சிவன்ன சமுத்திரம்

சிவன்ன சமுத்திரம் தீவின் பல இடங்களில் காவிரி நதி சலசலத்துக் கொண்டு ஓடும் ஓசைக் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அவ்வப்போது சாலையில் செல்லும் வாகனங்களின் எந்திரச் சத்தம் ஓயும் இடைவெளிகளில், பறவைகளின் கீச்சுச் சத்தத்தை லேசாக சுமந்துக் கொண்டு, தம்புராவின் சீரான நாதம் போல ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது நதி. சற்றுக் கூர்ந்து கேட்டால் இந்த நாதத்தில் இரு ஸ்வரங்கள் பின்னலிட்டு இருப்பதை அறிய முடியும். சில நேரங்களில் ஒன்றை ஒன்று அரவணைத்துக் கொண்டு, சில போது போட்டியிட்டுக் கொண்டு, ஒன்று கேட்கிற கேள்விக்கு இன்னொன்று பதில் சொல்லிக் கொண்டு காவிரியின் இரு கிளை நதிகள் இந்தத் தீவை தழுவிச் செல்கின்றன. தீவின் மறு கோடியில் இரு நீர்வீழ்ச்சிகளாக நிலம் அதிர இறங்குகின்றன பாராச்சுக்கியும் , ககனச்சுக்கியும்.

ஆழம் காணப்போகும் ஆர்வத்தினால் உண்டான மிகை களிப்போடு, பாறைகளின் மேல் விழுந்து, வெள்ளை நுரைப் பொங்க வழிந்து, பின்பு ஒன்றுமே ஆகாதது போல, சலனமில்லாமல், தன் பயணத்தை தொடர்கிறது, இரு கிளைகளையும் தன்னுள்ளே சங்கமித்த, காவேரி. ஆனால் நாங்கள் தான் அணையில் தேங்கிய நீர் போல் அங்கேயே நின்று விட்டோம். நீரில் நனைந்து கருமை நிறத்தில் மிளிரும் பாறைகள், அவற்றின் இடையே கனமான வெள்ளி வடங்களாக பேரிரைச்சலுடன் கீழ் நோக்கி பாயும் வெள்ளம், நீரின் தாண்டவத்தில் தள்ளாடும் பச்சையம் படிந்த செடிகள், சிதறும் நுரைத் திவலைகள் விரித்த வெண்புகைத் திரையில் ஒளி புகுந்து உண்டாக்கிய ஒரு வானவில்…மனதில் சொற்கள் எதுவும் எழாத கணம், வெறும் காட்சிகள் மட்டுமே அகத்தை முழுவதும் நிறைத்த தருணம்.

பார்வையாளர்கள் மேடையிலிருந்து பாராச்சுக்கியின் விஸ்தாரத்தை காண தலையை இடமிலிருந்து வலம் ஓர் அரைவட்டம் அடிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு அப்பாலும் சில கீழ் நோக்கி பாயும் நீரோடைகள். எவ்வளவு தண்ணீர்…

“ஜூலை, ஆகஸ்ட்ல இன்னு தன்னி வரும்” என்று உடைந்த தமிழில் அங்கே மொபைல் போனில் வாட்ஸ் அப்பை மேய்ந்து கொண்டிருந்த வன அலுவலர் சொன்னார். பட்டிக்காட்டான் யானையைப் பார்ப்பது போல இருந்த எங்களின் முகபாவம் அவரை அப்படி சொல்ல தூண்டியிருக்கும் என்று நினைத்தேன். அதை சொல்லி விட்டு மீண்டும் வாட்ஸ் அப் உலகத்தில் நுழைந்து கொண்டார். ஏதோ அங்கே வருபவர்களிடம் அந்த வாக்கியங்களை தவறாமல் சொல்லத்தான் அவரை அங்கே பணியில் அமர்த்தியிருப்பார்கள் என்பது போல. எப்படி இருந்தால் என்ன. இன்னும் நிறைய தண்ணீர். நினைக்கவே மலைப்பாக இருந்தது. அங்கே இருக்கும் பாறைகள் அனைத்தையும் மறைத்த நீரால் ஆன ஒரு பெரும் வெண்திரை எங்கள் முன் ஆரவாரத்துடன் நிற்பது போல் தோன்றியது. சட்டங்கள், ஆணையங்கள், பங்கீடு, உபரி நீர், தீர்ப்புகள், சட்டச் சிக்கல்கள் என்று எல்லாவற்றையும் அடித்துப் பொடியாக்கி தன் இலக்கு பூம்புகாருக்கு அருகில் கடலில் கடப்பதே என்று ஆக்ரோஷத்துடன் பாயும் பெரு வெள்ளம் எங்கள் நினைவுத் திரையில் புரண்டு ஓடியது.

சிவன்ன சமுத்திரத்தை இணைக்கும் பல பாலங்களில் ஒரு பழைய கல் பாலமும் உண்டு. லஷிங்டன் பாலம் என்று அறியப்படும் இது செதுக்கப்பட்ட கல்தூண்களின் மேல் பெரிய தட்டை கல்கள் அமைத்து உருவாக்கப் பட்டது. இந்தப் பாலம் எப்பொழுது யாரால் கட்டப்பட்டது என்று கூற முடியாவிட்டாலும் 1818 ஆம் ஆண்டு மைசூரு சமஸ்தானத்தின் ராமஸ்வாமி முதலியார் என்ற அதிகாரியினால் சீர் செய்யப்பட்டது என்பது தெரிகிறது. சில ஆண்டுகள் முன்பு வந்த வெள்ளத்தில் பாலத்தின் சில பகுதிகள் அடித்து செல்லப்பட்டு மீண்டும் சீர் செய்யப் பட்டிருக்கிறது. தூரத்திலிருந்து பார்த்தால் ஏதோ ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் தூண்கள் நிறைந்த, கோரைப் புற்கள் மண்டிக் கிடக்கும் மண்டபத்தின் வழியாக காவிரி பாய்வது போலவே ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது இந்தப் பாலம்.

சிவன்ன சமுத்ரத்திலிருந்து தலக்காடு செல்லும் பாதையின் இரு புறங்களிலும் காவிரி இந்த நிலத்திற்கு அள்ளித் தந்த கொடையின் பலனை காண முடிந்தது. நெல், சோளம், வாழை என்று எங்கும் பச்சைக் கம்பளம். ஆங்காங்கே, புனித் ராஜ்குமாரின் மாலை இட்ட கட் அவுட்டுகளும் , படங்களும். இவரின் திடீர் மறைவிலிருந்து கன்னட மக்கள் இன்னும் மீளவில்லை. சில வயல் வரப்புகளில் ஹாப்பி பர்த்டே டு தி கிங் என்ற வாசகங்கள் கொண்ட கட் அவுட்டில் விராட் கோலி கழுத்தில் மாலையுடன் ஆப் டிரைவ் அடித்துக் கொண்டிருந்தார். நீட்டிய மட்டையின் மேல் கொக்குகள் அமர்ந்திருந்தன. காந்தாரா படப் போஸ்டர்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த என்னை கவனித்த டிரைவர் மஞ்சுநாத் ‘பிக்ச்சர் நொடிதீரா ‘ என்று வினவ நான் இல்லை என்று சொன்னவுடன் பெரும் பிழை செய்து விட்டவனை போல என்னை பார்த்து ‘டெபனிடாகி நொடுபேகு சார், தும்ப சன்னாகிதே’ என்றார். காந்தாராவை கன்னட மக்கள் பல வருடங்களுக்கு கொண்டாடுவார்கள் என்று தோன்றியது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பல சிற்றூர்களைப் போலத் தான் தலக்காடும் இருக்கிறது. அகலம் குறைந்த வீதிகளும், உயரம் குறைந்த திண்ணைகளின் மேல் ஓடு வேய்ந்த கூரைகளும், காரைப் பெயர்ந்து செங்கல்கள் தெரியும் வீடுகளும், இதன் நடுவே ஆங்காங்கே பளீர் வண்ணப்பூச்சோடு புதிதாய் முளைத்த மாடி வீடுகளும் என்று சாதாரணமாகத் தான் தெரிகிறது இந்த ஊர். ஆனால் பிரசித்திப் பெற்ற மிகப் பழமையான ஊர். 4ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரை மைசூரு, மாண்டியா, பெங்களூரு, கோலார் போன்ற பகுதிகளை ஆண்ட கங்கர்களின் தலைநகரமாக திகழ்நதது தலக்காடு. கங்கர்களுக்கு பிறகு பிற்காலச் சோழர்கள், ஹோய்சாலர்கள் மற்றும் உடையார்கள் இந்தப் பகுதியை ஆண்டார்கள்.

இப்பொழுது காணப்படும் வீடுகளும், வீதிகளும் இந்த ஊரின் கீர்த்தியை பிரதிபலிக்காவிட்டாலும் இங்கு ஆண்ட சாம்ராஜ்யங்களின் தாக்கத்தை இங்கு இருக்கும் கோவில்களில் காணலாம். இந்தப் பகுதியின் பஞ்சலிங்க ஸ்தலங்களில் ஒன்றாக அறியப்படும் வைத்தியேஸ்வரன் கோவில் இதற்கு ஒரு உதாரணம். அர்தமண்டபமும், ஒரு பெரிய மஹாமண்டபமும் கொண்ட ஒரு அழகான சிவன் கோவில். உயிர்ப்புள்ள தசை கொண்ட ஒரு கால் நிலத்தில் பதிந்து இருக்க, அதன் குறுக்குவெட்டாக மற்றொரு காலின் பாதம் செங்குத்தாக நிலத்தை தொட, கம்பீரமாக சந்நிதி முன் காவலில் இருக்கும் துவாரபாலகர்களின் சிற்பங்களில் அத்தனை ஒரு நேர்த்தி. கால் விரல் நகங்களில் கூட அழகு மிளிர்கிறது. அமைப்பிலும், சிற்ப நேர்த்தியிலும் கங்கர்கள், சோழர்கள், ஹோய்சாலர்களின் தாக்கம் தெரிகிறது.

கோவில் பிரகாரத்தை சுற்றி எழுப்பப் பட்டிருக்கும் மதிற் சுவர்களுக்கு அப்பால் முதலில் ஒரு காட்சிப்பிழைப் போலத் தோன்றி பின்பு கூர்ந்து நோக்க அது மெல்லத் தெளிந்து நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது ஒருத் தோற்றப்பாடு (phenomena). எப்பொழுது வேண்டுமானாலும் சரிந்து, சுவர்கள் மேல் வழிந்து கோவிலையே நிரப்பி விடக் கூடும் என்பதுப் போல அடுக்கடுக்காய் மணற் மேடுகள்! ஆமாம், இந்தப் பிரதேசத்தில் எங்கும் இல்லாத, வரிசை வரிசையாய், சிறு மலைகளைப் போல குவிந்திருக்கும் மணற் மேடுகளை தலக்காட்டில் தான் காண முடியும்.

பஞ்சலிங்க ஸ்தலங்களை இணைக்கும் பாதை முழுவதும் மணல் தான். பாதம் உள்ளே அமிழும் சன்னமான பொடி மணல். பாதையின் இருபுறமும் சவுக்கு மற்றும் தைல மரங்கள். 1117 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கீர்த்திநாராயணர் கோவிலின் தேன் கூடுகள் மண்டிய மஞ்சள் நிற கோபுரத்தின் சிகரமும், மேல் அடுக்குகள் சிலவும், மணற்பரப்பில் அகழ்ந்த ஒரு பெரும் பள்ளத்தில் இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. திரைப்படங்களில் வரும் காதலர்கள் போல கை கோர்த்துக் கொண்டு, சரியும் மணற்பரப்பில் மணல் துகள் காற்றில் பறக்க வேகமாக கீழே இறங்கினால் கோவில் வந்தடையலாம். தமிழ் சினிமா பார்க்காதவர்களுக்கு இந்த குறுக்குப் பாதை புலப்படாது. அவர்கள் கோவிலை சுற்றிக் கொண்டு மேடுகள் வழியே அமைந்த பாதையில் நடந்து இங்கு வந்து சேரலாம். நாங்கள் நிறைய தமிழ்ப் படம் பார்ப்பவர்கள்.

கோவிலின் உள்ளே விஸ்தாரமான பிரகாரம். சில வருடங்கள் முன்னால் தொல்லியல் துறை இந்தக் கோவிலில் மணலின் அடியே புதையுண்டு இருந்த ஒரு மஹாத்வார மண்டபத்தையும், சில சிறு சந்நிதிகளையும், ஒரு கிணற்றையும் வெளியே கொண்டு வந்ததை அங்கிருந்த அறிவிப்புப் பலகையில் பொறித்திருந்தார்கள். தலக்காட்டில் குவிந்திருக்கும் மணலின் உயரம் சராசரியாக 6 முதல் 10 மீட்டர் வரை என்று கண்டறியப் பட்டிருக்கிறது. பக்தர்களின் வசதிக்காக பஞ்சலிங்க ஸ்தலங்கள், கீர்த்திநாராயணர் கோவில் போன்றவற்றிலிருந்து அவ்வப்போது மணல் மேடுகளை அகற்றி சுத்தப்படுத்துகின்றனர். இன்னும் பல கோவில்கள் இந்த மேடுகளின் அடியில் இருப்பதாகக் கூறப் படுகிறது. ஜெயமோகனின் நாவலான விஷ்ணுபுரத்தை போல இங்கு ஒரு நகரத்தையே மணல் மூடி இருக்கிறது. எப்பொழுது, எங்கிருந்து வந்தது இவ்வளவு மணல்? ஒரு ஊரையே படு ஆழத்தில் புதைக்கும் அளவிற்கு எவ்வாறு சேர்ந்தது? அறிவியல் இதற்கு ஒரு வறண்ட விளக்கத்தை அளிக்கிறது.

இந்தப் பிராந்தியத்தில் காவேரி ஓடும் பாதையின் அருகிலேயே ஒரு சிறு பிளவுப் பெயர்ச்சிக்கோடு (minor faultline) அமைந்திருக்கிறது. இதனால் ஏற்படும் நில அதிர்வுகள் நதியின் போக்கை மாற்றிக் கொண்டே இருக்கும். முன்னாளில் அப்படி ஏற்பட்ட ஓர் அதிர்வு காவிரியை தலக்காடு அருகே இருக்கும் மாலங்கி என்ற கிராமத்தில் ஏறக்குறைய 90 டிகிரி கோணத்தில் திருப்பி, தலைக்காட்டை ஒரு அரைவட்ட பாதையில் சுற்ற வைத்திருக்கிறது. மாலங்கி அருகே காவிரியின் கூர் வளைவால் அதன் இடக்கரையில், அதாவது தலக்காடு இருக்கும் கரையில், அபரிமிதமான வண்டல் மண் படிந்தது. இந்த வளைவு மாலங்கியில் பெருநீர்ச்சுழிகளையும் உருவாக்கியது. இந்தப் பிரதேசத்தின் புவியியல் இப்படி அமைந்திருக்க 1331 ஆம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஒரு மந்திரியான மாதவ மந்திரி காவிரியில் தலகாட்டிற்கு முன்பு ஒரு சிறு அணையை உருவாக்கினார். இதனால் அணைக்கு கீழே உள்ள தலக்காட்டில் நீர் வரத்து குறைந்து பல கோடி ஆண்டுகளாக நீரில் அடியில் மூழ்கி இருந்த வண்டல் படிமங்கள் வெளிப்பட்டு, காய்ந்து, காற்றால் தூக்கி செல்லப் பட்டு தலக்காட்டை ஒரு தடித்த மணற் போர்வையால் மறைத்ததாக அறிவியலர்கள் கருதுகிறார்கள்.

ஆனால் எனக்கு இந்த விளக்கம் அத்தனை சுவைக்கவில்லை, மணல் போலவே ருசிக்கிறது இந்த வ்யாக்யானம். இதில் உண்மை இருக்கலாம், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் மனதில் பதிய மறுக்கிறது. இந்த அறிவார்ந்த விளக்கத்திற்கு நேர்மாறாக இந்தப் பகுதியில் புழங்கும் ஒரு நாட்டாரியல் கதை இந்தத் தோற்றப்பாடுகளின் மூலத்தை ஒரு சாபத்தோடு இணைக்கிறது. மனதின் ஆழ்ப் படிமங்களில் இருந்து முளைத்து வரும் ஒரு துன்பியல் கதை. மனதில் சட்டென்று வேர் பிடிக்கிறது.

1610ஆம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆளுமையில் ஸ்ரீரங்கபட்டணத்தை நிர்வகித்து வந்த ராமராயர் ஒரு தீரா நோயிலிருந்து விடுபட தலக்காட்டில் உள்ள வைத்தியேஸ்வரன் கோவிலுக்கு வருகை தந்தார். ஆட்சிப் பணிகளை கவனிக்க தமது ராணியான அலமேலம்மாவை நியமித்தார். ஆனால் சில நாட்களிலேயே அவர் உடல் நலம் மிகக் குன்றியதால் அவரை காண அலமேலம்மா தலக்காடு விரைந்தார். அந்தக் காலகட்டத்தில் மைசூரில் ஆட்சி செய்துக் கொண்டிருந்த உடையார், அலமேலம்மாவின் பாதுகாப்பில் இருந்த பெரும் மதிப்புள்ள நகைகளை (கோவில் நகைகள் என்று கூறுகிறது சில கதைகள்) தம்மிடம் ஒப்படைக்க வலியுறுத்தினார். இதை செவி சாய்க்க மறுத்த அலமேலம்மாவின் மீது சினம் கொண்டு படையெடுத்து வந்தார் உடையார். தலக்காட்டில் தோற்கப்போவது உறுதி என்று அறிந்த அலமேலம்மா காவிரி நதியில் நகைகளை விட்டெறிந்து விட்டு தானும் அதில் மூழ்கி தற்கொலை செய்துக் கொண்டார். மூழ்கும் வேளையில் “தலக்காடு மணற் மேடாகட்டும், மாலங்கியில் பெருநீர்ச்சுழி உண்டாகட்டும், மைசூரு ராஜாக்களுக்கு பிள்ளைச் செல்வம் இல்லாமல் போகட்டும்” என்ற சாபங்களையும் இட்டு விட்டு நீரில் மறைந்தார் அலமேலம்மா.

சுவாரஸ்யமான கதை, ஆனாலும் முற்றிலும் கற்பனையே என்று இதை நிராகரிக்க முடியவில்லை. தலக்காடு மணலுக்கு அடியில் இருக்கிறது, மாலங்கி அருகே நதியில் சுழல்கள் காணப் படுகின்றன ஆனால் இவற்றை எல்லாம் மிஞ்சி இந்த சாபம் நிஜமாகவே உண்மையாக இருக்குமோ என்று நம்மை எண்ண வைப்பது கடந்த நானூறு ஆண்டுகளாக மைசூரு உடையார்களின் வம்சத்தில் நேர்ந்துக் கொண்டிருக்கின்ற ஒரு விசித்திரம். பல நாளிதழ்கள் இதைப் பற்றி எழுதி விட்டன. உதாரணத்திற்கு ஹிந்து பிசினஸ் லைன் 2018ல் வெளியிட்ட ஒரு கட்டுரையில் இந்தச் சாபத்தைப் பற்றி கூறி விட்டு நடந்த நிகழ்வுகளை இவ்வாறு வர்ணிக்கிறது. அலமேலம்மா சாபமிட்ட மறு ஆண்டே உடையாரின் மகன் மரணம் அடைந்தான். இந்தச் சாபத்தின் விளைவுகளை தவிர்க்க மைசூரு அரண்மனையில் அலமேலம்மாவின் ஒரு சிலை நிலுவப்பட்டது. இன்று வரை அதற்கு ஒவ்வொரு தசரா பண்டிகையின் போதும் ரகசிய பூஜை நடைபெற்று வருவதாக இந்தக் கட்டுரை கூறுகிறது. ஆனால் சாபத்தின் வீர்யம் குறைந்தபாடில்லை. உடையார் வம்சம் கடந்த நானூறு ஆண்டுகளாக ஒவ்வொரு ஒன்றுவிட்ட தலைமுறையிலும் பிள்ளைகள் பிறக்காததால் தத்தெடுத்திருக்கிறது. இது இன்று வரைத் தொடர்கிறது. 2013ல் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் வாரிசு எதுவும் இல்லாமல் மரணம் அடைந்தார். அவர் இறந்த பின் அவரது மனைவி உறவினரின் மகனை வாரிசாக நியமித்து 2015ஆம் ஆண்டு பட்டம் சூட்டினார். மணற் மேடுகள், பழைய சாபம், வரலாறு, விந்தையான நிலவியல் ஆகியவை பின்னிப் பிணைந்திருக்கிறது தலக்காட்டில். மீண்டும் மீண்டும் நம்மை சுண்டி இழுக்கும் இடம்.

தலக்காட்டிலிருந்து சோமநாதபுரா சுமார் 25 கிலோமீட்டர் தொலைவு. சிற்பக்கலையில் விருப்பம் உள்ளவர்கள் ஒரு முறையேனும் கண்டிப்பாக காண வேண்டிய கேசவன் கோவில் இங்கே இருக்கிறது. ஹொய்சால மன்னன் மூன்றாம் நரசிம்மனின் பொருள் உதவியோடு சோமநாத தண்டநாயகா 1268 பொ. யு வில் இந்தக் கோவிலை எழுப்பினார். பிரகாரத்தில் நடந்து போகும் கல்களைத் தவிர இந்தக் கோவிலில் வேறு எங்குமே வெற்றுக் கல்கள் கிடையாதோ என்பது போல எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் சிற்பங்கள். முழுதும் களி உருமாற்றுப்பாறை (schist) கொண்டே கட்டப்பட்ட இந்தக் கோவிலில் எங்கிருந்து பார்த்தாலும் கண்களில் படுவது அணிவகுத்துச் செல்லும் சிற்பங்கள். மனிதர்கள், மிருகங்கள், தேவர்கள், தாவரங்கள், தெய்வங்கள் என்று முடிவில்லாக் கனவைப் போல விரிந்து கொண்டே செல்கிறது சிற்பங்களின் தொகுப்பு. சிற்பிகளின் உச்சகட்ட வெளிப்பாட்டை கொண்டாடி, அதை வெளிக் கொணர்ந்து, பார்ப்பவர்கள் மனதில் ‘சிற்பங்களை இப்படிக் கூட வடிக்க முடியுமா’ என்று ஆச்சர்யத்தில் அமிழ வைக்கிறது இந்தக் கோவில். மலர்களின் இதழ்கள், மாதுளையின் முத்துக்கள், நகைகளில் பதித்திருக்கும் மணிகள், காற்றில் அலைந்தாடும் மரத்தின் இலைகள், புல்லாங்குழலின் நுணியில் ஆடும் சிறுப் பட்டுக் குஞ்சம் என்று ஒவ்வொன்றிலும் சிற்பியின் முழுக் கவனம் குவிந்து உருவாக்கிய ஒரு உலகத்தை இங்கே காணலாம். மூன்றாம் நரசிம்மன் இந்தக் கோவிலை கட்டுவதற்கு மட்டுமல்லாமல் இங்கே உறையும் தெய்வமான கேசவனுக்கு ஆராதனை மற்றும் நைவேத்தியங்களுக்காக 3000 தங்கக் காசுகள் அளித்துள்ளதாக இங்கிருக்கும் கல்வெட்டுகள் கூறுகின்றன.

இந்தக் கோவிலில் இன்னொரு ஆச்சரியமும் உண்டு. இங்கே சிற்பிகளின் பெயர்களை சிற்பங்களின் அடியிலேயே பொறித்து கவுரவப் படுத்தியிருக்கிறார்கள். ஏறக்குறைய 800 வருடங்கள் கழித்து பெங்களூரிலிருந்தும், மைசூரிலிருந்தும் வந்தவர்கள் தங்களின் கருப்புக்கண்ணாடிகளை நெற்றியின் மேல் உயர்த்தி வைத்து, நகப்பூச்சு மின்னும் விரலால் கற்களில் பொறித்திருக்கும் கன்னட லிபியை வருடி, பாலேயா, சவுடேயா, நஞ்சைய்யா, என்ற இந்த சிற்பிகளின் பெயர்களை வாய் விட்டு உச்சரித்ததைப் பார்த்த பொழுது இது அந்த மகத்தான கலைஞர்களுக்கு நாம் செய்யும் சிறு மரியாதை என்று என் மனதில் பட்டது.

காரில் ஏறியவுடன் மஞ்சுநாத் “சார்…கண்டிதவாகு நீவு பி ஆர் ஹில்ஸ் நோடு பேக்கு” என்றார். சோமநாதபுராவிலிருந்து ஏறக்குறைய 60 கிலோமீட்டர் இருக்குமே என்று யோசித்தோம். ஆனால் இவ்வளவு தூரம் வந்துவிட்டு பி ஆர் ஹில்ஸ் பார்க்காமல் சென்றால் அது கன்னட தேசத்திற்கே அவமானம் என்பதைப் போல மஞ்சுநாத்தின் பார்வை இருந்ததால் சரி என்றோம். பி ஆர் ஹில்ஸ் ஏறக்குறைய தமிழ் நாட்டை தொட்டுக் கொண்டிருக்கிறது. பிலிகிரி ரங்கநாத சுவாமி வனவிலங்குகள் காப்பகம் இந்த மலையில் தான் அமைந்திருக்கிறது. மலையின் கீழே காப்பகத்தின் வாயிற்கதவுகளுக்கு அருகே இருக்கும் மரத்திலிருந்து சிறுத்தைப்புலியின் பொம்மை ஒன்று கிளையில் படுத்திருந்தது. அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு நாங்கள் பார்த்த ஒரே வன விலங்கு அது தான். அவ்வளவு ராசியானவர்கள் நாங்கள். சிறிய மலை தான். சாலையின் அளவும் சிறிது. எதிர் திசையிலிருந்து வரும் போக்குவரத்தும் அதிகமாக இருந்ததால் பல நேரம் எங்களுடைய கார் பாதையின் ஓரத்தில் குவிந்திருக்கும் சிறு கல், மணல் குவியல்கள் மீதே சென்றது. மஞ்சுநாத் இங்கெல்லாம் இப்படித்தான் என்பது போல அமைதியாக இருந்தார். போகும் வழியெங்கும் சாலையை நெருக்கும் மரங்கள். மலையின் முகட்டை அடையும் முன்பு வெயிலில் மினுமினுத்துக் கொண்டிருந்தது ஒரு சிறு நீர்த்தேக்கம். அதன் புற்கள் படர்ந்த கரையில் ஒருவர் பக்கத்தில் ஒருவர் அமர்ந்துக் கொண்டு தலையோடு தலைசாய்த்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்கள் ஒரு யுவனும் யுவதியும். பக்கத்திலே அவர்களின் சிவப்பு நிற பைக் சாய்ந்து நின்றிருந்தது. விளம்பரப் படம் போல இருந்தது அந்தக் காட்சி. பெங்களூரு, மைசூரு போன்ற இடங்களில் இருந்து இங்கே நிறைய பேர் வருவார்கள் என்றார் மஞ்சுநாத். உச்சியில் அமைந்திருக்கும் ரங்கநாத ஸ்வாமியின் ஆலயம் மூடி இருந்தது. மாலை நான்கு மணிக்கு தான் மறுபடியும் திறக்கும் என்றார்கள். ஸ்டார் ப்ரூட், கொய்யா, பப்பாளி என்று பல பழங்களை குவித்து வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். ஊசி அளவே உள்ள மிளகாயை விற்பனைக்காக சிறு பைகளில் வைத்திருந்தார்கள். வீம்புக்கு ஒரு மிளகாயை எடுத்துக் கடித்தேன், சுர்ர்ர் என்று ஏறிய காரம் ஏறக்குறைய ஒரு மணி நேரம் நாக்கிலேயே சுழன்றது. மலையிலிருந்து இறங்கி வரும் போது “ஏனு சார், என்ஜாய் மாடிதீரா என்றார்” ஆமாம் என்று கண்களில் வழியும் நீரை துடைத்துக் கொண்டே சொன்னேன். அது ஆனந்தக் கண்ணீர் என்று மஞ்சுநாத் நினைத்திருப்பார்.

திரும்பி வருகையில் சிவன்ன சமுத்திரத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரத்திலேயே உள்ளது சத்யகல்லா. நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருக்கும் அமைதியான கிராமம். பிரதானத் தெருவின் கோடியில் வரதராஜப் பெருமாளுக்கும் பெருந்தேவி தாயாருக்கும் ஒரு கோவில் அமைந்திருக்கிறது. கோவிலுக்கு அருகேயே காவேரி. ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கு முன்னால் கடும் இடர்களைத் தாண்டி, சுடர் விடும் ஒரு ஞான தீபத்தை அணையாமல் பாதுகாத்து, சந்ததிகளுக்கு ஒரு பெரும் பொக்கிஷத்தை விட்டுச் சென்ற ஒரு மகான் இந்த இடத்தில தான் பல காலம் தவமேற்றினார். 1300 களில் மாலிக் காப்பூர், உலூகு கான் போன்றவர்கள் தொடர்ச்சியாக ஸ்ரீ ரங்கத்தின் மீது படையெடுத்தப் பொழுது விசிஷ்டாதிவைத்தின் ஒரு முக்கிய நூலான ஸ்ருத ப்ரகாசிகாவின் ஏட்டுச் சுவடிகளை, அதன் ஆசிரியரான சுதர்சன சூரியின் வேண்டுகோளுக்கு இணங்கி, தன்னுடனே எடுத்துக் கொண்டு, ஆக்ரமிப்பாளர்களால் கொடும் வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்ட ஸ்ரீ ரங்கத்திலிருந்து தப்பி, சத்தியகலத்திற்கு வந்து சேர்ந்தார் வேதாந்த தேசிகர். பல ஆண்டுகள் இங்கே காவிரிக்கரையில் தவம் இருந்தார். இவர் அமர்ந்து தவம் செய்த ஆமை போல வடிவம் கொண்ட பாறையை வரதராஜப் பெருமாள் கோவிலில் ஒரு சந்நிதியில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.

அழகான இரு படித்துறைகளைத் தொட்டுக் கொண்டு காவிரி இங்கு அகன்று, அமைதியாக ஓடுகிறது. அந்தி மயங்கும் வேளையில், கருநீல வண்ணத்தில், படித்துறையை லேசாக உரசிக் கொண்டே, சிறு சிணுங்கலுடன் மெதுவாக சென்று கொண்டிருக்கும் நதியில் நின்று எல்லா பக்தர்களுடைய அச்சத்தையும் அகற்று மாறு கோரும் வேதாந்த தேசிகரின் அபீதி ஸ்தத்வம் இதோ இந்தக் கரையில் தான் இயற்றப்பட்டது என்ற எண்ணத்துடன் காவிரியில் முங்கி எழுந்தேன். இளம் இரவின் முதல் நட்சத்திரங்கள் வானில் தெரியத் தொடங்கின.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.