
“ உனக்கு நல்ல வாசனையான கிராக்கி வந்திருக்கு , சீக்கிரம் போய் ஆக வேண்டியதை செய்,” என்று இரவு பணி முடித்த நாகப்பன் , வெளி வாசலிலே பொறுப்பை என்னிடம் கைமாற்றி கொடுத்து விட்டுசென்று விட்டான , நேரம் சரியாக ஏழு மணி ஆகி இருந்தது. வழி எங்கும் மஞ்சள் சரக்கொன்றை மலர் பூத்து குலுங்கியது. எந்த சூழ்நிலையில் இருந்தாலும் காலை வெயிலில் மஞ்சள் சரக்கொன்றை மலர் மினுங்குவதை பார்க்க மனம் இலகுவாகி விடும் . கொன்றை மலரை மிதிக்காமல் நடப்பது சுலபமாக இல்லை. நாகப்பன் சொன்னது தான் மனதை கொஞ்சம் குழப்பியது. உள் நுழைவதற்கு முன்பே அவன் சரியாகத்தான் சொல்லி இருக்கிறான் என்பதை உணர முடிந்தது. பிணவறையை நெருங்கும் போதே அழுகிய பிணத்தின்வாடை வயிற்றைக் குமட்டிக்கொண்டு வந்தது.
புழுக்கள் வரத் துவங்கிய நாளில் தான் இந்த பிணத்தை கண்டெடுத்து இருக்கிறார்கள். மரணத்தின் மேல் மரணமில்லாமல் தான் மட்டும் நீண்ட காலம் வாழப் போவது போல புழு கற்பனை செய்து கொள்ளுமோ என்னமோ ? மரணமின்மையின் குதூகலம் புழு நெளிவதில் தெரிந்தது. நெளிந்து வளைந்து உள்ளே சென்று வெளியே வந்து கொண்டிருந்தது இந்த புழு தான் பிண அறிக்கையில் முக்கிய அங்கம் வகிக்கப் போகிறது. ஆனாலும் அந்தப் புழுவைப் பார்த்த மாத்திரத்தில் மனம் குழப்பமடைந்தது.
வாழ்க்கை சுழலில் சிக்கி, மரணமடைவதை தன் வாழ்நாளில் ஆயிரம் முறை கண்டாலும் சராசரியான எல்லா அபத்தங்களையும் செய்து சுகமாக வாழ்வது போன்ற பிரம்மை இப்பொழுதெல்லாம் அடிக்கடி தோன்றுகிறது. ஒவ்வொரு பிணத்தையும் கூறு போடத்துவங்கும் தோறும் இப்படியான எண்ணங்கள் என்னைவாட்டி வதைக்கிறது.விடுதலை எங்குதானிருக்கிறது? என்ற கேள்வி மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது . ஆனாலும் இதிலிருந்து நான் தப்பித்து ஓடி விடவும் முடியாது.
பிணவறையின் வெளியே அந்த பெண்ணுடைய உறவினர்கள் வாயில் கைக்குட்டையை வைத்து மூக்கை மூடிக்கொண்டனர். எத்தனை நெருங்கிய உறவாக இருந்தாலும் நாற்றம் என்று வந்து விட்டால் முகம் சுழிக்கத்தான் செய்கிறார்கள். மனித இயல்பே இப்படித்தான் என்று சலிப்பாக இருந்தது.
“இந்த நாத்தம் நாறுதே ?”
‘அந்த புள்ள எப்படி சிக்கி சீரழிந்ததோ ? என்ற முனுமுனுப்பு குரல் கேட்டது.பிணத்தின் பின்புறம் புதிதாக வாசனை பத்தி ஏற்றி வைத்தேன். பத்தி அதன் மங்கலான புகையை பரவ விட்டிருந்தது. புகை மூட்டமான சூழ்நிலையில் அந்த முகத்தைப் பார்த்தேன்.அவள் பெயர் தேவி . மங்கலான ஒளியில் அந்த உடல் சிதிலமடைந்த பழைய கோவில் போலிருந்தது. சுடிதார் பேண்ட்டின் நாடா பாதி அவிழ்க்கப் பட்டு முடிச்சிடப்படாமல் இருந்தது. அப்பெண்ணின் உடலில் இருந்த துணிகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து உடலை பலகையில் கிடத்தினேன். கொஞ்சம் போல் மயிரடர்ந்த அல்குல். ஆற்றுப்படுகையப் போல் வரிவரியாக ரோமங்கள் வளர்ந்திருந்தன. காலில் கொலுசு வளைவுகள் அச்சுப்போல பதிந்திருந்தது. கொலுசில் ஒற்றை முத்து எங்கையோ விழுந்திருக்க வேண்டும். அதுவே கூட சில சமயங்களில் கொலைக்கான தடயங்களாக இருக்ககூடும் நேர்வாக்கில் உடலை கிடத்தி இருந்தேன்.உடலின் முன்பக்கங்களை இரண்டாக பிரிப்பதற்காக என்னிடம் எப்பொழுதும் நல்ல கூரான கத்தி உண்டு. இந்த உடலுக்கு அதெல்லாம் அதிகம் தேவைப்படவில்லை. முதல் நாள் ஏழு மணி போல் தான் பிணத்தை கண்டெடுத்து இருக்கிறார்கள், காலையிலே பிரேத பரிசோதனை செய்து பிணத்தை ஒப்படைக்க வேண்டும். மருத்துவர்க்கு இரவே தகவல் சொல்லி இருக்கிறார்கள்.ஒன்பது மணிக்கு எல்லாம் பிணக்கூறாய்வு செய்ய மருத்துவர் உள்ளே வந்தார்.இயல்பாக பேசக்கூடியவர். நான்கு ஆண்டுகளாக இந்தப் பணியில் இருக்கிறார்.இரண்டு முககவசம் அணிந்திருந்தும் அவரது முகத்தில் அசூயையின் சாயல் இருந்தது. கொலையா தற்கொலையா என்பதை பருவ வயது உடலின் அங்கங்கள் அழுகிய நிலையில் இருந்தும் மருத்துவர் ஒருவாறு யூகித்துவிட்டார்
‘ தற்கொலைகள் தற்காலிக தீர்வுக்காகத்தான் பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது என்று எப்பொழுதும் யாரேனும் சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்” இல்லையா வேலு ?” என்றார்.
“ஆனால் அது அப்படி அல்ல “
“.மரணம் தான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வாக விடுதலையாக கருதப்படுகிறது “
ஆமாம் தானே ? ! என்றார் .இந்தப் பெண்ணின் மரணத்திற்கும் இதற்குள் ஒரு கதையை உருவாக்கி வைத்திருப்பார்கள் தானே ? என்று என்னைப் பார்த்து கேட்டார்.
“கதைகளால் தானே இந்த உலகம் இன்னும் அழியாமல் இருக்கின்றது என்றேன்”. மருத்துவருக்கு சிரிப்பு வந்துவிட்டது.’ அவரும் கூட இன்று குழப்பமான மனநிலையில் இருந்திருப்பார் என்று யூகித்தேன் .உடல் பாகங்களை தடயவியல் ஆய்வுக் கூடத்திற்கு அனுப்ப எடுத்து வைக்க சொன்னார் ஏதோ ஒரு வித யோசனையில் ஆழ்ந்திருந்தார். அவரது முக குறிப்பை என்னால் உணர முடிந்தது. நானும் தண்ணீரில் அமிழ்ந்து போன உடலின் பாகங்களை பார்மலின் பாட்டில்க்குள் எடுத்துப் போட்டுக்கொண்டிருக்கையில் ஒன்றிரண்டு புழுக்கள் மேலே எழும்பி வந்தன. கூடவே எண்ணங்கள் நெளிய ஆரம்பித்தன.மனம் ஒரு நிலையில் இல்லை.
“சாவுக்கு ஒத்திகை பார்த்திருந்திருக்கா ? எத்தனை முறை ஒத்திகை பார்த்தாளோ ? “ஒப்பாரியின் குரல் சன்னமாக கேட்டது. பெண்ணுக்கும் நீருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று எப்போதோ ஒரு துண்டு பேப்பரில் படித்தது நினைவுக்கு வந்தது . இந்தப் பெண்ணும் அந்த நெருங்கிய வழியைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்ற எண்ணம் வந்ததும்
“ மரணம் என்பது முடிச்சிடப்படாத புதிர் “ என்று எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன. .மருத்துவரின் மனதுக்குள் புகை மூட்டமாக எண்ண அலைகள் சுழன்று கொண்டிருந்தை அவரது கண்கள் காட்டிக் கொடுத்தது.அவர் அந்த உடலின் அங்கங்கள் எல்லாம் எப்படி இருந்தது என்பதை தனக்குள் பதிவு செய்தது கொண்டார் . கோர்ட் கேஸ் என்று வரும் போது அதற்கு பதில் அளிக்க வேண்டும் நல்ல விதமாக உடலை கட்டிக் கொடுக்கும் படி சொல்லிவிட்டு டாக்டர் கிளம்பி விட்டார். இருவரும் இன்று ஏனோ அதிகம் பேசிக்கொள்ளவில்லை. மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நாற்றமும் புழுவும் சீக்கிரம் அவரை வெளியேற்றியது.
அழுது அழுது கண்கள் வற்றிய அவளது அம்மா, வெளியே நடப்பட்டிருந்த அரளிச் செடியில் மலர்ந்திருக்கும் பூவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் .செவ்வரளிச் செடியின் நிறத்தில் தனது மகள் வைத்திருக்கும் சுடிதார் எங்கு வைத்திருப்பாள் என்ற எண்ணம் வந்திருக்கக்கூடும். நிதானமாக எழுந்து செவ்வரளிப் பூக்களைப் பறித்து முந்தானையில் கட்டிக் கொண்டாள். வேட்டைக்கு போவது போன்ற பாவனையில் நாய் ஒன்று அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் சுரத்தை இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“ஓலமிட்டு அழும் குரலை விட அமைதியாக பார்க்கும் கண்கள் துக்கத்தினை இருமடங்கு தரவல்லது” என்பதினை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.
வேலைக்கு சேர்ந்த பின்பு முதன் முதலாக பிணக்கூறாய்வு செய்வதை பார்க்கும் போது அழுகை பீறிட்டது . அதை கட்டுக்குள் கொண்டுவர மிகவும் மெனக்கட வேண்டியிருந்தது. பத்து வருடங்களாக பிணவறையில் உதவியாளராக இருக்கின்றேன். எதோ ஒரு தருணத்தில் இன்னுமும் கூடஅழுகை பீறிடும். உயிரற்ற உடல்களும் கண்ணீரும் அழுகையுமாக எல்லாவற்றையும் இங்கு பார்க்கிறேன். இது எத்தனையாவது உடல் என்று கணக்கு வைத்துக் கொள்ளவில்லை.
அவளது அம்மாவின் முகம் வாடிய ரோஜாப்பூ போலிருந்தது. நான் உடலைக் கட்டித் தர துவங்கினேன்.சிதைந்த முகத்தையும் உடலையும் கட்டுத் துணி வைத்து அடைத்து முழு உருவமாக கிட்டதட்ட மாற்றி முகத்தை நெற்றிப் பொட்டுக்கு இடம் விட்டு பிதுங்கி தொங்கிய உதடுகளையும் சேர்த்து சிறிய தையலிட்டு கழுத்தை சுற்றி முதல் கட்டு கட்டியிருந்தேன் .மாலையிட்டால் கழுத்துக்கட்டின் சுருக்கு தெரியாது.மேலும் மேல் துணியால் மூடி விடலாம் .அவளுக்கு ஸ்தனங்கள் பெரிது அழுகிய மார்பகத்தில் கொஞ்சம் புது வெள்ளைத் துணியை உள்ளே திணித்து அவளது இயல்பான ஸ்தனம் எடுப்பாக தெரியும்படி கட்டி விட்டேன்.பிருஷ்டபாகத்தின் தோல் வழட்டி சதைகள் எல்லாம் துண்டங்களாக வந்து விட்டன. வெள்ளை காடா துணியை எப்பொழுதும் வாங்க சொல்லும் அளவை விட இம்முறை அதிகமாக வாங்கி வர சொல்லி இருந்தேன்.மிகவும் பொறுமையாக பிருஷ்ட பாகத்தை ஒருக்களித்து காடா துணியை நான்கு மடங்காக மடித்து அதில் வைத்து தொடையோடு சேர்த்துக் கட்டிவிட்டேன்.ஐந்து கட்டுகளாக அவளது உடலை கட்டி இருந்தேன்.
அழகான மாலையை வாங்கி வைத்திருந்தார்கள்.உறவினர் ஒருவர் கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சென்றார் .இளமஞ்சள் நிறத்தில் சாமந்திப்பூக்கள் நன்கு மலர்ந்திருந்த பூக்களின் இடையே சம்மங்கி பூக்களை அடுக்கி சுருக்கிட்டு’ மாலையாக்கி இருந்தனர் .சம்மங்கி பூக்களின் வெண்மை மாலையை இன்னும் அழகாக காட்டியது .ரோஜாப்பூ குஞ்சம் வைத்து கட்டியிருந்தனர்.வெள்ளைத்துணியில் கட்டி இருந்த அவளது உடலுக்கு இந்த மாலையை சாத்தியதும் தேவியின் கலை வந்து விட்டது.உள்முகமாக ஒரு குரல் கேட்டது. உண்மையில் அவள் இப்பொழுது தேவி தானே ?மனதுக்குள் ஓரிருமுறை அவளது கள்ளம்கபடமற்ற பழைய முகத்தை நானே உருவாக்கி பார்த்துக் கொண்டேன்.இனி உடலை அவளது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்.பிணத்தை ஒப்படைக்கும் பொறுப்பு என்னிடமிருந்தது.வெளியே சத்தமில்லாமல் அமைதியாக இருந்தது.அழுகையின் கேவல் இல்லாமல் இருப்பதே பெரும் பிரச்னைக்கு உரியது. அங்கு நிலவும் இறுகிய மௌனத்தின் சாட்சியாய் நான் இருக்கப் போவது எனக்கு இன்னும் கொஞ்சம் அயற்சியை ஏற்படுத்தியது. வெளியே எட்டிப்பார்த்தேன்.பத்து பேருக்கும் மேலாக அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டிருந்தனர்.அழுகையின் சத்தம் கொஞ்சம் அதிகமாக தயாராக இருந்தது.
உயிரற்ற உடல் கண் முன்னே இல்லாததே அவர்களுக்கு பெரிய ஆசுவாசம்.நான் பணிக்கு சேர்ந்ததிலிருந்தது இந்த நொடி வரை எனக்கு உடலை மிகச் சாதாரணமாக ஒப்படைக்க தெரியாது . எனது தொழில் இது என்பது நினைவில் இருந்தாலும் அந்த பிணத்துக்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமில்லை என்றாலும் நான் உடைந்து விடுவேன்.அவளுக்குத் தேவி என்ற பெயரை குழந்தைப் பிறந்ததும் அதன் முகக்கலையை வைத்தே தான் பெயரிட்டிருக்க வேண்டும்.
“தேவியின் அப்பா இங்கே வாங்க”என்று கொஞ்சம் சத்தமாக அழைத்தேன்.தளர்ந்த நடையில் என் அருகே வந்தார். தேதியும் நேரமும் இட்டு பேரெழுதி “உடலைப் பெற்றுக் கொண்டேன்” என்று எழுதி கையெழுத்திட்டார்.அவரது கைகள் நடுங்கியது மயங்கி அங்கேயே விழுந்து விடுவார் போலிருந்தது. உடன் வந்தவர் அவரை தோளோடு சாய்த்துக் கொண்டார்.
‘பார்வதி இங்க பாருடி.’
நாம தூக்கி வளர்த்த செல்லம்
தேவி சிலையாட்டம் தூங்கிட்டு இருக்காடி”
பார்வதி அம்மா நிலைக் குத்திய கண்களோடு அப்படியே இருந்தாள்
“கண்களில் ஒரு துளி ஈரம் இல்லை’.
‘பார்வதி பிள்ளையை பாரு ‘நல்லா பாருடி
”என் கண்மணியை நல்லா பாருடி’.
என் மாட மாணிக்கத்தை நல்லா பாருடி”
மனைவியை கட்டிக் அழுது கொண்டே அமரர் ஊர்திக்கு அருகே அழைத்து வந்து விட்டார்.பார்வதி அம்மா உடல் குன்றிப் போய் இருந்தார். உடம்பெல்லாம் நடுங்கியது. அவர் கண்ணை திறக்கவே இல்லை. மயங்கி சரியும் நிலையில் இருந்தார் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார் தேவியின் அப்பா. ஒருவரை ஒருவர் விலகவே இல்லை. இறுக்கம் அதிகமானது.குழந்தை பயத்தில் ஒட்டிக்கொள்வது போல ஒட்டிக்கொண்டார் மனைவின் முதுகை ஆதுரமாக தடவி ,. கண்களை துடைத்துக் கொண்டு தேவியின் “உடலை பார்க்கும் படி கெஞ்சினார்.
கண்களை மெல்ல திறந்து செவ்வரளி மாலையை முழங்காலுக்கு கீழே வைத்தாள் .வெண்மையான காடாத்துணியில் செவ்வரளி மாலையை பார்த்ததும் “தில்லைகாளி படுத்திருப்பது ” போலிருந்தது. அவளது அம்மாவும் அப்படி நினைத்து தான் செவ்வரளி பூவை முழங்காலுக்கு கீழே வைத்திருக்க கூடும். தில்லை காளி எத்தனை உக்கிரமானவளோ அத்தனை சாந்தமானவள்.
நானொரு முறை சிறுவயதில் தில்லைகாளி கோவிலுக்கு போக வேண்டும் என்று அம்மாவிடம் அடம் பிடித்திருக்கிறேன். அன்று தை அம்மாவாசை. இப்பொழுது எல்லாம் நீ கோவிலுக்கு வரக்கூடாது.காளி இன்று உக்கிரமாக இருப்பாள். அவளது கண்களை உன்னால் பார்க்க இயலாது டா வேலு.அப்படியே நீ பார்த்தாலும் ராத்திரி உனக்கு தூக்கம் வராது என்று சொன்னாள் அம்மா . அடம்பிடித்து அம்மாவின் கையை பற்றிக்கொண்டு கோவிலுக்கு கிளம்பி விட்டேன்.கோவில் தெரு வந்ததும் காலில் நடுக்கம் . அம்மா சொன்ன உக்கிரம் எப்படி இருக்கும் ? என்று குழப்பமாக இருந்தது . அதன் காரணமாகவே கால்கள் நடுங்கியது. அம்மாவுக்கு நான் நடுங்கி கொண்டிருப்பது தெரிந்து விட்டது. பிறகு தான் அம்மா சொன்னாள் காளி முதலில் பார்க்கும் போது தான் உக்கிரமாக தெரிவாள் பின்பு அவளோடு நீ உறவாட ஆரம்பித்தாள் தணிந்து குழைவாள்.அவள் தணியத்தான் பிரம்மன் யாகம் வளர்த்து பிரம்மசாமுண்டேஸ்வரி என்று பெயரிட்டு அவளை மேற்கு முகமாக உட்கார வைத்திருக்கிறான்.
“காளியை நீ கூர்ந்து பார்க்கும் போது
நீ பிரம்ம சாமுண்டேஸ்வரியை காண்பாய் “என்று சொன்னாள் அம்மா.
எனக்கு கொஞ்சம் புரிந்தும் புரியாததுமாக இருந்தது. ஆனாலும் தலையாட்டிக் கொண்டே கோயிலின் அருகே வந்துவிட்டோம். பிறகு நீ ஏன் காளியை குறித்து அப்படி சொன்னாய் ? என்று கேட்டேன் ? நான் சொல்வதில் எதுவும் உண்மையில்லாமல் இல்லை என்று சொல்லி மேலும் பீதியூட்டினாள். ஆனாலும் பிசகு இல்லை. பேசாமல் வந்து காளியை பார்த்து மனதில் இருத்திக்கொள் என்று சொன்னாள். நான் இன்னும் அம்மாவின் கையை இறுகப் பற்றிக்கொண்டேன். எலுமிச்சையின் வாசமும் தாழம்பூ குங்குமத்தின் வாசமும் என்னை பரவசமாக்கியது காலில் எண்ணை பிசுபிசுப்பு ஒட்டிக்கொண்டிருந்தது. கூட்டம் அதிகமானதால் கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தோம். கோயிலின் உள்ளே இடது பக்கம் மூன்று கள்ளிலான உருவங்களைப் பார்த்தேன்.அம்மாவிடம் கேட்டேன்
“இவங்க மூன்று பேரும் கடவுளா என்று ?’
அம்மா பதில் சொல்லவில்லை. கையில் கத்தி முறுக்கிய மீசை இருப்பதை பார்த்து நானே காவல் தெய்வங்களாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.காளியை நெருங்க நெருங்க மனது வேகமாக அடித்துக் கொண்டது.அந்த நேரம் அலங்கார நேரம் என்பதால் காளியை திரையிட்டு மறைத்திருந்தார்கள். எல்லோர் முகங்களையும் மாறி மாறி பார்த்தேன் .தேவியிடம் சரணடைந்த முகங்கங்களில் ஒரு வித ஏக்கமும் பரவசமும் இருந்தது. உடுக்கை ஒலியின் ஓசையில் அனைவரும் பரவசமாயினர். தீபத்தின் ஒளியில் காளி நிறைந்திருந்தாள் அவளின் கண்கள் கருமையினால் அடர்ந்திருந்தது. வெள்ளைப் புடவையை காளியின் மேலே சார்த்தி இருந்தனர். அதன் மீது கொட்டபட்ட குங்குமம் கண்களை அச்சுறுத்துவதாக இருந்தது. இதை தான் அம்மா உக்கிரம் என்று சொல்லி இருக்கிறாள். காளியின் மையிட்ட கண்கள் என் மனதுக்கு நெருக்கமாக இருந்தது.அவள் அவ்வப்பொழுது கண் திறந்து பார்ப்பது போலிருக்கிறது. ஒருவகையில் காளி என்னோடு கூடவே இருக்கிறாள்.என் அகத்தை அவ்வப்பொழுது திறந்து பார்க்கிறாளோ ? என்று தோன்றும்.
தேவியை சுமந்த வாகனம் கிளம்பத் தயாரானது. எனக்கும் அந்த வாகனத்தில் சென்று அவளை வீட்டில் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அருகில் இருந்த மற்றொரு பணியாளரி்டம் சொல்லிக் கொண்டு அந்த வாகனத்தில் முன் பக்க இருக்கைக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டேன். பார்வதி அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தார். இந்த துயரத்தை யார் தான் தாங்கிக் கொள்ள கூடும் ? கொலையா தற்கொலையா ? என்ற குழப்பம் அனைவருக்கும் இருந்தது. அவர்களின் ஊர் நகரத்தில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. ஓட்டுநர் இருப்பிடத்தை கேட்டு தெரிந்துக் கொண்டு வாகனத்தை இயக்க ஆரம்பித்தார்.
நான் முன்பக்க கண்ணாடியை நகர்த்தி விட்டு அவர்கள் மூவரையும் பார்த்துக் கொண்டே வந்தேன், மனைவியின் தோள்களைப் பற்றிக் ஆறுதல் சொல்லும் விதமாக முதுகை தடவிகொடுத்தார் . பார்வதி அம்மா உங்களுக்கு எத்தனைப் பிள்ளைகள் என்று மெல்ல பேச்சுக் கொடுத்தேன். முதலில் அவர்களின் விசும்பல் தான் பதிலாக இருந்தது. தேவியை பார்க்க பார்க்க அழுகை அதிகமாகியது. இன்னும் சிறிது நேரத்தில் அவளது உடல் எரிக்கப்பட்டு விடும். இருவரும் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தனர் . தேவியின் அப்பா யார் யாருக்கோ போன் செய்து அடக்கம் செய்வதற்கான தகவலை சொல்லிக் கொண்டிருந்தார்.அவர்தான் நான் கேட்ட கேள்விக்கும் பதில் அளித்தார்.
‘ஒரே பெண்’ சாமி சிலையாட்டம் அவளை பொத்தி பொத்தி வளர்த்தோம். இவ்வளவு சீக்கிரத்தில் எங்களை விட்டு போகத்தான் அப்படி வளர்ந்தாள் போலிருக்கிறது. அம்மா மகமாயி உனக்கே இது நல்லா இருக்கா? என்ற கேள்வியை கேட்டுகொண்டே பதில் சொன்னார். இன்ஜினியரிங் காலேஜ் மூன்றாவது வருடம் படிச்சுட்டு இருந்தாள் .படிப்பில் சுட்டி மெரிட்டில் அண்ணா பல்கலைக் கழகத்தில் அவளுக்கு சீட் கிடைச்சுது ஹாஸ்டலில் சேர்த்து அவ அங்க பழகுகிற வரைக்கும் கூட இருந்து பார்த்துகிட்டோம். அவளுக்கு கூச்ச சுபாவம்.அங்க சகஜமானதும் நாங்க இங்க வந்துட்டோம். என்ன நடந்து இருக்கும்னு கூட எங்களால் யூகிக்க முடியல.தலையில் அடித்துக் கொண்டு அழுதார். பார்வதி மயங்கிய நிலையில் இருந்தார். அவளுக்கு ஒரு ஆண் நண்பன் உண்டு.அவனும் நல்ல பையன் தான். இரண்டொரு முறை போனில் பேசி இருக்கிறோம்.
“பையன் என்ன ஆனான் ?
என்று கொஞ்சம் தயக்கமாக கேட்டேன் ?
அவன் ஹாஸ்டலில் இருக்கிறான். விசாரணை என்று கூப்பிட்டால் வரேன் என்று சொல்லி இருக்கிறான்.ஆனால் இவள் இப்படி தற்கொலை செய்துகிட்டதுக்கு அவன் என்ன செய்வான் ?இவ சுபாவம் இவளை மனசில அலைகழிச்சிருக்கு.
எனக்குள் உள்ள சாத்தான் எட்டிப் பார்த்தது. இவ்வளவு சின்ன விஷயதுக்கு எல்லாம் தற்கொலை செய்து கொள்வார்களா ? சாவதற்கு வலுவான காரணம் இது இல்லை என்று மட்டும் தோன்றியது.காரணம் எதுவாகவோ இருந்து விட்டுப் போகட்டும்.எல்லாமும் முடிந்தது .
ஆம்புலன்ஸ் குலுங்கும் போது ஸ்டரச்சர் உராய்வு சத்தம் வந்து கொண்டிருந்தது .நீண்ட மௌனத்தை இந்த சத்தம் தான் அவ்வப்பொழுது கலைத்தது .துக்கத்தில் இருந்து வெளியேற உடனே அற்புதங்கள் நிகழ்ந்தால் எப்படி இருக்கும் என்பதை மனம் ஒவ்வொரு உடலை கூறுபோட்டு சார்ந்தவர்களிடம் ஒப்படைக்கும் போதும் கனவு காணும்..இன்றும் அதைவிட மேலான ஒன்று நடந்தால் எப்படி இருக்கும்? அதிக துக்கத்தை சுமக்கும் கண்களை என்னால் பார்க்க. முடியவில்லை .வீடு நெருங்கி விட்டது . தெருவே கூடியிருந்தது. அந்த கூட்டத்திலிருந்த ஓலங்கள் பார்வதி அம்மாவை நிலைகுலைய செய்தன. முதன் முதலாக தேவி குதுகலமாக இந்த வீட்டுக்குள் ஓடி வந்தது எல்லாம் பார்வதி அம்மாவுக்கு நினைவுக்கு வந்திருக்கும் . பார்வதியை கைத்தாங்களாக பற்றிக் கொண்டார் தேவியின் அப்பா.
தலைமாட்டில் சின்னஞ்சிறிய விளக்கு அதன் ஒளியை வீடெங்கும் பரவச்செய்திருந்தது .இந்த வீட்டின் சந்தோஷத்தின் மெல்லிய இழை அறுந்து விட்டிருக்கிறது . நடுவீட்டில் தேவி கிடத்தப்பட்டதை பார்த்தும் தலையை பிய்த்துக்கொண்டு அழுததில் பார்வதி அம்மா மூர்ச்சை ஆகிவிட்டார்
“ஒரு துக்கத்திலிருந்து வெளியேற அதை விட தீவிரமான இன்னொரு நிலைக்கு செல்வது எப்பொழுதாவது நிகழும் “ இன்று நானும் கூட அந்த நிலையில் தான் இருந்திருக்கிறேன் .
ஆம்புலன்சில் ஏறிக்கொண்டேன், டிரைவர் மெதுவாக ஓட்டிச் சென்றார்.
எந்த அவசரமும் இல்லை. என் மனதிற்குள் அம்மா திரும்ப திரும்ப நினைவுக்கு வந்து கொண்டே இருந்தாள். இப்படி ஒரு நாளில் தானே அம்மாவும் தூக்கு போட்டுக் கொண்டாள். இதே போலத்தானே அம்மாவும் நிர்வாணமாக பிணவறையில் கிடந்தாள். அவளையும் இப்படித்தானே கட்டினேன் மனம் நினைவுகளால் அலைகழிந்தது. நீண்ட பெருமூச்சுடன் கண்களை இறுக மூடிக் கொண்டேன்.நாற்றம் ஒரு சுழல்.அதில் தான் எல்லா கசடுகளும் இருக்கிறது என்பதைப் புரிய எத்தனை காலம் ஆகித் தொலைக்கிறது ? அதை புரிந்து கொள்வதற்குள் காலத்தின் முடிவே வந்து தொலைத்து விடுகிறது.
“நாளை வேறொரு பிணம் வரும். வேறொரு நினைவு வரும்.உலகமே ஒரு மாயச் சுழல்.மனம் சோர்ந்து விட்டது. வீடு போய் நன்கு தூங்க வேண்டும் அம்மாவின் நினைவுகள் இல்லாது தூங்க வேண்டும்.மனதில் தூக்கத்தை கற்பனை செய்து கொண்டேன்.அம்மாவுக்கு இன்றொரு அழகான மாலை வாங்க வேண்டும்.
காரைக்கால் அம்மையின் பதிகம் போலவும் சித்தர் பாடல்கள் போலவும் வாழ்வின் அவலம், அருவருப்பு, யாக்கை நிலையாமை, அதே சமயம் அவற்றோடு பின்னிப்பிணைந்த இறையுணர்வு ஆகியவை மிக நேர்த்தியாக
படம் பிடிக்கப்பட்டுள்ளன. போன கதையை விட நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது. வாழ்த்துகள். எழுதியவரின் ஜாதகத்தில் கேது உக்கிரமாய் உட்கார்ந்திருக்கிறார்போலும் 😀
மிக்க நன்றியும் அன்பும்.