மித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 4

This entry is part 4 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தமிழாக்கம் : அனுராதா கிருஷ்ணஸ்வாமி

யோசனையில் ஆழ்ந்து படுத்திருந்த தனவந்தி,  எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.” பன்வாரிலால் மிகவும் கவலையாக இருக்கிறான். மண்டியில் கொடுக்க வேண்டிய பணத்தை இன்னும் நான்கு –  ஐந்து நாட்களுக்குள் கொடுக்காவிட்டால்…. என்று பாதியில் நிறுத்தினாள்.

குருதாஸின் முகத்தில் தோன்றியிருந்த கணநேர மகிழ்ச்சி மறைந்து போனது.  கவலை படர்ந்த கண்களுடன் மனைவியை பார்த்தார். பிறகு, தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொள்பவர் போல, ” சின்ன விஷயத்துக்கு கூட கண் காது மூக்கு வைத்து சொல்வது உன் அந்த கால பழக்கம். மண்டியில் வியாபாரம் செய்யும் போது கொடுக்கல்,  வாங்கல்,  கடன் எல்லாமும் தான் இருக்கும். கடன் வாங்கும் அதே கைக்குத்தான் திருப்பிக் கொடுக்கும் சக்தியும் இருக்கும்” என்றார்.

தனவந்தி தலையை அசைத்தபடியே, “இல்லை,  அப்படி இல்லை,  மகனுடைய முகத்தைப் பார்த்தால் அப்படி சொல்ல மாட்டீர்கள். கவலையில் பசி தாகம் கூட இல்லாமல் மெலிந்து கிடக்கிறான்” என்றாள்.

குர்தாஸ்,  இருமிக் கொண்டே படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டார்.” எந்த நேரத்தில் நான் படுக்கையில் விழுந்தேனோ, உன் உதவாக்கரை மகன்கள் எல்லாவற்றையும் கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டார்கள்” என்றார்.

தனவந்தி,   கையை உயர்த்தி, அவரை மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்து, ” நல்ல வார்த்தையாகப் பேசுங்ள். இப்படி அபசகுனமாகப் பேசாதீர்கள். தெய்வம் இதுவரையிலும் நமக்கு கொடுக்காமலா போய்விட்டது?” என்றாள்.

குர்தாஸ் எரிச்சலுடன், “எனக்கு அறிவுரை சொல்லாதே. முதலில் உன் மகனை கூப்பிடு. இந்த கிழத் தகப்பனோடு இனிமேல் அவர்கள் என்ன ஆலோசனை செய்யப் போகிறார்கள்?” என்றார்.

மகன் பன்வாரியை கூப்பிடச் சென்ற தனவந்தி ஒரு மணி நேரம் கழித்தும் திரும்பவில்லை. அவர்களுக்காகக் காத்திருந்த குர்தாஸுக்கு உறக்கம் வந்தது. சுஹாக் அழைத்ததால் சமையலறைக்கு வந்த பன்வாரி, அம்மா பலகையில் அமர்ந்து கொண்டு ரொட்டி சுட்டுக் கொண்டிருப்பதை பார்த்தான். மிதமான நெருப்பில், ரொட்டியை உப்பவைத்து எடுத்து, அதன் மீது தாராளமாக நெய்யைத் தடவி, சர்க்கரை வைத்து, மகனுக்குக் கொடுக்குமாறு மருமகளிடம் சொன்னாள்.

” வேண்டாம் அம்மா. இன்று நெய் சர்க்கரை போட்டு சாப்பிட வேண்டும் போல இல்லை”

” மகனே, இந்த சின்ன விஷயங்களுக்கெல்லாமா மனதைத் தளர விட்டு பட்டினி இருப்பது? எழுந்து அந்த சர்க்கரை டப்பாவை எடு மருமகளே” என்றாள்.

நெய்யும் சர்க்கரையும் சேர்த்த ரொட்டியை பிய்த்து வாயிலிடும் போது, நெய்யின் மணம் பசியைத் தூண்டியது. இதுவரையில் மண்டைக்குள் மையம் கொண்டிருந்த கவலை சற்றே குறைந்தது போல் இருந்தது.

ரொட்டியை சுவைத்தபடியே, ” சுஹாக், இனிப்பு ரொட்டி அம்மா கையால் செய்து சாப்பிட வேண்டும். அதன் ருசியே தனி. அம்மா கைக்கு அப்படி ஒரு மணம் என்றான் பன்வாரி.

சுஹாக் மாமியாரைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

” உண்மை தான். குழந்தை பருவத்திலிருந்து ஊட்டி வளர்த்து இப்படி பெரிய ஆளாக்கி இருக்கிறார்களே! இவர்கள் செய்யும் சப்பாத்தியின் மகிமையை கேட்கவா வேண்டும்?” என்றாள்.

 தனவந்தி உள்ளுர மிகவும் மகிழ்ச்சி அடைந்தாலும், பொய்க்கோபத்துடன் பன்வாரியை பார்த்தபடியே, மருமகளிடம் “நல்லதுதான். என் மகன் மேல் கண் போட வந்துவிட்டாயே!” என்றாள்.

பன்வாரி, கலங்கிய கண்களுடன் மனைவியை பார்த்து, “சுஹாக், சர்தாரியை கொஞ்சம் இங்கே வரச் சொல்லேன்” என்றான்.

சுஹாக் கொழுந்தனை அழைக்க அவனது அறைக்குச் சென்றபோது,ஓரகத்தி மித்ரோ, சிங்காரித்துக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்து சற்றே தயங்கினாள்.மித்ரோ இளம்பச்சை நிறத்தில் இலைகளும் பூக்களுமாய் விரிந்திருந்த, அடர் ரோஜா வண்ண ஆடை உடுத்தி, தலையை சீப்பால் வாரிக் கொண்டிருந்தாள்.

மித்ரோ, ஓரகத்தியை திரும்பிப் பார்த்து, ” குழந்தை குட்டி எதுவும் இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை என்றாலும் நீங்கள் மாமியாரைப் போலவே ஆகிவிட்டீர்கள். கூடிய சீக்கிரம் அவரையே  மிஞ்சி விடுவீர்கள். உருவம் சிறியதாக இருந்தாலும் உங்கள் மூளை மிகப் பெரியது அண்ணி. உங்கள் கண்களிலிருந்து எதுவும் லேசில் தப்பி விட முடியாது.”

பிறகு பொய்யான கோபத்துடன், ” சீவி சிங்காரித்து கொண்டு நான் என் கணவனை பார்க்க கிளம்பினால்,  நடுவில்  மஹாராணி நீங்கள் வந்து நின்று விட்டீர்கள்,” என்றாள்.

“மித்ரோ, நான் உன் கொழுந்தனார் சொன்னதின் பேரில் தான் சர்தாரியை அழைக்க வந்தேன். சர்தாரி இன்னும் வரவில்லையா என்ன?” என்றாள்.

மித்ரோ, நெஞ்சில் கை வைத்துக் கொண்டு, “சூரியன் மறையும் நேரத்தில் என் கணவர் வீடு திரும்பி விட்டார் என்றால்,  அன்று சூரியன் மேற்கில் உதித்தது என்று அறிந்து கொள்ளுங்கள் அண்ணி,” என்றாள்.  “உங்கள் மைத்துனர் என் முந்தானைக்குள் ஒளிந்து கொண்டிருப்பார் என்று நினைத்தீர்களா? என் புத்திசாலி அண்ணியே! என் கணவர் இப்போது வைத்தியர் அல்லது ஹக்கீமிடம் ஓடிக்கொண்டிருப்பார்,” என்றாள்.

சுஹாக், அவளை வாயை மூடச் சொல்லி அதட்டினாள்.

மித்ரோ, நின்றபடியே தலை முடியை வகிடு பிரித்து, இருபுறமும் கிளி மற்றும் பறவையைப் போல் இருக்கும் கிளிப்புகளை பொருத்திக் கொண்டு, பின்னலை இழுத்துப் பின்னி குஞ்சலம் வைத்து கட்டிக் கொண்டாள். பிறகு, பெட்டியில் இருந்து வாசனை திரவிய குப்பியை எடுத்து, “உடம்பு சூடாக இருந்தால் சொல்லுங்கள் அண்ணி,  உங்களுக்கும் இந்த வாசனை திரவியத்தைப் பூசி விடுகிறேன்” என்றாள்.

சுஹாக் தலையில் அடித்துக் கொண்டாள்.

“எல்லா நேரமும் விளையாட்டும் குறும்பும் நல்லதற்கில்லை மித்ரோ. உன் கொழுந்தனார் முழு விஷயமும் சொல்லவில்லை. இருந்தாலும், மண்டியில்,  அண்ணன் தம்பிகள் அடைக்க வேண்டிய கடன் நிறைய ஏறி இருக்கிறது என்பதை மட்டும் தெரிந்து கொள்,” என்றாள்.

மித்ரோ திரும்பாமல், ஆர்வம் இன்றி, கையசைத்து, ” என் பிரியமான மைத்துனரின் மகாராணியே, யார் மீது எது வேண்டுமானாலும் ஏறட்டும். ஆனால் இப்போது என் மீது கொம்புள்ள பூதம் ஏறி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்,” என்றாள்.

போகிற போக்கில் சுஹாக் தலை அசைத்து, ” நீ சொன்னதற்காக வருத்தமில்லை. ஆனால் உனக்கு இவ்வளவு அழகை கொடுத்த கடவுள்,  இப்படி ஒரு புத்தியை கொடுத்து விட்டானே என்று  வருந்துகிறேன்,” என்றாள்.

மித்ரோ ஓரகத்தியின் முந்தானையை பிடித்துக் கொண்டாள். கைகளைக் கூப்பி, “புரியும்படி சொல்லுங்கள். நம் வீட்டு ஆண்களுக்கு அப்படி என்ன கஷ்டம் வந்துவிட்டது? என்றாள்.

சுஹாக், அங்கிருந்து நகர்ந்தபடியே,  “எனக்கு தெரிந்ததைச் சொல்லி விட்டேன். மீதி விஷயத்தை சர்தாரியிடம் கேட்டு தெரிந்து கொள்,” என்றாள்.

ஓரகத்தி சென்றதும், மித்ரோ நின்றவாறே சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்தாள். பிறகு மறுபடியும் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள். தலையில் இருந்த துப்பட்டாவை அகற்றிவிட்டு கைகளை விரித்துக் கொண்டு புன்னகைத்தாள்.

” இந்த உடல் இருக்கிறதே,  அப்பப்பா! எத்தனை வினோதமானது!

சரியாக கையாளப்பட்டால் அது ஒரு விதம்! கையாளப்படாமல் மறக்கப்பட்டாலும் அது ஒரு விதம்! இன்று அந்தத் திருடன் சர்தாரி என் அலங்காரத்தை பார்த்திருக்கலாம்! ஹூம்! அவன் தான் எதையோ தேடிக்கொண்டு தெருத்தெருவாக புழுதியில் அலைந்து கொண்டிருக்கிறானே!”  யோசித்தவாறே மித்ரோ தன் ஆடைகளை களைய முற்படும் போது,  யாரோ பின்னாலிருந்து அவளது கைகளைப் பிடித்து நிறுத்துவது போல இருந்தது.  “ஆமாம். நான் அலங்காரம் செய்து கொண்டால் அதில் என்ன தவறு யாருடைய சொத்தையும் கொள்ளையடிக்கவில்லையே!” தோள்களை குலுக்கிக் கொண்டு, துப்பட்டாவைச் சரி செய்து மீண்டும் அணிந்து கொண்டு,  மாமியாரைப் பார்க்க சமையலறையை நோக்கி நடந்தாள்.

ஃபூலாவந்தியின் அறையைத் தாண்டிச் செல்லும்போது அவளைச் சீண்டி வம்புக்கிழுக்கலாமா என்ற எண்ணம் தோன்றியது. உள்ளே எட்டிப் பார்த்து, “என்ன ஃபூலாவந்தி, இன்று நீ மிகவும் சந்தோஷமாக இருப்பது போலத் தெரிகிறதே! இருக்காதா பின்னே? புத்தம் புதிதாய் ஏலக்காய் டிசைனில் மாலை தயாராகி வந்திருக்கிறது போலத் தெரிகிறதே!” என்றாள்.

ஃபூலாவந்தி நாக்கை கடித்துக் கொண்டாள். இவள் எப்படித்தான் எல்லாவற்றையும் மோப்பம் பிடித்து தெரிந்து கொள்கிறாளோ என நினைத்தாள். கையில் இருந்த பூவேலையை தூர வைத்து விட்டு, வாயிற் படி அருகே வந்து நின்றாள். “உன் வாய்க்குச் சர்க்கரைதான் போட வேண்டும். ஏலக்காய் மாலையை பற்றி எனக்கு தெரியாது. ஆனால், இந்த வீட்டில்  உடைந்துபோன மோதிரத்துக்குக் கூட வழியில்லை என்பது நன்றாக தெரியும்!” என்றாள். 

மித்ரோ, இடுப்பை ஒடித்து,  வாய்விட்டு சிரித்தாள். “பேஷ்! நீ படு கெட்டிக்காரி தான் ஓரகத்தியே! இந்த கலியுகத்தில் பூஜை புனஸ்காரம் எல்லாம் கூட யாரையோ ஏமாற்றச் செய்கிற தகிடுதத்தம்தான். இந்த நிலையில்,  நீ எங்கே உண்மையைப் பேசப் போகிறாய்? சின்னவளே! ஏலக்காய் மாலையை நீ உன் ரகசிய நகைப் பெட்டியில் வைத்து மூடிவிட்டு வெளியே மாமியாருக்கும் ஓரகத்திக்குமெதிரே இப்படி நாடகமாடுகிறாய்! நீ ஆயிரம் தான் சொல் பெண்ணாகப் பிறந்தவளுக்கு நகை நட்டை எப்படி பொத்திப் பாதுகாக்க வேண்டும் என்பது தெரியாதா என்ன? அடியே! நீ அந்த மாலையை உன் நெஞ்சுக்குள்ளேயே புதைத்து மறைத்து வைத்திருந்தாலும்,  அதைப் பார்ப்பதற்கான மந்திரம்,  இந்த மித்ரோ ராணியிடம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்” என்றாள். இதைக் கேட்டு ஃபூலா திகைப்புற்றாள். உண்மையிலேயே மித்ரோவிடம் தான் தோற்றுவிட்டதை காட்டிக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்துடன், வெளியே வந்து மித்ரோவின் பின்னால் சமையலறைக்குச் சென்றாள்.

மித்ரோ சமையல் அறைக்கு சென்று உட்கார்ந்து கொண்டு,  ” அம்மா, பாவம் பூலாவ்திக்கு இது போதாத காலம்! ஆசை ஆசையாய் செய்து கொண்ட நகைகளை எதிரிகளின் பயத்தால் எடுத்து தைரியமாக அணிந்து கொள்ளக்கூட முடியவில்லை,” என்றாள்.

ஏற்கனவே தன் மகன் குல்ஜாரி மீதும் அவனது மனைவி ஃபூலாவந்தி மீதும் கோபமாக இருந்த தனவந்தி, அடுப்பை ஊதிவிட்டுக்கொண்டே,  வறண்ட குரலில், “மித்ரோ, நகை நட்டை பற்றி இப்பொழுது எனக்கு என்ன வந்தது? ஆனால்,  வீட்டு மனிதர்களையே எதிரியாக நினைப்பவர்கள்,  இத்தனை நகை நட்டுகளை பூட்டிக் கொண்டு மட்டும் நல்வாழ்வு வாழ்ந்து விட முடியுமா?” என்றாள்.

ஃபூலாவந்தி, ஓரகத்தியின் வாய்க்குப் பயந்த போதிலும், மாமியார் சொல்வதைக் கேட்ட பிறகு அவளால் பேசாமல் இருக்க முடியவில்லை.

“இந்த வீட்டில் யாருடைய அதிகாரம் செல்லுபடியாகிறதோ,  அவர்கள் நன்றாக வாழட்டும்! நாங்கள் அதிர்ஷ்டக் கட்டைகள். எல்லோரையும் விட சிறியவர்கள். எங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். நாள் முழுவதும் சமையலறையில் உழன்று விட்டு இரவு மிச்சம் மீதி இருக்கிற ரொட்டிகளை சாப்பிட வேண்டுமெ ன்பது எங்கள் தலையெழுத்து!”

தனவந்தி,  கையை உதறிக்கொண்டு, ” மருமகளே! மேலேயிருந்து ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். சற்று பயம் இருக்கட்டும்,” என்றாள்.

பிறகு மித்ரோவின் பக்கம் திரும்பி, “மித்ரோ, நானோ மாமியார். கெட்டவள். இந்த வீட்டின் சமையலறை எந்த பக்கம் இருக்கிறது என்றாவது இவளுக்கு தெரியுமா என்று நீயே உண்மையாகச் சொல்,” என்றாள்.

மித்ரோ உச்சு கொட்டியபடியே, ”படுக்கையில் உட்கார்ந்த இடத்திலேயே சாப்பாடு கிடைக்கிற தென்றால்,  இவள் சமையலறைப் பக்கம் எதற்கு வரப் போகிறாள்?” என்றாள்.

ஃபூலா,  “நீங்கள் சொல்வது சரிதான் அம்மா. இந்த சமையலறையில் என்னை யார் மதிக்கிறார்கள்? யாருடைய கணவன் உழைத்துச் சம்பாதித்து,  மாதத்தில் பத்து முறை லாபத்தைக் கொண்டுவந்து கொட்டுகிறானோ,  அவர்களுக்குத் தானே மதிப்பு!” என்று சீறினாள்.

மாமியார் அவமானப்படுவதை பார்த்து மித்ரோவின் மனம் இளகியது. ஃபூலாவந்தியின் கையைப் பிடித்து இழுத்து,  அருகே அமர்த்திக் கொண்டு, மூவாயைத் தொட்டு, “எனது அருமை ஓரகத்தியே! ஏன் வீணாகப் பொய் சொல்கிறாய்? எனக்கு அந்த தட்டானை தெரியாதா என்ன? அவன் கடையின் பாதி நகைகளை நீதான் வாங்கி வைத்திருக்கிறாய். என் வெள்ளந்தி ஓரகத்தியே! உன் கணவன் எங்கிருந்து இவ்வளவு சம்பாதித்து கொண்டு வருகிறான் என்பதை மட்டுமாவது சொல்லிவிட்டு போ!” என்றாள்.

மித்ரோவின் கிண்டல் பேச்சைக் கேட்டு ஃபூலாவின் கண்களில் பொரி பறந்தது.”என் கணவர் எப்படி லாபம் ஏற்றுகிறார் திருடுகிறார் கொள்ளை அடிக்கிறார் என்பதெல்லாம் அவருடைய பெற்றோர்களுக்கும் அண்ணன் அண்ணிகளுக்கும் தெரியும்,” என்றாள். பிறகு, மாமியாரைப் பார்த்து, “நகை நட்டைப் பொருத்தவரையில், என் பிறந்த வீட்டில் செய்து போட்டதை  அழித்து,  நான் ஏதோ புதிதாக கொஞ்சம் செய்து கொள்கிறேன்,” என்றாள்.

மித்ரோ எதுவும் சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்பே, சமையலறை வாசலில் கணவன் நிற்பதை பார்த்து, ஃபூலாவந்தியின் துப்பட்டாவை நெற்றிக்கு கீழே இழுத்து விட்டு, “அடியே ஃபூலாவந்தி, கொஞ்சமேனும் வெட்கம் மானம் மிச்சம் இருக்கட்டும். எதிரில் உன் மூத்த கொழுந்தனார் நின்று கொண்டிருக்கிறார். என்னதான் நான் வெள்ளை வெளேரென்று உன்னை விட மிக அழகாக இருந்தாலும்,உன் மைக்கூட்டை ஒத்த மனதைப் பற்றி யாருக்கு தெரியும்? தன் மூத்த கொழுந்தனாரே வளைத்து போட நினைத்தால் யார் என்ன செய்ய முடியும்?” என்றாள்.

சர்தாரி அவள் பேச்சை பொருட்படுத்தாமல், அம்மாவைப் பார்த்து, ” அம்மா, இந்த குல்ஜாரி செய்திருக்கிற வேலையைப் பாருங்கள்” என்றான்.

ஃபூலாவந்தி, சர்தாரி மேற்கொண்டு சொல்லப்போவதைக் கேட்க தன் காதுகளை தீட்டிக் கொண்டாள்.

மித்ரோ குறும்பு நிறைந்த முகத்துடன் கணவனை பார்த்து, ” என் கொழுந்தன் குஜாலியே இதைப் பற்றி சொல்லட்டுமே,” என்றாள்.

தனவந்தி,  மருமகள் சொன்னதை காதில் வாங்காதது போல , சற்றே கலக்கத்துடன், ” மகனே,  புதிர் போடாதே!  என்ன நடந்தது என்று தெளிவாகச் சொல்,” என்றாள்.

“அம்மா,  உங்கள் கடைக்குட்டி மகன்,  அண்ணன் பன்வாரியின் பெயரை உபயோகித்து,  மண்டியில் பணம் வசூல் செய்திருக்கிறான். ஆனால் அதில் ஒரு தம்படி கூட கடையில் வரவு வைக்கவில்லை,” என்றான்.

கேட்டதும், அதிர்ச்சியில்,  தனவந்தியின் கண்கள் விரிந்தன.

மித்ரோ, ஃபூலாவந்தியிடம் சூடாக ஏதோ சொல்வதற்கு முன்பாகவே, அவள் அழத் தொடங்கவே,  ஏன் அழுகிறாள் என  மித்ரோ அவளை விசாரிக்கத் தொடங்கினாள்.

ஃபூலாவந்தி நெற்றியில் வேகமாக அடித்துக் கொண்டு,  அழத் தொடங்கினாள்.

“எங்களைக் கண்டால் இந்த வீட்டில் யாருக்கும் பிடிப்பதில்லை. இந்த வீட்டில் எங்களுக்கு சொந்தம் ஏதுமில்லை என்றால், எங்கள் பங்கையேனும் பிரித்துக் கொடுத்து விடுங்கள். நாங்கள் உழைத்து கஞ்சியோ கூழோ குடித்துக் கொள்கிறோம். அதுவும் கிடைக்காவிட்டால்,  சுடுகாட்டில் சென்று படுத்துக் கொள்கிறோம்” என்றாள்.

மித்ரோ,  அவளை சமாதானப்படுத்தும் விதமாக, ” அழாதே ஃபூலாவந்தி,  இது என்ன கோர்ட்டா இல்லை, இவர்தான் நீதிபதியா? இவர் உன் கொழுந்தனார். உன் கணவனின் அண்ணன் தானே,” என்றாள்.

ஃபூலாவந்தி, விம்மியவாறு, “யார் தவறு செய்கிறார்களோ,  அடுத்தவர் பணத்தை அடித்து அபகரிக்கிறார்களோ, அவர்களைக் கோர்ட் தண்டிக்கட்டும். தரகு வியாபாரத்தில் ஒரு சகோதரனுக்கு உள்ள அதே பங்கு தான் இரண்டாம், மூன்றாம் சகோதரனுக்கும்” என்றாள்.

தனவந்தியால் பொறுக்க முடியவில்லை.” வாயை மூடு மருமகளே! பெரிய பேச்செல்லாம் பேச வேண்டாம்! யாருக்கு என்ன உரிமை, யாருக்கு என்ன பங்கு,  யாருக்கு எவ்வளவு தர வேண்டும் என்றெல்லாம் நீட்டி முழக்கிச் சொல்லிக் கொடுத்து, குப்பையை  என் தலையில் கொட்டி விட்டார்கள் உன் அப்பளக்கார அண்ணன்மார்கள்!” என்றாள்.

மூத்த கொழுந்தன் பன்வாரியும் அவன் மனைவி சுஹாகும் சமையலறை வாயிலில் வந்து நிற்பதை உணர்ந்து கொண்ட ஃபூலாவந்தி, குரலை மாற்றிக் கொண்டு,  விக்கியபடியே, ” என் மீது ஆயிரம் பழி சுமத்துங்கள். குற்றம் சொல்லுங்கள். ஆனால், ராஜாக்களை ஓத்த என் அண்ணன்மார்களை நடுவில் இழுக்காதீர்கள்,” என்றாள்.

தனவந்தி கோபத்தில் தலையை அசைத்தபடி, “ஆமாம் ஆமாம் நீ ராஜாக்கள் என்று சொல்கிற உன் அண்ணன்மார்களை விட தோல் பையில் தண்ணீர் சுமந்து பிழைப்பவர்கள் எவ்வளவோ மேல்,” என்றாள்.

பன்வாரி தாயை மேலே பேசவிடவில்லை. அம்மாவை அணைத்துக் கொண்டு, “இந்த சண்டை சச்சரவில் நீங்கள் ஈடுபட வேண்டாம் அம்மா. வீண் தலைவலி தான் மிஞ்சும். இப்போது நம் மீது வந்து குவிந்திருக்கிற கஷ்டத்திலிருந்து விடுபட ஏதாவது யோசனை சொல்லுங்கள்,” என்றான்.

தோளை அணைத்திருந்த மகனின் இரும்புக்கரங்களின் தொடுகையில், தனந்தியின் கண்கள் பொழிய ஆரம்பித்தன.”மகனே,  இந்த கேடுகெட்டவளிடம் வாய் கொடுத்ததில், என் புத்தியும் கலங்கிவிட்டது,” என்றாள்.

மகன் அம்மாவை அழைத்துக் கொண்டு சென்ற பின், சுஹாக் அடுப்பின் மீதிருந்த பொறியல் வாணலியை  இறக்கி வைத்து விட்டு,  ரொட்டி சுடும் கல்லை அடுப்பின் மீது வைத்தாள். சிறிய ஓரகத்தியிடம், எழுந்திரு ஃபூலாவந்தி,  போய் கை கால் கழுவிக் கொண்டு வா. ஏதேனும் சாப்பிடு” என்றாள்.

பிறகு,  மித்ரோவிடம், “கொழுந்தனுக்கு தட்டில் சாப்பாடு கொண்டு போ மித்ரோ. கொழுந்தன் பாவம் காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை,” என்றாள்.

பரணியிலிருந்து பாத்திரத்தை எடுத்து ஓரகத்தி சுஹாக்வந்தியின் முன் வைத்த மித்ரவுக்கு,  ஏதேனும் சொல்லி ஃபூலாவந்தியைச் சீண்ட வேண்டுமென வாய் குறுகுறுத்தது. கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்த சிறிய ஓரகத்தியின் கைகளை அகற்றி, கூடப்பிறந்த சகோதரியைப் போல, அவளை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டு, “உன்னுடைய நாடகமும்  நன்றாகத் தான் இருந்தது ஃபூலாவந்தி! ஆனால், மாமியார் உன் அண்ணன்களை தண்ணீர் சுமப்பவர்களைவிட கேவலமானவர்கள் என்று சொல்லி உனக்கு கொடுத்த அடியை நினைத்தால்தான்….” என்று வேண்டுமென்றே பாதியில் நிறுத்தினாள்.

சுஹாக், ஒரே நேரத்தில் கண்ணாலும் கையாலும், மித்ரோவை தடுத்து நிறுத்தி, 

“போதும் மித்ரோ! போய் கொழுந்தனுக்குச் சாப்பாடு பரிமாறு,” என்றாள்.

மித்ரோ வாய்க்குள்ளாகவே சிரித்துக்கொண்டு ஓரகத்தியை பார்த்துவிட்டு, ஒயிலாக இடுப்பை நெளித்துக் கொண்டு, கணவனுக்குச் சாப்பாடு பரிமாற நகர்ந்தாள்.

கட்டிலில் அமர்ந்திருந்த கணவனை ஆச்சரியப்படுத்தும் விதமாக, முதலில் கால் மெட்டியாலும் பிறகு கை வளையல்களாலும் மித்ரோ ஓசை எழுப்பினாள். கவலையில் மூழ்கி இருந்த சர்தாரி இதையெல்லாம் கவனிக்கவில்லை. அசையாமல் அமர்ந்திருக்கும் கணவனை பார்த்த மித்ரோவின் மனதில் பாசம் பொங்கியது. கையில் தட்டை வைத்துக் கொண்டு, காலை கட்டில் மீது வைத்து,  கண்களில் குறும்பு கொப்பளிக்க,” மகாராஜா, உங்கள் அடிமை உங்களை வணங்குகிறேன். வேண்டுமெனில் நெய் தடவிய என் சக்களத்தியை விழுங்குங்கள். இல்லையேல், என்னையே கடித்துச் சாப்பிடுங்கள்” என்றாள்.

சர்தாரி ஒருமுறை அவளை கோபமாக முறைத்துவிட்டு,  பார்வையைத் தாழ்த்திக் கொண்டான். மித்ரோ இன்னும் கொஞ்சம் விளையாட நினைத்தாள். காதில் அணிந்திருந்த ஜிமிக்கிகளைக் குலுக்கி ஓசைப்படுத்தினாள். சப்பாத்தியை விண்டு,  கணவனின் வாயில் இட்டு, குறும்பு கொப்பளிக்கும் கண்களுடன் கணவனைப் பார்த்து, ” ஸ்வாமி, நான் வேண்டாம் என்றால் போகட்டும், விடுங்கள். ஆனால், நெருப்பில் வெந்த என் சக்களத்தியையாவது சாப்பிடுங்கள்” என்றாள்.

சர்தாரி மௌனமாக,  மித்ரோ வாயிலிட்ட ரொட்டித் துண்டுகளை  சவைத்துக் கொண்டிருந்தான். கண்களில் ஒரு வினோதமான பாவத்தை வரவழைத்துக் கொண்டு, மித்ரோ, சர்தாரியைப் பார்த்து, ” நான் உங்கள் அடிமை. இவ்வளவு வன்மம் ஏன்?” என்றாள்.

சதர்லால் இந்த முறை நிமிர்ந்து பார்த்து இன்னொரு விள்ளல் ரொட்டியை வாயில் வாங்கிக் கொண்டான்.

மித்ரோ, கண்களை தாழ்த்திக் கொண்டு, ” நான் ஒரு அதிர்ஷ்டக் கட்டை.

என்னுடைய டோலக் எவ்வளவு தட்டிப்பார்த்தாலும் என்னோடு பேச மறுக்கிறதே!” என மருகினாள்.

நொடி நேரம் சர்தாரி என் கண்கள் மித்ரோவின் துப்பட்டாவின் மீது நிலைத்ததில், மித்ரோ நாணினாள்.

கணவனின் முட்டியின் மீது தன் முழங்கையை வைத்துக்கொண்டு கண்ணோடு கண் பார்த்து, “தளபதியே இந்த குதிரைப் படை எப்போதும் இருக்காது” என்றாள்.

சர்தாரி அவளை தன் கைகளால் விலக்க முயன்றான். ஆனால், அவளது பழுப்பு நிற கண்களின் மீது முடிக்கற்றை சுருள் சுருளாக நெளிந்தாடிய போது, அவனது உடல் பரபரத்தது.அவளது மோவாயில் விரலை வைத்து, “நாடகம் ஆடுவதில், கையில் கயிற்றை வைத்துக்கொண்டு இருக்கிற பொம்மலாட்டக்காரியை விட தேர்ந்த சாகசக்காரி நீ!” என்றான்.

சீவி சிங்காரித்து, கண்ணாலேயே ஆண்களை மயக்க வைக்கும் அந்த பொம்மலாட்டகாரியோடு தன்னை கணவன் ஒப்பிட்டதில், மித்ரோ அகமகிழ்ந்தாள். இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், கோபமாக, “எப்பொழுதும் வெற்றிலை சவைத்தபடியிருக்கும்  பொம்மலாட்டக்காரியோடு என்னை ஒப்பிட்டு விட்டீர்களே? அவளுடைய நினைப்பில் என் முத்து பல் வரிசையை மறந்து விட்டீர்களே?” என்று சிணுங்கியபடியே மித்ரோ கணவனின் வாயில் முத்தமிட்டாள். “சர்க்கரைக்கட்டியும் உப்பும் கலக்காமல் இருக்கவே முடியாது,” என்றாள்.

சர்தாரி லாலின் உதடுகளில் புன்னகை தோன்றி மறைந்தது. அவன் புருவங்கள் கவலையில் சுருங்கியதை கவனித்த மித்ரோ, “ஐயா, மனதுக்குள்ளேயே ஏதோ ஒரு நோயை வளர்த்து விட்டுக் கொண்டிருக்கிறீர்களே, வாய்விட்டுச் சொன்னால்,  இந்த அடிமையும் அதை பகிர்ந்து கொள்வேனே!” என்றாள்.

சர்தாரி மனதுக்குள்ளேயே தன்னை எச்சரித்துக் கொண்டான். முழு நாடகக்காரி இவள்! இவளிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று எண்ணி, மேலோட்டமாக, “ஏன் என்னை தொந்தரவு செய்கிறாய்? இதெல்லாம் ஆண்கள் சம்பந்தப்பட்ட விஷயம். ஆண்களே கவனித்துக் கொள்வார்கள்,” என்றான்.

இதைக் கேட்டதும், கணவனுக்கு சூடாக பதிலளிக்க வேண்டும் என்று மித்ரோவுக்கு ஒருமுறை தோன்றிய போதும், தன் நாவை அடக்கிக் கொண்டு, “அரசே! நீங்கள் என்னோடு சாப்பாட்டையும் பகிர்ந்து கொள்வதில்லை தூக்கத்தையும் பகிர்ந்து கொள்வதில்லை. குறைந்தபட்சம் மனக்கஷ்டங்களையாவது பகிர்ந்து கொள்ளக் கூடாதா?” என்றாள்.

சர்தாரிலால்,  அவளது கையை உதறிவிட்டு, ” இதெல்லாம் உன்னால் முடிகிற காரியம் இல்லை” என்றான்.

மித்ரோ புருவத்தை நெறித்து, “உங்களை கைக்குள் போட்டுக் கொள்வது மட்டும்தான் என்வசம் இல்லை. மற்ற அனைத்தும் என்னால் முடியும்” என்றாள்.

சர்தாரிலால் தலையைத் தடவிக் கொண்டே, பெருமூச்சு விட்டான். “குல்ஜாரியின் கபட நாடகம், அவன் செய்யும் தில்லுமுல்லுகள்,  தலை மீது ஏறிக் கிடக்கும் கடன் இவற்றைப் பற்றித்தான் கவலை மித்ரோ,” என்றான்.

மித்ரோ வாய்விட்டுச் சிரித்தாள்.”பூ! இவ்வளவுதானா விஷயம்! புதையலுக்காகப் பூமியை தோண்டினால், கிடைத்ததென்னவோ ஊமைக்கிளி என்கிற கதையாக இருக்கிறது! அது கிடக்கட்டும்,  கடன் எவ்வளவு என்று சொல்லுங்கள்” என்றாள்.

மித்ரோவின் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என நினைத்து சர்தாரிலால் மௌனமாக இருந்தான்.

மித்ரோ, தன்னுடைய சல்வாரில் கட்டித் தொங்க விட்டிருந்த சாவியை எடுத்து,  அதை உயரத் தூக்கிப் போட்டு பிடித்தாள்.”தன் எஜமானனுக்காக இதைக் கூட செய்யாவிட்டால்,  அவள் மித்ரோ இல்லை, வெறும் பிச்சைக்காரி தான்” என்றாள்.

சர்தாரிலால்,  மென்மையான குரலில்,” நல்ல மனம் படைத்தவளே, இது உன்னால் முடிகிற காரியம் இல்லை. வெறும் நூறு இருநூறு கான விஷயம் இல்லை. ஆயிரக் கணக்கில் கடன் ஏறி இருக்கிறது” என்றான்.

மித்ரோ கண்களால் பரிகாசம் செய்தபடி, ஓராயிரமா என்று கேட்டாள்.

சர்தாரி இல்லை என்று தலை அசைத்தான்.

இரண்டா?

இல்லை.

மூன்றா?

ஆமாம்.

மித்ரோ எழுந்து பரண் மேல் இருந்த தகரப் பெட்டியை கீழே இறக்கினாள். பெட்டியை சாவியால் திறந்து, அதிலிருந்து சிவப்பு நிற பையை வெளியே எடுத்து கணவனின் முன்னால் வைத்துவிட்டு, ” இந்த சில்லரை காசுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த துடுப்பு இல்லாமல் என் என் மகள்  கரையேறாமல் கன்னியாகவே இருந்து விடப் போகிறாள்?” என்றாள்.

கணவன் வாயடைத்து போனதைப் பார்த்து மித்ரோ,  முதலில் துப்பட்டாவால் வாயை மூடிக்கொண்டு சிரித்தாள். பிறகு சர்தாரிலாலின் கழுத்தில் தன் கரங்களை மாலையாக அணிவித்தாள்.

“மித்ரோவின் மீது ஆணை! நீங்கள் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றாள்.

சர்தாரியின் மனம் வருந்தியது. இவளது நடத்தை தவறாக இருந்தாலும் இவள் மீது கை வைப்பது தவறு என்று நினைத்தான்.

சர்தாரிலால் வெகு நேரம் மித்ரோவை பார்த்துக் கொண்டே இருந்தான். பிறகு, கோபமாக, “நான் உன்னிடம் ஒன்று கேட்பேன் உண்மையைச் சொல்வாயா?”

என்றான்.

மித்ரோ கண் சிமிட்டினாள். “நிச்சயமாக”

“முதலில் என் மீது சத்தியம் செய்”

மித்ரோ உதட்டை சுழித்துக் கொண்டாள். ” இல்லை,  முதலில் என் மீது சத்தியம்… என் அம்மாவின் மீது சத்தியம்… அந்தக் கருப்புத் திருடனின் மீது சத்தியம்… ஆனால் நான் ஏன் என் காதல் கணவனின் மீது சத்தியம் என்று சொல்ல வேண்டும்?” பிறகு நெஞ்சில் கை வைத்து, ”அவன் தான் ஒவ்வொரு மூச்சிலும்,  இந்த மூடிய இதயத்துக்குள்ளும் இருக்கிறானே!” என்றாள்.

(தொடரும்)

Series Navigation<< மித்ரோ மர்ஜானி-அத்தியாயம் 3மித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 5 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.