காலப் பெருங்களம்

Pieces of jigsaw puzzle and global network concept.

காலமெனும் நதியினிலே காணக் கிடைப்பது ஏராளம். தொழில் நுட்பக் காலகட்டத்தில், அறிவியல், படிகளை ஒவ்வொன்றாகக் கடக்காமல், வெகு வேகத்தில் தாவி முன்னேறுகிறது. 2022 ஆண்டில் அதன் பன்முகங்கள் நமக்கு வியப்பையும், ஆனந்தத்தையும் தருகின்றன. மனிதனின் பங்கு அதில் பெரும்பான்மை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், திறமையான மாணவன், ஆசிரியர் கற்பித்ததைக் காட்டிலும் தானே முயன்று சிலவற்றை அறிகிறான் அல்லவா? அதைப் போல கோலோச்சும் சில அறிவியல் கூர்மைகளை இக்கட்டுரையில் பார்ப்போமா?

அறிவியல், பொதுவாக, பலகட்டச் சோதனைகளை எதிர் கொண்டுதான் தன்னை நிரூபித்துக் கொள்ளும். அவ்வகையில் 2022ன் அறிவியல் செழுமையும், காலம் நிர்ணயிக்கும் ஒன்றாகவே இருக்கும். ஆயினும், 2022லேயே அறிவியலின் எட்டு வியத்தகு அதிசயங்கள் தங்களின் இருப்பையும், அவசியத்தையும் உணர்த்தியுள்ளன. இதில் அதிசயம் என்னவென்றால், அந்தத்துறையைச் சார்ந்த விற்பன்னர்களே அதன் வீச்சைக் கண்டு வியக்கிறார்கள்.

விண்கல் பிள்ளாய், சற்றே விலகி இருப்பாய்

டைனோசர்ஸ் (Dinosaurs) அழிந்ததற்கு பூமியில் மோதிய விண்கல் (Asteroid) காரணம் என்று நாம் அறிவோம். நமது சூர்யக் குடும்பம் கண்ணிவெடிகளையும் (Minefields) கொண்டுள்ளது. சூர்யன், கிரகங்கள், அவற்றின் சந்திரன்கள், விண்கற்களின் வளையம் (Asteroid Belts) இவற்றின் இடையே சிறுகற்கள் தெளிக்கப்பட்டு இருக்கின்றன, அவை பூமியின் பாதையில் குறுக்கிடுகின்றன. நம்மை அழிக்க அல்லது தொந்தரவு செய்யும் சாத்தியங்களுள்ள அத்தகைய சிறு கற்கள்/ விண்கற்களிலிருந்து புவியைக் காப்பற்ற அறிவியலாளர்கள் முயன்றார்கள். அடுத்த நூற்றாண்டில், பூமியைப் பாதிப்படையச் செய்யக்கூடும், 140 மீட்டரை விஞ்சும் அளவிலான விண்கல்லை நாம் இன்னும் அறியவில்லை. அறியாமல் இருப்பதால், பாதிப்புகள் ஏற்படாது என எப்படிச் சொல்வது? எதிர்பாராததற்குத்தானே தயார் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது?

சென்ற வருடத்தில் நாசாவின் ஒரு செயல் திட்டத்தை, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலையின் (Johns Hopkins Univ) தலைமையில், ஸ்பேஸ் எக்ஸ், (SpaceX) டார்ட் (DART-Double Asteroid Redirection Test) என்றொரு விண்வெளி சாதனத்தை வானில் அனுப்பியது. டார்ட் என்பது இரட்டைக் கோள் திசை மாற்றச் சோதனை. இயக்கத் தாக்கத்தின் (Kinetic impactor) மூலம், விண்கல்லை விலக்கும் (Nudging) ஒரு செயல்பாடு இது. டார்ட் ஒரு எளிய விண்சாதனம். அதில் புகைப்படக் கருவி இணைக்கப்பட்டுள்ளது.. தானியங்கியாக அது விண்கல்லின் பாதையை அறிந்து அதைத் தாக்கும் திறன் கொண்டது. அதில் மிகப் பெரிய சூர்ய ஒளியிலிருந்து மின் சக்தி தயாரிக்கும் தகடுகள் வரிசையாக (Solar arrays) உள்ளன. முழுதும் விரிந்த நிலையில் ஒவ்வொன்றும் 8.5 மீட்டர் நீளமாக இருக்கும். தானே வழி கண்டு, தன்னையே டைமோர்பிஸ் (Dimorphos) என்ற விண்கல்லில், கிட்டத்தட்ட வினாடிக்கு 6.1 கிமீ வேகத்தில் மோதவிட்டு, பூமிக்கு நேர்ந்திருக்கக்கூடிய ஆபத்தை அது விலக்கியிருக்கிறது. அந்தத் தாக்குதலுக்கு 285 மணி நேரத்திற்குப் பிறகு அந்தத் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன. ‘டிடிமாஸ்’ (Didymos) என்ற சிறு கற்களைச் சுற்றி வந்த ‘டைமோர்பிஸ்’சின் சுற்று வட்டப் பாதையின் காலத்தை 32 நிமிடங்கள் குறைத்து டார்ட் செயல்பட்டது மிகச் சிறந்த முன்னுதாரணம். அதால் 73 வினாடிகள் மட்டுமே அப்படி இயங்க முடியும் என்ற கணிப்பைப் பொய்த்து 32 நிமிடங்கள் செயல்பட்டுள்ளது என்பது அசுர சாதனை; அத்தனையும் கணினியில் உருவாக்கம் செய்யப்பட்டு சிக்கலான கணிதத்தால் அமைக்கப்பட்டது. 10 மாதங்கள் பயணித்து, பூமியிலிருந்து 7 மில்லியன் மைலில், சூர்யனைச் சுற்றி 101 மில்லியன் மைல்கள் என்ற புதுப்பதிவினை ஏற்படுத்தியுள்ளது டார்ட். டார்ட் குறி வைத்தது இரு விண்கற்களை. அப்போது, அதில் ஒன்றான ‘டைமோர்பிஸ்’, மற்றொன்றான ‘டிடிமாசை’, 11 மணி 55 நிமிடங்களுக்கொருமுறை சுற்றி வந்து கொண்டிருந்தது. விண்கலமான டார்டின் எடை அரை டன்னிற்கும் கூடுதல். அது இரு விண்கற்களையும் அழிப்பதற்காக அனுப்பப்படவில்லை. முழங்கையால் இடித்து சற்று உடலின் சமனிலையைக் குலைப்பதைப் போல் அவ்விரண்டின் சுற்று வட்டப் பாதையை அல்லது ஒன்றின் பாதையை ‘சற்றே விலகியிரும் பிள்ளாய்’ என்று தாஜா செய்வது போல் விலக்குவதுதான் நோக்கம். இது நல்ல வெற்றியைத் தந்த செயல்பாடு. இன்றைக்கு மட்டுமல்ல, பூமியை நோக்கி விண்ணிலிருந்து வருபவை பூமியின் மீது மோதாமல், இந்தப் புவியைக் காக்க முடியும் என்பதற்கான நம்பிக்கையையும் இந்த டார்ட் கொடுத்திருக்கிறது. செப்டம்பர் 26 அன்று தன் குறியை ஒரு மணிக்கூறில், 14000 மைல் வேகத்தில் தாக்கியது. பூமியில் இருந்த கண்காணிப்பகங்கள், அவை இரண்டும் எப்படி ஒன்றையொன்று கிரகணம் போல் பீடித்தன என்று பதிவு செய்துள்ளன. அந்த மோதல் ஒலி சூர்யக் குடும்பம் முழுவதும் கேட்டிருக்கும்; ஆனால், காற்றில்லாத அண்ட வெளி, மௌனத்தால் ஆனது.

இதைப் படித்துக் கொண்டிருக்கும் நமக்கு ஆர்மகெட்டன் (Armageddon) சினிமா நினைவிற்கு வரலாம். 1998-ல் வெளியான அந்த திரைப்படத்தில் பூமியை நோக்கி வரும் விண்கல்லை ப்ரூஸ் வில்லிஸ் ஏற்ற கதாபத்திரம் செயலிழக்கச் செய்யும். நாம் தடுப்பதற்கு ஒரு முயற்சியும் செய்யாமல் அழித்துக் கொண்டே வரும் இந்தப் பூமியை,தற்செயல் நிகழ்வுகளால் விண்ணிலிருந்து வரும் ஆபத்திலிருந்து நாம் காப்பாற்றப் பாடுபடுவோம் என்பது வினோதமான நற்செய்தி.

அப்படி விண்மண்டலம்தான் நமக்கு முக்கியமாகத் தெரிகிறது, பூமண்டலம் இல்லை என்றால், குறைந்தது காலம் முடிந்த சேடிலைட்கள், விண்ணில் வெடித்துச் சிதறும் ஏவுகணைகளைகளென்று நாம் போடும் விண்குப்பைகளைக் களையவாவது வழி காண வேண்டும்.

காளான்களும், மனச் சோர்வும்

இயற்கை வஞ்சனையின்றி நமக்குப் பலவற்றைத் தந்திருக்கிறது. அமைதியான, எளிமையான, இயற்கையான வாழ்வியல் முறைகளில் மனச்சோர்வு அவ்வளவாக ஏற்படுவதில்லை. ஆனால், மாறி வரும் பழக்க வழக்கங்களில், வாழ்வின் வெற்றி என்பதன் வரையறை மாறி வரும் சமூகச் சூழலில், மனச் சோர்வு இல்லாதவர் குறைந்த எண்ணிக்கையில் உள்ளார்கள். இந்தக் கட்டுரையாளரே,(மேத்யூ ஹட்சன்) 27 ஆண்டுகளுக்கு முன்னால், பரவசம் தரும் பொருட்களை, மனச் சோர்வைப் போக்குவதற்காக எடுத்துக் கொண்டாராம். ஆனால், சட்ட வரைமுறைகள் இத்தகைய பொருட்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதில் தேக்கம் தேவை எனச் சொல்வதால், ஆய்வுகள் இத்துறையிலும் மேற்கொள்ளப்படுகின்றன. மாயக் காளான்களில் உள்ள சைலசைபின் (Psilocybin) என்பது, ‘சஞ்சீவி’ என்று ஆய்வாளர்கள் கண்டு பிடித்துவிட்டார்கள்.

மனச்சோர்விற்கான முதன்மைச் சிகிச்சையில் தரப்படும் மனச் சோர்வு மாற்று மருந்துகள், தேவையான நிவாரணத்தை தொடர்ந்து வழங்குவதில்லை. உலகெங்கிலும் கால் பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இத்தகைய மனச் சோர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 30% வழமையான சிகிச்சை முறையில் சரியான விளைவில்லாததால் அதனூடே வாழ்க்கையைத் தள்ளுகிறார்கள் என்று கள ஆய்வு ஒன்று சொல்கிறது. சென்ற மாதம் ந்யூ இங்க்லண்ட் ஜொ(ர்)னல் ஆஃப் மெடிசின், (New England Journal of Medicine) சைலசைபின்னைப் பயன்படுத்தி 233 நபர்களுக்கு மருத்துவ சோதனை செய்து அதில் கண்டடைந்தவற்றைப் பற்றி அறிக்கை வெளியிட்டது. இந்த 233 பேரும் வழக்கத்திலுள்ள மனச் சோர்வு மருத்துவ முறையின் மூலம் பலனடையாதவர்கள். துறைசார் வல்லுனர்களின் மேற்பார்வையில் இவர்களுக்கு ஒரே ஒரு முறை-ஒன்று, பத்து, இருபத்தி ஐந்து மி கி சைலசைபின் கொடுக்கப்பட்டது. மூன்று வாரம் சென்ற பிறகு, இதில் அதிக அளவில், இந்த மருந்தை, அதாவது இருபத்தி ஐந்து மி கி எடுத்துக் கொண்டவர்கள், மற்ற அளவில் எடுத்துக் கொண்டோரை விட மனச்சோர்வின் பாதிப்பில் இருந்து குறிப்பிடத்தகுந்த அளவு விடுபட்டிருந்தார்கள்.

‘நேச்சர் மெடிசன்’ (Nature Medicine) வெளியிட்ட கட்டுரையில் எஸ்சிடேலோப்ராம் (Escitalopram) என்ற (தரப் பெயர்-லெக்சப்ரோ- Lexapro)) மன நோய் மருந்தை விட, சைலசைபின், சிறந்த பலனளிப்பதாகத் தரவுகளுடன் சொன்னது. ந்யூரோ இமேஜிங்கைப் (Neuro Imaging) பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முடியுமா என்றும் ஆய்வாளர்கள் சிந்தனை செய்தார்கள். சைலசைபின் கொடுக்கப்பட்ட நோயாளிகளின் மூளையின் நரம்பு வலைகள் சற்று அதிகமாக ஒத்திசைந்து செயல்பட்டதை அந்த நோயாளிகளே உணர்ந்தார்கள். ஒருக்கால், உணர்வுகளின் நெகிழ்வுத் தன்மையை சைலசைபின் அதிகப்படுத்துவதால், எண்ணத்தூண்டுதல்களின் வேக அலைகளிலிருந்து தப்பிக்க அது உதவியிருக்கக் கூடும். மேலும் ஒரு ஆய்வு, ஜெ(ர்)னல் ஆஃப் சைகோஃபார்மகாலஜி (Journal of psychopharmacology) நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதிக அளவில் மனபாதிப்பிற்கு உள்ளான நோயாளிகளுக்கு ஒரு வருடத்தில் இரு தடவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் ஒராண்டுக்குப் பிறகு 75% நபர்கள் தங்கள் மன நோயிலிருந்து 50% விடுபட்டிருந்தார்கள்.

மேற்கூறிய மூன்று ஆய்வுகளையும் செய்தவர்கள், இந்த சிகிச்சை முறையின் நீண்ட ஆயுள் தன்மையை வியந்து சொல்கிறார்கள். இதில் இன்னமும் செல்ல வேண்டிய தூரம் அதிகமென்றாலும், சில நோயாளிகளுக்கு மீட்சி இல்லை என்ற நிலையை இது மாற்றக்கூடும்.

பூமியும், அதன் அதிகரிக்கும் வெப்பமும்

உலகம் வெப்பமயமாகும் காலகட்டத்திலுள்ள நாம் அதன் ஏறுமுகத்தை அறிந்துதான் இருக்கிறோம். ஆனால், அது அதிகரிக்கும் வேகம், அவ்வாறு நடக்கும் கால இடைவெளி முந்தைய பதிவுகளை முறியடிக்கிறது. ஐக்கிய அரசு (United Kingdom) நாடுகளில் 2022 ஜூலையில் வரலாறு காணா அளவில் வெப்ப அலை வீசியது. முந்தைய அதி வெப்ப நிலையான 101.7 பாகைஃபேரன்ஹீட்டை (Fahrenheit) விட 2.9 பாகை அதிகரித்தது. இது 46 தட்பவெப்ப நிலையங்களில் பதிவான ஒன்று. ஏறத்தாழ அரை நூற்றாண்டுகளாக தட்பவெப்பத்தைப் பதிவு செய்து வரும் 100 நிலையங்களில், பெரும்பாலானவைகளில், முன்னர் உச்சமெனப் பதிவான வெப்ப அளவைத் தாண்டிய உஷ்ணம் பதிவாகியுள்ளது. ஒரு கிராமம் அனைவரையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டது- அதிகமில்லை நண்பர்களே, 11.3 பாகைகள் அதிகரித்திருந்தன.

இதில் ஐக்கிய அரசுகள் மட்டும் பாதிப்பைச் சந்திக்கவில்லை. யூரோப்பில் பல தேசங்கள் முன்பை விட அதிக வெப்பத்தை எதிர்கொண்டன. பொதுவாக அந்தக் கண்டம் முழுவதும் அதீத வெப்பத்தை ஜூன் முதல் ஆகஸ்ட் வரை எதிர் கொண்டன. வெப்பத்தில் காடுகள் பற்றி எரிந்தன, காட்டுத் தீ பரவலானது. வசந்தத்தில் பேரளவில் வெப்ப அலைகள் இந்தியாவைப் பாதித்தன. பல கண்டங்களில் கடும் வறட்சி நிலவியது. அதி வெப்பத்தையும், அதிக நாட்கள் நீடித்த வெப்ப அலைகளையும் சீனா சந்தித்தது. ‘பேரழிவு கொண்டு வரும் கால நிலையை அறிதல்- கால நிலையின் இறுதி விளையாட்டு’ (Climate Endgame-Exploring catastrophic climate change Scenerios) என்ற தலைப்பில், 11 அறிவியலாளர்கள் அடங்கிய சர்வதேசக் குழு, ஒரு பகுப்பாய்வை ப்ரோசீடிங்க்ஸ் ஆஃப் நேஷனல் அகாதமி ஆஃப் சைன்சஸ்சில் (Proceedings of National Academy of Sciences) வெளியிட்டது. அதிகரிக்கும் வெப்ப அளவை 2 பாகை செல்சியசிற்குக் குறைவாகக் கொணர வேண்டும் என்று உலக நாடுகள் தீர்மானித்தார்கள். அதன் விளைவாக குறை வெப்ப அதிகரிப்பில் கவனம் செலுத்தி ஆய்வுகள் செய்யப்பட்டன. கால நிலையில் ஏற்படும் அதிக தாக்கத்தில் கவனம் செலுத்தாதலால், மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் காரணிகளை எதிர்கொள்ள நம்மால் இயலவில்லை. ஸ்ட்ரேடொக்யுமுலஸ் (Stratocumulus)- பெரிய, கரிய, உருண்ட, நிறைகள் கொண்ட மேகம் கரியமில வாயுவால் பாதிக்கப்படுகிறது. அதனால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் இந்த பூமியில் 8 பாகை செல்சியஸ் வெப்பம் ஏறும் என்று சொல்கிறார்கள். இதில் கவலைப்படத்தக்க விஷயம் அதன் தொடர் நிகழ்வுகள் கொண்டு வரும் அருவி வீழ்ச்சியை ஒத்த, நல்லதல்லாத விளைவுகள். (Tipping Cascade) அதாவது தொடர் வரிசையில் ‘அ’ ‘ஆவிற்கு, ‘ஆ’ ‘இ’க்கு இட்டுச் செல்லும். சூழலில் ஏற்படும் பாதிப்புகள் நேர்கோட்டில் ஏற்படாது. இதனால், கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய குறைந்த நிகழ்-தகவு விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இத்தகைய கால நிலை மாற்றத்தால், மின்வெட்டு அதிகரிக்கும், பஞ்சம், பெரும் தொற்றுக்கள், அதிக அளவில் உயிரினங்கள் மறைந்து போவது, அணுசக்திப் போர் ஏற்படலாம்; எதிர்பாராததைச் சந்திக்கும் நிலையை நாம் பார்க்கலாம்.

மூளைத் திசுக்களும், ‘பாங்க்’ (Pong)எனும் விளையாட்டும்

‘பாங்க்’ முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட கணினி விளையாட்டு. டென்னிஸ் போல இருவர், வலைக்கு இருபுறமும் இருந்து கொண்டு பந்தை மட்டையால் அடித்து விளையாடுவதை ஒத்தது. அறிவியலும், தத்துவமும், பெரும் கொப்பரையில்/ மரத்தொட்டியில் இருப்பது மூளை என்று சொல்வதில் பெரும் மகிழ்வு கொள்கின்றன. இன்னொரு வடிவில் நிகழ்நிலை உலகில் நாம் ஒரு உருவகமே என்றும் சொல்கிறார்கள். ந்யூரான் (Neuron) என்ற அமைப்பு செய்த பரிசோதனையில் இவ்விரண்டு கருத்துக்களும் இணைக்கப்பட்டன. மூளைத் திசுக்களின் அடுக்குகள் ஒரு கணினியுடன் இணைக்கப்பட்டன. அது ‘பாங்க்’ காணொளி விளையாட்டின் மற்றொரு வடிவை அனுபவித்து, விளையாடவும் செய்தது.

மனிதனின் தொப்புள் கொடி உயிரணுக்களிலிருந்து/ தண்டிலிருந்து (Stem cells) சில மூளைத் திசுக்களை அறிவியலாளர்கள் உருவாக்கினார்கள்; சிலவற்றை எலிகளின் கருவிலிருந்து எடுத்துக் கொண்டார்கள். மின்முனை (Electrodes) சாதனம் ஒன்றில் எட்டு இலட்சம் மனித அல்லது எலித் திசுக்களின் வரிசையைப் பொருத்தினார்கள். ஒரு காணொளித் திரையில், ஒவ்வொரு அடுக்கிலும் இருக்கும் ந்யூரான்களில் மின் சக்தியைச் செலுத்தினார்கள். அது துடுப்பு போன்ற, மேல் கீழ் அசைவுகளை காணொலியில் காட்டியது. அந்த வலைப்பின்னலில் மற்றொரு அடுக்கு ந்யூரான்களில் துள்ளும் பந்தின் நிலைகளை உள்ளிட்டார்கள். துடுப்பு, பந்தில் இணைந்தவுடன், மின்முனைகள் அனைத்தும் செயற்பாடுகளைத் தூண்டின. இது ந்யூரானின் செயலமைப்பை வலுவூட்டியது. சில நிமிடங்களில் தொடர் விளையாட்டுத் தொடங்கியது. சிலிகானும், ந்யூரானும் ஒத்த மொழியில் பேசினாலும், ஒன்றாகவே அறிந்து கொண்டாலும், இதை ஒரு கருதுகோள் என ஏற்றுக் கொண்டாலும், பல்கலைக் கல்லூரி, இலண்டனில் (University College, London) பணிபுரியும் கார்ல் ஜே ஃப்ரிஸ்டன் (Karl J Friston) என்ற நரம்பியல் விஞ்ஞானி இந்தப் ‘வட்டில் மூளை’ (Dish Brain) செயல்படும் என்பதில் உறுதியாக இல்லை.[1] ‘பேசும் நாயைப் பார்க்கும் மனிதன் நம்ப இயலா வியப்பை அடைவதைப் போன்றது தான் இது’ என்று சொல்கிறார் அவர். எலியின் ந்யூரான்களை விட நீடித்து விளையாட மனித ந்யூரான்களால் இயல்கிறது எனச் சொல்வது, நாய்கள், பூனைகளை விடச் சிறப்பாக பேசும் என்று சொல்வதைப் போன்றது என்ற கருத்தையும் அவர் சொன்னார்.

இது ஒரு விளையாட்டைப் போலத் தோன்றினாலும், இதன் உள்ளே ஆராயப்பட வேண்டிய விஷயங்கள் உள்ளன. இதன் பின்னே அறிய வேண்டியவைகள் இருக்கின்றன- எவ்வாறு ந்யூரான்கள், திசுக்கள் தமக்குள் தொடர்பு கொள்கின்றன, உயிர் சார்ந்த அறிவும், செயற்கை அறிவும் இணைகின்றன, வலிப்பு நோய், மறதி நோய் போன்ற மூளை சார்ந்த கடுமைகளில், மூளையின் ஒழுங்கமைவு எப்படிக் குலைகிறது, மருந்துகள் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் ஆகியவைகளைப் பற்றிய கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சி இது. மது, தங்கள் செயற்கைக் கருவியை எப்படி பாதிக்கிறது என்பதை இக்குழு இப்போது ஆராயத் தொடங்கியுள்ளது. ‘குடித்துள்ள வட்டில் மூளை’, (Drunken Dish Brain) ‘பாங்க்’ விளையாட்டை எப்படி ஆடும் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கார்ல் ஜே ஃப்ரிஸ்டன் கேட்டிருந்தார்.

(Block chain) தொடரேடு தனக்குத் தேவையான மின்சக்தியை 99.95% குறைத்துள்ளது.

தொடரேட்டுத் தொழில் நுட்பத்தை அறிந்திருப்போர் சிலரே. அது ‘பிட்காயினுடன்’ தொடர்புள்ளது என்று நினைப்போர் பலர்; அவை உட்கொள்ளும் மின்சக்தி மிக அபரிமிதமானது என்றும் அறிந்திருக்கிறார்கள். புலப்படா நாணயங்கள்,(Crypto currencies) பல தேசங்களை விட அதிக மின்சக்தியை பயன் படுத்துகிறது.

இந்த செப்டம்பரில் ஒரு முக்கியத் தொடரேடு, பரிவர்த்தனைகளை சரி பார்க்கும் வழிமுறையை மாற்றி அதிக மின்சக்தியை பயன்படுத்தும் அவலத்தை வெகுவாகக் குறைத்துள்ளது. தொடரேட்டுத் தொழில் நுட்பத்தில் இயங்கும் முதல் புலப்படா நாணயமான ‘பிட்காயின்’, பரிவர்த்தனைகளை ‘வேலையை ருசுப்படுத்துதல்’ (Proof of Work) முறையின் மூலம் செய்தது. சிக்கலான புதிர்களை விடுவிக்க உலகம் முழுதும் கணினிகள் இதில் போட்டியிட்டன. இதில் வென்றவர்களுக்கு புலப்படா நாணயங்கள் கிடைத்தன; பரிவர்த்தனைகளைக் கட்டங்களாக பேரேட்டில் பதிவு செய்தார்கள். இந்த வழியில் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் முறைகள், அதிக அளவில் மின்சக்தியைப் பயன்படுத்தின. இம்முறைக்கு மாற்றாக, 2015-ல் எதீரியம் (Ethereum) தொடரேடு ‘பங்கின் ருசுப்படுத்துதல்’ (Proof of Stack) என்ற கருதுகோளைக் கைக்கொண்டது. இதில் மதிப்பீட்டாளராக வரக் கூடியவர், தன்னுடைய புலப்படா நாணயங்களை ‘யெஸ்க்ரோ’ (Escrow) என்ற கணக்கில் வைப்பார். இது மூவர் இயைக்கும் கணக்கு முறை. ஒரு கட்டம் தொடரேட்டில் ஏறினால், மதிப்பீட்டாளரின் பங்கைப் பொறுத்து அவருக்கு புலப்படா நாணயங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு அவருடையதாகிவிடும். அந்தத் தொடரேட்டின் உள்ளடக்கம் மோசடியாக இருக்கும் பட்சத்தில், அவரது பங்கில் ஒரு பகுதி பறி போய்விடும். ‘பங்கு ருசுப்படுத்துதல்’ முறையில் சக்தியின் தேவை மிகக் குறைவு. ஆனால் அதை உருவாக்க சாத்தானை எதிர் கொள்ளும் சாகசங்கள் தேவையாக இருப்பதால், ‘வேலையின் ருசு பாணியை’ எதீரியம் முதலில் பயன்படுத்தியது.

2020ல் எதீரியத்தை மேம்படுத்தும் குழு, கலங்கரை விளக்குச் சங்கிலி (Beacon Chain) என்ற இணை பேரேட்டை உருவாக்கியது. இதில் ‘பங்கின் ஆதாரம்’ பயன்படுத்தப் பட்டது. இரு வருட தொடர் சோதனைகளுக்குப் பிறகு, ‘பங்கு ஆதாரத்தைக்’ கைக்கொள்ளும் வகையில், இரு சங்கிலிகளையும் இணைத்து. ‘மெர்ஜ்ஜை’ (Merge) உருவாக்கி அதன் பயன்பாட்டிற்கான தேதியை நிர்ணயித்தார்கள். பலர், ‘புலப்படா நாணயச் சந்தையை’ இது புரட்டிப் போட்டு விடும் என்றார்கள். சில நிபுணர்கள், நடுவானில் ஆகாய விமனத்தின் இயந்திரத்தை மாற்றும் செயலைப் போன்றது இது என்று சொன்னார்கள். செப் 15 அன்று எந்த இடர்ப்பாடுகளுமில்லாமல் ‘மெர்ஜ்’ வெற்றி கண்டது. இதில் ஈடுபடும் டிம் பெய்கோ (Tim Beiko) என்பவர், இந்தத் தொடரேட்டின் நிலைத்தன்மையால் அதிசயப்பட்டு, செயற்பாட்டுத்தரவு வரைபடங்களை ஒன்றிற்கு இருமுறையாகப் பார்த்துக் கொண்டாராம்.

எதீரியம், பிட்காயினை விட பல சிறப்புக்களை முன்னரே கொண்டிருந்தது. புலப்படா நாணயங்களுக்காக மட்டுமில்லை, கலை உலகில் பூஞ்சை பீடிக்காத, படைத்தவருக்கு உரித்தான பட்டயங்கள், (Non-Fungible Tokens) தானியங்கியாக ஏற்படுத்தித் தரும் அறிவான, செறிவான ஒப்பந்தங்கள், நிதி, பொழுதுபோக்கு, தகவல் தொடர்புகள் எளிதாகக் கிடைக்கச் செய்தல் போன்ற கணினி விண்ணப்பங்கள் ஆகியவற்றில் இது நன்முறையில் செயல்பட்டது. இப்போது ‘மெர்ஜ்’, எதீரியத்தின் பரிவர்த்தனைகளை குறைந்த செலவில், அதி வேகத்தில், சிக்கன மின் சக்தி பயன்பாட்டில் நடத்துகிறது. இந்த ‘மெர்ஜ்ஜின்’ அறிமுக விழாவை எதீரியம் அமைப்பினர் நடத்திய போது, இத் துறையைச் சார்ந்த உருவாக்குபவர் ஒருவர் சொன்னார்: “என்ன ஒரு சாதனை! இந்தத் தளத்தைப் பயன்படுத்துவோர் எந்த மாற்றத்தையும் உணர மாட்டார்கள்- ஆனால், எல்லாம் மாறியுள்ளது.”

ஆண்டுகள் போயின இரு மில்லியன்- மத களிற்றின் டி என் ஏ

டி என் ஏ புவியியலைச் சார்ந்து எளிதில் உடையக்கூடிய ஒன்று. இந்த இரட்டை திருகுச் சுழல் மூலக்கூறுகள், திசுக்களுக்கு செய்தி தருபவை; நாம் வாழும் போதே, நம் உடலிலுள்ள நொதிகள் அவற்றைப் பாதிக்கும்; நாம் இறந்தவுடன் வேகமாகச் சிதைந்தும் விடும். நீர், காற்று, நுண்ணுயிர்கள் இதைப் பாதிக்கும். ஓர் ஆய்வு, இதன் வேதியியல் பிணைப்புகள் 500 ஆண்டுகளுக்கான அரை வாழ்வு கொண்டிருக்கும் என்று கணிக்கிறது. மிக மிகப் பழமையான ஒரு டி என் ஏ மாதிரி கிடைத்தால், அதன் வரிசைகளைக் கட்டமைப்பதில் எதிர்கொள்ள நேரிடும் சவால்களும் அதிகம்.

சென்ற வருடம் இரு சைபீரியன் யானைகளின் கடைவாய்ப்பல்லில்லிருந்து எடுக்கப்பட்ட பொருளைக் கொண்டு அதன் டி என் ஏவை வரைவு செய்தார்கள். இந்த தந்தப் பற்கள் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கும் முந்தியவை. இது முன்னர் பதிவான டி என் ஏக்களைவிட இரு மடங்கு பழமையான ஒன்று என்பது சிறப்பான செய்தி. 2022ல், இதையும், இன்னும் சில ஆய்வாளர்கள் தங்கள் கண்டடைந்த பழைய டி என் ஏக்களை ஆய்வு செய்து வரிசைப்படுத்தி முறியடித்தார்கள். இவர்கள் இதை அந்த நீள் தந்தத்திலிருந்து நேரடியாக அடையவில்லை. வடக்கு க்ரீன்லாந்தின் கழிமுகத்தின் படிவுகளில் இது கண்டடையப்பட்டது. இரு மில்லியன் வருடங்களுக்கு முன்னான தாவர, விலங்குகளின் மிச்சம் மீதாதிகள் அங்கே புதையுண்டிருந்தன. ஐந்து பகுதிகளிலிருந்து, 41 இடங்களில் எடுக்கப்பட்ட மண் மாதிரிகளில் யானைகளின் டி என் ஏ கிடைத்தது. அவை, படிகக்கற்கள் அல்லது களிமண்ணுடன் ஒட்டியிருந்ததால், நொதிகளின் பாதிப்பிலிருந்து ஓரளவு தப்பியிருந்தன. அப்படி இயற்கை காப்பற்றிய டி என் ஏ, அதைக் கண்டெடுக்க முடிந்த செயல், அதன் மூலம் டி என் ஏவின் வரிசைகளை அமைக்க முடிந்தது என அனைத்துமே ஒரு பெரும் தாவல் என்று கோபன்ஹேகன் பல்கலையைச் சேர்ந்த புவியியலாளரான குர்ட் ஹெச் (க்)ஜ்யார் (Kurt H Kjaer) என்ற புவியியலாளர் சொல்கிறார்.

மரபினை அறிய உதவும் பொருட்களை ஏதோ ஒன்றிரண்டிலிருந்து ஆய்வாளர்கள் எடுக்கவில்லை. யானைகள், கலைமான்கள், குதிரைவாலி நண்டுகள், தாவரங்கள் இவைகளைப் போன்ற பலவற்றிலிருந்தும், புதையுண்டவற்றிலிருந்தும் எடுத்துள்ளார்கள். இந்தக் கழிமுகப் பகுதியானது, இப்போது உறைந்த வெற்று நிலமாகக் காணப்பட்டாலும், ஒரு காலத்தில் 20 பாகை வெப்பத்தில் இருந்திருக்கும் எனச் சொல்கிறார்கள். இந்த ஆய்வுகள், முன்னர் நிலவியிருந்த வாழ்வியல் முறைகளைப் பற்றிய துப்புக்களைக் கொடுக்கிறது; எதிர்காலத்தில் எது சாத்தியம் என்பதையும் கோடிடுகிறது. உயிரிகளின் பரம்பரைகளையும், வரலாற்றுச் சுற்றுச் சூழல் நிலைகளையும் இத்தகைய ஆய்வுகளின் மூலம் மீளாக்கம் செய்யலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். மாறி வரும் உலகத்தை எதிர் கொள்ளும் வகையில், தாவர, விலங்கினங்களுக்கு மரபணுக்களைக் கொண்டு உதவ இயலலாம்.

Pieces of jigsaw puzzle and global network concept.

செயற்கை நுண்ணறிவின் தந்திர (தன் திற) அறிவு

நாம் செயற்கை நுண்ணறிவிற்கு சவால் விட்டோம்; அது அவ்வளவு எளிதில், விரைவில் திறம் பெறும் என கனவிலும் நினைக்கவில்லை. அது நம்மை வெற்றி கண்டு புன்னகை செய்கிறது. சதுரங்கம்,(Chess) கோ, (go) போ(க்)கர், (Poker) ஸ்டார்க்ரேப்ட் -2 (Starcraft-2) ஆகியவற்றில் அது மனிதனை வென்றது. 2019ல், மெடாவில் (Meta) பணிபுரிந்த கணினி அறிவியலாளரான நோம் ப்ரௌன்(Noam Brown) பலர் சேர்ந்து விளையாடும் போக்கர் விளையாட்டை, செயற்கை நுண்ணறிவில் ஏற்றி, ஒரு புதிய சவாலையும் கட்டமைக்கும் முயற்சியில் தான் ஒரு பத்து வருடங்களாவது இருக்கத் தேவையிருக்கும் என நினைத்தார். அவர் செய்ய எண்ணியது போர்த்தந்திரம். யூரோப்பின் வரைபடத்தை வென்றெடுக்க தரைப் படை மற்றும் கப்பற்படையைச் சேர்ந்த ஏழு நபர்கள் ஒருவருடன் ஒருவர் போட்டியிடும் இராஜ தந்திர விளையாட்டு அது. விளையாடுபவர்கள் தங்களுக்குள் தாக்கிக் கொள்ளலாம், தாங்கியும் கொள்ளலாம். ஒவ்வொரு திருப்பமும் பிணைக்காத பேச்சு வார்த்தையில் தொடங்கும். நீங்கள் சிவப்புக் கம்பளம் விரிக்கலாம், உருவவும் செய்யலாம். நம்பிக்கையும், கயமையும் சேர்ந்த ஒரு விளையாட்டு இது. இது மொழியும் விளையாட்டுத் தந்திரங்களும் கொண்ட ஒன்று. விளையாடுபவர் அந்த வரைபடத்தில் எங்குள்ளார் என்பதைப் பொறுத்து வியூகங்கள் அமையும்.. இது அறிவியல் புனைவை ஒத்து இருக்கிறதல்லவா? ஆல்ஃபா கோவைப் (Alphagi) போல வியூகம் அமைக்கும்; சேட்ஜிபிடியைப் (ChatGPT) போல உரையாடவும் செய்யும். மொழியில் பொழியும் செயற்கை நுண்ணறிவு பலவற்றிற்கு ‘உண்மை எது, பொய்யெதுன்னு ஒண்ணும்’ புரியாது. ஆனால், மெடாவின் சிசிரோ (Cicero), உள்ளடக்கம், குறிக்கோள் சார்ந்து பதில் சொல்லும் திறம் பெற்றுள்ளது. மனிதர்களின் இந்த ‘டிப்லோமசி’ (Diplomacy) விளையாட்டைக் கவனித்து, அதைப் படியெடுத்து, நிகழ் நிலையில் விளையாடும் குழுவுடன் அது 40 முறை விளையாடியது. சைன்ஸ் (Science) இதழில் வெளியான கட்டுரையில் ப்ரவுன் மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள், சிசெரோ பத்தில் ஒன்பது பேரை வென்றது என்று. அதன் மென்மையான பேச்சைக் கொண்டு, ஒரு விளையாட்டாளர் மட்டும், அது சிலிகானில் அமைந்த மென்பொருள் கொண்ட செயற்கை நுண்ணறிவு எனச் சந்தேகித்தார். தொழில் நுட்பக் கோளாறினால், ஃப்ரான்ஸ் தேசம் என விளையாடிக் கொண்டிருந்த இந்த அமைப்பு, பத்து நிமிடங்கள் செயல்படவில்லை. அது மீண்டும் இணைந்த போது, இங்கிலாந்து, ‘உன்னை ஆவலுடன் எதிர்பார்த்தேன்’ என்றது. தயாராக உள்ள பொய்யைச் சொல்லியது செயற்கை நுண்ணறிவு ‘என் பெண் தோழியுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன்.’

மனிதர்கள் அத்தனை தயாராக இல்லை.

ஃப்யூஷன் சக்தி

எதை எதிர்பார்ப்பு எனச் சொல்லுவோம்? அணுக் கரு இணைந்து உருவாகும் மின் சக்தியான ஃப்யூஷன் சக்தித் துறையில், முன்னேற்றம் என்பது மிக நிதானமாகத் தான் நடைபெறும். பழைய நகைச்சுவை ஒன்று உண்டு- அணுக் கரு இணப்பு எப்போதுமே 30 வருடங்கள் தள்ளித்தான் இருக்கும்!

டிசம்பரில், கட்டுப்படுத்தப்பட்ட ஃப்யூஷன் சக்தியை உருவாக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் அதை நெருங்கியிருப்பதை ஒரு முக்கிய நிகழ்வாகச் சொல்லலாம். அணுக் கரு இணைப்பு, விண்மீன்களின் உள்ளே நிகழ்வதற்கு அதிக வெப்பமும், அழுத்தமும் தேவைப்படுகின்றன. சில அணுவிணைப்புச் சோதனைகளில் ஹைட்ரஜன் சூடுபடுத்தப்பட்டு, காந்தப் புலன் பிடியில் வைக்கப்படுகிறது. சில அமைப்புகள், ஹைட்ரஜன் குண்டுகளை கிளர்கதிர் (Laser) மூலம் வெடிக்கச் செய்து அதனிலிருந்து சக்தியை ஏற்படுத்துகின்றன. இந்த இரண்டாம் முறையை, கலிபோர்னியாவிலுள்ள லாரன்ஸ் லிவர்மோர் ஆய்வகம் பின்பற்றுகிறது. அணுக்கரு ஆயுதங்களை உருவாக்கும் ஆய்வில் துணை நிற்பது முதல் குறிக்கோள். நிலைத்த சக்தி என்பது அதன் உபரிக் குறிக்கோள். அதற்காக முதலில் ஒதுக்கப்பட்ட நிதியை விட மூன்று மடங்கு அதிக செலவில் 2009ல் அமைக்கப்பட்ட அது, கிளர்கதிர் மூலம் செலுத்தப்பட்ட சக்தியை விட அதிக அளவில் ‘பற்ற வைக்கும்’ ஆற்றலைப் பெறும் என 2012ல் நம்பப்பட்டது. ஆனால், டிசம்பர் 5, 2022ல் ‘முழு பற்ற வைத்தல்’ நிறைவேறியது. பென்சில் அழிப்பான் அளவிலான ஒரு உருளையை 192 கிளர்கதிர்கள் சுருக்கமாக வெடிக்க வைத்தன. அதிலிருந்து ஊடுகதிர் வந்தது. அது உறை நிலையிலிருந்த ஹைட்ரஜன் குண்டுகளை (சிலவற்றில் ஹீலியமும் உண்டு) அழுத்தி ஆற்றல் மிக்க ந்யூட்ரான்களை வெளியிட்டது. இரு மெகாஜோல்ஸ் ஆற்றல் கிடைத்தது- அது 100 வாட் பல்பை ஐந்து மணி நேரம் எரிய வைக்கும் ஆற்றலுக்கு இணையானது. ஆனால், மின்னல் கீற்றைப் போல ஒடுக்கமானது. அறிவியலாளர்கள் எதிர்பார்த்ததை விட சற்று அதிக ஆற்றல் உருவாகி வந்தது. எதிர்பார்த்ததைத் தரவில்லை, ஆனால், முன் தீர்மானங்களை விஞ்சியது.

இது அறிவியலின் வழி. அது அப்படித்தான் செயல் பட முடியும். எனவே, என் பண்ணைத் தோட்டத்திற்கான மின் சக்தி உடனே கிடைத்து விடும் என்றெல்லாம் ஆசைப்படக் கூடாது. 2 மெகாஜோல்ஸ் *(Megajoules) சக்தி பெற மூன்று மெகாஜோல்ஸ் ஆற்றலை உள்ளிட்டார்கள்! ஒரு நொடியில் பல குறிகளைத் தாக்கும் வண்ணம் கிளர்கதிர்கள் அதி விரைவில் செயல்பட்டால் பலன் இருக்கலாம். இப்போது வந்துள்ள இந்த ஆற்றலைப் பற்றிய செய்தி முக்கியமான ஒன்றாகும். தினந்தோறும் மின்சக்தி உற்பத்தி செய்வதைப் போல, ந்யூக்ளியர் ஆற்றலிலும் செய்யலாம் என எதிர்பார்ப்பது நடப்பை உணராத அறியாமை தான்.

இந்தியா

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், போபால், நமது ஆல மரம் மற்றும் அரசமரம் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதைக் குறித்து ஆராய்ந்தார்கள். இந்த மரங்களின் மரபணுக்கள் பல சூழல்களிலும் தம்மைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஏற்ற வகையில் உள்ளன- அதிலும் குறிப்பாக வேர்களின் வளர்ச்சி, இலைகளின் அமைப்பு, வளர்சிதை மாற்றம், சந்ததியைக் கொண்டு வருதல் போன்றவற்றில் இந்த மரபணுக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. (The Hindu, ஆர். பிரசாத் அவர்களின் கட்டுரை 18/12/2022)

பல்வேறு அறிவியல் துறைகளில் சிறந்த ஆய்வுகள் இந்தியாவில் நடை பெறுகின்றன. ‘தொடங்கு நிலை’ குழுமங்கள் தொழில் நுட்பம் மற்றும் சேவைத் துறையில் சாதனை செய்து வருகின்றன. விண்ணியலில் தனியாரின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. நவம்பர் 18,2022ல் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் வெற்றிகரமாக ஏவுகணையை விண்ணில் செலுத்தி செயற்கைக் கோள்களான பிக்ஸல், துருவா இரண்டையும் குறைந்த சுற்று வட்டப் பாதையில் இஸ்ரோவின் உதவி மற்றும் ஏவுதளத்தைப் பயன்படுத்தி நிறுவியது.

உதகையிலிருந்து 20 கி மீ தொலைவில் உள்ள குன்றுப்பாறைகளில் காவிக் கட்டிகளால் வரையப்பட்டுள்ள சின்னங்கள், பனியுக ஐரோப்பிய சின்னங்களை ஒத்துள்ளதை சமீபத்தில் கண்டறிந்திருக்கிறார்கள். இன்றைய மனிதன் யூரோப்பை, ஆசியாவைக் கடந்து இந்தியாவை அடைந்து நீலகிரி மலையில் அன்றைய குளிரைத் தாங்கி வாழ்ந்து, பழங்குடியினருடன் கலந்து, மடிந்து போயிருக்கலாம் என்றும், இந்தச் சின்னங்களை ‘கார்பன் டேடிங்’ முறையைப் பயன்படுத்தி அதன் தொன்மையை, அதன் மூலம் மனித இன வராலற்றின் ஒரு பகுதியை அறியலாம் எனவும் நினைக்கிறார்கள். (சொல்வனம் இதழ் 283- மூத்தோர்கள்- கட்டுரை)

இந்தத் தருணத்தில் நம் இந்திய அறிவியலாளர்கள், தங்க நுண் துகளை, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஒட்டுண்ணி பூஞ்சையுடன்  இணைத்து சாதனை செய்துள்ளார்கள். இது அளவில் சிறிய ஆற்றலில் பெரிதான ஒன்று. நான்கு அறிவியல் அமைப்புகள் இதை அமைப்பதில் பங்கேற்றன போடோலேன்ட் பல்கலை, கோவா பல்கலை,, ஸ்ரீ புஷ்பா கல்லூரி, தஞ்சாவூர், விலங்கு நோய்கள் அமைப்பு, போபால் ஆகியவற்றைச் சேர்ந்த பயோடெக்னாஜிஸ்ட் உருவாக்கிய இதற்கு ஜெர்மனி, சர்வதேச காப்புரிமை தந்திருக்கிறது. அந்தக் கூட்டுப் பொருள் Cordy gold nanoparticles- (Cor-AuNPs). மருந்து தயாரிப்பில் இது மிகப் பெரிய இடம் வகிக்கும். (சொல்வனம் இதழ் எண் 282- க்ளிக், க்ளிக், பயோ க்ளிக்)

பொதுவாக, அறிவியல், மருத்துவம், தொழில் நுட்பம், விண்வெளி ஆய்வு ஆகியவற்றில், ந்யூக்ளியர் ஆற்றல் உற்பத்தியில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம். அதுவும் நம்மால் இயலும்.

‘இளைய பாரதத்தினாய் வா வா வா!

எதிரிலா வலத்தினாய் வா வா வா!

ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்

உதய ஞாயிறொப்பவே வா வா வா!

வெற்றி கொண்ட கையினாய் வா வா வா!

கற்றலொன்று பொய்க்கிலாய் வா வா வா!’

பாரதி

பின்குறிப்புகள்:

[1] இன்னொரு பரிசோதனையில் இதே போன்ற வட்டில் மூளை ஒன்று விமானத்தை மேலேற்றி, கீழிறக்கும் வேலையைத் துரிதமாகக் கற்றது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். பார்க்க: https://www.discovermagazine.com/technology/brain-in-a-dish

உசாவல் சுட்டிகள்

Eight Times Science Exceeded Expectations in 2022https://www.newyorker.com/culture/2022-in-review/eight-times-science-exceeded-expectations-in-2022

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.