மிளகு அத்தியாயம் முப்பத்தாறு

மிர்ஜான் கோட்டை 1604

பைத்யநாத் வைத்தியர் ஏறி வந்த குதிரை வண்டி மிர்ஜான் கோட்டை நுழைவு வாசலில் நிறுத்தப்பட்டது. நிதானமாக வண்டி சோதனை போடப்பட்டது,

“வைத்தியரே, ஒரு பெட்டி தானே போகும்போது எடுத்துப் போனது. இப்போ அது குட்டி போட்டிருக்கே”. கோட்டைக் காவல் தலைவன் சிரித்துக்கொண்டே வைத்தியரின் மருத்துவப் பேழைகளைச் சுட்டிக்காட்டிக் கேட்டான்.

”நெல்பரலி மூலிகைச்செடி அத்தனையும்”. வைத்தியர் பெருமையோடு பெட்டியைத் திறந்து மூடினார்.

”இவ்வளவும் ஒரே மூலிகை என்றால்?” தலைமை காவலன் தொடங்கி நிறுத்தினான். வைத்தியரே முடித்து வைக்கட்டும் என்ற எதிர்பார்ப்பு அவன் பார்வையில் தெரிந்தது.

”இத்தனையும் ஒரே மூலிகை என்றால் மூன்று விஷயங்களில் ஒன்று நிகழ நிகழ்ந்து இருக்கக் கூடும். ஒன்று, யாருக்கோ நோய் முற்றி விட்டிருக்கிறது. வண்டி வண்டியாக மூலிகை அரைத்தும் பிழிந்தும் சுட்டும் சதா கொடுத்து, போக அலைபாயும் உயிரை இழுத்துப் பிடித்து நிறுத்துகிற பிரயத்தனமாக இருக்கும். இல்லை என்றால் ஊரோடு பலபேருக்கும் நோய் கண்டு ஒரே நேரத்தில் எல்லோரையும் சிகிச்சை செய்ய வைத்தியருக்குப் பொறுப்பு மிகுந்திருக்கிறது. அதுவும் இல்லையா? அபூர்வமான மூலிகையாக இருக்கும். கிடைக்கிறபோது எவ்வளவு முடியுமோ அவ்வளவு கையகப்படுத்தி லேகியமாகவும், குளிகையாகவும், தைலமாகவும் செய்து வைத்துக்கொள்ளும் உத்தேசமாக இருக்கும். சரிதானா?”

வைத்தியர் விக்கிரமாத்தியனைப் பிடித்த வேதாளம் கேட்டதற்கு சரியான விடை பகன்ற மாதிரி வண்டியை திருப்தியோடு நகர்த்தினார்.

நெல்பரலியில் லேகியம் செய்து போகிற ஊருக்கு எடுத்துப் போகணும். இரண்டு மாதத்துக்காவது விடிகாலை வெறும் வயிற்றில் லேகியம் சாப்பிட்டு வென்னீர் குடித்தால் ரோகம் அண்டாது. கோட்டை அரண்மனைக்கும், ஜெர்ஸொப்பா அரண்மனைக்கும் தரவேண்டுமா அல்லது இவற்றில் ஒரு இடத்துக்குக் கொடுத்தால் போதுமா? லேகியம் இன்று இரவு கிளறி செப்புகளில் அடைக்கப் போகிறார் வைத்தியர். அதற்கு முன் குத்துமதிப்பாக அரண்மனை பங்கு எவ்வளவென்று தெரிய வேண்டி இருக்கிறது.

மருத்துவர் என்ற உரிமையோடு அரண்மனையில் எங்கும் எப்போதும் நுழைய பைத்தியநாத் வைத்தியருக்கு அனுமதி உண்டு. அதுவும் மகாராணி இருக்கும் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் பிரவேசம் அனுமதி உண்டு. கூட அந்தப்புர மகளிரில் யாராவது வர வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனையோடு. வைத்தியர் முற்றத்தில் ஓரமாக மேசை போட்டு வைத்திருக்கும் மணியை குறைந்த பட்சம் ஒலி எழுப்பி அடித்தால் போதும். அடிக்கிறார். மிங்கு வெளியே வருகிறாள். என்னப்பா என்ன விஷயம் என்று விசாரிக்கிறாள். இவ்வளவுக்கும் இருவரும் புருஷன் பெண்டாட்டி.

”ராணியம்மா உறக்கத்திலேயா?”

“ஆமாய்யா, பாவம் கொஞ்சம் பலகீனமா இருந்ததாலே சீக்கிரமே உறங்கப் போய்ட்டாங்க” என்றபடி வைத்தியரைக் கையைப் பிடித்து உள்ளே கூட்டிப் போனாள். அந்தக் கையை இறுகப் பற்றியிருந்தார் வைத்தியர்.

செருப்புகள் ஒலி எழுப்பாமல் அந்தப்புர முன் மண்டபத்தில் கழற்றி வைத்து விட்டு வரச் சொன்னாள் மிங்கு. புதுச் செருப்பு என்றபடி கழற்றினார் வைத்தியர்.

“ஊருக்குப் போனா செருப்பு வாங்கறதுன்னு எவ்வளவு வெட்டிச் செலவு பண்ணறீங்க” என்று மிங்கு ஒரு நிமிடம் பெண்டாட்டியாகக் கோபித்துக் கொண்டு விட்டு, அடுத்த கணம் மௌனமாக நடக்கிறாள்.

மெல்லவும் நடக்கிறாள். காலையில் தான் வைத்தியர் உறுதிப்படுத்தினார் தன் அன்பு மனைவி மூன்று மாதம் கர்ப்பம் தரித்திருக்கிறாள் என்று. கணவன், மனைவி இருவருக்குள்ளும் நிரம்பி வழியும் சந்தோஷம் முகங்களில் தெரிகிறது.

படுக்கை அறை நாற்காலியில் அமர்ந்து கொண்டு, “வைத்தியா, வந்துட்டியா? ஒரு மணங்கு ஏதோ இலைதழையோட வந்துட்டிருந்தியே. ஜன்னல் வழியாப் பார்த்ததுமே அப்படியே குதிச்சு ஓடிடலாம்னு தோணிச்சு. அத்தனையும் எனக்கா?” பொய்க் கோபமும் பொய்ப் பயமுமாகக் கேட்டாள் மிளகு ராணி.

“ஐயோ அம்மா, இத்தனையும் ஒரே நாள்லே சாப்பிட வேணாம்” என்றபடி வைத்தியர், நாடி பிடித்துப் பார்க்க அனுமதி கேட்கிறார்.

”பிடிச்சுப் பாரு. அடுத்த மூலிகை கொடுத்து பரீட்சிக்கணுமே நீ” என்கிறாள் அடுத்த சிரிப்போடு.

சீராக வரும் நாடி அவருக்கு திருப்தியைக் கொடுக்கிறது.

“அம்மா வைத்தியன் பேச்சு நேரம். மத்தவங்க இருக்கலாமா?”
மிங்குவைப் பார்த்தபடி கேட்கிறார் அவர்.

‘ஏன் மிங்கு தானே? இப்போ இல்லேன்னா ராத்திரி தனியா இருக்கறபோது அவ கிட்டே சொல்லப் போறே. அரண்மனை ரகசியம் அங்காடி பரஸ்யமோ என்னமோ வைத்தியன் வீட்டுலே பரஸ்யம். சரியாடி மிங்கு?”

மிங்குவைப் பார்த்துப் புன்னகைக்கிறாள் மகாராணி.

”அம்மா நீங்க பயணத்துக்கு நெல்பரலி மூலிகை லேகியம் எடுத்துப் போகலாம்னு சொன்னோம். ரெண்டு மாசம் வருமா? பத்து சிமிழ் போதும். தினம் மறந்துடாமே விடிய ஐந்து நாழி முன்பு வெறும் வயத்திலே சாப்பிடணும். நினைவு வச்சுப்பீங்களா”

வைத்தியம் கேள்விக்குப் பதில் தேடி சென்னா மகாராணி முகத்தைப் பார்த்தான்.

“மறந்துடுவேன் வயசும் வேறே ஆகிட்டிருக்கு. அதுனாலே கூடவே கூட்டிப் போகலாம்னு இருக்கேன்”.

“எல்லா வேலையும் முடிச்சுக் கட்டிட்டு வந்துடறேன்மா. காசியோ, ராமேஸ்வரமோ, அயோத்தியோ, துவாரகையோ, லிஸ்பனோ, லண்டனோ நான் கவனிச்சுக்கறேம்மா” வைத்தியர் உற்சாகமாகச் சொல்ல சென்னா சிரித்தாள்.

“உன்னைக் கூட்டிப் போறதா எங்கே சொன்னேன்? மிங்கு என்னோடு வருவா” என்று வைத்தியரின் ஆச்சரியத்தைக் கலகலவெனச் சிரித்து ரசித்தபடி சொன்னாள் சென்னபைரதேவி மகாராணி.

”மிங்கு, உனக்கும் ஆச்சரியமா அல்லது கவலையா?” என்று தன் பிரியமான தாதியிடம் கேட்டாள் சென்னா.

”வந்து” மிங்கு நாணுகிறாள்.

“என்ன, மூணு மாசம் கர்ப்பமா இருக்கே, அதானே” பலமாகச் சிரிக்கிறாள் சென்னா இப்போது.

“மிங்கு சொல்லிட்டாளா? நான் வந்து சொல்லி இருக்கணும். மன்னிக்கணும் மகாராணி. இன்னிக்குத்தான் உறுதிப் படுத்தினோம்” என்று வைத்தியர் கைகூப்பி நிற்கிறார்.

“நீ வைத்தியனா கண்டு பிடிக்க நாள் அதிகமாகலாம். நான் தாயாக, மூத்த பெண்ணாக கண்டு பிடிக்க ஒரு மணி நேரம் கூட ஆகாது. நிக்கறது, நடக்கறது, மூச்சு வாங்கறது, முகம் சிவக்கறது, எல்லாத்துக்கும் மேலே கர்ப்பிணி வாசனை. உனக்கு தலைகீழா நின்னாலும் தட்டுப்படாது. எனக்கு மூக்கிலே குத்தும்” சென்னா வைத்தியரிடம் வாஞ்சையோடு கூறினாள்.

வைத்தியர் மிங்கு வீட்டுக்காரனாக ஒரு நிமிஷம் மாறி மிங்குவிடம், “ஆசிர்வாதம் வாங்கு” என்று சொல்ல, தம்பதியாக இருவரும் சென்னாவின் பாதம் தொட்டு வணங்கி ஆசி பெற்றார்கள்.

“பயணம் போனாப் பார்க்கலாம் யாரை கூட்டிப் போகலாம்னு. இப்போ இங்கே தான் இருப்பு” என்றாள் ராணி. ”பயணம் போனால் பத்து சிமிழ் மருந்து எடுத்துப் போகணுமா?” வைத்தியரை ஆர்வத்தோடு கேட்டாள் அவள்.

”ஆமாம்மா, சொல்லப் போனால் பத்து சிமிழும் மூலிகைச் சாற்றை கெட்டியாக்கி வச்சது. சிமிழை எடுக்கும்போது அதைக் கரைச்சு வச்சுக்கணும். அதெல்லாம் பார்த்துக்கலாம் அம்மா. என் பொறுப்பு”

“இதை எடுத்துப் போகிறதுக்கு ஏதாவது சங்கதிகளைக் கவனிக்கணுமா?”

“ஆமாம்மா, கடல்லே பயணம்னா, உப்புக் காற்றிலே மூலிகை வீரியம் குறைய வாய்ப்பு இருக்கு. அதை நிவர்த்தி செய்ய, ஒண்ணுக்குள்ளே ஒண்ணா மூணு பகுதியாக பெட்டி. பெட்டிக்குள் சிமிழ் சரியான வெப்பத்திலே கை படாமல் கிளறிக் கைபடாமல் அடைச்சு அரக்கு உருக்கி வாயை இறுக அடைக்கணும், அப்புறம் கல் உப்பு எடுத்து மரப்பெட்டி உள்ளே வெற்றிடத்திலே தூவி இருக்கணும். மூணு நாளுக்கு ஒரு தடவை உப்பை மாற்றி புதுசு இடணும்”.

சென்னா புன்சிரிப்போடு நின்றாள். இவ்வளவுதானா, ஒரு நிமிஷத்திலே முடிச்சுடலாம். அரிந்தம் வைத்தியரை கூப்பிடு என்றாள் குறும்பாக.

“அம்மா, எங்கப்பா மேலே அவ்வளவு நம்பிக்கையா? அவர் இறந்து பத்து வருஷமாச்சே. ஆவியாக வந்து பேசறாரா? வேறே எல்லாரோட ஆவியும் வர்றதாமே” என்றார் வைத்தியர் தரையைப் பார்த்தபடி.

”அது என்ன கதை?” சென்னபைரதேவி ராணி விசாரித்தாள்.

“இப்போ நான் ஒற்றனா பேசணுமா, வைத்தியனா பேசணுமா?”

பைத்யநாத் வைத்தியர் கேட்டார்.

“எதோ ஒண்ணு தகவல் சொன்னா சரிதான். அதுவும் ஹேஷ்யம், கூட்டி சேர்த்தது எதுவும் இல்லாமல் உள்ளதை உள்ளபடிக்கு பேசறது முக்கியம். மிங்கு, நீ போகிறதுன்னா போடி. போய் இவனுக்கு சித்தரத்தை கஷாயம் போட்டு வை. லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டே இருக்கான். சீக்கிரம் அனுப்பிடறேன். பயப்படாதே” என்றாள் சென்னபைரதேவி மகாராணி. மிங்கு குனிந்து வணங்கி வெளியேறினாள்.

சென்னா நாற்காலியில் உட்கார்ந்து சற்றே களைத்த பெருமூச்சு விட்டபடி, “வயசாயிட்டு இருக்குடா வைத்தியா, உக்காந்து பேசறேன். “

“ஐயோ அம்மா, உங்க சௌகரியம் தான் முக்கியம். சியவன்ப்ராஷ்னு ஒரு ஆயுர்வேத தயாரிப்பு மலையாள நாட்டில் இருந்து வந்திருக்கு. தினம்”

“வெறும் வயித்துலே சாப்பிட்டு, பால் குடிக்கணும். அப்படித்தானே?”

“எப்படி அம்மா?” ஆச்சர்யத்தோடு கேட்டார் வைத்தியர்.

“எப்படின்னா, வேறே நோயாளி உனக்கு இல்லையா என்ன? அவங்க என்கிட்டே, நான் அவங்க கிட்டே மருந்து என்ன சாப்பிடறோம்னு பேசமாட்டோமா என்ன?”

”மருந்து விவரம் பேசுங்க ராணியம்மா. உடம்புக்கு என்ன பண்றதுன்னு விவரம் பரிமாறிக்கிட்டா வைத்தியன் குழம்பிப் போக வேண்டிவரும்”. வைத்தியர் சொன்னார்.

“கவலைப்படாதே. நானும் அப்பக்காவும் மருந்து விவரம் மட்டும்தான் பரஸ்பரம் தெரிவிச்சுப்போம்” என்று சிரித்தாள் சென்னா.

“ஓ அப்படிங்களா, அப்பக்கா மகாராணிக்கு நாலு நாள் முந்தி சியவனபிராசம் லேகியம் ஒரு மண்டலம் சாப்பிடக் கொடுத்தேன். அது இங்கே பெரியவங்களுக்கு தெரிஞ்சது எனக்கு சந்தோஷமும் பெருமையும் கொடுக்கும். மகாராணி அவங்களுக்கும் சியவனப்ராஷ் ஒரு மண்டலம் சொல்லலாமா?”

”அது எதுக்கு? ஏற்கனவே விடிகாலையிலே என்னென்னவோ லேகியம் குளிகைன்னு முழுங்கிட்டிருக்கேன். சியவனம் அதெதுக்கு? சாப்பிட நல்லா தித்திப்பாக இருக்குன்னு அப்பக்கா சொன்னா. அதை ருசி பார்க்க வேணும்னா ஒரு கரண்டி இலையிலே வச்சுக்கொடுப்பியா?”

”உங்களுக்கு இல்லாத லேகியமா?” முதுகில் சுமந்த பெட்டியில் இருந்து லேகியம் எடுக்கத் தேடினார் வைத்தியர். முன் மண்டபத்தில் பெட்டியை வைத்தது நினைவு வந்தது. போய் எடுத்துட்டு வரேன்மா என்றார் அவர்.

”இங்கேயே இரு. மிங்குவை கூப்பிடறேன். அவள் நான் இன்னும் அழுத்தமா வீட்டுக்குப் போடின்னு சொன்னாத்தான் போவா. வெளியிலே நின்னுட்டிருப்பா. டீ மிங்கு, வாடி பொண்ணே”/

படுக்கை அறைக் கதவு சற்றே திறக்க மிங்கு தயக்கத்தோடு உள்ளே எட்டிப் பார்த்தாள். அவள் கையில் வைத்தியர் முதுகில் சுமந்து போகும் பெட்டி இருந்தது.

சியவனப்ராசம் சாப்பிடத் தொடங்கும்போதே ஒரு நிமிஷம் ராணியம்மான்னு நிறுத்தி ஓட்ட ஓட்டமாக சமையலறைக்குப் போய் ஒரு குவளை காய்ச்சின பாலோடு வந்தாள் மிங்கு.

சின்னச் சிரிப்போடு அதைப் பருகினாள் சென்னா.

“எந்த எந்தப் பிசாசுல்லாம் இங்கே இருந்து அழைக்குது. எந்த எந்தப் பிசாசு எல்லாம் வேறே எங்கே இருந்து இங்கே வருது? உடம்பு இல்லாத ஆவி நிஜமாகவே வருதா இவங்க கிட்டே பேச? அல்லது இவங்க கூடி உக்கார்ந்து பேச அது ஒரு சாக்கா?”

மிங்கு வெளியே போகும்போது கதவை மெல்ல அடைத்துப் போனாள் அவள். வைத்தியர் நாற்காலிக்கு அருகே தரையில் உட்கார்ந்து கொண்டார்.

அம்மா கால் வீங்கி இருக்கே என்று கரிசனத்தோடு கேட்டபடி சென்னாவின் கால்களை மடியில் தாங்கி, மெல்லப் பிடித்து விட்டபடி பேசினார் வைத்தியர்.

”ஆப்பிரிக்கா கண்டத்திலே நன்னம்பிக்கை முனை அருகே இருந்து வந்த ஒரு வயதான மந்திரவாதி ஏற்பாடு செய்ய மிட்டாய்க்கடை ரோகிணி அம்மா கடை மாடியிலே நடக்கிறது இந்த ஆவியோடு பேசறது. இங்கே இல்லே. ஹொன்னாவர்லே ரதவீதி இனிப்புக் கடையிருக்கே அந்தக் கடை மாடியிலே. ரோகிணியம்மா இருக்காங்க கூட்டத்திலே. அப்பக்கா மகாராணியோட கணவர் வீர நரசிம்மரும் உண்டு. லிஸ்பன்லே இருந்து இந்தியா, சீனா, இந்தோசீனா, சயாம், பர்மா சுற்றிப் பார்த்துட்டு போக வந்த ரெண்டு தேசாந்தரி போர்த்துகீஸ்காரங்க உண்டு. அப்பப்ப பெத்ரோ துரையவர்கள் வீட்டு நிர்வாகி கஸாண்ட்ராவும் வந்து பார்த்துட்டுப் போகிறாங்க. அப்புறம் ஹொன்னாவர் ரதவீதி வர்த்தகர்கள் கிட்டத்தட்ட எல்லோரும் வந்து பார்த்துட்டு ஓடிப் போனாங்க. வர்ற ஆவிகளிலே நமக்குத் தெரிஞ்சவர்னு யாரும் இல்லே. மகாராணியோட அப்பா மகாராஜா வரமாட்டேன்னு சொன்னதாகச் சொன்னாங்க. உண்மையான்னு தெரியலே”

“இவ்வளவு பேர் தானா ஆவியை அழைக்க வந்து கூடறவங்க?”

“ஆமாம்மா”.

“அப்படின்னா எனக்கு ஹொன்னாவர் முட்டைக்கடைக்காரர் கிருஷ்ணப்பா சொன்னது தப்பா இருக்கும்.”

”ஓ அங்கே இன்னொரு ஒற்றர் உண்டா? பிரமாதம். பிரமாதம்”.

வைத்தியர் சந்தோஷமாகச் சிரித்தபடி சென்னா மகாராணியின் கால்களைப் பிடித்து விட்டதைத் தொடர, போதும் என்று விலகிக்கொண்டார் மகாராணி.

“ஆவியைக் கூப்பிட அரண்மனையும் வந்ததாமே?” பூடகமாகச் சிரித்தாள் மகாராணி.

”நானும் தகவல் கேட்டிருந்தேன். நம்ப முடியாத ஒன்று என்பதால் உங்களிடம் அதைச் சொல்லும் முன் தீர்க்கமாக அவதானித்து உண்மை என்றால் மட்டும் உங்களிடம் சொல்லலாம் என்றிருந்தேன். அந்தக் கூட்டத்திற்கு ராஜகுமாரரும் வந்ததாகச் செய்தி உண்டு. மதிப்புக்குரிய நேமிநாதன் ராஜகுமாரர்”.

“அவர் மட்டும்தானா, அவரோடு கூட”.

பாதியில் நிறுத்திவிட்டுப் பார்த்தார் மகாராணி.

“இல்லை அம்மா. அவர் மட்டும் தான். மதிப்புக்குரிய ரஞ்சனாதேவி இளவரசியார் வரவில்லை”.

“அப்புறம்?”

“கவுடின்ஹோ பிரபு வந்திருந்தார். கஸாண்ட்ரா வந்திருந்தார். பிடவைக்கடைக்காரர் சந்திரய்யா வந்திருந்தார். அவர் தான் தகவல் கொடுத்தவர். ரோகிணியம்மாளின் மடையர்களில் ஒருவர் மனநிலை பிறழ்ந்தாற்போல் இருக்கப்பட்டவர். விநோதமான உடை உடுத்தி முகத்தில் கண்ணாடியை ஒட்ட வைத்தவர். அவர் வந்திருந்தார்”

“என்ன கேட்டார் அவர்?”

”எங்கேயோ பம்பாய்க்கு போக உதவி செய்ய ஆவிகளை அழைத்தாராம். நேமிநாதன் அவர்கள் அவரை வெளியேற்றினாராம்”.

”எந்த ஆவிகள் வந்திருந்தன?”

”மகாராணி மன்னிக்க வேண்டும். தங்களுடைய பூஜ்ய பிதா வந்ததாக சொல்கிறார்கள். தெரியவில்லை. ஒரு மணி நேரத்தில் தொந்தரவு படுத்தும் ஆவிகள் வந்து தாறுமாறாக்கியதால் கூட்டம் களேபரமாக முடிந்தது என்று தெரிகிறது. ஒரே சத்தமாக இருந்ததாக அண்டை அயலில் பெத்ரோ வீட்டு ஜன்னல்கள் சாத்தப்பட்டன என்று தகவல்”.

”வேறு எதுவும் பேசப்படவில்லையா?”

”கஸாண்ட்ராவுக்கு என் மூலம் எப்போது குழந்தை பிறக்கும் என்று ஆவிகளை சோதனை செய்யக் கேட்டாராம் கவுண்டின்ஹோ பிரபு. இது பிடிக்காத ஆவிகள் சத்தம் போட்டு வெளியேறினவாம். துரைக்கு அந்த நிமிடத்தில் இருந்து உடம்பு சுகவீனம் கண்டு மங்கலாபுரத்திலிருந்து வெள்ளைக்கார மருத்துவரை வரவழைத்திருக்கிறார்களாம்”.

”இந்த ஆவிகள் எப்படிப் பேசும்?”

“எனக்கும் சரியாக விளங்கவில்லை அம்மா. ஒரு பலகை வைத்திருக்கிறார்கள். செவ்வகமான பலகை. ஊஜா பலகை என்று அதற்குப் பெயராம். பலகையில் பிறை வடிவத்தில் இரண்டு வரிசையாக, ஆங்கில எழுத்துகள் இருபத்தாறும் பதிமூன்று, பதிமூன்றாகப் பொறிக்கப் பட்டுள்ளனவாம். அவற்றின் கீழே எண்கள் நேர் வரிசையில் பூஜ்யத்தில் இருந்து ஒன்பது வரை எழுதப்பட்டுள்ளன. ஒரு குமிழை பலகையில் நடுவில் வைத்து இரண்டு பேர் பிடித்துக் கொள்வார்களாம். எந்த ஆவியோடு பேசணுமா அதை மனதில் துதித்து அழைக்கணுமாம். அந்த ஆவி இருந்து, பேசவும் விருப்பம் என்றால் குமிழியை எழுத்து எழுத்தாக நகர்த்தி சொல்ல வேண்டியதை எழுதிக்காட்டுமாம். இன்னார் வந்திருக்கீர்களா என்று கேட்டு காத்திருந்தால், அவர் ஆவியாக வந்திருந்தால் குமிழ் ஒய் ஈ எஸ் என்ற மூன்று எழுத்துகளைத் தொட்டு நகருமாம். அது யெஸ் என்று ஆங்கிலத்தில் பொருள்படும். ஆம் என்று அர்த்தம். இப்படி கேள்வி கேட்டு பதில் எழுதி வாங்கி ஒரு மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியை சியான்ஸ் என்கிறார்கள்”.

”அதெப்படி உயிரோடு இருக்கும்போது உள்ளூர் மொழியே சரிவரத் தெரியாதவர்கள் ஆவியான போது இங்கிலீஷில் பாண்டித்தியம் அடைந்துவிடுவார்கள் என்பது”.

”சரியாகச் சொன்னீங்க அம்மா. ஆனால் ஒண்ணு. குமிழைப் பிடித்து விரலால் அழுத்தி வைப்பவர்கள் இங்க்லீஷ் எழுத்துகளின் மீது விரல் போவதை கட்டுப்படுத்தி தேவையான பதிலைப் பெற வைக்கிறார்கள் என்கிறார்கள். அப்படி குமிழை நகர்த்தும் இருவரையும் மீடியம் என்று குறிப்பிடுகிறார்கள். என்ன ஆச்சரியம் என்றால் எழுதப் படிக்கத் தெரியாத மீடியம்களும் ஊஜோ பலகை மூலம் புரியும்படியான இங்க்லீஷில் பேசுகிறார்களாமே”.

”இந்த கூட்டம் போன சனிக்கிழமை இரவு பத்தரை மணிக்கு நடந்ததா”?

”ஆம் அம்மா ஒன்றும் முக்கியமாகப் பேசவில்லை. ஆமாம் சரி தொடர்ந்து கண்காணியுங்கள். சரி அம்மா.”

“அதென்ன முதுகுப் பெட்டியிலும் இலை தழை?” ராணி ஆர்வமாகக் கேட்டாள்.

”அதுவா, இரண்டு நாள் முந்தி நம்மவர்கள் ஒரு பத்து பேர் கையைச் சுட்டுக்கொண்டு கையில் வெள்ளைத் துணி ஈரப்படுத்திச் சுற்றிக் கொண்டிருந்ததைக் கவனித்திருப்பீங்க”.

”எல்லோருக்கும் நகச்சுற்று வந்திருக்கும்”

“இல்லையம்மா வெடியுப்பை வைத்து விளையாடியிருக்கிறார்கள் அவர்கள். தீபாவளி முடிந்து சுவதேசி பட்டாசு தயாரிக்கிற முயற்சியாம். எக்குத்தப்பாக ஒரு சிறு கரண்டி வெடியுப்பை நகக்கண் அளவு இத்தனூண்டு கந்தகத்தோடு கலந்து எரிய விட்டத்தில் ஏதோ வெடிப்பு உண்டாச்சாம். விரல் பிழைத்தது பகவான் கருணை. காயம் சீக்கிரம் ஆற மூலிகைச் சாறு தடவணும். அதுக்குத்தான் பறிச்சுட்டுப் போறேன். ஏற்கனவே நாலைந்து வருஷம் முந்தி இதே மாதிரி வெடியுப்போட விளையாடினாங்க. மூலிகை அரைச்சுப் பத்து போட்டு குணமாக்கினேன். இப்போ அதைவிட அதிகமா வெடியுப்பு. தேவையில்லாத இதர சேர்மானம். அதிகம் மூலிகை. அதிகம் நாள் எடுத்து குணமாகறது”. வைத்தியர் விளக்கினார்.

”யார் அந்த பிரஹஸ்பதிகள்? பட்டாசு, வெடி எல்லாம் தீபாவளிக்கு சீனாவிலிருந்து வரவழைத்துத்தானே தீபாவளி இதுவரை கொண்டாடி வருகிறோம்? இப்போது என்ன தீபாவளி கழிந்து கார்த்திகை வெடி உள்ளூரில் உண்டுபண்ண? அதுவும் வெடியுப்போடு விளையாட்டு. வெடியுப்புன்னா சொன்னே?”

சென்னா யோசனையில் மூழ்கினாள்.

”அம்மா அந்தக் குழுவில் ஆவியோடு பேசுகிறவர்கள் சிலபேரும் உண்டு”

”நேமிநாதன்?”

சென்னா கேட்க வைத்தியர் தலையைக் கவிழ்ந்து கொண்டார்.

***

Series Navigation<< மிளகு அத்தியாயம் முப்பத்தைந்துமிளகு அத்தியாயம் முப்பத்தேழு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.