ஒந்தே ஒந்து

1 நவம்பர் 1956

இந்திய மாநிலங்களின் எல்லைகள் மொழி அடிப்படையில் திருத்தி அமைக்கப்பட்டன. 

சுவாமிநாதன் குமரநாதனின் நெருங்கிய நண்பன். அவன் பெற்றோர்கள் பல மாநிலங்களில் வசித்ததால் அவர்களுக்குப் பல மொழிகள் பழக்கம். அச்சமயம் அவன் தந்தை பெங்களூர் விமானப்படை அதிகாரிகளின் பயிற்சியில் இருந்தார். 

கன்னடம் தமிழ் மாதிரிதான். பல வார்த்தைகள் கிட்டத்தட்ட ஒண்ணா இருக்கும். 

ஒன்று இரண்டு மூன்று… எப்படி சொல்லணும்? 

ஒந்து எரடு மூரு… அப்பறம் ‘ப’க்கு பதிலா ‘ஹ’. 

அப்ப பத்துக்கு ஹத்து. 

கரெக்ட். பள்ளி-ஹள்ளி, பாலு-ஹாலு. இப்படி. 

குமரநாதனுக்கு (அத்தை பெண்) சங்கரியின் அளவுக்குப் பொறுமை கிடையாது. அதனால் அவன் கையெழுத்து கிறுக்கல். சில சமயம் அவனே அவன் எழுதியதைப் படிக்க முடியாமல் திணறுவான்.

“ஐந்தாவது முடிக்கப்போறே. தினம் எழுதிப் பழகு!” என்றார் அவன் தந்தை. 

“என்ன எழுதறது?” 

“ஸ்ரீராமஜெயம்.” 

“ஓம்நமசிவாய எழுதறேனே.”  

அவனுக்கு ‘ஸ்ரீ’யும் ‘ஜ’வும் தகராறு. முன்னது முழுசாக இருக்காது. பின்னது ‘ஐ’போல இருக்கும். 

“ஸ்ரீராமஜெயம் தான்.” 

“சரி. எத்தனை தடவை?” 

“ஆயிரத்து எட்டு.” 

“அவ்வளவா?” 

“எழுதினா ஒரு வெள்ளிக்காசு.” 

“யார் தரப்போறா?” 

“அடுத்த மாசம் சிருங்கேரி சங்கராச்சாரியார் இங்கே வந்து நாலு நாள் தங்கப்போறார்.” 

“தெரியும்.”  

“அதுக்காக பந்தல் போடறது, சுவாமிகளின் பூஜைக்கும் ஊர்வலத்துக்கும் ஏற்பாடு பண்ணறதுன்னு பெரியவங்க நிறைய வேலை செய்யப் போறோம். குட்டிப் பசங்களை விட்டுவைக்காம அவங்களுக்கும் ஒரு நல்ல காரியம். அதுக்கு ஒரு பரிசு.” 

“நான் வெள்ளிக்காசை வச்சிண்டு என்ன பண்ணப்போறேன்?” 

அரைஞாண் கயிற்றில் மாட்டிக்கொள்வது பிடித்தமானதாக இல்லை. 

(சங்கரியின் அக்கா) “சௌந்தரத்துக்குக் கொடு!” 

அது நிச்சயமாக ஒரு நல்ல காரியம். 

எதில் எழுதுவது? 1, 2, 3… என்று எப்படி கணக்கு வைப்பது? 

சங்கரி ஒரு நாற்பது பக்க நோட்டைப் பிரித்து வரிகளை எண்ணினாள். 

“பத்தொன்பது தான் இருக்கு.” 

அப்பா கணக்கு எழுதும் நீளமான நோட்டை எடுத்துவந்து தந்தார். அதிலும் நாற்பது பக்கங்கள். 

வரிகளை எண்ணியதும் அவள் கண்களில் பிரகாசம். 

“சரியா இருபத்திஅஞ்சு.”  

“ஒவ்வொரு ஐந்தாவது பக்கத்திலும் ஒண்ணு அதிகம் எழுதினா மொத்தம் ஆயிரத்தெட்டு” என்று குமரநாதன் தன் கணக்கு அறிவை வெளிப்படுத்தினான். 

அப்பா ஒரு புது பென்சில் கொண்டுவந்து கொடுத்தார். 

“சங்கரியும் எழுதணும்” என்றான். 

அவள் எப்படி தப்பிக்கலாம்? 

அவர்களை வேடிக்கை பார்த்த சௌந்தரம் முதல் பக்கத்தை ஸ்கேலால் அளந்து நடுவில் மெல்லிசாக ஒரு நீலக் கோடு இழுத்தாள். 

“இடது பக்கம் சங்கரிக்கு.”  

அவள் எழுத அப்பாவிடம் இருந்து புது ரைட்டர் பேனா.

“சங்கரி மாதிரியே அச்சா இன்னொரு பாதியில நீ எழுதணும்.”  

திட்டம் தீர்மானம் ஆனதும், சௌந்தரம் மீதிப் பக்கங்களைப் பாகப்பிரிவினை செய்தாள். 

சங்கரி இரண்டு பக்கங்களை மையினால் நிரப்பினால் குமரநாதனுக்கு போட்டி வேகம் வரும். அவளையும் தாண்டி பென்சிலால் இன்னொரு பக்கம். எழுத்துக்கள் களை இழந்தால் நிறுத்தவேண்டும் என்பது ஒப்பந்தம். 

நோட்டில் நடுப்பக்கத்தைத் தாண்டியதும் ‘ஒரு அப்பாடா!’ சாதனையைச் சொல்ல நண்பன் வீட்டுக்குப் போனான். வாசலில் உட்கார்ந்து இருந்த அவனிடம், 

“சங்கரியும் நானும் ஸ்ரீராமஜெயம் எழுதறோம். முடிச்சதும் ஆளுக்கொரு வெள்ளிக்காசு”  என்றான்.

‘நீ எழுதலையா?’ என்ற மறைமுகக் கேள்விக்கு மற்றவன் முன்னறைக்குப் போய் ஒரு அகலமான வெளிர் பழுப்பு உறையை எடுத்துவந்து காட்டினான். அதன் மேல் அவனுக்குத் தெரிந்த ஆங்கில அறிவில் நண்பனின் முகவரி. 

ஆர். சுவாமிநாதன் 

15 திருமாநிலையூர் 

கரூர் தபால். 

திருச்சி மாவட்டம் 

மெட்றாஸ் மாகாணம் 

குமரநாதனுக்கு அவன் பெயரில் ஒரு தபால் அட்டை கூட வந்தது இல்லை. நண்பனைப் பொறாமையாகப் பார்த்தான். அவனுக்கு யார் என்ன அனுப்பி இருப்பார்கள்?  

உறையின் பிரிக்கப்பட்ட ஓரத்தை அகற்றி, மடித்த காகிதம் ஒன்றை எடுத்தான். அது அவன் கையில் நான்கு அகலமான பக்கங்களாக விரிந்தது. ஆதியில்… என்று கொட்டை எழுத்தில் தலைப்பு. இரண்டு பத்திகளில் நிறைய பாராக்கள். நாலைந்து வர்ணப் படங்கள். 

“இதில இருக்கற கேள்விக்கு பதில் எழுதணும்” என்று உறையில் இருந்து ஒரு ஒற்றைத் தாளை எடுத்துக் காட்டினான். ஒவ்வொரு கேள்விக்கும் கீழே நான்கு காலி வரிகள்.  

“எழுதி…” 

“இதில வைத்து திருப்பி அனுப்பணும்.” பெரிய உறையில் இருந்து ஒரு சின்ன உறை. அதன் மேல் போகும் இடத்தின் முகவரி. தீர்க்கக் குரலோசை… தபால் பெட்டி எண்… பூனா… “ஸ்டாம்ப் ஒட்ட வேணாம். அவங்களே காசுகொடுத்து வாங்கிப்பாங்க.”  

பாடப்புத்தகம் படித்து கேள்வி பதில் எழுதுவது போதாது என்று இது வேறா? 

“ரொம்ப நேரம் ஆகுமே.” 

“இதைப் படிக்காமலே பதில் எழுதலாம்” என்று மறுபடி நான்கு பக்கக் காகிதத்தைக் காட்டினான்.

குமரநாதனுக்குப் புரியவில்லை. சுவாமிநாதன் கேள்வித்தாளை அவனிடம் கொடுத்து, 

“முதல் கேள்வி என்ன?”  

“ஆறாவது தினம் கடவுள் என்ன செய்தார்?” 

நண்பன் பாடத்தின் முதல் பக்கத்தை அவன் முன்னால் நீட்டினான். மற்ற கறுப்பு எழுத்துக்களுக்கு நடுவில் தனித்து நின்ற சிவப்பு நிற வாக்கியம். 

கடவுள் பெரிய மிருகங்களைப் படைத்து, தன் அச்சில் மனிதனை உருவாக்கி, அவனுக்கு எல்லா உயிர்களின் மேலும் ஆதிக்கம் கொடுத்தார். 

“அதை அப்படியே பதில் இடத்தில எழுதணும்.” 

“உன் கையெழுத்து தான் குண்டுகுண்டா அழகா இருக்குமே.”  

அடுத்த கேள்விக்கு இரண்டாம் பக்கத்தில் தயாராக இருந்த பதில்.  

கடவுள் விலக்கப்பட்ட மரத்தை ஆதாமுக்குக் காட்டி நன்மை தீமைகளை உணரவைக்கும் அதன் கனியைப் புசிக்கலாகாது என்று கட்டளை யிட்டார். 

அந்தப் பக்கத்தை மேலோட்டமாகப் படித்த குமரநாதனுக்கு ஒரு சந்தேகம். 

“கதையில அத்திப்பழம்னு போட்டிருக்கு. படத்தில பார்த்தா ஆப்பிள் மாதிரி இருக்கு.” 

“உனக்கு எதுக்கு அந்தக் கவலை?” 

“பள்ளிக்கூடம் போகாம ஒரு பழத்தைத் தின்னு அறிவு வந்தா எவ்வளவு நன்னா இருக்கும்.” 

“நீ ஒருத்தன். விஷயத்தை விட்டுட்டு எங்கேயோ போயிடுவே.”  

சுவாமிநாதன் எல்லா காகிதங்களையும் பெரிய உறைக்குள் செருகினான். 

“சரி, இந்த ஆறு கேள்விகளுக்கும் பதில் எழுதி அனுப்பினா…”  

“அடுத்த பாடம் இதே மாதிரி தபாலில் வரும்.”  

அதிலும் கேள்விகளுக்கு வரிசையாகப் பதில்கள் பளிச்சென்று கண்ணில்படுமாக இருக்கும். நண்பனுக்கு பத்து நிமிட வேலை.  

இதெல்லாம் எதற்காக? 

“இப்படி ஆறு பாடம் முடிச்சா ஒரு சர்டிஃபிகேட்.” 

அதை வைத்து என்ன செய்வது?

ஊரின் மத்தியில் நான்கு வீடுகள் கட்டக்கூடிய காலி மனையில் மூங்கில் கழிகள் நட்டு ஒரு பெரிய கொட்டகை. சங்கராசாரியாரின் பரிவாரம் அவருக்கு முன்பே வந்து அங்கு இறங்கிவிட்டது. தகவல் காதில்விழுந்து குமரநாதன் அங்கே போனபோது தெருவை அடைத்த பந்தலின் முன் காகிதக்கற்றைகளுடன் சிறுவர் வரிசை. உள்ளே மேடை அலங்கரம் நடந்துகொண்டு இருந்தது.

வரிசையில் நின்றான். குடுமி, மேல்துண்டு, தட்டாடை வேஷ்டியில் இரண்டு பிரமசாரிகள். சந்தனப்பொட்டு வைத்த ஒருவன் ‘ஸ்ரீராமஜெயங்’களை வாங்கி ஒரு கோணிப்பையில் திணித்தான். மூன்று விபூதி வரிகளுடன் இன்னொருவன் அவற்றுக்குப் பரிசாக வெள்ளிக் காசுகளை வழங்கினான். 

குமரநாதனுக்கு முன்னால் நின்ற பசுபதியின் கசங்கலான பழுப்பேறிய காகிதங்களில் ‘ஸ்ரீ’க்கும் ‘ம்’முக்கும் நடுவில் கிறுக்கல்கள். அந்தக் காகிதங்கள் இன்னும் கொஞ்சம் கசங்கின. வெள்ளிக்காசைப் பெருமையுடன் காண்பித்துவிட்டு ஓடினான். அதன் பைசா காசின் அளவையும் ஊதினால் பறக்கும் தகரத்தின் மெலிவையும் பார்த்து இதற்கா மெனக்கெட்டு… 

குமரநாதனின் நோட்டை சந்தனப்பொட்டு வாங்கி அதன் தடியான நீல அட்டையைப் பார்த்து அதைக் கோணியில் திணிக்க யோசித்தான். 

விபூதி தீட்டியவன் நீட்டிய கையில் ஒரு காசுதான். 

குமரநாதன் நோட்டைத் திரும்பப்பெற்று அதைப் பிரித்தான். பக்கங்களின் இரண்டு வரிசைகளையும் காட்டினான். மற்றவனுக்குப் புரியவில்லை. 

குமரநாதன் இரண்டு விரல்களை நீட்டி, “எரடு.”  

மற்றவன் ஆள்காட்டிவிரலில், “ஒந்து.”  

பென்சிலில் எழுதிய வலது பாதியைத் தொட்டுக் காட்டி தன் மார்பில் வைத்து, இடது பாதியின் மை எழுத்து வரிசையில் விரல்களை ஓட்டி, “அக்கா” என்றான். 

அதற்கும் மற்றவன் மசியவில்லை. 

“ஒந்து மனைகே ஒந்து.”  

நோட்டை மூடி எடுத்துக்கொண்டு குமரநாதன் திரும்பி நடந்தான். 

“ஒந்தே ஒந்து” என்று விபூதி சத்தமாகத் திரும்ப அழைத்தான். 

“பேடா! பேடா!” 

சங்கரியிடம் என்ன சொல்வது? 

காசு தீர்ந்துவிட்டதாம். சும்மா கொடுக்க மனம் இல்லை. 

நீ கயிற்றில் கோத்து போட்டுக்கொள்கிற படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. 

காசு போனால் போகட்டும். என் கையெழுத்து எவ்வளவு முன்னேறி இருக்கிறது, பார்! முதல் பக்கத்தின் ஆரம்பத்தில் ஸ்ரீராமதோல்வி. கடைசியில் கிட்டத்தட்ட உன்னை மாதிரி எழுதி இருக்கிறேன்.  

வீட்டு வாசலில் நண்பன் காத்திருந்தான். அவனைப் பார்த்ததும் குமரநாதன் நோட்டைப் பின்னால் மறைத்தான். மற்றவன் முன்பு காட்டியது போன்ற பெரிய தபால் உறையில் இருந்து ஜாக்கிரதையாக இழுத்து பெருமையுடன் நீட்டினான். அகலமான, நுனியை மட்டும் பிடித்தாலும் வளையாத விலையுயர்ந்த காகிதம். வெளிநாட்டில் இருந்து வந்திருக்க வேண்டும். 

வளைவான எழுத்துக்களில் தீர்க்கக் குரலோசை.  

செர்டிஃபிகேட் ஆஃப் அசீவ்மென்ட் 

அலங்கார எழுத்துக்களில் ஆர். சுவாமிநாதன் 

1956-ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் மூன்றாம் தினத்தில்…

தெய்வீகப்பாதையின் முதல் மைல் கல்லைத் தாண்டியதாகக் கடவுளுக்கு அறிவிக்கிறோம். 

சான்றிதழுக்கு மதிப்பு கூட்ட வலப்பக்கத்தின் நடுவில் ஒரு பிரகாசமான வட்டம். ரூபாய் அளவில் ஒரு தங்கக்காசைப் பதித்தது போல வெயிலில் பளபளத்தது.  

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.