
1. அலை
சிறு நண்டும் என் சிண்டும்
அலையிலிருந்து
அலைக்கு ஓடி க்கொண்டிருக்க..
கண்களாலும் மனதாலும்
கடலின் கடைசியை தேடிக்கொண்டிருக்கிறேன்..
இருப்பின் பொருளின்மை
முடிவற்று போய்…
மணல்கையோடு..
“ம்மா..இங்க பாறேன்”
சிறு தாமரை விரலிடை
நடுவே குறுமணலோடு
சிறுசிப்பி..
“..ஐ..கொடேன்..
அம்மா பாக்கிறேன்”
“ம்..எனக்கு,
சரி.. சும்மா காசு கொடு”
எவ்ளோ வேணும்?
“இவ்ளோ”..கையிரண்டும்
இருதிசை காட்டி..
இழுத்து அணைத்து இறுக்கி
“இந்த சிப்பி என் வாழ்வு விலை பெறும்
பெண்ணே” என்றேன்.
2. கருப்பை காய்தல்
மாதத்தில்
ஒரிருநாட்களில்
பட்டாம்பூச்சியின்
சிறகுகள் அவள்
அடிவயிற்றில் …
சிறிது கன்னியாகிறாள்
கனவுக்கண்களோடு
அலைகிறாள்..
கொஞ்சம் உன்னித்துப்
பார்த்தால்
கண்ணின் ஓரத்தில்
சிறிது காதல் கசிவுகூட
உண்டு..
ஆனால் திடீர் பிசாசு ஒன்று
மட்டும் சொல்லாமல்
வந்து அருளுகிறது
அவளுக்கு..
சுற்றியிருக்கும் நாங்கள்தான்
கயிறெடுத்துக்
கட்டிக்கொள்கிறோம்.
3. வீடு
என் வீடு போல் அவள் வீடல்ல..
அவளைப் போல் மற்றவளுடையதுமில்லை..
எல்லாருடையதும் அப்படித்தான்..
எதனால் வீடாகிறது ஒவ்வொன்றும்?
எதனையும்விட முக்கியமென்று
எவனொருவனோ நெருப்பமைத்துப்
போயிருக்கிறான்..
அதன்றி வீடொன்றில்லை.
4. மதுரம்
விரல் பூக்களில்
மொய்க்கிறது சிட்டு
நெஞ்சக்கூட்டினில்
சேர்கிறது தேன்
இமைகளின்மேல்
இரு சூரியர்கள்
நெற்றிப்பொட்டில்
நீலம்..
தேன்கூட்டின்
பீடத்தில் மட்டும்
தீரா ஏக்கம்.
வாழ்த்துக்கள்.