பர்கோட்

This entry is part 3 of 12 in the series கங்கா தேசத்தை நோக்கி

ஹரித்வாரிலிருந்து நீண்ட பயணத்திற்குத் தயாராக காலையில் வெகு சீக்கிரமே எழுந்து விட்டோம். இன்றும் மழை வரும் அறிகுறிகளுடன் கருமேகங்கள் உலா வந்து கொண்டிருந்தது. தொலைக்காட்சிப் பெட்டியைத் துழாவினால் மூன்று சேனல்கள் அதுவும் ஹிந்தியில் மட்டுமே ஒளிபரப்பாக, காசு கொடுத்தால் வேறு சேனல்களைப் பார்க்க முடியும் என்ற நிலையில் பருவநிலை எப்படி இருக்கிறது என்று சொல்ல அருணன் தான் அங்கு இல்லை. வசதியான விடுதி தான் என்றாலும் ஆங்கில சேனல்களுக்குப் பணம் கட்ட வேண்டுமென்பதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான்! விடுதியில் கேட்டால் இன்றைக்கும் மழை தான் என்றார்கள். கையை நெற்றிக்கு மேல் வைத்து அண்ணாந்து வானத்தைப் பார்த்து ஆருடம் சொல்கிறார்கள். அப்படித்தான் அன்று இருந்தோம். இன்றுமா? விண்வெளியில் ஏகப்பட்ட செயற்கைக்கோள்களை ஏவுகிறோம். இருந்தும் நிலைமை முழுவதுமாக மாற இன்னும் வருடங்கள் ஆகும் போல! எதற்கும் இருக்கட்டும் என்று மழை ஜாக்கெட்டை கையில் வைத்துக் கொண்டோம்.

நாங்கள் தங்கியிருந்த விடுதியில் உணவு சுவையாக இருக்கும் என்று பலரும் விமரிசனம் செய்திருந்தார்கள். ஆவலோடு உணவகத்திற்குச் சென்றால் கூட்டமோ கூட்டம். முதல் நாள் இரவே 40 பேர் கொண்ட குழு ஒன்று மலேசியாவிலிருந்து வந்திருந்தது. தமிழில் பேசுவதைக் கேட்டவுடன் அவர்களோடு உரையாடினோம். பார்க்கத் தமிழர்களைப் போல இருந்தாலும் ஆட்கள் எல்லாம் ‘கனமாக’ ஏக வளர்ச்சியுடன் இருக்கிறார்கள். பெரும்பாலும் அவரவர் கடமைகளை முடித்துவிட்டு ‘அக்கடா’வென்று இருப்பவர்கள் போலத் தெரிந்தார்கள். அதில் இருவர் அவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டு எங்களைப் பற்றிக் கேட்டார்கள். இந்தக் குழு ரிஷிகேஷ் சென்று அங்கிருந்து சார் தாம் புண்ணிய யாத்திரைச் செல்ல வந்திருந்தார்கள். அங்குச் சென்று பித்ரு கடமைகளை முடிக்க அவர்கள் நாட்டிலிருந்தே ஜடாமுடி தரித்த ஒரு சிவாச்சாரியாரையும் கையோடு அழைத்து வந்திருந்ததில் சுற்றுலா சென்று வரும் அவர்களின் பல வருட அனுபவம் தெரிந்தது. அவர்களால் விடுதி நிறைந்திருந்தது. பெரும்பாலும் ஹரித்வார் வருபவர்கள் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து ரிஷிகேஷ், காசி, சார்த்தாம் என்று போவதால் விடுதிகளில் நல்ல கூட்டம் இருக்கிறது. அதுவும் பனிக்காலத்திற்கு முன் ஏகப்பட்ட கூட்டம். இந்த வருடம் கொரோனாவிற்குப் பிறகு என்பதால் கூடுதலான மக்கள்.

அவர்களுடன் பேசி முடித்த பின்னும் சாப்பாடே வரவில்லை ஆனால் அனைத்து மேஜைகளிலும் ஆட்கள் சாப்பிடுவதற்குத் தயாராக இருந்தார்கள். அவரவர் வேலையை முடித்து விட்டு அடுத்த ஊருக்குப் பயணிக்க அதுவும் மழை வருவதற்குள் புறப்பட வேண்டும் என்ற கட்டாயம். கூட்டத்தைப் பார்த்து அங்கிருந்த இளைஞர்கள் அவசரஅவசரமாக சமையலறைக்குள் ஓடிச்சென்று ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு வந்தார்கள். சூடா இட்லி, வடை இருக்கா என்று தான் தேடியது மனம். அப்பாடா! சோலே பட்டூரா, சன்னா மசாலா, உப்புமா, ஆச்சார், தயிர், மினி ஊத்தப்பம், சட்னி,சாம்பார், பிரட் சாண்ட்விச், பழங்கள், டீ என்று குறைவில்லாமல் இருந்தது. அத்தனையும் அவ்வளவு சுவையாக! உப்புமா ரெசிபி கேட்டிருக்க வேண்டும். ஓட்ஸ் கஞ்சி கூட இருந்தது!

திருப்தியாகச் சாப்பிட்டு முடித்து சமையல்காரரிடமும் அங்கிருந்த தம்பிகளிடமும் “பஹுத் அச்சா நாஷ்டா ஹை. தன்யவாத் ” என்று ‘தோடா தோடா’ ஹிந்தியில் அவர்களைப் பாராட்டி நன்றி கூற அவர்களும் முகமலர்ந்தார்கள். எங்களை அழைத்துச் செல்ல வண்டி வந்திருக்கிறதா என்று காத்திருந்தோம். இங்கிருந்து கிளம்பி யமுனோத்ரி செல்லும் வழியில் பர்கோட் சென்று இரவு தங்கல். ஆறு-ஏழு மணி நேரப் பயணம். இன்றைய நாள் முழுவதும் வண்டியில் தான். இனி நாங்கள் செல்லப் போகும் ஊர், தங்குமிடங்களைப் பற்றி அங்குச் சென்றால் தான் தெரியும். அதனால் தான் ஒரு பயண முகவரை வைத்து இந்தப் பயணத்திட்டத்தை ஏற்பாடு செய்தோம். நமக்குத் தெரியாத இடம், மொழி, மக்கள் என்கிற போது அனாவசியமாக எதிலும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதால் பணம் அதிகம் என்றாலும் நிம்மதியாகப் போகலாம் என்று திட்டமிட்டோம்.

சரியாக ஒன்பது மணிக்கு வண்டியுடன் வந்தவர் காவிப்பற்கள் தெரிய சிரித்துக் கொண்டே அவரை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டார். அட! பரவாயில்லையே. கோட் போட்டுக் கொண்டு சுத்தமாக உடை உடுத்தி ரொம்ப ப்ரோஃபஷனலா ஆங்கிலத்தில் வேறு பேசுகிறாரே என்று நினைத்து முடிப்பதற்குள் “கித்னே சூட்கேஸ்” என்று ஹிந்திவாலாவாகி விட்டார். போச்சுடா! இனி பத்து நாட்களில் நம்மளோட ஹிந்தி அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டியது தான்.

எங்களுடைய இரண்டு பெரிய, இரண்டு சிறிய பெட்டிகளை காரில் வைத்து விட்டார். நல்ல வேளை! வண்டியில் காஸ் சிலிண்டர் இல்லை. இரண்டாவது முறையாக மாருதி ஸ்விஃப்ட் டிசையரில் பயணம். பார்க்கச் சிறிய வண்டியாக இருந்தாலும் இருவர் பயணம் செல்ல ஏற்ற வண்டி. விடுதியிலிருந்து சரியான நேரத்தில் கிளம்பி, தாவிச் செல்லும் கங்காவை மனதிற்குள் வணங்கியபடி ஹரித்வார் சாலைகளில் பயணித்தோம். நதியும் சிறிது தொலைவு தொடர்ந்து வர, இந்த குட்டி ஊர் கும்பமேளா கூட்டத்தை எப்படிச் சமாளிக்கிறதோ என்று வியந்து கொண்டே டேராடூன் செல்லும் நெடுஞ்சாலையை அடைந்தோம். மலைகள் சூழ இருந்த இடம் மாறி கட்டடங்கள், தொழிற்சாலைகள், பேருந்துகள் என்று ஒரு மணி நேரத்திற்குள் நகரத்தை நெருங்கி வர, பள்ளி, கல்லூரி, வேலைக்குச் செல்லும் கூட்டம் என்று போக்குவரத்து நெரிசலும் ஆரம்பித்து விட்டது. ஊருக்குள் நிறையத் தேநீர்க்கடைகள். சுடச்சுட ஜிலேபி, சமோசாக்களுடன் “வா வா” என்று ஆசையாக அழைத்தது. “இது தான் காலை உணவு பலருக்கும்” என்றார் அசோக்குமார் ஜி, எங்கள் ஓட்டுநர். ஆகா! மதுரைக்காரனுங்களை மிஞ்சிடுனுவாங்க போலிருக்கே! நாம வெறும் வடை, போண்டா, காபின்னு ஆரம்பிச்சா இங்க இனிப்போடு ஆரம்பிக்கிறாங்க! மகிழ்ச்சி. சாப்பிட்டுருவோம்.

வழியில் கும்பலாக அதிகம் படித்திராத கூலி வேலைக்குச் செல்பவர்கள் கூட்டம் நின்று கொண்டிருந்தது. “அவர்களை மினி லாரிகளில் வேலைக்கு அழைத்துச் செல்வார்கள். பெரும்பாலும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகம்” என்றார் அசோக்குமார் ஜி. வேலை எங்கிருக்கிறதோ அதை நோக்கி நகர்வது தானே இயல்பு. காலம்காலமாக இது தானே தொடருகிறது. சாலையோரம் வண்ண வண்ண மண்பாண்டங்கள், பூக்களை வைக்கும் குவளைகளை விற்றுக் கொண்டிருந்தார்கள். வாங்க ஆசையாக இருந்தாலும் அதைத் தூக்கிக் கொண்டு அலைய முடியாது என்பதால் ஆசைக்குத் தடா போட்டுக் கொண்டேன்.

இப்பொழுது அமைதியான, நெரிசலற்ற, மரங்கள் குடை விரித்த சாலையில் பயணம். மழையின் கொடையில் மரங்கள் குளித்து புத்துணர்ச்சியுடன் அத்தனை அழகாக கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. சூரிய பகவானும் வெம்மையைக் குறைத்துக் கொண்டதால் அந்தப்பகுதி முழுவதுமே குளிரூட்டப்பட்டது போல் அடர்ந்த மரங்களுடன் குளுமையாக இருந்தது. கங்கையும் யமுனையும் இப்பகுதியை மிகச் செழுமையாக வைத்திருக்கிறது. மலைப்பிரதேசங்களில் இருக்கும் உயர்ந்த மரங்கள் சூழ்ந்த நல்ல சாலைகளில் பயணிப்பதே அத்தனை சுகம். ‘குளுகுளு’ சீதோஷணம், அடர்த்தியான பச்சைப்பசேல் மரங்கள் என ‘சிட்டி ஆஃப் லவ்’ நகரம் உண்மையிலேயே காதலிக்க வைத்து விடுகிறது.

தென்றல் சாமரம் வீச மலை மேல் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் தேநீர் அருந்த வண்டியை நிறுத்தினோம். சுகாதாரமான நன்கு பராமரிக்கப்பட்ட பெரிய உணவகம். அனைத்து வட இந்திய உணவுப்பட்டியல்களுடன் எதிரில் மற்றுமொரு உணவகம். வாசலில் பெரிய எண்ணெய்ச்சட்டியில் சமோசா தயாராகிக் கொண்டிருந்தது. அந்தத் தெரு முழுவதும் பங்களா டைப் வீடுகள்! நாங்கள் சென்ற உணவகத்தில் எங்களையும் சேர்த்து மொத்தமே ஐந்து வாடிக்கையாளர்கள் தான். எதிர்க்கடையில் அதுவும் இல்லை. ஒருவேளை மதியம், மாலை நேரங்களில் கூட்டம் வருமோ என்னவோ? எப்படிச் சமாளிக்கிறார்களோ என்று ஆச்சரியமாக இருந்தது! நாங்கள் காலையில் சாப்பிட்டது செமிக்கவே மாலை ஆகிவிடும் போல! பசியில்லை. டீ எப்படிப் போடுகிறார் என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த டீ மசாலா ரெசிபியைக் கண்டுபிடிக்க வேண்டும். தேநீருடன் கூடவே பிஸ்கோத்துகளும். பிரிட்டிஷார் பழக்கம் இன்று வரையில் தொடருகிறது!

சிறிது தொலைவில் தள்ளுவண்டியில் பழங்களை அழகாக அடுக்கி வைத்து ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்பாடா! இதற்குத் தானே ஆசைப்பட்டேன். பப்பாளி,கொய்யா,பேரிக்காய், ஆரஞ்சு , ஆப்பிள், இளநீர் என்று வேண்டியதை வாங்கிக் கொண்டோம். இனி பசி வந்தாலும் கவலையில்லை. வளைந்து வளைந்து செல்லும் சாலைகளில் மசூரியை நோக்கிய பயணம் தொடங்கி விட்டது.

வழியில் ‘ஸ்ரீ பர்காஷ்ஈஷ்வர் மஹாதேவ்’ கோவிலில் வண்டியை நிறுத்தி “அழகான கோவில் சென்று வாருங்கள்” என்று டிரைவர் ஜி சொல்ல, முகப்பே வித்தியாசமாக இருந்த கோவிலுக்குள் சென்றோம். வெளியில் மாட்டியிருந்த பலகையில் நன்கொடை எதுவும் யாருக்கும் இங்கே வழங்கக்கூடாது என்று எழுதியிருந்தார்கள். ஆகா! தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை இப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பகல் கனவு தான் என்றாலும் ஒரு சின்ன நப்பாசை. ஹ்ம்ம்!

சிகப்பு, ஆரஞ்சு, வெள்ளை, கருப்பு வண்ணங்கள் தீட்டப்பட்ட கோபுரங்களின் உச்சியில் திரிசூலங்கள்! தனியாரால் பராமரிக்கப்படும் மிகப்பழமையான கோவில். உள்ளே சிவனுக்கு அபிஷேகம் செய்ய முடிகிறது. கோவில் குருக்களே நெற்றியில் குங்குமம் வைத்து விட்டார். அங்கு வந்திருந்த வட இந்தியப் பயணிகள் அவர் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர். நடுநாயகியாக சக்தி அழகாக வீற்றிருந்தாள். சலவைக்கல்லில் செய்யப்பட்ட இரண்டு சிவலிங்கங்கள். பூமாலை அலங்காரங்களுடன் தெய்வீகமாக இருந்தது சன்னிதி. அமைதியான அழகான கோவில். அங்கே அவரவர் ராசி, நட்சத்திரத்திற்கு ஏற்ற கற்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். போனால் எதையாவது வாங்க வேண்டும் போல் இருக்கும் என்று எட்டிக்கூடப் பார்க்கவில்லையே நான். ஈஷ்வருக்கும் அந்த பயம் இருந்தது. அதனால் கெட்டியாகக் கையைப் பிடித்துக் கொண்டு “போகலாம் வா” என்று நைசாக வெளியில் அழைத்து வந்துவிட்டார். எதிரில் பூத்துக் குலுங்கும் பசுமையுடன் இமயமலை! ஆகா! மக்கள் வந்து செல்லுமிடத்தில் மந்திகள் கூட்டமும் இருக்கிறது.

வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பகுதிகளில் தேநீர்க்கடைகளும் தங்கும் விடுதிகளும் உணவகங்களும் அதிகம் தென்பட்டது. வாரயிறுதியைக் கொண்டாடும் இளவட்டங்கள் பைக்குகளில், ஜீப்புகளில், வண்டிகளில் ‘சர்சர்’ என்று முந்திக் கொண்டுச் செல்வதைப் பார்க்க வியப்பாக இருந்தது. எதிரில் வண்டிகள் வந்தால் ஆட்டம் கண்டு விடுவார்கள். அவர்களை அனுப்பி விட்டு பின்னால் பாதுகாப்பாகச் செல்வதே நமக்கு நல்லது. இவர்களால் தான் விபத்துகள் அதிகம் நடக்கிறது என்று டிரைவர் ஜி ஹிந்தியில் திட்டிக் கொண்டே வந்தார்.

மலையில் வீடுகளைப் பார்த்தவுடன் எப்பொழுது கீழே விழுமோ என்றிருக்கும் கலிஃபோர்னியா மலை வீடுகள் ஞாபகத்திற்கு வந்தது. இரண்டரை மணிநேரத்தில் மசூரி வந்து சேர்ந்தோம். மலைகளில் அடுக்கு மாடிக் குடியிருப்புக் கட்டடங்கள். கடைகள் நிரம்பிய சாலைகள். மேகங்கள் போர்த்திய மலைகள் கூடவே வர, சிறு தூறலும் ஆரம்பித்து விட்டது. சிறிது நேரம் அழகு மலையையும் மழையையும் ரசித்து விட்டுப் போகலாம் என்று வண்டியை நிறுத்தச் சொன்னோம். இப்பொழுது எங்கள் டிரைவருக்கு எங்களைப் பற்றிக் கொஞ்சம் புரிந்திருக்க வேண்டும். எங்காவது அழகாக மலை தெரிந்தால் போதும் நிறுத்தி விடுகிறார்கள். இவர்களை வைத்துக் கொண்டு எப்பொழுது ஊர் போய்ச் சேருவது என்று. போதாக்குறைக்கு நாங்கள் வேறு, மலை வீடுகளையும் ஊர்களையும் பார்க்க நல்ல இடமாக வந்தால் வண்டியை நிறுத்தி விடுங்கள் என்று வேறு சொல்லிவிட்டிருந்தோம். அப்படியே சாலையோரத்தில் நிறுத்தினார். மழை மேகங்கள் தவழ்ந்து மலைமுகட்டை உரசிக்கொண்டுச் சென்று கொண்டிருந்தது. லேசான வாடைக்காற்றும் குளிரும் ரம்மியமாக இருக்க, இதற்குத்தான் இந்த மலைவாசஸ்தலத்திற்கு ஓடோடி வருகிறார்களா? நதியைப் போல வளைந்து வளைந்து செல்லும் சாலைகளை மேலிருந்து பார்க்க கொள்ளை அழகு! தூரத்தில் யமுனா நதியும் பாலங்களும் என்று கொள்ளை அழகு! அங்கிருந்து சிறிது தொலைவில் ‘கெம்ப்ட்டி ஃபால்ஸ் ‘ என்றொரு அருவியைப் பார்க்க வண்டியை நிறுத்தினோம். அங்கே செல்லலாமா என்று அசோக்குமார் ஜி கேட்க, அருவிகளைத் தூர இருந்து பார்ப்பதே சுகம். இல்லையென்றால் அங்கு தங்கி இருந்திருக்க வேண்டும். அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ரசித்துக் கொண்டிருந்தோம். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல அம்சங்களுடன் அந்த இடத்தை அமைத்திருந்தார்கள். 4500 அடி உயரத்தில் மலைகள் சூழ அமைந்திருப்பது அதன் அழகை மேலும் மெருகூட்டியது. பால் பொங்கி வருவது போல் அழகான அருவி அடுக்கடுக்காக கீழிறங்கி வருகிறது. செயற்கை நீச்சல் குளங்களை வைத்து மக்களைக் கவருகிறார்கள். அங்கு விடுமுறையைக் கொண்டாடும் கூட்டம் நீச்சல் குளத்தில் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தது.

மீண்டும் வண்டியில் ஏறி மலைப்பாதையில் பயணம். ‘மலைகளின் அரசி’ மசூரி பண்டிட் ஜவஹர்லால் நேருவின் விருப்பமான ஓய்விடமாம் என்று ஈஷ்வர் சொல்ல, அங்கு வந்து தங்கி சிலநாட்கள் ஓய்வு பெற்றுச் செல்ல யாருக்குத் தான் பிடிக்காது? இரண்டு நாட்கள் தங்கி இருந்திருக்கலாமோ என்று தோணாமல் இல்லை. அத்தனை அழகையும் தன்னுள்ளே வைத்திருக்கிறது அந்தப் பிரதேசம்!

மதிய நேரம். நெடுஞ்சாலைகளை அடைத்து உட்கார்ந்து அசை போட்டுக் கொண்டிருந்த ஆட்டுமந்தையைக் கடந்து நாம் தான் கவனமாக வண்டியோட்டிச் செல்ல வேண்டும். ஏதோ மனமிறங்கி கொஞ்சூண்டு இடத்தை விட்டு வைத்திருந்தார்கள். அவர்கள் இடத்தை நாம் ஆக்கிரமித்திருக்கிறோம் என்று சொல்லாமல் சொல்கிறார்களோ என்னவோ! மனித நடமாட்டம் குறைந்த குறுகிய சாலையில் செல்லும் பொழுது கொஞ்சம் பயமும் தொற்றிக் கொள்கிறது. எதிரில் வரும் வண்டி சில நேரங்களில் மட்டுமே ஹார்ன் அடித்து தன் வருகையைச் சொல்கிறது. எங்கள் ஓட்டுநர் நன்கு அனுபவமுள்ளவர் என்பதால் கவனமாக ஒட்டிக் கொண்டிருந்தார். மலைகளிலிருந்து கீழிறங்கி முதன்முதலாக யமுனை ஆற்றைக் கடந்து செல்ல பச்சை வண்ணம் அடித்த பாலம் ஒன்றில் ‘கடகட’ சத்தத்துடன் கடந்து மழையால் துவம்சம் செய்யப்பட்ட சாலைகளில் பயணம். மலைராணி முந்தானை சரியச் சரிய, யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, சிறு நகரத்தைக் கடந்து மீண்டும் மலையில் பயணம். சுற்றிலும் பசுமை போர்த்திய மலைகள். இப்பவோ எப்பவோ என்று காத்துக் கிடக்கும் கருமேகங்கள். ‘நௌவ்கான்’ என்ற ஊரில் சாலையோரத்தில் ஒரே ஒரு தேநீர்க்கடையை அம்மா, அப்பா, மகன் என்று மூவர் நிர்வகிக்கிறார்கள். அவர்கள் சொல்வது தான் விலை. சாப்பாடும் தயார் செய்து தருகிறார்கள். அப்பா டீ போட, அம்மா சமையலையும் மகன் கடைக்கு வருபவர்களையும் கவனித்துக் கொண்டிருந்தார். வட இந்தியாவில் பாக்கெட்டுகளில் அடைத்த நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடுகிறார்கள். எல்லா கடைகளிலும் வகைவகையாக வறுத்த பயறுகள், அப்பளங்கள் இருக்கிறது. கூடவே பான்பராக் இத்யாதிகள்! அத்தனையும் காற்றடைத்த வண்ண வண்ண மக்காத பாக்கெட்டுகளில்! இதனால் தான் கூட்டம் கூடும் இடங்களில் குப்பைகள் சேருகிறது. சாப்பிட்டு முடித்து அங்கேயே குப்பையைப் போட்டு விட்டு நகருகிறார்கள். அதைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வருத்தமான விஷயம்.

அங்கிருந்த நிழற்குடையின் கீழ் இருவர் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த சப்பாத்தியைச் சப்ஜியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் தங்கள் பயணிகளுடன் சார்த்தாம் சென்று கொண்டிருக்கும் வண்டியோட்டிகள். அதில் ஒருவர் நல்ல ஆங்கிலத்தில் பேசினார். பெருமழையின் காரணமாக இரண்டு நாட்களாக அந்தப் பகுதியில் யாரும் பயணிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இன்று தான் மீண்டும் அனுமதித்திருக்கிறார்கள் என்று குண்டு போட்டார். ஆகா! இதையெல்லாம் நாங்கள் சுத்தமாக எதிர்பார்க்கவில்லையே! நல்லவேளை! தப்பித்தோம் என்றிருந்தது. தேநீர்க்கடையின் பக்கவாட்டில் ஒரு பாதை தெரிந்தது. அதில் இறங்கி தூரத்தில் தெரிந்த பாலத்தைக் கடந்தால் எதிரில் தெரிந்த சிறிய கிராமத்திற்குச் செல்லலாம். தாத்தா,மகன், பேரன் என்று மூன்று தலைமுறை இறங்கிச் சென்றார்கள். அவர்களே தட்டுத் தடுமாறி இறங்குவதைப் பார்த்தால் பயமாகத் தான் இருந்தது. மழையின் ஈரத்தில் வழுக்கியது போல. எதிரே தெரிந்த சிறிய கிராமத்தில் மொத்தமே 100 பேர் தான் இருப்பார்கள். படிகள் போன்ற அமைப்பில் பெரும்பாலும் பாசுமதி அரிசி, சில காய்கறிகள் விவசாயம் செய்வார்கள் என்று கூறினார் ஆங்கிலமும் பேசும் அந்த டிரைவர் ஜி. ஈஷ்வருக்கும் இறங்கி அந்த மலைக்கிராமத்திற்குச் சென்று வர ஆசை. ஆனால் நேரமாகி விடும். எளிதாக இறங்கி விடலாம். ஏறுவதற்குள் தாவு தீர்ந்து விடும் என்று சமாளித்தேன். மறுகரையில் வாழும் மலைவாழ் மக்கள் பேருந்தில் செல்லவோ வேறு நகரங்களுக்குச் செல்லவோ மலையிலிருந்து இறங்கி ஆற்றுப்பாலத்தைக் கடந்து மலையேறி இங்கே வர வேண்டும். கடுமையான வாழ்க்கை தான்! அங்கு பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை வசதிகள் இருக்குமா என்பதும் கேள்விக்குறி தான். இயற்கையை நம்பி வாழும் மனிதர்கள்! தீவிரமாக யோசித்தால் நாமெல்லாம் அவர்கள் படும் துன்பத்தில் ஒரு சதவிகிதம் கூட அனுபவித்திருக்க மாட்டோம். ஆனாலும் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழும் அவர்களைப் போல நம்மால் இருக்க முடிவதில்லை என்பதை நினைத்து வெட்கமாக இருந்தது.

தேநீர் சொல்லிவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். பொதுவாகவே பயணங்களில் நடுநடுவே நாம் காணும் இடங்கள், சந்திக்கும் மனிதர்கள் தான் பயணத்தைச் சுவாரசியமாக்கும் காரணிகளாக இருப்பார்கள். அப்படித்தான் அந்த வண்டியோட்டியுடன் பேசிக் கொண்டிருந்த போது தோன்றியது. அவர்கள் சாப்பிட்டு முடித்து எங்கள் பயணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்து விட்டுச் சென்றார்கள். அதற்குள் சூடான ‘மசாலா சாய்’ தயாராகி விட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மண்ணை அடித்துச் செல்லும் நிறம் மாறிய யமுனை ஆறு, மரங்கள் சூழ்ந்த இமயமலை, ஈரச் சாலைகள், சூடான இனிப்பு டீ. அதுவே சொர்க்கமாக இருந்தது. ஈஷ்வருக்கு அந்த இடத்தை விட்டுச் செல்ல மனமே இல்லை. எனக்கோ அடுத்து என்ன என்று பார்க்க ஆவல். கிளம்பினோம்.

மழைத்தூறல் மீண்டும் ஆரம்பித்து விட்டது. ‘தடக்குபுடக்கு’ என்று வண்டி குலுங்கிக்குலுங்கிச் சென்று பாலத்தைக் கடந்து ‘லக்கமண்டல்’ என்றொரு இடத்தில் ஒரு குகையின் முன்னால் நின்றது. இருண்ட குகைக்குள் நுழைந்தால் ஒரு தவசி அங்கே பூஜைகள் செய்து கொண்டிருந்தார். அவரைக் கடந்து உள்ளே சென்றால் குகை சிறுத்துக் கொண்டே சென்று ஒருவர் தவழ்ந்து செல்லும் அளவுக்கு மாறி விட்டது. மக்கள் உள்ளே சென்று பார்க்க ஏதுவாக படிகளைக் கட்டி இருக்கிறார்கள்.எனக்கு குறுகிய இடங்களைக் கண்டால் மூச்சடைப்பது போலத் தோன்றும். அதனால் சிறிது தூரம் உள்ளே சென்று நான் நின்று விட்டேன். ஈஷ்வர் இன்னும் கொஞ்சம் தூரம் வரை சென்று வந்தார். மகாபாரதத்தில் துரியோதனனின் சூழ்ச்சியால் மாளிகையிலிருந்து தப்பிக்கப் பாண்டவர்கள் பயன்படுத்திய குகை இது என்றார் உடலெங்கும் விபூதி பூசிக்கொண்டிருந்த தவசி. சிவலிங்கம், சக்தி என்று அவருடைய சிறு பூஜையறை. மனிதர் தெய்வீகமாக இருந்தார். வேள்விகள் செய்பவர் போல. சூடு கூட ஆறாமல் இருந்தது யாக குண்டம். அவருக்குத் துணையாகச் சாதுப் பூனை ஒன்று. அதுவும் சைவமாம்! இந்தக் குளிரில் எப்படி இந்தக் குகைக்குள் வாழ்கிறாரோ என்று ஆச்சரியப்படுத்தினார் சாது! அமைதியாக அழகாக நிதானமாக அவர் ஹிந்தியில் பேசியதும் புரிந்தது. ‘பில்லி’ என்ற அந்தப் பூனை ஈஷ்வரின் மடியில் சுருட்டிக் கொண்டு படுத்து விட்டது. அழகு. தவசியிடமிருந்து விடைபெற்று சில நிமிட பயணத்திற்குப் பின் அமைதியான மலைக்கிராமத்தில் வண்டிகள் நிறுத்துமிடத்தில் எங்களை இறக்கி விட்டு, “இப்படியே மேலே சென்றால் அழகான கோவில் இருக்கிறது. பார்த்து விட்டு வாருங்கள்” என்றார் அசோக்குமார் ஜி. மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. மேலே சிறு கோவில் இருப்பது தெரிந்தது. படியேறி மேலே சென்றால் தான் முழுவதும் தெரியும் போல என்று நாங்களும் படிகளின் வழியே மேலே ஏறினோம். அழகான நடைபாதை. வழியில் குடியிருப்புகளைத் தாண்டிச் சென்றால் கோவில். வீடுகளின் கூரைகள் சிலேட்டினால் செய்யப்பட்டிருந்தது. அங்கு கிடைக்கும் பொருட்களை வைத்தே வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள். நடுநடுவே தெருக்களும் கடைகளும் என்று மிகச்சிறிய ஊர். இங்கு வாழும் மக்கள் என்ன வேலை செய்வார்கள்? எப்படிப்பட்டது இவர்களது வாழ்க்கை? வயதானவர்கள் எப்படி இங்கு வசிக்கிறார்கள். ஏறுவதற்குள் மூச்சு வாங்குகிறதே என்று யோசித்துக் கொண்டே கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்தோம். கோவில் மணி ஓசை கேட்க, கற்படிகளில் ஏறி மேலே சென்றால் அழகான கோவில். அங்கிருந்து முழு ஊரையும் பார்க்க முடிகிறது. சிறு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிறிய வீடுகளில் முகம் மலர பெண்கள் வளைய வந்து கொண்டிருந்தார்கள். மலையின் அழகு பன்மடங்காகப் பெருகி கண்ணுக்குள் நிறைந்த அனுபவத்தை வார்த்தையில் விவரிக்க இயலவில்லை.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இந்தக் கோவிலின் உள்ளே சுயம்புவாக சிவலிங்கம் இருக்கிறது என்று அங்கிருந்த பூசாரி கூறி பூஜைகள் செய்தார். கோவிலைச் சுற்றி நூற்றுக்கணக்கில் சிவலிங்கங்கள். பலதும் சிதைந்த நிலையிலிருந்தது. இஸ்லாமிய படையெடுப்புகளால் பாதிக்கப்பட்ட அந்தக் கோவிலை தொல்லியல்துறையின் கீழ் நிர்மாணித்து மிகவும் சுத்தமாகப் பாதுகாத்து வருகிறார்கள். தமிழகத்தில் இருக்கும் பிரபலமான பெரிய கோவில்களைப் பேசாமல் இவர்களிடமே கொடுத்து விடலாம். தஞ்சைக் கோவிலைப் போல நன்றாகப் பராமரிப்பார்கள்.

கிரானைட் கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்த கோவில் கோபுரமே அத்தனை அழகாக சிறுவயதில் தூர்தர்ஷனில் பார்த்த சில கோவில்களை நினைவூட்டியது. இந்தக் கோவிலில் பஞ்ச பாண்டவர்கள் சிவனை வழிபட்டதாக ஐதீகம். தருமன் வழிபட்ட மிகப்பெரிய சிவலிங்கம் பார்ப்பவர் முகத்தைப் பிரதிபலிக்கும் என்றார்கள். வேலி அமைந்திருந்ததால் அருகில் சென்று பார்க்க முடியவில்லை. சிறப்பு நாட்களில் உள்ளூர் மக்களால் பூஜைகள் செய்யப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. பாண்டவர்களும் தாய் குந்திதேவியும் பயன்படுத்திய குகையும் அருகிலேயே இருக்கிறது. மழைநீரால் சிவலிங்கங்களை அபிஷேகம் செய்து கொண்டிருந்தார் வருணபகவான். கோவிலின் பின்னே வானுயர இமயமலை. வீடுகளும் மாடங்கள் வைத்து அழகாக! அங்கிருந்த நேரம் முழுவதும் வேறொரு உலகத்தில் இருப்பதைப் போல் இருந்தது எங்களுக்கு. அங்கிருந்த ஒருவர் கனிவாகப் பேசி கோவிலைச் சுற்றிக் காட்டினார். ஹிந்தியில் மட்டுமே பேசுகிறார்கள்! நாங்கள் அங்கு இருந்த பொழுது வட இந்தியக் குடும்பம் ஒன்றும் வந்து பூஜைகள் செய்தார்கள். அங்கிருந்த மக்களின் முகத்திலிருந்த அமைதி நிச்சயம் நகரத்தில் வாழும் மக்களிடம் காண்பது அரிது. கைகளில் ஃபோன்கள் இல்லாமல் ஓடியாடி விளையாடும் குழந்தைகளைப் பார்க்கச் சிறுவயது ஞாபகம் நிழலாடியது. ஹ்ம்ம்ம்! மழையில் நனையும் அனைத்தும் அழகு. மீண்டுமொருமுறை அங்கே நிரூபணமாகிக் கொண்டிருந்தது. மனக்காயங்களுக்கு மயிலிறகால் மருந்தைத் தடவி விட்டுக் கொண்டிருந்தது அந்த இயற்கைச்சூழல். இத்தனை அழகான உலகத்தைக் காணவே இந்தப் பயணத்தை மேற்கொண்டதில் அந்த வாய்ப்பை ஏற்படுத்தி சிறுவயதுக் கனவை நிறைவேற்றிய ஈஸ்வரனுக்கு நன்றி கூறி அங்கிருந்து கிளம்பினோம்.

வருணன் சிறிது இளைப்பாற, மலைகளில் விவசாயம் செய்திருந்த நிலங்களைப் பார்த்துக் கொண்டே எங்கள் பயணம் தொடர்ந்தது. மீண்டும் தூறல். மாலை நேரம். குதிரைகளும் கோவேறு கழுதைகளும் பொதி மூட்டைகளைச் சுமந்து வீடு திரும்பிக் கொண்டிருக்க அடாது மழையிலும் விடாது தொடர்ந்தது எங்கள் பயணம். ஒரு பக்கம் மலை. மறுபக்கம் சமவெளியில் பாய்ந்து செல்லும் யமுனை நதி. நாங்கள் தங்கவிருக்கும் இடம் “ஹோட்டல் கேம்ப் நிர்வாணா” என்று தான் எங்கள் பயண முகவர் முதலில் கூறியிருந்தார். நேரே அங்குச் சென்றால் அப்படி யாரும் இங்குப் பதிவு செய்யவில்லையே என்று கூற, எங்கள் முகவரைக் கூப்பிட்டுக் காய்ச்சு எடுத்தால், அதற்குப் பக்கத்தில் இருக்கும் கேம்ப் ஒன்றில் பதிவு செய்து அதை ஈஷ்வரிடமும் கூறியிருக்கிறார். வழக்கம் போல் ஈஷ்வரும் மறந்து விட்டிருந்தார். கடைசி நேரத்தில் நாங்கள் ஒப்புதல் அளித்ததால் நேரமின்மையைக் காரணம் காட்டி அம்மையார் வேறு எங்கோ அனுப்பி விட்டார். செம கோபம் எனக்கு! மாறி மாறி எங்களுடைய அதிருப்தியைத் தெரிவித்தோம். அவரும் பலமுறை மன்னிப்புக் கேட்டு இதுவும் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் கேட்டுக் கொண்டது போல நதியோரம் மலைகள் சூழ்ந்ததொரு சூழலில் தான் இருக்கிறது. அடுத்து வரும் நாட்களில் தங்கப்போகும் இடங்கள் எல்லாம் பெரிய பெரிய விடுதிகளில் தான். இங்கு நல்ல கூட்டம் எங்கும் இடம் கிடைக்கவில்லை என்றார். அதுவும் உண்மை தான். நாங்களும் அதைக் கண்டோம். அதனால் அவரை மட்டுமே குற்றம் சொல்லவும் முடியாது. ஆனால் டிரைவருக்கோ பயங்கர கோபம்.

பயண முகவர் சொன்ன இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அதைத் தாண்டித் தான் சென்றிருக்கிறோம். பலகையோ பெயரோ எங்குமே இல்லை. உள்ளே சென்றால் சாலையும் இல்லை. கல்லும் மணலும் மழை சகதியுமாய் இருக்கவே டிரைவர் கடுப்பாகிக் கொண்டிருந்தார். எனக்கா, இங்கு மனிதர்களையே காணலை. இங்கே எப்படித் தங்கப் போகிறோம் என்று தேடினால் 45 டிகிரி கோணத்தில் ஒரு பாதை இறங்க, அங்கிருந்து ஒரு தாத்தா இந்த இடம் தான் என்று கையசைத்து வண்டியைக் கீழே இறக்கச் சொன்னார். நான் பயந்து போய் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தேன். வண்டியைத் திருப்பக் கூட இடம் இல்லை. ஆனால் ‘அசால்ட் அண்ணாத்தே’ எங்கள் டிரைவர் எப்படியோ கீழே வண்டியைக் கொண்டு சென்று இறக்கி விட்டார். அந்த தாத்தா பெட்டிகளை நான் எடுத்து வருகிறேன் நீங்கள் செல்லுங்கள் என்று சொல்லவும், “உங்களை நன்றாக ஏமாற்றி விட்டார்கள். இந்த இடத்திற்கு இதுவரையில் நான் வந்ததே இல்லை.” என்று கடுப்பேற்றினார் அசோக்குமார் ஜி. மழையில் ஒட்டிய களைப்பிலிருந்த டிரைவர் எங்களை விட படு கோபமாக இருந்தார். அதை எங்களிடமும் காண்பிக்க, மீண்டும் முகவரை அழைத்து இந்த சடையனுக்கா இத்தனை பணம் செலவழித்து இங்கே வந்திருக்கிறோம்? பேசவும் முடியவில்லை. சொன்னாலும் புரிவதில்லை. நாளைய நிகழ்ச்சியை இன்றே அவருக்குத் தெளிவுபடுத்தி விடுங்கள் என்று நாங்கள் கூறவும் அந்தப் பெண்மணியும் எங்களுக்குச் சமாதானம் கூறி ஓய்வெடுக்கச் சொன்னார்.

1030 அடி கடல்மட்டத்திலிருந்த ஹரித்வாரில் இருந்து தொடங்கிய பயணம் 2100 அடி உயரத்திலிருந்த டேராடூன் வழியாக 6500 அடிக்கும் மேலான மசூரி மலைகள் வழியே பயணித்து 1300 அடி மட்டத்தில் லக்கமண்டல் வழியே கீழிறங்கி மீண்டும் 3000 அடிமட்டத்தில் இருக்கும் பர்கோட் வழியாக கேம்ப் வந்து சேரும் பொழுது மணி ஐந்தாகி விட்டிருந்தது. இது எந்த மாதிரி இடமென்றே தெரியவில்லையே? எங்களுக்கும் கலக்கமாக இருந்தது. அந்த தாத்தாவைத் தவிர ஒரு நாயும் வேறொரு மனிதரும் இருந்தனர். வேகமாக வந்து அறைக்கதவைத் திறந்து பெட்டிகளை உள்ளே வைத்தார் தாத்தா. புதிய இடத்தில மொழி தெரியாத ஊரில் புது மனிதர்களுடன் இருக்கும் பொழுது பயம் வரத்தானே செய்கிறது. ஒதுக்கப்பட்ட அறையின் மேலே கூடாரம் போட்டிருந்தார்கள். இதற்குப் பெயர் ‘கிளாம்ப்பிங்’ என்கிறார்கள். கேம்பிங் மாதிரி ஆனால் அடிப்படை வசதிகளுடன் வினோதமாக இருந்தது. தாத்தா சூடாக அருமையான டீ கொண்டு வந்து கொடுத்து இரவு 7.30 மணிக்கு டின்னர் சாப்பிடலாம். “அறைக்கு எடுத்து வரவா?” என்று கேட்டார். “இல்லை அங்கு வந்து சாப்பிடுகிறோம். சாய் பஹுத் அச்சா ஹை” என்று கூறியவுடன் சிரித்துக் கொண்டே சென்று விட்டார்.

அறையின் வாசலிலிருந்த இருக்கையில் அமர்ந்து சூடான மசாலா சாய் குடிக்க, எதிரே உயர்ந்த மலை. சமவெளியில் யமுனா நதி. வானில் கருமேகங்கள் என்று ரம்மியமாக இருந்தது சூழல். காலையிலிருந்து பயணித்த களைப்பெல்லாம் ஓடியே போய் விட்டது. அறையிலிருந்து இருபத்தைந்து அடியில் யமுனா துள்ளிக் குதித்துப் பேரிரைச்சலோடு ஓடிக்கொண்டிருந்தாள். வாவ்! அந்தக்கணமே எங்களுக்கு அந்த இடத்தைப் பற்றின பயம் நீங்கி விட்டது. இருவரும் கரையோரம் நடந்து செல்ல, இத்தனை நெருக்கத்தில் வெள்ளப் பெருக்கெடுத்தோடும் ஆற்றை இதுவரையில் இந்தியாவில் பார்த்ததில்லை. அடிவயிற்றில் பயம். கரணம் தப்பினால் மரணம் தான். அத்தனை நெருக்கத்தில் கரையின் மேல் நடந்து கொண்டிருந்தோம். எதிரே மலையின் மீது சாலையில் வண்டிகள் செல்வதும் தூரத்தில் இருக்கும் கிராமம் ஒன்றும் தான் அப்போதைக்கான துணையாக இருந்தது. அப்படியே வாசலிலே உட்கார்ந்திருந்தோம்.

அங்கிருந்த நாய் புதிதாக வந்திருப்பவர்களை மோப்பம் பிடிக்க சிநேகத்துடன் வளைய வந்து ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. பசிக்கவே சில பழங்களைச் சாப்பிட்டேன். மெல்ல இருள் கவிழ, பூச்சிகளின் ரீங்காரம் தெளிவாகக் கேட்டது. ஏழரை மணி நெருங்கியதும் தாத்தா இரவு உணவுக்கு அழைக்க, வெறும் தயிரும் சப்ஜியும் மட்டும் சாப்பிடலாம் என்று போன என்னைச் சாப்பிடு சாப்பிடு என்று சப்பாத்தியை வைத்து விட்டார். அருமையான சுவையான மிருதுவான சப்பாத்தி. எப்படித்தான் இந்த வட இந்தியர்களுக்கு மட்டும் இந்த கைப்பக்குவம் வருமோ? தால் மக்கனி, பன்னீர் கிரேவி, சாலட் என்று அமர்க்களப்படுத்தி இருந்தார் தாத்தா. அந்த இடத்தைப் பார்த்தால் இந்த வருடம் தான் புதிதாக திறந்த இடம் போலிருந்தது. இனிமேல் தான் சமையல், சாப்பிடும் அறைகளைப் புதுப்பிப்பார்கள் என்று நினைக்கிறேன். தண்ணீர் கேட்டவுடன் பாட்டில் பாட்டில்களாகக் கொண்டு வந்து கொடுத்தார்.

அடுத்த நாள் யமுனோத்ரி பயணம். அதிகாலையில் ஆறு மணிக்குக் கிளம்பினால் தான் போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்க முடியும் என்று சொல்லிவிட்டார் அசோக்குமார் ஜி. காலை ஐந்து மணிக்குச் சுடுநீரும் ஆறு மணிக்கு உணவையும் தயாரித்துக் கொடுத்து விடச் சொல்லி விட்டு அறைக்குத் திரும்பினோம். குழந்தைகளுக்கு அங்கு எடுத்த படங்களையும் காணொளிகளையும் அனுப்பி விட்டு உண்ட மயக்கத்தில் நன்றாகத் தூங்கி விட்டோம்.

Series Navigation<< தினந்தோறும் சித்திரைத் திருவிழா: ஹரித்வார்யமுனோத்ரி >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.