மேற்கத்திய இசை: எளிய அறிமுகம்

கடந்த இரண்டு வருடங்களாக மேற்கத்திய இசையை கேட்டுவருகிறேன், இக்கட்டுரை கண்டிப்பாக இசைவிமர்சனமோ, இசையின் விவரணையோ இல்லை, ஓர் ஆரம்பகட்ட ரசிகனாக மேற்கத்திய இசைக்குள் நுழைய எனக்கு இருக்கும் தடங்கல்கள், அவற்றைத் தாண்டி வருவதில் கிட்டிய என் புரிதல்களை இக்கட்டுரையில் பகிர்கிறேன். இசை விமர்சனத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. எது நல்ல இசை என்று எப்படி வரையறுப்பது?

இன்னும் அணுகமுடியாத பழங்குடியினர்களின் தொன்ம இசையை நாம் கேட்கும்பட்சத்தில், நம்முடைய முடிவுகளைத் தலைகீழாக மாற்றலாம் இல்லையா? இசை என்பது ஆழ்மனம் சம்பந்தப்பட்டது, அதில் நம் மூதாதையர்களின் மரபு, தொன்மம், நினைவுகளான சொற்களற்ற உணர்வுகள், மூலையின் முடிச்சுகள் போன்ற விசித்திர நாணல்கள் பின்னிய உணர்வுகள். இசைக்கோவைகள், கலைஞர்களின் ஈர்ப்பு அவரவர் விருப்பங்களுக்கு ஏற்ப மாறும்.

என் சொந்த அனுபவங்களும், மேலும் இசை ரசிகர்களால் உலகெங்கும் அங்கீரகரிக்கப்பட்ட இசை மேதைகள், அவர்களின் இசையே அறிமுகப்படுத்துகிறேன். கர்நாடக/ஹிந்துஸ்தானிய சங்கீதம் கேட்ட என் காதுகளுக்கு, ஏன் மேற்கத்திய செவ்வியல் இசையை அணுகுவதில் தயக்கம் வருகிறது என்று பலமுறை சிந்தித்ததுண்டு. நேரடியாக பீத்தோவனின் சிம்பனியை நேரடியாக எந்த முன்னனுபவமும் இல்லாமல் கேட்க ஆரம்பித்தேன். விவரிக்கமுடியாத சுமையை என் மேல் வழியச் சுமத்துவது போன்று உணர்வு, இறைச்சல் கலந்த எரிச்சல், விவரிக்கமுடியாத துயரம் எழவும் விலகிவிட்டேன், முதல் தோல்வி. ஆறு மாதங்கள் மேற்கத்திய சங்கீதங்களுக்கு செல்வதை விட்டுவிட்டேன். சரி ஏன் இந்த ஒவ்வாமை எனக்கு? கர்நாடக சங்கீதத்தில் பிரதானமாக பாடகர்களின் குரலே ஓங்கி இருக்கும், நாம் ரசிப்பது அவர்களின் ஆலாபனையை, ஸ்ருதியை, தாளம், கீர்த்தனைகள் மற்றும் ஸ்வர வரிசையை. பக்கவாத்தியமான வயலினையோ, மிருதங்கத்தையோ அனேகர் கவனத்தில் கொள்வதே இல்லை. அந்தப் பழக்கம் உள்ளவர்களுக்கு,, சில பயிற்சிகளும், புரிதல்களும் இல்லாமல் மேற்கத்திய இசையைக் கேட்பது, வெறும் நாளிதழ்கள் வாசித்து விட்டு நாவல் எழுதச் செல்வதற்கு சமமானது. அன்று முழுவதும் தாளமுடியாத மனஅழுத்தத்தில் விழுந்துவிட்டேன். பின்பு தான் உணர்ந்தேன், சங்கீதம் ஏதோ உணர்வைக் கடத்தியிருக்கிறது, வெறும் மேலதிகக் கொண்டாட்டங்களுக்கான இசையைக் கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு, சங்கீதம் வாயிலைத் திறந்து வைத்துக்கொண்டு அரவைணைக்கத் தயாராக இருக்கும் தருணத்தில் விலகிவிட்டிருக்கிறேன்.

நமது நம்பிக்கையில் சில தத்தளிப்புகளை உருவாக்குகிறது, பழகிய சிந்தனைகளைக் கேள்விக்குள்ளாக்கிறது, கற்பனையின் எல்லை என்று நீ வகுத்தது அடிப்படை தவறு , மேலும் விஸ்தரி என்ற அறைகூவல். நாம் கொண்டிருக்கும் பற்றுக்கோல் நழுவும் தருணம். தீராப் பெருங்காமமும், வன்முறையும், ததும்பிப் பொங்கும் அகந்தையோடு கலையை ஆராதிக்கமுடியாது. நேரெதிர் ஆன்மீக மழரிதலான அர்ப்பணிப்பும், நேர்மையும் தானே கலையை அனுகுவதற்கான அடிப்படை தகுதி, உள்ளே சென்றவுடன் அக்கலையே நம்மை உண்ணுதல் படுத்துகிறது, ஐரோப்பா சமூகம் இதைத் தானே 400 வருடங்களாக முயன்று கொண்டிருக்கிறது. உலகியல் விடுக்கும் அபயக்குரல் ஒலிக்கும் போது தெய்வங்கள் நம்மை கைவிடும்போது நம்மை ஆசுவாசப்படுத்துவது நாதங்களே.

மேற்கத்திய இசை அடிப்படை வரலாற்றை நாம் அறிந்து கொள்ளவேண்டுமா? இது பரவலாகக் கேட்கப்படும் கேள்வி. இசை என்பது அகந்தை/உணர்வின் வெளிப்பாடு, அது கலாச்சாரத்தின் பிம்பம், கலாச்சாரத்தை அறியும் போது அதன் வெளிப்பாடான கலையையும் அறிந்துகொள்வோம். அதன் வரலாற்றை அறிந்து கொள்ளும்போது, இசையை பற்றிய அடிப்படை புரிதலே மாறிவிடும். மேற்கில் ‘Music Appreciation’ என்று இதற்கென்று ப்ரத்யோக பயிற்சிகள் உள்ளன. சுருக்கமாக வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் போது இசை ஒலிக்கும் போது, அகம் வேறு, நாதம் வேறு என்ற தன்மையை அடைந்துவிடுவோம். இசையின் அடிப்படையாக நாம் அறிந்துகொள்ள வேண்டியது – “அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்று இசை வரலாற்று ரீதியாக ஒரு படிநிலையை அடைந்தது என்று கூறமுடியாது. கிளாடியோ விட ப்ரெஸ் சிறந்தவரா? மொசார்டா, பீத்தோவனா, பாக், மால்கர், ஸ்கோன்பெர்க் என்று யாராலும் வரிசை பட்டியலிட முடியாது, அந்தக் கால கட்டத்தின் உணர்வுகள், கலைஞரின் அகம், சமூகச் சூழ்நிலை, அரசியல் நிலைகள் என்ற எண்ணற்ற காரணிகள் உள்ளன, எதிர்காலத்தில் உருவாகும் செயற்கை அறிவின் மூலம் உருவாக்கும் இசையும் இதில் அடக்கலாம்”. நாம் ஏன் இன்றும் வெர்மீரின் ஓவியத்தையோ, மைக்கேல் ஏஞ்சலோவின் சிற்பத்தையோ, பீத்தோவனையோ ரசிக்கிறோம், பொதுவாக கடந்த கால ஏக்கம் என்று வரையறுக்க முடியாதல்லவா, அக்கலை நம்மில் சொல்லில் விளக்க முடியாத உணர்வுகளை செலுத்தி ஆன்மீக தேடலை உருவாக்குகிறது. உலங்கெங்கிலும் இருக்கும் பெரும் மதங்கள் இசையை ஆன்மீகப் பாதையின் ஓர் அங்கமாக இருப்பதை பார்க்கலாம். மேற்கத்திய சங்கீதத்தை அதையொட்டிய காலகட்டத்தில் இப்படி வகைப்படுத்தலாம்.

  1. பதினைந்து – பதினேழாம் நூற்றாண்டு – Renaissance
  2. பதினாறு- பதினேழாம் நூற்றாண்டு – Baroque
  3. பதினெட்டாம் நூற்றாண்டு – Classical
  4. பத்தொன்பதாம் நூற்றாண்டு – Romantisicm
  5. இருபதாம் நூற்றாண்டு – Nationalism/Post-Modernism

இதை இன்னும் தெரிந்து கொள்ள Gregorian Chant, Baroque,Hymn வரலாற்று முந்தைய இசைகளையும் வாசித்து அறிந்துக் கொள்ளலாம்.

இசையின் கோட்பாட்டை நாம் ஆழமாக கற்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். மேற்கத்திய சங்கீதத்தில் சுருக்கமாக 10 வகைகள் உள்னன. இங்கு நான் குறிப்பிடுவது அடிப்படையாக ஆரம்ப நிலையில் தெரிந்துகொள்ள வேண்டிய மூன்று வகைகள் (Sonata, Concerto, Symphony)

சொனாட்டா (Sonata):

சொனாட்டா என்றால் பாடல் என்று அர்த்தம். 16 ஆம் நூற்றாண்டு சொனாட்டாவில் 3-6 இயக்கங்கள் இருந்தன. செவ்வியல் காலகட்டத்தில் பெரும்பாலும் 3 இயக்கங்களே இருந்தன. வேகம் (allegro), மெதுவாக (adagio), மீண்டும் வேகம்/இல்லை அதி வேகம்(Allegro). இதை ABA என்றும் சுருக்கமாக கூறுவார்கள். 17 ஆம் நூற்றாண்டு பீத்தோவன் நான்காவது இயக்கத்தைக் கொண்டுவந்தார். சொனாட்டா பெரும்பாலும் இசைக்கப்படுவது பியானோவில், தந்தி இசையாக வயலினோ, செல்லாவோ துணையிசையாக இசைக்கப்படும்.

கான்செர்ட்டோ (Concerto):

இது மூன்று இயக்கங்களாக வரும் இசைக்கோவை. பிரதானமாக பியானோவோ/வியலினோ/செல்லோவோ அதற்க்கு பின்னணி அலங்காரமாகக் சிறிய இசைக்குழு. கான்சர்ட்டோவில் ஒத்தக் வாத்திய கருவியும், இசைக்குழு வாத்தியங்களும் உரையாடும்.

baroque காலகட்டத்தில் பாக் போன்றவர்கள் கான்சர்ட்டோ பாணி இசையை அறிமுகப்படுத்தினார்கள், மேலும் செவ்வியல், கற்பனா காலகட்டத்தில் தான் அதன் உச்சத்தை சொல்லலாம். மோட்சார்ட், பீத்தோவன், விவால்டி, செய்வோஸ்கி, ராச்மானின் போன்ற இசை மேதைகளின் பங்களிப்பு மேற்கத்திய செவ்விசையில் தனிப்பெரும் மகுடமாக திகழ்கிறது.

சிம்ஃபனி (Symphony):

சிம்ஃபனி என்பது கிரேக்க மொழியில் சிம்ஃபனியா என்ற சொல்லில் இருந்து மருவியது.

வேகம் (allegro), மெதுவாக (adaigo), மீண்டும் வேகம்/இல்லை அதி வேகம்(Allegro) என்று நான்கு இசை இயக்கங்கள் உள்ள வகை இசைக்கோவை இது.

உதாரணமாக புகழ்பெற்ற பீத்தோவனின் சிம்ஃபனி 3 (Eroica ) பற்றிய எப்படி கேட்கவேண்டும் என்று பார்க்கலாம். காலத்தால் அழியாக் கலைஞன் பீத்தோவன் தான் இரண்டாம் பகுதியாக வாசித்தது. Flute, oboe, clarinet, bassoon, horn, trumpet, timpani , violin, viola என்று பல வாத்தியங்களின் கூட்டிசை இது. குறைந்தது 40 இசைக்கலைஞர்களாவது வாசிப்பார்கள். பீத்தோவன் Eroica கற்பனாவாதக் காலகட்டத்தில் சேர்ந்தது. இந்த இசைக்கோவைக்கு ஒரு வரலாற்று அடிப்படை உள்ளது. ஃபிரெஞ்சு புரட்சியின் இறுதியில் அதிகாரத்தைக் கைப்பற்றிய நெப்போலியனின் வாழ்க்கையையொற்றி பீத்தோவன் எழுதிய இசைக்கோவை. நெப்போலியன் மக்களின் நாயகன் என்று அவர் கருதியிருந்தார். பின்பு தன்னைச் சக்கரவர்த்தியாக அறிவித்துக் கொண்ட அவனின் சர்வாதிகார போக்கை கண்டித்து அவன் பெயரை அந்த இசைக்கோவையின் முகப்பிலிருந்து நீக்கி விட்டார். பின்னர் தன் இசைக்கோவைக்குச் சன்மானம் அளிக்க முன்வந்த வியன்னாவின் அரசருக்கு சமர்ப்பித்தார் என்பது தான் சுருக்கமான வரலாறு . அக்காலகட்டத்தில் எழுதிய மிகப்பெரிய இசைக்கோவை, மேலும் மரபான சாஸ்திரிய சங்கீதத்தில் இருந்து கற்பனாவாதத்தின் பாய்ச்சலாக Eroica அமைந்தது. அஜிதன் எழுதிய மைத்திரி கூட கற்பனாவாதத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது, அவர் கூட Eroica வின் பாதிப்பில் எழுதியதாக படித்த நினைவு . சொல்லில் விவரிக்கமுடியாத உணர்வுகள் இன்னும் கோடியில் இருக்கலாம், இவ்விசையை அக்காலகட்டத்தின் அடக்குமுறை, அரசியல் மாற்றங்கள், அதிகாரம், துயரங்கள், மரணம், சமூக எழுச்சி , மரபை கொண்டாடுதல், இன்னும் விவரிக்கமுடியாத உணர்வுகளை இசை குறிப்புகளாக பீத்தோவன் எழுதியுள்ளார். இதன் நான்கு பகுதிகளும் வெவ்வேறு உணர்வுகளை சொல்லுவன.

முதல் பகுதி Allegro con brio (நாயகனின் துயரம், போராட்டம், மனச்சோர்வு, மனநோய், புறக்கணிப்பு, ஏளனம்)

இரண்டாம் பகுதி Marcia funebre (நாயகனின் மரணம், இது நிறைய சவ அடக்க நிகழ்ச்சிகளில் இன்றும் வாசிக்கப்படுகிறது)

மூன்றாம் பகுதி. Scherzo: Allegro vivace ( நாயகன் மனச்சோர்விலிருந்து வெளியேறுதல், உயிர்த்தெழுதல், கொண்டாட்டம், மரபிசை )

நான்காம் பகுதி Finale: Allegro molto (சமூக விடுதலை, கொண்டாட்டம்). நான் சில வருடங்களாக கேட்டுக்கொண்டிருக்கும் இசைக்கோவை. குறிப்பாக இந்த பகுதியை நேரில் இசைக்கலைஞர்கள் வாசிப்பதை கேட்பதற்கு இன்னும் கொண்டாட்டமாக இருந்தது. நான் நேரில் பார்த்த சிம்ஃபனி கலைஞர்கள் வாசித்ததை என்னால் இப்படிப் பகுதி வாரியாக ரசிக்கமுடிந்தது.

1. பிரெஞ்சு ஹார்ன் என்ற வாத்தியக்கருவிதான் நாயகனின் சார்பாக சிம்ஃபனி முழுவதும் கதைசொல்லும். முதல் பகுதியில் orchestra தொடங்கிய இடத்திற்கு மீண்டும் வருதல், மூன்றாம் பகுதியில் Scherzo (இப்பகுதி மட்டும் 6 நிமிடங்கள் தான்) மூன்று வாத்தியக்கருவிகளுடன், நான்காம் பகுதியில் இறுதியாக ஒரு சமூகத்தின் கருத்தியலை பறைசாற்றும் இசையாக வருதல்.

2. ப்ராஸ் இசைக்கருவியும் (trumpets), தந்தி இசைக்கருவியும் (Violin, Viola, Cello) இடையே- ஒத்திசைவுக்கும் (Harmony), ஓசையொழுங்குக்கும் (Rhythm) வரும் முரண்பாடுகள்.

3. இரண்டாம் பகுதியில் வரும் இறுதிச்சடங்கு Oboe யின் melody, முதல் பகுதியில் இசைக்கப்படும் பல ஓசை ஒருங்கிணைப்பு (fugue- Melody).

4. Scherzo ஆரம்பத்தில் வரும் பீட் முதலில் தந்தி இசையாக, பின்பு 3 oboe, clarinet இசையில்.

5. இறுதி அசைவு (Finale) என்பது இங்கு கொண்டாட்டம், அதற்கு வரும் இசை என்பது அச்சமூகத்தின் மரபான நடனத்துக்கு ஏற்ப மெல்லிசை.

தொடக்கநிலையில் நான் கேட்டது

1. என்னால் 40-50 இசைக்கருவிகள் சங்கமித்து ஒலிக்கும் இசையை ஏற்கமுடியவில்லை. அதற்கு காரணம் ஒற்றை வாத்தியத்தை மட்டும் தொடர்ந்து கேட்கும் பழக்கம் இல்லையென்று தோன்றியது. முதல்வதாக நாம் ஆரம்பிக்கவேண்டியது செல்லோ அல்லது பியானோ போன்ற ஒற்றைக் கருவிகளை தொடர்ந்து ஓரிரு மாதங்கள் கேட்க வேண்டும். புகழ்பெற்ற இரண்டு இசைக்கோவைகளை முயற்சித்து பார்த்தேன், என்னை அரவைணைத்துக்கொண்டது, முதல் படிநிலையில் முன்னேற்றம் .

Beethoven fur elise in piano

Bach Cello Suite No:1

Rondo Alla Turca

2. எளிதான sonata, concerto என்று சிலகாலம் கேட்டுக்கொண்டவுடன் வாத்தியக்கருவி நம் காதுகளுக்கு பழகிவிடும். அப்பறம் சிம்ஃபனி கேட்க ஆரம்பிக்கலாம்.

பேத்தோவன்

Moonlight Sonata

ரக்மனினாஃப்

Piano Concerto no.2

3. ஆரம்பக் கட்டத்தில் வாத்தியக் கலைஞர்களின் காணொளியை ஒலியாகக் கேட்பதை விட காணொளிகளைப் பார்ப்பதில் சில பயன்கள் உள்ளது. முதலில் கேட்கும் போது இசை நமக்கு அந்நியமாக இருக்கும் பட்சத்தில், காணொளியைப் பார்க்கும்போது இசைக்கலைஞர்களின் உழைப்பும், ஆர்வமும், பாவனைகளும், ரசிகர்களின் கரகோஷங்களும் நமக்கும் ஆர்வத்தை தூண்டும் . குறைந்த பட்சம் பார்ப்பதனால் அந்த இசைக்கோவையை முழுதாகக் கேட்டுவிடுவோம் இல்லையா.

4) மேற்கத்திய இசையை நாம் ஓரளவு கேட்கத்தொடங்கியவுடன் கண்டிப்பாக இசைக்கோட்பாடுகளையும் கற்றுக்கொள்ளவேண்டும். சங்கீதத்தின் கோட்பாடுகளைக் கற்றுக்கொள்ளும்போது, நமக்கும் கலைஞர்களுக்கும் உள்ள இடைவெளி குறைந்து நம் அக உலகத்தை வெறும் நிசப்தமாக மாற்றி அங்கே நாமும் இசையும் மட்டுமே இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முடியும். உதாரணமாக மேல் ஸ்தாதியில் வாசிக்கும் ஒரு கருவியும், கீழிறங்கி வாசிக்கும் இன்னொரு கருவியும் சந்தித்துக்கொள்ளும் புள்ளியை contrapuntal என்று அழைப்பார்கள். இது போன்ற நுணுக்கங்களை அறிந்து கொள்வதற்கு கோட்பாட்டுப் பயிற்சி அவசியம்.

Beethoven sonata pathétique:

Movement 1 – Allegro

Movement 2 – Adaigo

Movement 3 – Rondo form

Moon Light Sonata:

Movement 1 – Adaigo

Movement 2 – Allegretto/Scherzo

Movement 3 – Allegro

Antonio Vivaldi 4 Seasons Violin Concerto

Rachmaninoff: Piano Concerto 2

Saint-Saëns Cello Concerto

Eric Korngold Cello Concerto

Beethoven:

Beethoven Symphony 3

Beethoven Symphony 5

மாலர்:

Symphony 1

Tchaikovsky:

Symphony 5

Dvorak:

Symphony 7

Schubert:

Symphony No. 8, Unfinished

சில அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு, பின்வரும் கலைஞர்களை ஒவ்வொருவராகக் கேட்க வேண்டியிருக்கும். இது கண்டிப்பாக தர வரிசைப் பட்டியல் அல்ல. அவரவர் விருப்புகளின்படி இது மாறும்.

  • Ludwig van Beethoven
  • Wolfgang Amadeus Mozart
  • Antonio Vivaldi
  • Gustav Mahler
  • Johann Sebastian Bach
  • Pablo Casals
  • Richard Wagner
  • Robert Schumann
  • Camille Saint-Saëns
  • Joseph Haydn
  • Franz Schubert

One Reply to “மேற்கத்திய இசை: எளிய அறிமுகம்”

  1. தீர்க்கமாகவும், செறிவாகவும் எழுதப்பட்டுள்ள கட்டுரை. புனைவு மொழியில் புழங்கும் இலக்கிய வாசகன் கட்டுரை எழுதும்போது அவனது மொழி பூண்டு கொள்ளும் பொலிவு இக்கட்டுரை முழுக்கத் தெரிகிறது. எளிய அறிமுகம் என்று தலைப்பிட்டிருந்தாலும், அடர்த்தியான தகவல்கள் கொண்டுள்ள கட்டுரை, கட்டுரையாளர் உழைப்பைச் சுட்டுகிறது. அப்படியே வாசகரின் உழைப்பையும் கோருகிறது. திரை இசைக்கப்பால் வேறெந்த மேற்கத்திய இசை அறிமுகமுமற்ற எனக்கு ( Fur Elise கேட்டால் டைடன் வாட்ச்சை நினைவு கூருமளவிற்கு என் இசை அறிவு) கட்டுரையின் இறுதியில் தரப்பட்டுள்ள கண்ணிகள் பயனுடையதாக இருக்கும். ஆனாலும் ரஞ்சிதமே, ஹி இஸ் அ கேங்க்ஸ்டாக்களின் ஆதிக்கத்தைத் தாண்டி சாஸ்திரீய சங்கீதத்துக்குள் நுழையுமளவுக்கு எனக்குப் பொறுமையும், முதிர்ச்சியும் இன்னும் கைகூடவில்லை. அருமையான கட்டுரைக்கு நன்றி, வாழ்த்துக்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.