மாலதி சந்தூர், ரேணுகா தேவி

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

பெண்களின் நாவல் இலக்கிய வரலாற்றில் 1950 வது தசாப்த காலம் மிகவும் முக்கியமானது. நாட்டிற்கு விடுதலை கிடைத்து, பார்லிமென்ட்ரி குடியரசு நிர்மாணத்தில் ஒரு பகுதியாக புதிய அரசாங்கச் சட்டம் எழுதுவது, அரசியல் சம உரிமையோடு கூட சமுதாயத்திலும் சம உரிமை பற்றிய எதிர்பார்ப்புகள், முக்கியமாக பெண்கள் முன்னேற்றத்திற்காக வந்த புதிய சட்டங்கள் அளித்த தார்மிக ஆதரவு, பெண் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள், நகர உருவாக்கம் சமுதாய பண்பாட்டு வாழ்க்கை முறையில் எடுத்துவரும் மாற்றங்கள் – முதலானவற்றால் பெண்களின் வாழ்க்கை முறை புதிய திருப்பத்திற்கும் முரண்பாடுகளுக்கும் கூட உள்ளான காலம் ஐம்பதாவது தசாப்தம்.

இந்த பத்தாண்டுகளில் பெண்களின் நாவல்கள் அதற்கு ஏற்றாற்போல் புது மலர்ச்சியடைந்தன. இந்த தசாப்தத்தில் நாவல் இலக்கியம் படைக்கத் தொடங்கியவர்கள் மாலதி சந்தூர், லதா, ஸ்ரீதேவி, வட்டிக்கொண்ட விசாலாட்சி, ரங்கநாயக்கம்மா, வி.எஸ் ரமாதேவி முதலானவர்கள். ஸ்ரீதேவியையும் வட்டிக்கொண்ட விசாலாட்சியையும் தவிர மீதி உள்ளவர்கள் அறுபதாம் தசாப்தத்திலும், அனைத்திந்திய பெண்கள் ஆண்டு அறிவிப்புக்கு வழி வகுத்த எழுபதாம் தசாப்தத்திலும், சர்வ தேச மகிளா தசாப்தத்திலும் (1975- 1985) நாவல் இலக்கிய படைப்புகளைத் தொடர்ந்தார்கள். அவர்களுடைய நாவல் வாழ்க்கைப் பரிணாமத்தின் தனித்துவத்தையும் தாக்கத்தையும் தனித்தனியாக மதிப்பிடுவது உதவிகரமாக இருக்கும்

~oOo~

மாலதி சந்தூர்

பெண்களை வாசகர்களாக அடையாளம் கண்டு அவர்களின் அறிவை விரிவாக்குவதற்கு பத்திரிகைகளைத் தொடங்கி, நாவல் போன்ற வசன இலக்கியச் செயல்களின் இயல்புகளை ஆராய்ந்து வந்த வீரேசலிங்கம் பந்தலுவின் தாக்கம் 1950 களில் பத்திரிகைகளின் வளர்ச்சியோடு கூட அவற்றில் தொடராக பெண்களின் நாவல்களைப் பிரசுரிக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டதன் மூலம் முழுமையடைந்ததாகத் தோன்றுகிறது. பத்திரிகைகளுக்கும் பெண்களின் எழுத்துக்களுக்கும் வாசகர்களாக விளங்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக வந்த காலம் அது.

மாலதி சந்தூருக்கும் அவ்விதமாக பெண் வாசகர்கள் மிக அதிகம். 1952 லேயே பிரமதாவனம் என்ற பெயரோடு ஆந்திரபிரபா பத்திரிக்கையில் வெளிவந்த மாலதி சந்தூரின் பத்திக்காகக் காத்திருந்த பெண் வாசகர்கள் மிகப் பலர். அந்த நாட்களில் குக்கிராமங்களில் வசித்த பெண்கள் கூட அந்த பத்திரிகையை தபால் மூலம் வரவழைத்துக் கொண்டார்கள் என்றால், மாலதி சந்தூர் போன்ற பெண் எழுத்தாளர்கள் பெண் வாசகர்களை எத்தனை ஏற்படுத்திக் கொண்டார் என்பது புரிகிறது. பல வெளிநாட்டு மொழி நாவல்களை தெலுங்கு மக்களுக்கு அறிமுகம் செய்து எழுதிய கதைகள் ‘பாத்த கெரடாலு’ (பழைய அலைகள்) என்ற பெயரோடு பிரசுரமாயின.

மாலதி சந்தூர் 1928 டிசம்பர் 26 ல் ஆந்திரப் பிரதேசம் நூஜிவீடில் பிறந்தார். தாயார் ஞானமாம்பா. தந்தை வெங்கடாசலம். பள்ளிப் படிப்பு நூஜிவீடிலும் ஏலூரிலும் தொடர்ந்தது. படித்தது ஹைஸ்கூல் கல்வி மட்டுமே என்றாலும் விரிவாக உள்நாட்டு, வெளிநாட்டு இலக்கியங்களைப் படித்தார். 1947 ல் தாய்மாமா என்.ஆர். சந்தூரை திருமணம் செய்து கொண்டு மதராசில் குடியேறினார். பல கதைகளும் இருபத்தேழு நாவல்களும் எழுதினார். இவர் எழுதிய ஹ்ருதயநேத்ரி நாவலுக்கு 1990 ல் ஆந்திர பிரதேஷ் சாகித்ய அகாடமி விருதும், 1992ல் மத்திய சாகித்ய அகாடமி விருதும் கிடைத்தன. பாரதிய பாஷா சாகித்ய பரிஷத் விருது, ராஜலட்சுமி பவுண்டேஷன் அவார்டு, தெலுங்கு விஸ்வ வித்யாலயம் அவார்டு, லோக் நாயக் பவுண்டேஷன் அவார்டு போன்ற பல விருதுகள் இவருடைய இலக்கிய உழைப்புக்குப் பெருமை சேர்த்தன. ஸ்ரீபத்மாவதி மகிளா விஸ்வ வித்யாலயம் கௌரவ டாக்டரேட்டும், களா ப்ரபூர்ணா விருதும் அளித்து கௌரவித்தது.

ரேணுகாதேவியின் ஆத்மகதா (சுயசரிதை), சம்பகம் செதபுருகுலு (கரையான்கள்)

என்ற இரண்டும் மாலதி சந்தூரின் முதல் இரண்டு நாவல்கள். இவற்றை 1955 செப்டம்பரில் தேசிகவிதா மண்டலி, விஜயவாடா அச்சிட்டது. சம்பகம் செதபுருகுலு நாவலின் உள்ளே முதல் பக்கத்தில் மாலதி சந்தூருடைய பிற நாவல்களான ரேணுகாதேவி ஆத்மகதை நாவலோடு கூட க்ஷணிகம் என்ற நாவலும் பாப்பா கதைத் தொகுப்பு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரேணுகாதேவியின் ஆத்மகதை நாவல் ‘குண்டுசூதி’ யில் (குண்டூசி) இருந்து மறுபதிப்பு என்று உள்ளது. குண்டுசூதி என்ற பெயரில் பத்திரிகை ஏதாவது இருந்ததா என்பது தெரியவில்லை. நார்ல வெங்கடேஸ்வர ராவுடைய ஜாபிதாவில் (தெலுங்கு பத்திரிகைகள் 2004) அது இல்லை. எப்படியானாலும் மறுபதிப்பு என்ற சொல்லை சான்றாகக் கொண்டு சம்பகம் செதபுருகுலு நாவலை விட அது முற்பட்டது என்று எண்ணுவதற்கு வாய்ப்புள்ளது. க்ஷணிகம் என்ற நாவல் கிடைக்கவில்லை. ஆதலால் மாலதி சந்தூரின் முதல் நாவல் ரேணுகாதேவியின் ஆத்மகதை என்றும் இரண்டாம் நாவல் சம்பகம் செதபுருகுலு என்றும் தீர்மானிக்கலாம்.

இந்தியாவுக்கு சுதந்திரம் வந்தபோது மதராஸ் பிரசிடென்சி தெலுங்கு மக்களின் கலாசார மையமாக விளங்கியது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் மதுராசிலிருந்து ஆந்திர பிரதேஷ், பாரதி போன்ற தெலுங்கு பத்திரிகைகள் தொடங்கி வெளிவந்தது மட்டுமின்றி. சர்குலேஷனும் அதிக அளவு இருந்தது. பத்திரிகைத் துறை வளர்ந்ததோடு தெலுங்கு சினிமாத் துறையும் வலுவடைந்தது. 1940 ல் ஆந்திரபிரபா பத்திரிகை வரத் தொடங்கியது. அதன் பிறகு ஜோதி, சந்தமாமா… என்று விரிவாக இதழ்கள் வெளிவரத் தொடங்கின. சினிமா தொழிலுக்குத் துணை இதழ்களாக சினிமா செய்திப் பத்திரிகைகள் தொடங்கப்பட்டன.

ஆந்திரப் பிரதேச நடுத்தர வர்க்க மக்களில் படித்த இளைஞர்களுக்கும், சற்று இலக்கிய ரசனை உள்ளவர்களுக்கும் ஏதோ ஒரு வேலையை ஏற்படுத்தி தரக்கூடிய கேந்திரமாக மதராஸ் விளங்கியது. 1950 ல் கொடவடிகண்டி குடும்பா ராவு, தனிகொண்ட அனுமந்த ராவு போன்றவர்கள் பத்திரிக்கைத் துறையிலும், ஸ்ரீஸ்ரீ, ஆத்ரேயா போன்றவர்கள் சினிமாத் துறையிலும் வாய்ப்புகளை தேடிக்கொண்டு மதராசுக்கு வந்தார்கள். இதெல்லாம் கூறுவது எதற்காக என்றால் மாலதி சந்தூரின் முதல் நாவல்கள் இரண்டும் இந்த இரண்டு துறைகளைச் சேர்ந்த வாழ்க்கை அனுபவங்களையே கதையம்சமாகக் கொண்டிருந்தன என்பதால். அதோடு கூட அவை அந்த துறைகளில் பணிபுரியும் பெண்களின் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்ட கதைகள் என்பது மற்றுமொரு சிறப்பு.

ரேணுகா தேவியின் ஆத்மகதை

விசாகப்பட்டினம் அருகில் உள்ள பீமிலியில் ராமாராவ் நர்சிங் ஹோமில் ஒன்று கூடிய ஆறு நண்பர்களின் இடையே நடந்த உரையாடலோடு தொடங்குகிறது ரேணுகா தேவியின் ஆத்மகதை நாவல். சமுதாய மேம்பாட்டுக்காக தான, தர்மங்கள் செய்வது பற்றி நடந்த அந்த விவாதத்தில் ஒரு பகுதியாக பெரிய பெரிய சொத்துக்களை சமூக சேவைக்கு தான தர்மம் செய்தவர்களின் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு, கொடையாளிகள் தம்முடைய மனநிறைவுக்காகவே செய்தார்களே தவிர பிற மனிதர்கள் அதனால் சுகப்படுவார்கள் என்று அளிக்கவில்லை என்று கூறும் ராமராவ், அவ்வாறு அளித்த பெண்ணின் கதை என்று ரேணுகாதேவியின் கதையைக் கூறுகிறான்.

சினிமா நடிகை ரேணுகாதேவி இதய நோய் காரணமாக ராமராவ் நரசிங் ஹோமில் வந்து தங்குவதும் அங்கு நிலவிய அமைதியான இயற்கைச் சூழலில் மகிழ்ந்து தன்னிடம் சிரத்தையும் நட்பும் காட்டும் ராமாராவிடம் தன் கடந்த காலம் குறித்து கூறுவதும் இதில் உள்ள கதை. ராமாராவின் கதையாக ஆரம்பித்து ரேணுகாதேவியின் சுய சரிதமாகத் தொடர்கிறது இந்த நாவல். தந்தை மரணித்து, தாயோடும் சகோதரர்களோடும் கடனிலும் ஏழ்மையிலும் வாழ நேர்ந்த பன்னிரண்டு வயது ரேணுகா, குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாத்துறையில் பிரவேசம் செய்வதும். தொடர் வெற்றிகளால் ஹீரோயினாக வளர்வதும் குடும்பப் பொருளாதார வசதிகள் வளர்ந்தாலும் தன் மீதும் தன் சம்பாதனையின் மீதும் தாயும் அண்ணன்களும் நாட்டாண்மை செய்வதைத் தாங்க முடியாமல் போவதும், அந்த தனிமையில் சினிமா கவிஞரின் பேச்சுகளால் ஈர்க்கப்படுவதும், இறுதியில் அவனையே திருமணம் செய்து கொள்வதும், அவள் மீதும் அவளுடைய சம்பாதனையின் மீதும் அதிகாரம் அவனுடைய கைகளுக்குப் போவதும், அங்கு தாய், அண்ணன் தம்பிகள், அக்கா அத்தான்கள், இங்கு கணவன் கணவனின் அக்கா அக்காவின் மகள் அக்காவின் மாப்பிள்ளை அனைவரும் ஒன்று சேர்ந்து அவளை இதயம் உள்ள ஒரு மனுஷியாக அல்லாமல் பணம் சம்பாதிக்கும் ஒரு இயந்திரமாகப் பார்த்து மானசீக இம்சைக்கு ஆளாக்கி அதன் மூலம் அவளைக் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்வதும் அந்த சூழ்நிலைகளின் அழுத்தத்தால் இதய நோய் வருவதும் இந்த நாவலில் முக்கியமான கதைக் களம்.

தனக்கு வருத்தமளிக்கும் தாம்பத்திய உறவுகளிலிருந்தும் குடும்பத் தொடர்புகளில் இருந்தும் பிரிந்து சுதந்திரமாக வாழ்வதற்கு தீவிர முயற்சி செய்த ரேணுகாதேவிக்கு அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்பது, “நீ ஒரு பெண். இது ஆண்களின் உலகம்” என்று வழக்கறிஞர் கூறிய பாரபட்சமான சமுதாய நியாயம் மூலம் உறுதியாகிறது. வாழும் காலம் முழுவதும் தன் சொத்தைத் தின்று தன்னை மானசீகமாக பீடித்து ஹிம்சித்து வரும் கணவனுக்கு தனது சொத்து சேரக்கூடாது என்ற ஆத்திரத்தோடு அனைத்தையும் சேவா சதனத்திற்கு எழுதி வைத்துவிட்டு இறக்கிறாள் ரேணுகா. பெண்கள் வீட்டு எல்லையைத் தாண்டி வெளியில் சென்று பணம் சம்பாதித்தாலும் அது சமுதாயத்தில் அதிகப்படி நாட்டாமைக்கும் இம்சைக்கும் அவளை ஆளாக்கும் என்கிற விஷ வாஸ்தவத்தை இந்த நாவல் சித்தரிக்கிறது

சம்பகம் செதபுருகுலு (கரையான்கள்)

சம்பகம் செதபுருகுலு நாவலின் கதை – ஒரு கீழ் மத்தியதரக் குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தைக்குப் பிறகு பிறந்த மூன்று பெண் குழந்தைகளில் இரண்டாவது பெண் சம்பகம். அண்ணன் சத்தியம், சட்டம் படிப்பதற்காக மதராஸ் சென்ற பின் தந்தையின் மரணம் நேர்கிறது. இருக்கும் வீடு வயல் அனைத்தையும் விற்று விட்டு தாய் மூன்று பெண் குழந்தைகளோடு மதராஸ் வருகிறாள். நாவலின் கதை முழுவதும் மதராசிலேயே நடக்கிறது.

ஆண் மகன் குடும்பத்தை போஷிப்பவன் என்று தாய் சத்தியத்திடம் அதிக அன்பு காட்டியதால் அவனிடம் அதிகார அகங்காரம் வளர்ந்தது. ஸ்கூல் ஃபைனலோடு சம்பகத்தின் படிப்பு நின்றுவிட்டது. அவளிடம் உள்ள எழுதும் திறமையை பணம் சம்பாதிக்கும் வழியாக மாற்றிய அண்ணனின் சாமர்த்தியத்தை விளக்கும் விதமாக உண்மையான கதை ஆரம்பமாகிறது.

பதினாறு வயதில் ஒரு பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்ந்த சம்பகம் முப்பதாவது வயதில் தற்கொலை செய்து கொள்வது வரை பதினான்கு, பதினைந்து ஆண்டு காலம் இந்த கதை நடக்கிறது. சம்பகத்தின் கலை ரசனையையும் மன மலர்ச்சியையும் அழகான உடலையும் உயர்ந்த சிந்தனை, புத்தி கூர்மை போன்ற அனைத்தையும் குடும்பப் பொறுப்பு, தியாகம் போன்ற பேச்சுகளாலும் சுயநலமான தம் செயல்பாடுகளாலும் நாசம் செய்து வித்யார்தி பத்திரிக்கையிலிருந்து மேலும் இரண்டு, மூன்று பத்திரிகைகளில் பணி செய்யச் செய்கின்றனர் குடும்பத்தினர். அவள் கதைகளும் நாவல்களும் எழுதி சம்பாதித்தது அனைத்தும் அக்காவின் நோய்க்கும் அண்ணனின் சம்சாரத்திற்கும் தங்கையின் குடும்பத்திற்கும் செலவழிந்து போகிறது. வாழ்வின் தனிமையும் இழந்த குடும்ப வாழ்வின் வாய்ப்புகளும் மன வேதனையடையச் செய்ததால் அவள் தற்கொலை செய்து கொள்கிறாள்.

எல்லைக்குட்பட்ட பொருளாதார வசதி கொண்ட குடும்பங்களில் யாராவது ஒருவர் சம்பாதித்தால் அவரைச் சார்ந்து வாழும் அங்கத்தினர்கள் நகர சமுதாயத்திற்கு பிடித்த கரையான்கள். அவை மரத்தை உள்ளிருந்து துளைத்து எவ்வாறு வெற்றிடமாக்குமோ சம்பகத்தின் வாழ்க்கையையும் அவளுடைய குடும்பம் அவ்வாறு துளைத்துவிட்டது. தான் பெற்ற நான்கு குழந்தைகளில் மீதி மூவருக்காக கவலைப்பட்டு அவர்களின் தேவைகளை தீர்க்கும் இயந்திரமாக மட்டுமே அவளைப் பார்த்தாள் தாய். அனைவருக்காகவும் உழைத்து சம்பாதிக்கும் மகளுக்கு உடலும் மனதும் இருக்கும் என்று கொஞ்சமும் நினைத்துப் பார்க்காத தாயின் சுயநலத்தை சம்பகம் அனுபவத்தில் உணராமலில்லை. அவளிடமிருந்த படைப்புத் திறமையின் சக்தியை அறிந்த யாரோ ஒரு வெளி மனிதர், பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டாலும் அவளை நினைவு வைத்துக் கொண்டு நான்கு நல்ல வார்த்தைகளை ஒரு கடிதத்தில் எழுதியதோடு, அவளுக்கு மகிழ்ச்சி எற்படுத்தும் என்ற எண்ணத்தில் ஒரு ஆண்டுக்கு மூவாயிரம் ரூபாய் வருமானம் தரக் கூடிய ஷேர்களை அவள் பெயரில் எழுதி அனுப்புகிறார். அது மேலும் அவளுடைய இதயத்தை காயப்படுத்துகிறது. அதன் பலனாக அவள் தற்கொலை செய்து கொள்கிறாள்.

பெண்கள் பொருளாதார ரீதியில் தம் கால் மீது தாம் நிற்கும் புதிய வாய்ப்புகள் வருகின்றன. உண்மைதான். ஆனாலும் இரண்டாம் உலகப் போர், பொருளாதார நெருக்கடி, பெருகி வரும் பொருளாசை, எல்லாம் எளிதாகக் கிடைத்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை அதிகமாகின்ற காலத்தில் – அந்த வாய்ப்புகள் பெண்களின் வாழ்க்கையில் எவ்விதமாக முன்னேற்றத்தை எடுத்து வரும்? எந்த அளவுக்கு சுதந்திரமானவர்களாக அவர்களை வாழ வைக்கும்? என்ற கேள்விகளைப் பற்றி சிந்திக்கச் சொல்கிறது இந்த நாவல்.

சப்தபதி

1959 ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ரேடியோவில் தொடராக வந்த ஏழு பெண் எழுத்தாளர்களின் சங்கிலித் தொடர் நாவல் சப்தபதி (1963). கனுபர்த்தி வரலட்சுமம்மா, ஸ்ரீதேவி, துர்காகுமாரி, இல்லிந்தில சரஸ்வதிதேவி, கே. ராமலட்சுமி, பி. சரளாதேவி ஆகியோரோடு கூட அதில் ஒரு பகுதியை மாலதி சந்தூரும் எழுதினார். கல்வி கற்ற கமலாவின் வேலை தேடும் முயற்சிகள், உத்தியோக வாழ்க்கை, கிடைத்த சம்பளத்தின் மீது அவளுக்கு எந்த அதிகாரமும் இல்லாமல், தாய் தந்தையர் எடுக்கும் முடிவுகள் போன்றவற்றால் உதவியற்றவளாகி மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். அவள் அனுபவித்த துன்பங்களும் அவமதிப்புகளும், இறுதியில் தன் வாழ்க்கையே தன் கையில் எடுத்துக்கொள்ளும் திடமான உள்ளத்தை அவளுக்கு அளித்தன என்பதே இந்த நாவலின் கதையம்சம். கமலா அனுபவித்த நெருக்கடியான போராட்டத்தின் போது அவள் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்று காட்டும் பகுதியை மாலதி சந்தூர் எழுதினார். இதுவரை பார்த்தது மாலதி சந்தூரின் நாவல் வாழ்க்கையின் முதல் கட்டம்.

2

மாலதி சந்தூரின் நாவல்கள் பல பதிப்புகள் வெளிவந்ததாலும் பதிப்பகத்தார் தம் பிரசுரத்திற்குத் தொடர்புடைய விவரங்களை மட்டுமே அளித்ததாலும், நாவல்கள் எதன் பின் எவை வந்தன என்று கூறுவது கடினம். எது எப்படி ஆனாலும் கிடைக்கும் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு நாமே யூகித்து தீர்மானிக்க வேண்டியதுதான். 1972 ஜனவரியில் லாவண்யா என்ற நாவல் எமெஸ்கோ பாக்கெட் நாவலாக வெளிவந்தது. அது 1968 ஆகஸ்ட் பதிப்புக்கு மறு பதிப்பு என்று உள்ளே டைட்டில் பேஜில் குறிப்பிட்டுள்ளது. மாலதி சந்தூரின் நாவல்கள் 1955 க்குப் பின் மீண்டும் பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு லாவண்யா நாவவோடு தொடர்ந்ததாக எண்ண முடிகிறது. எமெஸ்கோ பதிப்பகத்தாருக்கு, நூலின் உள்ளே முதல் பக்கத்தில் நாவலாசிரியையை அறிமுகம் செய்யும் சம்பிரதாயம் உண்டு. லாவண்யா நாவலிலும் அதே போல் மாலதி சந்தூரின் அறிமுகம் உள்ளது. 1972 ல் வெளிவந்த அந்த அறிமுகத்தில் பன்முகத் திறமை வாய்ந்த அவருடைய அறிவுச் செல்வத்திற்கு புகழ்க் கொடி என்று பிரமதாவனம், பாப்பா முதலான பதினாறு கதைத் தொகுப்புகளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர நாவல்கள் பற்றி எதையும் குறிப்பிடவில்லை.

இதே பதிப்பகத்தார் அக்டோபர் 1976 ல் பிரசுரித்த கிருஷ்ணவேணி என்ற நாவலின் அறிமுகத்தில் லாவண்யா நாவலோடு கூட ‘மேகால மேலிமுசுகு, ஏதி கம்யம்? ஏதி மார்க்கம்?, ப்ரதக நேர்ச்சின ஜாணா, ஆலோசின்சு’ ஆகிய நாவல்கள் இதற்கு முன்பே எமெஸ்கோ பாக்கெட் நாவலாக வந்ததாக கூறப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு அந்த நாவல்கள் 1972- 1976 இடைப்பட்ட காலத்தில் வந்ததாகக் கருதலாம். 1977 செப்டம்பரில் எமெஸ்கோ மாலதி செந்தூரின் ‘என்னி மெட்லெக்கினா’ என்ற மற்றுமொரு நாவலை பிரசிரித்தது. அதில் மேலே குறிப்பிட்ட நாவல்களோடு கூடுதலாக ஜெயலக்ஷ்மி, சத்யோகம், ராக ரக்திமா என்ற மூன்று நாவல்கள் பற்றி உள்ளன. அதாவது இவை 1976- 77 இடைப்பட்ட ஓராண்டு காலத்தில் வெளிவந்ததாகத் தெரிகிறது. 1979 ஜனவரியில் நவயுக புக் சென்டர் உரிமையாளர்கள் பிரசுரித்த ரேணுகா தேவி ஆத்மகதா மறு பதிப்பில் பின் பக்க அட்டையின் உள் பக்கத்தில் குறிப்பிட்ட அவர்களின் பதிப்புக்கான ஜாபிதாவில் ரெக்கலு – சுக்கலு என்ற நாவலின் பெயர் உள்ளது. 1983 டிசம்பரில் குவாலிட்டி பப்ளிஷர்ஸ் இவர் எழுதிய வரிசையில் ‘மனசுலோ மனசு’ என்ற நாவலின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டு, அதில் முதல் பதிப்பு காலமாக 1979 ஆகஸ்ட் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த செய்திகள் அனைத்தையும் ஒரு வரிசைக் கிரமத்தில் ஆராய்ந்தால் மாலதி சந்தூரின் நாவல்களின் இரண்டாம் கட்டம் லாவண்யாவோடு தொடங்கி 70வது தசாப்தத்தில் விரிவானது என்பது தெளிவாகிறது. ‘மேகால மேலிமுசுகு, ஏதி கம்யம்? ஏதி மார்க்கம்?, ப்ரதக நேர்ச்சின ஜாணா, ஆலோசிஞ்சு’ ஆகிய நான்கு நாவல்கள் 1976 ல் வெளிவந்துவிட்டன. ‘கிருஷ்ணவேணி, ஜெயலட்சுமி, சத்யோகம், ராக ரக்திமா’ ஆகிய நான்கும் 1976 ல் வந்தன. ‘என்னி மெட்லெக்கினா’ (எத்தனை படிகள் ஏறினாலும்) என்ற நாவல் 1977 ல் வந்தது. 1979ல் ‘ரெக்கலு – சுக்கலு, ஓ மனுஷி கதை, ஏமிடீ ஜீவிதாலு? மனசுலோ மனசு’ என்ற நான்கு நாவல்கள் வந்தன. அதாவது 70 வது தசாப்தத்தில் வெளியான நாவல்கள் மொத்தம் பதின்மூன்று.

செல்வந்தர் வீட்டு குறும்புப் பெண்ணான லாவண்யாவுக்கும் பொறுமைக்கும் பொறுப்புக்கும் பெயர் போன ஏழைப் பையனுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தோடு தொடங்குகிறது இந்த நாவல். மேகால மேலிமுசுகு (1984 ஸ்ரீசைலஜா பிரசுரம்) எதிர்பாராத சம்பவங்களோடு ஒரு செல்வந்தர் வீட்டு பையனுக்கும் ஏழை வீட்டு பெண்ணுக்கும் இடையில் கண்ணுக்குத் தென்படாத போராட்டமாகத் தொடங்கி, இருவர் இடையேயும் காதல் திடமாகி திருமண உறவாக மாறுவதை கதையம்சமாகக் கொண்ட நாவல்.

1955 ஹிந்து விவாக சட்டத்திற்கு முன்பும், பின்பும் இருந்த பெண்களின் வாழ்க்கை இந்த நாவலுடைய கதையம்சத்தின் முக்கிய பாகம். பலதார மணத்தை எதிர்த்து ஹிந்து விவாகச் சட்டம் வருவதற்கு முன்பு பெண்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதற்கு கதாநாயகன் அருணகிரியின் தாயையும், ஹிந்து விவாக சட்டம் வந்த பின்பு பெண்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதற்கு அருணகிரி காதலித்த விசாலாவையும் பிரதிநிதிகளாக இருத்தி இந்த கதையை நடத்துகிறார் மாலதி சந்தூர்.

செல்வத்தோடு கூட சமுதாய கௌரவமும் நிறைந்த பெரும் செல்வத்துக்கு வாரிசாக ஆண்மகன் ஒருவன் இல்லையே என்ற கவலையோடு உள்ளார் உமாபதி. இவர் ஏழு பெண் குழந்தைகளின் தந்தை. ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர். பதினாறு வயதுடைய சாவித்திரியை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். அது ஹிந்து விவாகச் சட்டம் வருவதற்கு முந்தைய நிகழ்ச்சி. ஆண் பிள்ளைக்காக மீண்டும் திருமணங்கள் செய்வதும் அந்த திருமணங்களால் முதல் மனைவியும் இரண்டாவது மனைவியும் ஒருவரை ஒருவர் பிறவி எதிரிகளாகக் கருதி வெறுத்து உமிழும் உதவியற்ற ஆத்திரம், ஒருவரை ஒருவர் நம்பாத தாழ் நிலை ஆகியவற்றை இரண்டாம் மனைவி சாவித்திரி, முதல் மனைவி ஜெயம்மா ஆகியோரின் உறவில் காட்டுகிறது இந்த நாவல்.

இருபத்திரண்டு வயதிலேயே விதவையாகி சிறு குழந்தையான மகனையும் சொத்துக்களையும் காப்பாற்ற வேண்டிய பெரிய பொறுப்பு சாவித்திரியின் தோள்களில் விழுகிறது. கத்தி மேல் நடப்பது போன்ற அந்த வாழ்க்கையும் நாவலின் கதையம்சத்தில் ஒரு பாகமாகிறது. பல தார மணம் செய்யும் சமுதாய அமைப்பு, ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே வம்ச வாரிசு உரிமை, சொத்துக்களின் வாரிசுரிமை போன்றவை எத்தனை பாரபட்சத்தோடு கூடிய துன்புறுத்தும் சம்பிரதாயங்கள் என்பதை சாவித்திரியின் கடந்த காலக் கதை தெளிவாக தெரிவிக்கிறது.

விசாலா பிறந்து வளர்ந்த குடும்பத்தின் வறுமை, ஹை ஸ்கூல் படிப்பை நிறைவு செய்வதற்குக் கூட வாய்ப்பளிக்கவில்லை. திருமணம் செய்து பாரத்தை இறக்கி வைத்து விடவேண்டும் என்றெண்ணிய தாயின் முயற்சிக்குத் தலைவணங்கி திருமணம் செய்து கொள்கிறாள். திருமணம் செய்து கொண்டவன் பைத்தியக்காரன் என்று தெரிந்து சம்சாரத்திற்குப் போக மாட்டேன் என்று வீட்டோடு இருந்து விட்ட விசாலா, அருணகிரியின் உதவியால் தனக்கு விருப்பமில்லாத அந்த திருமணத்திலிருந்து சட்டப்படி விடுதலை பெறுவதற்கு விவாகரத்தை சட்டப்படி அனுமதித்த ஹிந்து விவாக சட்டமே காரணமானது.

சட்டத்தின் மூலம் நன்மைகள் எத்தனை வந்தாலும் சமூக கலாசாரமும் தனி மனிதத் தயார்நிலையும் ஒத்துழைக்காவிட்டால் அவற்றால் பயனிருக்காது.

பெண்கள் சற்று படிப்பு, கொஞ்சம் பொருளாதார சுதந்திரம், சுயமரியாதை இயல்பு ஆகியவற்றைச் சம்பாதித்துக் கொண்ட ஆரம்ப கால கட்டத்தில் அவர்கள் அந்த மாற்றங்களில் சிலவற்றை ஏற்று, சிலவற்றில் ஏற்கெனவே இருந்த அச்சங்கள், சந்தேகங்கள் ஆகியவற்றை விட முடியாமல் குழப்பத்தில் ஆழும் தலைமுறைக்கு பிரதிநிதியாக விசாலாவின் கதாபாத்திரம் இந்த நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அருணகிரியிடம் காதல் இருந்தாலும் ஒருமுறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற பெண்ணான தனக்கு அவனைத் திருமணம் செய்யும் உரிமை இல்லை என்று விசாலா நினைக்கிறாள். அருணகிரியின் குடும்ப மரியாதைகளுக்கு தன்னால் பங்கம் ஏற்படும் என்றும் தாயை மனவருத்தம் செய்வது தர்மம் அல்ல என்றும் கூறுகிறாள். அந்தத் தாய் அவளாகவே வந்து தன் மகனுடைய நன்மைக்காக பழைய எண்ணங்களையும் சந்தேகங்களையும் விடுத்து விசாலாவை மருமகளாக வரவேற்பது இந்த நாவலின் முடிவு.

ஏதி கம்யம்? ஏதி மார்க்கம்? என்ற நாவல் 1972 ம் ஆண்டு வெளிவந்தது. (வினோதினி நவலா மாலதீயம் 2006, பக்கம் 138). காதலித்து மணந்த கிறிஸ்டியன் மேரி, ஹிந்து பிராமண குலத்தைச் சேர்ந்த விஸ்வநாதம் இருவரின் வாழ்க்கைப் பரிணாமங்கள் இந்த நாவலின் கதையம்சம்.

ஹிந்து பிராமண இளைஞனைத் திருமணம் செய்த பெண்ணின் குடும்பத்தாரும் கிறிஸ்டியன் பெண்ணை திருமணம் செய்த பையனின் குடும்பத்தாரும் அவர்களை வேற்று மனிதர்களாகப் பார்க்கும் போது ஏற்படும் மானசீக நெருக்கடிகள், மீண்டும் அந்த குடும்பங்களில், அதிலும் முக்கியமாக பையனின் குடும்பத்தில இடம் பெறுவதற்கு அவள் படும்பாடுகள், தானாகவே தலையில் சுமக்கும் பொறுப்புகள் இவை அனைத்தும் இந்த நாவலின் கதையம்சத்தில் ஒரு பகுதியாக உள்ளன. பிராமண ஆதிக்கத்தில் உள்ள கிறிஸ்டியன் மருமகளின் வருமானம், மருத்துவச் சேவைகள் போன்றவை உதவுமே தவிர அவளுடைய மதம் உதவாமல் போவது, சம பந்தி போஜனத்திற்கு சம்மதிக்காதது போன்ற சூட்சம அம்சங்களின் சித்தரிப்பும் இந்த நாவலில் உள்ளது.

விஸ்வநாதத்திடம் இருக்கும் கணவன் என்ற அதிகார ஹோதா, உத்தியோக விவகாரங்களில் அவள் முடிவெடுக்கும் அதிகாரத்தைத் தடுப்பது, தந்தைக்கே அனைத்து அதிகாரங்களும் உள்ள ஆணாதிக்கக் குடும்பம், குழந்தைகளின் மீது அவளுடைய உரிமையை மறுப்பது – இவை அனைத்தும் ஏற்படுத்திய கவலைகளுக்கு தற்கொலையே தீர்வு என்று நினைப்பதில் மேரியின் வாழ்க்கைத் துன்பம் வெளிப்படுகிறது. அது இறுதியில் விஸ்வநாதத்தின் மரணம் வரை எடுத்துச் சென்று குழந்தைகள் அனாதையாக விடப்படுவதில் முடிகிறது.

1983 ல் வெளிவந்த மதுர ஸ்ம்ருதுலு என்ற நாவலின் கதையம்சம் கூட கிட்டத்தட்ட இது போன்றதே. இதில் கதையம்சம் கலப்புத் திருமணம் பற்றியது. மருத்துவப் படிப்பு படித்த பிற மதத்தைச் சேர்ந்த நாகமணிக்கும், கால் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்த எம்.ஏ படிக்கும் பிராமண இளைஞன் சுந்தர்ராஜனுக்கும் இடையில் ஏற்பட்ட ஈர்ப்பு திருமணம் வரை எடுத்துச் செல்வது, திருமணத்தன்றே தந்தை அவனை இறந்தவனாகத் தீர்மானித்து ஈமக் கிரியைகள் செய்வதால் ஏற்பட்ட வருத்தத்தாலோ, வேலை கிடைக்காமல் நாகமணியின் சம்பாத்தியம் மீது வாழ வேண்டி வந்ததே என்ற சுய பச்சாதாபத்தாலோ அவன் மிகக் குறுகிய காலத்திலேயே மரணிப்பதும், அவனுடைய ஞாபகங்களில் அவள் மருத்துவத் தொழிலைத் தொடர்வதும் இதில் உள்ள கதை.

பிற மத, பிற ஜாதி கலப்புத் திருமணங்களுக்கு நவீன சமுதாயத்தில் ஏற்படும் வாய்ப்புகளை வைத்துப் பார்க்கும்போது, இளைஞர்களும் இளம் பெண்களும் எதிர்கொண்ட போராட்டங்களுக்குத் தீர்வு என்ன என்ற சிந்தனையும் புரிதலும் ஏற்படாத காலத்தில் இது போன்ற சோக முடிவு கொண்ட நாவல்களே வரும். என்று எண்ணத் தோன்றுகிறது.

ப்ரதக நேர்ச்சின ஜாணா (வாழக் கற்ற கெட்டிக்காரி).

ப்ரதக நேர்ச்சின ஜாணா, ஆலோசிஞ்சு என்ற இரண்டு நாவல்களும் பெண்களின் பாலியல் குறித்தும், ஆண் பெண் தொடர்பு குறித்தும், முக்கியமாக சமுதாயத்தில் உறைந்து போய் கிடக்கும் எண்ணங்களையும் அபிப்ராயங்களையும் முன்னுக்கு எடுத்துச் சென்று விவாதிக்கிறது.

ஒரு ஆண் தன் மனைவியைத் தவிர பிற பெண்களோடும் தொடர்பு கொள்வது, ஒரு பெண் திருமணமாகாமல் ஆண்களோடு தொடர்பு வைத்துக் கொள்வது – இவ்விரண்டுக்கும் வெவ்வேறு விழுமியங்களைத் தீர்மானிக்கும் சமுதாய முறையை எடுத்துக் கூறும் நாவல் ‘ப்ரதக நேர்ச்சின ஜாணா’.

ஒரு பெண் தற்கூற்றாக கதை கூறும் வடிவு கொண்ட நாவல் இது. கதை முழுவதும் அவளுடைய ஹைஸ்கூல் கிளாஸ்மேட் சுபத்ரா, கணக்கு டீச்சர் ரோஸி, கோபால ராவு அங்கிள் ஆகியோரைச் சுற்றி நடக்கிறது. அந்த உறவுகளின் சுபாவமும் பரிணாமங்களும் சிறிது சிறிதாக வாசகர்களுக்குப் புரிய வருவது அவளுடைய கதை கூறலின் மூலமாகவே. தன்னைவிடச் சிறியவர்கள், தனிமையானவர்கள், உதவியற்றவர்கள், காதலுக்காக ஏங்குபவர்களான ரோஸி டீச்சரோடும், அதன்பின் சுபத்ராவோடும் உறவு வைத்துக் கொண்ட கோபாலராவு அங்கிளைப் பற்றி கதை கூறும் பெண்ணுக்கு அவன் மேல் எப்படிப்பட்ட குற்றச்சாட்டோ, மறுப்போ இல்லை. அவனோடு நடத்தும் உரையாடல் மூலம் ரோஸி பற்றியும், சுபத்ரா பற்றியும் ஏற்பட்ட பாரபட்சமான அபிப்பிராயாங்களைக் கொண்டே அவர்களை அளவிடுவதைக் காண்கிறோம். ரோஸி டீச்சர் காச நோயால் மரணம் அடைவதால் திருமணமாகாமல் கோபாலராவோடு அவள் செய்த சினேகமும் ஏற்படுத்திக் கொண்ட பந்தமும் சர்ச்சைக்கு வராமல் போகிறது. ஆனால் ஒரு ஏழை குடும்பத்தில் பால விதவையாக எதிர்கொண்ட பரிதாபகரமான வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுவதற்காக டீச்சர் வீட்டில் கிடைத்த வேலை, கோபாலராவு அங்கிளின் ஆதரவு போன்ற வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டு பின்னர் அவற்றை விட்டுவிட்டு எம்எஸ்சி படித்து, உத்தியோகம் செய்யும் ஒருவனை மணம் புரிந்து தனக்கென்று ஒரு குடும்பத்தையும் பாதுகாப்பான வாழ்க்கையையும் ஏற்படுத்திக் கொண்ட சுபத்ராவை ‘ப்ரதக நேர்ச்சின ஜாணா’ (வாழக் கற்ற தந்திரக்காரி) என்று ஒலிக்கும் அவமானகரமான அடைமொழியால் குறிப்பிடவேண்டி வந்தது. பெண்களின் புனிதத்தைக் காப்ப்ற்றுவதையே லட்சியமாக வைத்துக் கொண்டிருந்ததாகக் கூறும் அண்ணனின் ஆணாதிக்க இயல்பை அடையாளம் காண முடிந்த கதை சொல்லி நாயகியும் கூட இதற்கு விதிவிலக்கு ஆகாமல் இருப்பது இந்த நாவலில் உள்ள விசித்திரம். அதுதான் நாவலாசிரியையின் எண்ண ஓட்டமுமா என்று பார்த்தால் ஆமாம் என்றுதான் தோன்றுகிறது.

வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு எப்படிப்பட்ட சிந்தனை முறையை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறும் தத்துவ படைப்பாகத் தோன்றும் ‘ஆலோசிஞ்சு’ நாவல் கூட விவாகத்திற்கு அப்பால் ஒரு ஆண், பெண்களோடு ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்புகளைக் கண்டும் காணாதது போலவும் எதுவும் தெரியாதது போலவும் நடிக்கும் சமுதாய ஒழுக்கத்தின் உண்மைத் தன்மையை பிரதானமாக கண்ணுக்கு முன் எடுத்துக் காட்டுகிறது. இந்த நடிப்பால் வெளியில் இருப்பவர்களுக்கு எந்தவித தொந்தரவும் இல்லை. ஆனால் வீட்டில் மனைவிக்கு அது பெரிய ஹிம்சை. மாதவராவின் மனைவி சியாமளாவானாலும், மூர்த்தியின் மனைவி லலிதாவானாலும் அப்படிப்பட்ட இம்சைகளை சந்தித்தவர்களே. ஆனால் கணவனுக்கு பிற பெண்களோடு தொடர்பு இருக்கிறது என்று தெரிந்த போது பெண்கள் அந்த வேதனையை எவ்வாறு தாங்கிக் கொள்ள வேண்டும்? நம் தலைவிதி என்று ஏற்றுக் கொள்வதல்ல வழி. கோபம் வந்து கணவனை மீறி வெளியே செல்வதும் வழி அல்ல. கணவனின் கோணத்திலிருந்தும், கணவனோடு தொடர்பு வைத்துக் கொண்ட பெண்களின் கோணத்திலிருந்தும் பார்த்து, அந்த பிரச்சினையைப் புரிந்து கொண்டு அவர்களை மன்னிக்க முயல்வதும், தனி நபராக தன் முன்னேற்றத்திற்கு மாற்று வழிகளைத் தேடிக்கொள்வதுமே வழியாக இருக்கையில் இந்த நாவல் கூறும் ஒட்டுமொத்த பயன் என்ன என்பது பற்றி கேள்வி எழாமல் போகாது.

Series Navigation<< மல்லாதி வசுந்தராதேவி எழுதிய நாவல் தஞ்சாவூர் பதனம்கிருஷ்ணவேணி மற்றும் சத்யோகம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.