பெருங்கரடி: கிரெக் பேர் பற்றிய நினைவுகள்

தமிழாக்கம்: சிஜோ

கிரெக் பேரை நான் முதன் முதலில் எப்போது சந்தித்தேன் என்று நினைவில்லை, ஆனால் எங்கள் ஆரம்பகால சந்திப்புகளில் ஒன்று இருபது ஆண்டுகளுக்கு முன், மெதினா நகரிலிருந்த ஒரு கோடீஸ்வரரின் அடக்கமான ஆனால் உச்ச நிலை தொழில் நுட்பம் கொண்டிருந்த வீட்டில் (இதற்கான பாராட்டுகள் அவர் மனைவிக்கே சேரும்) நேர்ந்தது. (அந்தக் கோடீஸ்வரரின் பெயர் இங்கு தேவையில்லை.) கிரெக்கும் நானும் புத்தகங்களைப் பற்றி உரையாடினோம். 

எனக்கு அப்போது புத்தகங்களை வகைப்படுத்துவதன் மீதான பித்து அதிகம் இருந்ததால், எழுத்தாளர்களைப் பற்றிப் பேச்சு திரும்பிய போது, ஹென்றி ஜேம்ஸின் எழுத்தின் மீதான காதலைப் பற்றிக் குறிப்பிட்டேன். அறிவியல் புனைவுக்கு புறம்பான ஒரு தலைப்பை எடுத்து அவரைத் தடுமாற வைப்பதே என் எண்ணமாக இருந்தது. ஹா! அவர் அறிவார்த்தத்தோடும் நளினமாகவும், ஜேம்ஸைப் பற்றி விருந்துகளில் பரிமாறிக் கொள்ளத்தக்க, எளிமையானதொரு உரையைத் தொடங்கிய போது நான் அதிர்ச்சியாகவும், சற்றே சிறியவளாகவும் ஒரே நேரத்தில் உணர்ந்தேன். அந்த உரையில் அவருக்கு ஜேம்ஸைப் பற்றித் தெரிந்த அல்லது சொல்ல விரும்பிய அனைத்தும் இருக்கவில்லை, ஆனால் என்னை அடுத்த அரை மணி நேரத்துக்கு எனக்கு சவால் விடுவதாகவும், கட்டிப் போடவும் போதுமானதாக இருந்தது.

கிரெக்கைப் பற்றி அதிகம் அறியும் தோறும், அவருக்குப் பல விஷயங்களைப் பற்றிய பரந்துபட்ட அறிவு உண்டு என்பது தெளிவாகியது. ஆனால் அவர் அதை மிக அரிதாகவே வெளிப்படுத்தினார். அவர் தன்னைப் பற்றிப் பேசுவதை விட மற்றவர்களை உரையாடலுக்குள் கொண்டு வருவதற்கே எப்போதும் நாட்டம் கொண்டிருந்தார். நாமாகக் கேட்டாலொழிய, அவருக்கு எவ்வளவு தெரியும் என்று காட்டிக் கொள்வதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை.  ஆண்மேட்டிமை சார்ந்த ஒரு விளக்கவுரைக்கும், ஓர் அறிவார்ந்த விளக்கவுரைக்கும் உள்ள வேறுபாடு, முன்னது கேட்காமலே கொடுக்கப்படும் என்பதே. தானாகத் தொடங்கும் பிரசங்கம் அது. கிரெக் பெரும்பாலும் அவரிடம் கேட்கப்படும் வரை காத்திருப்பார். அதன் பின் மிக மகிழ்ச்சியாக அவர் பேச்சைத் தொடங்கும் போது, ஒரு சொகுசான இருக்கையில் அமர்ந்து அந்த பேச்சருவி உங்களை மூழ்கடிப்பதை இரசிப்பது நல்லது. கிரெக் முற்றறிந்த ஞானி அல்ல, ஆனால் பல்கலை வித்தகர்.

அவர் அடக்கமும், வசீகரமும், நகைச்சுவை உணர்வும், தாராள மனமும், அன்பும் உடையவரும் கூட. அன்று நான் சற்றும் சகிக்கமுடியாதவளாக நடந்துகொண்டபோதும், அவர் ஹென்றி ஜேம்ஸ் பற்றி எனக்கு வகுப்பெடுத்த போது, மேற்சொன்ன பண்புகளில் கடைசி இரண்டை எனக்குக் காட்டிக் கொடுத்தார் என்று ஊகிக்கிறேன். அவர் மரபுவழியில் நாகரிகமானவர் போல, ஆனால் பாசாங்கில்லாத பண்புடன் என்னை நடத்தியது இன்றைய காலத்தில் தவறாக, மேட்டிமைத்தனமாகப் பார்க்கப்படக் கூடும் என்றாலும், நான் அதை அருமையானதாகவே பார்த்தேன். நவீன உலகில் இத்தகைய திறனைக் கையாள்வது கடினமானது, ஆனால் கிரெக்கிற்கு அது முடிந்தது. வேறொருவர் சொன்ன ஏதோ அவரை இன்புறச் செய்தால், மிக எளிதாகவும் அதே நேரத்தில் உள்ளார்ந்த மகிழ்ச்சியுடனும் சிரிப்பார். தன்னைப்  போலவே புத்திசாலியாகவும், சுவாரஸ்யமாகவும் இருப்பவர்களாக மற்றவர்களையும் உணர வைக்கும் இயல்பான திறன் அவருக்கிருந்தது. 

 ஆக்டேவியா பட்லருக்கே அவரைப் பிடித்திருந்தது. நான் என்ன சொல்ல?

எந்த இலக்கிய வகைமையிலும் உள்ளது போலவே, அறிவியல் புனைவிலும் ஏகப்பட்ட போலிகள் உண்டு. ஆனால் கிரெக் போலி அல்ல. அவர் சாதனைகள் பல புரிந்த, தலைசிறந்த ஓர் எழுத்தாளர். மனித இயல்பைப் பற்றிய அவரது புரிதல் அவரது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் போலவே ஆழமானதும் நவீனமானதுமாக இருந்தது. சிறப்பான பெண் கதாபாத்திரங்களை உருவாக்குவது என்பது, அறிவியல் புனைவு எழுதும் சமகால ஆண் எழுத்தாளர்களிடம் காட்டுத்தீ போல பரவாத ஒரு திறன். ஆனால் அவர் சிறந்த பெண் கதாபாத்திரங்களை தனது படைப்புகளில் உருவாக்கினார்.

கிரெக்கின் அந்தத் திறமைக்குக் காரணம், வசீகரமும், நுண்ணறிவும், பாரிய புத்திசாலித்தனமும் கொண்ட ஆஸ்டிரிட் ஆண்டர்ஸன் பேர் எனும் பெண்ணுடனான அவரது நாற்பது வருட தாம்பத்தியத்தையே குறிப்பிடுவேன்.  ஆஸ்டிரிடுன் அவ்வளவு காலம் வாழ்ந்த ஒருவரால் பெண்கள் பிரபஞ்சத்தில் ஒரு பெரும் சக்தி என்பதை உணராமல் இருக்க முடியாது. கிரெக்கின் சாம்பலைக் கொண்டிருந்த ஒரு பெட்டி தனது காரின் முன்னிருக்கையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை அவர் சமீபத்தில் முகநூலில் பகிர்ந்தார். அந்த புகைப்படத்துக்கான அவரது குறிப்பு  ‘எக்காலத்திலும் மிக்க அமைதியான பயணி’ என்றிருந்தது. சோகமும் நகைச்சுவையும் மிகச்சரியாக கலந்த அந்தக் குறிப்பைக் கண்டு கிரெக் குதூகலத்துடன் சிரிப்பது எனக்குக் கேட்கிறது.

அவரைப் பற்றிய மிகச் சிறந்த நினைவுகளில் ஒன்று மைக்கேல் கிரிக்டனின் ‘Prey’என்ற நாவலுக்கு நியூ யோர்க்கர் இதழில் (டிசம்பர் 2, 2002) ஆலிவர் மார்டன் எழுதிய குதர்க்கமான (ஆனால் நேர்மையான) விமர்சனத்தை வாசித்த சில நாட்களுக்குப் பின் நிகழ்ந்தது. சாதுர்யமாகச் சொல்வதெனில், அப்புத்தகம் மார்டனுக்கு ஒரு மயிர்கூச்செரியச் செய்யவில்லை. கடைசிக்கு முந்தைய பத்தியில் அவர் இவ்வாறு எழுதியிருந்தார்: ” ‘எல்லாவற்றையும் கொன்று தப்பிக்கும்’ அணுகுமுறையுடன் எழுதப்பட்ட ‘Prey‘ இருபது வருடங்களுக்கு முன் கிரெக் பேர் எழுதிய ‘Blood Music’ என்ற குறுநாவலைப் போல் பயமுறுத்துவதாகவோ, பரவசப்படுத்துவதாகவோ இல்லை. ‘Blood Music’ நாவலின் கதாபாத்திரங்கள், அவர்களுக்குள் இருந்த நானோ தொழில்நுட்பத்தால் ஒரே சமயத்தில் மிக அதிகமாகவும், மிகக் குறைவாகவும் மனிதத்தன்மை கொண்டவர்களாக மாற்றப்படுகிறார்கள்.”

சில நாட்களுக்குப் பின், சக நண்பர்களுடனான வழக்கமான ஒரு ஞாயிறு இரவு விருந்தில், மிகுந்த திருப்தியுடன் நான் கிரெக்கிடம் இவ்வாறு அறிவித்தேன்: ”மைக்கேல் கிரிக்டனின் புதிய புத்தகத்தைப் பற்றிய ஓலிவர் மார்டனின் விமர்சனத்தின் முடிவில் உங்களுக்கு ஒரு பெரிய ஊக்கம் கிடைத்துள்ளது. உங்கள் இருவரையும் ஒப்பிட்டு அவர் எழுதி இருந்தார். நீங்கள் தான் முன்னிலை என்பதைச் சொல்லத் தேவையில்லை.”

முதலில் அவர் சிரித்தார், பின் புன்னகைத்தார், கடைசியில் சொன்னார் “கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் கிரிக்டனுக்கு கிடைக்கும் ராயல்டி காசோலைகளில் ஒன்றே ஒன்றுக்கு ஈடாக எனக்குக் கிடைக்கும் எல்லா நல்ல மதிப்புரைகளையும் மகிழ்ச்சியோடு கொடுத்து விடுவேன்.”

அது தான் கிரெக்: தன்னை முன்னிறுத்தாதவர், விவேகமானவர், நறுக்குத் தெரிக்கும் பதில்களை உடனடியாகக் கொடுப்பதில் விற்பன்னர்.

இதுவரை தெளிவாகவில்லையெனில், இப்போது தெளிவுபடுத்தி விடுகிறேன்: ‘Blood Music’ பற்றிய மார்டனின் மதிப்பீட்டுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். இதுவரை நீங்கள் அதை வாசிக்கவில்லையெனில் கண்டிப்பாக வாசித்துப் பாருங்கள். தான் அதுவரை செய்து வந்த நானோ-தொழில்நுட்பம் சார்ந்த உயிரியல் பரிசோதனையை முதலாளிகள் நிறுத்த ஆணையிட, அதை தனக்குள்ளேயே ஊசிமூலம் செலுத்தி ஆய்வகத்திலிருந்து கடத்தி, தனியாக தன் ஆய்வைத் தொடர முயற்சிக்கும் ஒரு விஞ்ஞானிக்கு பிறகு என்ன நிகழ்கிறது என்று நன்றாக எழுதப்பட்ட அசலான புத்திசாலித்தனமான கற்பனை நிறைந்த ஒரு திகில் கதை அது. விஞ்ஞானியின் அந்த முடிவின் பின்விளைவுகள் நீங்கள் கற்பனை செய்யக் கூடுவதை விட அதிரடியாகவும், மனதைக் கவரும் வகையிலும் இருக்கும், ஆனால் கிரெக் அதை எல்லாம் உண்மையாகவும் நம்பத்தகுந்ததாகவும் உருவாக்கியிருப்பார்.  அந்த நூலுக்கு அடிப்படையான மூலக்கதை 1983-ஆம் ஆண்டுக்கான சிறந்த குறுநாவலுக்கான நெபுலா விருதையும், அதற்கு அடுத்த வருடம் அதே பிரிவில் ‘ஹ்யூகோ’ விருதையும் அவருக்குப் பெற்றுத் தந்தது. ஆக மொத்தம், கிரெக் ஐந்து நெபுலா விருதுகளையும், மூன்று ஹ்யூகோ விருதுகளையும் வென்றுள்ளார்.

கிரெக்குடன் ஒப்பிடப்பட்டு அவரை விடக் குறைவாக மதிப்பிடப்பட்ட எழுத்தாளர் கிரிக்டன் மட்டும் அல்ல. பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளரும், விமர்சகருமான டேவ் லாங்ஃபோர்ட் ‘Blood Music’ பற்றி இவ்வாறு எழுதினார்: “அதன் இறுதிப் பகுதி பிரமாதம். ஒரே பிரச்சினை என்னவென்றால், வேறொரு தொடக்கப்புள்ளியிலிருந்து விரிவாக்கி ஆர்தர் சி. கிளார்க் அவரது ‘Childhood’s End’ என்ற நூலில் எட்டிய முடிவுக்கு தொல்லை செய்யக் கூடிய விதத்தில் மிக அருகாமையில் இருக்கிறது என்பதே. ஆனால் பேர் கிளார்க்கை விட ஒரு படி மேலே சென்று நன்றாகச் செய்திருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. உறுதியாகப் பரிந்துரைக்கிறேன்.”

கிளார்க்கை விட மேல்! ஒரு கொழுத்த ராயல்டி காசோலைக்கு மாற்றத் தக்க ஒரு விமர்சனம் அது. கிரெக் அதற்குத் தகுதியானவரும் கூட. 

கிரெக், சேதமடைந்த ஒரு தமனியைச் சரியாக்கச் செய்த ஒரு அறுவை சிகிழ்ச்சைக்குப் பின் ஏற்பட்ட தொடர் பக்கவாதங்களின் விளைவாக நவம்பர் 19 அன்று மரணமடைந்தார். அந்த அறுவை சிகிச்சைக்குப் பின் அவருக்கு நினைவு திரும்பவேயில்லை. கிரெக் முன்கூட்டித் தந்திருந்த மருத்துவ அறிவுறுத்தல்களுக்கேற்ப, அவரை உயிர் காக்கும் கருவிகளிலிருந்து துண்டிக்கும் கடினமான முடிவை அவரது மருத்துவர்களும் குடும்பத்தினரும் எடுத்தனர். அவருக்கு வயது 71. அவர் பல சிறந்த படைப்புகளை உருவாக்கியவர், அவரிடம் இன்னும் ஏராளமான பெரிய படைப்புகள் எஞ்சியிருந்தன என்பதே அவரது மரணத்தை இன்னும் சோகமானாதாகவும், அகாலமாகவும் உணர வைக்கிறது.

ஆங்கில மூலம்: https://www.postalley.org/2022/12/18/ursa-major-remembering-greg-bear/

***

Kathleen Cain

கட்டுரையாளர் கேத்தி கெய்ன், தொலைக்காட்சிக்கும், வானொலிக்கும் முறையே ஆவணப்படங்களையும், உரையாடல் நிகழ்ச்சிகளையும் எழுதித் தயாரிப்பதில் தன் தொழில் வாழ்வைத் துவங்கினார். சியாட்டில் வீக்லி இதழுக்கு படைப்பளிக்கும் பதிப்பாசிரியராக இருந்தவர். ஹெக்லர் அசோசியேஷன் என்ற பிரபல அமைப்பில் எழுத்தாளராகவும், படைப்பு இயக்குநராகவும் பணியாற்றி விட்டு  கெய்ன் க்ரியேட்டிவ் என்ற நிறுவனத்தைத் தானே துவங்கி நடத்துகிறார்.

[பின் குறிப்பு: கிரெக் பேர் (Greg Bear) சமீபத்தில் மறைந்த அறிவியல் புனைவாளர். அமெரிக்க அறிவியல் புனைவுலகில் குறிப்பிடத் தக்க தாக்கம் பெற்றவர். பதின்ம வயதினருக்கும், வளர்ந்தவர்களுக்கும் ஏற்ற நாவல்கள் பல எழுதியவர். இவரது வாழ்க்கை பற்றிய விவரங்களுக்கு த கார்டியன் பத்திரிகை வெளியிட்ட ஒரு நினைவுக் குறிப்பைப் பார்க்கவும்: https://www.theguardian.com/books/2022/dec/29/greg-bear-obituary ]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.