தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி

சர்தாரி கேட்டும் கேட்காதது போல இருந்தான். கடுகடுப்பான பார்வையுடன் மித்ரோவை பார்த்து, ” அப்படியானால்…. அங்கே… இங்கே மற்ற இடங்களில்…ஏன்? ” என்று கேள்வியுடன் நிறுத்தி, அவளை கூர்ந்து கவனித்தான்.
மித்ரோ கண்களை விரியத் திறந்தாள். “ஐயோ! அதெல்லாம் இல்லை. அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று அலறினாள்.
“அப்படியானால் இந்த துடுப்பை எப்படி சம்பாதித்தாய்?”
மித்ரோ உள்ளூர பயந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல்,” ராட்சசன், எமகாதவன்” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். மேலோட்டமாக ஒரு பசப்புச் சிரிப்பைச் சிரித்து, ” என் மாமியாரின் தத்தி மகனே, என் அம்மாவுக்கு நான் ஒரே வாரிசு என்பதை மறந்து விட்டீர்களா?” என்றாள்.
சர்தாரிலால் ஏதோ சொல்ல முற்படும் போது, மித்ரோ, தன் மென்மையான உதடுகளால் அவன் வாய்க்கு பூட்டு போட்டு, “உங்கள் கவலைதான் தீர்ந்து விட்டதே அன்பரே! இப்போது இந்த லைலாவின் தாபத்தைத் தீர்க்க வாருங்கள்,” என்றாள்.
*****
நீண்ட நாட்களுக்குப் பிறகு பாசக்கார அண்ணன்களின் செல்லத் தங்கை பிறந்த வீட்டிற்கு வந்ததில், முற்றத்தில் சந்தோஷ சூரியன் பொற் கதிர்களை வாரி இறைத்துக் கொண்டிருந்தான்.
மகளின் தலையை அன்போடு தடவி, குர்தாஸ், பேரனை மடிமீது அமர்த்தி, கொஞ்சி மகிழ்ந்தார். ஜன்கோ அம்மாவை அணைத்துக் கொண்டாள். தனவந்தியும், மகளை ஆரத் தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டாள். தனவந்தி நீண்ட நேரம் மகளை அணைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து மித்ரோ, “கொஞ்சம் அன்பை மருமகள்களுக்கும் மீதி வையுங்கள் அம்மா” என்று கேலி செய்து சிரித்தாள்.
ஜன்கோ சந்தோஷமாக அண்ணிகளையும் தழுவிக் கொண்டாள். சின்ன அண்ணி கண்ணில் படாததைப் பார்த்த ஜன்கோ, “அண்ணி நன்றாகத் தானே இருக்கிறாள் அம்மா? அண்ணியும் கண்ணில் படவில்லை, அண்ணன் குல்ஜாரியும் கண்ணில் படவில்லையே என்று கேட்டாள்.
தன்வந்தி கடைசி மருமகளுக்குக் குரல் கொடுத்தாள்.
” ஃபூலாவந்தி, கொஞ்சம் வெளியே வா. உன் நாத்தனார் வந்திருக்கிறாள் பார்” என்றாள்.
சுஹாக், ஜன்கோவின் முதுகில் அன்போடு தடவி, “குட்டிப் பெண்ணே! இந்த வீட்டையும் எங்களையும் மறந்து விட்டாயா?” என்றாள்.
கட்டிலில் உட்கார்ந்த ஜன்கோ நாலா பக்கமும் பார்த்துச் சிரித்துக் கொண்டே, ” என் அண்ணிகளின் அன்புக்கு எதுவும் ஈடாகாது. உங்களைப் போன்ற அண்ணிகள் இருக்கும் பிறந்த வீட்டை யாரால் மறக்க முடியும்?” என்று நெகிழ்ச்சியுடன் கூறினாள்.
மித்ரோ, பரிகாசமாக, “ஆமாம், அங்கு இருந்தால் ஒவ்வொரு நாளும் கணவரின் தொல்லை தான்” என்றாள்.
ஜன்கோவிற்கு முதலில் புரியவில்லை. புரிந்தவுடன், வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டாள்.
ஃபூலாவந்தி அறைய விட்டு வெளியே வந்த போது, அவளது தலை முடி கலைந்து, அழுததில் கண்கள் சிவந்து காணப்பட்டன. ஜன்கோ எழுந்து அண்ணியைத் தழுவிக் கொண்டாள். சந்தோஷமாக, ” சின்ன அண்ணி நான் நல்ல செய்தியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்,” என்றாள்.
மித்ரோ உரக்கச் சிரித்து, ” நல்ல கேள்வி கேட்டாய் ஜன்கோ, கடவுள் பெயரைச் சொல்லி வாயை சுத்தம் செய்து கொள். இந்த சண்டைக்கோழி எங்கிருந்து நல்ல செய்தி கொண்டு வரப் போகிறாள்?” என்றாள்.
ஜன்கோ எதுவும் சொல்வதற்கு முன்பாகவே, ஃபூலாவந்தி, வேகமாக ஓடித் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
ஒன்றும் புரியாமல் ஜன்கோ மூத்த அண்ணியைப் பார்த்தாள். இதற்கிடையே பேரனைத் தூக்கிக் கொண்டு அங்கு வந்த தனவந்தி, மருமகளிடம், “ஜன்கோவிற்கு ஏதாவது சாப்பிடக் கொடு. பாவம், பயணத்தில் களைத்திருப்பாள்,” என்றாள்.
மித்ரோ நாத்தனாரைப் பார்த்துக் கண் சிமிட்டி அப்படியே, ” இப்போது இவளுக்கு என்ன களைப்பு இவளுடைய “அவர்” தான் பல மைல்கள் தூரத்தில் இருக்கிறாரே! என்றாள்.
பேரனை இடுப்பில் தூக்கிச் சுற்றிக்கொண்டிருந்த தனவந்தி, மறுபடியும் இளமை திரும்பியது போல உணர்ந்தாள். மித்ரோவைப் பார்த்துச் சிரித்தபடி, “ஜன்கோ உன் அண்ணி உண்மையைத்தான் சொல்கிறாள். மாப்பிள்ளையின் அராஜகத்தின் விளைவு இதோ என் இடுப்பில்,” என்றாள்.
எல்லோரும் உரக்கச் சிரித்தார்கள். சத்தம் கேட்டு குர்தாஸ் வெளியே வந்தார். மலர்ந்த முகத்துடன் அவர் அருகில் வந்து நின்றதும், இரு மருமகள்களும் துப்பட்டாவை கொஞ்சம் கீழே இழுத்து விட்டுக் கொண்டார்கள். குர்தாஸ் இன்னுமொரு முறை மகளின் தலையைத் தடவி ஆசியளித்தார். தனவந்தியிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு தட்டாமாலை சுற்ற ஆரம்பித்தார். சுருக்கங்கள் படிந்து இருந்த அந்த முகத்தில் எங்கிருந்துதான் அத்தனை பிரகாசம் வந்ததோ? நரைத்த மீசையால் மூடப்பட்டிருந்த உதடுகளில், தூர தூரத்தில் கூட கவலை எதுவும் இல்லை என்கிற மாதிரி, சிரிப்பு படர்ந்திருந்தது. “ஜன்கோ, சீக்கிரமாகச் சாப்பிட்டுவிட்டு வா மகளே! உன் புகுந்த வீட்டு கதைகளை யெல்லாம் கேட்க வேண்டாமா? உன் மாமனார் மாமியாரின் உடல்நிலை பற்றி கூட இன்னமும் கேட்கவில்லையே,” என்றார்.
பேரனை மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சிக் கொண்டிருக்கும் மாமனாரையும், அருகில் நின்று குனிந்து பார்த்துக் கொண்டிருக்கும் மாமியாரையும் பார்த்தபோது, சுஹாகிற்கு வீட்டு முற்றத்தில், ஒரு படமே உயிர் பெற்று வந்தது போலத் தோன்றியது.
மாமனாருக்கு எதிரே வராமல், தனவந்தியின் பின்னால் ஒதுங்கிக் கொண்டு, சுஹாக் மாமியாரிடம், “அம்மா, மாமனாரை சமையலறையிலேயே வந்து எல்லோருடனும் உட்காரச் சொல்லுங்களேன். நன்றாக களை கட்டும்” என்றாள்.
தனவந்தி சிரித்தபடியே, “என் புத்திசாலி மருமகளே, இந்த கிழ மாமனார் மாமியாரால் என்ன களை கட்டப் போகிறது! எல்லாவற்றுக்கும் காரணம், இதோ, என் பேரப்பிள்ளை தான்” என்றாள்.
பாத்திரம் பண்டங்களால் நிரம்பி இருந்த பிறந்த வீட்டின் பழைய சமையலறையில் சுற்றம் புடை சூழ உட்க்காந்திருந்த ஜனகோவுக்கு வேதனையாக இருந்தது. பிறந்து வளர்ந்த வீடு, இப்போது அவளுக்கு அன்னியமாகிவிட்டிருந்தது!
மகளின் ஆரோக்கியமான ரோஜாவண்ணக் கன்னத்தை பார்த்து, தனவந்தி மகிழ்ந்தாள்.” ஜன்கோ, என் சம்பந்தி அம்மாள் எந்த மாதிரி? இப்போதும் கூட தலையில் பூ வைத்து கண்களில் மை தீட்டிக் கொள்கிறாளா?” என்றாள்.
ஜன்கோ தன் தாயை கூர்ந்து பார்த்தாள். கருத்துப்போன உடலையும் சுருக்கம் விழுந்த முகத்தையும் பார்த்து, அவளுக்கு மனம் வலித்தது. ஆப்பிள் சிவப்பு நிறத்தில் பளபளக்கும் என் மாமியார் எங்கே, கவலைகளில் மூழ்கி உருகி உருக்குலைந்திருக்கும் என் அம்மா எங்கே?
“அம்மா, திருமணத்தில் நீங்கள் என் மாமியாரை எப்படிப் பார்த்தீர்களோ, அப்படியே தான் இன்னமும் இருக்கிறார்,” என்றாள்.
தனவந்தி கேலியாக, “இந்த வயதிலும் வாய்க்கு ருசியாக சாப்பாடு மனதுக்கு பிடித்த மாதிரி அலங்காரமும் செய்து கொள்ள முடிந்தால் யார் தான் அழகாக இருக்க மாட்டார்கள்?” என்றாள்.
குர்தாஸ் சிரித்தார். சம்பந்தி அம்மாளின் பேரனின் தலையை தடவிக் கொண்டே இருந்ததில், சம்பந்தி அம்பாளின் மீதும் அவருக்கு மோகம் ஏற்பட்டது.
“சீவி சிங்காரித்துக்கொள்வது தவறா என்ன துணைவியே? உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் உன்னைப் போலவா இருக்க வேண்டும்? கடவுள் கொடுத்த எல்லாம் இருக்கிறது உன்னிடம். இருந்தாலும் உலகத்துக் கவலை முழுவதையும் தன் தலையில் சுமந்து கொண்டிருக்கிறாய். நீ கட்டியிருக்கும் துணியும் அழுக்கடைந்து சோகமாக இருக்கிறது,” என்றார்.
தன்வந்தி அவர் பேச்சை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. பொய்க்கோபத்துடன் கணவனை முறைத்து விட்டு, மருமகள்களிடம், ” இவர் பேச்சைக் கேட்டீர்களா? இப்போது யாருக்கு என்னை பிடிக்கப் போகிறது? சம்பந்தி அம்மா மீது இவருக்கு ஆரம்பத்திலி ருந்தே ஒரு கண் தான்” என்றாள்.
மருமகள்கள் மாமனாரைப் பார்ப்பதை தவிர்த்து, ஒருவரை ஒருவர் பார்த்து மனதுக்குள்ளாகவே சிரித்துக் கொண்டனர்.
முற்றத்தில் காலடி ஓசையை கேட்டு ஜன்கோ எழுந்து சென்று பன்வாரியை ஆரத்தழுவிக் கொண்டாள். அண்ணன் தங்கையைக் கட்டி முத்தமிட்டு, சமையலறை வாசலில் நின்று கொண்டு, வாஞ்சையுடன்,”இந்த பைத்தியக்காரியை தனியாக வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்க எப்படி அனுமதித்தீர்கள் அம்மா? முழுதாக ஒரு வருடம் கழித்து வந்திருக்கிறாள். அதுவும் தன் கணவனை வீட்டுக் காவலுக்காக விட்டுவிட்டு வந்திருக்கிறாளே!”
“மகனே பன்வாரி! இந்த சண்டை சச்சரவை எல்லாம் அண்ணன் தங்கை பிறகு தீர்த்துக் கொள்ளுங்கள். இதோ வந்திருக்கிறாரே, இந்தப் புது விருந்தாளியையும் கொஞ்சம் பார்!” என்றாள்.
பன்வாரி தங்கையை விட்டு விட்டு பாய்ந்து சென்று மருமகனை தூக்கிக் கொண்டு, அவனை உயிரைத் தூக்கிப் போட்டு பிடித்தான். என் செல்லமே! நீ உன் அப்பாவைப் போலத்தான் இருக்கிறாய்! உன்னையும் நாங்கள் தலையில் வைத்து கொண்டாடுவோம்” என்று கூறி மகிழ்ந்தான்.
பேசிக் கொண்டிருக்கும்போதே தனவந்திக்கு குல்ஜாரியின் நினைவு வரவே, சர்தாரியிடம், மகனே, குல்ஜாரிலால் இன்றும் திரும்பி வரவில்லையா? என்று கேட்டாள்.
சர்தாரி அம்மாவின் பார்வையைத் தவிர்த்து, இல்லை என்று தலையாட்டினான்.
சந்தோஷமாக இருக்கின்ற இந்த நேரத்தில் வீடு எந்த கவலையிலும் ஆழ்ந்துவிடக்கூடாது என்று குர்தாஸ் நினைத்தார்.
எனவே பேச்சைத் திசை மாற்றும் விதமாக, மகனிடம், ” மகனே பன்வாரி, உன் தங்கை உங்கள் எல்லாரையும் விட சிறியவள். ஆனால் அவள் தான் எல்லோருக்கும் முன்பாக குழந்தை பெற்று குடியும் குடித்தனமாக இருக்கிறாள்,” என்றார்.
தனவந்தி மருமகள்களை பார்த்தாள். மூன்று பேருமே நல்ல அழகாக களையாக இருக்கிறார்கள். ஆனால் ஒருவருக்கும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை.
மதியம் ஜன்கோ தன்னுடைய பெட்டியைத் திறந்தாள். அண்ணன் அண்ணிகளுக்காக தான் வாங்கி வந்த சிறிய பரிசுப் பொருட்களை எடுத்து வெளியே வைத்தாள். அதைப் பார்த்த தனவந்தி, ” இவளுடைய முட்டாள்தனத்தைப் பாருங்கள். உன்னுடைய மூத்த அண்ணன் அண்ணிமார், நீ உன் புத்தகத்திலிருந்துகொண்டு வந்த பரிசுகளை ஏற்றுக் கொள்வார்களா என்ன?” என்றாள்.
ஜன்கோ அம்மாவைப் பார்த்துப் பெருமையுடன், “அம்மா என் மாமியார், உன்னை பிறந்த வீட்டுக்கு வெறுங்கையோடு அனுப்ப மாட்டேன். உன் அண்ணன்களுக்கு குழந்தைகள் இருந்திருந்தால் அவர்களுக்கும் ஏதேதோ வாங்கி வைத்திருப்பேன் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்,” என்றாள்.
குர்தாஸ் பேரனைத் தனக்கருகே படுக்க வைத்துக்கொண்டிருந்தார். தனவந்தியை முழங்கையால் இடித்து, ” நாத்தனார் தன் அண்ணிகளை சந்தோஷப்படுத்தட்டுமே. மகள் புறப்படும் போது பணமாக கொடுத்து விடலாம். அவ்வளவுதானே?” என்றார்.
முற்றத்தில் அமர்ந்து கொண்டு சுஹாகும் மித்ரோவும் அவளுடைய புக்ககத்து கதைகளையும், நடைமுறைகளையும், அந்த வீட்டு மனிதர்களையும் பற்றிய விவரங்களையும் கேட்டுக் கொண்டிருந்தனர்.
மித்ரோவின் பேச்சைக் கேட்டு ஜன்கோ சிரித்துக் கொண்டிருந்தாள். பலமுறை தலை குனிந்து வெட்கப்பட்டாள்.
” உன் கணவர் எப்போதும் உன்னையே சுற்றி வருகிறார் தானே?”
ஜன்கோ ஆமாம் என்று தலை அசைத்தாள்.
“அப்புறம் மந்திரம் போட்டு உன்னை வசப்படுத்த முயற்சிக்கிறார் இல்லையா?”
வெட்கம் நிறைந்த கண்களுடன் ஜன்கோ மறுபடியும் ஆமாம் என்று தலையசைத்தாள்.
“பிறகு உன்னை ஏமாற்றி, தூங்க வைக்கிற மந்திரத்தை படித்து விடுகிறாராக்கும்?”
ஜன்கோ வெட்கத்தில் சிவந்த தன் முகத்தை மூத்த அண்ணியின் பக்கம் திருப்பிக் கொண்டாள்.
இளமை எழிலுடன் பூத்துக் குலுங்கும் தன் அழகான செக்கச்சிவந்த நாத்தனார் வெட்கப்படுவதை பார்த்து சுஹாக் புன்னகைத்தாள்.
அவளை கேலி செய்து கொண்டிருந்த மித்ரோவின் சோகம் நிறைந்த கண்களை சுஹாகால் சந்திக்க முடியவில்லை. அவளுடைய மனதில் ஓடும் எண்ணத்தை ஒரே நொடியில் புரிந்து கொண்ட மித்ரோ, ” இந்த அழகு சுந்தரியை பார்த்து நானே மயங்கி விட்டேன் என்றால் இவளுடைய கணவன் எம்மாத்திரம்? என்றாள்.
” போதும் ஜன்கோ. இந்த கிண்டல் கேலி எல்லாம் போதும். போ, போய் உன் அம்மாவிடம் உட்கார்ந்து பேசிக் கொண்டிரு,” என்று சுஹாக் அவளை மாமியாரிடம் அனுப்பினாள்.
நெகிழ்ந்து போன ஜன்கோ அண்ணியின் கட்டளைப்படி தன் அம்மாவின் அருகே சென்று அமர்ந்து கொண்டாள். மித்ரோ, எரிச்சல் மண்டிய கண்களுடன் தன் ஓரகத்தியை பார்வையால் அளந்தவாறே, அவளை சண்டைக் கிழுக்கும் நோக்கத்துடன், “ஏன் அண்ணி, அங்கமெல்லாம் இளமை ததும்பி குலுங்குவதால் தான் என்னை பிடிக்கவில்லையோ?” என்றாள்.
” என் அருமை சகோதரி, நீ பதினாறு கலைகளிலும் தேர்ச்சி பெற்றவள் என்று ஒத்துக் கொள்கிறேன். ஆனால், வெள்ளந்தியான இந்த அடுத்த வீட்டு மருமகளை உன் பேச்சால் கெடுத்து விடாதே. நான் உன்னை கை கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்” என்றாள்.
” நன்றாகச் சொன்னீர்கள் அண்ணி. பசு போன்று சாதுவான என் நாத்தனார், நான் எதுவும் சொல்லிக்கொடுக்காமலேயே, பிள்ளை பெற்று விட்டாள். பெண், வயிற்றில் சுமையை ஏற்றுக் கொண்ட பிறகு, எல்லா வழிகளையும் தானாகவே தெரிந்து கொண்டு விடுகிறாள்,” என்றாள்.
” உன்னிடம் சொன்னது என் தப்பு தான். என்னை மன்னித்துவிடு சகோதரி” என்று சுஹாக் காதுகளின் மீது கை வைத்து மன்னிப்பு கேட்டாள்.
மூத்த ஓரகத்தி அங்கிருந்து சென்றதும் மித்ரோ, ஃபூலாவந்தியின் அறை வாசலுக்கு சென்று, “போதும் ஃபூலாவந்தி, உன்னுடைய கோப தாபங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு, முதலில் இந்த அறையை விட்டு வெளியே வா,” என்று அதட்டினாள்.
அவளது பார்வை தெருப்பக்கம் சென்றபோது, கொழுந்தன் குல்ஜாரியுடன், பூலாவர்த்தியின் அண்ணன்களும் வீட்டை நோக்கி வருவதைப் பார்த்தாள்.
“கதவைத் திற ஃபூலாவந்தி, குஜாரிலால் உன் அண்ணன்களின் படையோடு வந்து கொண்டிருக்கிறான்,” என்றாள்.
சடாரெனக் கதவை திறந்து கொண்டு, கசங்கிய அழுக்கு ஆடையுடன்
யுடன் ஃபூலாவந்தி வெளியே வந்து நின்றாள்.
மித்ரோ, கேலியாக, ” என்னம்மா பட்டத்து ராணி, உன் சக்களத்தியின் மகனுக்கு முடிசூட்டப் போகிறார்களா என்ன? ஏன் இப்படி கைகேயி வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறாய்?” என்றாள்.
தன் அண்ணன்களை பார்த்ததும் ஃபூலாவந்தி பலம் கூடியது போல உணர்ந்தாள். புருவத்தை நெறித்துக்கொண்டு, ஒரகத்தியை பார்த்து,”என் அண்ணன்களை ‘படை’ என்று சொல்ல என்ன தைரியம் உங்களுக்கு? இன்னொரு முறை சொன்னால் நான் சும்மா இருக்க மாட்டேன்” என்றாள்.
மித்ரோ, குலுங்கிக் குலுங்கி சிரித்துவிட்டு, ” பொறுமையாக இரு ஓரகத்தி! உன் அம்மா தான் ஐந்து பேரைப் பெற்றுப் போட்டு இருக்கிறார்களே!” என்றாள்.
ஃபூலாவந்தி பதில் சொல்ல வாயெடுக்கு முன், அவளுடைய சகோதரர்களான கிருஷ்ணா, பிஷ்ணா, சத்தி மற்றும் அவர்களுக்கு பின்னால் தலையை குனிந்த படி குஜாரிலாலும் வந்து சேர்ந்தார்கள். மித்ரோ, இனிப்பும் புளிப்பும் கலந்த வார்த்தைகளில், அவர்களை வரவேற்றாள்.
“அப்பளம் வடகம் விற்கும் பெரு வியாபாரிகளே, வாங்க வாங்க. உங்கள் வரவு நல்வரவாகட்டும். தங்கையின் வீட்டில் உங்களை எப்படி மரியாதை செய்வது என்று தெரியவில்லை,” என்றாள்.
ஃபூலாவந்தி, கையால் துப்பட்டாவை நெற்றிக்கு கீழே இழுத்து விட்டுக் கொண்டு, பெருங்குரலில் அழுதவாறே, ” என்னை இந்த நரகத்திலிருந்து விடுவித்து செல்லுங்கள் அண்ணன்களே! உங்கள் துரதிஷ்டசாலி தங்கை இந்த கொடியவர்களிடம் சிக்கிக் கொண்ட மிகவும் கஷ்டப்படுகிறேன்,” என்றாள்.
சத்தி, முஷ்டியை இறுக்கி காற்றில் ஓங்கியவாறே, “என் தங்கையை இந்த நிலைக்கு ஆளாக்க எவன் பிறந்திருக்கிறான்?” என்று கர்ஜித்தான்.
மித்ரோ, சுட்டெரித்து விடுவது போல பார்த்து, “ஊரில் இல்லாத வினோதமான தங்கையின் அண்ணன்மார்களே! இது எனக்கு எப்படி தெரியும்? இந்தத் தெருவில் உள்ள செவிலிகளுக்கோ அல்லது மருத்துவச்சிக்கோ தெரியக்கூடும் அல்லது…..”
பிஷ்னா, கோபமாக மித்ரோவை முறைத்து விட்டு, ” உங்களை நான் பிறகு கவனித்துக் கொள்கிறேன் சகோதரி. முதலில் அந்த கிழவனார் அதான் உங்கள் மாமனாரை வெளியில் கூப்பிடுங்கள்,” என்றான்.
மித்ரோ இடுப்பில் கை வைத்துக் கொண்டு தலையை அசைத்து, ” இவ்வளவு தலைகனம் கூடாது தனவந்தர்களே! இப்போது வேண்டுமானால் நீங்கள் தலைக்குச் சாயம் பூசி தன்னை இளைஞர்களாக காட்டிக் கொண்டு திரியலாம். ஆனால் மித்ரோவின் வார்த்தையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், ஒரு நாள் இதுவும் உங்கள் அப்பளம் போல நெருப்பில் பொசுங்கிவிடும்,” என்று சீறினாள்.
ஃபூலாவந்தி, தலையில் அடித்துக் கொண்டு, கர்ஜித்தாள். “என் அண்ணன்களை குறை கூறுபவர்கள் புழுத்து நெளியட்டும்,” என்று சாபமிட்டாள்.
குல்ஜாரி மனைவியை ஒரு முறை பார்த்து, பின்னர் அருகில் இருந்த மைத்துனர்களை பார்த்துவிட்டு, தலையை அசைத்து ஏதோ சொல்ல முற்பட்டு, பிறகு வாயை மூடிக்கொண்டான்.
மித்ரோ, கொழுந்தன் குல்ஜாரியின் அருகே வந்து நின்று, அவனை இடித்துக்காட்டுகிற குரலில், ” குல்ஜாரி, நீ ஆணிலிருந்து பெண்ணாக மாறிவிட்டாய். உன் அண்ணிக்கு இந்த விஷயம் கூட தெரியவில்லை பார்!” என்றாள்.
சத்தம் கேட்டு வெளியே வந்த குர்தாசும் தனவந்தியும், சம்பந்தி வீட்டிலிருந்து வந்திருக்கும் படையை பார்த்து பயந்து போனார்கள். வறண்ட குரலில், குர்தாஸ் அவர்களைப் பார்த்து, “நலந்தானே?” என்று கேட்டார்.
மூத்தவன் கிருஷ்ணா, அருகே வந்து, கோபமான குரலில், ” ஃபூலாவின் பெற்றோர் அண்ணன் அண்ணி எல்லோரும் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறோம் என்று தெரிவிக்க வந்தேன் பெரியவரே” என்றான்.
தனவந்தி குறுக்கிட்டு, “நல்ல வார்த்தையாய் பேசு. வயதுக்கு ஏற்ற மாதிரி பேசு” என்றாள்.
அடுத்தவன் பிஷன், ” எங்கள் தங்கையை பாருங்கள் இளைத்துப் பாதியாகிவிட்டாள்” என்று குற்றம் சாட்டினான்.
தனவந்தி ஒரே நொடியில் அனைத்தையும் புரிந்து கொண்டாள். அவனை மேலே பேசவிடாமல் கையால் தடுத்து, ” பிஷன் லால், நான் உன்னிடம் பேசப் போவதில்லை. என் மகனிடம் பேசிக் கொள்கிறேன்,” என்றாள். பிறகு, குல்ஜாரியின் பக்கம் திரும்பி,”உண்மையைச் சொல் குல்ஜாரிலால். நீ எதற்காக இவர்களை கூட அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாய்?” என்று கேட்டாள்.
ஃபூலா கணவனுக்கு ஆதரவாக குரல் எழுப்பி, ” நாங்கள் துரதிர்ஷ்டசாலிகள். எங்களுக்கு இந்த வீட்டில் அநீதி இழைக்கப்பட்டால், அதை நாங்கள் யாரிடமும் முறையிடக்கூடாதா என்ன?” என்றாள்.
“உன் அழுகை ஆர்ப்பாட்டத்தையெல்லாம் நிறுத்து” என்று தனவந்தி மருமகளை கண்டித்தாள்.
“குல்ஜாரி லால் உனக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதை உன் அப்பாவிடம் சொல்.” குல்ஜாரி தொண்டையைச் செறுமிக்கொண்டு பேச முயற்சித்தான்.
ஆனால் குனிந்த தலையை நிமிர்த்தவில்லை.
தனவந்திக்கு கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டது. மகனுக்கு தைரியம் அளிக்கும் வகையில், “மகனே, மூன்றாம் நபர்கள் நடுவில் நுழையும்போது, தன் வீட்டவர்களிடம் எதற்காக ஒளிவு மறைவு? என்றாள். குல்ஜாரியின் தலை இன்னும் கொஞ்சம் தாழ்ந்தது.
மகனின் கையறு நிலையை பார்த்து, தான் ஒரு தாயைப்போல இல்லாமல், ராட்சசியைப் போல அவனோடு சரிக்கு சரி யுத்தம் செய்ய நின்று கொண்டிருப்பவளாகத் தன்னை நினைத்துக் கொண்டாள். தன் செல்ல மகனின் நிலையை எண்ணி, துக்கத்தில் அவளுடைய தொண்டை தழுதழுத்தது. கரகரத்த குரலில், ”மகனே குல்! நீ இந்த கிழவியைப் பற்றிக் கவலைப்படாதே. உன் மனைவி என்ன விரும்புகிறாளோ அதையே செய்” என்றாள். அம்மாவின் தழுதழுத்த குரலை கேட்ட குல்ஜாரியின் கண்களில் நீர் மல்கியது. பெருமூச்சு விட்டபடியே, “அம்மா, உங்கள் மருமகள் இனி இந்த வீட்டில் இருக்க மாட்டாளாம்” என்றான்.
தனவந்திக்கு எதையும் சொல்லவோ கேட்கவோ தோன்றவில்லை. அடிபட்டவள் ஆதரவுக்காக கணவனை நோக்கினாள். கோபத்திலும் அவமானத்திலும் சிறுத்துப் போயிருந்த குர்தாஸ், தலையை அசைத்தபடியே, ” தனவந்தி, இவர்களுடைய நீதிமன்றத்தில் வேறு யாரும் இல்லை. நாம் இருவர் மட்டுமே குற்றவாளிகள்,” என்றார்.
******
அறையைப் பெருக்கி மெழுகி சுத்தம் செய்துவிட்டு, ஃபூலாவந்தி, பூக்கள் போட்ட படுக்கை விரிப்பு ஒன்றை படுக்கையின் மீது விரித்தாள். கணவனின் குர்தாவை ஆணியில் மாட்டினாள். முந்தானையிலிருந்து, சாவிக்கொத்தை அவிழ்த்து பரணில் ஒளித்து வைத்தாள். ஜன்னலில் இருந்து அறைக்குள் விழுந்த சூரிய ஒளியில் அவள் உடல் வலுப்பெற்றது போல உணர்ந்தாள். மாமியார் வீட்டுச் சிறையில் இருந்து தப்பித்து, வேறொருபுது உலகத்திற்கு வந்துவிட்டது போல இருந்தது. அணிந்து கொள்ள பச்சை நிற சல்வாரை எடுத்து வைத்துவிட்டு, சோப்பு கட்டியுன், பிறந்த வீட்டுக் குளியலறையை நோக்கி சந்தோஷமாக நடந்தாள். சோப்பைக் குழைத்து கை கால்களை தேய்த்து விட்டுக் கொண்டாள். குரு மந்திரத்தை சொல்லியபடியே அலங்காரத்தை முடித்துக் கொண்டு வெயிலில் வந்து நின்றாள். சீப்பால் தலையை வாரி பின்னி முடிந்துகொண்டு, படுக்கையில் காலை விரித்துக் கொண்டு படுத்தாள். அந்த நீலக் கண்ணன் தான் இவளை இக்கட்டில் இருந்து காப்பாற்றி இருக்கிறான்!
மாமியார் இப்போது வந்து பார்க்கட்டும்! பொறாமையில் வெந்து தணிவாள் என்று நினைத்துக் கொண்டாள். மாயாவந்தி தன் மகளின் அருகே வந்து உட்கார்ந்து கொண்டு, சந்தோஷமாக,” ஒருவழியாக உன் கணவன் உன் வழிக்கு வந்து விட்டான்” என்றாள்.
ஃபூலாவந்தி, கண்களைச் சிமிட்டி, ” அம்மா, உன் மாப்பிள்ளை சரியான கல்லுப் பிள்ளையார். எல்லோருக்கும் நல்லவராக இருக்க ஆசை. சண்டைக்குக் காரணம் என்னவோ வேறு ஒருத்தி தான்!” என்றாள்.
மாயாவந்தியின் நெற்றியில் கோடுகள் விழுந்தன.” வரும்போது, உன் மாமியார் உன்னிடம் கண்டிப்பாக ஏதாவது சண்டை போட்டிருப்பாளே?” என்றாள்.
ஃபூலாவந்தி, கழுத்தை ஒரு வெட்டு வெட்டி, அம்மாவைப் பார்த்து, “அவர்களுக்கு ஏதாவது சொல்ல வாய் இருந்ததா என்ன? தன் வீட்டாரின் நடத்தை தான் மகனுக்கும் தெரிந்திருந்ததே!” என்றாள்.
மாயாவதிக்கு அங்கு நடந்த ஒவ்வொரு சம்பவத்தையும்தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. “ஃபூலா, உன் மாமியார் ஒன்றும் லேசு பட்டவள் இல்லை. குறைவாக எடை போட்டு விடாதே” என்றாள்.
பூலாவந்தி அங்கு நடந்தவற்றை ஒன்றுக்கு பத்தாக பெருக்கி உப்பு காரம் சேர்த்து அம்மாவிடம் பகிர்ந்து கொண்டாள்.” மாமியார் அழுது புலம்பினார் தான் ஆனால் உன் மருமகன் உறுதியாக நின்றார்,” என்றாள்.
” அந்தக் கிழவர், உன் மாமனார் ஒன்றும் சொல்லவில்லையா?”
ஃபூலாவந்தி, மனதுக்குள், அன்று இரவு நடந்த நாடகத்தை மறுபடியும் நினைவு கூர்ந்தாள். சற்று நேரம் கழித்து, “அம்மா, அங்கு அவர் பேச்சை யார் கேட்கிறார்கள்? அவர் முழு நேரமும் இரும்மிக் கொண்டும் பெருமூச்சு விட்டுக் கொண்டும் எதையோ முணுமுணுத்துக் கொண்டும் இருந்தார்,” என்றாள்.
மாயாவந்திக்கு மகளின் மீது பாசம் பொங்கியது. கவலை தோய்ந்த குரலில், “சின்னப்பெண்ணே, உறவுக்காரர்கள் அக்கம் பக்கத்து வீட்டார் எல்லாரும் சும்மா இருக்க மாட்டார்களே. ஆயிரம் குற்றம் குறை கண்டுபிடித்திருப்பார்களே” என்றாள்.
ஃபூலவந்தி, அம்மா சொல்வதின் பொருளைப் புரிந்து கொண்டு, தைரியம் அளிக்கிற வகையில்.” அம்மா, நாம் ஏதாவது தவறு செய்திருந்தால் தான் பயப்பட வேண்டும். பேசுகிறவர்கள் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள்” என்றாள்.
மகள் சொன்னதை ஒன்று விடாமல் மாயவந்தி தன் மனதில் பொதிந்து கொண்டாள்.” அவர்கள் உன்னை இந்த பாடுபடுத்தி இருக்கிறார்கள்.
ஆனால், நீயோ வெள்ளந்தியாக, ‘நம் மீது தவறு இருந்தால்தானே’ என்கிறாயே” என்று அலுத்துக் கொண்டாள்.
அம்மாவின் புத்தி சாதுரியத்தை நினைத்து ஃபூலா அகமகிழ்ந்தாள். அண்ணிகள் யாரும் அருகில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அம்மாவிடம் ரகசியமாக, ” இந்த இரண்டு மேனாமினுக்கிகளையும் நீயே சமாளித்துக் கொள். என்னால் முடியாது” என்று கிசுகிசுத்தாள்.
பகல் உணவுக்கு பிறகு அம்மாவும் மகளும் வெயிலில் உட்கார்ந்த போது, மாயா வந்தி, தன் மருமகளுக்குக் குரல் கொடுத்து,” இங்கே வந்து உட்காருங்கள். எதையாவது சொல்லி உங்கள் நாத்தனாரின் மனதை தேற்றப் பாருங்கள். வந்ததிலிருந்து இவள் அழுது அழுது புலம்பி கொண்டிருக்கிறாள்” என்றாள்.
பல மாதங்களுக்குப் பிறகு மாமியாரின் கனிவான குரலை கேட்ட மருமகள்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு உதட்டுக்குள் சிரித்துக் கொண்டனர். வெளியே வந்து மாமியாரின் அருகே அமர்ந்து கொண்டனர்.
மாயாவதி மூத்த மருமகளை பார்த்து, “ஸோமா, என் மகள் எப்படி வெளிறிக் கிடக்கிறாள் பார்” என்றாள். பிறகு ஃபூலாவின் பக்கம் திரும்பி.” அடியே! அங்கு உனக்கு தினமும் சாப்பாடு போட்டார்களா இல்லையா?” என்று கேட்டாள்.
ஃபூலா, அப்பாவி போன்று முகத்தை வைத்துக்கொண்டு அண்ணிகளை பார்த்து, பெருமூச்சு விட்டு, பிறகு தலையை குனிந்து கொண்டாள்.
மாயாவதி, “ஏன் எதுவும் சொல்ல மாட்டேன் என்கிறாய் மகளே” என்று கடிந்து கொண்டாள்.
ஃபூலா தலையை நிமிர்த்திய போது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
(தொடரும்)