைத்தது. அதுபோல  பல்கேரிய அரசினால் செய்ய முடியவில்லை ஏனெனில் மார்கோவ் பல்கேரியாவை விட்டு முன்னரே  வெளியேறி  இருந்தார். லண்டனில்  அவரை சிறைப்பிடிப்பதும், அங்கிருந்து வரவழைப்பதும்,  அவரை கட்டுப்படுத்துவதும் பல்கேரிய அரசால் முடியாமல் போனது.

1971ல் பல்கேரிய அரசு மார்கோவிற்கென ஒரு ரகசிய கோப்பை  ‘Wanderer’ என்னும் பெயரில் உருவாக்கி அவரது  நடவடிக்கைகளை  தொடர்ந்து  கண்காணித்து ஆவணப்படுத்திக் கொண்டிருந்தது. அதற்கு பிறகுதான் உளவாளியும் வாடகைக் கொலையாளியுமான ஒருவர் மூலம் மார்கோவ் கொலைசெய்யப்பட்டார்.

இப்போதும் மார்கோவின் கொலை பல நாடுகளில் குடைக்கொலை 2,3 என்று குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காவிலும் லண்டனிலும் இச்சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நூலான  The Truth That Killed பரபரப்பான விற்பனையில் இருந்தது  

அந்த நூற்றாண்டின் பெரும் படுகொலையாக, அநீதியாகக்  கருதப்படும் மார்கோவின் படுகொலை பெரும் கலாச்சார அதிர்ச்சியை உண்டாக்கியது. அரசுக்கெதிராக எழும்பும் குரலுக்கு என்னவாகும் என்பதை மக்கள் அச்சத்துடன் கவனித்தார்கள். இதை அடிப்படையாகக் கொண்டு பல தொலைக்காட்சி தொடர்களும் ஆவணப்படங்களும் திரைப்படங்களும் வெளியாகின. உலகெங்கிலும் உள்ள இதழியலாளர்கள் இக்கொலையின் புலனாய்வுக்கென லண்டன் சென்றபடி இருந்தனர்.

இந்நிகழ்வுக்கு பின்னர் அதே  ரிஸின் நஞ்சூட்டி அதே குடைபாணியில் நெல்சன் மண்டேலாவின் அமைச்சகத்தை சேர்ந்த Dr Pallo Jordan, என்னும் அதிகாரியை கொல்ல முயற்சி நடைபெற்று பின்னர் அது தோல்வியடைந்தது.

 2008ல் பல்கேரிய அரசு 30 வருடங்களாக முடிக்கப்படாத குற்ற வழக்குகள் அனைத்தையும் தீர விசாரித்து முடித்து கைகளை கறையின்று கழுவிக்கொள்ள முடிவெடுத்தது. 1978ல் நடந்த அப்படுகொலையை மீண்டும் 2008ல் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரித்தன. சில வருடங்களுக்கு  முன்புதான் “Piccadilly’’ என்னு குறியீட்டுப் பெயரால் அழைக்கப்பட்ட Francesco Gullino   என்னும் ஒரு இத்தாலிய கொலையாளி இதைச் செய்தார் என்று பல்கேரிய அரசால் தெரியப்படுத்தப்பட்டது

ஆனால்  Gullino அப்படுகொலையின் போது தான் லண்டனில் இருந்ததாகவும் கொலையில் தனக்கு தொடர்பேதும் இல்லை என்று மறுத்தான். பலமுறை தீவிரமக விசாரித்தும் குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை. Gullino  ’ன் வாழ்க்கை திரைப்படமாக்கப்பட்டால்  இது வரை வெளியான அனைத்து ஜேம்ஸ் பாண்ட் படங்களையும் மிஞ்சும் சாகசமும் குற்றமும் கொண்டதாக அது இருக்கும்.  

Gullino ஆஸ்திரியாவில் அவரது வீட்டில் 2021 ஆகஸ்டில்  இறந்த நிலையில்   கண்டுபிடிக்கபட்டார்

பிரிடிஷ் ஆவணப்படம் The Umbrella Assassin (2006) இப்படுகொலை குறித்து பலரிடம் நடந்த ஆழமான விசாரணைகளை காட்டியது. 

பராக் ஒபாமாவுக்கு வெள்ளை மாளிகை முகவரிக்கு வந்த ஒரு கடித உறையில் ரிஸின் நஞ்சு தடவப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டு  அதை அனுப்பிய மிஸிஸிப்பியை சேர்ந்த Paul Kevin Curtis என்பவர் கைது செய்யப்பட்டார்.

1940களிலேயே அமெரிக்க ராணுவம் ஆமணக்கு நஞ்சான ரிஸினை ஒரு உயிரி ஆயுதமாக பயன்படுத்தமுடியுமாவெனும் ஆராய்சியில் இறங்கி  இருந்தது.. அதன் முடிவு உலகிற்கு தெரிவிக்கப்படவில்லை. எனினும் 1980ன் ஈராக் போரின் போது ரிஸின் பயன்படுத்தப்பட்டதாகவும், சமீப காலங்களில் சில தீவிரவாத அமைப்புகள் ரிஸினைக்  கவனிக்கத் தொடங்கி இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

 ரிஸினைப் போல குன்றிமணியில் கிட்டும் ஏப்ரினைப் போல பல தாவர நஞ்சுகள் நம் கண்ணெதிரே இருக்கும் பலவகைத் தாவரங்களில் இருக்கின்றன, பண்டைய நாகரீகங்கள் பலவற்றிலும் அரசியல் காரணங்களால் நஞ்சூட்டப்பட்டுக் கொலைசெய்யபட்டவர்களை வரலாற்றில் காணமுடியும்.

மகாபாரதத்தில் பீமன் நஞ்சூட்டப்பட்டது, நாகர்குல சிறுவர்களுக்கு ஊமத்தை நஞ்சு கலந்த அப்பங்கள் கொடுக்கப்படுவது போன்ற விவரங்கள் பல இருக்கின்றன. அர்த்தசாஸ்திரத்தில் எதிரிகளை கொல்ல உடலெங்கும் நஞ்சு நிரம்பிய விஷ கன்னிகைகள் இருந்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எகிப்திய மன்னர்கள்  நஞ்சு கொண்ட தாவரங்களை ஆய்வு செய்திருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

 ரோமானிய அரசரான கிளாடியஸ் அவரது மனைவியான அக்ரிபினாவால் ( Agripinna) ஒரு விஷக்காளான் அளிக்கபட்டு கொல்லப்பட்டார்.

கோனைன் எனும் தாவர நஞ்சினால் தான் சாக்ரடீஸ் கொல்லப்பட்டார்

பண்டைய இந்தியாவில் நஞ்சு தடவிய போர்க்கருவிகள் பலவகைகளில்   புழக்கத்தில் இருந்திருக்கின்ற்ன்.

 ரிஸின் மிக எளிதாகத் தயாரிக்கக் கூடிய கொடும் தாவர நஞ்சு. மிக மிகக் குறைந்த அளவில் அது வளர்ந்த ஒரு மனிதரை கொல்லும் வீரியம் மிக்கது. ரிஸின் துகள்களாக, புகையாக, சிறு திவலைகளாக பல வடிவங்களில் கிடைக்கின்றது.

பிட்ஸ்பர்க் நகரில் உள்ள Center for Biosecurity யின் நச்சியலாளர்கள் ஒரு உப்புக்கல்லின் அளவு கொண்ட ரிஸின் உடலில் செலுத்தப்பட்டாலோ அல்லது வாய்வழியே உட்கொள்ளப்பட்டாலோ  அதுவே ஒரு மனிதனை கொல்லப் போதுமானது என்கிறார்கள்

 நஞ்சின் துவக்க அறிகுறிகள் தலை சுற்றலும் வாந்தியும் பின்னர் அடுத்தடுத்து சிறுநீரகங்களும் ஈரலும் செயலிழக்கும். இருதயம் நின்று பொய் மரணம் சம்பவிக்கும்.

 ரிஸினை முகர்ந்தால்,  சுவாசத் திணறலும் இருமலும் பின்னர் மூச்சிழப்பும், இறப்பும் உண்டாகும் இன்று வரை ரிஸினுக்கு முறி மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த ரிஸின் நம் வீடுகளுக்கருகிலும், சாலையோரங்களிலும், தரிசு நிலங்களிலும் மிகச் சாதாரணமாக  காணப்படும் ஆமணக்கு செடியிலிருந்து தான் கிடைக்கிறது.  ஆமணக்கு எனப்படும் கேஸ்டர் பீன் செடியின் கனியின் விதைகளில் ரிஸின் நஞ்சு நிறைந்துள்ளது. 

 ஆமணக்கின் தாவர அறிவியல் பெயர் Ricinus communis. ஆமணக்கு விதைகள் உண்ணிப்பூச்சியை (tick) போலிருப்பதால், Ricinus என்னும் பேரினப்பெயரின் பொருள் லத்தீன மொழியில் உண்ணிப் பூச்சி. சிற்றினப்பெயரான communis என்பது லத்தீன மொழியில் ’’சாதாரணமாக காணக்கிடைக்கும், பொதுவாகக் காணப்படுகிற’’ என்று பொருள்படும்

முன்பு இந்தியாவில் திரி விளக்கெரிக்க பயன்படுத்தப்பட்ட எண்ணெயானதால் விளக்கெண்ணை என்று வழங்கு பெயர் கொண்ட கேஸ்டர் ஆயிலும் இதே செடியின் விதைகளிலிருந்து எடுக்கப்படுகிறது.

 இந்த ஆமணக்கு எண்ணெய் செடி, நெல்லிக்காய் குடும்பமான யுஃபோர்பியேசியை (Euphorbiaceae) சேர்ந்தது

 பல்லாண்டுத்தாவரமாகிய இது 2 மீட்டர் உயரம் வரை வளரும் இவை, கிளைத்த அடர்த்தியான புதர்போன்ற வளரியல்பு கொண்டவை. கனிகள் பச்சை நிறத்தில அடர் பழுப்பு நிறப் புள்ளிகளுடன்  காணப்படும். விதையுறையை அடுத்திருக்கும் விதையின் சதைப்பகுதிதான் ரிஸினை கொண்டிருக்கும். ஆமணக்கு எண்ணெயான விளக்கெண்ணெயில் மிகக் குறைவாகத்தான் ரிஸின் இருக்கும் அதுவும்  எண்ணெய் தயாரிப்பில் உருவாகும் வெப்பத்தில்  செயழிழந்துவிடும் எனவே ஆமணக்கு எண்ணெயில் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் ஆமணக்கு விதைகளிலிருந்து எண்ணெய் எடுக்கப்பட்ட பின்னர் எஞ்சி இருக்கும் கழிவில் ரிஸின் நிறைந்திருக்கும்

 ரிஸின் ஒரு புரத நச்சு (toxalbumin). ரிஸின் ஒருவரின் உடலுக்குள் செலுத்தப்பட்டதும் உடலின் செல்களில் புரதம் உருவாவதைஅது முற்றிலும் தடுத்து விடுகிறது.  எனவே செல்கள் ஒவ்வொன்றாக அழிந்துகொண்டே வரும். துன்பம் வந்தால் தனியாக வராது கையைப் பிடித்து மற்றொன்றையும் கூட அழைத்துக் கொண்டு வரும் என்பார்களே அப்படி ரிஸின் மட்டுமல்ல அத்துடன் ஆமணக்கில் மற்றுமொரு நஞ்சும் உள்ளது. Ricin communis agglutinin, என்னும் இந்த நஞ்சு நேரடியாக ரிஸினைப் போல  செல்களை கொல்லாது, ஆனால் ரத்த சிவப்பணுக்களை ஒன்று சேர்த்து திட்டுக்களாக்கி  ஆபத்தை உண்டாக்கும்’

தமிழகத்தின் மாநில உணவென்று சொல்லிவிடலாம் என்னும் அளவுக்கு புழக்கத்தில் இருக்கும் இட்லிக்கு மாவு அரைக்க பல நூறு குடும்பங்கள் ஆமணக்கு விதைகளையும் உளுந்துடன் சேர்த்து அரைக்கிறார்கள். இட்லி மிருதுவாக இருக்கும் என்று காரணம் சொல்லப்படுகிறது

20 விதைகள் சேர்க்கப்பட்டால் அந்த மாவு கொடும் நஞ்சாகிவிடும். பல யூ டியூப் காணொளிகளில், பெண்களுக்கான பத்திரிகைகளில் மிருதுவான இட்லிக்கு ஆமணக்கு விதைகளையும் சேர்த்து  மாவரைக்கச் சொல்லி ஆலோசனை அளிக்கப்படுகிறது. 80 பாகை வெப்பத்தில் ரிஸின் செயலிழந்துவிடும், ஒன்றிரண்டு விதைகள்தான் போடப்படுகிறது என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், மிகக் கொடிய, இன்னும் முறி மருந்து கண்டுபிடிக்கப்பட்டு இருக்காத, அரசியல் காழ்ப்புக்களால் படுகொலைகள் நிகழ்த்தப்படும் அளவுக்கு வீரியம் உள்ள நஞ்சை கொண்டிருக்கும் விதைகளை கூடுதல் மிருதுவாக இட்லி இருக்க வேண்டும் என்பதால் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமா என்னும் அறிதலாவது இருக்கவேண்டும். தாவரக் குருடு என்னும் சிக்கலில் இதுவும் ஒன்று.

சமீபத்தில் வாட்சப் செய்தியிலிருந்து  உடலாரோக்கியதுக்கு நல்லது என்று  சொல்லப்பட்டதால் கலப்பைகிழங்கு எனப்படும் செங்காந்தள் கிழங்கைச் சமைத்து உண்டு ஒரு இளைஞர் ஆம்பூரில் உயிரிழந்தார். குன்றிமணியில் கடும் நஞ்சான ஏப்ரின் உள்ளது என்று தெரியாமல் பல குழந்தைகள் அதை கடித்து உயிரிழந்திருக்கிறார்கள்

தாவரங்களின் குறித்த அறிதல் ஆழமாக இல்லாவிட்டாலும்,  இதுபோன்ற அபாயங்களை தவிர்க்கும் அளவுக்காவது ஒவ்வொருவருக்கும் இருக்கவெண்டும். 

4லிருந்து 8 மணி நேரத்தில்  ரிஸின் நஞ்சூட்டப்பட்டதின் அறிகுறிகள் உடலில் தோன்றிவிடும். காற்றில் நீரில் உணவில் கலக்கமுடிந்த நஞ்சான ரிஸினின்  விளைவு அது உட்கொள்ளப்பட்ட விதங்களைப் பொறுத்து வேறுபடும்.  

அறிகுறிகள் வேறுபட்டாலும் முறிமருந்தில்லாததால்  பெரும்பாலும்36 லிருந்து 72 மணி நேரத்தில் ரிஸினால் உயிரிழப்பு நடக்கும். சருமத்தில் ரிஸின் பட்டால் ஒவ்வாமை தடிப்பு, எரிச்சல், போன்றவை மட்டும் உருவாகும் 

சிகிச்சை

இதுவரை ரிஸினுக்கு மாற்று அல்லது முறி மருந்து என்று எதுவும் இல்லை.

ரிஸின் நஞ்சூட்டப்பட்டது உறுதியானால் எவ்வளவு விரைவில் நஞ்சை உடலிலிருந்து வெளியேற்ற முடியுமோ அதை செய்ய வேண்டும்

வலிப்பு வராமல் இருக்க, சுவாசம் தடைப்படாமல் இருக்க சிகிச்சைகள் அளிக்கப்படும் என்றாலும், நேரடியாக ரிஸினுக்கு மருந்துகளும் சிகிச்சைகளும் இல்லை. விளைவுகளை குறைப்பது மட்டுமே மருத்துவம். 

சிறுநீரில் இருக்கும் ricinine என்னும் பொருளின் அளவை அறியும் முறையை CDC கண்டறிந்திருக்கிறது. அதன் மூலம் ரிஸின் நஞ்சூட்டப்பட்டிருப்பதை உறுதிசெய்யலாம்.  ரிஸினைனும் ஆமணக்கு விதைகளில் இருக்கும் ஒரு ஆல்கலாய்டு. ரிஸின் உடலில் சேர்ந்தால் உடனே ரிஸினைன் சிறுநீரில் கலக்கும் என்பதால் ரிஸினைன் ஒரு biomarker ஆக ரிஸின் நஞ்சூட்டலை தெரிவிக்கிறது. இந்த வசதி அமெரிக்க CDC யில் மட்டுமே உள்ளது.

ரிஸினை சுலபமாக வீட்டிலேயே பிரித்தெடுக்கலாமென்றாலும்  அதை துய்மைப் படுத்த தொழில்நுட்ப உதவி வேண்டி இருக்கிறது.

நேர்த்தியாக தொழில்நுட்ப உதவியால் பிரித்தெடுக்கப்பட்ட ரிஸின் மிக அபாயகரமானது. வீட்டிலேயே தயாரிக்கப்படும் ரிஸின் அதைக்காட்டிலும்  வீரியம் குறைந்தது

லாஸ் வேகாஸில் தங்கும் விடுதி ஒன்றில், 2008ல் தூய ரிசினை பிரித்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த   Roger von Bergendorff  என்பவர், அதை தவறுதலாக முகர்ந்து பார்த்ததால் கோமா நிலைக்கு சென்றார் அவருக்கு சிகிச்சை அளித்து, பிழைக்க வைத்து அவர் கண்விழித்ததும் மூன்றாண்டுகள் ரிஸினை தயாரித்தற்காக கடுங்காவலில் வைக்கப்பட்டார். ரோஜர் முகர்ந்தது மிகக்குறைந்த அளவில் தூய்மைப்படுத்தாத ரிஸின் என்பதால் அவர் உயிருடன் இருந்து சிறை தண்டனை  அனுபவிக்க முடிந்தது.

ரிஸின் நீரிலும், அமிலத்திலும் கரையும் இயல்புடையது.

 முகர்ந்தாலோ உணவில் சேர்க்கப்பட்டாலோ கூட உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் சிறிது இருக்கும், ஆனால் உடலில் செலுத்தப்படுகையில்தான் ரிஸின் இறப்பை உண்டாக்குகிறது.

 ரிஸின் நஞ்சு பாதிக்கப்பட்டவரிடமிருந்து பிறருக்கு பரவாது.

 பல நாடுகளில் ரிஸின் ஆபத்துக்கு உதவிக்கழைக்கும் தொடர்பு எண்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ரிஸின் உலகில் அறியப்பட்ட  தாவர நஞ்சு வகைகளில் மிக மிக கொடியது, 

 இதுவரை நடைபெற்ற ரிஸின் கொலை முயற்சிகள் எதுவுமே உணவில் ரிஸின் சேர்க்கப்பட்டு உடலுக்குள் சென்றவை இல்லை. அனைத்துமே முகர்தல் மற்றும் உடலில் செலுத்தப்பட்டவை என்னும் வகைகள்தான்.

உலகெங்கிலும் பாதி விதையிலிருந்து 30 விதைகள் வரை தவறுதலாக உண்டு உடல் பாதிக்கப்பட்டு  சிகிச்சையளிக்கப்பட்ட விவரங்கள் ஆவணப் படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் முடிவுகளிலிருந்தும் விலங்குகளில் நடத்தப்பட்ட சோதனை ஆய்வுகளிலிருந்து  கிடைத்த முடிவு, உணவின் வழியாகவோ அல்லது கடித்து மென்றதாலோ உடலில் சேரும் ரிஸினால் உயிரழப்பு நேரும் அளவென்பது  இரண்டு விதைகளின் அளவென்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

ஆமணக்கு விதை பலகாலமாக பழங்குடியின மருத்துவ முறைகளில் பெண்களுக்கான கர்ப்பத்தடை  உபயோகத்தில் பயனாகிறது.  யுனானி மருத்துவ முறையில் ஆமணக்கு எண்ணெய் மலமிளக்கியாக பயன்படுகிறது. 

ஆமணக்கு விதைகள் எகிப்திய மம்மிகளில்  கிடைத்திருக்கின்றன இவை கிமு 4000த்தை சேர்ந்தவை என கணக்கிடப்பட்டுள்ளது. கிமு 1500 எழுதப்பட்ட எகிப்திய மருத்துவ நூலான Ebers Papyrus கண்களில் உண்டாகும் எரிச்சல் அழற்சி போன்றவைகளுக்கு ஆமணக்கு எண்ணையால் கழுவி நிவாரணம் அளித்தது குறிப்பிடப்பட்டிருக்கிறது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சருமப்பொலிவிற்காகவும் இந்த எண்ணெய் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.

ரிஸின் பயங்கரவாதப் போராயுதமாக இதுவரை பயன்படுத்தப்படவில்லை எனினும் ரிஸினை தயாரிப்பது மிக எளிதென்பதால் குற்றச்செயல்களில் இதை பயன்படுத்தும் சாத்தியங்கள் உண்டு.

 ரிஸின் கொண்டிருக்கும் ஆமணக்கு எண்ணெய் , உணவுப்பொருட்களில் சிறு அளவில் இவ்விதைகள் சேர்க்கப்படுவது ஆகியவை மிகுந்த கவனத்துடன் கண்காணிக்கப்பட வேண்டும்

மார்கோவின் படுகொலையை இப்போது நினைக்கையில் , அக்கால அரசியல் காழ்ப்புக்களால் அப்படி நஞ்சூட்டப்பட்டு நிகழ்ந்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றும். ஆனால் அப்போதும் இப்போதும் அப்படி ஒன்றும் பெரிய வேறுபாடில்லை என்பது 2020ல் ருஷ்ய எதிர்கட்சி தலைவரும், ஊழலுக்கெதிரான செயற்பாட்டாளருமான அலெக்ஸி நவால்னி (Alexei Navalny)க்கு நடந்த நஞ்சூட்டி கொல்லும் முயற்சியை அறிந்து கொண்டால் தெரியவரும்.

மறைந்த மார்கோவின் “In Absentia Reports” ஒலிபரப்புக்கள் கட்டுரைகளாக 1990ல் பல்கேரியாவில்  கம்யூனிஸ்ட் அரசின் முடிவுக்கு பின்னர் அச்சில் வெளியாயின. 2000த்தில் மார்கோவுக்கு இறப்புக்கு பின்னரான பல்கேரியாவின் உயரிய விருதான Order of Stara Planina அவரது இலக்கிய பங்களிப்புக்களின் பொருட்டும், கம்யூனிசஅரசை  ஒரு குடிமகனாக எதிர்த்து முன்னணியில் நின்றமைக்ககாவும் வழங்கப்பட்டது. மார்கோவின் சிலையும் அங்கு நிறுவப்பட்டுள்ளது,

பின் குறிப்புகள்:

* டியோ லிர்கோஃபின் முழுப்பெயர் டோடர் லிர்கோஃப். பல்கேரிய அகதி. பிரிட்டனில் குடியேறி, பிபிசியின் பன்னாட்டு ஒலிபரப்பில், பல்கேரியக் கிளையில் பணியாற்றியவர். இவரது வாழ்க்கைக் குறிப்பு, 2002 இல் இவர் மரணத்துக்குப் பின் த கார்டியன் பத்திரிகையில் வெளியாகியது. அது இங்கே: https://www.theguardian.com/news/2002/mar/21/guardianobituaries

1.

மேலதிக தகவல்களுக்கு:

2 Replies to “ரிஸின்”

 1. ஆமணக்கு விதை நச்சுனு எப்போ தான் தெரியுது.
  நான் கொஞ்ச வருஷம் முன்னாடி விளக்கெண்ணெய் தண்ணீர் கலந்து குடிக்கிறத வழக்கமா வைத்இருந்தேன்
  அது நல்லதா?

  1. “ஆமணக்கு எண்ணெயான விளக்கெண்ணெயில் மிகக் குறைவாகத்தான் ரிஸின் இருக்கும் அதுவும்  எண்ணெய் தயாரிப்பில் உருவாகும் வெப்பத்தில்  செயழிழந்துவிடும் எனவே ஆமணக்கு எண்ணெயில் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் ஆமணக்கு விதைகளிலிருந்து எண்ணெய் எடுக்கப்பட்ட பின்னர் எஞ்சி இருக்கும் கழிவில் ரிஸின் நிறைந்திருக்கும்.”
   இந்த வரிகள் கட்டுரையிலேயே காணக் கிட்டுகின்றன. உங்களுக்கான பதில் இதில் இருக்கிறதே!
   பதிப்புக் குழு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.