அதிரியன் நினைவுகள் – 5

This entry is part 5 of 25 in the series அதிரியன் நினைவுகள்

தமிழாக்கம் : நா. கிருஷ்ணா

சிறு வயதில் எனக்கு கிரேக்கம் கற்றுத் தந்த ஸ்கவ்ரூஸுக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். முன்பின் அறிந்திராத கிரேக்க அரிச்சுவடி எழுத்துக்களை முதன்முறையாக எழுத்தாணியால் முயற்சித்தபோது நான் அறியாச் சிறுவன்: எனதென்று நினைத்திருந்த உலகம் இனியில்லை என்பதுபோல காட்சி மாற்றங்கள், தொலைதூர பயணங்கள் ஆகியவற்றின் ஆரம்பம் அது, தவிர காதலைப்போலவே வேண்டியே ஒன்றை தேர்வுசெய்தாலும் அது அனிச்சையாக அப்போது நடந்து முடிந்தது. நான் கிரேக்க மொழியை நேசித்தேன் காரணம் : திடகாத்திரமான உடலொன்று வளைந்துகொடுப்பதுபோலவிருந்த அதன் நெகிழ்வுத் தன்மை, அடுத்து ஒவ்வொரு வார்த்தையும் நேரிடையாகவோ, பல்வேறு வழிமுறைகளிலோ உண்மைக்கு நெருக்கமாக இருப்பதைப்போன்ற உணர்வைத் தருகிற அதன் சொல்வளம், தவிர மனிதர்கள் கூற்றில் மேன்மையானவை அனைத்தும் கிரேக்க மொழியில்மட்டுமே சொல்லப்பட்டிருந்தன. பிறமொழிகளுக்கும் இப்பெருமைகள் உண்டு என்பதை நானும் அறிவேன். ஆனால் அத்தகைய மொழிகள் இன்று மறைந்துபோயிருக்கும் அல்லது இனிபிறப்பெடுத்தால்தான் உண்டு. எகிப்திய பங்குத்தந்தையர்கள் தங்களுடைய பழம்பெரும் அடையாளச் சின்னங்களை ஒருமுறை என்னிடத்தில் காட்டினார்கள். உரையாடல் என்றபெயரில் உலகத்தையும் பொருட்களையும் வகைப்படுத்துவதற்கு எடுத்துக்கொண்ட மிகப் பழமையான முயற்சி அல்லது மறைந்துபோன இனத்தைக் குறித்த கல்லறைப்பேச்சு என அதனைக் கருத இடமுண்டு, அவை வார்த்தைகளே அல்ல வெறும் குறியீடுகள். யூதப்போரின் போது, ​​யூதமதகுரு யோசுவா (rabbi Joshua) சிறுசமயப் பிரிவான யூத மதத்தில் மனிதஉயிர்களை முற்றாக அலட்சியம் செய்து, அதீத இறைபக்திக்கு மட்டுமே முக்கியத்துவமளித்து யூதர் மொழியில் எழுதப்பட்ட இறைவாசகங்களை சொல்லுக்குச் சொல் பொருள் கூறி எனக்கு விளக்கினார், கெல்ட்டியர்களில்(Celts) பல உட்பிரிவினர் இருந்தனர், இராணுவத்தில் சேர்ந்தபோது அம்மொழிகளெல்லாம் எனக்கு வசப்படடன; குறிப்பாக சில பாடல்களை இன்றைக்கும் நினைவுகூரவியலும். ஆனால் காட்டுமிராண்டித்தனமான மொழிவழக்குகள் பெருமதிப்புக்குரியவை என்பேன் காரணம் எதிர்கால மனிதர் உரையாடலுக்கு வேண்டியவை அனைத்தும் அவற்றில் சேமிப்பாக உள்ளன. மாறாக கிரேக்க மொழிக்கோ ஒருபுறம் மனிதன் இன்னொருபுறம் அரசு, இருதரப்பு அனுபவங்களும் அதன் கருவூலங்கள், புதிதாக எங்கிருந்தும் பெறவேண்டியதில்லை. இயோனிய(Ionians)கொடுங்கோலர்கள், ஏதென்ஸ் நகர சாதுர்யமான பேச்சாளர்கள்; அஜெஸிலவுஸ்(Agesilaus)13 எளிமை, டயோனிசஸ்(Dionysius) அல்லது டிமெட்ரியஸ்ஸின் அல்லது டிமிடர்(Demetrius)14 ஆடம்பரம்; டெமராத்துஸ்(Demaratus)15 துரோகம், ஃபிலொப்பெமென்(Philopmen)16 விசுவாசம்; இவற்றைத்தவிர ஒவ்வொரு மனிதனும் சகமனிதருக்குச் செய்ய நினைக்கிற கெடுதல் அல்லது உதவி அனைத்துமே ஒருமுறையேனும் ஏதாவதொரு கிரேக்க குடிமகனால் ஏற்கனவே செய்யப்பட்டவைதான். நம்முடைய சொந்த தேர்வுகளுக்கும் இதுபொருந்தும் : குறைகாணலில் தொடங்கி இலட்சியம் வரை, பிரோன்(Pyrroh)17 சந்தேகம், பித்தகோரஸின் புனிதக் கனவுகள், நமது மறுப்புகள் அல்லது ஒப்புதல்கள் அனைத்துமே புதிதல்ல; நம்முடைய குறைகள் மற்றும் நற்பண்புகள் கிரேக்கர்களை முன்மாதிரியாகக் கொண்டவை. வேண்டுதல் முறையீடு அல்லது கல்லறை இரண்டிலும் லத்தீன் சொற்களை வடிக்கின்ற அழகுக்கு நிகரானது எதுவுமில்லை, நம்மைக் குறித்து அறியவேண்டிய மொத்தத் தகவலையும் சார்பற்ற கம்பீரத்துடன் அவைச் சுருங்கக் கூறும். இலத்தீன் மொழியில்தான் என்னுடைய பேரரசை நிர்வகித்தேன்; டைபர் நதிக்கரையில் அமைக்கவுள்ள என்னுடைய கல்லறையின் சுவர்கள் இலத்தீன் மொழியில் வடிக்கப்படும் ஆனால் நான் வாழ்ந்தததும் சிந்தித்ததும் கிரேக்க மொழியாக இருந்திருக்கும்.

எனக்கு அப்போது வயது பதினாறு, ஸ்பெயின் (ஐபீரிய) காட்டில் பிரனீஸ் மலைத்தொடரில் முகாமிட்டிருந்த ஏழாவது படைப்பிரிவில் எனது ஆரம்பகால இராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்பியிருந்தேன் , என்னுடைய பயிற்சிகால ஸ்பெயின் பிராந்தியம் இளம் வயதில் நான் அறிந்த தீபகற்ப தென்பகுதிக்கு முற்றிலும் மாறுபட்டது. எனது காப்பாளர் அச்சீலியுஸ் அத்தியானுஸ் (Acilius Attianus), படைமுகாமில் காடுமேடென்று திரிந்து, கோபாவேசத்துடன் வேட்டையாடிக் கழித்த எனது நாட்களை, கல்வியால் ஈடு செய்ய முடியுமென நினைத்தார். ஸ்கர்வுஸ் வற்புறுத்தலுக்கு விவேகத்துடன் எனது காப்பாளரும் இணங்கவேண்டியிருந்தது, அதன்படி தத்துவம், நாவன்மை இரண்டிலும் மிகச்சிறந்த ஆசிரியராகத் திகழ்ந்த ஈசேயஸ் (Isée) என்பவரிடம் பாடம் கற்பதற்கு ஏதென்ஸ் நகரத்திற்கு என்னை அனுப்பி வைத்தார்கள், ஈசேயஸ் ஞானவான், மிகுந்த புத்திசாலி அனைத்திற்கும் மேலாக அறிவைப் பட்டைத்தீட்டுவதில் மேதை. ஏதன்ஸ் நகரை அடைந்த மறுகணம் என்னுடைய மனதைப் பறிகொடுத்திருந்தேன்; நானோ, பிறர் சந்தேகிக்கிற விரும்பத்தகாத தோற்றம்கொண்ட மாணவன், அங்கு நிலவிய கலகலப்பான சூழல், வேகமாக பரிமாறிகொள்ளப்பட்ட உரையாடல்கள், நீண்ட ரம்மியமான மாலைப்பொழுதுகளில் காலாற நடக்கும் தருணம், வேறெங்கும் அறிந்திராத விவாதங்கள், தர்க்கங்கள், கலகலப்பான பொழுதுகள் அனைத்தையும் முதன்முறையாக அங்குதான் சுவைத்தேன். கணிதம், கலை இரண்டுமே சுழற்சிமுறையில் எனது தேடலுகேற்ப தங்கள்பால் அக்கறை கொள்ளவைத்தன. லெயோட்டிசிடாஸ் (Leotichydes) என்பவரிடம் மருத்துவம் படிக்கும் வாய்ப்பும் எனக்கு ஏதென்ஸில் கிடைத்தது . மருத்துவர் தொழில் எனக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும்; அப்பணியின் அடிப்படை அணுகுமுறை, எனது சக்கரவர்த்தி தொழிலுக்கென முயற்சித்து பெற்ற அணுகுமுறையை ஒத்திருந்தது. நிச்சயமற்றத்தன்மையை தவிர்க்கவேண்டி ஆர்வக் கோளாறினால் பிழைகள் இழைக்கத் தள்ளபட்டு, அதேவேளை அதனைக் காலம் தாழ்த்தாமலும், ஒளிவுமறைவற்ற வகையிலும் சரிசெய்வதோடு, நம்முடன் மிக நெருக்கமாக இருக்கிற அறிவியல் என்பதால் எனக்கு மருத்துவ அறிவியலிடத்தில் ஈர்ப்பு உண்டு. லெயோட்டிசிடாஸ் மிகவும் நேர்மறையான பார்வையில் பிரச்சினைகளை அணுகினார்: அவர் எலும்பு முறிவுகளைக் குறைப்பதற்கான ஒரு போற்றத்தக்க முறையை உருவாக்கினார். மாலை வேளைகளில் கடலோரத்தில் நடப்பதெங்கள் வாடிக்கை: பல்துறை அறிவுவாய்ந்த அம்மனிதர் சிப்பிகள், கிளிஞ்சல்ககளின் அமைப்பு மற்றும் கடல் சேற்றின் கலவையில் உள்ளதென்ன ? என்பவற்றிலெல்லாம் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் அவற்றை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்குரிய வழிமுறைகள் அவரிடம் இல்லை; தனது இளமை பருவத்தில் அடிக்கடி செல்ல நேர்ந்த அலெக்ஸாண்ட்ரியா அருங்காட்சியகத்தின் ஆய்வகங்கள் மற்றும் பகுத்தாய்வு கூடங்கள், அங்கு நிலவிய ஆரோக்கியமான கருத்து மோதல்கள், ஞானத்தை வெளிப்படுத்தும் போட்டி உணர்வுகள் ஆகியவற்றையெல்லாம் நினைத்து வருந்துவார். வார்த்தைகளை விட, விடயங்கள் முக்கியம், சூத்திரங்கள் விடயத்தில் ஏன் எச்சரிக்கை தேவை, தீர்ப்பைக் காட்டிலும், நுணுக்கமான பார்வை அவசியம் என்றெல்லாம நமக்குப் போதிக்கிறபோது, நெஞ்சில் ஈரமற்ற மனிதரென அவரை நினைக்கத் தோன்றும். இருந்தும் எனக்கு இதையெல்லாம் போதித்த மொழி எது தெரியுமா ககசப்பான கிரேக்கம்.

அவ் வயதில் என்னைச்சுற்றிலும் கட்டுக்கதைகளுக்குக் குறைவில்லை, இருந்தபோதும் நம்முடைய இளமைக் காலத்தை பொதுவில் வெறுக்கிறேன், அதிலும் என்னுடைய இளமைப்பருவத்தைக் கூடுதலாகவே வெறுத்தேன். மனிதர்வாழ்க்கையில் மிகவும் வியந்தோதப்படுகிற இப்பருவம், என்னைப் பொறுத்தவரை பெரும்பாலும் பக்குவமற்ற குழப்பமானதொரு காலம் ; அது பலவீனமானது, நழுவும் குணத்துடன் ஓட எத்தனிப்பது. எனினும் இதுபோன்ற விதிமுறைகளுக்கிடையிலும் விதிவிலக்காக ஒருசில மகிழ்ச்சிகரமான சம்பவங்களையும், மெச்சத்தக்க ஒன்றிரண்டு விடயங்களையும் நான் கண்டேன், அவை என்னவென்று உனக்குச் சொல்லாமலேயே விளங்கும். அவற்றிலொன்று, மார்க்(Marc) என்கிற நீ தூய்மையில் தோய்ந்த ஒருவனாய் இருப்பாய் என்பதை முன்னதாகவே ஊகிக்கமுடிந்தது. என்னைப் பொறுத்தவரை, தற்போது நான் எப்படி இருக்கிறேனோ அதுபோலத்தான் எனது இருபது வயதிலும் இருந்தேன், ஆனால் திடமற்றவனாக என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். என்னிடமிருந்தவை அனைத்தும் கெட்டவை என்றில்லை, ஒருவகையில் நல்லவை அல்லது உயர்ந்தவை எனறும் கூறமுடியும், ஆனால் அவை எல்லாமே கீழ்மைக்குக் காரணமாகியிருக்கின்றன. நான் நன்றாக புரிந்து வைத்திருக்கிறேன் என்று நினைத்திருந்த இவ்வுலகம் பற்றிய எனது அறியாமை, பொறுமையின்மை, ஒருவித அற்பத்தனமான எனது இலட்சியம் மற்றும் ஒட்டுமொத்த பேராசையென இவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்கிறபோது, வெட்கப் படுகிறேன். உண்மையை ஏன் மறைக்கவேண்டும் ? கடுமையான பணிகளுக்கிடையிலும் ஏதென்ஸ் நகரில் வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும் அளவோடேனும் துய்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, ஆனால் இங்கு நிலைமைவேறு, பிரச்சனை எனக்கு ரோம் நகரமல்ல, இங்கு நிலவிய அரசியல் சூழல் : தொடர்ந்து சாதகமாகவோ பாதகமாகவோ உலக விவகாரங்களின் தலைஎழுத்தை தீர்மானித்தாக வேண்டும், அதிகார எந்திரத்தின் கப்பிகளும் பற்சங்கரங்களும் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்தன, விளைவாக ஏதென்ஸ் நகரம் குறித்த ஏக்கம் எனக்கு இருக்கவே செய்தது. டொமினீத்தியன் அரசாட்சி முடிவுக்கு வரவும், ரோமாபுரியில் ஸ்பெயின் தேசத்து பழங்குடி மரபினரின் ஆட்சி, அதனைத் தொடக்கிவைத்த எனது ஒன்றுவிட்ட சகோதரர் திராயான்(Trajan) கீர்த்தி ரைன்(Rhin) நதிவரை எட்டியிருந்தது. எதிலும் காலதமதங்களின்றி துரிதமாக செயல்படும் உலகத்தோடு ஒப்பிடுகையில், கிரேக்க பிராந்தியத்தின் அசமந்தத்திற்கு, அசுத்தக் காற்றை அது சுவாசித்ததின் பாதிப்பு என நினைக்கத் தோன்றுகிறது. எலேன் (Heliènes- கிரேக்கர்கள்) சந்ததியினர் அரசியல் நடவடிக்கைகளிலும் இதுபோன்று செயலற்றிருப்பதைக் காண ஆளுமையைத் துறந்து அடிமைப் பண்பிற்கு இடம்கொடுத்திருக்கிறார்கள் என்கிற எண்ணத்தைத் தருகிறது. « அதிகாரம் », நாம் முதன்மைபடுத்துகிற « பணம் », பிறர் நம்மை கொண்டாடவேண்டும் என்கிற மன நமைச்சலுக்கு நாம் சூட்டியுள்ள « புகழ் » என்ற அழகான பெயர், இம்மூன்றிலும் எனக்குப் பெரிதும் நாட்டமுண்டு எனபதை நான் மறுப்பதில்லை. இவற்றோடு இணைந்து ரோமாபுரி பற்றிய கருத்தொன்று பரவலாக உள்ளது. நிறைய விவகாரங்களில் ரோம் நகரை உயர்த்திசொல்வதற்கில்லை என்கிறபோதும் அதனை ஈடுகட்ட முக்கிய பிரச்சனைகளில் குடிமக்களின் பங்களிப்பை அது நாடுகிறது, குறைந்தபட்சம் செனட் அவையினரையும்(Sénatoriel) எக்வெஸ்த்ரிஸ் அவை (Equestre) உறுப்பினர்களையும் கலந்து ஆலோசிக்க அது தவறியதில்லை. ஒரு முறை எகிப்து தேசத்திலிருந்து கோதுமையை இறக்குமதி செய்யும் விடயம் பற்றி விவாதிக்க வேண்டியிருந்தது, மிகவு அற்பமானதொரு பிரச்சனை என்கிறபோதும், அது பிளேட்டோ வின் குடியரசு ‘ போதித்த ஞானத்தைக் காட்டிலும் அரசாங்கம்‘ என்ற சொல்குறித்து கூடுதல் புரிதலை அளித்தது. பல வருடங்களுக்கு முன்பு இராணுவ நெறிமுறைகளில் தேர்ச்சிப்பெற்றுத் திரும்பிய ரோமானிய இளைஞனாக இருந்த தருணம் என்னுடைய ஆசான்களுக்கும் மேலாக மன்னர் லியோனிடாஸ் (Leônidas)18 படைவீரர்கள், பிண்டாரோஸ்(Pindarés)19 காலத்து விளையாட்டுவீரர்கள் ஆகியோரைப்பற்றி நன்குபுரிந்து வைத்திருந்ததாக நினைத்தேன். வெப்பத்தில் சிவந்தும், வறட்சியுடனுமிருந்த ஏதென்ஸ் நகரிலிருந்து வெளியேறி முக்காடிட்டதலையும் போர்த்திய உடலுமாக பிப்ரவரி மாதத்துக் காற்றுடன் போராடிக்கொண்டிருந்த மனிதர்கள் வாழ்ந்த ரோம் நகருக்கு வந்தேன். இங்கு ஆடம்பரமும், போகவாழ்வும் சோபையற்றிருந்தன. இருந்தும் இந்நகரிலெடுக்கும் சில முடிவுகள் அற்பமானவை என்றாலுங்கூட உலகின் ஏதோ ஒருபகுதியின் தலைவிதியை அவை தீர்மானித்தன. தவிர மாகாணமொன்றிலிருந்து தலைநகருக்கு வந்த பேராசைமிக்க இந்த இளைஞன் தொடக்கத்தில் முற்றிலும் இழிவான ஆசைகளுக்கென்று தம்மை அர்ப்பணித்துகொண்டு, பின்னர் தனது தவற்றை உணர்ந்து மெல்ல மெல்ல அவற்றிலிருந்து விடுபட்டு மனிதர்களையும் பிறவற்றையும் படிக்கக்கற்று, ஏவலிடவும் அறிந்து பின்னர் அதிகாரமும் உபயோகத்தில் அத்தனை பெரிய பயனை அளிக்கக்கூடியதல்ல என்பதை உணரமுடிந்ததும் இதே ரோம் நகரம்தான்.

ஆட்சி மாற்றத்தின் தயவில், ரோம் நகரில் குடியேறிய பண்புமிக்க நம்முடைய நடுத்தரவர்க்கம் அரியாசனத்தில் அமரச் செய்த பிரயத்தனங்கள் அனைத்தும் சரியெனச் சொல்வதற்கில்லை. சூட்சிகளைக் கொண்டே தங்கள் அரசியல் நேர்மைக்கு வெற்றியைச் சம்பாதிக்க முடிந்தது. எந்தநேரமும் தமக்கு எதுவும் நடக்கலாம் என்ற நிலையிலிருந்த சக்கரவர்த்தி டொமீத்தியனை(Domitian)20 சுற்றிவளைத்து தங்கள் சதித் திட்டத்தை முடித்துவைத்த செனட் (Sénat) சபையினர் ஏற்கனவே படிப்படியாக முழு நிர்வாகத்தையும் தனக்கு வேண்டியவர்களிடம் ஒப்படைத்திருந்தார்கள். அரசுநிர்வாகத்தில் இணைந்த புதிய மனிதர்கள் அனைவரும் எனது குடும்ப உறவுகள், அதிகாரக் கறை அதிகம் இவர்கள்மீது படியாதிருந்தது என்பதன்றி மாற்றப்படவிருந்த மனிதர்களுக்கும் இவர்களுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. எனது ஒன்றுவிட்ட சகோதரர்கள், எனது உறவினர்களுடைய பிள்ளைகளென பலரும் பணிகளை எதிர்பார்த்து காத்திருந்தனர், நேர்மையுடன் அவற்றை நிறைவேற்றவேண்டுமென அவர்கள் கேட்டுக் கொள்ளப் பட்டனர்.

அப்படியொரு பணி, எனக்கும் வாய்த்தது: பரம்பரைச் சொத்துதகராறுகளைத் தீர்த்துவைக்கும் திரிபூனுஸ்(Tribunus)21 ஆக நியமனம் செய்யப்பட்டிருந்தேன். பெரிதாகச் சொல்லிக்கொள்ள முடியாத இப்பதவியை வகித்தபோதுதான் மன்னர் டொமீத்தியனுக்கும் ரோமுக்கும் இடையிலான மரண யுத்தத்தின் இறுதிக்கட்ட சாட்சியமாக இருக்க நேர்ந்தது. ரோமாபுரி இனி அவருக்குச் சொந்தமில்லை என்கிற வகையில் நிலைமை கைமீறிப் போனது, அவருடைய மரணத்தை துரிதப்படுத்திக் கொண்டிருந்த விதியின் திட்டத்திற்கு உடன்படுவதன்றி சக்கரவர்த்திக்கும் வேறு வழிகளில்லை; ஒட்டு மொத்த இராணுவமும் அவரைக்கொல்ல சதிசெய்தது. யுத்தகளத்தைக் காட்டிலும் மோசமான உயிர்ப்பலியுடன் நடந்துமுடிந்த வாட்சண்டைக் குறித்து முழுமையானத் தகவல்கள் என்னிடமில்லை. வேட்டைநாய்கள் சூழ்ந்த விலங்குக்கு உயிர்பிழைப்பதென்பது எப்படி அரிதோ அப்படியொரு தருணமென கொடுங்கோலனான சக்கரவர்த்தியின் முடிவைப் புரிந்துகொண்டு திருப்தியுற்றேன், இருப்பினும் தத்துவ சீடன் ஒருவன் அகங்காரமாக இத்தகைய நிந்தனைகளைச் சொல்லக் கூடாது. அத்தியானுஸ்(Attianus) ஆலோசனைகளுக்கிணங்க அரசியல் விடயங்களில் அக்கறைகளைக் குறைத்துக்கொண்டு, எனது பணியில் கவனம் செலுத்தினேன்.

பணியிலிருந்தேன் எனக் கூறிக்கொண்டாலும், அக்காலக் கட்டத்திலும் பலவற்றை நான் கற்கவேண்டியிருந்ததால், அவ்வருடத்திற்கும் கல்வி பயின்ற வருடங்களுக்கும் அதிக பேதம் கிடையாது: சட்டம் பயின்றவனில்லை, பணிக்காலத்தில்தான் அப்பாடப்பொருள் எனக்கு முதன்முதலாக அறிமுகம்; அதிஷ்டவசமாக தீர்ப்பாயத்தில் சக ஊழியராக நெரேஷியஸ் பிரிஸ்கஸ் (Neratius Priscus) கிடைத்தார். எனக்கு சட்டம்பற்றிய அறிவைக் கற்பிக்க சம்மதித்ததோடு, தமது இறுதிக்காலம் வரை எனது சட்ட ஆலோசகராகவும், நண்பராகவும் அவர் இருந்தார். மிகவும் அரிதான மூளை அவருடையது. சம்பந்தப்பட்ட துறையில் ஆழமான ஞானம் அவருக்கு உண்டென்பதோடு எந்த ஒன்றையும் சராசரி மனிதர்களைப்போல மேலோட்டமாக அணுகாமல் ஆழமாக காணமுற்பட்டவர். தவிர, அதன் உட்பொருள் ஒப்பீட்டு மதிப்பை, பொருட்களின் வரிசைக்கிரமத்தில் நிறுத்தி மனிதர்களின் மொழியில் அளவிட்டார். சமகாலத்தவர்களில் எவரையும் விட நடைமுறைச் சட்டத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர் இருந்தும், பயனுள்ள புதியவகை சட்டங்கள் அறிமுகமானபோது தயக்கமின்றி அவற்றை வரவேற்றார். பின்னாளில், சில சீர்திருத்தங்களைக் என்னால் கொண்டுவர முடிந்ததற்கு அவரே காரணம். வேறு சிலவற்றையும் இங்கே நினவு கூரவேண்டும். நான் ரோம் நகர வாசியல்ல, பேரரசின் மற்றொரு பிராந்தியத்திலிருந்து வந்தவன், எனவே எனது உச்சரிப்பில் எங்கள் மாகாணத்தின் சாயலிருந்தது; நீதிமன்றத்தில் எனது கன்னிப்பேச்சு பார்வையாளர்கள் நகைப்புக்குக் காரணமானது அவ்வகையில்தான். இந்நிலையில் எனது குடும்பம் அவதூறுகளுக்கு ஆளாக நேரிடும் என்பது தெரிந்தும் (நாடக) நடிகர்களுடன் இருந்த என்னுடைய தொடர்பை எனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டேன். பலமாதங்கள் நீடித்த பேச்சுக் கலை பயிற்சி மிகவும் கடினமானது என்கிறபோதும், எனது பணிக்கு அது சுவைசேர்த்தது, தவிர எனது வாழ்க்கை ரகசியங்களில் மிக நன்றாகக் கட்டிக்காக்கபட்டதும் அதுதான். கூடாஒழுக்கங்கூட ஒருபடிப்பினையாக மாறியதும் மிகவும் கடினமான இக்காலகட்டங்களிலேயே : எவ்விதக் கவலையுமின்றி சுற்றித்திரியும் ரோம் நகர இளைஞனாக இருப்பதற்கு நானும் முயற்சித்தேன்; ஆனால் அதில் நான் முழுமையாக வெற்றி பெற்றேன் என்பதற்கில்லை. பிறகு இளம் பிராயத்திற்கே உரிய திடமற்ற மனதோடு, உடல் சார்ந்த துணிச்சலை வேற்றிடங்களில் செலவழிக்க நேரிட்டதாலும் என்மீதே எனக்கு முழுமையான நம்பிக்கை வந்ததில்லை; மற்றவர்களை ஒத்திருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன் என் இயல்பைக் கூட்டுவதும் குறைப்பதுமாக இருக்கப்போக இளமைப் பருவத்தில் உண்மையில் நான் நானாக இருந்தது குறைவு.

தொடரும்….

————————————————————————

பிற்குறிப்புகள்

13. அஜிசிலேசியஸ்(Agesilaus கி.மு 399- கி.மு 358)பண்டைய கிரேகத்தின் ஸ்பார்த்தா பிரதேச அரசன்

14. அ. டயோனிசஸ்-Dionysus கிரேக்க புராணீகதைப்படி திராட்சை, ஒயின், போகம் ஆகியவற்றின் கடவுள். ஆ. டிமிடர்(Demetrius) பண்டைய கிரேக்க விவசாயக் கடவுள்.

15. டெமராத்துஸ் (Demaratus), பண்டைய கிரேக்க ஸ்பார்த்தா அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் அப்போதைய மன்ன னுடனிருந்த சொந்தப் பகையின் காரணமாக எதிரிப்படையான பார்சீகத்துடன் சேர்ந்து போரிட்டு, கிரேக்கம் தோற்க காரணமானவர்.

16. பிலொபெமென்(Philoemen கி.மு253 – கி.மு 183) பண்டைய கிரேக்க இராசதந்திரி, படைத் தளபதி.

17. பிரோன் – Pyrrohn (B.C.360 – B.C.270) கிரேக்க ஐயுறுவாத மெய்யியலாளர்.

18.லியோனிடாஸ் – Léonidas (B.C.489-B.C.480) பண்டைய கிரேக்க ஸ்பார்த்தா மன்னர் பாரசீகத்திற்கு எதிராக போரில் இறங்கியவர்.

19. பிண்டாரோஸ் – Pindarés கி.மு 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க கவிஞர்.

20. டொமித்தியான் -(Domitian AD.51 – 96 ) ரோமானிய மன்னர்.

21. திரிபுனூஸ் அல்லது ட்ரிபூன் (Tribunus) பண்டைய உரோமைகுடியரசு தீர்ப்பாய நடுவர்கள்.

Series Navigation<< அதிரியன் நினைவுகள் – 4அதிரியன் நினைவுகள் – 6 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.