தமிழாக்கம்: கோரா
- சிறு பனியுகம் எவ்வாறு வரலாற்றை மாற்றியது?-
- நூலாசிரியர்: ஃபிலிப் ப்ளொம்(Philipp Blom)
- நூல் தலைப்பு: “Nature’s Mutiny: How the Little Ice Age of the Long Seventeenth Century Transformed the West and Shaped the Present”
- மதிப்புரை ஆசிரியர்: ஜான் லான்செஸ்டர் (John Lanchester)

பதினான்காம் நூற்றாண்டில் தொடங்கிய மிகு குளிர் வெப்பநிலை நம் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்புகளை சீர்குலைத்தது –மேலும் அது நவீன (modern) உலகு உருவாக தூண்டுகோலாய் இருந்திருக்கலாம்
புவியியல் கால அளவுத் திட்ட (geological time scale ) நெடுகிலும் புவியின் காலநிலைகள் எந்த அளவுக்கு வேறுபட்டு வந்தன என்பதை அரிதாகத்தான் நினைவில் நிறுத்த முடியும். ஏனென்றால் அந்த மாறுந்தன்மையின் (variability) வரம்புகள் சிறிதளவே நம் கற்பனைக்குள் அடங்குபவை. ‘பனிப்பந்து உலகு’ (snowball earth) என்று அழைக்கப்படுகின்ற, வடமுனை முதல் தென் முனை வரை முழுதும் பனிமூடியிருந்த உலகு, எப்படி இருந்திருக்கும் என்று நம்மால் ஊகிக்க முடிவதில்லை – அனைத்திற்கும் மூத்த, அனைத்திலும் நெடிய, முழுமையானது அல்லது கிட்டதட்ட முழுமையானது என்று கருதப்படும் ஹுரோனியன் உறைபனிப்பரவல், 300 மில்லியன் ஆண்டுகள் நீடித்திருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டு இருந்த போதிலும். இன்று ஐஸ் இல்லாத உலகை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது, ஒப்பீட்டளவில் இது மிக:மிக அண்மைய புலப்பாடு(phenomenon) தான் : நாம் வட துருவம் எனக் குறிப்பிடும் அதே இடத்தில் இருந்த நன்னீர் ஏரியில் வெறும் 34 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அநேகமாக முதலைகள் நீந்தி மகிழ்ந்திருக்கும், மற்றும் தென் துருவத்தில் (antarctica) பனை மரங்கள் வளர்ந்து பெருங்காடாகி இருந்திருக்கும். புவிக்கோளின் தட்பவெப்ப நிலைகள்- ஐஸ் இல்லாத நிலைகள், ஐஸ் மூடிய நிலைகள் மற்றும் இடைப்பட்ட நிலைகள் ஆகிய மூன்று நிலைகளில் ஊசலாடி வந்திருக்கின்றன என்பதே உண்மைநிலை. இடைப்பட்ட நிலையே நமது இப்போதைய நிகழ் நிலை- நாம் இடைப்பட்ட வானிலையில் வாழ்ந்து வருகிறோம்- இதன் காரணமாகத்தான் புவிக்கோளின் வானிலை எப்போதும் இணக்கமானதாக மற்றும் நிலையானதாக இருந்து வந்திருக்கிறது என்னும் தவறான புரிதல் பெற்றுள்ளோம்.
மனித வரலாற்றுப் பதிவுகள் கிடைத்துள்ள அண்மைய சுமார் 5000 ஆண்டுகளில்,14-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கி சில நூறு ஆண்டுகள் நீடித்திருந்த காலம் தான், வானிலை எத்தகைய கோர தாண்டவம் நிகழ்த்த வல்லது என்று நாம் சுவைத்தறியக் கிடைத்த காலம். அதுவே சிறு பனியுகம் (Little Ice Age) என்றறியப்படும் கால இடைவெளி. இந்த காலகட்டத்தில், வெப்ப நிலைகள் சுமார் 2°C (3.6°F) அளவு வீழ்ச்சி அடைந்தன..
பனிப்பந்து பூமியின் கடுங்குளிரோடு ஒப்பிடுகையில் இதை மிக மோசமான வானிலை என்று சொல்வதற்கில்லை. ஆனால் இந்த வெப்ப நிலையினூடே வாழ்ந்திருந்த மக்களுக்கு இது ஒரு திடீர் திருப்பம். மேலும் வரலாற்று இடைக்காலத்தின் (Middle Ages) முடிவுக்கும் தற்காலத்திய (modern) உலகின் உதயத்திற்கும் பாலமாக இருந்த காலகட்டம். Nature’s Mutiny: How the Little Age of the Long Seventeenth Century Transformed the West and Shaped the Planet (Liveright) எனத் தலைப்பிட்ட தன் புதிய நூலில் ஜெர்மனியில் பிறந்து வியன்னா-வில் வசிக்கும் வரலாற்றறிஞரான பிலிப் ப்ளம் (Philipp Blom) இவ்வாறு வாதிடுகிறார்: இது வெறும் தற்செயல் இணை நிகழ்வு ( no coincidence) அல்ல – மாறிய காலநிலையால் தூண்டப்பட்ட சமூக, பொருளாதார மற்றும் அறிவாற்றல் (intellectual) சீர்குலைவுகளுக்கும் வளர்ந்து வரும் (emerging) புது யுகத்தின் சந்தைகள், புத்தாய்வு (exploration), மற்றும் நுண்ணறிவார்ந்த சுதந்திரம் (intellectual freedom ) ஆகியவற்றை உள்ளடக்கிய அறிவு ஒளியின் தூண்டலுக்கும் (enlightenment) இடையே ஒரு சிக்கலான தொடர்பு உள்ளது என்கிறார்.
காலநிலை மாற்றத்தின் ஒவ்வொரு பிரச்னை பற்றியும் எவ்வாறு நாம் அடுத்தடுத்து முழுமையான கருத்தொற்றுமை கொள்கிறோம் என்பதற்கு சிறு பனியுகம் ஒரு எடுத்துக்காட்டு. சும்மா நக்கல் செய்கிறேன்(just kidding).. புவி முன்பை விட குளிரடைந்தது என்று நிச்சயமாக அறிந்துள்ளோம்: முந்திய கால வெப்பநிலைகளை மதிப்பிடுவதற்குரிய பல்வகை நுணுக்கங்கள்- எடுத்துக் காட்டாக ஐஸ் உள்ளகங்கள்(ice cores) மற்றும் மர வளையமுறை, (tree rings method)-மூலம் அதற்கான ஆதாரம் காண முடியும். மேலும் கடிதங்கள், நாட்குறிப்புகள், விளக்கப் பேருரைகள் (sermons) ,மது உற்பத்தியாளர்களின் பதிவுகள் போன்ற பற்பல வடிவங்களில் குளிர் தாக்கம் குறித்த விரிவான கையெழுத்து வர்ணனைகள் உள்ளன. குளிர்விப்பு பல கட்டங்களில் நிகழ்ந்தது, தொடக்க வெப்பநிலை வீழ்ச்சி 1300கள் ஆரம்பத்திலும் அடுத்த தெளிவான திடீர்த் தாக்குதல் 1570களில் தொடங்கிக் கிட்டதட்ட 110 ஆண்டுகள் நீடித்தும் இருந்தன. பிந்திய கால கட்டமே ப்ளம் எழுதியுள்ள நூலுக்கு குவியம் வழங்கியுள்ளது. அறிஞரிடையே குளிர்விப்பு நிகழ்வின் உண்மை குறித்த கருத்தொற்றுமை உள்ள அளவுக்கு, அது ஏன் நிகழ்ந்தது என்பது குறித்த ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
சூரியக் கரும்புள்ளி செயல்பாடுகள் குறைந்து அதன் காரணமாக சூரியக் கதிர் வீச்சு குறைந்ததாலோ அல்லது எரிமலை உமிழ்வுகள் பெருகியதாலோ படிப்படியாகக் குளிர்விப்பு நேர்ந்திருக்கலாம் என்பதற்கு சான்று இருக்கிறது. (எனினும் நில அதிர்ச்சி விபத்து மாற்று வழியிலும் ஏற்பட்டிருக்கலாம் என்று ப்ளம் விளக்குகிறார் : கடல் நீரோட்ட மாற்றங்கள், கண்டத் திட்டுகள் மீதான அழுத்தங்களை மாறுபடச் செய்து அதன் விளைவாக அக்கால எரிமலை உமிழ்வுகள் மற்றும் நிலநடுக்கங்கள் அதிகரிப்புக்கு உதவி இருக்கக் கூடும்.) குளிர்விப்புக்கு சிறிதளவாவது மனிதக் காரணங்களும் இருக்கலாம் எனக் கருதவும் ஆதாரம் உள்ளது. கொலம்பஸ்-ன் வருகைக்குப் பின்னர் அமெரிக்க நாடுகளில் எண்ணற்றோர் நோயுற்று மடிந்தனர்- நான்காவது அறிவியல் கணிப்பின் (Quaternary Science Review) மிக அண்மைய ஆய்வுகளின்படி சுமார் 56 மில்லியன்கள் )-மேலும் எத்தனையோ சீர்திருத்தி விளைவித்த நிலங்கள் கைவிடப்பட்டு மறுபடியும் காடாக நேர்ந்ததால், கரியமில வாயுக்கள் அளவிடக்கூடிய அளவில் குறைந்து, புவிக் கோளின் வெப்பநிலையை தாழ்த்தியிருக்கலாம். இத்தகைய சூழலில் ப்ளம் செய்த ஒரு விவேகமான செயல் கொடிய குளிர்காலங்களைத் தூண்டியது எது என்ற கேள்விக்கு இறுதித் தீர்ப்பு வழங்காமல் தவிர்த்தது தான் எனலாம்.
காரணம் எதுவாயினும் விளைவுகள் குறிப்பிடத்தக்கவை.. அடர்த்தியாக குடியேற்றம் நிகழ்ந்துள்ள புவிக்கோளின் வடக்குப் பரப்பான யூரோப் பகுதியே ப்ளம் நூலின் குவியமாக இருந்த போதிலும், சிறு பனியுக விளைவுகள் ஒப்பளவில் உலகளாவியவை என்பதையும் தெளிவு படுத்தியுள்ளார். அன்றும் இன்றும் உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகத் திகழும் சீனாவின் மிங் அரச வம்சம் 1644-ல் வீழ்ச்சி அடைந்ததற்கு சொல்லப்படாத பிற காரணங்களோடு நிலையற்ற விளைச்சலால் அது பலவீனப் பட்டிருந்ததும் ஒரு காரணம். யூரோப்-ல் ஆறுகள், ஏரிகள் மற்றும் துறைமுகங்கள் உறைந்தன. அது தேம்ஸ் நதியில் உறைபனிக் கண்காட்சி போன்ற அதிசய சம்பவங்களுக்கு இட்டுச் சென்றது- இந்த நதியின் லண்டன் ஏற்றவற்றதுக்குள்ளாகும் நீரோட்டக் கால்வாயில் (tideway) பரந்து கிடந்த திறந்தவெளிச் சந்தை (fairground), இயற்கைக்கு மாறான அரிய காட்சி என்ற நிலையைக் கடந்து அவ்வப்போது நிகழும் பழகிய காட்சியாகி விட்டது. (விர்ஜினியா வூல்ஃப் தன் ஒர்லண்டோ நாவலில் இந்த காட்சியை அமைத்தார்.). சிறகுகள் ஐஸ் படிந்து செயலற்றுப் போனதால் பறவைகள் தரையில் விழுந்து மடிந்தன ; ஆடவரும் பெண்டிரும் உடல் சீதள நோயால் (hypothermia) மடிந்தனர்; உறங்கிக் கொண்டிருந்த பிரான்ஸ் மன்னரின் தாடியை உறைபனி கெட்டியாக்கி விட்டிருந்தது. இங்கிலிஷ் வரலாற்று மைய நிகழ்வுகள் சிலவும் சிறு பனியுகத் தொடர்புகளைக் கொண்டிருக்க நேரிட்டது: 1588-ல் இதற்கு முன் எப்போதும் நிகழ்ந்திராத வட துருவ சூறாவளி (hurricane) ஸ்பானிஷ் கடற்படையை (Armada) நிர்மூலமாக்கியது. முந்திய கடும் குளிர் காலத்தைத் தொடர்ந்து வந்த தீவிர வறண்ட கோடை, 1666ஆம் ஆண்டின் லண்டன் பெரு நெருப்பின் (Great Fire of London) காரணியானது. வியக்க வைக்கும் இடங்களில் கடுங்குளிர் காலத்தின் அடிச்சுவடுகள் கண்டுபிடிக்கப் பட்டன. ஏன் பாதி சிறு பனியுகக் காலம் கடந்த நிலையில்தான் இசை வரலாற்றில் வெகு உயர்வாக மதிக்கப்படும் Stradivarius and Guarneri தயாரிப்பு வயலின்கள் வரத் தொடங்கின? “குளிர் காலத்தில் மரங்கள் முதிர்வடைய நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும்; அதன் பலனாக சிறந்த ஒலிப் பண்புக்கூறுகளும் செறிவான ஒத்ததிர்வும் (intense resonance) கொண்ட அடர்வான மரத்தண்டுகள் சிறு பனியுகத்தில் உருவாகின ” என்கிற ஆராய்ச்சி முடிவுகளை ப்ளம் சுட்டிக்காட்டுகிறார்.
கடுங்குளிர் வானிலையின் விளைவாக ஏற்படும் மிகப் பெரும் தாக்கம் அறுவடை சீர்க்குலைவு தான் (குறிப்பாக உணவு தானிய அறுவடை ) என்று ப்ளம் உறுதியாக வாதிடுகிறார். அதுவே யூரோப் முழுவதிலும் மற்றும் அதற்கு அப்பாலும் சமூக அடுக்குமுறையில் (social order) ஒரு அடிப்படை மாற்றத்திற்கு வழி வகுத்தது. சிறு பனியுகம் என்பது மொத்தத்தில் “ஒரு நீண்ட கால கண்டந்தழுவிய வேளாண் நெருக்கடி”என்று ப்ளம் எழுதுகிறார். இந்த 180 ஆண்டுகளில் தானிய அறுவடைகள் ஒருபோதும் பழைய மட்டத்துக்கு திரும்பவேயில்லை. அது சமூக நடைமுறைகள் குறித்த அனைத்தையும் பாதித்தது. இத் தருணத்துக்கு முன்பு யூரோப்பிய வரலாற்றில் சமுதாயம் பெருமளவு நிலப் பிரபுத்துவ வழியில் ஒழுங்குபடுத்தப் பட்டிருந்தது. மக்கள் தொகையில் பெருமளவு, செருக்குடைய மேட்டுக்குடிகளுக்குச் சொந்தமான நிலத்தில் உழைத்து வாழும் உழவர்கள். நகர வாழ்க்கை, இதே சமயம் கட்டுப்படுத்தும் குழுக்களின் (restrictive guilds) ஆளுகையில் இருந்தது. ப்ளம் விவரித்துள்ளபடி, இங்கே சமுதாய மூலதனம்- குடிப்பிறப்பு, குடும்ப அந்தஸ்து, நம்பகத்தன்மை, போட்டி மனப்பான்மை ஆகியவை -மதிக்கப் பட்டன. ஆனால் எவரையும் தன் நிலைக்கு மேல் உயர விடவில்லை.இந்த பல நூற்றாண்டுகள் நீடித்திருந்த தீர்மானிக்கப்பட்ட ஒழுங்கு தடம் புரண்டது. முதலில் பீதிகள்(panics) மற்றும் கலகங்கள் (uprisings), உணவு வெறியாட்டங்கள் (food riots) மற்றும் கிளர்ச்சிகள் (rebellions ) நிகழ்ந்தன; சூனிய வேட்டைகளும் அதிகரித்தன -ஏனெனில் அறிவியல்சார் காலத்துக்கு முந்திய உலகில், விளைச்சல் தவறியதற்கு சூனியக்காரிகள் தான் பொறுப்பாளிகள் என்னும் கருத்து வேறு எந்த விளக்கத்திற்கும் சமமான அர்த்தமுள்ளதாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டது.
எனினும் நாளைடைவில் அதனினும் பெரிய, அமைப்பிற்குரிய (structural) மாற்றங்கள் தோன்றின. நிலப் பிரபுத்துவ முறை வாழ்வின் அடிப்படை ஒப்பந்தத்தின்படி, உழவன் அறுவடையில் ஒரு (⅓) பகுதியை தனக்காக வைத்துக்கொண்டு, இன்னொரு பகுதியை அடுத்த ஆண்டு அறுவடைக்காக நிலத்தில் மீண்டும் விதைத்து விட்டு கடைசி ஒரு பகுதியை நிலக்கிழாருக்கு கொடுத்தான். உழவன் கையில் உபரி தானியம் இல்லாத போது இந்த முறைமை வீழ்ச்சி அடைந்தது. உள்ளூர் பயிர் பொய்த்தபோது தூரத்தில் இருந்து பொருட்களைக் கொண்டுவரும் வெளியூர் வர்த்தகம் மிக அவசியம்.. அதில் பணம், ரொக்கம் அல்லது சம மதிப்புள்ள பொருளைக் கொண்டு வாங்கவும் விற்கவும் கூடிய திறமை அதிக பங்கு வகித்தது. குறிப்பாக வணிகத்தில் தேர்ச்சி பெற்றிருந்த நகரங்கள் இந்த மாற்றத்தால் பயனடைந்தன. “Nature’s Mutiny”யில் (இங்கு மதிப்புரைக்கப்படும் நூல் ), இந்த வளர்ச்சியின் தலை சிறந்த எடுத்துக்காட்டு அம்ஸ்டர்டெம் (Amsterdam). ஹப்ஸ்ப்பர்க் (Habsburg) பேரரசின் மந்தமான உப்பங்கழி நகராக இருந்த நிலை மறைந்து, இன்று வெற்றிகரமான விரைவும் விழிப்பும் கொண்ட பொருளாதார மையமாகி, வேகமாக வளர்ந்து வரும் வணிக வலைப்பின்னல்களுடன் (commercial networks), ஒரு நூற்றாண்டில் 10 மடங்கு மக்கள் தொகை உயர்வு கண்ட பெரு நகராகி இருக்கிறது.
இங்கு சந்தைகளும் சந்தைகளின் சட்டங்களும் பொதுமக்களின் விவகாரங்களில் மேலாதிக்கம் பெற்றவை என்னும் கருத்து உருவாகி இருப்பதைக் காண்கிறோம்; மேலும் இந்த புதிய ஏற்பாடு எவ்வாறு பேராவல் கொண்ட, இரக்கம் இல்லாத, வணிக நோக்குடைய மனிதரைக் கொண்ட குடும்பங்களையும் உருவாக்குகிறது என்பதையும் காண்கிறோம். உலகின் முதன்மையான பெரும் சுரண்டல் இயல்புடைய கடல் கடந்த வாணிகக் கம்பெனிகளில் ஒன்றாகத் திகழ்ந்த டச்சு ஈஸ்ட் இந்தியா கம்பெனியின், (Vereenigde Oostindische Compagnie அல்லது VOC) தலைமையகமாக இருந்த நகர் அம்ஸ்டர்டெம். Jan Pieterszoon Coen என்கிற VOC அலுவலரின் நடத்தை பற்றி நூலாசிரியரான ப்ளம் சொல்லும் கதை இது : இவர் (Coen) இந்தோனேஷிய நகரான ஜாகர்த்தாவை தீயிட்டு கொளுத்தி விட்டுப் பிறகு ஜாதிக்காய் வியாபாரத்தில் டச்சுக்காரர்கள் அனுபவித்து வந்த ஏகபோகத்திற்கு எதிராக இங்கிலிஷ் மற்றும் போர்ச்சுகீஸ் வியாபாரிகளுக்கு ஜாதிக்காய் விற்ற பக்கத்து தீவுகளின் வியாபாரிகளை தண்டிப்பதற்காக அவர்கள் மீது படையெடுத்து அவர்களைத் தூக்கிலிட்டார்.15000 தீவு வாசிகளைக் கொன்றார். தப்பிப் பிழைத்தோரை அடிமை சந்தைக்கு விற்றார். “கடவுள் எங்களை ஆசீர்வதித்து எங்களுடன் இணைந்து போரிட்டதாலேயே என்னால் இந்த சாதனைகளை நிகழ்த்த முடிந்தது” என்று கம்பெனி நெறியாளர்களிடம் அவர் கூறினார். உண்மையாகக் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களைப் பொறுத்தவரை, கடவுள், சந்தையை ஆள்வோர் இருவரும் ஒன்றாகிப் பிரிக்கமுடியாத கூட்டாளிகளாகிவிட்டார்கள். இந்த ஒருங்கிணைவே, மக்கள் மற்றும் இயற்கை வளங்களின் சுரண்டல்களை நியாயப் படுத்தியுள்ளது என்றும் இதுவே தற்கால சூழல் நெருக்கடி தருணங்களுக்கு இட்டுச் செல்லும் என்றும் ப்ளம் வாதிடுகிறார்.
இது பொருளாதார, அறிவியல், தத்துவ, தேடல் (exploration), மதம் மற்றும் அரசியல் ஆகிய அனைத்துப் புலங்களின் முன்னேற்றங்கள் தழுவிய ஒரு பெருங்கதை. ப்ளம், சிறப்பு மிக்க மனிதர்களின் ரத்தினச் சுருக்கமான அழகும் தெளிவும் கொண்ட வாழ்க்கை சரிதங்கள் (life sketches) மூலம் பெரும்பாலான வாதங்களை வாசகருக்கு வழங்குகிறார். தத்துவ அறிஞர் (ஓய்வு பெற்ற படை வீரர்) ரினே டெகார்ட் (Rene Descartes), மந்திரவாதியும் ரசவாதியுமான ஜான் டீ (John Dee), கட்டுரையாளரான மைக்கேல் மோண்டைன் (Michel Montaigne), இயேசு அவையினரும் பன்முக அறிஞருமான அதனாசியூஸ் கிர்ச்சர் (Athanasius Kircher), சமூகத்தில் இருந்து தள்ளி வைக்கப் பட்டவரான யூத தத்துவ அறிஞர் பரூக் ஸ்பினோசா (Baruch de Spinoza), கலைக் களஞ்சியரான பியர் பெல் (Pierre Bayle) மற்றும் டச்சு பொருளாதார உருமாற்றத்தின் புதிய மனிதம் தோய்ந்த இயற்கை காட்சிகளை சித்தரித்தவரும் அவற்றுக்கு உருக்கொடுத்தவருமான தலை சிறந்த ஓவியர் ரெம்பிராண்ட் ஃபான் ரைன் (Rembrandt van Rijn) ஆகியோரை இந்நூலில் சந்திக்கிறோம்.
ஆகவே Nature’s Mutiny (இயற்கையின் கலகம் ) என்னும் இந் நூலின் போக்கில் பழக்கப்படாத கடுங்குளிர் காலநிலை என்ற பாடத்தைக கடந்தும் கணிசமான தூரம் பயணிக்கிறோம். வெகு தூரம் என்று வாசகர் நினைக்கக் கூடும், அதுவும் ப்ளம்-ன் விவாதம் இறுதியாகத் தீர்வு காணப்பட்ட சங்கதி எனக் கவனத்தில் கொள்வதற்காகவே. இவ்வாறான முற்றிலும் நிரூபணப் பிரச்னை என்னும் நோக்கு “இயற்கையின் கலகத்திற்கு” நியாயம் அளிக்காது. புதிய பொருளாதார அமைப்பு மற்றும் அதற்குத் துணை போகும் தத்துவ மற்றும் பண்பாட்டுப் போக்குகளைப் பற்றிய நூல் இது: இங்கு கூறப்படும் கதையில் காலநிலை முக்கியமானது, ஆனாலும் அதன் தொடர்புகள் இயற்கணக்கியல் சார்ந்த தர்க்கம் (algebraic logic) தரக்கூடிய திண்மைக்காக முயற்சிக்கவில்லை. இன்னும் சரியாக சொல்வதென்றால் ப்ளம், தற்போதைய தருணத்துக்குப் பொருத்தமான பெரிய சித்திரம் படைத்துத் தர முற்படுகிறார் எனலாம். அவருடைய நூல் பெருமளவில் இணைப்புகள் மற்றும் சம்பந்தங்கள் பற்றியது, குறைந்தளவே உறுதியான நிரூபணம் தரும் நோக்கம் கொண்டது ;அறிவாற்றல் மனநிலையின் (intellectual mood) வலைப்பின்னல்கள், பெயர்வுகள் பற்றியது; சம்பந்தப்படுத்துதல் அதே அளவுக்கு காரணம் காட்டுதலைப் பற்றியது.. ஆயினும் ப்ளம்-ன் கருதுகோள் சக்தி வாய்ந்தது மற்றும் பொதுவாக அச்சம் தர வல்லதாகவும் சரியான கோணத்தில் வைத்திருந்தால் சிறிது நன்னம்பிக்கை அளிப்பதுமாகத் தோன்றுகிற இரு சாத்தியங்களைக் கொண்டது. இக்கருத்து இவ்விதமாக எழுதப்படலாம் : காலநிலை மாற்றம் அனைத்தையும் மாற்றும்.

மூலக்கட்டுரை: தி நியூ யார்க்கர்– மார்ச் 25,2019 வெளியீடு–கட்டுரை–நூல் மதிப்புரை
****
.Well written article. The approach of Author of the book is interesting. Thank you