குளிரில் தனிமை கொடிது

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
山里は
冬ぞさびしさ
まさりける
人めも草も
かれぬと思へば

கனா எழுத்துருக்களில்
やまざとは
ふゆぞさびしさ
まさりける
ひとめもくさも
かれぬとおもへば

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: நீதியரசர் முனேயுக்கி

காலம்: பிறப்பு தெரியவில்லை. கி.பி 939 வரை வாழ்ந்தார்.

இத்தொகுப்பின் 15வது பாடலான “உனக்காக உறைபனியில்” ஐ இயற்றிய பேரரசர் கோக்கோவின் பேரன் இவர். கோக்கோவின் மகன்களுள் இவரது தந்தை மிகவும் இளையவராதலால் இளவரசுப்பட்டம் கிடைக்காமல் உயர்நிலை அதிகாரிகளாக மட்டுமே இவரது வம்சம் பணியாற்றி வந்தது. உயர்நிலை அதிகாரியாக இருந்த இவர் ஏதோ காரணத்துக்காகக் கி.பி 894ல் கடைநிலை ஊழியராகப் பதவியிறக்கம் செய்யப்படுகிறார். பின்னர் 45 ஆண்டுகள் கழித்துக் கி.பி 939ல் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். எதற்காகப் பதவியிறக்கம் செய்யப்பட்டார், எதனால் பின்னர் நீதிபதி பதவி கிடைத்தது என்ற எந்த விவரமும் தெரியவில்லை. நீதிபதி ஆன சில மாதங்களிலேயே இறந்துவிட்டார். காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இவரது பங்களிப்பாக ஜப்பானிய இலக்கியத்தில் 15 பாடல்கள் உள்ளன. அவற்றில் 6 பாடல்கள் கொக்கின்ஷூ தொகுப்பிலும் பிற இவரது தனிப்பாடல் திரட்டான முனேயுக்கிஷூவிலும் இடம்பெற்றுள்ளன.

பேரரசர் கோக்கோவுக்கு 4 மனைவியர், 8 துணைவியர். அனைவருக்கும் சேர்த்து மொத்தம் 41 குழந்தைகள். இதில் முனேயுக்கியின் தந்தை அல்லது தாய் யாரென்று தெரியவில்லை. கோக்கோவின் தந்தை நின்ம்யோவின் மறைவுக்குப் பின்னர் அவரது முதல் மகன் மொந்தொக்கு அரசராகி அவரது வம்சம் ஆளத்தொடங்கியது. மொந்தொக்குவின் பேரன் யோசெய்யின் (இத்தொடரின் 13வது பாடலின் ஆசிரியர்) கோமாளித்தனங்களால் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு நின்ம்யோவின் மூன்றாவது மகனான கோக்கோ ஆட்சிப் பொறுப்பேற்றார்.

இப்பாடலாசிரியர் தோன்றிய மினாமோதோ வம்சம் பேரரசர் மொந்தொக்குவின் மகன் செய்வாவின் வழித்தோன்றல் என்று கூறப்படுகிறது. இப்பாடலாசிரியர் கோக்கோவின் பேரன் என்பதால் பேரரசர் செய்வாவை மணந்த கோக்கோவின் மகள் ததாக்கோ இவரது தாய் ஆக இருக்கலாம். பேரரசுக்குக் கீழ் அடங்கி இருக்கும் ஒரு சிற்றரசாகவே மினாமோதோ வம்சம் வரலாற்றில் தொடர்ந்திருக்கிறது. கூடவே தாய்ரா என்ற வம்சமும் மினாமோத்தோவுக்கு இணையாக இன்னொரு சிற்றரசாகத் தொடர்ந்து வந்தது. கொடும்பாளூர் வேளிரும் மலையமான் பரம்பரையும் சோழப்பேரரசுக்குக் கீழே அடங்கி இருந்தாலும் இருவரும் எலியும் பூனையுமாக இருந்ததுபோல் மினாமோதோவும் தாய்ராவும் இருந்து வந்தன. மினாமோதோ வம்சத்தில் வந்த யொரிதோமோ என்பவர் கி.பி 1185ல் தாய்ரா வம்சத்தை வேரோடு அழிக்கிறார். வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் என யாரும் தப்பவில்லை. பின்னர் கி.பி 1219ல் அதேபோன்று சனேதோமோ (இத்தொடரின் 93வது பாடலை இயற்றியவர்) கொல்லப்பட்டதும் மினாமோதோ வம்சமும் கூண்டோடு அழிந்தது வரலாறு.

பாடுபொருள்

குளிர்காலத்தைத் தனிமையில் கழிக்கும் அனுபவம்.

பாடலின் பொருள்: மலைக்கிராமம் பொதுவாகவே தனிமை நிறைந்ததாகவே இருப்பினும் பனிக்காலம் வந்துவிட்டால் மனிதர்களின் வரத்து மட்டுமின்றி மரங்களின் இலைகளும் இவ்விடத்தை நீங்கி விடுகின்றன.

பேரரசர் கோக்கோவின் இன்னொரு மகனான இளவரசர் கொரேசதாவின் இல்லத்தில் நடைபெற்ற கவிதைப்போட்டியில் இச்செய்யுள் பாடப்பட்டது என்றொரு கருத்து நிலவுகிறது. உயர்நிலைப் பதவியிலிருந்து இறக்கப்பட்டபோது அதிகாரத்திலிருந்து தனிமைப்பட்டுவிட்டதை எண்ணிப் பாடினாரா எனத் தெரியவில்லை.

மலைமீதுள்ள கிராமம் எல்லாப் பருவங்களிலும் ஆள் நடமாட்டம் குறைந்தே காணப்படும். ஜப்பானின் மலைப்பகுதிகள் அனைத்தும் பெரும்பாலும் குளிர்காலங்களில் பனிப்பொழிவைப் பெறுபவையாகவே இருக்கின்றன. எனவே, இப்பாடலில் குறிப்பிடப்படும் மலை எது என்று தெரியாவிட்டாலும் பனி பொழிவதால் மேலே செல்ல மக்கள் விரும்ப மாட்டார்கள் என்றும் இலையுதிர்காலத்தின் தொடர்ச்சியாகப் பனிக்காலம் வருவதாலும் அடுத்து வசந்தகாலம் வரும்வரை மரங்களில் இலைகள் துளிர்விடா. மனிதர்கள் வசிக்கும் மலைவீடுகள் மட்டுமின்றி மரங்களும் தனிமையை அனுபவிக்கின்றன என்று கவித்துவமாக இயற்றியிருக்கிறார்.

இப்பாடலிலும் சிலேடை இருக்கிறது. ஈற்றடியில் வரும் かれ என்ற சொல்லைக் கான்ஜி எழுத்துருவில் இருவிதமாக எழுதலாம். 離れ என்றால் மனிதர்கள் வராமல் இருப்பது. 枯れ என்றால் இலைகள் உதிர்வது. குளிர்காலத்தில் தனிமை என்பது விருந்தினரின்றி வீடுகளுக்கு மட்டுமல்ல; இலைகளின்றி மரங்களுக்கும்தான் என்பதைக் கரே என்ற ஒரே சொல்லில் உணர்த்தி விடுகிறார்.

வெண்பா

ஆள்நீங்கு மைவரை காட்டும் அமைதியும்
நீள்கூதிர் போக்கும் தளிர்களும் – மீள்வது
என்று வசந்தமும் என்றெனக் காக்கத்
தனிமையில் வாட்டும் குளிர்

Series Navigation<< ஊற்றுநீர் அன்ன தூய இதயம்வெண்பனியா வெண்மலரா? >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.