பணம் பணம்… (2)

முதல் பகுதி

‘பூமாதேவி’யின் உலகில் இருந்து வெளியே வந்த அனிகாவுக்கு உள்ளூர வருத்தம். இறுதிக் கட்டுரையின் கடைசியில் வந்த ஒரு வாக்கியம் மனதில் திரும்பத்திரும்ப ஒலித்தது: பணம் இல்லாமல் சுத்தமான குடிநீர் கூட இக்காலத்தில் கிடைக்காது.

சில காலத்துக்கு முன், பணம் நிஜம் அதுவே பிரதானம் என்கிற மாளிகையில் இருந்து, உடல் உழைப்பு இல்லாத சௌகரியமான வாழ்க்கை முறை கணப்பொழுதில் காணாமல் போகலாம் என்பதை உணர்ந்து மனு மண் குடிசைக்கு வந்தான். இப்போது பழைய உலகம் அவனைத் திரும்ப அழைக்கிறது. அவன் அனிகாவைத் தேடிவந்தது ‘ஜிஎம்பிகே’யில் சேருவதா வேண்டாமா என்று ஆலோசனை கேட்பதற்காக அல்ல. ‘உன்னைப்போல இப்போதைய இக்கட்டான நிலையின் முழுப்பரிமாணங்களையும் புரிந்துகொண்ட அறிவாளிகள் ஒரு சிலர் தான். நீ தான் மற்றவர்களுக்கு வழி காட்ட வேண்டும். நீயும் எல்லாரையும் போல ஐன் ரான்டின் ராஜ்ஜியத்தைத் தேடிப் போனால் எங்களைப் போன்றவர்கள் கதி என்னாவது?’ என்று அவனைத் திருத்த அவள் அவன் சிநேகிதியோ உறவினளோ இல்லை. மனுவின் நலன் தான் முக்கியம். அவளுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கிடையாது.

மனு திரும்பி வருவதைப் பார்த்து முகத்தில் ஆதரவான புன்னகையைத் தவழவிட்டாள். அவன் அமர்ந்து மன்னிப்பு கேட்பதற்குமுன்,

“நீ ‘ஜிஎம்பிகே’யின் அழைப்பை ஏற்றுக்கொண்டு விட்டாய் என நினைக்கிறேன்.”

“ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டாகிவிட்டது. அதற்கே இருபதாயிரம் டாலர் போனஸ். ஐயாயிரம் வார்த்தைகள் கொண்ட புத்தக அத்தியாயத்திற்கு அதில் பாதி தான் கிடைத்தது.”

அதைக் கேட்டு அனிகா எவ்வித உணர்ச்சியையும் வெளிக்காட்டவில்லை. ஆனாலும்,

“உனக்கு நான் செய்தது அதிர்ச்சியாக இருக்கும். என் நிலையில் உன்னை வைத்துப்பார்! இதுபோன்ற இன்னொரு வாய்ப்பு எப்போது என்னைத் தேடிவரும் என்று தெரியாது. இனிமேல் என் கல்லூரி நண்பர்களுடன், இல்லை கசின்களுடன் உணவு விடுதிகளுக்குப் போனால் அவர்கள், ‘நீ பணம் தராதே!’ என்று என்மேல் இரக்கம் காட்ட வேண்டாம்.”

“உன் காலணியில் இரண்டு திங்கள் நடக்காமல் உன் தீர்மானத்தை நான் எப்படி குறை சொல்ல முடியும்?” என்று உரையாடலின் இறுக்கத்தைக் குறைத்தாள். “எப்போதில் இருந்து புதிய பொறுப்பு?”

“புது வருஷம். ஜனவரி மூன்றாம் தேதிக்குப் பிறகு.”

இன்னும் ஏழெட்டு வாரங்கள்.

முன்பு இளமையின் ஆதரிசத்தில் காய்யானிசத்தால் கவரப்பட்டு, இப்போது மனைவி குடும்பம் என்ற எதிர்பார்ப்புகளில் பண உலகத்துக்குத் திரும்பிப் போக விருப்பம் வந்திருக்கும் என்று வைத்துக்கொண்டால்… மனுவின் இப்போதைய மனமாற்றம் நிரந்தரமா? ஒருவேளை அவன் ‘ஜிஎம்பிகே’யின் வட்டத்துக்குள் நுழைந்ததும் அது கானல்நீர் என உணர்ந்து மறுபடி மனம் மாறி பூமாதேவியின் நிழலுக்குத் திரும்பி வந்தால்… அவன் எழுத்துக்கு மதிப்பு இருக்காது. அதனால் அவள்,

“தொலைக்காட்சியில் தொலைவழியாக உன் முகத்தைக் காட்டும்போது ஒண்டுக்குடித்தனம் ஒத்து வராது. பின்னணியில் அலமாரி நிறைய புத்தகங்கள், அலங்கார பொம்மைகள், உலகப்படம்.”

“இங்கேயே புது தனி இல்லம் போவதாக இருக்கிறேன்.”

“அதைச் செய்வாய் என்று தெரியும். வேறொரு ஊருக்கு மாறுவது இன்னும் நல்லது என்று நினைக்கிறேன்.”

அது அவசியமா என்று யோசித்தான்.

“நீ அப்படிப் போகும்போது பழைய சாமான்களுடன் காய்யானிச உலக நோக்கையும் இங்கேயே கழித்துக்கட்டிவிடு! புது ஊரில் புதுப் பாதையில் புது நண்பர்கள், புது மனு.”

“அட்லான்ட்டா… ம்ம் கும்பல் அதிகம். டெக்ஸஸ், ஃப்ளாரிடா குறுகிய நோக்கு அரசியல்வாதிகள். தென் கலிஃபோர்னியா…”

“விலைவாசி அதிகம்.”

“பரவாயில்லை. இப்போது என்னிடம் பணம் இருக்கிறது” என்று கர்வத்துடன் சொன்னான்.

4

கையெழுத்திட ஜிஎம்பிகே கொடுத்த பணத்தில், பழைய கூட்டுக்குடித்தனத்தின் கணக்கைத் தீர்க்கவும் சான் டியாகோவில் தாற்காலிக இடத்தைப் பிடிக்கவும், எட்டாயிரம் செலவழிந்துவிட்டது. ‘டோர்டேஷ்’ வழியாக பீட்ஸாவோ தாலித்தட்டோ தருவிக்க இன்னும் நேரம் வரவில்லை. ஜனவரியில் வேலை ஆரம்பித்து சம்பளம் கைக்கு வரும்வரை பழைய சிக்கனம்.

ஜிம்போ மற்றும் இரண்டு சிறப்பங்காடிகளில் வாடாத பச்சைக் காய்கள் வாங்கிவந்து சமைத்தான். ரொட்டி – அதற்குத் தொட்டுக்கொள்ள கேரட், ஸுக்கினி, சாயோட் கலந்த கூட்டு, முட்டை கோஸ்-காலி ஃப்ளவர் வதக்கல், இல்லை கத்தரிக்காய் பொடிக்கறி. மாலையில் ப்ராக்கோலி இல்லை பீன்ஸ் கறியுடன் தக்காளி ரசம். அலுப்பு தட்டாமல் இருக்க ஒரு தடவை உருளைக்கிழங்கு வறுவல்.

அந்தக் குடியிருப்பில் ஒரு சின்ன உடற்பயிற்சி அறை. புதிய எழுத்தை யோசிக்க அங்கே ஒற்றைச்கக்கர சைக்கிளில் மூன்று கிலோமீட்டர்.

முதல் நாள் பார்த்தது தான். பிறகு அனுஷ் நடைவழியில் தென்படவில்லை. அவனுக்கு அது ஏமாற்றமாக இல்லை. ஒரு நாள் பரிச்சயம்.

முதலில் ஒரு சௌகரியமான இல்லம் தேட வேண்டும். தற்போதைய இடம் தாற்காலிகம் என்பதுடன் அவன் தேவைக்கு சிறியது. அவன் தொழிலுக்கு எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம். ஆனால் ‘ஹார்மொனி’யிலோ ‘ஃப்ளவர்-ஆர்ரோ’விலோ சந்திக்கும் பெண்களை அவனால் விலையுயர்ந்த விடுதிக்கும் திரைப்படத்துக்கும் அழைத்துப்போக முடியும். அவர்களில் ஒருத்திக்கு அவன்மேல் ஆர்வமும் நம்பிக்கையும் பிறக்கும். அதனால் ஊரின் எல்லைக்கு உள்ளேயே.

அப்படியொரு இடம் அகப்பட்டது. கலிஃபோர்னியா பல்கலையை ஒட்டி ஒரு கோபுரக் குடியிருப்பில். இரு படுக்கையறை அபார்ட்மென்ட். மாதம் மூவாயிரம் டாலர். ஒரு மாதத்தில் காலியாகப் போகிறது. மேனேஜரை அழைத்தான்.

“இடத்தை எப்போது நான் பார்வையிடலாம்?”

“அதன் முப்பரிமாணப் படங்களை அனுப்புகிறேன்.”

“ஏன்?”

“தற்போது வசிப்பவர்கள் வெளிநாடு போயிருக்கிறார்கள். அவர்கள் அனுமதி இல்லாமல் நுழைவது சரியில்லை.”

“சரி, அனுப்பு!”

படங்களில் தன்னை வைத்துப் பார்த்து,

“புது ஆண்டில் இருந்து நான் எடுத்துக்கொள்கிறேன்.”

“திரும்பப்பெற முடியாத முன் பணம் ஆயிரம் டாலர்.”

“இப்போதே.”

அடுத்தது, ஒரு நிபுணருக்கான தோரணை. அதைக் கொண்டுவர சிஎன்பிசி, ப்ளும்பெர்க் சான்னல்களைக் கவனமாகப் பார்த்தான். முக்கியமாக தன்னம்பிக்கை. தான் சொல்வதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை என்று அடித்துச்சொல்லும் மேதாவித்தனம். பெட்ரோலியத்தின் இறைப்பு ஒருவேளை உச்சத்தைத் தாண்டி இருக்கலாம் என்கிற அறிவியலாளர்களின் ஜாக்கிரதை மொழி உதவாது. ஒன்று போனால் இன்னொன்று. எரிசக்தியின் வீழ்ச்சியை இன்னும் இருநூறு ஆண்டுகளுக்கு யோசிக்கக்கூட வேண்டாம் என்று துணிந்து சொல்ல வேண்டும்.

ஜிஎம்பிகே தளத்தில் வெளியிட கட்டுரைகள்…

முதலாவது, தேவை குடும்பத்துக்கு மூன்று குழந்தைகள். கிட்டத்தட்ட எல்லா தொலைக்காட்சித் தொடர்களில், அவற்றின் இடையே வரும் விளம்பரங்களில் காட்டப்படும் குடும்பங்களின் இலக்கணம் மூன்று குழந்தைகள். அப்போதும் மக்கள்தொகைப் பெருகும் என்பதை உணராத பாமர மனிதர்களின் அறியாமையைக் குறை சொல்லி பூமாதேவி தளத்தில் ஒரு கட்டுரை எழுதி இருந்தான்.

இப்போது அதே பல்லவி, வேறு ராகம்.

ஜெர்மெனி, கொரியா, ஜப்பான் நாடுகளில் மக்களின் எண்ணிக்கை குறைந்து பொருளாதாரத்தைப் பாதிக்கிறது என்பதில் ஆரம்பித்து, சீனாவின் ‘ஒரு குடும்பம் ஒரு குழந்தை’ கொள்கையின் தோல்வியைப் பெரிதுபடுத்தி, முதியவர்களின் பொருளாதார மற்றும் உடலுதவித் தேவைகளுக்கு இளையவர்கள் அவசியம் என்பதில் முடித்தான்.

அடுத்தது, முடிவற்ற அறிவு சார்ந்த பொருளாதார வளர்ச்சி.

தகவல் தொழில்நுட்பத்துக்கு கரியும் இரும்பும் அவசியம் இல்லை. அதற்குத் தேவை மனிதனின் கற்பனைத்திறன். ‘அறிவை விட கற்பனை முக்கியம்’ என்று ஐன்ஸ்டைன் சொன்னதும் அதற்காகத்தான்.

ஒரு வாரம் முடிந்தபோது வித்தியாசம் தெரிகிறதா என்று கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டான். கோவிட்டிற்கு முன்பே பணத்தை மிச்சம்பிடிக்க கூட்டுக் குடியிருப்பில் ஒருவருக்கொருவர் தலைமயிர் வெட்டுவது வழக்கம். ஜிஎம்பிகே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும் ஒரு உயர் மட்ட முடித்திருத்தகம் அவனை அழைத்தது. இப்போது அவனுக்கு, ‘வெள்ளை ஆண்கள் உலகின் நம்பிக்கையான பிரதிநிதி, இவனை நம்பலாம்’ என்கிற தோற்றம்.

அவனுக்கு முன் அங்கே குடியிருந்தவர்கள் சுவரில் ஒட்டியிருந்த பாராட்டுக் குறிப்புகளில் ஒன்று: கடற்கரை நடக்கும் தூரத்தில் தான். அதை நிரூபிக்க ஒருநாள் அதிகாலையில் எழுந்தான். சூரியவொளி மாடிக்கட்டடங்களின் ஜன்னல்களில் பரவியபோதே ஐந்து நெடுஞ்சாலையைத் தாண்டினான். நடையின் முடிவில் கான்க்ரீட் தரையில் இருந்து இறங்கி ஈரமான மணலில் பறவைகளையும் சாம்பல் நிறக் கடல் பரப்பையும் பார்த்தபடி அலைந்தான். வீட்டை நோக்கி நடந்தபோது பாதையின் ஏற்றமும், வடிகட்டாத சூரியனின் கதிர்களும் கொடுத்த சிரமத்தை மறக்க முடியப்போகும் வருஷத்தைத் திரும்பிப் பார்த்தான். கோவிட் வைரஸின் ஆக்கிரமிப்பு, பங்குச்சந்தையில் எண்களின் பிரமிக்க வைக்கும் ஏற்றம், சூட்டினால் தீப்பிடித்த காடுகள். எல்லாவற்றையும் விட அவன் சொந்த வாழ்வில் ஒரு மகா திருப்பம். புத்தாண்டில் இருந்து புதிய வளமான மனு. பழையதில் இன்னும் மூன்று வாரங்கள் தான்.

கட்டடத்தின் மாடிப்படியில் ஏறியபோது அனுஷ் தொட்டிகளில் இருந்து எல்லா தாவரக்குப்பைகளையும் அகற்றிக் கூடையில் சேர்த்துக்கொண்டு இருந்தாள். தலையில் கட்டிய துண்டும் நீல ஜீன்ஸும் விவசாயப் பெண்ணின் தோற்றத்தைக் கொடுத்தன.

“ஹாய் அனுஷ்!”

நிமிர்ந்து அவனை ஏறிட்டுப்பார்த்தாள்.

“ஹாய் மனு! களைத்துப்போய் வருகிறாயே.”

“கடற்கரை வரை நடந்துவிட்டு வருகிறேன்.”

“நான் அதை இரண்டு மூன்று தடவை செய்திருக்கிறேன். உடல் நல்ல ஆரோக்கிய நிலையில் இருக்கிறதா என்பதற்கு ஒரு சோதனை.”

“உதவி வேண்டுமா?”

அவன் உபசார வார்த்தையை மதித்து,

“இந்த பிளாஸ்டிக் கூடைகள் கீழே போக வேண்டும்” என்றாள்.

ஆளுக்கு இரண்டாக அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட கார் நிறுத்தும் இடத்திற்குத் தூக்கிச்சென்றார்கள். அங்கே ஏற்கனவே பல தொட்டிகளில் தாவரக் குப்பைகள்.

“மக்க வைப்பதற்கு இவற்றை ‘சிடி க்ரீனரி’ எடுத்துப்போவார்கள்.”

திரும்பிவந்த போது,

“வரும் நாட்களில் எனக்கு வேலை அதிகம் இராது. நடப்பது உனக்குப் பிடித்தால் நாம் அதைச் செய்யலாம்” என்றாள்.

தேடிவரும் நட்புறவை மறுப்பது நாகரிகம் அல்ல என,

“பிற்பகலில்?”

“அந்நேரம் எனக்கும் சௌகரியம்.”

அடுத்த சில தினங்களில் வடக்கு தெற்கு கிழக்கு என்று சாலைகளிலும் நடைபாதைகளிலும் அவர்கள் கால்கள் பதிந்தன. அனுஷின் உடலைச்சுற்றி பழைய மனுவை ஈர்க்கும் காந்த சக்தி. அவனுக்கும் முற்றுப்பெறாத புது அவதாரத்தை அவளிடம் காட்டுவதில் தயக்கம்.

“உன் கட்டுரைகளை ஆரம்பத்தில் இருந்து வரிசையாகப் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.”

“நிறைய நேரம் ஆகும்.”

“ஒவ்வொன்றையும் எழுத நீ நிறைய யோசித்ததாகத் தெரிகிறது. அதனால் வாசிக்க நேரம் எடுக்கத்தான் செய்யும்.”

நல்ல வேளை! கடைசியில் இருந்து ஆரம்பித்து இருந்தால் ஏன் இரண்டு மாதமாக ஒன்றும் எழுதவில்லை என்ற கேள்வி எழுந்திருக்கும். என் பூர்வ ஜென்மம் அத்துடன் முடிந்துவிட்டது என்ற உண்மையை வெளிப்படுத்தாமல் பொய்யும் சொல்லாமல் சமாளிப்பது சிரமம்.

அவனுடைய பழைய கூட்டுக்குடியிருப்பைப் பற்றிப் பேச அவளுக்குப் பிடிக்கும்.

“அது பழங்கால மாளிகை. ‘மேசா வெர்டே’ ஒரு காலத்தில் விடுதியாக இருந்ததாம். ஆறு படுக்கை அறைகள். இரண்டில் குழந்தையுடன் குடும்பங்கள். மீதியில் தனி மனிதர்கள். ஆக மொத்தம் பத்து பேர்.”

“உரசல்கள்…”

“இல்லாமல் எப்படி இருக்கும்? சுமுகத்தை உருவாக்க இரண்டு குழந்தைகள், ஒரு பூனை, ஒரு நாய்.”

“தினப்படி செலவுகள்?”

“எல்லாருக்கும் நிலையான வருமானம் கிடையாது. பல சமயங்களில் விட்டுக்கொடுப்போம்.”

“டாலர் கணக்கு பார்த்தால் கூட்டுக்குடியிருப்பு நடக்காது.”

“எங்கள் அனுபவத்தில் கண்டுபிடித்த உண்மை.”

பட்டப்படிப்புடன் கல்வியை அவள் நிறுத்தியதால் மனுவின் ஆராய்ச்சி பற்றி அனுஷுக்கு ஆர்வம்.

“மேல் மண்ணின் கார்பன் சதவீதத்தை அதிகப்படுத்துவது எங்கள் நோக்கம்” என்றான்.

“அதற்கான வழிமுறைகள்?”

சுருக்கமாகச் சொல்ல ஆரம்பித்தான். முழு விவரங்களும் கேட்டாள்.

“இன்டரெஸ்டிங்.”

நெட்டையாகத் தனித்து நின்ற பனைமரங்கள், போகன்வில்லா புதர்கள், குலைவிடாத வாழைமரங்கள், தெருவோரத்தில் உதிர்ந்த பூக்கள்…

“இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு சென்னை போனது போல இருக்கிறது. ஆனால் இங்கே அவ்வளவு வெப்பம் இல்லை.”

“நான் கலிஃபோர்னியாவின் எல்லைகளைத் தாண்டியது இல்லை.”

“இங்கேயே பார்ப்பதற்கு நிறைய இடங்கள்.”

“உண்மை தான்.”

“உனக்கு மரங்கள் பிடித்திருந்தால் ஒரு தடவை மேற்கே போவோம்.”

“அங்கே?”

“இப்பகுதியில் மட்டுமே வளரும் டோரே பைன் மரங்கள்.”

குழந்தைகள் விளையாடும் இடத்தில் பெஞ்ச்கள். ஒன்றில் அமர்ந்தார்கள். அவர்களின் பார்வையில் ஒரு பள்ளிக்கூடம், அதை ஒட்டிய பேஸ்பால் திடல், மேலைக்கடலை நோக்கி விரைந்த சூரியன். சில நிமிடங்கள் மௌனத்தில் நகர்ந்தன. ஒரு பைன் மரத்தின் கூம்பு அவர்கள் முன் விழுந்தது. மனு அதை எடுத்து அதன் அழகை ரசித்தான்.

நடக்கத்தெரிந்த ஒரு குழந்தை மணலைப் பூசிக்கொண்டு அவர்கள் முன் வந்து, அவர்களை வேடிக்கை பார்த்துவிட்டு ஓடியது.

கடந்த நாட்களில் நடந்தபோது பேசிய விஷயங்களை வைத்து,

“பொதுவாக எதிர்காலம் பற்றிய சிந்தனை நமக்கு என்றாலும் நம் மனப்பான்மைகளில் கொஞ்சம் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது” என்றாள் அனுஷ். “நீ என்ன நினைக்கிறாய்? மனு!”

“முதலில் நீ என்னைப் பற்றிச் சொல்!” என்று கேள்வியை அவள் பக்கம் திருப்பி வைத்தான்.

“சிலசமயங்களில் நம் சுய-சித்திரத்தை விட மற்றவர்களின் கணிப்பு சரியாக இருக்கும்.”

“அதை உளவியலில் படித்திருக்கிறேன்.”

முகத்தில் சிந்தனையைத் தேக்கி மருத்தவர்கள் குரலில்,

“பூமாதேவிக்குக் காயம் உண்டாக்காமல் வாழ்ந்தாலும் எதிர்காலச் சரிவைத் தவிர்க்க முடியாது என்று நீ நினைப்பதாகத் தெரிகிறது. பைபிள் கடவுளைப்போல சிறுபான்மையினரின் தவறுகளுக்கு மனித குலம் முழுவதற்குமே அவள் தண்டனை தரப்போகிறாள். அதை ஏற்றுக்கொள்ளும் பொறுமை உனக்கு இருக்கிறது. மற்றவர்களைப்போல விமானங்களில் உலகைச் சுற்றிவரவில்லை, எஸ்யுவி ஊர்திகளை ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மைல்கள் ஓட்டவில்லை, நான் ஏன் அவதிப்பட வேண்டும் என்ற மனக்கசப்பு உன்னிடம் கிடையாது. அதே சமயம், தற்போதைய நிலைமையில் மனம் ஒடிந்துவிடாமல் தினப்படி காரியங்களை ஒழுங்காகச் செய்கிறாய்.”

அவன் முகத்தில் புன்னகை நெளிந்தது. அது சான் டியாகோ வருதற்கு முந்தைய மனு. ‘அப்போது’ என்பதை விழுங்கி,

“எனக்கு ஹிந்து மதத்தில் சொல்லப்படும் வேதாந்த மனப்பான்மை. அதைக் கையாலாகாத்தனம் என்று கூடச் சொல்லலாம். நீ அப்படி இல்லை” என்று நிறுத்தினான்.

“ம்ம்.. மேலே சொல்!”

“வருவதைக் கைகட்டி எதிர்கொள்ளாமல் அதை எதிர்க்கும் துணிவு உனக்கு இருக்கிறது.”

“உன் கணிப்பும் சரி. கல்லூரியில் படித்தபோது என் எல்லாத் தேவைகளுக்கும் மற்றர்களை எதிர்பார்க்கும் மனப்பான்மை. காய் பழங்களை வளர்ப்பதில் அனுபவமும் அறிவும் சேர்த்த பின் இப்போதைய உலக நோக்கு. கடையில் போய் உணவுப்பொருட்களை வாங்க முடியாத நிலை உருவாகும்போது என்னால் பிழைக்க முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்கிறது.”

தொடர்ந்து மேலும் ஏதோ சொல்ல அனுஷ் நெடுநேரம் யோசித்தாள். அதற்கு வாய்ப்பு தராமல் சூரியன் மரங்களுக்குப் பின்னால் மறைந்துவிட்டான்.

“கிளம்பலாம்.”

“நான் காரை வாடகைக்கு எடுக்கப்போகிறேன். இந்திய மளிகைக் கடைக்கு போகலாமா?”

மறுநாள் காலை. சூரியன் சற்றே சூடு கொடுத்ததும் கிளம்பினார்கள். முந்தைய தினம் நடந்த அதே வழியில் ஒரு குறுக்குத் தெரு. அது முடிந்த இடத்தில் ஒரு வோல்ட் ஊர்தி.

“இதே காரை நான் பலமுறை வாடகைக்கு எடுத்து இருக்கிறேன்.”

அந்தப் பழக்கத்தில் அவளை எதிர்பார்த்து அதன் கதவு திறந்து இருந்தது. ஓட்டுநரின் இருக்கையில் மின்-சாவி.

முதலில் இந்திய மளிகை. கடையில் நுழைவதற்கு முன்,

“இந்த அட்டையில் பத்து சத தள்ளுபடி கிடைக்கும்.”

“தாங்க்ஸ்.”

சூபர் மார்க்கெட்டில் கிடைக்காத பச்சை மிளகாய், குட்டி கத்தரிக்காய், ஒல்லி வெள்ளரிக்காய், ரவை…

ஒன்றும் வாங்காமல் அவன் வாங்குவதை அனுஷ் வேடிக்கை பார்த்தாள்.

சாமான்களை வீட்டில் கொண்டுவந்து வைத்ததும்,

“நேற்று சமைத்ததில் நிறைய மிஞ்சிவிட்டது. உணவுப்பண்டங்கள் வீணாவதைத் தடுக்க உன் உதவி தேவை.”

“நான் அதற்கு எப்போதுமே தயார். காலாவதியான கடை சாமான்களைக் கூட வித்தியாசமான வாசனை வராவிட்டால் சாப்பிட்டுவிடுவேன்.”

சாப்பிட்டதை ஜீரணிக்க டோரே பைன்ஸ் எக்ஸ்டென்ஷன். அதன் நுழைவிடத்தில் காரை நிறுத்தி,

“நம்மால் இவ்வளவு தூரம் நடந்து வந்திருக்க முடியாது” என்றாள் அனுஷ்.

விதவிதமான மரங்களின் அழகை ரசித்தபடி ஒற்றையடிப் பாதையில் நடந்தார்கள்.

“பரபரப்பான நகரத்திற்கு நடுவில் அமைதியான ஓர் இடம்.”

வடக்கு எல்லையைத் தொட்டதும் மேற்குப் பாதையில் திரும்பி வந்தார்கள்.

“இந்த வழியில் போனால் கடற்கரை தெரியும்.”

அவள் சொன்னபடி ஒரு பாதையின் முடிவில் தட்டையான வட்டம். அங்கிருந்து தலையை மெதுவாக உயர்த்த பார்வை லாஸ் பெனஸ்க்விடோஸ் உப்பங்கழியில் இருந்து, மலையைத் தாண்டி, நீல நீர்ப்பரப்பில் முடிந்தது. உப்பங்கழியின் வளைவுவளைவான ஓடைகள், மலையின் மரங்கள், கடலில் மேகங்களின் பிரதிபலிப்பு என்று ஒவ்வொன்றையும் தனித்தனியாக அனுபவிக்க அங்கிருந்த பெஞ்ச்சில் அமர்ந்தார்கள்.

“இங்கே அழைத்து வந்ததற்கு நன்றி! அனுஷ்!”

“நீ எனக்குத் திரும்ப ஒரு உதவி செய்ய நான் செய்த தந்திரம்.”

“அது எதுவானாலும்.”

“நாளை பத்து மணிக்குள் நீ காரைத் திருப்பித் தர வேண்டும்.”

“இன்று எடுத்த இடத்தில் அதை விட வேண்டும். அவ்வளவு தானே.”

“என்னை எட்டு மணிக்கு விமான நிலையத்தில் இறக்கிவிட்டுத் திரும்பிவந்து அதைச் செய்ய வேண்டும்.”

“அதுவும் முடியும்.”

நீண்டகாலப் பயணம் போலத் தோன்றவில்லை.

“என்றைக்கு உன்னைத் திரும்ப அழைத்து வரவேண்டும்?”

“இரண்டு வாரம் கழித்து. தகவல் அனுப்புகிறேன்.”

“இதே போல் காரை வாடகைக்கு எடுத்து வருவேன்” .

“வருஷத்துக்கு ஒரு விமானப்பயணம் மட்டுமே நான் செய்வது வழக்கம். சான் ஹொஸேயில் என் பெற்றோர்கள். சுற்றிலும் நண்பர்கள், உறவினர்கள்.”

“சந்தோஷமாகப் போய் வா!”

முகத்தில் குறும்புப் புன்னகையை வரவழைத்து அனுஷ்,

“நான் இல்லாதது உனக்கு ஒருவேளை வருத்தமாக இருக்குமோ?”

அவள் மனதைப் புண்படுத்த வேண்டாம் என,

“பேசிக்கொண்டே நடக்காமல் என் நாட்கள் வெறுமையாகப் போகும்.”

அதுவே அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவனுக்குப் பரிசாக ஒரு ஆழ்ந்த முத்தம்.

5

தென் கலிஃபோர்னியாவில் நிரந்தர இல்லம் தேடுவதற்காக ஒரு தாற்காலிக இடத்தில் தங்கும்போது, அடுத்த வீட்டில் வசிக்கும் ஒருத்தியின் பரிச்சயம் அவன் வாழ்க்கைத் திட்டத்தில் குறுக்கிடும் என்று அனிகா எதிர்பார்த்திருக்க மாட்டாள். பயணத்தை அனுஷ் அறிவித்தபோது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் அவள் இரண்டு வாரம் ஊரில் இல்லாது நல்லதுக்குத்தான் என மனு நினைத்தான். அவள் நிழல் படாமல் நிம்மதியாக ஜிஎம்பிகேயின் பிரதிநிதியைச் செதுக்கும் வேலை.

அந்த இரண்டு வாரத்தில் பல நாட்கள் மழையும் அதன் வழியாகக் குளிரும். நாஷ்வில்லின் இடிமழை போலக் கொட்டாவிட்டாலும் நின்று உதிர்ந்த நீர்த்துளிகள். தொடர்ந்து பெய்யட்டும்! இப்போது விட்டால் இனி அடுத்த குளிர்காலத்தில் தான் வானம் திறக்கும்.

நியு யார்க் பக்கத்தில் நுழைந்த கோவிட்டின் ஓமிக்ரான் வகை கலிஃபோர்னியாவைத் தொட்டது. ஒவ்வொரு நாளும் அதன் தாக்குதல் அதிவேகமாக வளர்ந்தது. காலையில் ஆறுமணிக்கே உடற்பயிற்சி அறைக்குப் போகத் தொடங்கினான். அவ்வேளையில் பெரும்பாலும் அது காலியாக இருக்கும். சில நாட்கள் ஒரு சீனத்து இளைஞன். அவனும் மனுவுவிடம் இருந்து விலகி எடை இயந்திரங்களைப் பயன்படுத்தியதால் ஆபத்து இல்லை. வாரத்தில் ஒருமுறை மட்டுமே சாமான் வாங்கப் போனான். கடையில் நுழைவதற்கு முன்பே முகத்திரை.

நாலைந்து நாட்களின் இடைவெளிக்குப் பிறகு புதுப்பிறவி எடுப்பதில் மறுபடி ஆரம்பக் கட்டம். முதல் இரண்டு வாரங்களில் இருந்த நிச்சயம் கொஞ்சம் குறைந்துவிட்டது. அனுஷுக்காக அவனுடைய கடந்துபோன வாழ்க்கையில் இருந்து வெளியில் இழுத்துக் காட்டிய காய்யானிச மனு அவன் கால்களைப் பிடித்து இழுத்தான். அந்த மனுவை அரேபியக்கதைகளில் வரும் வாய் குறுகலான புட்டியில் அடைத்துவிட்டு தீவிர முயற்சியில் ஈடுபட்டான். ஊக்கம் பெற முகநூலில் அவன் நண்பர்களின் பிரதாபம்.

— ஐம்பதாயிரம் டாலரில் ஒரு படகு வீட்டை வாடகைக்கு எடுத்து கரீபியன் கடலில் இரண்டு வாரங்கள் வசித்த பால்ராஜ். ஏராளமான படங்கள். அவற்றில் சில பல நொடிகள் ஓடின.

— மான்டனாவில் ராமு வாங்கிய இரண்டாவது மாளிகை. குளிர்காலத்தில் பனிச்சறுக்கல். கோடையில் இதமான வெயில்.

காயத்ரி ஜபம் செய்வது எப்படியோ தப்பிப்போனது. காலையிலும் மாலையிலும் புதுப்பிறவிக்கு அதிகப்படி பதினைந்து நிமிடங்கள்.

இரண்டு முறை டாலர் கணக்குப் போடாமல் வீட்டிற்கு பீட்ஸா வரவழைத்து சாப்பிட்டான். பழைய மனுவுக்கு இந்த சௌகரியம் ஏது? அப்படியே திரும்பிப்போக விரும்பினாலும் ஒப்பந்தத்தை முறிக்க இருபதாயிரம் டாலரைத் திருப்பித்தர வேண்டும்.

அனுஷிடம் இருந்து,

— சான் ஃப்ரான்சிஸ்கோவில் என் கசினைப் பார்க்கப் போனேன். சென்ற ஆண்டு அவளுக்குப் பிறந்த குழந்தையின் படம்.

— எல் டொராடோ ஹில்ஸுக்கு இரண்டு நாள் பயணம். குளிரில் நடந்தாலும் மலை மேட்டில் இருந்து இனிய காட்சிகள்.

‘என்ஜாய்!’ என்று ஒரே வார்த்தை பதில்.

— உன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு தினம் நடக்காதது மூளியாக இருக்கிறது.

‘எனக்கு இருக்கக்கூடாது’ என மனதுக்குள் பலதடவை சொல்லிக்கொண்டான்.

அவள் வந்ததும் அவளுடன் பட்டும்படாமல், பழைய மனுவைப்பற்றிப் பேசாமல் ஒரு வாரம். அது முடிந்ததும் புது வீடு. அப்புறம் அவளை எப்போதாவது சந்திக்க நேர்ந்தால், “ஹாய்! பயிர் வளர்ப்பது எப்படிப் போகிறது? நானா? நான் ஜிஎம்பிகேயின் விசுவாச மனு. ‘குடும்பத்துக்கு அழகு மூன்று குழந்தைகள்’ கட்டுரையை உனக்கு அனுப்புகிறேன்.” அது தான் அவர்களின் கடைசி சந்திப்பாக இருக்கும்.

கிறிஸ்மஸுக்கு மறுநாள்.

“ஒருவழியாகத் திரும்பி வருகிறேன்.”

“எப்போது?”

“நாளை காலை ஒன்பது மணிக்கு.”

“சென்ற முறை செய்ததுபோல் வோல்ட் ஒருநாள் வாடகை. இன்று கடை வேலைகள். நாளை உன்னை அழைத்துவந்ததும் காரைத் திருப்பிக் கொடுத்துவிடுவேன்.”

“தாங்க்ஸ்!”

மறுநாள் காலை.

“நான் ஊபர் பிடித்து வருகிறேனே.”

“ஏன்?”

“நான் எங்கெல்லாமோ அலைந்திருக்கிறேன். யாரையெல்லாமோ தொட்டுப் பேசியிருக்கிறேன். விமானத்தில் என்ன சுவாசிக்கப் போகிறேனோ தெரியாது. உனக்குத் தந்துவிடுவேனோ என்கிற பயம்.”

“நீ பின் இருக்கையில். இருவரும் என்-95 முகத்திரை அணிந்திருப்போம்.”

யோசிக்கும் மௌனம்.

“நீ இவ்வளவு சொல்லும்போது…”

‘மேஸா வெர்டே’யில் நுழைந்ததும் ஒரு புறத்தில் க்ரூஸ் குடும்பம் – அவர், அவர் மனைவி, ஏழு வயதுப் பெண். அவருக்கு சொந்தமாக ஒரு பழைய மினி வேன். ஊரின் தெற்குப்பகுதியில் புல் வெட்டுதல், வீட்டின் வெளிப்புறத்தைக் கழுவுதல், வர்ணம்பூசுதல் போன்ற தாற்காலிக வேலைகளுக்கு அவ்வப்போது அழைப்பு வரும். அதற்காக ஊர்தியின் பின்னால் பல கருவிகள். அவர் வேலைக்குப் போகாத நாட்களில் வேறு யாருக்காவது அதன் சேவை தேவை என்றால் முன்பே அவரிடம் சொல்லி வைக்க வேண்டும்.

மனுவுக்கு அடுத்த அறையில் சந்ததிகளை வன்முறைக்குப் பலிகொடுத்த ஒரு ஆஃப்கானிஸ்தான தம்பதி. இப்ராஹிமுக்கு இந்திய-பாகிஸ்தானி உணவகத்தில் சமையல் வேலை. சில வாரங்களாக உப்பு அதிகம், எண்ணெய் குறைச்சல் என்று முறையீடு. வேலை பறிபோகுமோ என்று மனுவிடம் அவருக்குத் தெரிந்த ஹிந்தியில் கவலைப்பட்டார்.

“உங்கள் வயது?”

“என் பையன் உயிருடன் இருந்தால் அவனுக்கு நாற்பது.”

அவரை நடக்கும் தொலைவில் இருந்த கண் டாக்டரிடம் அழைத்துப்போனான். பரிசோதனைகள் முடிந்ததும் வெளியில் காத்திருந்த மனுவை டாக்டர் அழைத்தார்.

“காடராக்ட் சிகிச்சை செய்தாக வேண்டும்.”

அவன் எதிர்பார்த்தது தான்.

“எங்கே?”

“சென்டென்னியல் பார்க் பக்கத்தில்.”

“நான் அழைத்துப்போகிறேன்.”

“சிகிச்சைக்கு முந்தைய நாளில் இருந்து கண்ணுக்கு மருந்து போட வேண்டும்.”

“என் பொறுப்பு.”

குறிப்பிட்ட தினத்தில், மனு முதலில் க்ரூஸ்களை தெற்கே விட்டுவிட்டுத் திரும்பிவந்தான். காத்திருந்த இப்ராஹிமிடம் தலையைப் பின்னுக்குத் தள்ளி ஆள்காட்டி விரலை இடக்கண்ணுக்கு மேல் வைத்தான். ‘கண்ணில் மருந்து போட்டாகிவிட்டதா?’ அவர் ஒப்புதலாகத் தலையசைத்தார். சிகிச்சையகத்தில் இரண்டு மணி அவருடன் இருந்து சிகிச்சை முடிந்ததும் அவரை வீட்டில் இறக்கிவிட்டு பிற்பகல் க்ரூஸ்களை அழைத்துவந்தான்.

ஒருமணி விமானப்பயணத்திலும் அனுஷுக்குக் களைப்பு. இருவருக்கும் நடுவில் நிறைய இடைவெளி விட்டு வீடு நோக்கிப் பயணம். அவளைக் கட்டடத்தின் ஓரத்தில் இறக்கினான்.

“உனக்கு என்ன வேண்டும் என்று சொல்! நான் வாங்கி வருகிறேன்.”

“அரை காலன் பால், ஒரு ப்ரெட்.”

ஊர்தியைத் திருப்பி வைத்துவிட்டு அவன் முந்தைய தினம் வாங்கிய பால் பாட்டில்களில் ஒன்றையும் வீட்டிலே தயாரித்த ப்ரெட்டில் பாதியையும் எடுத்துக்கொண்டு அவள் இல்லத்தின் கதவைத் தட்டினான். கதவைத்திறந்து நின்ற அவள் உடலின் வெப்பம் அவனை சுட்டது.

எட்டிநின்று அவளை சோஃபாவில் படுக்கவைத்து அங்கிருந்த போர்வையை அவள் மேல் பரப்பினான்.

“எழுந்ததும் என்னைக் கூப்பிடு!”

“தாங்க்ஸ், மனு!” என்றாள் ஈனமான குரலில்.

மனுவின் அறைக்கு நேர் கீழே கட்டடத்தின் தரைமட்டத்தில் மிஸ் க்ளியானோவிச்சின் வசிப்பிடம். படிக்கட்டை ஒட்டி இருந்ததால் அவன் அறையில் பாதி. வாடகையும் அப்படியே.

“இதுவே எனக்குப் போதும். முக்கால்வாசி நேரம் படுக்கையில் தானே.”

கட்டிலை ஒட்டி ஒரு சிறு மேஜை, இரண்டு மடிக்கும் நாற்காலிகள்.

மதியத்துக்கு முன் பொது சமையலறையில் பாலும் ஓட்ஸ் ரவையும். மாலையில் அறைக்குள்ளேயே சாப்பாடு. மனு சமைக்க நேரிட்டால் கொஞ்சத்தை ஒரு தட்டில் வைத்து அவளுக்குக் கொண்டுபோய் கொடுப்பது வழக்கம். மற்ற நாட்களில் எதிர்க்கடையில் இருந்து ஆறு அங்குல சான்ட்விச். முக்கியமாக தினம் ஒரு சிகரெட். தெருவைக் கடந்து இன்னோரு கோடிக்கு நடந்துபோக உடலில் சக்தி இல்லை, அதை வாங்க சில்லறையும் கிடையாது. மனு ஒட்டகம் படம்போட்ட சிகரெட் பெட்டியில் இருந்து எடுத்து,

“ஒரு தினத்துக்கு ஒன்று தான். நீ மூச்சு விடும்போது எவ்வளவு சத்தம்!”

“அடுத்த க்றிஸ்மஸுக்கு இருப்பேனோ மாட்டேனோ. இப்பவே அனுபவித்து விடுகிறேன்.”

அப்படிச் சொன்னதில் இருந்து மூன்று க்றிஸ்மஸ்கள் வந்து போய்விட்டன.

முதலில் சிகரெட்டைக் கையில் வைத்து அழகு பார்ப்பாள். பிறகு அதன் வாசனை.

“ரெடி?”

“ம்ம்.”

அசையும் விரல்களில் பிடித்த சிகரெட்டை மனு கவனமாக லைட்டரில் பற்றவைப்பான். அவளுடைய நடுங்கும் கரங்களில் தீக்குச்சி கூட ஆபத்து.

“நீ என் பேரன் மாதிரி. கடவுள் அனுக்கிரகம் கிடைக்கட்டும்!”

அவளுக்கு குழந்தைகளே கிடையாது. அப்புறம் தானே பேரன்.

“சிகரெட் கொடுத்து உன்னைக் கொல்வதற்கா?”

“ஒவ்வொரு சிகரெட்டும் பழைய இனிய நினைவுகளைக் கொண்டு வரும்.”

சிரமப்பட்டு ஊதி…

“போலன்டில் இருந்து வந்ததும் சால்ட் லேக் சிடி.”

கும்பல் குறைச்சல் என்று அங்கே.

“நீ அந்த ஊருக்குப் போனது உண்டா?”

“ஊகும்.”

“மிக அழகான ஊர். நான் கல்லூரியின் ஃபார்மஸி கட்டடத்தை சுத்தம் செய்ய வேண்டும். மாலை ஆறில் இருந்து பன்னிரண்டு மணி. கட்டடம் மலையின் அடிவாரத்தில். அங்கிருந்து பார்த்தால் ஊர் முழுக்க தெரியும். இரவில் விளக்குகள் என்ன அழகு! வேலையின் அலுப்பைக் குறைக்க குறைந்தது நான்கு சிகரெட்கள்.”

அடுத்தடுத்து இருமல் குறுக்கிட்டால், சிகரெட்டை அணைத்துவிட்டு சில நிமிடங்கள் கழித்து, அவன் மறுபடி பற்றவைப்பான். அவள் முழுக்க ஊதியபிறகு அதை அவளிடம் இருந்து வாங்கி அணைத்தபிறகு தான் அவன் வெளியே வருவான். ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கு மட்டும் தப்பாது.

ஒரு நாள் சிகரெட் பற்றப்படாமல் அவனுடன் திரும்பிவந்தது. அவள் நினைவாக ஒரு அலுமினத்தாளில் சுற்றி அதைப் பத்திரப்படுத்தினான்.

அன்று மாலை அவன் தயாரித்த தக்காளி ரசத்தில் மிதந்த குழைவான சாதப்பருக்கைகள், நுண்ணலை அடுப்பில் சுட்ட அப்பளம்.

மறுநாள் ஜம்போ கடையில் வாங்கிவந்த சிக்கன் சூப்.

ஜுரம் குறைந்தாலும் அவள் உடலில் பலவீனம்.

“நீ சமைக்க வேண்டாம்!”

வீட்டிற்கு வெளியில் இருந்த மேஜையில் அனுஷுக்கு முன் உணவுத்தட்டை வைத்துவிட்டு நாற்காலியை நகர்த்தி அதில் அமர்ந்தான். பிசைந்த சாம்பார் சாதம். தொட்டுக்கொள்ள கோஸ் காலிஃப்ளவர் கறி. அவள் சாப்பிட்டபோது ‘வேர்ட்ல்’ புதிர்.

“மூன்றாவது இடத்தில் ‘ஐ’. ‘ஆர்’ முதல் இடத்தில் இல்லை.”

“வேறு எந்தெந்த எழுத்துக்கள் இல்லை?”

அலைபேசியைக் காண்பித்தான். ‘எஸ்’, ‘டி’, ‘என்’, ‘எல்’, ‘ஏ’, ‘ஓ’.

“‘யு’?”

“இருக்கலாம்.”

“முதல் இரண்டு இடங்களில் ‘க்யு’ ‘யு’ போட்டால்…”

இப்படி இரண்டு நாட்கள். கலிஃபோர்னியாவில் ஓமிக்ரான் குறைந்துவந்தது.

மூன்றாம் நாள் வீட்டிலேயே கோவிட் சோதனை. ஒரு மணி நேரத்தில் முடிவு தெரிந்ததும், ஓடிவந்து மனுவின் கதவைத் தட்டி அனுஷ்,

“என்னிடம் வைரஸ் இல்லை.”

அவளுடைய சந்தோஷம் அவனையும் பற்றியது.

“அதை எப்படிக் கொண்டாடலாம்?”

“உன் இடத்தில் நான் தாராளமாக நுழையலாம்.”

“நுழைந்து…”

“உன்னைத் தொடலாம்.”

“தொட்டு…”

6

புத்தாண்டு தினத்துக்கு அடுத்த நாள். காய்யானிச மனுவுக்குக் கடைசி நாள். மறுநாளில் இருந்து புதிய மனு – ஜிஎம்பிகேயின் மிஷனரி. இந்த மாற்றம் பழைய வருஷத்துக்கு விடைகொடுத்து புத்தாண்டை வரவேற்பது போல சுலபமாக இல்லை.

“சான் டியாகோவுக்கு வந்து ‘பால்போவா பார்க்’ போகாவிட்டால் எப்படி?” என்று அனுஷ் அன்றைய தினத்துக்குத் திட்டமிட்டாள்.

மதிய உணவுக்குப் பின் மாமூல் வாடகை ஊர்தியில் தெற்குநோக்கிப் பயணம். போகும் வழியில் பால்போவா பார்க்கின் பெருமைகள்.

“அதன் கேரக்டரை விவரிப்பது சிரமம். அதுபோல வேறெங்கும் கிடையாது. பருவத்திற்கு ஏற்ற மாதிரி மாறிக்கொண்டே இருக்கும். கலை, விஞ்ஞானம், இயற்கைச் சூழல் என்று எல்லாவற்றையும் ஒரே இடத்தில் அனுபவிக்கலாம். ஒரு நாளில் முழுக்க பார்க்க முடியாது. இன்று கொஞ்சம், அடுத்த முறை இன்னும் கொஞ்சம். நான் ரசிப்பது பல இனத்து மனித முகங்கள்.”

மனு, “அப்படியா?” என்று தலை அசைத்தானே தவிர, அவள் சொன்னது எதுவும் அவன் காதைத் தாண்டி உள்ளே புகவில்லை.

அனுஷிடம் சொல்லித்தான் ஆக வேண்டும்.

தாற்காலிகமாகத் தங்கவந்த இடத்தில் இப்படி ஒரு நட்புறவு உருவாகும் என்று அவன் நினைக்கவில்லை.

அவளுக்கும் அப்படித்தான் இருக்கும். ஐந்து ஆண்டுகளாக அவள் அந்த இடத்தில் வசிக்கிறாள். ஆரம்பத்தில் பெற்றோர்களுடன், கடந்த சில ஆண்டுகளாகத் தனியாக. எத்தனையோ பேர் அடுத்த இடத்தில் தங்கி இருக்கிறார்கள். ஆண் பெண், சேர்ந்து இல்லை தனித்தனியாக. பல இனத்தினர், சுவர் அட்டையில் ஒட்டியிருந்த குறிப்புகளின் எழுத்துக்குறிகளில் இருந்து பெரும்பாலும் சீன வழியினர். பொதுவாக ஒரு வாரம். யாருமே இரண்டு வாரங்களுக்கு மேல் இருந்தது இல்லை என்று அவளே சொல்லியிருக்கிறாள். எல்லாருடைய பிரிவுகளும், ‘உன்னை சந்தித்ததில் சந்தோஷம். குட் லக்!’ என்று முடிந்திருக்கும். அவன் வித்தியாசம்.

எப்படிச் சொல்வது?

‘நீ ஆர்வம் காட்டுவது பழைய மனு. அவன் மாறிவிட்டான். நாம் சுமுகமாகப் பிரிவோம். என் வாழ்க்கையில் நீ ஒரு வித்தியாசமான பெண். ஆனால் நாளையில் இருந்து நமக்குள் ஒற்றுமை இராது.’

‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?’

‘நான் ஜிஎம்பிகேயின் பணியாளன். அவர்களுக்குச் சாதகமான தகவல்களை உற்பத்தி செய்து ஊடகத்தில் பரப்ப வேண்டும்.’

‘காய்யாவின் விசுவாசப் புத்திரனான நீ எப்படி உன்னைத் தாழ்த்திக்கொள்ளலாம்?’

‘என்னால் முடிந்தவரை எதிர் நீச்சல் போட்டேன். கடைசியில் வெள்ளம் தலைக்குமேல் போகும்போலத் தெரிந்தது. இது தான் எனக்குக் கிடைத்த மரக்கட்டை.’

‘உனக்காக வருந்துகிறேன்.’

‘எனக்கும் வருத்தம் தான். நாளை நான் வேறு இடம் போய்விடுவேன். பிறகு நீ என்னை மறந்துவிட வேண்டும்.’

கடந்த இரண்டு தினங்களில் நடந்ததை அவனால் மறக்க முடியுமா?

இருவரின் ஒட்டுதலுக்கு இணைப்பாக இருந்த உடலுறவு பெட்ரோலியத்துக்கு பலியாகிவிட்டது என அவன் ஒரு கட்டுரை எழுதி இருந்தான். இப்போது தாற்காலிக உறவு-பிரிவுக்கு அவனே சாட்சி.

எதிரான கொள்கைகளுடன் இருவர் ஒரே இல்லத்தில் வசிக்க முடியாதா? முடியும், ஆரம்பத்திலேயே ஒருவரைப்பற்றி மற்றவருக்குப் புரிதல் இருந்தால். அவன் தன் நிஜமான உருவத்தை மறைத்துப் போலி வேஷம்போட்டு இருக்கிறான். வேஷம் இல்லை, அவனுடைய முந்தைய ஜென்மம். அப்படியே இருந்தாலும் அதை முதல் சந்திப்பிலேயே காட்டி இருக்க வேண்டும். அவனிடம் அவள் காட்டும் அன்பு அவன்மேல் வைத்த மதிப்பின்மேல் கட்டியது. அஸ்திவாரம் இல்லை என்றால் கட்டடமும் இல்லை.

அரசியல்வாதிகளும் தொலைக்காட்சி போதகர்களும், ‘நான் கூறுவது எல்லாம் உண்மை. என்னை நம்புங்கள்!’ என்று சொல்ல அவர்களுக்கே அவர்கள் வார்த்தைகளில் முழு நம்பிக்கை இருக்க வேண்டும். அப்போது தான் மற்றவர்களை நம்பவைக்க முடியும். அனுஷின் அன்புப் பார்வையில் இருக்கும்வரை, தற்போதைய வர்த்தக உலகம் நெடுங்காலம் நீடிக்குமா என்ற சந்தேகம் அவனுக்குப் போகாது. ஜிஎம்பிகேயில் நுழைவதற்கு முன் அவளுடை ஈர்ப்புக் கோளத்தில் இருந்து அவன் வெளியேறித்தான் ஆக வேண்டும் – அவள் சம்மதத்துடன்.

ஊர்தியை நிறுத்திட்டு நடந்தார்கள். முதலில் ஸ்பானிஷ் பண்பாட்டு மையம். அதைத் தாண்டியதும் தோட்டங்கள், கலை அரங்குகள். சாலைகளில் உலகின் வெவ்வேறு பண்பாடுகளைக் குறிக்கும் விதவிதமான உணவு வண்டிகள். தெரு இசைக்கலைஞர்கள். அவர்கள் விரித்த துண்டுகளில் அனுஷின் பையில் இருந்து இறங்கிய பத்து டாலர் நோட்டுகள். கப்ரியோ பாலத்தில் இருந்து தெரிந்த சான் டியாகோ அகநகர். மனுவின் மனம் எதிலும் ஒன்றவில்லை.

கடைசியில் எவன்சன் நீர் ஊற்று. அதைச் சுற்றிலும் குழந்தைகளின் கூச்சலும் ஓட்டமும். ஒரு பக்கம் பெரிய பூஷணிக்காய் அளவில் சோப் பலூன்களை ஊதிய ஒருவன். அத்துடன் நில்லாமல் இரண்டு குச்சிகளை வைத்து கூரை போல விரித்தான். அவற்றில் வானவில்லின் வர்ண ஜாலம். அவற்றைத் தொடுவதற்குப் போட்டியிட்ட சிறுவர்கள். நடுவில் சோப் பப்பில் ஊதும் கிட் விற்பனை. தேவையான கரைசல்கள், குழல்கள், குச்சிகள் சேர்த்து இருபது டாலர். விலையைப் பார்த்து ஒதுங்கிய சில பெற்றோர்கள். அனுஷ் இரண்டு இருபது டாலர் நோட்டுகளை அவனிடம் கொடுத்தாள்.

“எனக்கு கிட் வேண்டாம். வாங்க இயலாத இரண்டு பெற்றோர்களின் சிறுவர்களுக்குக் கொடு!”

நீரின் வீச்சை சிறிது நேரம் ரசித்தார்கள்.

வீட்டிலே தயாரித்த ஐஸ்க்ரீம். ஒவ்வொன்றும் ஐந்து டாலர். நீரூற்றின் வட்டத்தைச் சுற்றி நடந்து அதன் எதிர்பக்கத்தில் அமர்ந்தார்கள். நடந்த களைப்பிற்கும் சூரியனின் சூட்டிற்கும் ஐஸ்க்ரீம் இதம்.

அனுஷ் முதலில் முடித்துவிட்டாள்.

“மனு! உன்னை எதுவோ பாதிக்கிறது.”

“உனக்கு ஏன் அப்படித் தோன்ற வேண்டும்?”

“இந்த இடத்தில் இரண்டு மணியாகச் சுற்றுகிறோம். அனுபவித்து ரசிப்பதற்கு எத்தனையோ அபூர்வமான விஷயங்கள். உன் முகத்தில் மறுநாள் பள்ளிக்கூடம் போக வேண்டுமே என்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் முனகும் சிறுவனின் வருத்தம். ஐஸ்க்ரீம் உருகப்போகிறது. நீ அதைப்பற்றிக்கூட கவலைப்படவில்லை.”

“உண்மை தான். என் மனப்போராட்டத்தை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை.”

“எனக்குக் காரணம் தெரியுமே.”

“தெரியுமா?”

“அது மட்டுமல்ல. உன் கவலையை என்னால் தீர்த்துவைக்கவும் முடியும்.”

அவளுக்கு எப்படித் தெரிந்திருக்கும்? முதல் நாளுக்குப் பிறகு வேலை பற்றிய பேச்சை எடுக்கவில்லையே.

” நீ இங்கே வந்தது காய்யானிசத்துடன் ஒத்துப்போகும் வேலை தேட.” மனுவின் முகத்தில் தெரிந்த கேள்வியைப் படித்து, “நீ டாலரை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய். பூமாதேவி இணையத்தளத்தில் இரண்டு மாதங்களாக நீ காணாமல் போய்விட்டாய்” என்றாள். “உயர்ந்த வாழ்க்கை நெறிக்காக சிக்கனமாக இருப்பதில் தவறு இல்லை.”

“உன் கணிப்பு சரி. அதைவிட முக்கியமான இன்னொன்று…”

“அதற்கு முன்னால் உனக்கு ஒரு விஷயம் தெரிந்தாகவேண்டும். நான் முன்பே அதைச் சொல்லி இருக்கலாம். வாய்ப்பு தவறிவிட்டது.”

“இப்போது சொல்!”

“நான் இருக்கும் அபார்ட்மென்ட் என் பெற்றோருக்கு சொந்தம். சான் ஹொஸே போன போது அதன் முழு உரிமையையும் என் தந்தை என் பெயருக்கு மாற்றிவிட்டார். அதற்கு முன்பே நான் அதை விற்க ஏற்பாடு செய்திருந்தேன். அந்தப் பணத்தில் இங்கிருந்து முப்பது மைல் கிழக்கே ரமோனா என்ற ஊரைத் தாண்டி ஒரு பண்ணை வாங்கவும் தீர்மானித்து விட்டேன். சமுதாயப் பண்ணையில் என் பாத்திகளை சுத்தம் செய்து திருப்பிக் கொடுத்தற்கு அதுதான் காரணம். வாங்கியிருக்கும் பண்ணையை சென்ற மாதம் நேரில் பார்த்தேன். வசிப்பதற்கு ஒரு சின்ன இல்லம். நூற்றி ஐம்பது ஏக்கரில் பாதிக்கு மேல் மரங்கள். முன்பு வசித்தவர்கள் பொறுப்பெடுத்து அங்கே எதுவும் வளர்த்ததாகத் தெரியவில்லை. சமதளமான சில பகுதிகளை வளமுள்ள நிலமாக மாற்ற ஒரு கான்செர்வேஷன் பயாலஜிஸ்ட் வேண்டும்…” என்று புன்னகையில் முடித்தாள்.

மனுவின் ஐஸ்க்ரீமில் குச்சி மட்டும். அதைப் பார்த்துக்கொண்டே திடீர் திருப்பத்தை யோசித்தான். பூமாதேவிக்கு அவன் அவளைவிட்டுப் போவதில் விருப்பம் இல்லை. அதற்காக அவள் இப்படிப்பட்ட ஒருத்தியின் துணையையும், உயிரியலில் படித்ததை நடைமுறைக்குக் கொண்டு வரும் வாய்ப்பையும் கொடுத்து அவனை அழைக்கிறாள்.

“வேலைக்கு சம்பளம் என்று எதுவும் கிடையாது, உணவு மற்றும் என்னுடன் பகிர்ந்துகொள்ளும் வாழ்க்கை, அவ்வளவு தான்” என்று குறும்புடன் சிரித்தாள். “என்ன நினைக்கிறாய்?”

“எப்போதில் இருந்து?”

“இன்றே! இப்பொழுதே!”

“ம்ம்…”

“பண்ணையைப் பார்வையிட வேண்டுமா?”

“அந்த எண்ணமே எனக்கு இல்லை. வேறொரு பிரச்சினை.”

“எதுவானாலும்…”

“காகிதத்திலோ மின்-திரையிலோ எழுதாத நம் ஒப்பந்தத்தில், பேனா இல்லாமல் விரலையும் அசைக்காமல், கையெழுத்திட இக்கணமே நான் தயார். ஆனால்…”

“ஆனால்…”

“கையெழுத்துக்கு போனஸ் பத்தாயிரம் டாலர்.”

***

One Reply to “பணம் பணம்… (2)”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.