யார் ஐரிஷ்காரர் ?

தமிழாக்கம் : மைத்ரேயன்

சீனாவில ஜனங்க சொல்வாங்க, இனக்கலப்புல பொறக்கற குழந்தைங்க புத்திசாலிங்களா இருப்பாங்கன்னு. என்னோட பேத்தி சோஃபி நிச்சயமா சாமர்த்தியசாலிதான். ஆனால் சோஃபி பிடாரியாவும் இருக்கா, என்னோட பொண்ணு நேட்டலி மாதிரியோ, என்னை மாதிரியோ இல்லை அவள். நான் வாழ்நாள் பூரா கடுமையா வேலை செஞ்சவ, அதோட நெருப்பா இருந்தவ. என் புருஷன் எப்பவும் சொல்வார், என்னைப் பார்த்தா அவருக்குப் பயம்பார், எங்களோட ரெஸ்ட்ராண்ட்ல மேஜை துடைக்கிற பையங்க, சமையல்காரங்க எல்லாரும் என்னைப் பாத்தா பயப்படுவாங்க. பாதுகாப்புத் தரோம்னு சொல்லிப் பணம் பிடுங்க வருவாங்களே பேட்டை ரௌடிங்க, அவங்க கூட என் புருஷன் கிட்டேதான் பேசுவாங்க. நான் இருக்கச் சொல்ல, அவங்க வர மாட்டாங்க. தப்பி வந்துட்டாங்கன்னா, நிறைய சாப்பாட்டைக் காசு கொடுத்து வாங்குவாங்க. அவங்களோட அம்மாக்களைப் பத்திப் பேசுவாங்க. ஓ, என் அம்மாவுக்கு மூட்டுவாதம் இருக்கு, மூலிகை மருந்து வாங்கணும்னெல்லாம் சொல்வாங்க. ஓ, என் அம்மாவுக்கு வயசாயிக்கிட்டு இருக்கு, தலைமுடியெல்லாம் முழுக்க வெள்ளையாச்சு…

நான் அப்பச் சொல்வேன், உன் அம்மாவோட முடி வெள்ளையாத்தான் இருந்துச்சு, ஆனா இப்ப நல்லா சாயம் அடிச்சு முழுக் கருப்பாயிடுத்து. நீ ஏன் வீட்டுக்கு அப்பப்ப போய், பார்த்துட்டு வரக் கூடாது? கன்ஃபூசியஸ் சொல்றாரு, பெத்தவங்களுக்குக் கடமைப்பட்ட பிள்ளைக்கு அம்மாவோட முடி என்ன நிறம்னு தெரியும்ங்கறாருன்னு அவங்க கிட்டே சொல்வேன்.

என் பெண்ணும் நெருப்பாத்தான் இருக்கா, அவ ஒரு பாங்க்ல வைஸ் ப்ரஸிடெண்ட் இப்ப. அவளோட வீடு ஆளாளுக்கு தனி அறை இருக்கற அளவுக்குப் பெரிசாத்தான் இருக்கு, என்னையும் கணக்கில சேர்த்துத்தான் சொல்றேன். ஆனால் சோஃபி, நேட்டலியோட புருஷன் குடும்பத்தைத் தான் கொண்டிருக்கா. அவங்க குடும்பத்துப் பேரு ஷே. ஐரிஷ்காரங்க. நான் எப்பவும் நினைச்சது என்னன்னா, இந்த ஐரிஷ்காரங்களும் சீனாக்காரங்க மாதிரிதான், ரயில் பாதை போடறதுல பாடுபட்டு உழைச்சவங்கன்னு. ஆனா இப்ப எனக்குத் தெரியுது சீனாக்காரங்க ஏன் ஐரிஷ்காரங்களைத் தோற்கடிக்கறாங்கன்னு. எல்லா ஐரிஷ்காரங்களும் இந்த ஷே குடும்பம் மாதிரி இல்லைதான், நிச்சயமா அப்படி இருக்க மாட்டாங்க. என் பொண்ணு சொல்றா, நான் சும்மா வாய்க்கு வாய் ஐரிஷ் இப்படி, ஐரிஷ் அப்படின்னு சொல்லக் கூடாதுங்கறா.

இந்த ஊர் ஜனங்க வாய்க்கு வாய் சீனாக்காரங்க இப்டி, சீனாக்காரங்க அப்டின்னு சொல்றப்ப உங்களுக்குப் பிடிச்சிருக்கா அதுன்னு அவ கேட்கறா.

உங்களுக்குத் தெரியுமா, பிரிட்டிஷ்காரங்க சீனாக்காரங்களை எப்படி அழைக்கிறாங்களோ அதே மாதிரிதான், ஐரிஷ்காரங்களையும் ஹீதன்னு அழைக்கிறாங்க.

ஓபியம் போர்கள்தான் மோசம்னு நீங்க நினைக்கிறீங்க, பிரிட்டிஷ்காரங்களுக்கு அடுத்த வீட்டிலயே வசிக்கணும்னா அதைப்பத்தி என்ன நினைப்பீங்க?

அதோட முடிஞ்சது. என் பொண்ணுகிட்டே ஒரு வினோதமான பழக்கம் இருக்கு, தான் ஒரு வாக்குவாதத்தில ஜெயிச்சதா அவ நினைச்சா, அவ ஒரு வாய் பானத்தைக் குடிப்பா, அப்புறம் எங்கேயோ பார்த்துகிட்டு இருப்பா, அப்ப எதிராளிக்கு அத்தனை சங்கடமா இருக்காதாம். அதனால நானும் சங்கடப்பட்டுக்கல்லை. எப்படியுமே, நான் யாரையும் எதுவும் சொல்லி அழைக்கறதில்லை. ஷே குடும்பத்தைப் பத்தித்தான் சொன்னேன், அது கொஞ்சம் சுவாரசியமான விஷயம்: நாலு சகோதரங்க அந்தக் குடும்பத்துல, ஒருத்தர் கூட வேலைக்குப் போகல்லை. அம்மா, பெஸ்-னு பேரு, அவங்க நோயாளியா ஆகறதுக்கு முன்னாலெ வேலைல இருந்தாங்க, ஒரு பெரிய கம்பெனில நிர்வாகக் காரியதரிசியா இருந்தாங்க. ஒரு பெரிய ஆளுக்கு எல்லா வேலையையும் அவங்கதான் செஞ்சு கொடுத்தாங்க, சும்மா இதை டைப் அடி, அதை டைப் அடிங்கற வேலை இல்லை, அவங்க வேலை எத்தனை சிக்கலானதுன்னு கேட்டோம்னா ஆச்சரியப்படுவோம். இப்ப அவங்க பாருங்க, அருமையான மனுசி, சுத்தமா ஒரு வீடு அவங்க கிட்டே இருக்கு. அவங்களோட பையங்க, ஒவ்வொருத்தரும் அரசாங்க உதவித் தொகை வாங்கிக்கிட்டு காலம் கழிக்கறாங்க, இல்லை வேலையிலேர்ந்து நீக்கப்பட்டபோது கொடுக்கற தொகை, இல்லை வேலைக்குப் போக முடியாதபடி உடல்நிலை பாதிக்கப்பட்டதால கிடைக்கற உதவித்தொகை இப்படி வாங்கறாங்க. ஏதோ ஒண்ணு. அவங்களுக்கு வேலை கிடைக்கல்லைம்பாங்க, இது என்ன அம்பதுங்களான்னு கேட்பாங்க. கருப்பு ஜனங்க கூட இப்ப மேலான நிலைல இருக்காங்க, சிலப் பேர் அத்தனை உல்லாசமா வாழறாங்க, பாத்தீங்கன்னா ஆச்சரியப்படுவீங்க. அப்ப ஷே குடும்பத்துக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டம்? அவங்க வெள்ளைக்காரங்க, நல்லாதான் இங்கிலிஷ் பேசறாங்க. நா இந்த நாட்டுக்கு வந்தப்ப எங்கிட்டே பணமே இல்லை, இங்கிலிஷும் பேசத் தெரியல்ல. என் புருசனும் நானும், அவர் செத்துப் போகிறதுக்கு முன்னாடி ஒரு ரெஸ்ட்ராண்டுக்குச் சொந்தக்காரங்களா இருந்தோம். அது மேல ஒரு கடனும் இல்லை, அடமானம் இல்லை, முழுசா எங்களோடதா இருந்தது. சரி, நாங்க கொஞ்சம் அதிர்ஷ்டம் பண்ணினவங்கதான், அதை நான் ஒத்துக்கிறேன், எங்களோட நாட்டுச் சாப்பாடு உலகம் பூரா ஜனங்க விரும்பிச் சாப்பிடற வகையா இருக்கு. ஷே குடும்பத்தோட நாட்டுச் சாப்பாடு எல்லாத்தையும் வெந்நில வேகவைச்சதா இருக்கறது அவங்களோட குத்தமில்லைதான். ஆனாலும் இப்பிடியா… அதான் நான் சொல்றது.

அவள் சொல்றதும் சரிதான், நாமதான் நம்மோட மனசோட எல்லையை விசாலமாக்கிக்கணும், அப்டின்னு ஒரு சகோதரர் சொன்னார், ஜிம்னு பேரு, இதை அவர் தாங்க்ஸ்கிவிங் கூட்டுச் சாப்பாட்டும்போது சொன்னார். கார் விக்கற தொழிலை மறக்கணும். முட்டைக் குழலப்பத்தைப் பத்தி நினைக்கணும்னாரு.

பாட் தாய், அப்டின்னு இன்னொரு சகோதரர், மைக் சொன்னார். நான் பாட் தாய்லதான் அத்தனை பணமும் அள்ளப் போறேன். அதுதான் புது பீட்ஸாவாகப் போறது.

நான் சொன்னேன், நீங்க எதை விக்கலாங்கறதுல இப்டி மேலக் கீழே பாத்துகிட்டிருங்க. முட்டைக் குழலப்பத்தை விக்கறது உங்களுக்கு கேவலமாப் படுது. நானும் என் புருஷனும் நாங்க நல்லா முன்னேறிட்டோம்னு சொல்லிக்க முடியும். நீங்க என்ன சொல்வீங்க? எனக்குச் சொல்லுங்க. என்ன சொல்ல முடியும் உங்களாலெ?

எல்லாரும் அவங்களோட திங்க முடியாத வான்கோழிக் கறியைச் சவைச்சுகிட்டிருந்தாங்க.

என்னோட பொண்ணோட புருசன் ஜான், அவரை என்னால கொஞ்சமும் புரிஞ்சுக்க முடியல்லை. அவருக்கு வேலையில்லை, ஆனால் சோஃபியைப் பாத்துக்கவும் அவரால முடியல்லியாம். ஏன்னா அவர் ஒரு ஆம்பிளைங்கறார், அதோட பேச்சு முடிஞ்சு போச்சு போலருக்கு.

வெறுமனெ வேகவச்ச சாப்பாடு, வெறுமனெ வேகவச்ச யோசனை. அவரோட பேரு கூட வெறுமனெ வேகவச்ச பேரு: ஜான். நான் கருப்பு மொச்சைக் குழம்பு, ஹாய்சின் குழம்பு, பூண்டுக் குழம்பு எல்லாம் சாப்பிட்டு வளர்ந்தவ, என் மருமகன் பேசும்போது ஏதோ அங்கே இல்லைன்னுதான் எனக்குத் தோணும்.

சரி, இருக்கட்டும்: என் மருமகன் ஆம்பிளையாவே இருக்கட்டும், நான் இப்ப குழந்தையைப் பார்த்துக்கற ஆயா ஆகிட்டேன். ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம், முன்னாடி இருந்தாளே ஒரு ஆயா, வேலையை விட்டுட்டுப் போனாளே கிறுக்கச்சி ஏமி, அவள் எத்தனை நேரம் பார்த்துகிட்டாளோ அதே நேரம். இது அத்தனை சுலபமா இல்லை, எனக்கு வயசு அறுபத்தி எட்டு ஆயிடுச்சே, சீன வயசுக் கணக்குல எழுபது நெருங்கிடுச்சி. ஆனாலும் நான் முயற்சி செய்யறேன். சீனாவுல மகள்தான் அம்மாவைப் பார்த்துப்பா. இங்கே அது தலைகீழா இருக்கு. அம்மா பொண்ணுக்கு உதவறா, அம்மாதான் கேட்கறா, நான் ஏதாவது உதவி பண்ணட்டுமா? இல்லையின்னா மகள் குறை சொல்றா, அம்மா சப்போர்ட்டிவா இல்லை. நான் என் பொண்ணு கிட்டே சொன்னேன், இந்த வார்த்தை, ‘சப்போர்ட்டிவ்’, அது சீன மொழியில கிடையாது. ஆனா, என் பொண்ணு அவ்வளவு வேலை மும்முரமா இருக்கையில, நான் சொல்றதை எல்லாம் காதுல போட்டுக்கறதில்லை, அவளுக்கு யாராரையோ சந்திக்கப் போகணும், அவளோட புருசன் ஜிம்முக்குப் போய் ஆம்பளையா இருக்கையில, அவ உட்கார்ந்து நினைவூட்டற குறிப்பை எல்லாம் ஆஃபீஸுக்காக எழுதிக்கிட்டிருக்கணும். என் பொண்ணு சொல்றா, அவர் ஜிம்முக்குப் போகல்லைன்னா மன அழுத்தம் வந்துடும்ங்கறா. அவருக்கு வாழ்நாள் பூராவும் இந்தக் குறை இருந்திருக்காம், மன அழுத்தம்.

மன அழுத்தம் இருக்கறவங்களை யாரும் வேலைக்கு எடுக்க விரும்பறதில்லைன்னு என் மகளே சொல்றா. அதனால அவர் தன்னோட மனசை தேத்தி நல்லா வச்சுக்கறது ரொம்ப அவசியமாம்.

அழகான பெண்டாட்டி, அழகான மகள், அழகான வீடு, வீட்டுல அடு உலை கூட தானாகவே சுத்தம் செய்துக்கற மாதிரி இருக்கு. ஆனா கையில காசே கிடையாது, ஏன்னா ஒரே ஒருத்தர் சம்பாத்தியம், இப்ப அதிர்ஷ்டம் அடிச்சிருக்கு, குழந்தையைப் பராமரிக்க ஓர் ஆயா இலவசமாக் கிடைச்சாச்சு. ஜான் சீனாவுல இருந்தா, அவர் ரொம்ப சந்தோஷமா இருப்பார். ஆனா அவர் இங்கே சந்தோஷமா இல்லை. ஜிம்லெ கூட ஏதாவது தப்பாவே நடக்கலாம். ஒரு நாள், அவருக்குத் தசைப் பிடிப்பு. இன்னொரு நாள் பளு தூக்கற அறையில ரொம்பக் கூட்டம். எப்பவும் ஏதாவது.

கடைசியா, இதுக்கு நாம ஒண்ணாக் கும்மியடிக்கணும், அவருக்கு ஒருநாள் ஒரு வேலை கிடைச்சுடுத்து. அப்போ அவருக்கு ரொம்ப அழுத்தமாப் போச்சு.

நான் ரொம்ப கவனத்தைக் குவிக்கணும், அவர் சொல்றார். மனசை ஒருமுகமா வச்சுக்கணும்.

அவர் ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில விற்பனை வேலை செய்யப் போகிறார். சம்பளம் வரும்னு அவர் சொல்றார், குறைஞ்சது அவர் ஜிம் ஆடைங்களைப் போட்டுத் திரியாம, நல்ல உடுப்பா போட வேண்டி இருக்கும். அவருக்காக என் பொண்ணு ஆரோக்கிய உணவுக் கடையிலேருந்து விசேஷமா இனிப்புகளை வாங்கி வந்தா. அதுங்க மேலுறையில ‘திங்க்!’ (யோசி!) அப்டீன்னு அச்சடிச்சிருக்கு, அதுங்க ஜானுக்கு யோசிக்க உதவப் போறதாம்.

ஜான் பார்க்க நல்லா இருக்கறவர்தான், அதை நாம ஒத்துக்கிடணும், அதுவும் இப்போ அவர் முகச் சவரம் செய்யறதாலெ முகத்தை நாம பார்க்க முடியறதே.

நான் வாலிபருங்க விளையாடற இடத்துல ஒரு வயசாளியா போய் நிக்கறேன், அப்டீங்கறார் ஜான்.

எனக்கு ஒரு புது செட் உடுப்புங்க வேண்டும், அப்டீங்கறார் ஜான்.

இந்தத் தடவை என் கால்லெ நானே சுட்டுக்கப் போகிறேன்னு சொல்றார்.

நல்லது, நடக்கட்டும்னு நான் சொன்னேன்.

அவங்க ‘சப்போர்ட்டிவா’ இருக்கறதா நினைச்சு அப்படிச் சொல்றாங்க. நீங்க பாட்டுல அவங்களை சீனாவுக்குத் திருப்பி அனுப்பணும்னு ஆரம்பிக்காதீங்க, நம்மால அது முடியாதுங்கறா என் பொண்ணு.

சோஃபிக்கு அமெரிக்க வயசுப்படி மூணாகிறது, இப்பவே அவளோட அருமையான சீன குணத்தை எல்லாம் இந்தப் பிடாரி ஷே குடும்பத்துப் பக்கம் வந்து சாப்பிட ஆரம்பிச்சுடுத்துங்கறதை நான் பார்க்க முடியறது. அவ அனேகமா சீனப் பொண்ணு மாதிரிதான் இருக்கா. அருமையான கருப்பு முடி, அழகான கருப்புக் கண்ணுங்க. மூக்கு கச்சிதமான அளவு, கீழே விழுந்து தட்டையாப் போன மாதிரி இல்லை, பெரிசா இருந்து முகத்துல ஏதோ தப்பாப் போன மாதிரியும் அது இல்லை. எல்லாம் கச்சிதமா இருக்கு, தோல் ஒண்ணுதான் மாநிறமா இருக்கறதாலெ, ஜானோட குடும்பத்துக்கு அது புரியாமப் போச்சு. இவ்வளவு மாநிறமா, அப்டீன்னாங்க அவங்க. அவளோ வெய்யில்லெ போறதில்லே, ஆனாலும் இத்தனை மாநிறமா, அப்டீங்கறார் அவர். பழுப்புங்கறதாலே ஒண்ணும் தப்பில்லை, அப்டியும் சொல்றாங்க அவங்க. எங்களுக்கு ஆச்சரியமாப் போச்சு, அவ்ளோதான். இத்தனை மாநிறமா. நேட்டி இப்படிப் பழுப்பா இல்லியே, அப்டீங்கறாங்க. சோஃபி நேட்டியோட நிறத்துக்கும், ஜானோட நிறத்துக்கும் நடுப்பற ஏதோ நிறமால்ல இருக்கணும்ங்கறாங்க. சோஃபி ஷேன்னு பேர் இருக்கற ஒரு பொண்ணு இத்தனை மாநிறமா இருக்காங்கறது, வினோதமா இருக்குங்கறாங்க. ஆனா அவ மாநிறம்தான், ஒருகால் அவளோட பேரு சோஃபி ப்ரௌன் அப்டீன்னு இருக்கணுமோ. அவ எப்பவும் வெய்யில்லெயே போகல்லை, இருந்தாலும் அவ நிறம் இப்படி இருக்குங்கறாங்க. பழுப்பானா என்ன, ஒண்ணும் குறையில்லை. அவங்களுக்கு ஆச்சரியமா இருக்கு, அவ்வளவுதான்.

ஷே குடும்பத்தோட பேச்சே இப்படித்தான் சிலசமயம் அமையும், சுத்திச் சுத்தி ஒரே இடத்துக்கு வரும், கிருஸ்த்மஸ் மரத்தைச் சுத்தி ஒரு ரயில் ஓடுமே அதைப் போல.

ஒருவேளை ஜான் அவளோட அப்பா இல்லியோ, அந்த ரயிலை நிறுத்தணும்னு, நான் ஒருநாள் சொன்னேன்.

நினைச்ச மாதிரியே, ரயில் தண்டவாளத்தை விட்டு இறங்கி ஒரே டாமேஜ். அதுக்கப்புறம் ஒரு சகோதரரும் எங்கிட்டே, பழுப்புங்கற வார்த்தையையே சொல்றதில்லே.

அதுக்குப் பதிலா, பெஸ், ஜானோட அம்மா, சொன்னாங்க, உங்க மனசு புண்படல்லை இல்லியா?

அவங்க சொன்னாங்க, நான் இவங்களை வளர்க்க ஆனமட்டும் பாடுபட்டேன். ஆனா அப்பன்னு ஒருத்தர் இல்லாம நாலு ஆம்பிளப் பசங்களை வளர்க்கறது பெரிய பாடு.

உங்களுக்கு ஒரு அழகான குடும்பம் இருக்கு, அப்டீன்னு நா சொன்னேன்.

எனக்கு வயசாயிப் போச்சு, அப்டீன்னாங்க.

உங்களுக்கு ஓய்வு அவசியம் இப்ப, நா சொன்னேன். இத்தனை ஆம்பளப் பசங்க உங்களுக்கு வயசைக் கூட்டிட்டாங்க.

எனக்கு ஒரு மகளே இல்லை, அவங்க சொன்னாங்க. உங்களுக்கு ஒரு மகள் இருக்கா.

எனக்கு ஒரு மகள் இருக்கா, நான் சொன்னேன். பாருங்க, சீனாவுல ஜனங்க மகள் இருக்கறதைப் பெரிசா எடுத்துக்கறது இல்லே, ஆனா நீங்க சொல்றது சரி, எனக்குப் பொண்ணு ஒருத்தி இருக்கத்தான் செய்யறா.

நான் ஒருபோதும் இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பா இல்லை, உங்களுக்குத் தெரியுமான்னாங்க. ஜான் ஏதோ தகுதிக்குக் கீழெ கல்யாணம் செய்துக்கறான்னு நான் நினைக்கல்லை. நேட்டலி வெள்ளைக்காரி மாதிரிதான்னு நான் எப்பவுமே நினைச்சிருக்கேன்.

நானும் இந்தக் கல்யாணத்தை ஒருபோதும் எதிர்க்கல்லைன்னு நான் சொன்னேன். அவங்க மொத்தப் பிரச்சனையையும் கவனிச்சாங்களான்னுதான் நான் யோசிச்சேன்.

நீங்க ஒரு அம்மா இல்லியா, பிரச்சனை என்னன்னு சொல்லாம எப்படி இருப்பீங்க, அவங்க சொன்னாங்க. இப்ப நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு பேத்தி இருக்கா. ஒரு குட்டி பழுப்பு நிறப் பேர்த்தி, அவ எனக்கு ரொம்ப அருமையானவ.

நான் சிரிச்சேன். ஒரு குட்டி பழுப்பு நிறப் பேர்த்தியா, என்றேன். உண்மைல எனக்கும் அவ இப்படி மாநிறமா எப்படி ஆனான்னு புரியல்லை.

நாங்க ரெண்டு பேரும் இன்னும் கொஞ்சம் சிரிச்சோம். இப்பல்லாம் பெஸ்ஸுக்கு நடக்க ஒரு சக்கர முக்காலி வேண்டியிருக்கு. அவங்க அத்தனை மாத்திரைங்க சாப்பிடறாங்க, ரெண்டு கிளாஸ் தண்ணி வேண்டியிருக்கு அதையெல்லாம் உள்ளெ தள்ள. அவங்களுக்கு ரொம்பப் பிடிச்ச டிவி தொடர் காட்சி, ப்ளுப்பர்ஸ்னு ஒண்ணு. தன்னையறியாம எல்லாப் பாத்திரங்களும் ஏதாவது சிக்கல்லெ மாட்டிகிட்டுத் திண்டாடுவாங்க அதுல பூராவும். அவங்களுக்கு பறவைங்க சாப்பிட வரதுக்கு தொங்க விடற கலம் ரொம்பப் பிடிக்கும். நாள் பூராவும், பறவைங்க சாப்பிட வர்றதையே பாத்துக்கிட்டிருப்பாங்க, ஒரு பூனை மாதிரி.

அவ எப்ப வளர்ந்தவளா ஆவான்னு இருக்கு எனக்கு, பெஸ் சொன்னார். கொஞ்சம் பொண்களோட துணை இருந்தா எனக்கு நல்லாயிருக்கும்.

ரொம்ப நிறைய ஆம்பளைப் பசங்க, என்றேன்.

ஆம்பளைப் பசங்க இருக்கறது நல்லதுதான், அவங்க சொன்னாங்க. ஆனா கொஞ்ச நாளைக்கப்புறம் அவங்க நம்மை ரொம்பவே சுத்திக்கிடறாங்க.

நீங்க எல்லாத்தையும் விட்டுட்டு இருங்க கொஞ்ச நாள், எங்களோட வந்து இருங்க, என்றேன். எங்க வீட்டிலெ நிறைய பொண்ணுங்க இருக்கோம்.

கண்ணடிச்சு பெஸ் சொன்னார், என்னத்தை அழைக்கறோம்னு யோசிச்சுச் சொல்லுங்க என்றார். நான் வளர்ந்த ஊர்லெ, இப்படிச் சொன்னா, எங்களோட வந்து வாழுங்கன்னு சொல்றீங்கன்னு நாங்க நினைச்சுப்போம் என்றார்.

வெளிப் பார்வைக்கு சோஃபி கிட்டே ஒண்ணும் குறையில்லை, அது உண்மை. உள்பக்கம்தான் அவ எனக்குத் தெரிஞ்ச எந்த சீனப் பொண்ணு மாதிரியும் இல்லை. நாங்க பூங்காவுக்குப் போனோம், இதுதான் அவ செய்யறது. அவ தன்னோட தள்ளு வண்டியில எழுந்து நிப்பா. தன்னோட எல்லாத் துணிங்களையும் கழற்றி அங்கே இருக்கற நீரூற்றில தூக்கிப் போட்டுடுவா.

சோஃபீ! நான் கூப்பிடறேன். அதை நிறுத்து!

ஆனா அவ பைத்தியம் மாதிரி சும்மா சிரிச்சுகிட்டிருக்கா. நான் ஆயாவா மாறி இவளைப் பார்த்துக்க ஆரம்பிக்கறதுக்கு முன்னாலெ, வேற ஒரு பைத்தியக்கார- ஆயா, ஏமின்னு ஒரு கிடார் வாசிக்கிற பொண்ணு பாத்துகிட்டா. என் பொண்ணு ஏமி ரொம்ப ‘படைப்புத் திறன்’ உள்ளவள்னு நினைச்சா- அது இன்னொரு வார்த்தை- க்ரியேட்டிவ்- அதைப் பத்தி நாங்க சீனாவில பேசியதே கிடையாது. சீனாவுல நாங்க எப்பவும் எங்களுக்குக் கஷ்டம் இருக்கா, கஷ்டம் இல்லையான்னு மட்டும்தான் பேசுவோம். வாழ்க்கை கசப்பா இருக்கா, இல்லையான்னு பேசுவோம். அமெரிக்காவுலதான், நாள் பூரா, ஜனங்க ‘க்ரியேட்டிவ்’ ஆ இருக்கறதைப் பத்திப் பேசிக்கிட்டிருக்காங்க. நான் சொல்லக் கூடாது, ஆனா இந்த ஏமியை என்னால பார்க்கக் கூட முடியாது, அவளும் அவளோட குட்டைச் சட்டையும், தொப்புள் எல்லாம் தெரியப் போட்டுகிட்டிருப்பா. இந்த ஏமி நினைப்புல சோஃபிக்குத் தன்னோட உடம்பு ரொம்பப் பிடிக்கணும். அதனாலெ சோஃபி தன்னோட டயபரைக் கழட்டிப் போடறப்ப, ஏமி சிரிக்கறா. அவளோட மடியிலெ சோஃபி ‘சு-சு’ போனா, ஏமி சிரிக்கறா, மூச்சாவில கிருமி ஏதும் இல்லைங்கறா. சோஃபி கால் ஷூவை எல்லாம் கழட்டிப் போட்டா, வெறுங்கால்தான் ரொம்ப நல்லதுங்கறா ஏமி, குழந்தை மருத்துவரும் அதேதான் சொல்றாருங்கறா. அதனாலதான் பிச்சைக்காரக் குழந்தை மாதிரி சோஃபி கால்லெ ஏதுமில்லாமத் திரியறா. அதனாலேயே சோஃபி தன்னோட ட்ரஸ்ஸை எல்லாம் கழட்டிப் போடறதுல அத்தனை ஆசையா இருக்கா.

திரும்பு! பார்க்குல இருக்கற பையன்களெல்லாம் சொல்றாங்க. அந்தக் குண்டியை நாங்க பார்க்கணும்!

சோஃபிக்கு என்ன தெரியப்போகிறது, அதெல்லாம் புரியாது அவளுக்கு. அவ கை ரெண்டையும் தட்டுவா, நான் ஒருத்திதான் சொல்லிக்கிட்டிருக்கேன், நோ! இது விளையாட்டு இல்லை!

இதுக்கும் ஜானோட குடும்பத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, என் பொண்ணு சொல்றா. ஏமி ரொம்ப இடம் கொடுத்திருக்கா, அவ்வளவுதான்.

நான் என்ன நினைக்கிறேன்னா, சோஃபி உள்ளுக்குள்ளே அத்தனை பிடாரியா இல்லைன்னா, துணியை எல்லாம் கழட்டிப் போட ஆரம்பிச்சே இருக்க மாட்டா.

சின்னப் பிள்ளையா இருக்கச் சொல்ல, நீ ஒரு தடவையும் உன் துணியை எல்லாம் கழட்டிப் போட்டதில்லென்னு சொன்னேன். என்னோட சீனாக்கார நண்பர்களெல்லாம் குழந்தை பெத்திருக்காங்க, ஒருத்தரோட குழந்தையும் இப்படிப் பொல்லாதா இருக்கல்லை.

பாரும்மா, என் பொண்ணு சொல்றா. நாளைக்கு நான் ஒரு கூட்டத்துல பெரிய தாக்கல் கொடுக்கணும்.

ஜானும் என் மகளும் ஒத்துக்கறாங்க, சோஃபி ஒரு பிரச்சனைதான்னு, ஆனா என்ன செய்யறதுன்னுதான் அவங்களுக்குத் தெரியல்லெ.

ஒரு அடி போட்டா, அவ நிறுத்திடுவா, நான் இன்னொரு நாள் சொன்னேன்.

ஆனா அவங்க சொல்றாங்க, ஓ, நோ.

அமெரிக்காவுல பெத்தவங்க குழந்தைகளை அடிக்கக் கூடாதாம்.

அவங்களுக்கு மன தைரியம் போயிடும், அப்படிங்கறா என் பொண்ணு. சுயமதிப்பு போச்சுன்னா, பின்னாடி நிறைய பிரச்சனைங்களெல்லாம் வரும், எனக்கு அது நல்லாவெ தெரியும்னு சொல்றா.

அடி போடறதைப் பத்திப் பேசறப்ப மட்டும் என் பொண்ணுக்கு அடுத்த நாள் பெரிய தாக்கல் கொடுக்கற வேலையெல்லாம் இருக்கறதில்லெ.

சோஃபியைத் தொடப்படாது நீங்கன்னு சொல்லிட்டுப் போறா அவ. அடிக்கறதெல்லாம் கூடாது, முடிவாச் சொல்றேன்ங்கறா.

நான் என்ன செய்யணும்னு நீ எங்கிட்டே சொல்லாதே, என்றேன்.

என்ன பண்ணனும்னு நா உங்ககிட்டே சொல்லல்லை. நான் இதைப் பத்தி என்ன நினைக்கிறேன்னு சொன்னேன்.

நான் உன்னோட வேலைக்காரி இல்லை, இந்த மாதிரி எங்கிட்டே பேசாதே நீ.

அவள் ஏதாவது வாக்குவாதத்தில தோற்றுப் போனா, என் பொண்ணு கிட்டே ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு. அவ தன்னோட கை விரலை எல்லாம் விரிச்சுகிட்டு அதுங்களைப் பார்த்தபடி நிப்பா, ஏதோ அதுங்களெல்லாம் அங்கே இருக்கான்னு சோதிக்கறாங்கற மாதிரி தெரியும்.

என் பொண்ணும் என்னை மாதிரியே விடாப்பிடிவாதமா இருக்கறவதான், ஆனா அவளும் ஜானும், சோஃபி கிட்டே துணிகளைப் போட்டுகிட்டு இருக்கறது நல்லதுன்னு விளக்கணும்னு நினைக்கறாங்க. இப்படிச் செய்யறது இந்தக் குளிர் காலத்துல ரொம்பக் கஷ்டமானதில்லே. ஆனா கோடை காலத்துல ரொம்பவே கஷ்டம்.

வார்த்தையால பேசுங்க, என் பொண்ணு சொல்றா. நாங்க அதைத்தான் சோஃபி கிட்டெயும் சொல்றோம். நீங்க அவளுக்கு நல்ல உதாரணமா இருங்க.

ஏதோ நல்ல உதாரணமெல்லாம் சோஃபிக்குப் புரியும்ங்கற மாதிரிதான். நான் எப்பிடி நெருப்பா இருந்தவ, ரெஸ்ட்ராண்டுக்கு வந்த க்ரிமினல் கூட்டத்துப் பசங்க கூட என்னைப் பாத்துப் பயப்படுவாங்க, ஆனா இந்த சோஃபிக்குப் பயமே இல்லை.

நான் சொன்னேன், சோஃபி, துணியை எல்லாம் கழட்டிப் போட்டியானா, திங்கறத்துக்கு ஒண்ணும் கொடுக்க மாட்டேன்.

நான் சொன்னேன், சோஃபி துணியைக் கழட்டிப் போட்டியானா, மதியம் சாப்பாடு போட மாட்டேன்.

நான் சொன்னேன், சோஃபி, துணியைக் கழட்டிப் போட்டியானா, பூங்காவுக்கு அழைச்சுகிட்டுப் போக மாட்டேன்.

கடைசில நாங்க வீட்டிலேயே நாள் பூரா இருக்க வேண்டியதாப் போச்சு, ஆறு மணி நேரத்துக்கு அப்புறமும் அவளுக்குச் சாப்பிட ஒண்ணும் கிடைக்கல்லை. இந்த மாதிரி பிடிவாதமா ஒரு குழந்தையையும் நாம பாத்திருக்க மாட்டோம்.

எனக்குப் பசிக்கிறது! என் பொண்ணு வீட்டுக்கு வந்ததும் சோஃபி கத்தறா.

என் பொண்ணு சிரிக்கறா, என்ன விஷயம், பாட்டி உனக்குச் சாப்பாடு போடல்லியா என்ன?

இல்லெ, அவங்க எதுவுமே சாப்பிடக் கொடுக்கல்லை! சோஃபி சொல்றா.

என் பொண்ணு சிரிக்கறா. இந்தா, பிடின்னு எதையோ கொடுக்கறா.

அவ ஜான் கிட்டே சொல்றா, சோஃபி கிடுகிடுன்னு வளரறா போலருக்கு.

பூண்டெல்லாம் வளர்ற மாதிரிதான், அப்படீன்னு சொன்னேன்.

சோஃபி என்னவோ இன்னும் துணிகளை எல்லாம் கழட்டிப் போட்டுகிட்டுத்தான் இருந்தா. ஒரு நாள் அவளுக்கு ஒரு அடி வச்சேன். பலமா இல்லை, ஆனா அவ அழுதா, அழுதா அப்படி அழுதா. நான் அப்ப சொன்னேன், அவ துணியை எடுத்து மறுபடி போட்டுக்கல்லைன்னா, இன்னொரு அடி வைப்பேன்னு சொன்னேன், அவ துணியை எடுத்துப் போட்டுகிட்டா. அப்போ நா அவ நல்ல பொண்ணுன்னு சொல்லி, கொஞ்சம் சாப்பாடு கொடுத்தேன். அடுத்த நாளைக்கு நாங்க பூங்காவுக்குப் போனப்ப, நல்ல சீனப் பொண்ணு மாதிரி அவ துணியை எல்லாம் கழட்டிப் போடாம இருந்தா.

அவ துணியைக் கழட்டிப் போடறதில்லை இப்ப, நான் அவங்க கிட்டே சொன்னேன். கடேசியா!

எப்படிச் செஞ்சீங்க? என் பொண்ணு கேட்டாள்.

இருபத்தி எட்டு வருஷம் உன்னோட இருந்ததுக்கு நான் ஏதோ கொஞ்சம் கத்துகிட்டிருக்கேன் போலருக்கு, என்றேன்.

அது ஒரு வளரற கட்டமா இருந்திருக்கும், ஜான் சொன்னார், திடீர்னு அவர் குரல் ரொம்பப் படிச்சு எல்லாம் தெரிஞ்சவரா ஆன மாதிரி இருந்தது, இப்ப அவர் ஒரு தோல் கைப்பெட்டியைத் தூக்கிட்டுப் போறாரு, பளபளன்னு ஷூ போடறாரு, ஒரு புதுக் கார் வாங்கறதுக்குப் பார்க்க ஆரம்பிக்கிறாரு இல்லையா. அது கம்பெனி செலவுலங்கறார். கம்பெனி காருக்குப் பணம் கொடுக்குமாம், ஆனா அவருக்கு வேணுங்கறப்ப அவர் அதை ஓட்டிக்கிடலாம்.

இலவசமா ஒரு கார், அவர் சொல்றார். உங்களுக்கு அது பிடிச்சிருக்கா?

என் பொண்ணு சொன்னா, மறுபடி குதிரைக் கலணை மேல ஏறிட்டீங்கன்னு பார்க்க நல்லா இருக்கு. உங்களோட குடும்பத்தோட பாணியில சிலதை எல்லாம் பார்த்தா பீதியா இருக்கு.

குறைஞ்சது நான் குடிக்கறதில்லையே, அவர் சொல்றார். பயம் கொடுக்கற மாதிரி குடும்பப் பாணி உள்ளவன் நான் மட்டும்தானா என்ன என்கிறார்.

அதென்னவோ சரிதான், என்கிறாள் என் பெண்.

எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க. நான் கூட சந்தோஷமா இருக்கேன், ஏன்னா சோஃபி கிட்டேருந்து மேல மேலத் தொல்லை வரது, ஆனா நான் இப்ப நினைக்கறேன், அவளோட சீனப் பக்கத்துக்கு உதவி செஞ்சா அது அவளோட பொல்லாத பக்கத்தோட போராடி ஜெயிக்கும். அவளுக்கு முள்கரண்டியும், ஸ்பூனும் வச்சுச் சாப்பிடற மாதிரியே சாப் குச்சிங்களை வச்சு சாப்பிடவும் சொல்லித் தந்தேன், அவள் நூடில்ஸ் இருக்கற கோப்பை நடுவுல கையை விட்டு உருவக்கூடாதுன்னு சொல்லிக் கொடுத்தேன். குப்பைத் தொட்டி டப்பாக்களோட விளையாடக் கூடாதுன்னு சொல்லிக் கொடுத்தேன். சில சமயம் அவளுக்கு ஒரு அடி வைக்கறேன், ஆனா அடிக்கடி இல்லை, பலமாவும் அடிக்கறதில்லை.

அப்ப கூட பிரச்சனைங்க வரது. சோஃபிக்கு எதைப் பார்த்தாலும் அதுமேலே ஏறி நிக்கணும்னு ஆசை வரும். எங்கெயாவது கைப்பிடிக் கம்பி இருந்தா அதுமேலே ஏறி உட்காரணும். அதோட அவளோட நண்பர்களோட அம்மாக்களை எல்லாம் அடிக்கறதுக்கும் அவளுக்கு ஆசை. இதை விளையாட்டுத் தடல்லெ இருக்கறப்ப, அவளோட சேர்ந்து விளையாடற பையன் சின்பாட் கிட்டேருந்து கத்துக்கிட்டிருக்கா, அவனுக்கு வயசென்னவோ நாலுதான். சின்பாட் தினம் ராணுவ வீரன் மாதிரிதான் உடுப்பு போடுவான், அவனோட அம்மாவை மறைஞ்சிருந்து தாக்கறது அவனுக்குப் பிடிச்ச விளையாட்டு. அங்கே இருக்கற ஒரு விளையாட்டு மேடைக்குக் கீழே ஒரு பெரிய குழியை அவன் தான் தோண்டினான், அவன் மட்டுமே தனியா ஒரு பதுங்கு குழியைத் தோண்டி இருக்கான். அந்தப் பதுங்கு குழியில ஈர மண்ணை ஒரு சவுளில் வச்சுகிட்டு காத்துகிட்டிருப்பான். அவனோட அம்மா வரும்போது அவங்க மேல அதை வீசி எறிவான்.

ஓ, அதுனால என்னம்பாங்க அவனோட அம்மா. பையன்களோட போர் விளையாட்டை எல்லாம் நாம ஒழிச்சுக் கட்ட முடியாது, அதெல்லாம் கற்பனை வளர்ற விதம்னாங்க. எல்லாப் பையங்களும் இப்படித்தான் வளர்ந்து வருவாங்கன்னாங்க.

அவன் தன்னோட அம்மாவை காலால உதைக்கவும் செய்வான், ஒரு நாள் அவன் சோஃபி கிட்டே அவனோட அம்மாவை உதைன்னு சொல்லிக் கொடுத்திருக்கான்.

இந்தக் கதை உண்மையா இல்லாம இருக்கணும்னுதான் நானும் ஆசைப்படறேன்.

உதை, அவளை உதை! சின்பாத் சொல்றான்.

சோஃபி அவங்களை உதைக்கிறாள். ஒரு சின்ன உதைதான், ஏதோ அவளோட சின்னக் காலை ஆட்டறப்ப பெரியவங்க கால் அங்கே இருக்கறதை அவ பார்க்கல்லைங்கற மாதிரி உதை. ஆனாலும் நான் சோஃபிக்கு ஒரு அடி வச்சேன், சோஃபியை அவங்க கிட்டே மன்னிப்பு கேட்கச் சொன்னேன், ஆனா அந்த அம்மா என்ன சொன்னாங்க?

நிஜமாவே, அதனால பரவாயில்லைங்கறாங்க. எனக்கு ஒண்ணும் வலிக்கல்லை.

அதுக்கப்புறம் சோஃபி விளையாட்டுத் தடல்லெ இருக்கற அம்மாக்களை எல்லாம் தாக்கலாம்னு கத்துக்கிட்டா, சில பேர் சொல்வாங்க, நிறுத்தும்பாங்க, மத்தவங்க சொல்வாங்க, ஓ, அவள் அதை நினைச்சுப் பண்ணல்லைம்பாங்க, குறிப்பா இதனாலெ சோஃபிக்கு அடி விழும்னு தெரிஞ்சா இப்படிச் சொல்வாங்க.

இப்படித்தான் ஒரு நாள் பெரிய பிரச்சனை வந்தது. அந்தப் பெரிய பிரச்சனை ஆரம்பிச்ச போது, சோஃபி அந்தப் பதுங்குகுழியில ஒரு சவுளில மண்ணை வச்சுகிட்டு ஒளிஞ்சுகிட்டிருந்தா. அவள் காத்துட்டிருந்து, நான் அவ எங்கேன்னு தேடிக்கிட்டு வந்தப்ப, என் மேல அதை வீசினாள். என்னோட நல்ல, சுத்தமான துணி பூரா மண்ணு.

எந்தச் சீனப் பொண்ணாவது இப்படி நடந்துக்கறதை நீங்க பார்த்திருக்கீங்களா?

சோஃபி! நான் கூப்பிட்டேன்: அங்கேயிருந்து வெளியில வா, நீ செய்ததுக்கு மன்னிப்பு கேளு.

அவள் வெளியில் வரவில்லை. அதுக்குப் பதிலா சிரிக்கறா. நானா நா—நா, நா-நா-ன்னு பாடறா.

நான் மிகைப்படுத்திச் சொல்லலை: லட்சக்கணக்கான குழந்தைங்க சீனாவுல இருக்காங்க. ஒரு குழந்தை கூட இப்படி நடந்துக்காது.

சோஃபி! இப்பவே வா! வெளீல வா இப்ப! ன்னேன்.

ஆனால் தான் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டோம் என்று அவளுக்குத் தெரியும். இப்போது வெளியே வந்தால் அடுத்தது என்ன ஆகும் என்று அவளுக்குத் தெரியும். அதனால அவள் வெளில வரல்லை. எனக்கு அறுபத்தி எட்டு வயசாகிறது, சீனக் கணக்கில் கிட்டத்தட்ட எழுபது, நான் எப்படி கீழே நுழைஞ்சு தவழ்ந்து போய் அவளைப் பிடிக்க முடியும்? அதனால் நான் இரைஞ்சேன், இரைஞ்சேன், என்ன ஆச்சு? ஒண்ணும் நடக்கவில்லை. ஒரு சீன அம்மாவா இருந்தா உதவிக்கு வந்திருப்பாள். ஆனால் அமெரிக்க அம்மாக்கள், என்னைப் பார்த்துத் தலையை இடவலமா ஆட்டறாங்க, வீட்டுக்குப் போய்ட்டாங்க. ஒரு சீனக் குழந்தை இந்நேரம் விட்டுக் கொடுத்திருக்கும், ஆனால் சோஃபியா விடுவா?

உன்னை வெறுக்கறேன்! அவள் கத்துகிறாள். உன்னை வெறுக்கறேன், அசடு நீ!

இப்போதெல்லாம் என் புதுப்பெயர், அசடு.

இது நிறைய நாழிகை இப்படியே போச்சு. அந்தக் குழியோ ஆழமாக இருக்கு, உள்ளே பார்க்கக் கூட முடியவில்லை, அதோட அடி எங்கே இருக்குன்னும் தெரியல்லை. உள்ளே என்ன நடக்கிறதுன்னு கேட்கவும் முடியல்லை. அவள் கத்தல்லைன்னா, அவ அங்கே இருக்காளா இல்லையான்னு கூட நமக்குத் தெரியாது. கொஞ்ச நேரத்தில் அங்கே குளிர ஆரம்பிச்சது, இருட்டவும் தொடங்கிடுத்து. விளையாட்டுத் தடலில் எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை.

சோஃபி, என்று அழைத்தேன். நீ எப்படி இந்த மாதிரி அடம் பிடிக்கறவளா ஆனே? நான் உன்னை இங்கேயே விட்டுட்டு வீட்டுக்குப் போகப் போறேன்.

ஒரு கம்பை எடுத்து அங்கே இருந்து அவளை வெளியே விரட்ட முயன்றேன். ஒன்றிரண்டு தடவை அவளுக்கு அடியாக விழுந்தது, ஆனால் அவள் வெளியே வரல்லை. கடைசியாக நான் கிளம்பிப் போனேன். நான் வெளி வாசல் வரை போனேன்.

அங்கேயிருந்து கூப்பிட்டேன். பை, பை, நான் வீட்டுக்குப் போகப்போறேன்.

அவள் இன்னும் வெளியில் வரல்லை, வெளியே வரவேயில்லை. வானம் கருப்பாகிட்டுது, ராச் சாப்பாட்டு நேரம். நான் போய் யாரையாவது உதவிக்குக் கூப்பிடணும் என்று நினைத்தேன், ஆனால் ஒரு சின்னப் பெண்ணைத் தனியாக மைதானத்தில் விட்டு விட்டு நான் எப்படிப் போறது? ஒரு பெருச்சாளி வந்தால்? சோஃபிக்கு என்ன ஆயிற்று என்று பார்க்கத் திரும்பிப் போனேன். அவளிடம் ஒரு சவுள் இருக்கிறது, அதை வைத்துக் கொண்டு அவள் ஒரு சுரங்கத்தைத் தோண்டி தப்பிப் போய்ட்டா?

சோஃபீ! அழைத்தேன்.

பதில் இல்லை.

சோஃபீ!

அவள் உசிரோடு இருக்கிறாளான்னு கூடத் தெரியல்லை. அவள் உள்ளேயே தூங்கிப் போயிட்டாளா? அழறாளா, என்னால் அவளிடமிருந்து ஒரு சத்தத்தையும் கேட்க முடியவில்லை.

ஒரு கம்பை எடுத்துக் குத்தினேன்.

சோஃபி! நான் உன்னை அடிக்க மாட்டேன், ப்ராமிஸ். நீ வெளில வந்தா உனக்கு ஒரு லாலிபாப் தரேன்.

பதில் இல்லை. இந்நேரம் எனக்குக் கவலை அதிகமாயிடுத்து. என்ன செய்ய, என்ன செய்ய, என்ன செய்யறது? இன்னும் கொஞ்சம் குத்தினேன், இன்னும் பலமாகக் குத்தினேன். என் பெண்ணும் ஜானும் திடீர்னு அங்கே வந்தப்ப நான் இன்னும் குத்திக்கிட்டிருந்தேன்.

என்ன செய்றீங்க? என்ன நடக்கிறது? என்றாள் என் பெண்.

அந்தக் குச்சியைக் கீழே போடுங்க! என்றாள் என் பெண்.

உங்களுக்குப் பித்துப் பிடிச்சிருக்கு! என்றாள் என் பெண்.

ஜான் அந்தக் கட்டடத்தின் கீழ் தவழ்ந்து போய் பதுங்குகுழிக்குள் சென்று சோஃபியை மீட்டெடுத்தார்.

அவள் தூங்கிப் போய்ட்டாள், என்றார் நிபுணராகி விட்ட ஜான். அவள் சரியாத்தான் இருக்கா, அது ஒரு பெரிய குழி.

இப்போது சோஃபி அழுகிறாள், தொடர்ந்து அழுகிறாள்.

சோஃபியா, என் பெண் சொல்கிறாள், அவளை அணைத்துக் கொண்டிருக்கிறாள். குட்டி, நீ நல்லா இருக்கியா, சரியா இருக்கியா?

அவ பயந்து போயிருக்கா வேற ஒண்ணுமில்லை என்றார் ஜான்.

நீ நல்லா இருக்கியா? நானும் கேட்கிறேன். என்ன ஆச்சுன்னு எனக்குத் தெரியல்லை, என்றேன்.

அவள் சரியா இருக்கா, என்றார் ஜான். என் பொண்ணு மாதிரி கேள்விகளாகக் கேட்டுத் துளைக்கவில்லை அவர். வீடு திரும்புகிற வரை அவரிடமிருந்து வந்ததெல்லாம் விடைகள்தான், வீட்டில் விளக்கு வெளிச்சத்தில் பார்க்கிறவரை அப்படி இருந்தார்.

அப்போது, இவளை நீ கொஞ்சம் பார்க்கிறீயா என்று கத்தினார். என்ன நடந்திருக்கு இப்படி பயங்கரமா?

அவளுடைய பழுப்புத் தோலில் எங்கும் காயங்கள், ஒரு கண் வீங்கிப் போயிருந்தது.

உங்களுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கு! என்று கத்தினாள் என் பெண். என்ன பண்ணியிருக்கீங்க பாருங்க, பைத்தியம்தான் நீங்க!

நான் ரொம்ப முயற்சி பண்ணினேன், நான் சொன்னேன்.

கம்பை எப்படித் தூக்கலாம் நீங்க? பேசுங்க அவ கிட்டேன்னு சொல்லல்லை நான்?

அவளைச் சமாளிக்கறது ரொம்பக் கஷ்டம், என்றேன்.

அவளுக்கு மூணு வயசுதான் ஆச்சு! நீங்க கம்பால அடிக்கக் கூடாது! என்றாள் என் பெண்.

நான் பார்த்த எந்தச் சீனப் பொண்ணு மாதிரியும் இல்லை அவ, என்றேன்.

என் துணியிலிருந்து மண்ணை எல்லாம் உதறினேன். சோஃபியுடைய ஆடைகள் அழுக்காகி இருந்தன, ஆனால் ஆடைகளைப் போட்டுக் கொண்டிருந்தாளே.

இதுக்கு முன்னாடி இப்படிப் பண்ணியிருக்காங்களா? என் பெண் கேட்டாள். உன்னை முன்னாடி அடிச்சிருக்காங்களா?

அவங்க என்னை எப்பொ பார்த்தாலும் அடிக்கறாங்க, ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டே சோஃபி சொல்கிறாள்.

உன் குடும்பம் இருக்கே, என்கிறார் ஜான்.

நான் தான் சொல்றேனே, நம்புங்க, என்றாள் என் பெண்.

எனக்கு ஒரு பெண் இருக்கிறாள், அழகான பெண். தலையைத் தூக்கக் கூட முடியாமலிருந்த போதிலிருந்து அவளைப் பராமரிச்சிருக்கேன். என்னோட வாக்கு வாதம் பண்றதுக்கு அவளுக்குத் தெரியறத்துக்கு முன்னாலேருந்து அவளை வளர்த்திருக்கேன், அவளுக்கு சின்னதா இரட்டை ஜடை இருந்தது அப்ப, ஒண்ணு எப்பவும் கோணலாத்தான் இருக்கும். சீனாவிலேருந்து நாங்க தப்பிச்ச போது அவளை நான் பாதுகாத்தேன், எங்கே பார்த்தாலும் ஒரே காரா இருந்த ஒரு புது நாட்டுல அவளைப் பார்த்துகிட்டேன், கொஞ்சம் அசந்தா உங்களோட சின்னப் பொண்ணு மேல கார் ஏறிடும்ங்கிற மாதிரி இருந்தது. என் புருசன் செத்துப் போன போது, நான் அவருக்குச் சத்தியம் பண்ணிக் கொடுத்தேன், நான் குடும்பத்தை உடையாமல் காப்பாத்துவேன்னு சொன்னேன், மீதி இருந்தது என்னவோ நாங்க ரெண்டு பேர்தான், குடும்பம்னு அதைச் சொல்லக் கூட முடியாது.

இப்ப என் பெண் என்னை ஒவ்வொண்ணா அடுக்ககங்களைப் பார்க்க அழைச்சிட்டுப் போகிறா. எனக்குச் சமைக்க முடியும், சுத்தம் பண்ண முடியும், நான் தனியா ஏன் இருந்துக்க முடியாதா என்ன, எனக்கு என்ன வேணும் ஒரு டெலிஃபோன் இருந்தா போதும். அவளுக்கு இது வருத்தமாத்தான் இருக்கு. சில சமயம் அவ இதை நினைச்சு அழறா. நான் தான் எல்லாம் சரியாப் போயிடும்னு அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியதா இருக்கு. அவ சொல்றா, அவளுக்கு வேற வழியே இல்லை, டிவொர்ஸ் ஆகறதை அவ விரும்பல்லைங்கறா. டிவோர்ஸுங்கறது ரொம்ப மோசமான ஒண்ணுன்னு நானும் சொன்னேன், அதை யார் கண்டு பிடிச்சாங்கன்னு தெரியல்லை, என்னவொரு கொடுமையான யோசனை அது. ஒரு டெலிஃபோனோட வாழ்க்கை நடத்தறதுக்குப் பதிலா, எதிர்பாராம ஒண்ணு நடந்தது, நான் பெஸ்ஸோட சேர்ந்து வாழ வந்திருக்கேன்.

கற்பனை பண்ணிப் பாருங்க இதை. பெஸ் ஒரு தடவை வாங்க இங்கே இருக்கலாம்னு சொன்னார், அதுல என்னான்னா, அவங்க ஊர்ல அந்த மாதிரி சொன்னாக்க நாம அந்த வீட்டுக்குக் குடி பெயரணும்னு அவங்க நினைக்கறாங்கன்னு அர்த்தம். வேற ஒரு குடும்பத்தோட சேர்ந்து இருக்கறதாமெ, என்ன ஒரு பித்துக்குளி யோசனை, ஆனா அவங்களுக்கு ஒரு பெண் துணை வேணும், என் பொண்ணு மாதிரி இல்லை, இவளுக்கு ஒரு துணையும் வேண்டி இருக்கல்லை. இப்ப எல்லாம் என் பொண்ணு என்னைப் பார்க்க வந்தா சோஃபியை அழைச்சிகிட்டு வர்ரதில்லை. பெஸ் சொல்றாங்க, நாம நேட்டிக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தரணும், அப்புறமா சோஃபியை அழைச்சிகிட்டு வருவா அவ-ங்கிறாங்க. ஆனால் என் பொண்ணு முன்னைய விட நிறைய சந்திப்புகளுக்குத் தாக்கல் கொடுக்கப் போக வேண்டி இருக்கிறாப்ல தெரியுது, ஒவ்வொரு தடவையும், அவ வரும்போதே உடனே திரும்பிப் போற மாதிரியே வரா.

எனக்கு ஒரு குடும்பம் இருக்கு காப்பாத்தணும் அதை, அவள் சொல்ற போது அவ குரல் கனத்துப் போகிறது, ஏதோ அது சொட்டச் சொட்ட நனைஞ்ச மாதிரி இருக்கும். எனக்கு ஒரு இளம் வயசு மகள் இருக்கா, அவளுடைய புருசன் மன அழுத்தத்துல கெடக்கார், அவளுக்குப் போய் ஆறுதல் தேட ஒரு ஆளு இல்லையாம்.

அப்படி ஆறுதலுக்கு யாரும் இல்லைன்னு அவ சொல்லும்போது, அவ என்னைத்தான் சொல்றா, எனக்குத் தெரியும்.

இப்போதெல்லாம் என்னோட அழகான பொண்ணு அத்தனை களைச்சுப் போய் வரா, அவ அந்த நாற்காலியில உட்கார்ந்ததுமே தூங்கிப் போயிடறா. ஜானுக்கு மறுபடியும் வேலை போயிடுத்து, ஆனா அவங்க என் உதவியைக் கேட்கறத்தை விட்டுட்டு, இன்னொரு ஆயாவை குழந்தையைப் பாத்துக்கற வேலைக்கு அமர்த்தி இருக்காங்க, அவங்களுக்கு அது கட்டுப்படி ஆகாதுன்னு இருந்தாலும் பரவாயில்லையாம். வேற எப்படி இருக்கும், அந்தப் புது ஆயா ரொம்ப வாலிபம்தான், குழந்தையோட ஓடி ஆடித் திரிய முடியறது. இப்போதெல்லாம் சோஃபி முன்னை மாதிரியே பிடாரியா இருக்காளா இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனா இன்னமும் என்னை அசடுன்னுதான் கூப்பிடறா, ஆனா எப்பவாவது பார்க்கும்போது எனக்கு மூக்கில ஒரு முத்தம் கொடுக்கறா. வேற எந்தக் குழந்தையும் இப்படி முத்தம் கொடுத்து நான் பார்க்கல்லை.

சாடிலைட் டிவியில ஏகப்பட்ட அலைவரிசைங்க இருக்கு, நான் எண்ண முடியாத அளவுக்கு இருக்கு. சீனமொழியில கூட பெரிய சீனாவிலேருந்து ஒண்ணும், தாய்வானிலேருந்து இன்னொண்ணும் கிடைக்குது, ஆனா பெரும்பாலும் நான் பெஸ் கூடச் சேர்ந்துகிட்டு, இந்த ‘ப்ளூப்பர்ஸ்’ங்கற நிகழ்ச்சியைத்தான் பார்க்கிறேன். நானும் பறவைங்களுக்குத் தீனி போடற கலத்தைப் பார்க்கிறேன் – எத்தனை வகை வகையாப் பறவைங்க வர்றதுங்க. ஷே பையங்க எப்பவும் இங்கேயேதான் சுத்திச் சுத்தி வர்றாங்க, நான் எப்ப வீட்டுக்குப் போவேன்னு கேட்டுகிட்டே இருப்பாங்க. பெஸ் அவங்க கிட்டே சொல்லுவாங்க, நீங்க தொலைஞ்சு போங்கடா.

இங்கே அவங்க நிரந்தரக் குடி, பெஸ் சொல்றாங்க. அவங்க வேற எங்கேயும் போகப் போறதில்லை.

சொல்லிட்டு அவங்க என்னைப் பார்த்து கண்ணடிச்சாங்க, அப்புறம் ரிமோட் கண்ட்ரோலை வச்சு டிவியில அலைவரிசையை மாத்தினாங்க.

நான் முன்னை மாதிரி, ஐரிஷ் இப்படி, ஐரிஷ் அப்படின்னு சொல்லக் கூடாது, அதுவும் இப்ப நானுமே கௌரவ ஐரிஷ் ஆயிட்டேனாம், பெஸ் அப்படித்தான் சொல்றாங்க. நானா! இங்கே யாரு ஐரிஷ்காரர்? அப்டீன்னு நான் கேட்பேன், அவங்க சிரிக்கறாங்க. இருந்தாலும், நான் சில ஐரிஷ்காரங்களைப் பத்தி ஒண்ணு சொல்ல முடியும், அவங்க எல்லாரும் அப்படி இல்லைதான், ஆனா நான் இதைச் சொல்ல விரும்பறேன்: அவங்க பேசறது ஒட்டிக்குது. பெஸ் ஷே இருக்காங்களே, அவங்களோட பேச்சுல வார்த்தைங்களை இப்படிப் போட எங்கே கத்துகிட்டாங்கன்னு எனக்குத் தெரியாது, ஆனா சிலசமயம் அவங்க சொன்னதை ரொம்ப நாள் கழிச்சுக் கூட என்னால கேட்க முடியுது. நிரந்தரக் குடி. வேற எங்கேயும் போகப் போறதில்லை. மறுபடி மறுபடி நான் அதைக் கேட்கறேன், பெஸ்ஸோட குரல்லெ.

***

மூலக் கதையை இங்கிலிஷில் எழுதிய கிஷ் ஜென், சீன அமெரிக்கர். பாஸ்டன் நகரில் குடியிருக்கும் கிஷ் ஜென், ஆசிய வம்சாவளி எழுத்தாளர்களில் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர். நல்ல பிரக்யாதி பெற்றவர். பாஸ்டன் நகரில் உள்ள சில பல்கலைகளில் பேராசிரியராக, ‘எழுதும் கலையை’ப் போதிக்கிறார். இவருடைய கதைகளில் புலம் பெயர்ந்தவர்களின் சமூக நிலைகள் அடிக்கடி பேசப்படுகின்றன. வெறும் அவலச் சுவையை மட்டும் தொடர்ந்து பேசாமல், இயல் வாழ்வின் பல பரிமாணங்களைத் தொட்டு எழுதுகிறார். சமீப காலத்துக் கதைகளில் நிறைய நகைச்சுவையும் கலப்பதால் வாழ்வின் அபத்தப் பரிமாணங்களையும் நாம் தரிசிக்க முடிகிறது. இந்தக் கதை அவருடைய 1999 ஆம் ஆண்டுச் சிறுகதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது. புத்தகத் தலைப்பு, இந்தக் கதையின் தலைப்புதான். ‘Who is Irish?’ என்கிற அந்தப் புத்தகம் பற்றிய ஒரு மதிப்புரையை இங்கே காணலாம்: https://archive.nytimes.com/www.nytimes.com/books/99/05/30/daily/060499jen-book-review.html

புத்தக விவரம்: ‘Who is Irish?’ (1999) Gish Jen; First edition published by: Knopf

இவருடைய சமீபத்துச் சிறுகதைத் தொகுப்பு, ‘Thank You Mr.Nixon’ இவருடைய வருத்தமும், அங்கதமும் கலந்த நகைச்சுவையை மேலும் கூர்மைப்படுத்திக் காட்டுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.