- வண்ணமும் எண்ணமும் ஆயிரம் – பகுதி 1
- கையில் கேமிரா இருந்தால் வங்கியில் கோடிகள்! எப்படி?
- “இதை எவன் வாங்குவான்?”
- சந்தாதாரரின் ஒரு முறை பயன்பாடு
- எத்தகையப் படங்களுக்கு வரவேற்பு அதிகம் ?
- வித்தியாசமாக சிந்தித்தால் வெற்றி பெற முடியாது
- என் முயற்சிகளில் சிலவும் அவை தந்த அனுபவமும்
- ஆயிரம் அடி விழுந்தும் ஏன் தொடர்ந்து இந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும்?

படங்களை சமர்ப்பிக்கும் வகைகள் பல உண்டு என்று சொல்லியிருந்தேன்:
- வியாபார வண்ணப்படங்கள் (commercial content)
- செய்தி வண்ணப்படங்கள் (editorial content)
- விளக்க வண்ணப்படங்கள் (illustrative content)
வியாபார வண்ணப்படங்கள் ஏதோ ஒரு தனிநபர் மற்றும் நிறுவனத்தின் பயனுக்காக உருவாக்கப்பட்டவை. இந்த வகைக்குள் இன்னும் சில சின்ன பிரிவுகள் இருக்கின்றன. அவை:
- ஒரு முறை பயன்பாடு (single use purchase)
- சந்தாதாரரின் ஒரு முறை பயன்பாடு (single use – subscriber)
- பலமுறை பயன்பாடுகள் (multi-use unlimited)
ஒரு முறை பயன்பாடு என்பது சற்று விலையுயர்ந்த விற்பனை. உதாரணத்திற்கு, ஒரு வண்ணப்படம் $9.99 –க்கு வாங்கலாம். அதே வண்ணப்படத்தை, ஒரு 60 படம் வாங்குவேன் என்று சந்தா கட்டியவர், வெறும் $1.99 –க்கு வாங்கலாம்! உதாரணமாக, 60 படத்திற்கு, அந்த சந்தாக்காரர், $120 கொடுத்து வாங்கியிருக்கலாம். ஒரு மாதத்திற்குள், எந்த வண்ணப்படம் வேண்டுமானாலும், அவர் வாங்கினால், $1.99 –க்கு வாங்க முடியும். சில பெரிய நிறுவனங்கள் பன்முறைப் பயன்பாட்டுக்காக ஒரு வண்ணப்படத்திற்கு $60 கொடுக்கவும் செய்வார்கள். வாங்கிய வண்ணப்படத்தை, அந்த நிறுவனம், தன்னுடைய பலவிதமான தேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, உள்தொடர்பு பக்கங்கள், விளம்பரப் பக்கங்கள், விளக்கக்காட்சிகள், ஏன், வியாபார அட்டைகள் என்று எதில் வேண்டுமானாலும், பயன்படுத்தலாம். ஆனால், அந்த நிறுவனத்திற்குள் எல்லா பயனும் இருக்க வேண்டும். இப்படி, பல வகை வியாபார விற்பனை முறைகள் வியாபார வண்ணப்படங்களுக்கு உண்டு. விற்பனை விதத்திற்கேற்ப, வண்ணப்படக் கலைஞரின் சன்மானமும் வேறுபடும். ஒரு ஏஜன்சிக்குள், சில படங்களுக்கு $0.25 கிடைக்கலாம், மற்ற சில படங்களுக்கு $2 கிடைக்கலாம். ஏன், அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருந்தால், $30 –கூட கிடைக்கலாம்!

அடுத்த வகை வண்ணப்படம், செய்தி வண்ணப்படம். பல செய்தித் தளங்கள் வித விதமான செய்திகளை நாளும் வெளியிடுகிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு இசை சார்ந்த செய்தித் தளம் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பெரிய நகரில், பல்வேறு இசை நிகழ்ச்சிகள் ஒரே சமயத்தில் நடை பெறலாம். எல்லா இசை நிகழ்ச்சிகளுக்கும், அந்த செய்தித் தளம், தன்னுடைய ஒளிப்படக் கலைஞரை அனுப்புவது இயலாத காரியம். அப்படியே செய்தாலும், இசை நிகழ்ச்சியே இல்லாத நாட்களில், அந்த ஒளிப்படக் கலைஞரை வைத்துக் கொண்டு என்ன செய்வது?
இசை நிகழ்ச்சிக்குச் செல்லும் தனி ஒளிப்படக் கலைஞர் -அவருக்கும் செய்தித்தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை- அழகாகப் பல வண்ணப்படங்களை உருவாக்கி, ஏஜன்சிக்கு மேலேற்றுகிறார்என்று வைத்துக் கொள்வோம். அந்த ஏஜன்சியில் இசைத் தளத்திற்கும் கணக்கு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். செய்திக் கட்டுரையுடன் சுடச்சுட வண்ணப்படத்தைத் தேடி, ஏஜன்சியிடம் போனால், தனி ஒளிப்படக் கலைஞரின் படம் பிடித்துப் போக, ஏஜன்சிக்கு காசு கொடுத்து வாங்கி, தன்னுடைய செய்திக் கட்டுரையில் இசைத் தளம் வெளியிட்டால், தனி ஒளிப்படக் கலைஞருக்கு ஒரு சிறு அளவு வருமானம் கிடைக்கும்! இசைத்தளத்திற்கு, முழு நேர ஒளிப்படக் கலைஞரை அமர்த்துவதை விட, இந்த ஏற்பாடு, விலை குறைவானது.

இப்படிப் பல விஷயங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து நிகழ்ந்தால், கலைஞருக்கு வருமானம். இல்லையேல், அந்த வண்ணப்படம், எங்கோ இணையத்தின் ஒரு மூலையில் தூங்கும்! இன்றையச் செய்தியை நம்பி எந்த ஒரு தனி ஒளிப்படக் கலைஞரும் இயங்க முடியாது. இவ்வகை செய்தித் தளங்களில், பலவித இசை சம்பந்தமான கட்டுரைகள் வெளிவரும். இவற்றில், சில வண்ணப்படங்கள் இடம் பெற வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு இடத்தில் 10 வகைப் புல்லாங்குழல்கள் அழகாக வைக்கப்பட்டுள்ளதை ஒரு தனி ஒளிப்படக் கலைஞர் பதிவு செய்து, ஏஜன்சிக்கு மேலேற்றுகிறார் என்றால், அவ்வகை வண்ணப்படம், பல கட்டுரைகளில் இடம்பெற வாய்ப்புண்டு. அதே போல, விஸ்தாராவின் ஒரு விமானம் தரை இறங்குவதை ஒரு தனி ஒளிப்படக் கலைஞர் பதிவு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். விஸ்தாரா பற்றிய செய்திகள் அவ்வப்பொழுது செய்தித் தளங்களில் வந்த வண்ணம் இருக்கும். செய்தித் தளத்திற்கு, ஒரு விஸ்தாரா விமானப் படம் தேவை இருக்கும் பட்சத்தில், கலைஞர் பயன்பெற வாய்ப்புகள் இருக்கும்.
அடுத்த வகை வண்ணப்படம், விளக்க வண்ணப்படங்கள். இந்த வகையை சற்று விளக்கியே ஆக வேண்டும்! ஒரு காரின் பிரேக் எப்படி வேலை செய்கிறது என்று விளக்கும் ஒரு டிஜிட்டல் வரைபடம் இந்த வகையில் சேரும். ஆனால், இன்னும் பல வகைகள் இந்தப் பகுதியில் அடங்கும். உதாரணத்திற்கு, வெக்டர் படங்கள் என்ற ஒரு உலகமே உள்ளது. Vector graphics என்பது கணினி விஞ்ஞானத்தில் மிகப் பழைய ஒரு வரைபட முறை. இன்று மென்பொருட்கள் வளர்ந்து, இதை ஒரு மிக அருமையான பயன்பாட்டு முறையாக மாற்றியுள்ளன.
ஒரு டிஜிட்டல் வண்ணப்படத்தை எடுத்துக் கொள்வோம். முகநூலில் வரும் வண்ணப் படங்களைப் பெரிது படுத்தினால் என்னவாகிறது? படத்தின் ஓரங்களில் படிப்படியாகவும், மற்ற பகுதிகள் மழுங்குவதையும் நாம் பார்த்துள்ளோம். இதை ராஸ்டர் கிராஃபிக்ஸ் அல்லது pixel graphic representation என்று சொல்லப்படுகிறது. அதாவது, கணினி, ஒவ்வொரு வண்ணப்பட அணுவையும் (pixel) சமாளிக்கிறது.
வெக்டர் முறையில், ஒவ்வொரு அம்சத்தையும் கணக்கியல் கொண்டு கணினி உருவாக்கிறது. எந்த ஒரு படத்தையும் கோடுகள், வளைவுகள் கொண்டு உருவாக்க முடியும். உதாரணத்திற்கு, ஒரு சின்ன சைக்கிள் படத்தை வெக்டர் முறையில் உருவாக்கினேன். அதில் உள்ள வெக்டர் பாகங்கள் 1,000! ஆனால், கணினிக்கு இது பெரிய காரியம் அல்ல. உண்மையான சைக்கிளில் அத்தனை பாகங்கள் இருக்குமா என்பது சந்தேகம். இதில் உள்ள பயன் என்னவென்றால், அண்ணா சாலையில், இந்த சைக்கிளை 60 அடி கட் அவுட் அளவிற்கு பெரிது படுத்த முடியும். அதன் மேல் ரஜினி உட்கார்வதைப் போல ஒரு போஸ்டர் செய்தால், ரஜினி தான் pixelate ஆவார். சைக்கிள் அல்ல.

இவ்வகை வண்ணப்படங்களை பல கிராஃபிக்ஸ் மற்றும் விளம்பர அமைப்புகளும் விரும்புகின்றன. எப்படி வேண்டுமானாலும், இவ்வகை படங்களை வாடிக்கையாளர் தன் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு, நான் உருவாக்கிய சைக்கிள் நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். இந்த வெக்டர்
வரைபடத்தை வாங்கிய வாடிக்கையாளர், நீலத்திலிருந்து சிகப்பு நிறத்திற்கு மாற்ற முடியும். ஏன், அந்த சைக்கிளின் கைப்பிடியை சற்று தாழ்த்தவும் முடியும்! வாங்கிய விளம்பர நிறுவனம், இந்த மாறுபட்ட சைக்கிளை தன்னுடைய இன்னொரு வண்ணப்படத்துடன் எளிதில் இணைக்கலாம். ஏன், அந்த வண்ணப்பட்த்தில், பல்வேறு அளவுகளில், பல சைக்கிள்களையும் இணைக்க முடியும்!
விளக்கப்படங்களில் இன்னொரு வகையும் உண்டு.. பல இணையதளங்களின் பின்னணிப் படங்கள் ஒரு வகை அமைப்போடு இருக்கும். இவ்வகை அமைப்புகளைக் கணினி கொண்டே உருவாக்க முடியும். அதற்கென்று காமிரா தேவையில்லை. இவ்வகை வண்ணப்படங்களும் விளக்கப்படங்களாக பல ஏஜன்சிகள் கருதுகின்றன.
இந்த வண்ணப்பட வகைகள் எனக்குப் பரிச்சயம் ஆனது எப்படி? எல்லாம் ஏஜன்சிகளிடம் வாங்கிய அடிகளால் என்றால் நம்ப மாட்டீர்கள்.
முதலில் வியாபார வண்ணப்படமாக சமர்ப்பித்ததை நிராகரித்து, ‘இது விளக்க வண்ணப்படத்திற்கு’ சரி வரும் போலத் தோன்றுகிறது என்றார்கள். சரி, அந்த வண்ணப்படத்தை மீண்டும் மேலேற்றி, அதை ‘விளக்க வண்ணப்படமாக’ சமர்ப்பித்தேன். அதைப் பார்த்த இன்னொரு ஆய்வாளர், ‘முழுவதும் ஒத்து வரும் போலத் தெரியவில்லை. நீங்கள் இதை ஒரு செய்தி வண்ணப்படமாக சமர்ப்பித்துப் பாருங்களேன்’, என்றார். அதையும் பார்த்து விடலாமே என்று, படத்தை மீண்டும் மேலேற்றி, அதில் சில மாற்றங்களையும் செய்து சமர்ப்பித்தேன். இன்னொரு எடிடோரியல் ஆய்வாளர், ‘இதில் விற்கும் வகைச் செய்தி எதுவும் இருப்பது போலத் தெரியவில்லை.. நிராகரிக்கிறோம். மன்னிக்கவும்’, என்று மறுத்த பொழுது, ரஜினியைப் போல, இமய மலைக்குப் போய்விடலாமா என்று தோன்றும்!
சரி, ஏன் இந்த ஏஜன்சிகள் இப்படி வடிகட்டுகின்றன? அவர்கள் பக்க நியாயத்தையும் சற்று பார்க்கலாம். டிஜிட்டல் காமிராக்கள் மலிவானவுடன், உலகில் பல்வேறு நாடுகளிலும் வண்ணப்படங்கள் எடுப்பது எளிதானது. அத்துடன், திறன்பேசிகள் இதை மேலும் எளிதாக்கின. இதனால், இவ்வகை ஏஜன்சிகளுக்கு வந்து சேரும் வண்ணப்படங்கள் இந்திய மக்கட்தொகை போலப் பெருகத் தொடங்கியது. வடிகட்டல் முறைகள் தேவையானது. இல்லையேல், கோணலாக எடுத்த திறன்பேசிப் படங்கள் இந்த ஏஜன்சிகளில் வியாபாரத்தைக் குலைத்துவிடும். இதனால், உருவானதே ’வண்ணப்பட ஆய்வாளர்கள்’ என்ற வேலை. இந்த ஏஜன்சிகள், பல நூறு வண்ணப்பட ஆய்வாளர்களை பயிற்சி கொடுத்து வேலையில் அமர்த்துகின்றன. இது ஏறக்குறைய ஒரு கால்செண்டர் போன்ற அமைப்பு. ஒரு வித்தியாசம்தான். ‘கால்’ எதுவும் கிடையாது. எத்தனை ஆய்வாளர்கள் என்பதைப் பொறுத்து, ஒரு வண்ணப்பட சமர்ப்பணம் 2 நாட்களிலிருந்து, ஒரு வாரம் வரை ஆய்வு செய்யப்படுகிறது. அத்துடன், இது ஏஜன்சிக்கு வரும் வண்ணப்படங்களின் எண்ணிக்கையும் பொறுத்தது. என் பார்வையில், எதிர்காலத்தில், ஒன்றிரண்டு மிகவும் தேர்ந்த ஆய்வாளர்களைத் தவிர, இந்த வேலை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் செய்யப்படும். முதல் நிலை வடிகட்டல்களை, சில ஏஜன்சிகள் இன்றே இவ்வாறு முயற்சி செய்து வருகின்றன. எண்ணிக்கை என்றவும் மிரளும் அளவுக்கு, பல ஏஜன்சிகளிடம் வண்ணப்படங்கள் குவிந்து கிடக்கின்றன.
ஏஜன்சி | வண்ணப்படங்களின் எண்ணிக்கை (மில்லியன்) | கருத்துக்கள் |
கெட்டி (Getty Images) | பல நூறு | மிகவும் பழைய ஆனால், நம்பகமான ஏஜன்சி |
ஷட்டர்ஸ்டாக் (Shutterstock) | 220 | மிகவும் குறைவாக வண்ணப்படக் கலைஞர்களுக்கு சன்மானம் வழங்கும் ஏஜன்சி |
அடோபி (Adobe) | 160 | நியாயமாக சன்மானம் அளிக்கும் ஏஜன்சி |
டெப்பாசிட்ஃபோடோ (Depositphoto) | 100 | அதிக வடிகட்டல் இல்லா ஏஜன்சி |
ட்ரீம்ஸ்டைம் (Dreamstime) | 105 | மத்திய நிலை ஏஜன்சி |
பி.கு. இவை அனைத்திலும் எனக்குக் கணக்கு உண்டு
இன்று இது 3 பில்லியன் டாலர்கள் புழங்கும் ஒரு தொழில். இந்த ஏஜன்சிகளின் தாரக மந்திரம், (வண்ணப்படம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு) இதுதான்:
“எங்களிடம் பல கோடி, பட்டியலிட்ட உயர்தர வண்ணப்படங்கள் உங்கள் எந்த தேவைக்கும் பூர்த்தி செய்ய உள்ளன. மிகவும் அருமையான தேடல் சேவையும் உணடு. அவசரத்திற்குப் படம் வேண்டுமா, அல்லது சந்தா கட்டி வாரந்தோறும் படம் வேண்டுமா? உங்களது தேடலை எங்களிடம் விட்டு விடுங்கள். உங்களது கற்பனையும் நேரமும் மிகவும் முக்கியம். வண்ணப்படம் பற்றிய கவலையை எங்களிடம் விட்டு விடுங்கள்”
இப்படி விளம்பரம் செய்யும் ஏஜன்சிகள் பல இருந்தாலும், சில ஏஜன்சிகள் உண்மையிலேயே, செய்தி நிறுவனங்கள், இணைய தளங்கள் மற்றும் பல ப்ளாக் -களுக்கு ஒரு கட்டணத்திற்காக உதவுகின்றன. இத்தனை விஷயம் கடற்கரையில் படுத்துக் கொண்டு சம்பாதிப்பதில் உள்ளது என்று புரிய வந்தது. அடுத்த பகுதியில் என்னுடைய இந்தப் பயணம் பற்றிய இன்னும் சுவாரசியமான விஷயங்கள்
(தொடரும்)