வானம் பொழிகிறது பூமி விளைகிறது

1959 மே மாதம் 16, சனிக்கிழமை.

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான தினம். அப்போது ஐந்தில் இருந்து பன்னிரண்டு வயதுக்குள் தமிழ்நாட்டில் இருந்த பையன்களைக் கட்டபொம்மன் கட்டிப்போட்டது போல வேறு எந்தத் திரைப்படமும் ஒரு குறிப்பிட்ட வயதினரைத் தாக்கியது இல்லை. அவர்களுக்கு வசனம் மனப்பாடம். இப்போதும் தூக்கத்தில் எழுப்பிக்கேட்டால், ‘வானம் பொழிகிறது… உனக்கேன் கொடுப்பது கிஸ்தி… கஞ்சிகலயம் சுமந்தாயா?… மஞ்சள் அரைத்துப்பணி புரிந்தாயா… மாமனா?மச்சானா?’ அப்படியே உணர்ச்சிகரமாக ஒப்பிக்க முடியும். ‘துணிந்தவனுக்குத் தூக்குமேடை பஞ்சுமெத்தை’ என்ற வாசகமே கண்ணீரைப் பெருக்கும்.

கவிஞர் வைரமுத்து அத்தாக்கத்துக்கு உள்ளானவர்.

இந்தப்படம் வெளிவந்தபோது எனக்கு வயது ஐந்து. இன்று நான் இந்தப்படத்தை பத்துமுறையாவது பார்த்திருப்பேன், என் வாழ்க்கையில். பத்து முறை பார்க்கிறபோதும் நான் அடைகின்ற உணர்ச்சி என்ன தெரியுமா? முதல்முறை சிலிர்த்த சிலிர்ப்பு, முதல்முறை பெற்ற உணர்ச்சி, முதல்முறை அடைந்த பரவசம், முதல்முறை அடைந்த திகில் திகைப்பு – அத்தனையையும் இந்த அறுபத்தியோராவது வயதிலும் நான் அடைகிறேன் என்றால் அது தான் இந்த நாயகனின் (சிவாஜி கணேஷனின்) சிறப்பு.

சினிமா வெளியான முதல்நாளே அதைப் பார்ப்பதில் பல லாபங்கள். படம் பிரகாசமாகக் கோடுகள் விழாமல் இருக்கும். ஒலி பிசிர் இல்லாமல் காதில் விழும். ஃபில்ம் அறுபட்டு திரை இருண்டு மக்கள் சீட்டி அடிக்க மாட்டார்கள். பார்த்துவிட்டு வந்த பிறகு பத்திரிகைகளில் விமரிசனம் படித்து மதிப்பீடுகளை ஒப்பிடலாம். எல்லாவற்றையும் விட நண்பர்களிடம் பெருமை.

குமரநாதனின் தெருவிலேயே அவன் வயது ஜெயப்பா: ‘நான் சம்பூர்ண ராமாயணம், குணசுந்தரி ரெண்டையும் ரிலீஸ் ஆன அன்னிக்கே பார்த்தேனே.’

இரண்டு என்ன பத்துப்பன்னிரெண்டு படங்கள், நாடோடி மன்னன் உட்பட, வெளியிட்ட தினத்திலே பார்த்தவர்கள் குமரநாதன் வகுப்பில். அந்தப் பேச்சு வரும்போது அவர்கள் செய்யாத காரியம் எதையாவது அவன் செய்திருந்தால் – கணக்கில் ஒருமுறை நூறு மார்க் எடுத்தது -அதை ஞாபகப்படுத்திக் கொள்வது வழக்கம்.

அதுவரை குமரநாதனின் ஆசை நிறைவேறாததற்குப் பல தடங்கல்கள்.

அவன் தனியாகப் போக அனுமதி இல்லை. அப்பா கூட வரவேண்டும். அப்பாவுடன் அம்மா. அத்தை, அவள் பெண்கள் சௌந்தரம், சங்கரி. அப்பா முப்பது பைசா டிக்கெட்டுக்கு வரமாட்டார். ஆறு பேருக்கு அறுபது பைசா, கட்டுப்படியாகாது. அப்பாவுக்குக் கூட்டமும் ஒத்துக்கொள்ளாது. ‘இரண்டு வாரம் போகட்டும். ஈ ஓட்டுவான். அப்ப யாரையும் இடிக்காம உட்காரலாம். எவனும் தலையைத் தூக்கி மறைக்கமாட்டான்.’

தீபாவளி நாளில் புத்தாடை அணிந்து பட்டாஸ் வெடித்து பிரகாசமாக மத்தாப்பு கொளுத்துவதைவிட்டு இருண்ட அரங்கில் சினிமா பார்ப்பதில் அர்த்தம் இல்லை. தமிழ் வருஷப்பிறப்பின் போது ஆண்டுத்தேர்வுகள் நடந்துகொண்டு இருக்கும். ‘பரீட்சை முடிஞ்சப்பறம் தான் சினிமா’ என்ற அப்பாவின் ஆணையை எதிர்க்க முடியாது.

அந்தக் கோடை விடுமுறையின் பாதியிலேயே தீர்மானித்துவிட்டான். பதினோரு வயதான அவன் வீரபாண்டிய கட்டபொம்மனை முதல் நாளே பார்க்கப்போகிறான்.

முதலில் அம்மாவைத் தன் பக்கம் இழுக்க வேண்டும். பச்சை மிளகாயோ கொத்தமல்லியோ இல்லை என்பது சமைக்கும்போது தான் அம்மாவுக்கு ஞாபகம் வரும். “நாடார் கடைலேர்ந்து” என்று அவள் ஆரம்பிக்கும்போதே காசும் பையுமாகத் தெருவில் கால்வைத்தான். படத்துக்கு நான்கு நாள் முன்னதாகவே,

“சனிக்கிழமை வாசுவும் தியாகுவும் கட்டபொம்மன் பார்க்கப் போறாங்களாம்.” குரலின் கெஞ்சலில், ‘நானும்?’

பெரிய பையன்களின் துணையுடன் தான் போகிறான் என்பதால்,

“முப்பது பைசா டிக்கெட் தானே!”

“ஆமா” என்று மென்றுவிழுங்கினான். வாசு பின் வரிசைக்குத்தான் போவான் என்று தெரியும். அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.

முதல்படி தாண்டியாகிவிட்டது.

குமரநாதன் வீட்டில் சினிமாவுக்கு சில விதிகள்.

போவதற்கு முன் தயிர் சாதம். திரும்பிவந்ததும் ஒரு தம்ளர் மோர். மறுநாள் வீட்டில் தங்கியவர்களுக்குக் கதை சொல்ல வேண்டும். கடைசி காரியம் தான் சிரமம். நடுநடுவில் நிறுத்தி சங்கரி விவரம் கேட்பாள். ‘குளிகை சாப்பிட்டதுமே ராணி கிளியா மாறிட்டாளா? அது எப்படி?’ பதில் தெரியாமல் அவன் முழிப்பான். இந்த தடவை. கவனம் சிதறாமல் திரையில் வைத்த கண் எடுக்காமல்…

காதில் விழுந்த வார்த்தைகள் தன் நம்பிக்கையைக் குலைக்காதபடி பார்த்துக்கொண்டான்.

“கட்டபொம்மனுக்கு ரொம்ப கும்பலா இருக்குமாம்.”

“நாடோடி மன்னனை விடவா? முதல் நாள் திண்டுக்கல் சாலையில இந்தப்பக்கம் அந்தப்பக்கம் கால்வைக்கமுடியல.”

“அப்படித்தான் பேசிக்கிறாங்க.”

முந்தைய தினம், தியாகுவின் அப்பா கௌன்சிலர் என்பதால் அவர்வழியாக அவர்களுக்குக் கிடைத்த தகவல்.

“அறுபது பைசா டிக்கெட்லேர்ந்து எல்லாத்தையும் வித்திட்டாங்களாம்.”

“அப்ப முப்பது பைசா பெஞ்ச் மட்டும் தான்.”

“அதுக்கு மத்தியானம் மூணு மணிலேர்ந்து நிக்கணும்.”

“அவ்வளவு சீக்கிரம் என்னால வரமுடியாதே” என்றான் குமாரநாதன். அழுகை வரும்போல் இருந்தது.

என்ன செய்யலாம்? வாசு வழிகண்டுபிடித்தான்.

“பசூதியைப் பிடிப்போம்.”

கரூரில் இருந்து அமராவதி ஆறு பிரித்த அந்த சிற்றூரில் வீட்டிற்கு ஒரு பசுபதி. இதை வீடு என்று சொல்வதற்கு இல்லை. குட்டி மண்சுவர்களுடன் குடிசை. அப்போது வறுமைக்கோடு என்று ஒன்று இருந்தால் அந்தக் குடிசைக்கு எட்டாத உயரத்தில் போகும். ஆனாலும் அதில் ஒரு பசுபதி. அவன் அப்பாவுக்கு வைதிகத்துக்குத் தேவையான ஞாபகசக்தி மிகக்குறைச்சல். விருந்து சமையலுக்கு ஒத்தாசை மற்றும் பிராமணார்த்த சாப்பாடு அவர் வரும்படி. பசூதியின் சினிமா ஆசைக்கு எடுபிடி வேலை. யாருக்காவது வயிறு சங்கடம் செய்தால் செட்டியார் கடையில் இருந்து கோலி சோடா வாங்கிவந்து, அது காலியானவுடன் அதைத் திருப்பிக்கொடுத்தல். கல்யாண வீட்டிற்கும் மாப்பிள்ளை குடும்பத்தினர் தங்கியிருக்கும் இடத்திற்கும் தகவல் பரிமாற்றம்.

“நாம ஒத்தொத்தரும் நாற்பது பைசா போடுவோம். மாட்டினி ஆரம்பிச்சதும் குகையைத் திறப்பாங்க.”

‘குகை’ டிக்கெட் ஜன்னலை எட்டுவதற்கு முன் பல திருப்பங்களுடன் கையை நீட்டமுடியாத, காற்றும் வெளிச்சமும் நுழையப் பயப்படும் குறுகலான சந்து.

“பசூதி க்யுல நின்னு நாலு டிக்கெட் வாங்குவான். நாம நிதானமா ஐந்து மணிக்குக் கிளம்பி அவனைப் பிடிப்போம்.”

திட்டம் குமரநாதனுக்குப் பிடித்திருந்தது. அம்மாவிடம் இருந்து இன்னொரு பத்து காசு.

அந்தத் திருநாளில் தயிர் சாதம் சாப்பிட்டுவிட்டு, பொங்கலுக்குத் தைத்த சட்டை அரை நிஜாருடன், அப்பா வருவதற்கு முன்பே கிளம்பினான். ஒருவேளை, ‘எதுக்கு கும்பல்லே அடிதடி. நான் அடுத்த வாரம் கூட்டிண்டு போறேன்’ என்று அவர் தடுத்துவிடலாம்.

அமராவதியில் தண்ணீர் அதிகம் இல்லை. மணலில் நடந்து ஆற்றைக் கடந்தார்கள்.

“நான் கடைசியா ‘கல்யாண பரிசு’ பார்த்தேன், திருச்சியில. நீ?”

குமரநாதன் பெருமையாகச் சொல்ல. “நல்ல தீர்ப்பு”.

பாலத்தடியில் படிகள் ஏறி சாலைக்கு வந்ததும்… பகீர்!

கொட்டகையின் நுழைவிடம் தெரியவில்லை. அதற்கு முன்னால் மனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள். அத்தனை பேருக்கு இங்கே என்ன வேலை?

அங்கொன்றும் இங்கொன்றுமாக போலிஸ் தலைகள்.

வாசு, “என் கையை பிடிச்சிண்டு வாங்கோ!” என்றான்.

பிரிந்துவிடாமல், மனித கும்பலைப் பிரித்து கொட்டகையின் அகன்ற கேட்டின் பக்கத்தில் போய் நின்றார்கள்.

“மாட்டினி முடிஞ்சதும். கூட்டம் வெளிலே வரும். அதுவரைக்கும் இங்கே காத்திண்டிருப்போம்.”

சூரியன் மஞ்சளைப் பரப்பியதும், முதலில் மாடியில் இருந்து வெளியே வந்த பணக்கார கும்பல்.

தரைமட்டத்துக் கதவுகள் திறந்ததும் புரிபடாத பேச்சு ஒலிகள். கண்ணீர் ததும்பிய முகங்கள்.

நுழைவு வாசல் திறந்து மனித வெள்ளம் வடிந்தது. உள்ளே சென்று குகையின் வெளித்திறப்பைப் பார்த்தபடி நின்றார்கள்.

குகைக்குள் பசூதி எங்கேயோ நிற்கிறான்.

டிக்கெட்டுடன் வெளியே வரத்தொடங்கினார்கள். வியர்த்து விறுவிறுத்த ஆனால் ஆனந்த முகத்துடன். குமரநாதன் எண்ணினான். ‘ஒன்று இரண்டு … பத்து…’

“சீக்கிரமே டிக்கெட் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க” என்று ஒருவன்.

“ஒருத்தன் சூட்டில மயக்கம்போட்டு விழுந்திட்டான்” என்று இன்னொருவன்.

வாசு முகத்தில் கலவரம். அவன் தான் இந்தத் திட்டத்தை உருவாக்கியவன். பசூதிக்கு பன்னிரண்டு வயது உயரம், எட்டு வயது உடல் மெலிவு.

டிக்கெட் இல்லாவிட்டாலும் பசூதி உருப்படியாக வந்தால் போதும்.

‘எண்பத்திநான்கு…’

வேட்டி சட்டை, அரை நிஜார் முண்டாசு… எல்லாருமே வளர்ந்த ஆட்கள். அவர்களால் நசுக்கப்பட்டு, சட்டையை இடுப்பில் கட்டிக்கொண்டு பூணூல் தொங்கிய மார்புடன்,

“தொண்ணூத்தி ஏழு: பசூதி வந்துட்டான்.”

மூன்று ஒருமித்த, “அப்பாடா!”

“ஆ… ஆ… ஆளுக்கு ஒரு டிக்… டிக்… டிக்… கெட் தான். நின்னதுக்கு ஒண்ணாவது இருக்கட்டும்னு-“

மீதி தொண்ணூறு பைசாவை வாசுவிடம் கொடுத்தான். டிக்கெட்டை தியாகு சட்டைப்பையில் பத்திரப்படுத்தினான். அங்கே நடந்ததையும் வாசுவின் வாளிப்பான உருவத்தையும் உயரத்தையும் கையில் கட்டிய கடிகாரத்தையும் கவனித்த ஒருவன்,

“டிக்கெட் வேணுமா?”

அவன் கையில் சீட்டாட்டத்துக்கு விரித்ததுபோல ஏழெட்டு டிக்கெட்கள்.

“எவ்வளவு?”

“ஒரு டிக்கெட்டுக்கு ஒண்ணே கால் ரூபா. மூணா எடுத்தா ஒண்ணெண்ணும் ஒரு ரூபா.”

வாசுவுக்கே அது அநியாயமாகப் பட்டது.

“வேணாம்பா.”

“சரி. நீங்க நாலு பேர். உங்க கையில ஒரு டிக்கெட் தானே இருக்கு. நான் அதை வாங்கிக்கறேன். முழுசா ஒரு ரூபா.”

படம் ஆரம்பிக்க இன்னும் அரைமணி. அதற்குள் அதன் மதிப்பு இன்னும் ஏறும்.

போலிஸ்காரன் அவர்களைக் கடந்துசென்றான்.

“அவன் கண்டுக்க மாட்டான். கவலைப்படாதீங்க! “

நம்பிக்கை தர ஒரு ரூபாய் நோட்டை நீட்டினான்.

“நான் ஏமாத்த மாட்டேன். பேச்சு சொன்னா சொன்னது தான்.”

ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“எழுபது பைசாவோட பத்து சேர்த்தா ஆளுக்கொரு ஐஸ்க்ரீம்.”

எதிரிலேயே ‘சிட்டி கேஃப்’.

குமரநாதன், “வேண்டாம். கட்டபொம்மன் பணிஞ்சுபோகாம உயிர்கொடுத்த வீரன். ப்ளாக்ல விக்கறது நியாயமில்ல. ‘காந்தி படத்துக்குக் கீழே லஞ்சம் வாங்கறான்’னு என் அப்பா ஒருத்தனை சொல்வார். அது மாதிரி. டிக்கெட் யாராவது ஒருத்தருக்கு” என்றான்.

வாசுவுக்கும் அது சரியாகப் பட்டது.

நேரத்தை வீணாக்காமல் தரகன் அகன்றான்.

நால்வரில் யார்?

“முதல்ல கும்பல்லேர்ந்து கொஞ்சம் தள்ளிப்போவோம்.”

தெருவுக்கு வந்து பாலத்தின் ஓரத்தில் நின்றார்கள்.

சாட் பூட் த்ரீ…

இரண்டு சுற்றில் தியாகுவும் வாசுவும் அவுட்.

குமரநாதன், பசூதி.

வாசு பையில் இருந்து பத்து பைசா நாணயத்தை எடுத்து வலது உள்ளங்கையில் இறுக்க மூடி. குமரநாதன் முன் நீட்டினான்.

“குமா! பூவா தலையா?”

அவன் யோசிக்கக்கூட இல்லை.

“பசூதி போட்டும். நான் அடுத்த வாரம் பார்த்துக்கறேன். அவன் மூணு மணி நேரம் காற்றோட்டம் இல்லாம நின்னிருக்கான்.”

“நி… நி… நி… நிஜமாவா? நா… நா… நா… ன் ரிலீஸ் அன்னிக்கி சினிமா பா… பா… பா… பார்த்ததே இல்ல.”

“இன்னிக்கி பார்!”

இடுப்பில் கட்டிய சட்டையை மாட்டிக்கொண்டு தியாகு எடுத்துக்கொடுத்த டிக்கெட்டுடன் ஓடுவதற்குக் காலை அகட்டிவைத்தான்.

“நில்லுடா!”

திரும்பி நின்றான்.

“இந்தா இருபது பைசா. வெறும் வயத்தில இருக்காதே! எதாவது வாங்கி சாப்பிடு!”

அதையும் வாங்கிக்கொண்டு அவர்களைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே ஓடினான்.

இருட்டிவிட்டதால் பாலத்தின் மேல் நடக்கத் தொடங்கினார்கள். குமரநாதன்,

“ஃபர்ஸ்ட் ஃபார்ம் பொதுத்தமிழ்ல முதல் பாடம் கொலம்பஸ். கணபதி ஐயா அதுக்கு பதிலா ‘முதல் சுதந்திரப்போர்’னு வேறொரு பாடத்தை நடத்தினார். கட்டபொம்மன் பத்தி அதில விவரமா போட்டிருந்தது. அதை இருபது தடவையாவது படிச்சிருப்பேன். கட்டபொம்மனுக்கு அப்புறம் அவனோட தம்பி ஊமைத்துரையும்…”

One Reply to “வானம் பொழிகிறது பூமி விளைகிறது”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.