ஓனிடா டி வியின் விளம்பர வாசகம் ‘அக்கம் பக்கத்தோர் பொறாமை கொள்வார்கள்; உடமையாளருக்கோ மகிழ்ச்சி’

நம் அருமை நண்பன் சீனா நேரடியாகவும், மறைமுகமாகவும் நமக்குத் தொல்லை தந்து கொண்டேயிருக்கிறது. அதனுடைய வேவுக் கப்பல் இந்தியப்பெருங்கடலில், நமது கால் சுண்டு விரலான ஸ்ரீலங்காவை கடன்களாலும், வணிகத்தாலும் கட்டுப்படுத்தி, நயவஞ்சகமாக அதன் அனுமதியைப் பெற்று நம் எல்லைகளை, நம் இராணுவ அமைப்புகளை கண்காணிக்கிறது. நம் உடன் பிறந்த உறவான பாகிஸ்தானிற்கு பல விதங்களிலும் உதவி, நம் நல்லிணக்கத்தைச் சிதைக்கிறது. நாம் ‘க்வாட்’ (QUAD) டில் அங்கம் வகிப்பது அதற்குப் பொறுக்கவில்லை. இந்தோ- பசிபிக் என்ற சொல்லாட்சியை மறுத்து ஆசியா- பசிபிக் என்றே சொல்கிறது. நம்முடன் அமெரிக்கா, நட்புடன் இருப்பதை அது விரும்பவில்லை. ரஷ்யாவை நமக்கு எதிராகச் செயல் பட வைக்க முடியவில்லை. திபெத்தை, தைவானை, ஹாங்காங்கை, உய்குர் இஸ்லாமியர்களை, மியான்மாரை, பூடானை அது என்னென்ன செய்கிறது என்பது உலகம் அறிந்த ஒன்று. கோவிட்-19 கையாண்டதில், இன்று கையாள்வதில் அது என்னென்ன செய்கிறது என்பது அந்த இரும்புத் திரையிலிருந்து கூட கசிந்து வெளிச்சத்திற்கு வருகிறது.
இந்து மதத்தால், ஒரு காலத்தில் நம்முடன் இயைந்திருந்த நேபாளத்தில் தன் கைப்பாவை ஆட்சியை அது தற்சமயம் நிறுவிவிட்டது. நம்முடனான எல்லைப் பிரச்சனையை எப்போதுமே அணையாமல் பாதுகாக்கிறது. விண்வெளியில், இராணுவ பலத்தில், மக்கள் உரிமையைப் பறிப்பதில், உலகிற்கு ஒரு நீதியும், தனக்கு ஒரு நீதியுமாகச் செயல்படுகிறது. என்று தணியும் அதற்கு ஆவேசங்களும், நாடு பிடிக்கும் பேராசைகளும்?
நேபாளத்தின் சந்தர்ப்பவாத அரசியலை, 2022 தேர்தலை, தனக்குச் சாதகமாக அது பயன் படுத்தியுள்ளதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

மன்னராட்சியிலிருந்து மக்களாட்சிக்கு மாறிய நேபாளில், ஷேர் பகதூர் தேவுபா,(Sher Bahadur Deuba- நேபாள காங்கிரஸ் தலைவர்), புஷ்ப கமல் தாஹால் என்ற பிரசண்டா, (Pushpa Kamal Dahal-Prachanda- நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-மாவோயிஸ்ட்), கே பி ஷர்மா ஒலி ( K.P. Sharma Oli நேபாள கம்யூனிஸ்ட் லெனினிஸ்ட்) முக்கிய அரசியல் தலைவர்கள். இவர்களில் பின்னிருவர் சீனாவின் வழி காட்டுதலில் ஆர்வமிக்கவர்கள். அதிலும், குறிப்பாக ஒலி ‘உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்பதாக நடந்து கொள்பவர். தேவுபா இந்தியாவின் நல்லுறவை நாடுபவர்.
275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில், 2022ல் நடை பெற்ற தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக 89 இடங்கள் தேவுபாவின் நேபாளக் காங்கிரசிற்குக் கிடைத்தது. ஒலியின் கட்சிக்கு 78 இடங்கள் கிடைத்தன. பிரசண்டா பெற்றது 32 இடங்கள் மட்டுமே. தனிப் பெரும்பான்மையை இவர்கள் யாருமே பெறாத நிலையில், பிரசண்டா கொள்கை வேறுபாடுள்ள பல கட்சிகளை இணைத்து பிரதமராகி விட்டார்!. இதைச் செயல்படுத்தியது சீன அரசு. சீனாவின் செல்லப் பிள்ளையான ஒலியினை, சீனா அறிவுறுத்தி தன் கைப்பாவையாக ஒரு அரசை அமைத்து நம்மை நோக்கி ஒரு புதிர்ப் புன்னகையை பரிசளித்திருக்கிறது. மன்னராட்சியை எதிர்த்து கொரில்லா போர் புரிந்த பிரசண்டா, மன்னராட்சிக் கட்சி ஆதரவையும் பெற்று ஆட்சி அமைத்துள்ள விநோதம் அதி அற்புதம். பதவியைத் தவிர வேறொன்றும் வேண்டேன் பராபரமே! இந்தியர்களுக்கு இதெல்லாம் பழகிய ஒன்று; அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனுமில்லை! பல பதவிகள், அதாவது துணை அதிபர், அவைத் தலைவர் போன்ற முக்கியப் பதவிகளை நேபாளக் காங்கிரசிற்குத் தருவதாகவும், ஆனால், தானே முதல் 2.5 ஆண்டுகளுக்கு பிரதமராக இருப்பேன் என்று பிரசண்டா சொன்னதை தேவுபா ஏற்கவில்லை. சீனா உள்ளே நுழைந்தது. ஒலியிடம் முக்கியப் பதவிகள் அவரது உறுப்பினர்களுக்குக் கிடைக்குமென்றும், 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பிரதமராவார் என்றும், அதற்கு பிரசண்டா ஒத்துக் கொள்கிறார் என்றும் அவரிடம் எடுத்துச் சொன்னது.
திபெத்தை, மாசேதுங், சீனாவின் உள்ளங்கை என்றும், நேபாளத்தை விரல்கள் என்றும் சொன்னார். அப்படியெனில் நேபாளம் சீனாவின் உடல் பகுதி அல்லது அதில் சீனர்களின் ஆதிக்கம் மேலோங்க வேண்டும் என்று பொருள். இப்போது ஒலியினை ஆட்டுவித்து பிரசண்டாவை பிரதமராக்கிய அதன் வியூகத்தால் தென் பகுதி நேபாளம் மூலம் இந்தியாவிற்கு அது பல தொல்லைகளைத் தர முடியும். இந்தியாவின் சில பகுதிகள் நேபாளத்தைச் சேர்ந்தவை என்ற முழக்கம் மீண்டும் ஓங்கி ஒலிக்கும்.
ஒலி 2015-16 மற்றும் 2018-21 ஆண்டுகளில் பிரதமராக இருந்தவர். அவர் முதல் முறை பதவி ஏற்றவுடன் சீனாவின் ஷீ ஜின்பெங்க் நேபாளத்திற்கு விஜயம் செய்தார். செழுமைக்கும், வளர்ச்சிக்குமான நீடித்த வழி காட்டும் நிலைத்த இரு தரப்பு ஒப்பந்தம், சீன வளையப் பாதையை வேகம் பெறச் செய்தல், சீனா- நேபாள் எல்லைப்புற மேலாண்மையை மேம்படுத்துதல் போன்றவைகள் புத்துணர்ச்சி பெற்றன.
தான் இரண்டாம் முறை பிரதமராக பதவி ஏற்ற பின், இந்தியாவின் மூன்று பகுதிகளை நேபாளத்தைச் சேர்ந்தவை எனக் காட்டி வரைபடம் வெளியிட்டவர் ஒலி. நம்முடன் முரணான போக்கினையே அனுசரித்தார் அவர். காலாபானிப் பகுதியில் விமான ஓடுதளம், இராணுவ முகாம்கள் என்றெல்லாம் 70 வருடங்களாக அமைதியாக இருந்த பிரதேசத்தில் சலசலப்பை உண்டாக்கினார். இந்திய எல்லையை ஒட்டிய தெறைப் (Terai) பகுதியில் கணிசமான அளவில் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்ட சீனாவிற்கு அனுமதி வழங்கப்பட்டது. பாகிஸ்தானின் உளவுத்துறை ஐஎஸ்ஐ (ISI)யின் செயல்பாடுகள் நேபாளத்தில் அதிகரித்தன.
இது நல்ல சந்தர்ப்பம் என்று கருதிய சீனா, நேம்கா கௌபாலிகாவிலுள்ள (Namkha Gaupalika) லிமி லேப்சாவில் (Limi Lapcha) எல்லைத்தூண்களை பிஎல்ஏவைக் (PLA) கொண்டு பெயர்த்தெடுத்து, பல கட்டிடங்களைக் கட்டியது. நேபாளத்தின் விவசாயத் துறையின் கணக்கெடுப்பு, நேபாளத்தின் 33 ஹெக்டேர் நிலங்களை சீனா ஆக்ரமித்துவிட்டது என்று தெளிவாக எடுத்துச் சொன்னது. மேலும், நதிகளின் போக்கினை மாற்றி அதிக நிலங்களை கபளீகரம் செய்துள்ளது எனவும் நிறுவியது. ஆனால், ஒலி கண்டுகொள்ளவில்லை. வேலியே பயிரை மேய்ந்தது.
17/11/2022 வெளியாகியுள்ள செய்தியின் படி இந்திய எல்லையை ஒட்டிய முக்கிய விரைவு நெடுவழிச்சாலையைக் கட்ட சீனக் குழுமத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. காத்மாண்டு- தெறை- மாதேஷ் (Kathmandu- Terai- Madhesh) பெரும் வழிச் சாலையின் கட்டமைப்பு “ஃப்ர்ஸ்ட் ஹைவே இஞ்சீனியரிங்’ (First Highway Engineering) என்ற சீனக் கம்பெனிக்கு நேபாள இராணுவத்தால் தரப்பட்டுள்ளது.
- நேபாள பொதுத் தேர்தலிற்கு பத்து நாட்கள் முன்பாக இந்த ‘எல் ஓ ஐ’ (Letter of Intent) பெறப்பட்டுள்ளது.
- இந்தியாவின் ‘ஆஃப்கான் இன்ஃப்ராசட்ரக்சர்’சின் (Afcons Infrastructure) விண்ணப்பம் ஒதுக்கித் தள்ளப்பட்டது.
- இந்த நெடுஞ்சாலையின் ஆறாம் கட்டத்தை அமைக்க சீனக் கம்பெனியால் முன்னர் இயலவில்லை. அதனால், முதலில் அது தகுதி நீக்கம் செய்யப்பட்டது. அதனால் என்ன, பின்புற வழி இருக்கிறதே!
இந்த விரைவு நெடு வழிப் பாதை 2017-ல் துவங்கிய ஒன்று. 72.5 கி மீ நீளம்-அதில் 55.5 கி மீ, சாலை வழிப் பாதை, 10.59 கி மீ சுரங்கப் பாதை, 6.41 கி மீ பாலங்கள். செப்டம்பர் 2021ல் முடிந்திருக்க வேண்டிய ஒன்று. ஆறு சர்வதேச நிறுவனங்களை ஆலோசகராக நேபாளப் படை தேர்ந்தெடுத்த விவரம் வெளி வந்ததால் 2020ல் வேலை நிறுத்தப்பட்டது. ஜூலை 2021ல் 16.5% வேலைதான் முடிந்திருந்தது. தற்சமயம் 2024க்குள் முடிக்க வேண்டும் என்று கால நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.
மீண்டும் First Highway Engineering இந்த வாய்ப்பு பெற்றதற்கு சில காரணங்களைச் சொல்லலாம்
- சீன நேபாள், இந்திய எல்லையின் முக்கியப் பாதை இது. எனவே சீனக் குழுமம் இதைப் பெற வேண்டும் என்று சீனா பலத்த முயற்சி எடுத்தது.
- Afcons Infrastructure குறிப்பிட்ட 19.99 பில்லியன் நேபாள் ரூபாயை, மற்ற போட்டியாளர்களுக்கு நேபாளப் படைப் பிரிவினர் அரசின் ஆணைக்கு இணங்க கசிய விட்டிருக்கலாம். எனவேதான் First Highway Engineering, 18.786 பில்லியன் நேபாள் ரூபாயை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு, வெற்றி பெற்றது. முன்னரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னரும் அந்தக் குழுமம் ஒப்பந்தத்தைப் பெற்றிருப்பதில் கையூட்டு இடம் பெற்றிருக்கலாம்.
- ஒரு ஊகமும் உலவி வருகிறது. இந்தியாவின் ‘அக்னி பாத்’ நேபாள இளைஞர்களுக்கு, நமது படையில் நிரந்தர வேலையில்லாமல் செய்து விட்டது. அது குறித்து வருத்தம் நிலவுகிறது.
சீனா, நேபாள் அரசியலில் தலையிடுவது நம் எல்லையில், பாதுகாப்புச் செயற்பாடுகளை அதிகரிக்கும் செலவுகளைக் கூட்டும்.
சீனா, இந்தியாவின் எல்லைப் பகுதிகளை தன்னுடன் சேர்த்துக் கொள்ள விழைகிறது. ஆகஸ்ட் 1959லேயே மேல் சுபான்சிரிப் (Subansiri) பாதையில் லாங்க்ஜூவை (Longju) ஆக்ரமித்தது. இன்றுவரை அன்றைய இந்திய அரசோ, அவற்றிற்குப் பின் வந்த அரசுகளோ இதை மீட்டெடுக்க முயலவில்லை.
இந்திய சீன எல்லை என்பதை இரு நாடுகளின் பேச்சு வார்த்தைகள் ஏற்படுத்தவில்லை. எனவே இரு தரப்புகளும் மோதலில் ஈடுபடுகின்றன. எல் ஏ (LAC) என்ற எல்லைக்கோட்டை போலியாக அது வரையறுக்கிறது. எப்போதுமே, அது சொல்லும் நிலப்பரப்பின் வரைபடத்தை அது தந்ததில்லை.
1950 களில் நிலப் பகுதிகளைச் சார்ந்த ஒன்றாக இந்த கருத்து வேறுபாடுகள் இருந்தன. அக்சாய் சின் (Aksai Chin) பகுதி முழுவதும் தனதென்று இந்தியா சொல்ல, அருணாசலப்பிரதேசப் பகுதியை தனதென்று சீனா சொல்லி வந்தது. 20/10/1962 அன்று தொடங்கி, 21/11/1962 வரை நடை பெற்ற சீனோ- இந்தியப் போரில் அக்சாய் சின்னின் 43000 சதுர கி மீ நிலப்பரப்பை நாம் சீனாவிடம் இழந்து விட்டோம். 1967ல் நடைபெற்ற போரில் இந்தியா வென்றது. 11/07/99 கார்கிலும் நமக்கு வெற்றியைத் தந்தது. இன்றோ சீனா அக்சாய் சின்னை முழுதுமாக தன் வசம் வைத்துள்ளது. இந்தியா அருணாசலத்தைப் பாதுகாக்க போராடுகிறது. ஏனெனில், சீனா நம் அருணாசலப் பகுதியில் உள் நுழையப் பார்க்கிறது. பல ‘மாதிரி வீடுகள்’ எல்லையை ஒட்டிய சீனப் பகுதியில் கட்டப்பட்டு, குடியேற்றங்கள் நடக்கின்றன. மேலும், தளவாடங்கள் அதிக அளவில் குவிக்கப்படுகின்றன.
எல் ஏ சி 3488 கி மீ நீளமுள்ளது. அதை மேற்கு (லடாக்), மையம் ( உத்தரகாண்ட், இமாசலப் பிரதேசம்), கிழக்கு (அருணாசலப் பிரதேசம் மற்றும் சிக்கிம்) என்று பிரித்துள்ளார்கள். மூன்று இணைப்புகளுக்குமிடையே அது கயிற்றுப் பாதையைக் கட்டி வருகிறது.
எல்லைப்பகுதியில் சீனா எப்போதோ தன் கட்டுமானங்களைத் தொடங்கிவிட்டது. இந்தியாவும் தன் எல்லைகளைப் பலப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூபாய் 15,477 கோடி செலவிட்டு கட்டுமானங்களை அமைத்துள்ளது. ஒரு சிறு புள்ளி விவரம் கீழே தரப்பட்டுள்ளது
எண் | எல்லை | கி மீ | செலவு (ரூ கோடி) |
1 | இந்தியா- சீனா | 2088.57 | 15477.06 |
2 | இந்தியா-பாக் | 1336.09 | 4242.38 |
3 | இந்தியா- மியான்மார் | 151.15 | 882.52 |
4 | இந்தியா- பங்களாதேஷ் | 19.25 | 163.45 |
மொத்தம் | 3595.06 | 20765.41 |
மேற்கில் (லடாக்கில்) இருவருக்குமிடையே இருந்த நில எல்லைப் பிரச்சனைகள் ‘ட்ரிக் ஹைட்ஸ்’ (Trig Heights) சார்ந்து முன்னர் இருந்தது. டெப்சாங் பல்ஜ், (Depsang Bulge) கால்வான். (Galwan) பாங்காங்க் ஏரி, (Pangong Lake) வென்னீர் ஊற்றுக்கள் (Hot Springs) ஆகியவைகளும் தனது என சீனா உரிமை பேசுகிறது.
மேற்கில் இப்படியென்றால், நடுப்பகுதியான (Barahoti Pasture) பாரஹோதி மேய்ச்சல் நிலம், (உத்தரகாண்டின் சமோலியின் வடக்கில் உள்ள ஒன்று) தொடர்பாக எழுபது ஆண்டுகளாக மோதல்கள் விட்டுவிட்டு நடக்கின்றன.
கிழக்கில் (அருணாசல்) சர்வதேச எல்லையும், உண்மையான கட்டுப்பாட்டுக் கோடும் 1914ல் மெக்மேஹன் வரையறுத்தபடி, (இரு நாடுகளையும் கலந்து பேசாமல்) வழக்கத்திற்கு வந்தது. ஆனாலும், தவாங்கில் (Tawang) சீனா உள் நுழைகிறது. இதற்குச் சாதகமாக நேபாள அரசை அது அமைத்துள்ளது.
ஷவோகாங் (Xiaokang) என்று அழைக்கப்படும் 628 ‘மாதிரிக் கிராமங்களை’ சீனா எல் ஏ சியை ஒட்டி கட்டியுள்ளது கவலை தரும் ஒன்று. சும்பி (Chumbi) பள்ளத்தாக்கில் அதன் அராஜகக் கட்டுமானம் நமது மிக முக்கிய சிலிகுரி தாழ்வரையை (Siligur Corridor)i அது எளிதில் அணுக வழி வகுக்கும். சுருக்கமாக நேபாளத்தின் மூலம் அரசியல், இராணுவ பிரச்சனைகளை அது ஊதிப் பெரிதாக்கும்.
நேபாளத்தின் பொது மக்களுக்கு சீனாவிடம் மதிப்பு கிடையாது. அவர்கள் விரும்புவதெல்லாம் நம்முடன் இணக்கமான உறவு. சீனா தங்களைக் கடன் வலையில் சிக்க வைக்கும் என அவர்கள் அறிவார்கள். சீனாவின் மேதமையைப் பற்றிய உயர்ந்த கண்ணோட்டமும் அங்கில்லை. சீனா கோவிட்டைக் கையாண்ட விதம் பற்றி அவர்கள் இகழ்வாகத்தான் பேசுகிறார்கள். நேபாளம் மன்னராட்சியிலிருந்து விடுபட்டே சில ஆண்டுகள் தான் ஆகின்றது. இந்தியாவோ உலக அளவில் நற்பெயரெடுத்துள்ள பெரிய ஜன நாயகம். நேபாளுடனான நம்முடைய எல்லைச் சிக்கலை நாம் புதிய கண்ணோட்டத்தில் அணுக வேண்டும். முந்தைய பிரித்தானிய அரசு வகுத்த எல்லைக் கோட்டை மறு சீராய்வு செய்ய வேண்டும். மக்களின் ஆதரவில்லாமல் யார் அரசாள முடியும்? இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் என்ன வேறுபாடு உள்ளது? அவர்கள் நம்மைவிட தேசப் பற்று மிக்கவர்கள். இங்கே நல்லதோ, தீயதோ அதை எதிர்க்க வேண்டும் என்பதும், உரிமை என்பது கூச்சல் போடுவதென்பதும், நாட்டு நலனில் கூட்டாகச் செயல்படக் கூடாதென்பதும், பொது எதிரியின் வியூகங்களை முறியடிப்பதில் ஒத்துழைக்கக்கூடாதென்பதும் எழுதப்படாத சட்டம்.
கத்தாரில் நடந்து முடிந்த உலகக் கால் பந்து கோப்பைக்கான விளையாட்டில் சீனா பங்கேற்றதா? ஆம். எப்படி?
சூர்ய சக்தியினால் இயங்கும் பசுமைக் குடில்களை சீனாவின் பவர் கன்ஸ்டரக்ஷன் கார்பரேஷன் (Power Construction Corporation of China) நிறுவிப் பராமரித்தது.
முழுதும் மின்மயமாக்கப்பட்ட 888 பேருந்துகளில் மக்கள் விரும்பும் இடம் செல்வதற்கு வசதி செய்யப்பட்டது. அந்தப் பேருந்துகளை சீனாவின் யூதாங் (Yutong) நிறுவனம் உருவாக்கியது.
முதன்மை விளையாட்டு மைதானத்தைக் கட்டியது சீன ரெயில்வே கம்பெனி.(China Railway Construction company)
70% உலகக் கோப்பைக்கான பொருட்கள்- பந்துகள், கொடிகள், விஸில்கள், ஜெர்சிகள் ஆகியவை சீனாவின் தென்கிழக்கு நகரத்திலிருந்து வந்தன.
பெரும் தண்ணீர் சேகரித்து வழங்கும் நீர்த் தொட்டிகளை வூஹான் நகர், கத்தாரில் அமைத்தது.
விளையாட்டரங்கம் 974 மிக முக்கியமான ஒரு முன்னெடுப்பு. அதன் கட்டுமானத்தை கோர்க்கலாம், பிரிக்கலாம். சீனா இன்டெர்னேஷனல் கன்டெய்னர்ஸ் (China International Containers) ஸ்பானிய பொறியியலாளரின் வரைவுப் படி அதைக் கட்டியது.
இந்தியாவின் பங்களிப்பென்று இதில் எதையும் சொல்ல முடியவில்லை.
நாட்டின் முன்னேற்றம் மக்கள் வாழ்வின் முன்னேற்றம். வாழ்வு நல்லவிதமாக நடப்பதற்கு பொருளாதாரம் தடையில்லாமல் கிடைக்க வேண்டும். அதற்கான வணிகச் சூழலை சீனா முயன்று கொண்டேயிருக்கிறது. நாம் வாய்ச் சொல் வீர்ர்களாகி வருகிறோம்.
சீனாவின் அடக்கு முறைகளை நாம் ஏற்க வேண்டாம். அவர்களின் அலுப்பில்லாத உழைப்பை புரிந்து கொள்வோம்.
‘தந்த பொருளைக் கொண்டே ஜனம் தாங்கும் உலகத்தில் அரசரெல்லாம். அந்த அரசியலை இவர் அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார்’ – பாரதி ஒரு தீர்க்கதரிசி
உசாவிகள்:
- China has managed to install Prachanda as the third time Prime Minister of Nepal by some deft maneuverings behind the scenes. This is bad news for India. : https://www.spsmai.com/experts-speak/?id=1267&q=China-in-Southern-Nepal– Author Retd Lt Genl P C Katock is Former Director General of Information Systems and A Special Forces Veteran, Indian Army
- The Hindu of various dates.
- https://swarajyamag.com/world/china-triumphs-in-nepal-maoist-leader-dahal-becomes-prime-minister-with-support-from-beijings-proxy-oli26/12/2022 Jaideep Mazumdar
.
சிறந்த கட்டுரை. தெரிந்த விஷயங்களானாலும், சொல்லிய விதம் சிறப்பாக இருந்தது. நல்லவைகளை எங்கும் காணலாம் என்பதில் முடித்ததற்கு உத்ராவிற்கு மேலும் பாராட்டுக்கள். “சீனாவின் அடக்கு முறைகளை நாம் ஏற்க வேண்டாம். அவர்களின் அலுப்பில்லாத உழைப்பை புரிந்து கொள்வோம்.”
மிக்க நன்றி, சார்
Migavum arumaiyana katurai.Avargal migavum nattupatru udayavargal
(மிகவும் அருமையான கட்டுரை. அவர்கள் மிகவும் நாட்டுப்பற்று உடையவர்கள்.)
Thanks a lot,Sir
மிக்க நன்றி சார்