
திறப்பதற்கு முன்னதாக மதுபானக்கடை வாசலில் காத்திருப்பது என்பது ஒருவகையான கவித்துவமானது. காத்திருக்கும் சமூகங்களின் சகமுகங்களைப் பார்க்கிறேன். அனுதினமும் பார்க்கும் காதலியை முதன்முறையாகப் பார்க்கும் ஆவலில் இருந்தார்கள். கோவில் திறப்பதற்கு முன்பு யாரும் காத்திருப்பதில்லை. கடவுளைப் பார்க்கக் காட்டும் சாவகாசம் இதில் சாகசமாக முந்திக்கொண்டு நிற்கிறது. சரியாக நூற்றி எழுபது செலவழித்தால் கடவுளோடு சேர்த்து சாத்தானையும் காணும் வாய்ப்பு கிடைக்கும் போது தனியாக எதற்கு கோவில் செல்ல வேண்டும் எனும் முரண்பாடு இவர்களைத் தடுத்திருக்கலாம்.
நான் குடிப்பவன்தான். ஆனால் கடை திறக்கும் முன்னரே அரசாங்க ஊழியர்களின் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பவன் அல்ல. எல்லோரையும் போலத்தான் நானும் வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். இது தினமும் நான் செல்லும் அலுவலக பாதை. தினமும் நான் பார்க்கும் அதே முகங்கள். ஏனோ தெரியவில்லை இன்று என் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு ஜோதியில் ஐக்கியமாகிவிட்டேன். என் ஐம்பது வயதில் முப்பதாண்டு குடியனுபவதில் கடை திறப்பதற்கு முன்பு நிற்பது இதுவே முதன்முறை.
உடன் நிற்பவர்கள் கடைநிலைத் தொழிலாளிகளாக இருந்தார்கள். எனக்கிருந்த லஜ்ஜை அவர்களிடம் சுத்தமாக இல்லை. கைலி அவர்களது பொதுச்சீருடை போல இருந்தது. ஒடுங்கிய கன்னங்கள் சீராக வளராத தாடிக்குள் பீடியின் புகை மண்டியிருந்தது போல நரை. பற்பசையைக் கேள்விப்படாத பற்களை அவர்களும் அவர்களைப் பற்களும் சட்டை செய்யவேயில்லை. பெரும்பாலும் கருத்திருந்தார்கள். சிகப்பாக தென்பட்ட முகங்களில் மஞ்சள்காமாலை பழுப்பு படிந்திருந்தது. பீடியையும் போயிலையையும் ஏக காலத்தில் பயன்படுத்தினார்கள்.
மூத்திரவாடை குமட்டினாலும் கொஞ்ச நேரத்தில் அதுவும் பழகிவிட்டது. அருகில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கும் மதுக்கடைக்கும் ஒரு சுவர் மட்டுமே தடுத்திருந்ததை இப்போதுதான் கவனித்தேன். இத்தனைக்கும் இந்த மருத்துவமனைக்குப் பலமுறை போயிருக்கிறேன். நின்று நிதானித்து கவனிக்காமல் போனதில் இன்னும் எவ்வளவு விஷயங்களை கவனிக்காமல் போனேனோ!
நேரம் செல்லவும், சூழல் சற்று பரபரப்பானது போல தெரிந்தது. எங்கிருந்தோ வந்த ஆட்கள் வாசலில் கூட ஆரம்பித்தார்கள். யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. உயர்ந்த லட்சியம் வெற்றுப்பேச்சால் தடைபட்டு விடக்கூடாது எனும் வைராக்கியத்தில் இருந்தார்கள்.
எப்படி இந்தக் கும்பலில் சேர்ந்து கொண்டேன் என்பது இப்போதும் பிரமிப்பாக இருக்கிறது. ஐம்பதைச் சந்தித்த எல்லோருக்கும் ஏற்படும் விரக்தி எனக்கும் இருக்கிறது. சந்தித்த மனிதர்கள், காத்திருந்த தருணங்கள், சந்தித்த நிகழ்வுகள் எல்லாமே படிப்பினைகள் என்றாலும் இன்னும் தோற்றுக்கொண்டிருப்பதில் தான் வாழ்வின் சுவாரசியம் அடங்கியிருக்கிறது. இன்று இப்படியே சென்றிருதால் அலுவலகத்தில் இருக்கலாம். வர வேண்டிய காபியும் இந்நேரம் வந்திருக்கும். சந்திக்கும் பொதுமக்களுக்கு வழக்கம் போல ஒரு புதுத்தேதியைச் சொல்லிவிட்டு என் இருபதாவது கொட்டாவியை அனுமதித்திருப்பேன். ஒருநாள் இவர்களோடு நின்றால் என்ன எண்ணம் தான் இங்கு நிறுத்தியிருக்கிறது. இருபது வயதில் சூட்டிய கடிவாளம் ஐம்பது வயது ஒரு வியாழக்கிழமையில் தானாக விழுந்திருக்கிறது.
விரக்தியில் இருப்பதை விட நாம் விரக்தியில்தான் இருக்கிறோமா என்பதை அறியாமலே வாழ்வது ஒரு சாபம். காதின் இருபுறம் விட்டுவைத்திருக்கும் வெள்ளை முடி, ஒரு நாள் சவரம் செய்யாவிட்டாலும் பரவிக்கிடக்கும் முதுமை, தொடையைப் பிடித்துக்கொண்டிருக்கும் பிடிப்பான சதை தளர்வது என்று வளரும் கவலையோடு இதுவும் சேர்ந்து கொள்வது இன்னும் கொடுமை.
திடீரென்று ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. இறைவனது திருப்பாதத்தில் பூஜித்த மலரை கொண்டு வருவதை போல ஒரு ஊழியர் மதுக்கடை சாவியை கொண்டுவந்தார். அரசு இந்தத் தொழிலை கொஞ்சம் முறைப்படுத்தியிருந்தால் முன்னால் வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் படி டோக்கன் வழங்கும் முறையை அமல்படுத்தியிருக்கும். கடையைத் திறக்கவிடாமல் கூட்டம் ஆர்ப்பரித்தது. நேரமாக நேரமாக காதலியைச் சந்திக்கும் நாகரீகம் மறைந்து விட, கள்ளக்காதலியைக் காணும் வெறி அனைவரது கண்களிலும் ஊறியிருந்தது.
கடையின் ஷட்டர் திறந்ததும் மண்டிக்கிடக்கும் மனக்குழப்பத்திற்கு மாமருந்து கிடைத்த பேரமைதி உண்டானது. காணாத பொக்கிஷம் இனி நம்மைவிட்டு எங்கு செல்லப்போகிறது எனும் நிதானம் நிலவியது. ஒவ்வொருவராக வாங்கிச் சென்றனர். இன்னும் பத்து நிமிடத்தில் இந்த மருந்து கிடைக்கவில்லையென்றால் உயிரை நிறுத்துவது சிரமம் என்று மருத்துவர் வாக்குக்குக் கட்டுப்பட்டது போல புட்டியை வாங்கிக் கொண்டு விரைவாகச் சென்றார் ஒரு வெள்ளை வேட்டி சட்டை.
வாங்கிய பாதிபேர் தாமதிக்காமல் அங்கேயே உடைத்துக் குடித்தார்கள். ஏற்கனவே கலப்படம் கொண்ட சரக்குக்கு தண்ணீர் கலந்து மேலும் கலப்படத்தை உண்டு பண்ணக்கூடாது எனும் அக்கறையில் பாதிபேர் அப்படியே குடித்தார்கள்.
கூட்டம் சற்று குறைந்ததும் பத்தடி தொலைவில் இருக்கும் கடையை நோக்கி நடந்தேன். மதுவை விற்பனை செய்பவர் பாவ மன்னிப்பு கொடுக்கும் தேவாலயத் தந்தை போல வருபவர்களுக்கு இன்முகத்தோடு வழங்கிக்கொண்டிருந்தார். பணத்தை நீட்டினேன். அது அரசாங்கத்தின் உயர்மதிப்பு கொண்ட ரூபாய்தாள். அதை அகலவிரித்து மேலே இருக்கும் டியூப்லைட் வெளிச்சத்தில் வைத்து கம்பிகளை எண்ணினார். ரூபாயை ஏற்றுக்கொண்டாலும் முகம் திருப்தி இல்லாமல் இருந்தது. இறக்கை முளைத்து பரவசநிலையில் இருந்த இரண்டு குதிரைகள் படம் போட்ட மதுவை காட்டினேன். சூப்பர் மார்கெட்டில் கைக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் பொருளை குழந்தைக்கு எடுத்துக் கொடுத்ததைப் போல பெருமிதத்துடன் அந்த புட்டியை என்னிடம் வழங்கினார். ஓட்டபந்தய வீரனான நான் பலமுறை வென்று கோப்பைகளை வாங்கியிருக்கிறேன். அதே முறையில் வாங்கியது எனக்கு கொஞ்சம் வெட்கமாகக் கூட இருந்தது. அதுகூடவே யாரேனும் புகைப்படம் எடுத்துவிடுவார்களோ என்ற உள்ளுணர்வும் கூட வேடிக்கையாக தோன்றி மறைந்தது.
அதுவரை இயல்பாக இருந்த நான் புட்டியை கையில் ஏந்தியதும் கைக்குழந்தையை கடத்திச் செல்லும் பாவனையுடன் அருகில் இருக்கும் பாரில் நுழைந்தேன்.
சிமிண்ட் பலகை டைனிங் டேபிளாக பாவிக்கபட்டது. சிலர் வெட்கப்பட்டு ஒதுக்குப்புறமாக அமர்ந்துகொண்டு ஒருவித புதிய எண்ணக்கருகளை நிர்மாணித்துக்கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் சப்தமாக சிரித்துக்கொண்டார்கள். அது புறஉலகச் சிந்தனையை புறந்தள்ளும் அலட்சியம் இருந்தது. எல்லா சிமிண்ட் இருக்கையிலும் குறைந்தபட்சம் ஒருவர் அமர்ந்திருந்தார்கள். பார்ப்பதற்கு சாதுவாகத் தெரிந்த ஒரு மனிதர் தென்பட்டார். அதிகத் தொந்தரவு இராது என்று அவர் அருகில் அமர்ந்தேன். எனக்கு அவன் மரியாதைக்குரிய நபராக தெரிந்தாலும் அவனுக்கு நான் அப்படி தெரியவில்லை என்பதற்கு அடையாளமாய் அவன் உடமையை எடுத்து சற்று பாதுகாப்பாக வைத்துக்கொண்டான். அவன் புருவங்கள் அடர்த்தியாக இருந்தன. அவனது பாசாங்குகள் அனைத்தும் தினசரி நடவடிக்கை போல வெகு இயல்பாக இருந்தன. எதிரே உட்காந்திருந்த என்னை அனாயாசமாக கூடப் பார்க்கவில்லை. இந்த இடம் என் நெருங்கிய உறவின் கல்யாண வீடு இல்லை என்பதால் எனக்கும் கௌரவம் பார்க்கத் தோன்றவில்லை.
என்ன ஸார் வேணும்? என்றான் பார் சிப்பந்தி. பார்ப்பதற்கு அவனும் ஒரு குடிகாரன் போல இருந்தான். பாரில் வேலை பார்ப்பவனுக்கு இதுவே கூட கூடுதல் தகுதியாக இருக்கலாம். என்னுடைய பதிலை எதிர்பாராமல் வேர்க்கடலை, சுண்டல், சிக்கன் 65, குடல் என்று அடுக்கினான். வழக்கம்போல இல்லாத ஒன்றை கேட்டேன். வெள்ளரி! இல்லை என்று போய் விடுவான் என்பது என் எண்ணம். இருக்கு ஸார் என்று ஒரு அட்டையில் எழுதிக்கொண்டு சென்றுவிட்டான்.
மனைவி சொன்னது மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது. “பொம்பளப் புள்ளைய பெத்துட்டு நமக்கு கோவம் வரலாமா?”
பெண் பிள்ளையைப் பெற்ற தாய், தகப்பனுக்கு நியாயமான கோபம் கூட தடை செய்யப்பட்ட ஒன்றாக விதிக்கும் சமூகத்தை நினைத்து கோபமாக வந்தது எனக்கு. மகளைத் தூரத்துச் சொந்தம் ஒன்றுக்கு கட்டிக்கொடுத்தேன். நான்கு மாதங்களாக எந்தப் புகாரும் இல்லாமல் போனது. ஐந்தாவது மாதத்தில் இருந்து மனரீதியான நெருக்கடிகள் ஆரம்பமாயின.
ஸார், பெப்பர் போடவா? என்று கேட்க எதோ நினைவில் தலையசைக்க வெள்ளரியின் மீது சிகரெட் சாம்பல் போல எதோ ஒன்றை தூவினான். அது என்னவென்று கேட்கவில்லை, கேட்டால் மிளகுத்தூள் என்பான். வேற என்ன ஸார் வேணும்? எதுவும் வேண்டாம். என்றபடி அவனுக்கும் எனக்குமான கணக்கை முடித்தேன். மீதி இருந்த சொற்பc சில்லறையை அவனே டிப்ஸாக எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
மாப்பிள்ளையின் உறவுகள் என்று வாரம் ஒருவராவது என் அலுவலகம் வந்துவிடுவது வாடிக்கையாகிவிட்டது. யார் யாரோ நிலத்திற்கும் யார் பெயரில் இருக்கும் பத்திரங்களுக்கும் இவர்களது பெயரில் பட்டா மாறுதல் கேட்டு நச்சரிக்க தொடங்கிவிட்டார்கள். நான் ஒன்றும் லஞ்சத்துக்கு எதிரி கிடையாது. நிறைய வாங்கியிருக்கேன். மகளின் ஐந்து சவரன் நெக்லஸ் ஒரு பில்டரின் அன்பளிப்பு. விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்க எந்தத் தடையும் இல்லை என உயர்நீதிமன்ற உத்தரவால் புரோக்கர்கள் நடமாட்டமும் அதிகரித்தது. போதாக்குறைக்கு நான் என்ன நீட்டினாலும் கையெழுத்து போடத் தயாராக இருந்தார் தாசில்தார். இத்தனைக்கும் அவர் எனக்கு அவர் நீண்டகால நண்பரோ, நலம் விரும்பியோ இல்லை. இருவரும் ஒரே சாதி அவ்வளவுதான்.
கால் புட்டியைக் கவிழ்த்த போது பார் சூழல் எனக்கு பழக்கமானது. சூழ்ந்திருந்த கழிவிரக்கம் காணாமல் போயிருந்தது. உடனடியாக யாரிடமாவது நட்பு கொள்ளவேண்டும் போல இருந்தது. வழக்கமாக இதுபோன்ற சூழலில் என்னிடம் இருக்கும் மதிப்புமிக்க பொருட்களை பத்திரப்படுத்தி கொள்வது என் வழக்கம். குறிப்பாக கழுத்தில் இருக்கும் தங்கச்சங்கிலியை மறைத்தபடியே மேல் சட்டையின் பட்டனை போட்டுக்கொண்டேன்.
லேசாக வியர்த்தது. ஆனாலும் இதமாக இருந்தது. உலகமே நிதானமாக இயங்குவது போல இருந்தது. நான் என்ன செய்தாலும் உலகமே சகித்துக்கொள்ள தயாராக இருந்தது. காதில் பஞ்சடைத்த நிசப்தம், எனிலும் ஒரு மெல்லிய இரைச்சல். வெகுநாட்களாக வலி பீடித்திருந்த தோள்பட்டையில் மரமரப்பு படர்ந்திருந்தது.
ஆரம்பத்தில் மருமகனின் முகத்திற்காக எல்லா வேலையையும் பிரதிபலன் பாராது முடித்துக்கொடுத்தேன். இன்னும் சொல்லப்போனால் என் அரசாங்க பணியில் சம்பளம் மட்டும் வாங்கிக்கொண்டு வேறு பலனில்லாமல் முடித்துக் கொடுத்தது இவர்களுக்கு மட்டும்தான். வாரம் முடிந்து மறுவாரம் தொடங்கும் போதெல்லாம் மருமகனின் சொந்தம் என்று ஒருவர் நிற்பார். பலபேரை மகள் கல்யாணத்தில் கூட பார்த்ததில்லை. ஒரு கட்டத்தில் என் மகளை கட்டியதே இதுபோல காரியம் சாதிப்பதற்குதானோ என்றெல்லாம் தோன்றிவிட்டது.
எதிரே இருந்தவனிடம் பேச்சுக் கொடுக்க வெட்கம் பாராத உள்ளுணர்வு உந்தித்தள்ளியது. ஸார் என்று என் மேலதிகாரிகள் தவிர வேறு யாரையும் அழைத்ததில்லை. இருந்தாலும் அவனை ஸார் என்று அழைத்தேன். கொஞ்சம்கூட ஆர்வமில்லாமல் பார்த்தான். இந்த உச்சபட்ச சுதந்திர போதிலும் ஒருவனால் இந்தளவு விட்டேத்தி மனநிலையில் இருப்பது வியப்பாக இருந்தது. அவனின் ஆர்வமின்மையே எனக்கு இன்னும் நட்புணர்வை இன்னும் தூண்டியது. நிமிர்ந்து பார்த்து விட்டு இன்னொரு குறும்புட்டியை ஆர்டர் செய்தான். எனக்கு அவமானமாக இருந்தாலும் அந்த நேரத்தில் மானம் பார்க்க என்ன இருக்கிறது?
அன்று செவ்வாய்க்கிழமை. ஒரு இடத்தைப் பார்த்து அதன் ஆவணங்களைச் சரிபார்த்துக் கொண்டிருக்கும் போது புதுஎண்ணில் இருந்து அழைப்பு வந்தது. எடுத்துப்பேசினால் என் மருமகனின் மாமன் என்றவாறே தன் பெயரைக்கூடச் சொல்லாமல் பேசினார். நான் செய்து கொடுப்பதாகச் சொன்ன எந்த வேலையையும் செய்யாமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துவதாக குறைபட்டுக்கொண்டார். அத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. நக்கலாக என் மகள் பெயரை அடிக்கோடிட்டு பதிலை என் பக்கம் திருப்பியது காலில் இருந்த ரத்த ஓட்டம் தலை நோக்கி பாயப் போதுமானதாக இருந்தது. அடித்த வெயில், காலையில் சாப்பிடாத வறட்சி, இயல்பான அலுவலக நடைமுறை ஆகியவை என்னை இன்னும் கோபத்தின் உச்சத்திற்கு தள்ளியது. கூடவே தேர்ந்த கெட்டவார்த்தையும் தொண்டையை விட்டு தாவிக்குதிக்கப் பரபரத்தது. எனிலும் அனைத்தையும் முழுங்கி அலுவலகத்தில் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு ஒரு நிழலில் அமர்ந்தேன்.
இயல்பாகவே எந்தத்தயக்கமும் இல்லாமல் எனக்கு கீழே பணிபுரியும் ஆட்களை கெட்டவார்த்தை பேசித்திரிந்து வேலை வாங்கிய எனக்கு சற்றுமுன் மென்றுமுழுங்கிய கணங்கள் மிகுந்த படபடப்பை கொடுத்தன.. தலை சுற்றிக்கொண்டு வாந்தி வருவது போன்று கூட இருந்தது. வியர்வை சட்டையை நனைத்ததை பார்த்த உதவியாளன் சோடா வாங்க கடைக்கு ஓடினான்.
என்னை ஆழமாகப் பார்த்தவன், நிதானமாகப் புன்னகைத்தான். நான் இன்னும் உற்சாகமாகிச் சிரித்தேன். காலையில் குடிக்குமளவிற்கு என்ன விசேஷம்? என கேட்க துடித்தாலும் ஒட்டியிருந்த கொஞ்ச நிதானம் அதை தடுத்தது. நான் அப்போதுதான் இரண்டாவது புட்டியை வரவேற்க ஆரம்பித்திருந்தேன். அவனே பேச ஆரம்பித்தான். அதில் நிறைய ஆங்கிலம் கலந்திருந்தது. எனிலும் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்ததாகச் சொன்னது எனக்கு அவன் மேல் இன்னும் சுவாரஸ்யம் கூடிவிட்டது. மிகப்பெரிய சிமிண்ட் கம்பெனியின் டீலராக இருப்பதாகச் சொன்னான். அவனது அலுவலகத்தைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இவனைப் பார்த்ததில்லை. மிகுந்த அளவெடுத்து பேசினான். அதைவிட நாகரீகமாகப் பேசியது அவனது மீதான மரியாதையை இன்னும் கூட்டியது. பொதுவாக பாரில் உடன் குடிப்பவர்களோடு நட்பு கொள்வது எனக்கு பிடிக்காத ஒன்று என வெளிப்படையாகவே கூறினான்.
மேற்கொண்டு ஒரு சர்வே இடத்தை பார்வை செய்ய நேரமிருந்தும் அலுவலகம் சென்றேன். போனில் பேசியவன் என்னை கண்ணியக்குறைவாக பார்த்தது போல இருந்தது. இப்படியே எட்டி நெஞ்சில் மிதிக்க எல்லா சூழல்களும் இருந்தும் அவனைப் பார்ப்பதையே தவிர்த்தேன். எனிலும் வந்து ஒரு வணக்கம் வைத்தான். கூடவே போனில் அவ்வாறு பேசியதற்கு நேரிடையாக அல்லாமல் மறைமுகமாக ஒரு வருத்தத்தை தெரிவித்தான். எனக்கு அவனை விரைவாகத் துரத்தியடித்துவிட்டு ஒரு டீ சாப்பிடவேண்டும் போல இருந்தது.
அவன் என்னை விடுவதாக இல்லை. கத்தை கத்தையாக பத்திர பிரதிகளை என் முன்னே விரித்தான். எனக்கு அதையெல்லாம் கிழிக்க வேண்டும் போல இருந்தாலும் போலி கவனத்தோடு படித்தேன். அவனே ஒரு சிக்கலை சொல்லி அதற்குண்டான தீர்வு நான் மனது வைத்தால் முடியும் என அசிங்கமாக சிரித்தான்.
நேரமாக நேரமாக அவனது பேச்சு செய்யும் தொழில் பற்றி தாவியது. மரியாதைக்குக் கூட அவன் என்னைப் பற்றி விசாரிக்காமல் இருப்பது எனக்கு துக்கம் தருவதாக இருந்தது. தொழிலில் அவனது சாம்ராஜ்யம் எப்படி நீண்டது என்று குறித்து விளக்கும் போது என்னிடம் இருந்த வெள்ளரி தீர்ந்து போயிருந்தது. இதை எப்படி அவன் கவனித்தான் என்று தெரியவில்லை அவனிடம் இருந்த பொறித்த சிக்கன் துண்டுகளை கொண்ட தட்டை என்னிடம் தள்ளினான். நான் மறுக்காமல் எடுத்துக்கொள்வேன் என்று நினைத்துவிடக்கூடாது என்பதால் மறுத்தேன். இதை எடுக்காவிட்டால் நம்மிருவருக்கிடையே இனி ஒட்டுமில்லை உறவுமில்லை என்று எழ முற்பட்டான். நான் சிக்கனை எடுத்துவிட்டேன் ஆனால் வாயில் வைக்கவில்லை. வெகுநேரம் அப்படியே இருந்ததால் மீண்டும் கோபித்துக்கொண்டான். சிக்கனை எடுத்து வாயில் வைத்ததும்தான் மீண்டும் இயல்பானான்.
உண்மையில் அது இயலாத காரியம். சுமார் நாற்பது வருடத்திற்கு முந்தைய பழைய சர்வே நம்பரை வைத்துக்கொண்டு ஒரு பட்டா கோருவதும் அதற்குப் பரிந்துரை செய்வதும் இதற்கு முன்பு நான் செய்யாத ஒன்று. அப்படியே நான் தாசில்தாருக்கு அனுப்பினாலும் அவரே கையெழுத்துப் போட மறுப்பார். அப்படிப் போட்டாலும் அது பின்னாளில் எங்களுக்கு எதிரே திரும்ப வாய்ப்பதிகம். இதில் கையெழுத்திட அவர் அப்படி ஒன்றும் அடிமுட்டாள் ஜாதி வெறியன் இல்லை. அந்த நிலம் பிரச்சனைக்குரியது என்று நான் உட்பட வருவாய்துறையில் புழங்கும் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். முடியவே முடியாது என்பதை பல விதங்களில் சொல்லியும் அவன் புரிந்துகொள்ளவில்லை. வேண்டுமென்றே மறுப்பதாக வெளிப்படையாகவே குறைபட்டுக்கொண்டான்.
நேரமாக நேரமாக காலிப்புட்டிகளின் எண்ணிக்கை அதிகமானது. நான் இரண்டோடு நிறுத்தினாலும் நிதானம் தவறியே இருந்தேன். காட்சிகள் பிழையாக தெரிய ஆரம்பித்தன. தூரத்தில் இருந்த அரசமரம் காற்றில் அசைவது நாகரீக செல்வந்தர்கள் கைகளுக்கு வலிக்காமல் கைதட்டுவது போல இருந்தது. இவன் பேசுவது ரேடியோ அலைவரிசையில் விருப்பமான பாடலை நான்கு கோடுகள் தள்ளிவைத்து கேட்பது போல இரைச்சலாக இருந்தது. இப்போது நான் என்ன செய்தாலும் அதை நாலாயிரம் பேர் வேடிக்கை பார்ப்பது போல இருந்தது. எதிரே இருந்தவனின் முகம் இன்னும் வசீகரமாக இருந்தது. இன்னும் பல புட்டிகள் தீர்ந்தாலும் இவன் தெளிவாகவே இருந்தான்.
மறுநாள் அலுவலத்திற்கு மருமகனே வந்துவிட்டார். எப்போதும் அதிகமாக போனில் கூட பேசாதவர் இன்று எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அலுவலகம் வந்தது கொஞ்சம் அதிர்ச்சியாக கூட இருந்தது. அருகில் நேற்று திருப்பி அனுப்பிய அவரது தூரத்து சொந்தம். மூவரும் எதிரே இருக்கும் டீ கடைக்கு சென்று பேசினோம்.
“ஏ மாப்ள இவ்வளவு தூரம்? ஒரு போன் பண்ணிருக்கலாமே!”
“ஒரு வேலையா இந்தப்பக்கம் வந்தேன். அதான் பேசிட்டு போகலாம்னு வந்தேன்!”
அது என்ன விஷயம் என்று தெரிந்தாலும் தெரியாதது போல கேட்டேன். இதுபோன்ற சங்கடமான விஷயத்தை நாம் ஆரம்பிப்பதை விட எதிரில் இருப்பவர் ஆரம்பித்தால் அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் எனவும் என்ன மாதிரி பதில் கொடுத்தால் சமாளிக்கலாம் என புரிதல் கொடுக்கும்.
“நமக்கு வேண்டப்பட்டவர், ஒருவகையில் நமக்கு மாமாமுறை! எதோ வேலையா நேத்து வந்தாராம். நீங்க திருப்பி அனுப்பிவிட்டதா சொன்னாப்ல. பாவம் அந்த நிலத்தை வச்சுதான் மகளுக்கு கல்யாணம் பேசி வச்சிருக்காரு. கொஞ்சம் பாத்து பேசி முடிச்சி விடுங்க மாமா. காசு வேணா குடுத்துறலாம்!” நான் கூடுதலாக பதறிப்போய் அவர் கையை பிடித்தேன். வேறு வழியில்லை. இவனுக்காக இல்லாவிட்டாலும் மாப்பிள்ளைக்காவது செய்து கொடுக்கவேண்டிய நெருக்கடியில் தள்ளிவிடப்பட்டு இருக்கிறேன்.
நான் பணிபுரியும் துறைகென்று ஒரு எல்லைக்கோடுகள் இருக்கிறது. அதை மீறி வேலை செய்வதில்லை. அதையும் தாண்டிச் செய்தால் சரிபாதி சிக்கலில் மாட்டவும் வாய்ப்புள்ளது. அரசு எந்திரத்தால் கண்டுகொள்ளப்படாமல் போகவும் வாய்ப்புள்ளது. இன்னும் சொல்லப்போனால் நாங்கள் கையூட்டு வாங்குவதில் நிறைய உளவியல் சார்ந்த கோட்பாடுகளைப் பின்பற்றுவோம். முதலில் நாடி வரும் பொதுமக்களின் முன்பு எங்களின் உணர்வை மிகைப்படுத்துவோம். நீங்கள் எங்களை நாடி வந்திருக்கும் காரியம் சாதாரணமானதல்ல. மிகவும் கடினமானது என அவர்களை நம்பவைப்போம். உங்கள் மனுவை பரிசீலனை செய்தால் அது அரசு விதிமுறைகளுக்கு எதிரானது, எனிலும் உங்களின் நல்ல மனம் கருதி அரசு எந்திரத்தை வேறு திசைக்கு செலுத்துகிறோம் என்பதை சொல்லாமல் புரியவைப்போம். அதற்குள் ஒருவாரமாகியிருக்கும். எங்களுக்குள் பொதுமக்களுக்கும் ஒரு பயம் கலந்த நட்பு உருவாகியிருக்கும். வேண்டுமென்றே நாங்கள் அலுவலகத்தில் இல்லாத நேரம் பார்த்து அலைய விடுவதால் அலுவலக வாசனை அவர்களுக்கு கிலியை ஏற்படுத்தும். இறுதியாக ஆயிரம் பெறுமானமுள்ள வேலைக்கு பத்தாயிரம் கொடுக்கக்கூட தயாராக இருக்கும்படியான மனநிலையை விரக்தி ஏற்படுத்தித் தரும். எந்த சிக்கலும் இல்லாமல் பணம் எங்கள் பையை நோக்கி வரும்.
நாங்கள் வந்து ஒரு மணி நேரம்தான் ஆகியிருந்தாலும் ஒரு வருடம் ஆணியடித்து உட்காந்தது போன்று இருந்தது. மதுக்குப்பிகள் காலியாக காலியாக அவன் நிதானம் மெருகூட்டிப் போனது. நான் பார்க்கும் போதெல்லாம் காட்சிகள் அலைமோதின. நிறையப் பேசினான். குறிப்பாகத் தன் மேன்மையான குடும்பம் பற்றியும் அதில் எழுந்த சிக்கலில் இருந்து எப்படி மீட்டெடுத்தான் என்பதை ஒரு திரைச்சித்திரம் போல விவரித்தான். வார்த்தைகளில் அவன் பயன்படுத்திய நாகரீக வர்ணனைகள் சிலிர்ப்பாக இருந்தன. நான் பேச, பதிலுக்கு அவன் பேச என ஒரு கலவையான உரைநடையாக போய்க்கொண்டிருந்த எங்கள் விவாதம் ஒருகட்டத்தில் எட்டு மணி செய்தி போல அவன் வாசிக்க நான் மெய்மறந்து கேட்கும்படியாகிவிட்டது. அலுவலகம் செல்லாமல் குடிக்க வந்தது நான் அனுதினமும் வழிபடும் தெய்வத்தின் செயல் என எண்ணும்படி இருந்தது.
வேறு வழியே இல்லாமல் மிகவும் சிக்கலான அந்த இடத்திற்குப் பெயர் மாறுதல் செய்யும் முயற்சியை முன்னெடுத்தேன். எந்த சந்தேகமும் இல்லாத அளவிற்கு ஆவணங்களை தயார் செய்ய இரண்டு இரவுகள் கண்முழிக்க வேண்டியிருந்தது. ஒருவழியாக தயார் செய்து தாசில்தாரிடம் வந்தேன். எப்போதும் மறுக்காமல் கையெழுத்து போடும் அதிகாரி நான் எதிர்பார்த்தது போல அன்று மிகுந்த யோசனையோடு ஒன்றுக்கு இரண்டு முறை என்னிடம் உறுதிப்படுத்திக்கொண்டு பச்சையாக கையெழுத்து போட்டார்.
மாப்பிள்ளையின் உறவினர் சாதித்த சிரிப்போடு பெரிய தொகை கொடுக்க முன்வந்தார். மனதை கல்லாக்கி அந்தத் தொகையை வாங்கவில்லை. என் வாழ்நாளில் லஞ்சம் மறுத்தது அன்றுதான். மூன்று மாதங்கள் அப்படியே ஓடியது. இப்பொழுதெல்லாம் மாப்பிள்ளையின் பெயர் சொல்லிக்கொண்டு யாரும் அலுவலகம் வருவதில்லை. எப்படி வருவார்கள்? எல்லா நிலமும் தான் மாற்றலாகிவிட்டதே என நினைத்துக்கொண்டேன். ஒரு மதியவேளையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. பேசியவர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் எனக்கு நன்கு பரிச்சயம் என்றாலும் அன்று மிகவும் அலுவல்ரீ தியாகப் பேசி என்னை உடனே அலுவலகம் வரச்சொன்னார். பாதத்தில் லேசாக தீப்பிடித்த உணர்வு.
மது ஏற்படுத்திய உணர்வா? அல்லது ஒருவித உள்ளப்பிரவாகத்தில் இருந்ததால் ஏற்பட்ட மாற்றமா என விளங்கமுடியாத அளவிற்கு பரவசநிலையில் இருந்தேன். இப்படியே இருந்துவிடலாமா என்று கூட தோன்றியது. இருந்தவன் என்ற வார்த்தையின் விகுதி இருந்தவர் என்று மாறியது. அவர் வாயிலிருந்த வார்த்தைகள் யாவும் சத்தியவாக்கா என்று தெரியவில்லை. ஆனால் இவ்வளவு நாள் நான் தேடிய ஆறுதல் வார்த்தைகளின் பிறப்பிடமாக தோன்றியது. முடிவாக அவர் ஒரு அவதாரமாக தெரிந்தார்.
கோட்டாட்சியர் அலுவலகத்தில் எனக்கு முன்பாக தாசில்தார் நைந்து தொங்கிய முகத்தோடு காட்சியளித்தார். இருவரும் கோட்டாட்சியர் முன்பாக கரம், சிரம் முடங்கிப்போய் நின்றோம். அந்த இளம்சிவப்பான அதிகாரி சற்று நேரம் வறுத்து எடுத்தபின்பு வாய்மொழியாக ஒரு உத்தரவு போட்டார். அது தற்காலிகப் பணிநீக்கம். செய்த செயலுக்கு அது மிகவும் குறைவு என்றார். வழக்கு விசாரணையில் இருக்கும் ஒரு நிலத்தை சட்டத்திற்குப் புறம்பாக பெயர் மாற்றம் செய்த குற்றத்தின் விளைவு. அந்த உறவினரின் முகம் வந்து போனது. வாழ்கையில் லஞ்சமே வாங்காத செயலுக்கு தண்டனை அனுபவிக்கப் போவதும் இதுவே முதன்முறை.
தண்டனை நாளில் இருப்பது தெரியாமல்தான் அலுவலத்திற்கு செல்ல முயன்றிருக்கிறேன். துரதிஷ்டவசமாக மனைவியும் அன்று என்னை தடுக்காமல் மிகுந்த ஞாபகமாக புளிச்சோறுகட்டி கொடுத்து அனுப்பியிருக்கிறாள். இனம்புரியாத சக்திதான் என்னை தடுத்து இந்த மதுபானக்கடைக்குள் அனுப்பி வைத்திருக்கிறது.
இப்போது அந்த அவதாரம் பேச்சை நிறுத்தி என் விபரம் கேட்டது.
உங்கள் பெயர் என்ன?
சொன்னேன்!
என்ன வேலை?
சொன்னேன்!
மூச்சை இழுத்து பிடித்து, தொண்டையை செருமிய அந்த அவதாரம் சொன்னது, “எனக்கு வேண்டப்பட்ட நிலம் ஒன்று…
“அவர்” என முடியும் விகுதியை “அவன்” என மாற்றிக்கொண்டு அந்தக் கூடத்தை விட்டு வெளியே நடந்தேன். அவதாரம் என்னைக் கூப்பிட்டது. திரும்பிப் பார்க்காமல் வெளியே நடந்தேன். நெஞ்சிலிருந்த பாரம் அடிவயிறு நோக்கி இறங்கியது. அனைத்தையும் சிறுநீரில் கழித்தேன்.
excellent story