கனவின் நீரோடை

அது
என் கனவில் ஓடிய
அதே நீரோடை தான்
ஒவ்வொரு துளியிலும்

மணல் மேல் கூழாங்கற்கள்
அதன் மேல் கண்ணாடி நீர்
அடி வரை இருந்தவற்றை
தெளிவாய்க் காட்டி
சாத்திய வளைவு நெளிவுகளுடன்
மனதிலிருந்து நழுவி
எங்கோ ஓடியது ஓடை
ஜீவ நதியாய்

நாளின் முதல் சூரியக் கதிர்களில்
ஒளிரும் பிரதிபலிப்புகள்
தங்க மணலின் நகர்வாய்
மீண்டும் மீண்டும் அதன் அடியில்
அதன் வழியெங்கும்

கரைகளைத் தொட்டுத் தொட்டு
தன்னை வடிவமைத்த அது
துள்ளிக் குதித்து ஆரவாரம் செய்தது
ஓரிரண்டு இடங்களில்

ஓர் ஓடையின் சத்திய இலக்கணங்கள்
ஒவ்வொரு அசைவிலும் நகர்விலும்
பின்னியபடி நெளிந்தோடின

சொர்க்கத்தின் குளிருடன்
மேடு பள்ளங்களில் ஏறி இறங்கிய
அதன் இசைத் துண்டுகளில்
வழிந்தோடியது மகிழ்ச்சி கலந்த மயக்கம்

முணுமுணுப்பற்ற சுழல்களின்
சூத்திர முடிச்சுகள்
ஓடையின் ஆழம் நோக்கிப் பயணித்தன
அவிழ்த்து விடை அறிந்து கொள்ள

கனவுகள் போல தாவரங்கள்
கரையின் இரு பக்கங்களிலும்
ரகசியக் குறிப்புகளோடு
தவமிருந்த மரங்களை இறுகப் பற்றியபடி

பெயர் தெரியாப் பூக்களே ஏராளம்
அப்பூக்களின் மணம் கரைந்த நீர்
வழிந்தது வழியெங்கும்
வாசனைத் திரவமாய்

தன் பரப்பில் விழுந்த
வனப் பறவைகளின் ஒலிகளில்
அன்று விரும்பிய ஒன்றை
அவ்வெளி எங்கும் எதிரொலித்தது இயற்கை
ஆதி மண்ணின் தேவ கானமாய் மாற்றி

இலைகளும் பூக்களும்
துடுப்பற்ற ஓடமென
எதிர்ப்பும் இலக்கும் இன்றி
ஓடின ஓடையின் வேகத்தில்

குளிர்காலக் காலையினால்
அந்த நீரோடையே
நிறம்பி வழிந்து கொண்டிருந்தது

அணுவின் அமைதியுடன்
ஒரு பூனைக் குட்டியைப் போல்
அடி வைத்து நகர்ந்து கொண்டிருந்தது பிரபஞ்சம்
ஓர் ஓடையாய்ச் சுருங்கி

கால் நனைத்தேன்
கபாலம் வரை ஏதேதோ பரவியது
அதில் குளிரும் இருந்தது

ஆனாலும்
ஓடையின்
ஏதோ ஒரு பரிமாணத்தில் ஒளிந்திருந்த
அதன் அந்தரங்க வரிகளை
என்னால் வாசிக்கவே முடியவில்லை
இன்று வரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.