சீனா… ஓ… சீனா!

சீனாவும், அமெரிக்காவும்

உலகத்திலேயே அதிக காலமாக நிலைத்து நிற்கும் நாகரிகம், பண்பாடுள்ள நாடுகள் இந்தியாவும், சீனாவும்தான்.

உலகத்திற்குப் பட்டு, காகிதம், அச்செழுத்து, வெடிமருந்து இவைகளைத் தந்த நாடு சீனா.  வெடிமருந்தைச் சீனா துப்பாக்கித் தோட்டாக்கள் செய்யப் பயன்படுத்திக் கொள்ளாது, எறிகுண்டுகள் செய்து போரிடத்துவங்கினும் — வெடிமருந்துக் கண்டுபிடிப்பு ஐரோப்பாவுக்குச் சென்று அவர்கள் உலகெங்கும் சென்று போரிட்டு நாடுகளை அடிமைப்படுத்த உதவியது.  

ஆனால் இப்பொழுது சீனா என்றால் அண்டை நாட்டிலுள்ள இந்தியருக்கு நினைவுக்கு வருவது 1962 இந்திய-சீன எல்லைப் போரும், இடைவிடாது தரப்படும் பிரச்சினைகளும், தலைவலியும், தடுக்கவே இயலாத பிரம்மபுத்திராவையே தடுத்து நிறுத்தித் , தன்பக்கம் ஈர்க்கும் திட்டம்தீட்டிச் செயல்படுத்தும் வேகமும், அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, நேபாளத்தை எதிராகத் தூண்டிவிட்டு மறைமுகமாகச் செயல்படும் குள்ளநரித்தனமும்தான்.

அமெரிக்காவுக்கோ – மிக மலிவு விலையில் ஊசி முதல், கணிணிச் சில்லுகள் வரை தேவையான பொருள்களை உற்பத்தி செய்தி அனுப்பிவைக்கும் ஒரு நாடாக இருந்து, மெல்லமெல்ல அந்நாட்டையே கடனாளியாக ஆக்கி – இப்பொழுது அதற்கே சவால்விடும் அளவுக்கு எல்லாத்துறையிலும் கதிகலங்க வைக்கும் அளவுக்குச் செயல்படும் பூதமாக வளர்ந்திருக்கும் நாடு சீனாதான்.

முதலாவதாக, அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் சீனா எப்படிப்பட்ட தலைவலியைக் கொடுத்து, அந்த நாடுகளின் காலில் தைத்த முள்ளாகச் செயல்படுகிறது என்று தெரிந்துகொள்ளுமுன் சீனாவின் வரலாற்றைச் சற்று சுருக்கமாகக் காண்போம்.

சீனா தன்னை வெளிநாட்டுத் தாக்குதலிலிருந்து காத்துக்கொள்ளக் காலம்காலமாக முயன்று வந்திருக்கிறது.  இதற்குச் சான்று அது பல்லாயிரம் மைல் நீளத்திற்கு எழுப்பிய பெருஞ்சுவர்தான். 

சீன மக்களை ஆண்டுவந்த அரசர்களும் பெரும்பாலும் கொடுங்கோலர்களாகவே இருந்தனர்.  இதை எதிர்த்துப் புரட்சி வெடிக்கும் நிலையில் இருந்தது.  பத்தொன்பதாம் ஆண்டு இறுதியில் ஜப்பானுக்கும், சீனாவுக்கும் இடையில் நிகழ்ந்த போரில் ஜப்பான் சீனாவைத் தோற்கடித்தது.  அதனால் 1895-95ல் டைவான் என்னும் தீவு ஜப்பானுக்கு வழங்கப்பட்டது.

அப்பொழுது சீனாவில் ஆட்சிசெய்த க்விங் அரசவம்சம் கவிழ்ந்தது. நாடு துண்டாகிவிடக்கூடாது என்று க்வா-மின்-டாங் கட்சியும், சீனக் கம்யூனிஸ்ட கட்சியும் இணைந்து செயல்பட்டன. மக்கள் ஆட்சி தொடங்கியது. 

இருந்தபோதிலும், இந்தக் கூட்டணி ஆட்சி நெடுநாள் நீடிக்கவில்லை;  இரண்டும் 1927லிருந்து ஒன்றுடன் ஒன்று அடித்துக்கொண்டு உள்நாட்டுப் போரைத் தொடங்கின. இரண்டாம் உலகப்போரும் நடந்து, 1945ல் ஜப்பான் சரணடைந்தது.  சியாங் கே ஷேக்கின் சீனக் குடியரசுக்கு அதன் நட்பு நாடுகளான அமெரிக்காவும், பிரிட்டனும் டைவான் தீவை அளித்தன.  அங்கு அதன் ஆட்சி தொடங்கியது.

மா-சே-டாங்கின் தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், சியாங் கே ஷேக்கின் க்வா-மின்-டாங் கட்சியும் தங்கள் சண்டையை மீண்டும் தொடங்கி உள்நாட்டுப் போரில் ஈடுபட்டன.  மா சே டாங் சீனத் தலைநிலப் பரப்பைத் தன் ஆளுமைக்குக் கீழ் கொணர்ந்து மக்கள் சீனக் குடியரசு (People’s Republic of China) என்று அதற்குப் பெயரிட்டார்.

சியாங் கே ஷேக்கின் ஆதரவாளர்கள் பதினைந்து லட்சத்துக்கும் மேலானவர் டைவானுக்குக் குடிபெயர்ந்தனர். அந்த நாடு சீனக் குடியரசு (Republic of China) எனத் தன்னை அழைத்துக்கொண்டது.  சீனப் புரட்சிக்கு மொத்த உரிமை கொண்டாடிய க்வா-மின்-டாங் கட்சி, டைவானுக்கும், அதைச் சுற்றியுள்ள சில சிறிய தீவுகளுக்குள்ளும் அடக்கப்பட்டது.

மா-சே-டாங்கின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி டைவானையும் சேர்த்து, மொத்தச் சீன நிலப்பரப்பும் தனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடியது.

ஆயினும், சியாங் கே ஷேக்கின் சீனக் குடியரசுக்கே (Republic of China) முன்னுரிமை கொடுத்து, அதையே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவில் அமெரிக்கா உள்பட மேலைநாடுகள் இடம் கொடுத்தன.

ஆனால், மற்ற நாடுகள் மக்கள் சீனக் குடியரசையே (People’s Republic of China) சீனாவாக அங்கீகரித்ததால், வேறு வழியின்றி, அதுவே பிற்காலத்தில் பாதுகாப்புக் குழுவில் இடம்பெற்றது.  அது டைவானைத் சொந்தம் கொண்டாடினாலும், மேலைநாட்டு வலிமையைக் கருத்தில்கொண்டு, வெறும் பேச்சுடன் நிறுத்திவந்தது.

தன் நாட்டில் வேலைக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டியிருப்பதால் எழும் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டி, அமெரிக்கா அங்குள்ள தொழிற்சாலைகளை முதலில் ஜப்பானுக்கும், பின்னர் (தென்)கொரியாவுக்கும் மெல்ல மெல்ல அனுப்பிவைத்தது. அதைத் தொடங்கியது, பழைய ஹியூலெட் பாக்கார்ட்  நிறுவனம். அதைத் தொடர்ந்து மற்ற அமெரிக்க நிறுவனங்களும் தங்கள் தொழிற்சாலைகளை ஜப்பானுக்கும், பின்னர் கொரியாவுக்கும் அனுப்பத் தொடங்கின. சம்பளம் அங்கு பல மடங்கு குறைவாக இருந்ததால் அது விலைவாசியைக் கட்டுப்படுத்தியது.  முதலில் அமெரிக்கா முக்கியமான தொழில்களை வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை.

நாள்கள் செல்லச் செல்ல, ஜப்பானிலும், கொரியாவிலும் வாழ்க்கைத் தரம் உயரத்தொடங்கியது.  ஆகவே, அங்கு சம்பள உயர்வும் அதிகமாகியது.  பொருள்களின் விலையும் உயரத்தொடங்கியது. இதைக் கட்டுப்படுத்த என்ன செய்வது என்று அமெரிக்கா சிந்தித்தபோதுதான், சீனாவின் மா-சே-டாங் காலமானார். புதிதாகப் பதவியேற்ற தெங்-சியோ-பிங் சீனாவின் முக்காட்டை நீக்கி முன்னேற்ற விரும்பினார்.

அதைப் பூடகமாக அறிந்த அமெரிக்க அதிபர் நிக்சன் தனது வெளியுறவுக் காரியதரிசி ஹென்ரி கிஸ்ஸிங்கரைச் 1971ல் சீனாவுக்கு அனுப்பி உறவைப் புதுப்பித்தார்.  அமெரிக்கத் தொழில்கள் விலைவாசி (வாழ்க்கைத் தரம் – standard of living) மிகமிகக் குறைவான (இப்பொழுதும் குறைவுதான்!) சீனாவுக்கு நகர்ந்தன. 

அரசுக் கட்டுப்பாடுக்குள் அனைத்தும் இருந்ததால் சீனா சம்பளத்தை மிகவும் கட்டுப்பாட்டில் வைத்தது.  இதையறிந்த மற்ற நாடுகளும் (இந்தியா உள்பட) தங்களுக்கு வேண்டிய பொருள்களைச் சீனாவில் உற்பத்தி செய்யத் தொடங்கின. அந்த அந்நியச் செலாவணி சீனாவை மென்மேலும் முன்னேற்றி உலகத்தின் தொழிற்சாலையாக மாற்றியது.

தற்பொழுது சீன அதிபரான சி-க்ஷின்-பிங் (Xi Jin Ping) உலகத்தையே சீனாவின் பிடிக்குள் கொண்டுவர விரும்புகிறார்.  அதற்காக எந்த எல்லைக்கும் அவர் செல்லத் தயாராக இருக்கிறார்.  தன்னைக் கிட்டத்தட்டச் சீனாவின் முடிசூடா மன்னனாக எண்ணி அதன்படிச் செயல்பட்டும் வருகிறார்.

அதைப்பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

இப்பொழுது டைவானுக்கு வருவோம்.  99 ஆண்டுகள் பிரிட்டிஷாரின் பிடியிலிருந்த ஹாங்காங்கும் சீனாவின் வசம் வந்துசேர்ந்துவிட்டது.  டைவான் தன்னிச்சையாக உண்மையானதொரு குடியரசாகச் செயல்பட்டுவருவது அவரது கண்ணை உறுத்துகிறது.  அதை எப்படியாவது தன் வசப்படுத்தினால்தான் சீனாவுக்கு உலகில் மதிப்பு கூடும், மேலை நாடுகள் அங்கு சீனாவை விருப்பப்படி செயல்படுத்தத் தடையாக இருக்கா என கணக்குப்போட்டுக் காய்நகர்த்திவருகிறார்.

இதை நன்கறிந்த அமெரிக்காவும், ஜப்பானும், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் எப்படிச் சீனாவைக் கட்டுப் படுத்துவது என்று திட்டமிட்டுச் செயலாற்ற முனைகின்றன.

இருப்பினும், சீனா தன் திட்டத்தைக் கைவிடவில்லை.  ஒரு நாளில் 71 இராணுவ விமானங்களையும், ஏழு கப்பல்களையும் டைவானைச் சுற்றி அனுப்பியது என்று டைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. 

எப்படி?

ஞாயிறு காலை 6 மணியிலிருந்து திங்கள் காலை 6 மணிக்குள் 47 சீன விமானங்கள் டைவான் கடற்காலின் மையத்தைத் (சீன-டைவான் எல்லை) தாண்டி அனுப்பியது. அவற்றில்  பதினெட்டு ஜே-16, பதினோரு ஜே-1, ஆறு எஸ்.யு-30 விமானங்களும் ஆளில்லா வானூர்திகளும் (military drones) அடக்கம்.

அதோடு நில்லாது, “இப்படி நாங்கள் செய்திருப்பது தற்பொழுதைய அமெரிக்க-டைவான் அச்சுறுத்தலுக்கான பதில்,” என்று சீன ராணுவ அதிகாரி ஷி யீ தெரிவித்தார்.

இது எதனால்?

இந்திய-பசிபிக் கடற்பகுதியில் டைவானுடனும், இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கவும், வளரும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ளவும், தயார் நிலையில் இருக்கவும் வகைசெய்யும் வரையில் இயற்றப்பட்ட அமெரிக்கப் பாதுகாப்பு மசோதாவே காரணம்.  இம்மசோதா சீனாவை போர்முறைத் திறனுடைய சவாலாகவே அறிவிக்கிறது.

அத்துடன் அமெரிக்க பிரதிநிதித் தலைவர் நான்சி பலோசி கடந்த ஆகஸ்ட் (2022) மாதம் டைவானுக்கு விஜயம் செய்ததிலிருந்து சீனா இதுவரை ஐந்து முறை பெரிய நேரடித் துப்பாக்கி இராணுவ பயிற்சிகளை நடத்தியது.

சீனா ஏன் இப்படி நடந்துகொள்கிறது?

அதை மட்டுப்படுத்த அமெரிக்கா இந்தியாவுடனும், ஆஸ்திரேலியாவுடனும், ஜப்பானுடனும் இணைந்து இந்திய-பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏன் செயல்படுகிறது?

அடுத்த கட்டுரையில் காண்போம்.

 1. China and India are two of the oldest surviving civilizations in the world, English Course 10014, York University, Toronto, Canada, https://www.coursehero.com/file/65830105/China-and-India-are-two-of-the-oldest-surviving-civilizations-in-the-worlddocx/
 2. China’s Greatest inventions, The Daily China – Jerico,by Jason Suh, Sep 20, 2017, https://thedailychina.org/chinas-greatest-inventions/
 3. ‘The Chinese Invention of Gunpowder, Explosives, and Artillery and Their Impact on European Warfare’ Encyclopedia.com, https://www.encyclopedia.com/science/encyclopedias-almanacs-transcripts-and-maps/chinese-invention-gunpowder-explosives-and-artillery-and-their-impact-european-warfare
 4. ‘China’s Water Diversion Plan Reaches the Brahmaputra’, by China Digital Times, Nov 3, 2017,
 5. ‘China’s plan to ‘WATER BOMB’ India’, by Jayadeva Ranade, Rediff.com, Dec.8, 2020, https://www.rediff.com/news/column/brahmaputra-dam-chinas-plan-to-water-bomb-india/20201208.htm
 6. “The United States owes China approximately $980.8 billion as of May 2022,” United Stated Department of Treasury, https://ticdata.treasury.gov/Publish/mfh.txt
 7. Taiwan as part of the Japanese empire”, Taiwan History, Brittanica, https://www.britannica.com/place/Taiwan/Taiwan-as-part-of-the-Japanese-empire
 8. Who Sent American Jobs Away?” by Panos Mourdoukoutas, Forbes Magazine, May 1, 2016
 9. Getting to Beijing: Henry Kissinger’s Secret 1971 Trip”, University of Southern California US -China Institute, July 21, 2011, updated in July 2022, https://china.usc.edu/getting-beijing-henry-kissingers-secret-1971-trip
 10. “China sends 71 warplanes, 7 ships toward Taiwan in 24 hours”. Associated Press,  https://www.msn.com/en-US/news/world/china-sends–warplanes–ships-toward-taiwan-in–hours/ar-AA15ESWR?ocid=sapphireappshare
 11. Enhanced defense partnership with Taiwan”, subsection under, “Here’s what’s in the $858 billion defense bill”, by Tami Luhby, CNN, updated December 15, 2022
 12. “What you need to know about Pelosi’s visit to Taiwan”, by Nectar Gan, Selina Wang, Eric Cheug and Simone McCarthy, CNN, Aug 3, 2022, https://www.cnn.com/2022/07/29/asia/pelosi-taiwan-visit-explainer-intl-hnk/index.html

2 Replies to “சீனா… ஓ… சீனா!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.