மிளகு அத்தியாயம் முப்பத்தேழு

ஹொன்னாவர் 1604

நேமிநாதன் இருந்தபடிக்கே வணக்கம் சொன்னான். போன வாரம் ஆவிகளோடு பேச வந்த இரண்டு போர்த்துகீசியர்களும் வணக்கம் என்று இருகை கூப்பி நின்றிருந்தார்கள். 

”இவர் ஜோஸ் கார்லோஸ். லிஸ்பனில் வர்த்தகர்”. ரோகிணி அறிமுகப்படுத்தும் நேசமான குரலில் சொன்னாள். நேமிநாதன் ஜோஸ் கார்லோஸை ஒரு கீற்றுப்  புன்னகையால் வரவேற்றான். 

”இவர் தோமஸ் அகஸ்டின்ஹோ.   குடும்பத் தொழிலைக் கவனிக்கிறார்” என்றாள் ரோகிணி. கொஞ்சம் அலட்சியத்தோடு தலையாட்டுகிறான் நேமி.

நேமிநாதன் ரோகிணியை மங்கிய அறை வெளிச்சத்தில் ரசிக்கிறான். போர்ச்சுகீஸ், இங்க்லீஷ், பிரஞ்ச், கிரேக்கக் கலவையான அழகுத் தேவதை அவள். வனப்பின் ஐரோப்பியத் தன்மை மேலெழுந்து சூழ்ந்திருக்க மெல்லிய ஒப்பனை புனைந்திருக்கிறாள். ஐரோப்பிய பாவாடையும், நெஞ்சைக் கவ்வும் மேல்சட்டையும், மின்னும் காலணிகளும் அணிந்த தேவதைக்கு எந்த நிமிடமும் இறகு முளைத்துப் பறந்து போய்விடக் கூடும் . 

நேமிநாதன் இரண்டு துரைகளையும் உற்று நோக்குகிறான். பளபளப்பான கால்சராயும், அதே பளபளப்பில் பொத்தான் வைத்த மேல் குப்பாயமுமாக மெல்லிய உதடுகளும் சொத்தைப் பல்லுமாக வெள்ளைத்தோல் துரைகள்.

 துரைகள் என்பதால் நேமிநாதன் மதிக்கிறான். ரதவீதி கடைக்காரர்கள் போல் லிஸ்பன் நகரச் சிறு வியாபாரிகள். அவ்வளவுதான் அசல் மதிப்பு. 

சக்கரத்தில் கழுத்தை நுழைத்த மாதிரி கழுத்தில் பாதி வளைந்த கழுத்துப் பட்டி அணிந்திருக்கிறார்கள் இருவரும். நேமிநாதன் வயது தான் இருப்பார்கள். எல்லா நாட்டுக்காரர்களும் செய்வது போல் ரோகிணியையும். கஸாண்ட்ராவையும் பார்த்துக் கண்ணில் ஜாக்கிரதையாக மறைக்கப்பட்ட காமத்தோடு நெருங்கி இழைந்து அபத்தமான பேச்சுக்கெல்லாம் சிரித்து, வாய்ப்பு கிடைக்குமா என்று முயங்கக் காத்திருக்கிறார்கள். 

அவ்வளவு சீக்கிரம் நேமிநாதன் ரோகிணியை விட்டுக் கொடுத்து விடுவானா? பெத்ரோ தான் கஸாண்ட்ராவை கைநழுவி, தற்சமயத்துக்கு மட்டும் என்றாலும் கொடுத்து விடுவாரா? என்றாலும் வர்த்தகம் பேசப்பட வேண்டும். பேச அமர்ந்திருக்கிறார்கள்.

பெத்ரோ துரை கிறிஸ்துமஸுக்காக ஒரு வாரம் முன்பு மனைவி வீட்டுக்கு கோழிக்கோட்டுக்குப் பயணம் வைத்திருக்கிறார். போன வாரமே போனவர் அடுத்த வாரம் திரும்புவார் என்பதால் அவர் வீட்டில் நடமாட்டம் வேலைக்காரர்கள் மட்டும், அதுவும் சில அறைகளுக்குள் மட்டும். எனவே குரல் ஒரேயடியாகத் தாழ்த்திப் பேச வேண்டியதில்லை என்கிறாள் ரோகிணி. சரிதான் என்று தலையசைக்கிறார் அகஸ்டினோ.

“போன வாரமே இந்தச் சந்திப்பை நடத்தியிருக்க வேண்டியது. ஆவிகளோடு பேசி முடித்து மற்றவர்களை அனுப்பி வைத்துவிட்டு நாம் மட்டும் பேசியிருக்க திட்டமிட்டது. கவுடின்ஹோ பிரபுவின் சற்று மனம் பிறழ்ந்த செயல்களால் ஆவிகளே கலைந்து போக வைத்து விட்டார்கள். இவர்களும் போன வாரம் வழி தெரியாமல் சுற்றி, வந்து சேர தாமதமாகி விட்டது”. 

நேமிநாதன் போன வாரம் நடந்த ஆவியோடு பேசும் கூட்டம் பற்றி நினைத்ததும் சிரிக்கத் தொடங்கிவிட்டான். இல்லாத ஊருக்குப் போக வழி கேட்ட இனிப்பு அங்காடி மடையரோடு அந்த ஆவியழைப்பின் அபத்தம் தொடங்கியது. 

வந்த ஆவிகளோ துராத்மாக்கள் என்பதால் கோழியைப் படை, ஆட்டை அடித்துக் கொடு என்பவையோடு அசிங்கியமான சில கட்டளைகளும் இருந்தன. நேமிநாதனால் இன்னும்  மறக்க முடியாத, ஒரு ஆவி வாய் உபச்சாரம் கேட்டது அதிலொன்று. 

மடையரிடம் ஜயவிஜயீபவ நூறு கட்டி இனிப்பும் வாய் உபச்சாரமும் கேட்ட ஆவி கெட்ட வார்த்தைகளை தமிழிலும் சரளமாகக் கொட்டியது நேமிநாதனுக்கு இன்னும் சிரிப்பை வரவழைப்பது.

 அந்த மடையனை வெளியே தள்ளியது ரோகிணி தான். அவன் தான் நேமிநாதனும் ரோகிணியும் அந்தரங்கமாக இருந்தபோது வந்து பார்த்துப் போன பைத்தியக்காரன். 

அந்த மடையன் அப்படி என்றால், கஸாண்ட்ராவுக்கும் எனக்கும் எப்போது பிள்ளை பிறக்கும் என்று கவுடின்ஹோ பிரபு கேட்டது அபத்தத்தின் உச்சம். இது பகடி என்றால் ஆவி என்ன, மனுஷருக்கே கோபம் வரும். 

”உன் வீட்டு பெண்நாயை நீ கலக்க, இன்னும் எட்டு மாதத்தில் உனக்கு வயிற்றில் கருத்தங்கி உன் குறி வழியாகப் பிரசவமாகும்”   என்று சத்தம் போட்டது, பத்து வருஷம் முன்பு கவுடின்ஹோ மாளிகையில் குசினிக்காரனாக இருந்தவனின் ஆவி.   

அந்த ஆவி கவுடின்ஹோ மேல் வந்ததால் அவர் கொங்கணியில் சத்தமிட்டபடி அங்கும் இங்கும் ஓடியதும், இனிப்புகளை எடுத்து வந்து ஆவிக்கு புசிக்கக் கொடுக்கிறேன் என்று கிருஷ்ணப்பாவுக்கு வாயில் திணித்ததும், அதிமேகம் என்ற சர்க்கரை வியாதிஸ்தனான அவன் இனிப்பு பெயரைச் சொன்னாலே தலை சுற்றிக் கீழே விழுந்து விடுவான் என்றிருக்க, ஜபர்தஸ்தியாகப் புகட்டி விழுங்க வைத்த கால் மணங்கு சகல தித்திப்புமாக வயிற்றில் இருந்து தொண்டைக்குழி வரை தேங்கியிருந்து கார்வார் செய்திட வெளியே சாடியதும் என்று நேமிநாதன் சிரிக்க நினைவு படுத்தி மற்றவர்களும் சிரித்து மாளவில்லை. 

பெரும்பாலும் ரதவீதி கடைக்காரர்கள் வியாபாரம் முடிந்து காசு விவரம் சரிபார்த்து கடை எடுத்து வைத்துவிட்டு, ரோகிணி பக்கத்தில் இருந்து அந்த எள்ளுப்பூ நாசியையும், துடித்த உதடுகளையும், வலிய ஸ்தனங்களையும் பார்வையிட சந்தர்ப்பம் என்று ஆவி பயம் இருந்தாலும் அதை அப்பால் வைத்து வந்தவர்கள் தான். அத்தனை பேரும் ஒரே நேரத்தில் ஓவென்று அலறி ஓடிப் போனது நேமிநாதனால் மறக்க முடியாத நகைச்சுவை. 

ஆவியழைப்புக் கூட்டங்களில் ரதவீதி மற்றும் ஹொன்னாவர் ராஜவீதி, கடைவீதி வர்த்தகர்களைத் தொடர்ந்து பங்குபெற வைத்து அவர்கள் மூலம் நேமிநாதனை மிளகு ராஜாவாக்க முதல் ஆதரவு தேடத்தான் திட்டம். அது ஏனோ சிரிப்புக்கிடமாகப் போய்விட்டது.

”ஒரு கறுப்பு மந்திரவாதி இருந்தாரே. அவர் எங்கே?” நேமிநாதன் கேட்டான். 

”அவர் போன வாரம் மிட்டாய்க்கடை இனிப்பு கண்டமேனிக்குத் தின்னு வயிறு கலவரப் படுத்தி ஓய்வு எடுத்திட்டிருக்கார். சாம்பா திக்கினின்னு பெயர். ஊடு மந்திரவாதி. ஆப்பிரிக்காவிலே ரொம்ப புகழ் பெற்றவர்” என்றாள் ரோகிணி கண்கள் குறும்பாக பார்க்க.

”அப்படி என்ன விசேஷம்?” நேமிநாதன் அதே குறும்போடு கேட்டான்.

ஓட்ட ஓட்டமாக அவன் பக்கத்தில் வந்து காதில் ரகசியம் சொன்னாள் ரோகிணி – “அடுத்தவன் பெண்டாட்டியோடு கள்ளத் தொடர்பு வச்சு ரமிச்சுக் கிடக்கறவனைப் பிடிக்க புருஷன்காரன் மந்திரவாதி கிட்டே சொல்வான். அவனும் மந்திரம் போட்டு உள்ளே போனது வெளியே வரவே முடியாமல் உள்ளேயே பிடிச்சு வச்சுடுவான்”.

நேமிநாதன் அடக்க முடியாமல் சிரித்தபடி அவள் காதில் சொன்னான் – “நான் உன்னோட பேச வந்தா திரும்பப் போகமுடியாது. கஷ்டம் தான். நான் கவலைப்பட மாட்டேன். எதுக்கு வெளியே வரணும்?”

சீய்ய்ய் என்று நாணம் அபிநயித்தபடி ரோகிணி அவனிடமிருந்து அகன்றாள். 

”இந்தக் கூட்டத்துக்கு ஆப்பிரிக்க மந்திரவாதி வர வேண்டியதில்லைன்னு வச்சிருக்கு. நேமிநாதன் மகாராஜா அவரை இன்னார்னு அறிந்தால் போதும். மகாராஜா அளவில் பேசிப் பழக வேண்டியவர் இல்லை. மகாராஜா துரைகளுக்குக் கட்டளை இட்டால் அவர்கள் சாம்பாவைக் கொண்டு செய்விப்பார்கள். இதுதான் தொழில்முறை தொடர்பு”.

ரோகிணி சொல்லி நிறுத்த, அவள் மூன்று தடவை மகாராஜா என்று தன்னை விளித்ததில் வியப்படைந்து இருந்தான் நேமிநாதன். அவன் பார்த்திருக்க, வந்திருந்த போர்ச்சுகீசிய துரைகள் இருவரும் போர்ச்சுகீசு மொழியில் புகழ் சொல்லி வாழ்த்தி எழுந்து பணிவோடு நின்றார்கள். இது என்ன அதிசயம்? 

கூட்டமாகப் பேச ஆரம்பிக்கும்போது ராஜகுமாரன் நேமிநாதன் என்று பத்தோடு பதினொன்றாக இருந்தவன் பத்து நிமிஷத்தில் மகாராஜா ஆன மாயம் என்ன?

ரோகிணி மாடிப்படிப் பக்கம் பார்க்க யாரோ நின்றிருந்தது தெரிந்தது நேமிநாதனுக்கு. அந்தப் பைத்தியம் பிடித்த வர்ணக் கோமாளியாக இருக்கக் கூடும் என்று தோன்ற வினாடியில் தோன்றிய சினத்தோடு அவனை அடித்துத் தள்ள நேமிநாதன் மாடிப்படிப் பக்கம் பாய்ந்தான். வந்தவன் ரமணதிலகன். உதவி மடையன். ஒரு தட்டு நிறைய புத்தம்புது மோதிசூர் லட்டுருண்டைகளைத்  தாங்கி நின்றிருந்தான்,

“ரமணா, கொடு” என்று ரோகிணி தட்டை வாங்கிக்கொண்டு உள்ளே வந்து “இப்போது நல்ல வேளை” என்றாள். மாடிப்படியேறி யாரோ வந்து கதவுக்குப்  பக்கம் காத்திருந்தார்கள். துளு பிராமணர் ஒருவர் கீழ்ப்படியில் நின்றிருந்தார்.

“ரோகிணி, மிலேச்ச நடமாட்டம் இருக்கு. நான் மேலே வரலே. இங்கே இருந்தே ஆசிர்வாதம் பண்ணிடறேன். அவரை முன்னால் வந்து நிக்கச் சொல்லு” என்று துளு பிராமணர் காத்திருக்க, ரோகிணி நேமிநாதனை மாடிப் படிக்கட்டின் முன்படியில் நிறுத்தினாள். 

ஐந்து நிமிடம் துளு பிராமணர் ஆசிர்வாதம் இரைந்து சொல்லி வாழ்த்தி, “இப்போ ரொம்ப நல்ல வேளை. எது தொடங்கினாலும் ஜெயம்” என்று கையில் கொண்டு வந்திருந்த மஞ்சள் புரட்டிய அட்சதையை நேமி மேல் இட்டார். 

அவருக்கு தகுந்த தன மரியாதை செய்து, மடியாகச் செய்த, தீட்டு படியாத லட்டு உருண்டைகளோடு அனுப்பி வைத்தாள் ரோகிணி. “தித்திப்புக்கு தோஷம் இல்லே” என்று லட்டுருண்டைகளை ரசனையோடு பார்த்துப் பத்திரமாகக் கைப்பையில் வைத்துப் படி இறங்கினார் துளுவர். ரோகிணியும், நேமிநாதனும் உள்ளே வர, அகஸ்டின்ஹோ பேச ஆரம்பித்தார்.

“மஹாராஜா தங்களுக்கு இன்று நாள் முழுக்க நல்ல நாள் என்று படிக சாஸ்திரப்படியும் இந்திய ஜோதிடப்படியும் கணிக்கப்பட்டிருப்பதால், தங்களை அரசராக்க நாங்கள் பணி தொடங்குகிறோம்” என்றார் அவர்.

நேமிநாதன் கண்ணில் பயம் தெரிய எழுந்து நின்றான். ரோகிணி அவன் அருகில் வந்து கையைப் பற்றி அமர வைத்து மரியாதையாகச் சொன்னாள் – ”மகாராஜா இந்த வினாடி இனி வராது. உங்களை அரசராக நிர்ணயம் செய்துகொண்ட முந்தைய நொடியும் இனி இல்லை. ஜெயவிஜயிபவ”. 

”ராஜா, நாங்கள் யாரென்று உங்களுக்கு ரோகிணி சொன்னாளா?” அகஸ்டின்ஹோ நேமிநாதனைக் கேட்டார். இல்லை என்று தலையசைத்தான் அவன். ஊர் சுற்றிப் பார்க்க லிஸ்பனில் இருந்து வந்திருக்கும் வர்த்தகர்கள். அது மட்டும் தெரியும்.

கார்லோஸ் சிரித்தார். 

”வாயில் கட்டை விரலைப் போட்டுக்கொண்டு ஊர் உலகம் தெரியாமல் சுற்றும் முதிய சிறுவர்கள் என்றோ, ஆவிகளோடு இழைவதை உயிர்மூச்சாக உலகமெங்கும் பரப்ப முற்பட்ட மத்திய வயசுக் கிழவர்கள்  என்றோ எங்களைப் பற்றி மாண்பு மிக்க மகாராஜா சமூகத்துக்குத் தோன்றினால், அடாடா, அடாடா, என்ன சொல்ல”. 

அவர் ரோகிணியைப் பார்க்க அவள் சொல்கிறாள் –

”ஜோஸ் கார்லோஸ். லிஸ்பனில் வைர வர்த்தகர். ஸ்பெயின் தேசத் தலைநகரமான மாட்ரிடில் மிகப் பெரிய தங்க, வைர, மாணிக்க நகைகள் விற்பனைக்கு வைக்கும் நான்கு தலைமுறை நவரத்தின வியாபாரக் குடும்பம் இவருடையது. லண்டனிலும் இவர் குடும்பம் நகை வணிகர்கள். உலகிலேயே சிறந்த நறுமண தைலங்களையும் பென்னாலிகன் என்ற பெயரில் கமகமவென்று மணக்க விற்பனை செய்கிறது”.

”அகஸ்டின்ஹோ. நான்கு தலைமுறையாகக் கப்பல் கட்டுவது குடும்பத் தொழில். கப்பலை உடைப்பதும் தான்” என்கிறாள் ரோகிணி. 

கப்பல் கட்டுவானேன், அப்புறம் உடைப்பானேன் என்று நேமிநாதன் நியாயமான சந்தேகத்தைக் கேட்கிறான். ரோகிணி சிரித்தபடியே அதை நேர்த்தியான உச்சரிப்பில் அகஸ்டின்ஹோவிடம் போர்ச்சுகீஸ் மொழியில் சொல்கிறாள்.

”கட்டுவது புத்தம்புதுக் கப்பலை. உடைப்பது இனி உபயோகமே இல்லை என்கிற அளவு முப்பது நாற்பது வருடங்கள் கடலில் போய் வந்த பழம்பெரும் கப்பல்களை. மலிவு விலைக்கு வாங்கி உடைத்து இரும்பையும் மரத்தையும் உதிரியாக விற்றுப் பணம் பார்ப்பது பெரிய அளவு வியாபாரம்”. 

துரை சிரித்தபடி சொல்ல நேமிநாதனுக்கு ரோகிணி மூலம் கொங்கணியாக வருகிறது. கணிசமான பிரமிப்பு, நிறைய மதிப்பு, கொஞ்சம் குழப்பம் என்று நேமிநாதன் கலவையாக முகத்தில் உணர்ச்சி காட்டியபடி உட்கார்ந்திருக்கிறான்.

வாஸ்கோ ட காமா கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே? அகஸ்டின்ஹோ கேட்கிறார். நேமிநாதன் நினைத்துக் கொள்கிறான் – கேள்விப்படாமல் என்ன? போர்த்துகீசியர்கள் எல்லோரும் அனுதினம் பூஜித்துத் திருப்பாதங்களைக் காலுறை கழட்டாமலேயே சிரசில் தாங்கி வணங்க வேண்டிய மகாநுபாவர் அல்லவா? 

“நூறு வருடம் முன்பு போர்ச்சுகல்லில் இருந்து இந்தியாவுக்கு, ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை சுற்றி விரைவாக வந்து சேரப் பாதை கண்டவர் அவரன்றோ” என நேமிநாதன், புதிதாக புத்தபிக்கு ஆனவன் கௌதம புத்தரைப் பற்றித் துதித்துப் பரவுதல் போல் பரவசத்துடன் கேட்டான். ஆனால் போலிப் பரவசம் அது. 

”ஆமாம் மகாராஜா அவரே தான். வழி கண்டுபிடிக்க அவருடைய இந்தியப் பயணம் சில நண்பர்களால் நிதி உதவி கொடுத்து அதன் மூலம் நடத்தப்பட்டது. ட காமாவுக்கு நிதியுதவி செய்த ஐந்து பேர் கொண்ட அமைப்பில், அதை கார்ட்டல் என்று இங்கிலீஷில் சொல்வார்கள், மற்றவர்களும் அந்தச் சொல்லைக் கடன் வாங்கி விட்டோம், கார்ட்டல் வாஸ்கோ ட காமாவின் பயணத்துக்கு நிதி ஆதார உதவி அளித்தது என்று சொன்னேனே, அந்த ஐந்து பேரில் இரண்டு பேர் எங்கள் இருவரின் அண்மைக்கால முன் தலைமுறையில் வந்தவர்கள்”.  

”கேட்க மகிழ்ச்சியடைகிறேன். நேரம் இருக்கும்போது தொடரலாம்”. நேமிநாதன் எழ, ரோகிணி அவனைத் திரும்ப உட்கார வைக்கிறாள்.

”அந்தக் கார்டலின் .. நிதிக்குழுவின் அடுத்த அவதாரம் இப்போது லிஸ்பனில் உருவெடுத்திருக்கிறது. இந்தியாவில் இருந்து மிளகு, லவங்கம், ஏலம், கிராம்பு, ஜாதிக்காய் இப்படி வாசனை திரவியங்களை வாங்குவதற்காக அமைந்தது. அதன் முதல் செயல் நடவடிக்கை, மிளகு ராஜாவை அரியணை ஏற்றுவது.”

ரோகிணி விருந்தாளிகளுக்கும் நேமிநாதனுக்கும் லட்டுருண்டைகளை இலைத் தொன்னைகளில் வைத்து அளித்தாள். காலையிலே தானே தின்னேன் என்றான் நேமிநாதன். அது வேறே என்று பார்வையால் பதில் சொன்னாள் ரோகிணி.

“சென்ஹோர் கார்லோஸ், மிளகு ராணி தீர்க்காயுசாக நூறு வயதும் கடந்து சௌக்கியமாக இருப்பார்கள். நான் எங்கே ராஜாவாவது? இருக்கும் ராஜகுமாரன் பதவியை இன்னும் ஆயுசு இருக்கும் நேரம் வரை வகித்து விட்டுப் போய்ச் சேர வேண்டியதுதான்” என்றான் நேமிநாதன் உதிர்த்த லட்டை மென்றுகொண்டு.

 ”அது ஒரு வழிதான். ஆனால் வயதானவங்களை சற்றே ஓய்வெடுக்கச் சொல்லிட்டு அவங்க சார்பிலே ஆட்சியை நடத்தலாம். எவ்வளவு வருஷமா மிளகு விற்றுக்கிட்டு இருக்காங்க. கையே மிளகு மாதிரி கரடுமுரடா ஆகியிருக்குமே. கண்ணுக்குள்ளே மிளகுப்பொடி நிரந்தரமாத் தங்கி பார்வையோடு நெடியடிச்சு வந்து போய்க்கிட்டிருக்குமே” அகஸ்டின்ஹோ சொன்னதன் கடைசி வாக்கியம் புரியவில்லை நேமிநாதனுக்கு.  ரோகிணியை அப்புறம் கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

ஆக இந்த அகஸ்டின்ஹோ லிஸ்பனில் இருந்து புறப்பட்டு வந்தது கிழவிக்கு ஒரு அந்திம தினத்தை குறிக்க என்பதில் நேமிநாதனுக்கு ஒரு இனம் புரியாத ஆசுவாசம் தோன்றியது. 

“அதெல்லாம் சரி சென்ஹோர், அவங்க அவங்களுக்கு ஆயுள் ரேகை கையிலே திடமா இருந்தா, நூறும் இருப்பாங்க, நூற்று ஐம்பதும் இருப்பாங்க. ஆண்களை விட பெண்கள் இதில் அதிக சாதனை செய்தவங்க” என்றான் நேமிநாதன் ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக.

“சொல்லுங்க. நாளைக்கே யாரையாவது அனுப்பி வைக்கணுமா? சாம்பா கவனிச்சுப்பான். அவன் தொடக்கூட மாட்டான். போன மாதம் கோழிக்கோட்டுலே சாமுத்ரிக்கு ரொம்ப வேண்டிய ஒரு தரவாட்டு நாயர் அதிக ஜுரத்திலே மரிச்சாரே. அது எப்படி ஆச்சு?” கார்லோஸ் கேட்டான்.

எப்படி ஆச்சு என்று நேமிநாதன் சற்று ஆர்வம் அதிகமாகக் கண்ணில் தெரியக் கேட்டான். 

“நாயர், கோவிலுக்குப் போய்விட்டு வந்துட்டிருந்தார். தெருவிலே சீனத்து சீலைக்குடையை கக்கத்திலே இடுக்கிட்டு சாம்பா எதிர்த்தாப்பலே போனான். நாயரை நிறுத்தி குளத்துக்கு எப்படி போறதுன்ன்னு கேட்கும்போது குடைக்கம்பி நுனி நாயர் கையிலே கொஞ்சம் அழுத்தமாகப் பட்டு ரொம்ப சின்னதாக ஒரு ரத்தக் கீற்று. அது வழியா நாயருக்கு ரோகம் உடம்புலே கொண்டு போயாச்சு”.

நேமிநாதனுக்கு மனதில் பயம் எட்டிப் பார்த்தது. வந்திருக்கிறவர்கள் என்ன மாதிரியான ஆட்கள்? அவனுக்கு சில காலம் முன்பு சென்னபைரதேவி மகாராணியின் படுக்கை அறைக்கு வெளியே நடுராத்திரி அவள் கேட்டதாகச் சொல்லிய அமானுஷக் காலடிச் சத்தம் நினைவு வந்தது. மந்திரவாதம் செய்ய யாராவது முயன்றார்களா? இவர்களா அப்படி முயன்றிருக்கக் கூடியவர்கள்? ஒன்றும் புரியவில்லை.

”மகாராஜா”. 

கார்லோஸ் அழைத்தது தன்னைத்தான் என நேமிநாதன் அறிவான். பழகிவிட்டது அந்த அழைப்பு. வேண்டியும் இருந்தது.

அகஸ்டின்ஹோ தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொன்னார் – ”எவ்வளவு ஆனாலும் சரி கார்டெல் செலவு பண்ணும். ராஜகுமாரர் ராஜா ஆகணும். ஆன பிறகு உங்களுக்கும் எங்களுக்கும் மட்டும் மிளகு வர்த்தகம். ஒவ்வொரு கொள்முதலுக்கும் அரை சதவிகிதம் ராஜாவுக்கு அன்பளிப்புப் பணம். கூடவே லிஸ்பன்லே ஒரு மாளிகை. ராஜா, ராஜ போகத்தோடு தான் இருக்கணும். இதைவிட இன்னும் பத்து மடங்கு அதிக போகம்”.

நேமிநாதனைப் பார்த்து விஷமமாகக் கண்ணால் சிரித்தாள் ரோகிணி. இது எழுதிக் கையெழுத்தெல்லாம் போட முடியாது என்கிறான் நேமிநாதன். 

”வேண்டவே வேண்டாம், கனவான்களுக்குள் ஏற்படும் ஒப்பந்தம். நாங்கள் பணம் கொண்டு வருவோம். நீங்கள் மிளகு கொண்டு வருவீர்கள். இரண்டு பேருக்கும் ஜெயம் ஜெயம்”.

”நான் மிளகு கொண்டு வராவிட்டாலோ?” 

நேமிநாதன் அகஸ்டின்ஹோவை நோக்கி ஒரு பகுதி புன்சிரிப்போடு கேட்டான்.

”குடைக்கம்பி நுனி வேறு பக்கமும் திரும்புமே?” 

அதிகச் சிரிப்போடு அகஸ்டின்ஹோ சொல்ல ஒரு வினாடி மௌனம் தீர்க்கமாக நிலவியது. அடுத்த சிரிப்பை நேமிநாதன் ஆரம்பித்து வைத்தான். அவன் குரல் சற்று நடுங்கியது.

”இதை எல்லாம் ஜனங்கள் ஏற்றுக்கொள்ள வேணாமா?” 

கார்லோஸைக் கேட்டான் நேமி. 

”விலை கொஞ்சம் குறைவுன்னாலும் கூடுதல் மிளகு ஏற்றுமதி. அதை அனுப்ப தயார்ப்படுத்த அதிக பேருக்கு வேலை. பயிரிட்டு அறுவடை செய்ய அதிகப் பேருக்கு வேலை. எல்லா வாசனை திரவியங்களுக்கும் இப்படி அதிகப் பேருக்கு வேலை. வெடியுப்பு தயார் செய்ய, அனுப்ப அதேபடி. துணி நெய்ய, சாயம் தோய்க்க, சீராக்கி லிஸ்பன் அனுப்ப அதிகப் பேருக்கு வேலை. அதிகம் வேலை. அதிகம் பணப் புழக்கம். அதிகம் பணம் செலவழிக்க. சேமிக்க. நகை வாங்க. யார் வேணாம்னு சொல்லப் போறாங்க மகாராஜா?”

“விஜயநகருக்குத் தெரிய வந்தாலோ?” நேமிநாதன் இப்போதைக்கு சந்தேகத்தைத் தெரிவித்தான். 

“விஜயநகர் சாம்ராஜ்ஜியம் பல் பிடுங்கப்பட்ட பாம்பு. சுற்றிச் சூழ்ந்து சுல்தான்கள் செயல்பட முடியாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அரச வம்சத்திலேயே யார் ஆளவேண்டும் என்று மோதல், சச்சரவு”. 

ரோகிணி மிட்டாய்க்கடைக்காரியாக இல்லை, தேர்ந்த அரசியல் நிபுணியாகத் தெளிவாகப் பேசினாள். 

”ஓஸி டிஸி இஸ்ஸோ“ – நன்று கூறினீர்-  போர்த்துகீஸ் மொழியில் ஸ்பஷ்டமாகச் சொன்னான் நேமிநாதன். தனக்கும் போர்த்துகீஸ் மொழி தெரியும் என்று சொல்லாமல் சொல்லி ராஜ நடை நடந்து வாசலுக்குப் போனான். அவை கலைந்தது.

Series Navigation<< மிளகு அத்தியாயம் முப்பத்தாறுமிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.