முது மது (நாட்படு தேறல்)

தமிழாக்கம்: மைத்ரேயன்

“அப்படின்னா என்ன, அதைக் குடிக்கணுமா?” சாண்ட்ரா கேட்டாள். “அது ஒரு திரவமா?”

அவளும் டாக்டர் கோலும் ஓய்வெடுக்கும் அறையில் இருந்தனர், அது இலையுதிர் காலத்தின் துவக்கம்தான் என்பதால், கணப்புப் பிறை குளிர்ந்தே இருந்தது, அரை டஜன் மங்கலான விளக்குகள், நுழைந்து கொண்டிருக்கும் மாலை நேரத்தை எதிர்த்து வேலை செய்ய முயன்று கொண்டிருந்தன. அது ஒரு ஞாயிறு. சாண்ட்ரா மேலோட்டை உடைத்து பருப்புகளை எடுத்துக் கொண்டிருந்தாள், சிறு பெண்ணாக இருந்தபோதே அந்த வேலையைச் செய்ய அவளுக்குப் பிடிக்கும், உடைத்து எடுத்த பருப்புகளை டாக்டர் கோலிடம் கொடுத்துக் கொண்டிருந்தாள், அவள் அவரை வால்ட் என்று அழைத்தாள். அவர் அவற்றை ஒவ்வொன்றாகத் தின்றார், ஏதோ யோசித்த வண்ணம் இருந்தவரின் மழிக்கப்பட்ட தாடைகள் அசைந்து கொண்டிருந்தன. 

“இல்லை, அதை ஒரு திரவம்னு சொல்ல முடியாது,” என்றார் அவர். “தவிர, இல்லை, ரொம்ப சரியாச் சொன்னால், நீ அதைச் சாப்பிட முடியாது. ஒருக்கால் அதைக் குடிக்க முடியலாம்; இந்த வார்த்தைங்களோட நுட்பமெல்லாம் எனக்குத் தெளிவாயில்லை.”

“அது கழிப்பறையில் போய்ச் சேராதுன்னு சொல்றீங்க, அதானே,” என்றாள் சாண்ட்ரா. 

“அது திரவமோ, திடப்பொருளோ, அல்லது வாயுவோ இல்லை, ஆனால் அதை ஏதாவது ஒரு நாற்பத்தி ஐந்து வயது மனிதரிடம் கொடுத்தால், அவர் அதைக் கொண்டு கிறக்கத்தின் உச்சிக்கு எப்படிப் போவதுன்னு கண்டு பிடிச்சுடுவார், எனக்கு அது மட்டும் நிச்சயம். அவருக்கு ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்தால், ஆளே காணாமல் போயிடுவார், திரும்பி வர விரும்பமாட்டார்.” 

“ஆனாப் பாருங்க, அது அவர் என்ன மாதிரி நிலைக்குத் திரும்பி வர்றாருங்கறதைப் பொறுத்ததுன்னு நான் நினைக்கிறேன்.” 

ஜான் ப்ரைனை அடுத்த அறையிலிருந்து கேட்க முடிந்தது, சாவதைப் பற்றிப் பேசும் பாட்டு, முசுட்டு முட்டாள் ஒருவன் இறந்ததைப் பற்றிய பாட்டு. சாண்ட்ராவும் டாக்டர் கோலும் பகல் நேரத்தில் ஜான் ப்ரைன் பற்றியும், இரவில் எல்லா ஃபிட்ஸ்ஜெரால்ட் பற்றியும் ஒருமித்த அபிப்பிராயம் கொண்டிருந்தார்கள். இப்போது கிட்டத்தட்ட எல்லாவின் நேரம் நெருங்கி விட்டது. இன்னொரு அறையிலிருந்து வருகிற இசையைக் கேட்பதுதான் சிறந்த முறை என்பதில் இருவரும் ஒத்துப் போனார்கள். அவர்கள் நிறைய விஷயங்களில் ஒத்துப் போயிருந்தார்கள், அதற்கு பகுதிக் காரணம் அவர்கள் ஒருவரை ஒருவர் மிகவும் மதித்தார்கள், ஒத்துப் போவது அவசியம் என்று நினைத்தார்கள், மற்றப் பகுதிக் காரணம், வெறும் குருட்டு அதிர்ஷ்டம். 

“அது ஒரு போதை மருந்து,” சாண்ட்ரா சொன்னாள். “இதுதான் இப்ப ரொம்ப தேவையாக்கும்: மட்டையாக் கிடக்கற கூட்டத்தைப் பெரிசாக்க இன்னொரு பொருள் தேவை போல.”

டாக்டர் கோல் யோசனை செய்பவராகத் தலையைச் சாய்த்துக் கொண்டார். அவரையும், சாண்ட்ராவையும் தவிர வேறு யாருக்கும் அவர் உண்மையிலேயே ஒரு டாக்டரா, ஆனால் என்ன வகை டாக்டர் என்பது தெரியாது.  “போதை மருந்துகளிலேயே உச்ச நிலை மருந்து,” என்றார். “தப்பான ஆட்களிடம் எப்ப அது போய்ச் சேருதோ, அப்ப அது அப்படித்தான் ஆகப் போறது.”

எப்ப போய்ச் சேருதோ-வா?”

 “போய்ச் சேர்ந்தாக்கன்னு வச்சுக்க. அது மொத்தம் நான்கு கைகளுக்குப் போய்ச் சேரும்னு எதிர்பார்க்கிறேன்.” 

சாண்ட்ரா மிருதுவான தோல் கொண்ட தன் முஷ்டியில் இரண்டு வாதுமைக் கொட்டைகளை இறுகப் பற்றினாள். அவள் அப்படி ஒன்றும் வலுவானவள் இல்லை, ஆனால் அந்தப் பருப்புகளின் மெலிவான பகுதிகளைக் கண்டறிவதில் அவளுக்கு நிறையப் பயிற்சி இருந்தது. “உங்களுடையதையும் சேர்த்து நான்கு கைகள், அப்படியா?” என்றாள். 

“ இதுக்கெல்லாம் முன்னாடி இருந்த எதையும் விட இதுக்கு சக்தி அதிகம். இதோட வசீகரத்தை எதிர்க்க முடியாது. கோகெய்ன். மெத். ஆண்மை காப்சூல்கள். கலிஃபோர்னியாவில் புகழ் பெறுவது, எதுவும் இதற்கு நிகரில்லை. இளைஞர்களிடம் உள்ள ஒரே சக்தி: அது இளமையேதான். ஔடி கார் நிறுவனத்தில் எந்தத் துறையின் தலைவரான வெள்ளையரும், அந்த இனிமையான வெகுளித்தனத்துக்கும், கலப்படமில்லாத மகிழ்ச்சிக்கும் உடனடியாக இதன் மூலம் வழி காண்பார்.”

“அதெல்லாம் அவங்களோட ஔடி காரெல்லாம் பறிமுதல் செய்யப்படும் வரைதானே. அவங்களோட துறையெல்லாம் வேற யார் கிட்டெயாவது கைமாற்றிக் கொடுக்கப்படும்வரைதானே.”

சாண்ட்ரா அவரிடம் கச்சிதமாகப் பாதியாக இருந்த வாதுமைப் பருப்பைக் கொடுத்தாள், அது மூளையின் அரைப் பாகம் போல இருந்தது, அதை டாக்டர் கோல் ஒரு சொக்கட்டானைப் போல குலுக்கி விட்டுத் தன் வாய்க்குள் நுழைப்பதைப் பார்த்தாள். அவர் தன் நளினமான, பழுப்பு நிற விரல்களில் மோதிரங்கள் ஏதும் பூணவில்லை. நேர்த்தி என்பதைக் காணும்போதே நாம் இனம் கண்டு கொள்ள முடியும், சாண்ட்ரா அப்படித்தான் கருதினாள், டாக்டர் கோலுடைய சொத்துகள் மீது முழு உரிமை அவருக்குக் கிட்டுவதற்கு முன்பிருந்தே, சாதாரணமாக எதிர்பார்க்கக் கூடிய காலம் ஆவதற்கு மிகவும் முன்பாகவே, அவருடைய முகத்தில் படிப்பாளிகளுக்கே உரிய கூர்மையும் ஒட்டி உலர்ந்த தோற்றமும் வந்து விட்டன என்றாலும், அதற்கெல்லாம் மிக முன்பாக, துவக்கத்திலிருந்தே டாக்டர் கோல் நேர்த்தியானவராகத்தான் தோற்றம் கொண்டிருந்தார். அவர் விந்தி நடப்பது கூட, அதுவும் இளைஞரான அவருக்கு, ஏதோ ஒரு விதத்தில் நேர்த்தியாகவே இருந்தது. எப்படியோ பாங்குடன் தெரிந்தது. அவர் உடம்பின் மேல்பாகம் வலுவாக இல்லை, கைகள் பதின்ம வயதுப் பெண்ணின் கைகள் போல இருந்தன. இருப்பினும், அவருக்கு ஒரு போதும் சிருங்காரத்துக்கான குளிகைகள் தேவைப்படவில்லை, ஆனால், அவர் இன்னமும் தன் முப்பதுகளில்தான் இருந்தார்.   

“யாராவது பெரிய அளவில் இதை உற்பத்தி செய்வாங்கன்னு நீங்க சொல்றப்ப, யாரோ ஓர் ஆம்பளை இதைச் செய்வார்னுதான் சொல்றீங்க, இல்லயா? மனித ராசியில யாரோ ஓர் ஆண் எல்லா நீரையும் என்னிக்காவது ஒரு நாள், தன் சொத்தாக்கியிருப்பார், யாரோ ஆண் இதற்கெல்லாம் சொந்தக்காரர்… அது என்னதாக இருந்தாலும்.”

“ஒருவேளை அதே ஆணாகக் கூட இருக்கலாம்,”என்று சிறிது வருத்தத்தோடும், குத்தலாகவும் சொன்னார் டாக்டர் கோல். 

சாண்ட்ரா துப்பாக்கி ரவை போல உருவிலிருந்த ஒரு ஹேஸல் பருப்பை வட்டிலிலிருந்து பொறுக்கினாள், வெளிச்சத்தில் அதைச் சோதித்தாள். “அவங்களுக்குப் புரியாததை அடிப்படையா வச்சு ஜனங்க கிட்டே நிறையக் கவலைகள் இருக்கு. அவங்களுக்குப் புரிஞ்சு போச்சுன்னா, அதுவும் இன்னும் கூடுதலா அச்சத்தைக் கொணருது. அப்போ இந்த ஆண்களுக்கு அதை வச்சு எப்படிப் பணம் பண்றதுன்னு தெரிஞ்சு போயிடுது.”

டாக்டர் கோல் கவனத்துடன் ஆமோதித்துத் தலையசைத்தார், தன் மேலங்கியிலிருந்து எதையோ பொறுக்கி எடுத்துக் கொண்டிருந்தார். 

“வசந்த காலப் பயிற்சிக்குப் போவதாகச் சொன்னீங்க இல்ல, அப்ப இதைத்தான் செய்துட்டிருந்தீங்களா?”

“ஓ, நான் வசந்தகாலப் பயிற்சிக்குப் போனேன்,” என்றார் டாக்டர் கோல். “சில விளையாட்டுப் போட்டிங்களுக்குக் கூடப் போனேன். பேஸ்பாலுக்கு இந்த ஆய்வுல ஒரு முக்கியமான பங்கு உண்டு.”

“ஆனாக்க நீங்க வேறெங்கெயோவும் போனீங்களா?”

“அது உண்மைதான். நான் வெளிலயும் அலைஞ்சேன்.”

சாண்ட்ரா சிரிக்காமல் இருக்க முயற்சி செய்தாள். டாக்டர் அவளுடைய கட்டுப்பாட்டில் அத்தனை தூரம் இருந்தார், அதனால் அவர் அவளுக்குத் தெரியாமல் ஏதோ மறைத்து வைத்திருந்தார் என்பது அவளுக்குக் கொஞ்சம் பரபரப்பாக இருந்தது. அது ஏதானாலும் சரிதான். 

“வளர்ந்த மனிதன் ஒருவன் சிறு குழந்தைகளைத் தள்ளி விட்டுப் பிற வளர்ந்த மனிதர்களிடம் கையெழுத்து வாங்க முந்தினதை அங்கே பார்த்தேன். அதைப் பார்த்தபோது, வசந்தகாலப் பயிற்சியை நான் பார்த்த வரை போதும் என்று ஆகி விட்டது. மேலும் என் திட்டத்தில் சரியான பாதையில் போகிறேன் என்பது எனக்குத் தெரிந்தது. அதாவது, ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் அப்படிங்கிறேன்.”

தனக்குத் திரும்பத் திரும்ப வரும் கனவை கோரக் கனவாக வகை பிரிப்பது தனக்குத் தோற்றுவிட்ட உணர்வைத் தரும் என்பதால் அப்படிச் செய்ய டாக்டர் கோல் விரும்பவில்லை. அக்கனவு அவருடைய கண்டுபிடிப்பில், புத்தாக்கத்தில், மற்றும் தயாரிப்பு மருந்தில் மையம் கொண்டிருந்தது. அந்தத் தயாரிப்போ பெட்டி போன்ற, பழுப்பு நிறம் கொண்ட, காலாவதி ஆன ஒரு கணினியில் சிக்கிக் கொண்டிருந்தது. அதன் புழுதி படிந்த ஓட்டுக்குள்ளிருந்து அவரால் அந்த விலை மதிப்பற்ற பொருளை எடுக்க முடியவில்லை. அதன் வன்பொருட்கள் வீணாகிப் போயிருந்தன. மென்பொருளோ பழமை படிந்த ஒன்று. அவர் அச்சுப் பலகையில் தட்டித் தட்டிப் பார்க்கிறார், சுட்டுக் கருவியைக் குலுக்குகிறார், பதிவுத்தகடுகளை நுழைத்து, உருவிப் பார்க்கிறார், மொத்தத்தையும் அணைத்து விட்டு, மறுபடி செயலுக்குக் கொணர்கிறார், ப்ளாஸ்டிக் பெட்டியின் மேலே உள்ளங்கையால் அடிக்கிறார். அந்தக் கணினி ஒரு முட்டாள்தனமான, (அவருக்கு) ஒவ்வாத கன சதுரப் பெட்டி, இருபதாண்டுகள் முன்னரே ஒழித்துக் கட்டி இருக்க வேண்டிய ஒன்று, அந்த அபாயகரமான சாயனம் அதனுள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது, எட்டிப் பிடிக்க முடியாதபடி, ஆனால் எந்தப் பாதுகாப்புமின்றி இருக்கிறது. டாக்டர் கோல் அதை ஒரு நாளும் திரும்பப் பெற மாட்டார். அவருக்கு ஒருபோதும் அதன் மீது கட்டுப்பாடு கிடைக்காது. 

இந்தக் கனவு அவருக்கு வந்த ஒவ்வொரு சமயமும், விழித்தெழுந்த பின்புதான் அவர் உணர்வார், இது பிரச்சினையாக இருந்தால், இதிலேயே பிரச்சினைக்கு விடையும் இருக்கிறது என்று. 

”என்ன தெரிகிறதென்றால், உங்களுக்கு ஒரு உதவியாளர் தேவை,” என்றாள் சாண்ட்ரா, “அல்லது அது போல யாரோ ஒருத்தர்.”

அவர்கள் இப்போது ஓய்வறையில் இல்லை. மாலையுணவுக்குப் பிறகான நேரம் அது. முழு ராத்திரி. தொலைக்காட்சி இருந்த அறையில் இருந்தார்கள், ஆனால் அதன் ஒலி நிறுத்தப்பட்டிருந்தது, வீட்டின் இன்னொரு பகுதியிலிருந்து எல்லா ஃபிட்ஸ்ஜெரால்ட் நிறைய ஆன்ம வேகத்துடனும், சாதுரியத்துடனும் குறைகளைப் பற்றிப் பாடிக் கொண்டிருந்தார். திரையில் ஓர் ஆட்டுப் பண்ணையில் யாரோ ஒருவர் ஓட்டை உடைசல் பஸ்களை, ஏற்கனவே கலைப் பொருட்கள் போல இருந்தவற்றை, வேறு வகையான கலைப் பொருட்களாக மாற்றிக் கொண்டிருந்தார்.

“அவங்களுக்கு நான் எதுவும் சொல்லித் தரத் தேவை இராது,” என்றார் டாக்டர் கோல். “யாருக்கும் எதையும் நான் சொல்லிக் கொடுத்ததில்லை. அவங்களுக்குத் தெரிய வேண்டியதெல்லாம் ரகசியத்தைக் காப்பாத்தறதும், நம்பகமானவங்களாக இருக்கிறதும்தான். அதை எல்லாம் எப்படிச் சொல்லிக் கொடுக்கிறதுன்னு எனக்குத் தெரியல்லை.”

“இல்லை, ஒரு கூட்டாளி ன்னு சொல்லட்டுமா?”

 “அந்தச் சொல்லை நீ பயன்படுத்தாமல் இருந்ததை நான் மெச்சறேன்.”

“இந்தப் பிரச்சினையை யார் கிட்டெயாவது கொடுத்துட்டுப் போக நீங்க விரும்பறீங்க, அது ஒரு பெண்ணாவும் இருக்கணும், அப்படித்தானே.”

டாக்டர் கோல் இதை மறுக்கவில்லை. அது நல்ல முடிவாகத்தான் தெரிந்தது. 

“என்னைப் பார்க்காதீங்க,” என்றாள் அவள். “உங்களை விட எட்டு வயசு பெரியவ நான். எப்படியுமே, இந்த மாதிரி உசந்த கட்ட அறிவு விஷயத்திலே ஆதிகாலத்துப் பொண்ணான ஈவை சிக்க வைக்கிறது என்ன மாதிரி வேலை செய்யும்?”

“இந்த உதாரணம் கவனத்தைச் சிதறத்தான் அடிக்கும். அது சரியில்லை. நீ இந்த அறிவைப் பத்திரமாப் பூட்டி வைக்க உதவுவே.”

சாண்ட்ரா ஓரக் கண்ணால் பார்த்தாள். “நானா இருந்தா,” என்றாள், “வால்ட்டோட ஔஷதத்தைப் பத்திக் கவலைப்படுவேன், சாண்ட்ராவோட உதாரணத்தைப் பத்தி இல்லை. நான் கேட்ட கேள்வி உங்களுக்குப் பிடிச்சுதோ இல்லயோ, பதிலென்னவோ எப்பவும் ஒண்ணேதான்.”

டாக்டர் கோல் கனிந்த, கணவர்களுக்கே உரித்தான பெருமூச்செறிந்தார். 

“அதை நீங்க ஏன் அழிக்கல்லைன்னு என் கிட்டே மறுபடியும் சொல்லுங்க. நீங்க கண்ணாடியில பார்த்துக்கும்போது கவனிக்க வேண்டியது அதுதான். அதை அழிக்கிறது வருத்தத்தைக் கொடுக்கும்னு எனக்குத் தெரியும், ஆனா நீங்க மத்த கண்டுபிடிப்புகளைச் செய்வீங்கதானே.”

டாக்டர் கோல் தன் உதடுகளை இறுக்கிக் கொண்டார். சாண்ட்ரா ஏதோ சொல்லக் கூடாததைச் சொல்லி விட்டாற்போல அவளைப் பார்த்தார், ஒருக்கால் அவள் சொன்னது அப்படித்தானிருந்ததோ. சிக்கலான பிரச்சினைகளை அவை ஏதோ எளிமையானவை என்பதுபோலப் பேசுவது நாகரிகமற்றது. நம்மால் உண்மையாக ஈடுபட முடியாத விஷயங்களைப் பற்றி அறிக்கைகள் விடுவது முரட்டுத்தனமானது. அதே போல, அவளுடைய பெயரைச் சரியாக உச்சரிக்காதவர்களைத் திருத்துவது என்பதும் அநாகரிகமானதுதான், இதை டாக்டர் கோல் ஒரு முறை அவளிடம் சொல்லி இருந்தார்- அவர் சொன்னது சரி என்று பல வருடங்களுக்குப் பிறகு அவள் தீர்மானித்தாள். 

“எனக்குப் புரிகிறது,” அவள் சொன்னாள். “நீங்க இதைப் போல வேற கண்டுபிடிப்புங்களல்லாம் செய்ய மாட்டீங்க. இது ரொம்பப் பெரிசு. அது எனக்குப் புரியறது.”

 “அந்த இன்னொருத்தர் கிட்டே நான் உண்மைல எதிர்பார்க்கிறது ஒருவேளை இதுதானோ?நான் பார்க்காதபோது, அந்த நாசமாப் போகிற கண்டுபிடிப்பை அழிச்சு ஒழிக்கற அளவு திடமான மனசு அவருக்கு இருக்கணுங்கறதோ. ஆனால் அது நல்லதுக்கும் பயன்படக் கூடும்ங்கற சாத்தியம் எப்பவும் இருக்கு. அனேக நேரம் எது மக்களைக் காப்பாத்துதோ அதேதான் அவங்களை அழிக்கவும் செய்யறது. இன்னும் முப்பது வருஷங்கள்லெ இந்த பூமி என்ன மாதிரி கஷ்டங்கள்லெ சிக்கப் போறதுன்னு இப்பொ நமக்குத் தெரியல்லை. மொத்த மனுச குலமே இன்னும் அறுபது வருடங்கள்லெ என்ன பாடுபடப்போறதுங்கறதும்தான் தெரியல்லெ.”

“இங்கெ பாருங்க, இது படுமோசம்,  அந்த வேலையை நிச்சயமா நீங்க என் மேலே சுமத்த முடியாது.  பாதுகாப்பா வச்சாலும் தப்பு, அழிச்சாலும் தப்பா?”

“இப்ப இது என் கிட்டே இருக்கலாம்னு என் மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு. இதுல நான் திளைக்காம இருக்க முடியும், எனக்கு நம்பிக்கை இருக்கு. நல்ல மேலாளரா இருப்பேங்கறதுலயும் நம்பிக்கை உண்டு.” டாக்டர் கோல் எழுந்து கொண்டார், தன்னுடைய தடுமாற்றமான நடையோடு ஜன்னலருகே மெதுவாகப் போனார், இரவு நேரத்துத் தெருவைப் பார்த்தார், அங்கே சில குழந்தைகள் விளக்குக் கம்பத்தினடியில் ஏதோ ஒரு பொருளைச் சுற்றி நின்றனர்- அது ஓர் ஆமையாகவோ, அல்லது பயன்படுத்தப்பட்ட ஆணுறையாகவோ இருக்கலாம். “என்னை நான் இப்ப நம்பறேன், ஏன்னா என்னிடம் அருமையாகப் பழகற ஒரு பெண் என் கூட இருக்கா, எனக்குப் பிடிச்சதை எல்லாம் என்னால் சாப்பிட முடியறது, என் வேலையில எனக்குப் பெரிய வெற்றிங்க கிடைச்சிருக்குங்கறதுல நான் மகிழ்ச்சி அடைஞ்சிருக்கேன். ஆனால் எனக்கு வயசானப்புறமோ, இல்லை எனக்கு நீரிழிவு நோய் வந்தாலோ, வெளியே கடுமையாப் பனி கொட்டி எல்லாத்தையும் மூடினாலோ என்ன ஆகும்? நீ ஒருக்கால்… நீ எப்பவாவது என்னை விட்டுப் போய்ட்டா என்ன செய்வேன்?”

“உங்களை விட்டுப் போறதா?” என்றாள் அவள். அதைக் கண்டிக்கும் தோரணையில் தன் நாக்கால் ஒரு கொட்டும் ஒலி எழுப்பினாள். தான் சொல்லப் போவதின் அழுத்தத்தைச் சுட்டும் வகையில், ரிமோட் கண்ட்ரோலை எடுத்து, தொலைக்காட்சியை அணைத்தாள், முழு மேலங்கி அணிந்த மூன்று ஓவியர்கள் அங்கிருந்து காணாமல் போனார்கள். ஆனால் அந்த ஓவியர்கள் மறைந்ததும், என்ன சொல்ல வேண்டும் என்பது குறித்து அவளுக்கு வேறேதும் யோசனை தோன்றவில்லை. அவள் அவரை விட்டு விட்டுப் போவது என்பது ரொம்பவே நகைப்புக்குரிய ஒரு யோசனை, ஆனால் அப்படியும் எளிதாகச் சொல்லி விட முடியாது, நம் பெட்டிகளை நிரப்பி, இறுதியாக மூட்டை கட்டப் போகிற நாள் வரை கூட இப்படி அந்த யோசனையை நாம் புறந்தள்ளக் கூடும். அவர் ஏன் அந்தக் கண்டு பிடிப்பை அழித்து விடக் கூடாது என்று அவள் கேட்டது அநாகரிகமாக இருக்கலாம், ஆனால் அவள் அவரை விட்டு விட்டுப் போவாள் என்று -அவள் ஏதோ இன்னொரு வாழ்க்கையில், கடந்த காலத்தில், பல ஆண்களுக்கு அப்படிச் செய்திருக்கிறாள் என்பதால், அவரை விட்டுப் போய்விடுவாள் என்று- அவர் சொல்வதும் அநாகரிகமானதுதான். 

“மன்னிச்சுக்கோ,” என்றார் அவர். “உன்னைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது.”

“கூடாதுதான்,” வீறாப்பாக அவள் சொன்னாள். “என்னைப் பத்தி அப்படிச் சொல்றது தகாது.”

“நான் சரியா யோசிக்காம இருந்திருக்கேன். உனக்கு ஏற்றது ஆராதனையும், மென்மையாக நடத்துவதும்தான். அதுதான் உனக்கு உரியது.”

”இப்பச் சொன்னீங்களே, அது,” என்றாள் அவள். “இப்ப நீங்க போற பாதை சரியானது, சமத்துப் பையா.”

டாக்டர் கோலை அவருடைய மாமன் அசட்டையாக வளர்த்தார், கோலின் சொத்துக்களில் பகுதியை அடைவதுதான் மாமனின் நோக்கம். டாக்டர் கோலுக்கு, அப்போது அவர் வாலி என்று அழைக்கப்பட்டார், ஒன்பது வயதான போது, அவருடைய மாமன் அவரை ஜ்யோர்ஜியா மாநிலத்தின் கடற்கரைப் பகுதிகளில் பயணத்தில் அழைத்துப் போயிருந்தார், அந்தப் பயணத்தில் மாமனுக்குப் போதையில் கிடக்கத்தான் அவகாசமிருந்தது. அப்படி ஒரு சமயம், மணி வேலைகள் செய்யப்பட்டு உடலொட்டி இறுக்கமான மேல் சட்டை அணிந்த பெண் ஒருத்தியைப் பார்த்துக் கிறக்கத்தில் அவர் இருக்கையில், தன் மருமானை முழுதும் மறந்து போனார். அவனோ, சிறுவர்கள் அவ்வப்போது செய்வதைப் போல, எங்கோ மேலே ஏறி, வீசி அடித்த காற்றில் தடுமாறி, படகின் கைப்பிடிகளைத் தாண்டிக் கீழே இருந்த மண் திட்டு ஒன்றில் வீழ்ந்தான், தன் தொடை எலும்பை மோசமாக உடைத்துக் கொண்டான். 

பின் வந்த வருடங்களில், அவனுடைய மாமனின் எல்லாப் பெண் தோழிகளும், வாலியின் அடர்ந்த, பளபளப்பான தலை முடிக்காகவும், எங்கேயிருந்து அது வந்ததென்றே சொல்ல முடியாதபடி இருந்த அவனுடைய வினோதமான மரியாதை கலந்த நடத்தைக்காகவும் அவனை மிகவும் பாராட்டிக் கவனித்தார்கள். மற்றச் சிறுவர்கள் போல ஓடியாடியோ, முரட்டுத் தனமாகவோ விளையாட முடியாதவனாக அவன் இருந்ததற்காக அவன் மீது பரிவு காட்டியிருந்தனர். நடத்தையில் ஒரு கட்டுப்பாடும் இல்லாத அவனுடைய மாமன் அவ்வப்போது வசீகரமானவராகத் தோற்றமளித்தவர், ஆனால் அவருக்கு யாரிடமும் ஒட்டுறவு ஏற்பட்டதில்லை, அதனால் ஒரு பெண் மாற்றி இன்னொருத்தியாக வரிசையாக வந்து போனார்கள். அவரும் வாலியும் படிப்படியாக விலகிப் போனார்கள், அதற்கு வாலிக்கு அறிவியல் துறைகள் மீது ஏற்பட்ட தீவிரமான ஈடுபாடும், மாமனுக்கு மேன்மேலும் அதிகரித்த குடிபோதையும் முக்கியக் காரணங்கள். 

சாண்ட்ரா வந்தபோது, வருங்காலத்தில் டாக்டர் கோல் ஆகப் போகிற வாலிக்குப் பதினாறு வயது, அவனுக்கு ஏற்கனவே லத்தீன் மொழி தலைகீழ்ப் பாடமாகி இருந்தது. சாண்ட்ராவுக்கு இருபத்தி நான்கு வயது, வாலியின், ஊதிப் பெருத்து வந்த மாமனுக்கு, அவள் பொருத்தமற்ற வகையில் மிக இளையவள். அதற்குப் பிறகான வருடங்களில் அவள் டாக்டரிடம் பல முறைகள் சொல்லி இருக்கிறாள், அவரை அவளுக்கு மிகவும் பிடிக்கப் பெருமளவு காரணம், அவர் எதையும் மெத்தனமாக எடுத்துக் கொள்வதில்லை என்பதுதான். இன்று அவருக்கு எது பிடித்திருந்ததோ, அதை ஒரு வருடம் கழித்து அதே ஈடுபாட்டோடு அவருக்குப் பிடித்திருக்கும். தான் வசிக்குமிடத்திற்கு மேலே கூரை இருந்தது என்பதையும், தன்னிடம் ஒரு ஜோடி நல்ல காலணிகள் இருந்தன என்பதையும் அவர் மெச்சி நோக்கினார். சாண்ட்ரா நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடும் வேலையை அப்போது செய்து வந்தாள், வளரும்போது மிக வறுமையில் இருந்து வந்தவர்கள், சில வருடங்கள் செழிப்பாக வாழ்ந்தபின்னர், மோசமான நடத்தை உள்ளவர்களாக ஆகியிருப்பதைத் தன் வேலையில் அவள் பார்த்திருந்தாள். அவளே கூட ஓரளவு கெட்டுத்தான் போயிருந்தாள்- இருபது டாலர் ஷாம்பூக்களும், வைடமின் மருந்துகளும், இத்தாலிய பணப்பைகளின் குவியலும் அவளிடம் இருந்தன. டாக்டர் கோல் மாறாக, தன் வாழ்வில் எப்போதும் கிட்டுகிற ஒரு நபராக அவளைக் கருதியதே இல்லை, சாதாரணமானவளாகப் பார்த்ததில்லை. நாளின் பல கணங்களில் அவர் தன்னை உற்றுப் பார்ப்பதில் இருந்த ஆழ்ந்த ஈடுபாட்டை அவள் தொடர்ந்து கவனித்தாள், இரவில், அவளுடைய உடலின் ஒவ்வொரு வளைவிலும், பள்ளத்திலும் அவர் திளைத்தார். அவருடைய கரங்கள் அவளுக்குப் பிடித்திருந்தன. உலகை அவர் பார்ப்பதிலிருந்த செயல் நோக்கம் கலந்த கருணை அவளுக்குப் பிடித்தது. தன்னைத் தவிர வேறு யாருடனும் அவர் இருந்ததில்லை என்பதும் அவளுக்குப் பிடித்திருந்தது, ஆனால் அதைத் தான் ஏன் பொருட்படுத்த வேண்டும் என்பது அவளுக்குப் புரிந்திருக்கவில்லை. 

அவருக்கு மாற்று கிடையாது. துவக்கத்திலிருந்தே, முதல் நாள் இரவில் அவருடைய மாமனின் இடத்தின் பின்புறம் இருந்த முற்றத்தினுள் அவள் திரிந்து நுழைந்தபோது, குறை காண முடியாத தோரணையோடு அமர்ந்து, வகிடெடுத்து வாரியிருந்தாலும் கலைந்திருந்த தலையோடு, மேல் அட்டையாகத் தோலில் கட்டப்பட்டிருந்த டார்வினின் ‘ஆன் த ஆரிஜின் ஆஃப் ஸ்பீஷீஸ்’ நூலைப் படித்துக் கொண்டிருந்த அவரைப் பார்த்த கணத்திலிருந்தே, அதுதான் அவளுடைய நிலை. அவளைப் பார்த்தபோது அவர் பீட்ரூட்டைப் போலச் சிவந்து போனார் – அரைக்கால் சராய் அணிந்த அவளது கால்களைப் பார்த்ததால்தான் அப்படி என்று அவர் பின்னாளில் விளக்கினார் – அவளுக்கு லெமனேட் வேண்டுமா என்று கேட்கிறார், அவள் ஏற்ற போது, விந்தி நடந்து சமையலறைக்குப் போய், பழங்களை வெட்டத் துவங்குகிறார், புதினா இலைகளைத் துண்டாக்குகிறார், பின் சர்க்கரையை அவருக்கு உரித்தான இலகுவான கச்சிதத்துடன் அளக்கத் தொடங்குகிறார். அந்தக் கச்சிதத்தை வருகிற வருடங்களில் அவள் மிக நன்றாகவே அறிந்து கொள்வாள். 

“அது திரவம் இல்லை, ஆனால் நீங்கள் அதை ஒய்ன் புட்டிகளில் சேமிக்கப் போகிறீங்களா?”

காலை. அவர்களது படுக்கை அறை, படுக்கையைத் தவிர்த்துப் பார்த்தால், காலாவதியான சிறு நூலகம் போலத்தான் இருந்தது. 

”கண்ணெதிரிலேயே ஒளித்து வைக்கலாம் என்றுதான் நினைத்தேன், ஆனால் அனேகமாக நான் ரொமாண்டிஸிசத்துக்கு இரையாகி விட்டேன். அதை நான் ஒத்துக் கொள்வேன்.”

அவர்கள் இருவரும் படுக்கையின் தலைப்புறத்துப் பலகையின் மீது சாய்ந்து அமர்ந்திருந்தனர். அவரவர் கையில் மூடிய புத்தகமொன்றின் நடுவில் அடையாளம் குலையாமல் இருக்க விரலை நுழைத்திருந்தனர். சாண்ட்ரா எப்போதும் வாழ்க்கைச் சரிதங்களையே படித்தாள் – ஜியார்ஜியோ வாசாரியின் வாழ்விலிருந்து, மறக்கப்பட வேண்டிய சினிமா நட்சத்திரங்கள், வாடகை எழுத்தாளர்களைக் கொண்டு, தம் வாழ்வைப் பற்றி எழுதிய புத்தகங்கள் வரை எதை வேண்டுமானாலும் படித்தாள்.  டாக்டர் கோல் பொறுக்கி எடுத்துப் படிப்பவரில்லை. யார் எந்தப் புத்தகத்தைக் கொடுத்தாலும் அதைப் படித்தார். 

“ஓர் ஒய்ன் புட்டியைப் பார்ப்பவர் எவரும் அதைத் திறக்க எண்ணுவார்,” டாக்டர் கோல் சொன்னார். “படு முட்டாள்தனம், டாக்டர். படு முட்டாள்தனம்.”

“எனக்கு அது என்னதென்று இன்னும் புரியவில்லை. அது திரவமோ, திடப்பொருளோ, வாயுவோ இல்லை என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.”

டாக்டர் உந்திக் கொண்டு நேராக நிமிர்ந்து அமர்ந்தார், சிறிது ஆர்வத்தோடு தென்பட்டார். “அதுதான் என்னால முடிஞ்ச விளக்கம்… பாரு, இதை மட்டும் நான் சொல்வேன். காத்து வீசற, சூடான நாள் ஒண்ணுல, பொட்டுப் பொட்டா இருக்கற நிழலோட பருமையான உரு அது. இதை விட மேலா என்னால அதை வருணிக்க முடியாது. உன்னால அதை ஊத்த முடியாது, ஆனா அது காத்துல கசிந்து போகும். அடைப்பானால மூடல்லைன்னா அது தொலைஞ்சு போயிடும். ஏதோ விதத்துல அதை மூடி வைக்கணும்.”

சாண்ட்ரா ஜன்னல் பக்கம் பார்த்தாள், அது நியூ இங்கிலாந்தின் காலையில் எழும் மெலிந்த, சுகமான சூரியனால் நிரம்பி இருந்தது. அவள் ஓக்லஹோமாவிலிருந்து வந்தவள், ஆனால் யாரும் அதை ஊகித்ததில்லை. “ஓகே,” என்றாள், சரணடைந்தவள் போலத் தோற்றமளித்தாள். “பொட்டுப் பொட்டான நிழல்.”

இறுதியில், டாக்டர் – அவருடைய வசந்த காலப் பயிற்சித் தேர்வுகள், கேளிக்கைப் பூங்காவின் ரோலர் கோஸ்டர் சவாரிகள், மற்றும் குழந்தைகள் மருத்துவ மனைகளில் சுற்றுப் பயணங்கள் எல்லாம் முடிந்த பின் – தான் வேண்டியதை ஃப்ளோரிடா மாநிலத்தின் கிழக்கு ஹெர்னாண்டோ மாவட்டத்தில், உல்லாசப்பயணிகள் வராத இடத்தில், உள்நாட்டுப் பகுதியில், தென்பட்ட ஒன்றிரண்டு பனைமரங்களும் பருத்தவையாக, முசுமுசுப்பாகத் தோன்றிய ஓர் இடத்தில் கண்டு பிடித்தார்.  முட்டையின் மஞ்சள் கரு போன்ற நிறத்தில் சூரிய ஒளி, நிலப்பரப்பைத் தன் கருணையற்ற காதலால் விரித்து மூடியிருந்தது, மூன்று மணியிருக்கும், எலும்பில்லாத மாமிசம் போன்ற முன்மாலை நேரம். தன் செயல்திட்டத்தை அனேகமாகக் கைவிட இருந்தார், அது நிறைவேறுமிடம் ஃப்ளோரிடா மாநிலத்தில் இருக்கும் என்ற எண்ணத்தையும் கைவிடவிருந்தார், அங்கேதான் ஸ்பானியர்கள் பல நூறு வருடங்கள் முன்பு இதே போன்ற தேடலில் இறங்கினார்கள். மெய்மறந்த நிலையிலிருந்த டாக்டர், தொய்கின்ற முள் கம்பிகளின் பின்னே முடிவில்லாது போய்க் கொண்டே இருந்த ஒரு திறந்த வெளியினருகே தன் வாடகை ஊர்தியை மெதுவாகச் செலுத்தினார். ஒரு வகை உஷ்ணப்பிரதேசத்துக் கருப்புப் பசளைக்கல் மீது அடர்ந்த பளீர் பச்சை நிறத்தில் புல்பரப்பு அங்கிருந்தது. இன்னும் சரியாகக் காய்ந்திராத பசளைக்கற்கள், அங்கு முழு நீளத்துக்கும் ஓடிய சிறுவர்களின் பின்னே சிறு உருண்டை மண்கட்டிகளாகச் சிதறின. ஒருவன் ஒலிம்பிக் பந்தயக்காரர்கள் போல கைகளை முன்னும் பின்னும் அசைத்திருந்தான், இன்னொருவன் கைகளை ஜெட் விமானத்து இறக்கைகள் போல அகட்டி நீட்டிக் கொண்டிருந்தான், மற்றவன் தன் உடம்பின் மேல் பகுதியைத் தளர விட்டிருந்ததால் அவனுடைய கைகள் முழு வேகத்தில் செலுத்தப்படும் துரிதப் படகிலிருந்து தொங்கும் கயிறுகள் போல வீசி ஆடின. அது திறந்த வெளி, மொத்தத் தடலில் இரண்டே மரங்கள்தாம் இருந்தன- ஒன்று நெடுங்காலமாக செத்துப் போயிருந்தது, அந்த உஷ்ணமான நாளுக்குள் தந்த நிறத்தில் வெண்பழுப்புக் கையாக நீட்டிக் கொண்டிருந்தது. இன்னொன்று செழித்து வளர்ந்திருந்த ஓக் மரம், சாம்பல் நிறப் பாசியை ஒரு கந்தல் மேலங்கி போல் போர்த்தி நின்றது. அந்தப் பரப்பின் ஒரு ஓரத்தில் சதுப்பு நிலம். அது அங்கேயே எப்போதும் இருந்த ஒன்று, அதனால், அங்கு பல டஜன் முதலைகளும், கணக்கற்ற பாம்புகளும் இருந்தன என்பதாலும் கூட அந்தப் பையன்களுக்கு அது அச்சம் தரவில்லை.  இத்தனைக்கும் அங்கிருந்த பாம்புகள் சீறலோடு கொத்துக் கொத்தாக ஹெலிகாப்டரிலிருந்து கொட்டப்பட்டாற்போல அங்கு நெளிந்தன. கால்நடைகள் நீரருந்தக் கட்டப்பட்டு, தேங்கிக் கிடந்த பழைய குளம் ஒன்று அங்கிருந்தது, அதைச் சுற்றி வர வேண்டி இருந்தது. அங்கு யாரும் நீரருந்த முயலும் அளவு முட்டாளாக இருந்தால், விளைவு சாவாகத்தான் இருக்கும். இடது புறம், அவர்கள் ஓடும் பாதையின் விளிம்பாக, ஒரு கல்லறை இருந்தது. அது அவர்களை எப்போதும் சிறிதளவு அச்சுறுத்தும். அவர்கள் அப்படிப் பயம் கொள்ள முடியாதபடி வயது கூடியவர்களாக ஆகும் வரை, இப்போதைப் போல கிறுக்குத்தனமாகத் மெய்ம்மறந்து ஓட இயலாதவர்களாக அவர்கள் ஆகும் வரை, அந்த சக்தி அதற்குஇருக்கும். அந்தக் கல்லறை அவசரமாகக் கடக்க அவர்களை உந்தியது, அதைத் தாண்டிப் போக அவர்கள் ஓடினார்கள், நொறுங்கிக் கொண்டிருக்கும் அதன் புதைகுழிக் கற்கள் அங்கிருந்த சிறு மேட்டின் மீது குடிகாரர்களைப் போல ஆடிக் கொண்டிருந்தன. அவர்கள் அத்தனை வேகமாக ஓடினார்கள், ஓட்டம் என்பதன் வரையறுப்பாகத் தெரிந்தார்கள், அதன் தூலமான உருப் போலத் தெரிந்தார்கள். அத்தனை வேகமாக ஓடியதில்- தம்முடைய முழங்கால்களிலோ, காற்றாக ஆகியிருந்த இதயங்களிலோ- அவர்கள் எதையும் உணரவில்லை. அவர்கள் செய்தது, அது பறப்பதாக இருக்கவில்லை, தரை அவர்களின் செயல்களின் பகுதியாக இருந்தது, ஆனால் அது மாயாஜாலமாக இருந்தது, சுதந்திரமான,சிறு மதம் போல இருந்தது. எத்தனை வேகமாக அவர்கள் ஓடியிருந்தாலும், அதை விட வேகமாக ஓடுவது இன்னும் கூடுதலாக முக்கியமாக இருந்தது. 

ஒரு பையன், ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொள்பவனின் செயல்திறனோடு ஓடியவன், அன்று காலை, நீதிமன்றத்தில், ஒரு அறையில் பின் பகுதியில் அமர்ந்திருந்தான். அங்கு அவனுடைய அப்பா, பதினான்கு மாதங்களாக அந்தப் பையனோடு பேசியிராத ஒரு நபர், அவர் மீதிருந்த பல குற்றச் சாட்டுகளில் ஒன்றுக்காக அழைத்து வரப்பட்டிருந்தார், அது ஒரு சிறு பிராயத்தவனுக்கு ஆபத்து விளைவிக்கும் நடவடிக்கையைச் செய்ததான குற்றச் சாட்டு. அந்தப் பையனும், அப்பாவும், சர்ச்சுக்குப் போகிறவர்களைப் போல ஆடை அணிந்திருந்தனர். பையனின் அம்மாவோ அங்கெல்லாம் போவதை விடுத்து வெகு காலமாகி இருந்தது. ஆனால் அப்பையனும், அப்பாவும் ஒருவரோடொருவர் பேசி பதினான்கு மாதங்கள் ஆகியிருந்த போதும் – அவனுடைய அப்பாவிடமிருந்து அவனுக்கு இன்று காலை கிட்டியதெல்லாம் ஒரு சிறு தலையசைப்பு மட்டும்தான். அவனுக்கு அது புரிந்திருந்தது, ஏனெனில், அவனுடைய அப்பா மதிக்கத் தக்க ஒரு மனிதர் இல்லை என்பதை, அவனுடைய அம்மா ஆயிரம் வழிகளில் அவனுக்கு விளக்கி இருந்தாள். அந்தப் பதினான்கு மாதங்கள் பதினான்கு வருடங்களாகப் போகின்றன என்பது அவனுக்குப் புரிந்திருந்தது. தான் ஏன் அந்த விசாரணை நடக்கும் இடத்திற்கு வந்தோம் என்பதும் அவனுக்குப் புரிந்திருந்தது: ஒருவர் தான் நினைத்ததை, அதன் விளைவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படாமல், செய்யத் தீர்மானித்தால் அதன் பிறகு என்ன நடக்கும் என்பதைத் தான் அறியவே அங்கு வந்திருப்பதாக அவன் அறிந்திருந்தான். தன் அம்மா தொலைபேசியில் பேசுவதைக் கேட்டதிலிருந்து, அந்த இளம் வயதினள் நிஜத்தில் எந்த ஆபத்திலும் இல்லை, அந்த இளம் பெண் புத்தியற்றவள், ஒரு நாள் தனக்கேற்ற விளைவைச் சந்திக்கவே போகிறாள் என்பதையும் கூடுதலாக அவன் அறிந்திருந்தான். 

தாழப் பறந்து தரையிலிருப்பவர்களை மொய்க்க முயலும் ஸெஸ்னா விமானம் போல, சாயம் போன சிவப்பு டி சட்டையணிந்த இன்னொரு பையன், அன்று காலை பூராவும், குடும்பத்தின் நொடித்து வரும் சிற்றுண்டிக் கடையில் தன் அப்பாவுக்கு உதவி விட்டு வந்திருந்தான். டாம்பாவுக்குப் போகும் சன்கோஸ்ட் பார்க்வே பணவசதி மிக்க, புது வட்டாரங்களை உருவாக்கி இருந்தது, அவை பல பிரகாசமான, ஆரோக்கியம் மிக்க ரெஸ்ட்ராண்டுகளைக் கொணர்ந்தன.  இந்த விடுதியில் பல வருடங்களாக மேஜைகளைத் துடைத்து, கலன்களைக் கழுவி வந்திருந்தவரை வேலை நீக்கம் செய்ய வேண்டியதாயிற்று; இந்தப் பையன் வாரத்தில் சில நாட்களுக்கு விடுதியில் அந்த வேலைகளைச் செய்யுமளவு வயதானவனாக இருந்தான், தவிர வியாபாரத்தையும் கவனித்துக் கொண்டான். அந்தத் தடலின் குறுக்காக நல்ல வேகத்தோடு ஓடினால்- அவனுடைய ஈரமான, உயிரற்றுத் தொங்கும் முடியின் மீது சூரியஒளி படிந்து அதை ஜிகினா போல ஒளிரச் செய்தபடி, கையை/ இறகைச் சற்றே தாழ்த்தித் தன் பாதையை மாற்றி ஓடினானால் –அவனுடைய அப்பாவின் மீது எந்நேரமும் வீசும் கொழுப்பு, புகை, வியர்வை ஆகியவற்றின் கலவையான நெடியை ஒத்த தன்னுடைய நாற்றத்திலிருந்து அவன் தப்பிக்க முடியும். அவர்களுடைய உணவு விடுதி மூழ்கிப் போவதைப் பற்றி, இந்த க்ஷணத்தில், அவன் கவலைப்படவில்லை. ஆனால் தன்னுடைய அம்மா எதுவும் செய்யாமல் எப்போதும் குறை சொல்லிக் கொண்டிருந்தாள் என்பதைப் பற்றிக் கவலைப்பட்டான். அவள் அவர்களுடைய வீட்டின் அடைசல், நெருக்கடியைப் பற்றியும், அதற்குத் தேவைப்பட்ட பல பழுது பார்க்கப்பட வேண்டிய வேலைகள் பற்றியும் குறை சொன்னபடி இருந்தாள். தன்னுடைய, மாற்றமே இல்லாது, எப்போதும் பழையனவாக இருந்த உடுப்புகளைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டாள். வெளியில் மிகவும் சூடாக இருந்தது என்றும், தன் உடல் பருத்து வருகிறது என்றும் குறைப்பட்டாள்.  தான் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடிக்காததைப் பற்றிக் குறைப்பட்டாள். இப்போதெல்லாம் முன்பு போல, பகல் நேரத்தில், ’நாங்கள் கடற்கரைக்குப் போயிருக்கிறோம், ஒரு மாறுதலுக்கு நீங்களே உங்கள் காலை உணவைத் தயாரித்துக் கொள்ளுங்கள்’ என்று கையால் எழுதிய நகைச்சுவையான ஓர் அறிவிப்பை முன்புற ஜன்னலில் வைத்து விட்டு, உணவு விடுதியை மூடுவதில்லை, என்று குறை சொன்னாள்.  அந்தத் தடலிலிருந்த பழைய கால்நடைத் தொழுவத்தின் இறுதிப் பகுதியை எட்டியதும், அந்தப் பையன் தன் ஓட்டத்தை நிறுத்த வேண்டி வரும் என்பது ஒரு புறம் சோகமானது, இன்னொரு புறம் ஆறுதலாகவும் இருக்கும். அதே போல அவர்களுடைய உணவு விடுதி இறுதியாக மூடப்படுவதும் அவனுக்கு வருத்தம் தருவதாகவும் இருக்கும், ஆனால் ஆறுதலாகவும் இருக்கும். 

மற்ற இருவரின் பின்னே ஓடும் பையன், கால்கள் உருத் தெளிவற்ற மசமசப்பாகத் தெரியும் அளவும், கைகள் சாட்டை போல சொடுக்கிக் கொண்டும் இருக்க வேகமாக ஓடுபவன், தன் அப்பாவுடன் அன்று காலை கடற்கரை ஓரம் போயிருந்தான், அங்கு பெரும்பணக்காரர்களுக்கான ஒரு இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்த தோற்றம் கொண்ட விடுதியில், அவனுடைய அப்பா பியானோ வாசித்தார். அங்கு எதிரே, வெளிறிய நிறத்தில் சட்டைகளும், சிறு கட்டங்கள் கொண்ட உடுப்புகளும் அணிந்த மனிதர்கள் காஃபியை அருந்தியபடி, ஆம்லெட்களைச் சிறிது சிறிதாக உண்டவண்ணம் அமர்ந்திருந்தனர். அவனுடைய அம்மா, காப்பீட்டுத் திட்டங்களை விற்பனை செய்தவர், ஒரு பேரவையில் கலந்து கொள்ள வெளியூர் சென்றிருந்தாள், அதனால் இந்த வாரம் அப்பாவும், ராட்னியும்தான். அப்பாவும் ராட்னியும் நிதானமாக மளிகைக் கடை உள்ளே தள்ளு வண்டி ஒன்றைத் தள்ளியபடி நடந்தனர், அவர் கவனிக்காத சமயங்களில், ராட்னி தனக்கு வேண்டிய சிறுதீனிகளை வண்டியில் போட்டுக் கொண்டிருந்தான்; ராட்னியும் அப்பாவும் வயதானவர்களுக்கான பஸ் ஒன்றில் பயணித்து, அடக்கமான நகர மையத்துக்குப் போய், ஓர் இசைத் தட்டு விற்பனைக் கடையில், இசைத் தட்டுகளைப் பிரமிப்புடன் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர்; ராட்னியும் அப்பாவும் வீட்டில் துணிகளைத் துவைத்து விட்டு, உலர்ந்தவற்றை மடிக்காமல், சட்டைகளை இழுப்பறைகளில் திணித்து, காலுறைகளை ஜோடிக்குச் சரி பார்க்காமல் அப்படியே கலந்து வைத்தனர்; ராட்னியின் அப்பா அந்த மாவட்டத்து நிர்வாகம் பள்ளிகளிலிருந்து இசை வகுப்புகளை அகற்றியபின், முன்பிருந்ததை விட அமைதியாகவும், கனிவானவராகவும் ஆகியிருந்தார். ராட்னியோ பழைய அப்பாவையே விரும்பினான், அவர்தான் ஜோக்குகளை விட்டடிப்பவராகவும், தன் தேவைகளை நிறைவேற்றச் சொல்லி வற்புறுத்துபவராகவும் இருந்தவர். மாலை நேரங்களைத் தன் இசையின் மேம்படுதலுக்காகச் செலவிட வேண்டியவர் தன் அப்பா என்று ராட்னிக்குத் தெரியும், ஆனால் இதுவரை அவர் அப்படி ஏதும் செய்யவில்லை. நேற்று இரவு, கராஜில் தன் பியானோ முன் அவர் சும்மா அமர்ந்திருந்தார், ஒரு கோப்பை ஜின் பானத்தை மெதுவாக அருந்திக் காலி செய்தார், ஒரு முறை கூட இசையின் ஒரு சுரத்தைக் கூட ஒலிக்கவில்லை, அவர் என்ன செய்கிறார் என்று பார்க்க ராட்னி மெதுவாகக் கதவைத் திறந்து பார்த்தபோது கூட அவர் அதைக் கவனிக்கவில்லை, பிறகு அவர் ராட்னியின் அறைக்கு வந்து அவனிடம் பேசினார், முன்னெப்போதையும் விட தண்மையாக, ராட்னியிடம் பொறுமையான, நம்பிக்கையூட்டுவதான, ஆனால் சோகமான பார்வையைச் செலுத்தினார். அதே போன்ற பார்வையைத்தான் அவர் அந்த விடுதியில் இசையைக் கேட்டு விட்டு, தம் உணவு முடிந்ததும், போகிற போக்கில் அவர் முன் வைக்கப்பட்ட கண்ணாடிக் குடுவையில் ஐந்து டாலர்களைப் போட்டு விட்டுப் போகும் வாடிக்கையாளர்களை நோக்கிச் செலுத்தினார் என்பதை ராட்னி கவனித்திருந்தான். 

சாண்ட்ரா தன் அழைப்பை முடித்தாள், ஃபோனை சமையல் மேடையில் வைத்தாள், காலையுணவுக்கான மூலைப் பிறைக்கு நடந்தாள். தன் தோள்களை ஒரு முறை துரிதமாகக் குலுக்கிக் கொண்டாள், ஏரியிலிருந்து கரையேறும் நாயைப் போல இருந்தது அந்தச் செயல்- அது டாக்டர் கோலுக்கு நன்கு பரிச்சயமான சைகை. அவள் தான் தன் அலுவலகத்துக்கு வருவதற்கு முன் தன் வேலையிலிருந்து எதையும் எதிர் கொள்ளத் தயாராக இல்லை என்பதையும், தன்னுடைய வேலையிலிருந்து எந்தப் பிரச்சினையும் அவளைத் தொல்லை செய்வதை ஏற்கத் தயாராக இல்லை, குறைந்தது காலை உணவு உண்ணுமுன் அவை தன் எதிரில் வருவதை ஏற்கத் தயாராக இல்லை என்பதையும் சுட்டும் சைகை அது. 

அவள், “இளமையின் ஊற்று” என்றாள், சென்ற வார இறுதியில் அவர்களிடையே நடந்த உரையாடலுக்குத் திரும்புமுகமாக. 

”ஆ, ஊற்று ஏதும் இங்கில்லை, ஆனால் ஊற்றில் இருந்தவைதான் உண்டு. இது எப்போதும் இப்படித்தான் போகிறது: கற்பனைக் கதை முதலில் வரும், அறிவியல் பின் தொடரும். தொன்மம், பிறகு ரசாயனம். யாராவது எப்போதாவது இதெல்லாம் எளிமையாக இருக்கும் என்று நினைத்திருப்பார்களா,’ டாக்டர் கோல் யோசித்தார். “இங்கே இருக்கிறது இது. நம் பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட்டன என்று யோசித்திருக்க முடியுமா. அதிக நேரம் அப்படி யோசித்திருக்க மாட்டார்கள். அதைக் கண்டு பிடித்திருந்தால் நிச்சயம் மாட்டார்கள்.”

“அவர்களோட எண்ணப்படி இது நிரந்தரமாக இருக்கும், தற்காலிகமானதில்லை.”

“அங்கேதான் தொல்லை ஆரம்பம். எல்லாரும் இது நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அது கரைந்து போய், அவர்கள் எதார்த்தத்தில் திரும்பிச் சிக்க வைக்கப்படும்போது, அவர்களின் நிஜ வயதிற்குத் திரும்பும்போது, அதை வெறுப்பார்கள். அப்போது மேலும் மேலும் இந்தப் பொருள் தேவைப்படும் அவர்களுக்கு.”

சாண்ட்ரா ஒரு வட்டிலில் இருந்த கோதுமை அவல்களில் கொழுத்த உலர் திராட்சைகளை இட்டு அவற்றை உண்டு கொண்டிருந்தாள். டாக்டர் வாசனையான ஓர் ஆரஞ்சை உரித்துக் கொண்டிருந்தார், சுளைகளை நறுவிசாக எடுத்து, ஒவ்வொன்றாகத் தன் வாயில் இட்டுக் கொண்டிருந்தார். 

“எனக்கு ஏன் இன்னும் கூடுதலாக ஆச்சரியம் எழவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை,” என்றாள் சாண்ட்ரா. “நான் குப்புற விழுந்திருக்க வேண்டும். அதற்குக் காரணம், எனக்கு நீங்கள் எத்தனை திறனுள்ளவர் என்பது தெரிந்திருக்கிறது என்பதாக இருக்கும்.”

“அதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன் என்பதை நான் இதுவரை யோசிக்கவில்லை, ஏனெனில் இது ‘சாத்தியம்’என்று நான் நினைத்திருக்கவில்லை.” 

“இது எனக்கு டாண்டிலயன் ஒய்னை நினைவு படுத்துகிறது,” என்று சாண்ட்ரா வண்ணமயமான காலைச் சிற்றுண்டிக்கான அவல்கள் கொண்ட பெட்டியைத் தூக்கிப் பார்த்தபடி சொன்னாள்.  அவள் அதன் சத்துப் பொருள் விவரணையைப் பரிசீலித்துக் கொண்டிருந்தாள், டாக்டர் கோல் அதில் அச்சிடப்பட்டிருந்த அழகான டென்னிஸ் விளையாட்டுக்காரரின் படத்தை உற்று நோக்கினார். 

“ஆனால் என்னுடையது பாரிஸுடனோ, சூரிய அஸ்தமனங்களோடோ சிறிதும் தொடர்பில்லாதது,” என்றார் அவர்.

சாண்ட்ரா விழுங்குவதற்குச் சில கணங்கள் எடுத்துக் கொண்டாள். “இல்லைதான், உங்களிடம் இருப்பது ஜனங்களே பிரச்சினைகளாக இருந்தாலும்,  அவர்கள் தங்கள் பிரச்சினைகளிலிருந்து ஓடிப் போக வழி செய்வது.”

டாக்டர் கோல் அசைவின்றி அமர்ந்திருந்தார், ஓர் ஆரஞ்சுச் சுளை அவர் வாயில் ஒரு கூடுதல் நாக்கைப் போல அமர்ந்திருந்தது. அவருடைய காஃபிக் கோப்பை காலியாக இருந்தது. “ஆமாம்,” என்றார், விழுங்கினார். “ஆமாம், அது ஒரு பெரும் பங்கு இதிலெல்லாம். நாம் ஒரு பெரிய சிக்கலை உருவாக்கி விட்டு, அதன் விளைவுகளைச் சந்திக்காமல் அவற்றிலிருந்து பறந்து போய் விட முடியாது. கடிகாரத்தைத் திரும்பி வைத்து, நிஜ வாழ்வில் ஏற்பட்ட சேதங்களை மற்ற மனிதர்கள் மீது சுமத்த முடியாது. நீ இதைச் சரியாகப் பிடித்து விட்டாய்.”

சாண்ட்ரா புன்னகைத்தாள், அது தன்னைப் பற்றிய பெருமித உணர்வாலோ இல்லை நட்பாக உணர்ந்தாள் என்பதாலா என்பது தெளிவாக இல்லை, அவள் வாயிலிருந்ததை நொறுக்கித் தின்றாள். டாக்டர் கோல் தனக்கு இன்னும் கொஞ்சம் காஃபியைக் கொணர எழுந்து போனார், அவருடைய நீண்ட விரல்களில் ராக்கெட்விளையாட்டுப் பந்தைப் பிடிப்பது போல நளினமான ஒரு கோப்பையைப் பிடித்திருந்தார். நீண்ட எட்டு, சிறிய எட்டு, நீண்ட எட்டு, சிறிய எட்டு. காஃபிச் சட்டுவம் இருந்த மேடையை அடைந்தபோது, அவர் ஜன்னல் வழியே வெளியே பார்த்தார்,  முன்பு தெருவிளக்கின் அடியில் அவர் பார்த்த அதே சிறுவர்கள் இப்போது இவரது வீட்டு முன் புற்றரையில் கூடி அமர்ந்திருந்தனர், எதையும் துன்புறுத்தவில்லை, தங்களுடைய சைக்கிள்களை அக்கக்காகக் கழற்றிக் கொண்டிருந்தனர். குறடுகள், திருப்புளிகள் கொண்டு கழற்றிய பாகங்களை ஆரோக்கியமான, பதவிசாகக் கத்திரிக்கப்பட்ட புற்றரையில் பரப்பி வைத்திருந்தனர். வியர்த்த முகங்களில் உன்னிப்பான பார்வையோடு இந்த வேலையில் இறங்கியவர்கள் ஒருக்கால் தாம் அந்த சைக்கிள்களை மறுபடி சாரத்தியம் செய்ய விரும்பினால் அது எப்படி முடியப் போகிறது என்பதைப் பற்றி இன்னும் யோசித்திருக்காமல் இருக்கலாம். தங்களுக்குக் கூடிய சீக்கிரம் தாகம் வரும், பசி வரும் என்பதை யோசிக்காமல் இருக்கலாம். உலகில் உள்ள அனைத்துத் துளைகளிலிருந்தும் திருகாணிகளை அவர்கள் கழற்றி விடக் கூடும், ஆனால் பிறகு என்ன செய்வது? சிறு விஞ்ஞானிகள் கண்மூடித்தனமாக, ஆனால் சந்தோஷமாக, சோதனையில் இறங்கி இருந்தார்கள், வீசி அடிக்கும் காற்று அவர்களது தொளதொளத்த மேல் சட்டைகளில் புகுந்து மரக்கப்பலின் பாய்கள் போல உப்ப வைத்திருந்தது. 

***

இங்கிலிஷ் மூலம்: ஜான் ப்ரான்டன் 

தமிழாக்கம்: மைத்ரேயன் (டிசம்பர் 2022) 

மூலக்கதை மக்ஸ்வீனீஸ் என்கிற இலக்கியக் காலாண்டிதழின் 67 ஆவது இதழில், 2022 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தின் முடிவில் பிரசுரமாகியது. 

John Brandon: ‘Vintage’ published in McSweeny’s 67 (Fall, 2022). 

மூல ஆசிரியர் பற்றிய குறிப்பு: 

ஜான் பிரான்டன் ஐந்து புத்தகங்களைப் பிரசுரித்திருக்கிறார். ஆர்கன்சா (Arkansas) என்கிற ஒரு நாவல் திரைப்படமாக வெளியாகி இருக்கிறது. யுனிவர்சிடி ஆஃப் மிஸிஸ்ஸிபியில் எழுத்தாள விருந்தினராகப் பணியாற்றி இருக்கிறார். பால்டிமோரில் கில்மன் அமைப்பில் ஆய்வாளராகப் பணியாற்றி இருக்கிறார். தற்போது ஹாம்லைன் பல்கலையில், மின்னசோட்டா மாநிலத்தில் போதனையாளராக இருக்கிறார். 

***

One Reply to “முது மது (நாட்படு தேறல்)”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.