உன் பார்வையில்

கடிகாரத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்து வேலைநேரம் முடிந்ததும் கணினியை அணைத்துவிட்டு அலுவலகக் கட்டடத்தில் இருந்து நீ வெளியே வரும்போது மணி இரவு பத்தைத் தாண்டியிருந்தது. ஓட்டமும் நடையுமாய் உன் முன்னே செல்லும் விக்னேஷ் திரும்பி உன்னைப் பார்த்து “சீக்கிரம் வாடா. கடையைப் பூட்டிடப் போறான்,” என்கிறான்.

“பத்து மணிக்கே பூட்டிருப்பான்டா. நாளைக்குப் பாத்துக்கலாம்,” என்கிறாய் நீ.

வாகன நிறுத்துமிடத்தில் நுழைந்து வரிசையாய் நிற்கும் பைக்குகளின் இடையே புகுந்து தன் வண்டியைக் கண்டுபிடித்த சிரிப்புடன் உன்னைப் பார்க்கும் விக்னேஷ், “அக்கவுண்ட்டுக்கு பணம் வந்தாச்சு. கொண்டாடியே ஆகணும்,” என்கிறான்.

“நான் ஓட்டறேன்டா,” என்று நீ கேட்கிறாய்.

வண்டியில் ஏறி ஓட்டுநர் இருக்கையில் அமரும் விக்னேஷ் பைக்கை பக்கவாட்டில் தட்டிச் சொல்கிறான், “மத்தவங்க கை வெச்சா டார்லிங் கோவிச்சுக்கும்.”

விக்னேஷ் வண்டியை இயக்க பின்னே ஏறி அமர்ந்ததும் நீ சொல்கிறாய், “இன்னைக்குத்தான் முதல் சம்பளம் வாங்கியிருக்கேன். இன்னும் நிறைய சம்பாதிச்சு நிறைய செலவு பண்ணனும்டா. பாத்துப்போ.”

நீ பேசுவதைக் கேட்காததுபோல் வண்டியை உறுமவிட்டு காற்றைக் கிழித்துக் கொண்டு முன்னே செலுத்துகிறான் விக்னேஷ். கண்ணில் வழியும் நீர்த்துளியைத் துடைத்துக் கொண்டு “மெதுவா போடா, குளிருது” என்று நீ விக்னேஷின் தோளைத் தட்டுகிறாய். வண்டியின் வேகம் சற்றே குறைகிறது.

இருட்டுச் சாலையில் வானெங்கும் நக்ஷத்திரம், உனக்கு மட்டும் முழுமுகத்தைக் காட்டும் சந்திரன். முதல் சம்பாத்தியத்தை ஜேப்பில் வைத்துக் கொண்டவனுக்கு தெரியக்கூடும் வானம் உனக்கும் தெரிகிறது. பிறப்பில் இருந்து படித்து முடித்து வேலை கிடைக்கும்வரை விக்னேஷ் உன் அளவுக்கு கஷ்டப்பட்டிருக்கலாம், படாமலும் இருந்திருக்கலாம். ஒரு மாதப் பழக்கத்தில் அவனைப் பற்றிய முழு வரலாறும் தெரியாவிட்டாலும் ஒன்று மட்டும் உனக்கு உறுதியாய்த் தெரியும், உனக்குத் தெரிந்த வானம் அவனுக்குத் தெரிந்திருக்காது. அவரவருக்கு அவரவர் வானம்.

சரவணம்பட்டி தாண்டியதும் மணியைப் பார்த்துவிட்டு ஒரு பெட்டிக்கடையில் வண்டியை நிறுத்தி சிகரெட் வாங்கிப் பற்ற வைத்துக் கொள்கிறான் விக்னேஷ். புகையை இழுத்து ரசித்து வெளியே விட்டபடி அவன் சொல்கிறான், “சொந்தக் காசுல புடிக்கற முதல் சிகரெட்.”

“இன்னும் உன் சம்பளத்தை ஏ.டி.எம்.ல இருந்து எடுக்கல. சட்டப்படி இது உங்க அப்பா காசு,” என்கிறாய் நீ.

“போடா டேய், பதினைஞ்சாயிரம் இருக்கு அக்கவுண்டல. நான் சம்பாதிச்ச காசு.”

“ஒரு பரோட்டா மாஸ்டரோட சம்பளத்தை விட பத்தாயிரம் ரூபா கம்மி.”

சிகரெட் சாம்பலைத் தட்டிக்கொண்டே சொல்கிறான் விக்னேஷ், “நினைச்ச உடனே எல்லாம் பரோட்டா மாஸ்டர் ஆக முடியாது மச்சி. முதல்ல எச்சிலை எடுக்கறதுல ஆரம்பிக்கணும். அதை விடு. மணியாச்சு, இனி பாருக்கு உள்ள விட மாட்டாங்க. என்ன பண்ணலாம்?”

“சொந்தக் காசுல முதல் செலவு சாராயமா, வேணாம்டா,” என்கிறாய் நீ.

“நீதான் சொன்னாயே, ஏ.டி.எம்.ல இருந்து எடுக்கறவரை கைல இருக்கறது அப்பா காசுன்னு.”

உன் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது. வீட்டுக்கு வந்துகொண்டே இருப்பதாகச் சொல்லி அணைப்பைத் துண்டித்துவிட்டு நீ விக்னேஷிடம் சொல்கிறாய், “அம்மா கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. வண்டியை எடு.”

பைக் கிளம்பியதும் நீ சொல்கிறாய், “உனக்கு ஏதாவது குடிக்கணும், அவ்வளவுதானே. போற வழியில ஆவாரம்பாளையம் ரோடு ராமகிருஷ்ணா ஹாஸ்பிடல் எதிர்ல ராகம் பேக்கரி இருக்கும். ஜில்லுன்னு ஐஸ்கட்டிப் பால்ல ஷார்ஜா ஷேக் போடுவான் பாரு, அப்டி இருக்கும். ஆளுக்கு ரெண்டு மில்க் ஷேக் குடிச்சுட்டு என்னை வீட்டுல விட்டுடு.”

“போடா இவனே. பேசாம வா” என்று வண்டியை விரட்டுகிறான் விக்னேஷ். நீ என்ன சொன்னாலும் அவன் இன்று குடிக்காமல் இருக்கப் போவதில்லை. உனக்குத் தெரியும், இலக்கியமும், நல்லிசையும் மற்ற நுண்கலைகளும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல மக்களுக்கு மிகவே. ஆனால் இதை நீ சொன்னால் யார் கேட்கிறார்கள்? நுட்பமான எதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாத யாரொருவனும் கொண்டாட ஏதாவது ஒன்று வேண்டும் என்ற தாயன்புடன்தானே நம் அரசுகள் மதுக்கடைகளை திறந்து நடத்துகின்றன?

கணபதி பேருந்து நிலையத்துக்கு முன் பைக்கை சாலையோரம் ஒதுக்கி நிறுத்தி, “மச்சி, ஸைட்ல கிடைக்குதா பார்ப்போமா?” என்கிறான் விக்னேஷ்.

உன் இடதுபுறத்தில் ஒரு பூட்டப்பட்ட டாஸ்மாக் கடையை நீ பார்க்கிறாய். விளக்குகள் அணைந்துகொண்டிருந்த டாஸ்மாக் கடையை ஒட்டிய பாரில் இருந்து கடைசிக் குடிமகன்கள் ஆட்டமும் நடையுமாய் வெளியேறிச் சென்று கொண்டிருந்தனர்.

“இருடா நான் போய் பாக்கறேன்” என்று சொல்லிவிட்டு விக்னேஷ் வண்டியில் இருந்து இறங்கிச் செல்கிறான். நீ பைக் அருகேயே நின்றுகொண்டு சுற்றுமுற்றும் பார்க்கிறாய். வெளியூர் பேருந்துகள் அவ்வப்போது முளைத்து மறையும் ஆள் நடமாட்டமில்லா சாலையில் கடைகள் அனைத்தும் பூட்டியிருக்க தூரத்தில் ஒரு மருந்துக்கடை மட்டும் திறந்திருந்தது. பின்னால் இருந்து விக்னேஷ் உன்னைக் கூப்பிடுகிறான். நீ திரும்பிப் பார்க்கிறாய். விக்னேஷ் அருகில் இருக்கும் சந்துக்குள் நுழைகிறான். நீயும் அவன் பின்னே செல்கிறாய். சந்துக்குள் சற்று தூரம் நடந்து பூட்டியிருக்கும் ஒரு கடைவாசற் படியருகே நின்று விக்னேஷ் உனக்காக காத்திருக்கிறான். நீ அருகே சென்றதும் விக்னேஷ் சட்டைக்குள் இருந்து ஒரு பியர் பாட்டிலை வெளியே எடுத்துக் காண்பிக்கிறான்.

“எப்படிடா வாங்கின?” என்று நீ கேட்கிறாய்.

“டபுள் ரேட் கொடுத்துக் கேளுங்கள், கொடுக்கப்படும்,” என்கிறான் விக்னேஷ்.

“எனக்கும் ஒண்ணு வாங்கிருக்கலாம்ல?”

“நீ நல்லவன் மச்சி. போற வழியில உனக்கு மில்க் ஷேக் வாங்கித்தரேன்,” என்ற விக்னேஷ் பியர் பாட்டிலை பல்லால் கடித்துத் திறந்து மூடியைத் துப்புகிறான். திறக்கப்பட்ட பாட்டில் வாயை அவன் விரலால் மூடி பாட்டிலை இருமுறை குலுக்கி விரலை நகர்த்த உள்ளே இருந்த பியர் நுரைத்து நீரூற்று போல பொங்குகிறது.

“சியர்ஸ் மச்சி” என்று விக்னேஷ் பாட்டிலை உன் பக்கம் திருப்புகிறான். நீ சற்றே நகர்ந்து நனையாமல் தப்பித்து “சியர்ஸ்” என்கிறாய். பாதி பியர் வழிந்து வீணான பின் ஒரு வாய் குடித்துவிட்டு பாட்டிலை உன்னிடம் கொடுக்கிறான் விக்னேஷ். அதை வாங்கி நீயும் ஒரு மடக்கு குடிக்கிறாய்.

“இதுதான் விடுதலை இல்ல? மோட்டோ ஜீ.பி.ரேஸ்ல போடியம் ஜெயிச்ச ரோஸ்ஸி ஷாம்பேன் உடைச்சு கொண்டாடற மாதிரி,” என்கிறான் விக்னேஷ்.

“எது விடுதலையா? இதெல்லாம் சும்மா சில்லறை சந்தோஷம்டா,” என்கிறாய் நீ.

“வேற என்ன பண்றது? வேலைக்குச் சேர்ந்தாச்சு. இனி பைக் ரேஸ் விடறது, சினிமானு சுத்தறது, சரக்கு அடிச்சு மட்டை ஆகறது எல்லாம் முடிஞ்சுது, அவ்வளவுதான். பினிஷ்.”

ஒரு வாய் பியரைக் குடித்துவிட்டு பாட்டிலை விக்னேஷிடம் கொடுக்கும் நீ கேட்கிறாய், “அப்போ சார் இனி என்ன பண்ண போறீங்க?”

“டீக்கா டிரஸ் பண்ணிக்கணும், ஷேர் மார்க்கெட் பாக்கணும், பேப்பர் படிக்கணும், தண்ணி அடிக்கப் போனா ராயலா ரெண்டு லார்ஜ் ஸ்காட்ச்சோட முடிச்சுக்கணும்,” என்கிறான் விக்னேஷ்.

“நீ? ரெண்டு லார்ஜ்ல நிறுத்தப் போற?”

“நிஜமா மச்சி” என்று சொல்லிவிட்டு ஒரு மடக்கு பியர் குடித்த விக்னேஷ் சொல்கிறான், “தாரிணி கல்யாணத்துக்கு அவளுக்குச் சொல்லாம செலவு பண்ணனும். அப்பாவை போதும்னு சொல்லி வீட்டுல உக்கார வைக்கணும், அப்பறம் காருண்யா, நாளைக்கு காலைலயே அவளைப் போய் பாக்கணும். ஏன்டா நீ சொல்ற மாதிரி சில்லறை சந்தோஷங்களே இனி வாழ்க்கையா மாறிடுமோ?”

“அரை பியருக்கே–“ என்று நீ ஆரம்பிக்கும்போது, “யாருப்பா அது,” என்று பின்னால் ஒரு குரல் அசரீரிபோல கேட்கிறது. நீ திரும்பிப் பார்க்கிறாய். டாஸ்மாக் அருகே சாலையில் இருந்து சந்துக்குள் நுழையும் திருப்பத்தில் நின்றுகொண்டிருந்த பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த காவலர் வண்டியிலிருந்து இறங்கி உன்னை நோக்கி நடந்து வருகிறார். மற்றொரு காவலர் வண்டியிலேயே அமர்ந்து கொண்டிருக்க பைக்கின் முன்விளக்கு வெளிச்சம் உங்களை ஊடுருவுகிறது.

“போலீஸ்டா” என்று நீ திரும்பி விக்னேஷைப் பார்க்கிறாய். அவன் கையில் இருந்த பியர் பாட்டிலை முதுகின் பின் சட்டைக்குள் ஒளித்துக் கொள்கிறான். உங்களை நெருங்கி வரும் காவலர் “இருட்டுல என்ன பண்ணிட்டு இருக்கீங்க,” என்று கேட்கிறார்.

“சும்மா பேசிட்டு இருந்தோம் சார், கிளம்பிடறோம்,” என்று விக்னேஷ் நடக்க ஆரம்பிக்கிறான். நீ அவன் பின்னால் நடக்கிறாய். அவரைக் கடந்து முன்னே செல்லும் உங்களைப் பார்த்துக் கொண்டிருந்த காவலர் பின்னால் இருந்து அழைக்கிறார், “டேய், நில்லுங்க.”

“போச்சுடா,” என்று உன்னிடம் மெதுவாகச் சொல்லும் விக்னேஷ் திரும்புகிறான். நீயும் திரும்பி காவலரைப் பார்க்கிறாய்.

“பின்னாடி என்ன?”

மெதுவாக பியர் பாட்டிலை முதுகில் இருந்து வெளியே எடுத்த விக்னேஷ், “சாரி சார்” என்கிறான்.

“ஜெயபால், ரோட்ல நின்னு பியர் குடிச்சுட்டு இருக்காங்க.”

ஜெயபால் என்று அழைக்கப்பட்ட காவலர் வண்டியை அணைத்துவிட்டு இறங்கி உங்கள் அருகே வந்து சொல்கிறார், “நல்லதாப் போச்சு, கேஸ் கிடைச்சுடுச்சு பாஸ்கர். எங்க தம்பி மத்த பாட்டில் எல்லாம்?”

நீ ஜெயபாலைப் பார்த்து சொல்கிறாய், “ஒண்ணுதான் சார் வாங்கினோம்.” விக்னேஷ் கையில் இருக்கும் பாட்டிலை ஜெயபாலிடம் காட்டுகிறான்.

பாஸ்கர் சொல்கிறார், “பேரு அட்ரெஸ் எல்லாம் சொல்லுங்க தம்பி.”

“சார், மன்னிச்சுடுங்க. வேலைக்கு போய் இன்னைக்குத்தான் முதல் சம்பளம் வாங்கறோம். அதான்…” என்கிறான் விக்னேஷ்.

“ஓஹோ, அப்போ பேரு, வீட்டு அட்ரெஸ், வேலை செய்யற கம்பெனி அட்ரஸ் மூணும் சொல்லுங்க.” என்கிறார் பாஸ்கர்.

ஜெயபால் உன்னருகே வந்து கேட்கிறார், “எங்க வேலை செய்யறீங்க?”

“டீ.டீ.எஸ் சார்” என்கிறாய் நீ.

“எது, இந்த கீரணத்தத்துல இருக்கே?” என்கிறார் பாஸ்கர்.

ஜெயபால் கேட்கிறார், “ஏன் பாஸ்கர், நம்ம கமலா மேடம் மக அங்கதான வேலை செய்யறா?”

“ஆமாம்” என்ற பாஸ்கர் விக்னேஷிடம் கேட்கிறார், “கம்ப்யூட்டர் கம்பெனில வேலை செஞ்சா நடு ரோட்டுல தண்ணி அடிப்பீங்களா?”

“சார், கடையைப் பூட்டிட்டான். வீட்டுக்கும் எடுத்துட்டு போக முடியாது. இனிமேல் இப்படி பண்ண மாட்டோம் சார்,” என்கிறான் விக்னேஷ்.

ஜெயபால் உன்னிடம் கேட்கிறார், “ஏன்ப்பா என் பொண்ணு பிஎஸ்சி முடிச்சிருக்கா, உங்க கம்பெனில வேலைக்கு ஆள் எடுக்கறாங்களா இப்போ?”

நீ சொல்கிறாய், “எனக்கு காலேஜ்லயே ஆன் கேம்பஸ்ல வேலை கிடைச்சுது சார். இப்போ இங்க ஓப்பனிங்க் இருக்கான்னு—”

“சார், ரெஸ்யூமை எனக்கு அனுப்ப சொல்லுங்க. எப்படியும் வாங்கிடலாம்,” என்று இடைமறித்துச் சொல்லும் விக்னேஷ் ஜெயபாலுக்குத் தன் மின்னஞ்சல் முகவரியை குறுஞ்செய்தியாக பகிர்கிறான்.

“சரி சரி, கிளம்புங்க, இனிமேல் ரோட்ல நின்னு இப்படியெல்லாம் குடிக்காதீங்க” என்று சொல்லிவிட்டு பாஸ்கர் பைக்கை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார். விக்னேஷ் கையில் இருக்கும் பாட்டிலைப் பார்த்து ஜெயபால், “இந்த மட்டமான சரக்கைக் குடிக்கறதுக்காகவே உங்க மேல கேஸ் போடணும்,” என்று சொல்லிவிட்டு பாஸ்கருடன் நடக்கிறார்.

பாட்டிலைக் காண்பித்து அவர்கள் போனதும் மீதமிருக்கும் இரு மடக்கு பியரை குடித்துவிட்டுப் போகலாம் என்று விக்னேஷ் உன்னிடம் கண் ஜாடையில் சொல்கிறான். நீ வேண்டாம் என்று தலையசைத்து பாட்டிலை வீசச் சொல்லி கண் காட்டுகிறாய். விக்னேஷ் மறுத்துத் தலையசைத்துச் சிரிக்கிறான். திடீரென ஒரு சைரன் ஒலி கேட்கிறது. சாலையில் ஒரு போலீஸ் ஜீப் தலையில் சுழலும் விளக்குகளோடு வந்து நிற்கிறது. உங்களுக்கும் ஜீப்புக்கும் நடுவே நிற்கும் பாஸ்கரும் ஜெயபாலும் சல்யூட் அடிக்கின்றனர். ஜீப்பின் முன்னிருக்கையிலிருந்து திரண்ட உடல்வாகுடன் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு காவல் அதிகாரி இறங்குகிறான்.

அவனருகே சென்று மறுபடி ஒரு சல்யூட் அடிக்கும் ஜெயபால் “ரோட்ல நின்னு தண்ணி அடிச்சுட்டு இருக்காங்க சார். இப்பத்தான் விசாரிக்க ஆரம்பிச்சோம், நீங்க வந்துட்டீங்க,“ என்கிறார்.

ஐந்து நிமிடங்களுக்கு முன் தன் மகளுக்கு வேலை கேட்டு விக்னேஷின் மின்னஞ்சலை வாங்கி வைத்துக் கொண்ட ஜெயபால் அல்ல இந்த ஜெயபால் என்று உனக்குப் புரிகிறது. திரும்பிப் பார்க்கிறாய், பாட்டிலை இன்னும் கையில் பிடித்துக்கொண்டு நடப்பதை குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறான் விக்னேஷ். வீட்டுக்குள்ளேயே வளரும் குழந்தைகள் பச்சோந்திகளைப் பார்த்திருப்பதில்லை. காவல் அதிகாரி விறுவிறுவென உங்கள் அருகே வந்து நின்று விரல்களால் சொடுக்கிட்டு அழைக்கிறார்.

விக்னேஷ் அவர்முன் சென்று நிற்கிறான். அவன் கையைப் பார்த்து “என்ன இது?” என்று அதிகாரி கேட்கிறார். விக்னேஷ் பியர் பாட்டிலை நிலத்தில் வைத்துவிட்டு நிமிர்கிறான். விக்னேஷ் நிமிர நிமிர அதிகாரி அவனை அறைய கையை வீசுகிறார். தற்காப்பு உணர்ச்சியா, அதிர்ச்சியா அல்லது இளமையின் எழுச்சியா என்று உனக்குத் தெரியவில்லை, ஏதோ ஒரு உந்துதலால் விக்னேஷ் தன் இடது கைமுட்டியால் முகத்தை மறைத்துக் கொள்ள அதிகாரியின் கை விக்னேஷின் கன்னத்தில் படாமல் முட்டியில் படுகிறது. அதிகாரியின் அதிகாரத்தை எதிர்த்து எழுந்த ஒரு கையால் அவர் குறி தவறுகிறது. எழக்கூடாத கை, அவர் எதிர்பார்க்காத எதிர்ப்பு. அதிகாரி தன் கையை உதறிக்கொள்கிறார்.

விக்னேஷ் தலை நிமிர்ந்து என்ன நடக்கிறது என்று பார்க்கிறான். இப்போது அதிகாரி கோபத்தில் வலது கையை இன்னும் வேகமாய் இழுத்து அறைகிறார். இந்த முறை அறை கன்னத்தில் விழவில்லை, அடி விக்னேஷின் காதிலும் தலையிலும் விழுகிறது. பயிற்சிக்காலம் முழுவதும் பஞ்சுப்பொதிகளைக் குத்திக் கொண்டிருந்த குத்துச்சண்டை வீரன் முதன்முதலாய் ஒரு உயிருள்ள எதிரியைக் கண்டதும் எகிறி அடிப்பது போன்ற அடி. கால் மடங்கி தடுமாறி முட்டியிட்டு தலையைப் பிடித்துக்கொண்டே குனிந்த விக்னேஷ் எழுந்து நிற்கிறான்.

மரண தண்டனை விதிக்கப்பட்டு வரிசையில் நிற்கும் கைதிகளில் உனக்கு முன் நிற்பவன் துப்பாக்கித் தோட்டாவை வாங்கிக்கொண்டு தரையில் விழுந்தபின் அவனைச் சுட்ட அதிகாரி திரும்பி உன்னைப் பார்ப்பதுபோல விக்னேஷை அடித்த அதிகாரி திரும்பி உன்னைப் பார்க்கிறார். நீ மெதுவாக நடந்து அவர்முன் சென்று நிற்கிறாய். எதிர்க்கக் கூடாது என்ற பாடம் உனக்குப் புகட்டப்பட்டு விட்டது. அவர் அடிக்கிறார், நீ வாங்குகிறாய், அவ்வளவுதான். மறுபேச்சின்றி, சிணுங்கலின்றி, அதிகாரி கொடுத்த அறையை வாங்கிக் கொண்டு வளைத்துக் கட்டப்பட்ட மூங்கிலாய் தரையைப் பார்த்து நீ நிற்கிறாய்.

“தாயலிகளை ஜீப்ல ஏத்துங்க பாஸ்கர்” என்று சொல்லிவிட்டு அதிகாரி ஜீப்பை நோக்கி நடக்கிறார். பாஸ்கரும் ஜெயபாலும் உன்னையும் விக்னேஷையும் கைப்பிடித்து ஜீப்புக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஜீப்பின் முன்னே அதிகாரியும், ஓட்டுநரும் அமர்ந்திருக்க பின்னால் உன்னையும் விக்னேஷையும் அமர வைத்துவிட்டு அவர்கள் விலகிச் செல்கிறார்கள். ஜீப் நகர ஆரம்பிக்கிறது. நீ குனிந்து கண்ணாடி வழியே பார்க்கிறாய். பாஸ்கரும் ஜெயபாலும் அவர்கள் பைக்கை எதிர்புறம் திருப்பிக் கொண்டு காந்திபுரம் நோக்கிச் செல்கிறார்கள். விக்னேஷின் பைக் சாலையில் தனியாக நிற்கிறது. நீ விக்னேஷைப் பார்க்கிறாய். அவன் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருக்கிறான். என்ன நடக்கிறது என்ற தன்னுணர்வு திரும்பியதும் “சார் சார் சார், எங்களை விட்டுருங்க சார்” என்று நீ கெஞ்ச ஆரம்பிக்கிறாய். அதிகாரியோ, ஜீப் ஓட்டுனரோ ஏன் விக்னேஷ் கூட உன் குரலைக் கேட்பதாய் தெரியவில்லை. நீ விடாமல் கெஞ்சுகிறாய். சாலையைப் பார்த்தவாறே அதிகாரி சொல்கிறார், “திமிரு. படிச்ச திமிரு.”

சத்தி ரோட்டில் சென்ற ஜீப் சி‌எம்‌எஸ் பள்ளி அருகே திரும்பி சந்துக்குள் நுழைகிறது. நீ விக்னேஷ் தோளைத் தொட்டு அவன் காதில் சொல்கிறாய், “ஜீப்ல எதுக்குடா கொண்டு போறாங்க?” விக்னேஷ் புரியாமல் உன்னைப் பார்க்கிறான். நீ மறுபடியும் சொல்கிறாய், “விடச் சொல்லி கேளுடா.” விக்னேஷ் தலையை மெதுவாக ஆட்டுகிறான். நீங்கள் இருவரும் பேசுகிறீர்கள், “சார், தெரியாம பண்ணிட்டோம் சார். பிளீஸ், விட்டுடுங்க.”

அதிகாரி உங்களைப் பார்க்காமலே சொல்கிறார், “தெரியாமலா? படிச்சதும் வேலை, பைக்கு, பின்னாடி ஒரு பொண்ணு. ஒரு தராதரம் இல்லை. கஷ்டப்படாம எல்லாம் கிடைச்சா ரோட்ல கட்டிப் புடிச்சுட்டு போவீங்களாடா தெவிடியாப் பசங்களா?”

ஜீப் சாலையோரம் பாதி மூடப்பட்ட ஒரு டீக்கடை முன் நிற்கிறது. அதிகாரி ஜீப்பில் இருந்து இறங்கி டீக்கடைத் துணித்தடுப்பைத் திறந்துகொண்டு உள்ளே செல்கிறார். நீ ஜீப் ஓட்டுநரிடம் கேட்கிறாய், “சார், நீங்களாவது எங்களை விட்டுட சொல்லுங்க சார். கேஸ் எல்லாம் வேண்டாம் சார்.”

ஓட்டுநர் சொல்கிறார், “கொஞ்சம் சும்மா இருங்கடா. ஒரு சுத்து சுத்திட்டு அந்த ஆளே விட்டுருவார். நீங்களா பேசி மாட்டிக்காதீங்க.”

டீக்கடை உள்ளிருந்து அதிகாரி வெளியே வந்து ஜீப்பில் அமர்கிறார். லுங்கி அணிந்த ஒரு இளைஞன் ஜீப்பின் பின்னால் ஏறி உன்னருகே அமர்கிறான். ஜீப் கிளம்புகிறது. இளைஞனின் கைப்பேசி அலறுகிறது. அந்த இளைஞன் அதிகாரியிடம் கேட்கிறான், “ஐயா, அண்ணன் கூப்பிடறார், பேசிக்கறேன்.” அதிகாரியின் பின்தலை ஆடுகிறது. ஜீப் கணபதி நோக்கி திரும்புகிறது.

இளைஞன் கைப்பேசியை கையால் பொத்திக்கொண்டு மெதுவாக பேசுகிறான், “குடுத்துட்டோன்னே… இல்லைன்னே… கேசு கொறைவாம், காலைல விட்டுருவாங்கலாம்… இல்லைன்னே… மூணு லிட்டர் இருக்கு. கால வர தாங்கும்.”

பேசி முடித்த இளைஞன் உன்னைப் பார்த்து சிரிக்கிறான். நீ அமைதியாய் விக்னேஷ் கையைப் பற்றிக் கொண்டு அமர்கிறாய். ஜீப் அரைமணி நேரம் அங்கிங்கும் அலைந்து கணபதியை நெருங்கும்போது அதிகாரி திரும்பிப் பார்த்து கேட்கிறார், “ஸ்டேஷன் வரீங்களாடா ரெண்டு பேரும்?”

நீ சொல்கிறாய், “இல்லை சார். இனிமேல் இப்படி பண்ணமாட்டோம்.”

“சரி, சுரேஷ். இவனுங்களை ஏதாவது பஸ் ஸ்டாப்ல நிறுத்தி அனுப்பு.”

“எங்க பைக் அந்த டாஸ்மாக் பக்கத்துலதான் சார் இருக்கு.”

ஜீப்பில் இருந்து நீங்கள் இறங்கியதும் பின்னால் இருக்கும் இளைஞன் உங்களைப் பார்த்து சிரிக்கிறான். ஜீப் உங்களை உதிர்த்துவிட்டு நகர்ந்ததும் நீ விக்னேஷிடம் கேட்கிறாய், “டேய், என்னடா ஆச்சு? எதுவும் பேசாம இருக்கே?”

“செம அடிடா. ஒரு மாதிரி கிர்ருன்னு இருக்கு. இந்தா நீயே பைக் ஓட்டு,” என்று சொல்லி விக்னேஷ் பைக் சாவியை உன்னிடம் கொடுக்கிறான்.

நீ பைக்கைக் கிளப்பியதும் விக்னேஷ் உன் தோளைப் பிடித்துக்கொண்டு பின்னால் ஏறி அமர்கிறான். உங்கள் இருவருக்கும் எதுவும் பேசிக்கொள்ளத் தோன்றவில்லை. அமைதியாக வண்டியை ஓட்டி விக்னேஷின் வீட்டின்முன் சென்று நிறுத்துகிறாய். பைக்கில் இருந்து இறங்கிய விக்னேஷ், “நீ பைக் எடுத்துட்டு போயிக்கோ. காலைல கொண்டு வா போதும்,” என்கிறான்.

ஏதோ சொல்ல வாயெடுக்கும் நீ விக்னேஷ் முகத்தைக் கவனித்து, “மச்சி, உன் காதுல என்னடா ஏதோ சிவப்பா இருக்கு,” என்கிறாய்.

“என்ன வை பிளட் சேம் பிளட்டா?” என்கிறான் விக்னேஷ்.

“டேய், நிஜமாடா, இங்க வா பாக்கறேன்.”

“தூக்கக் கலக்கமா இருக்குடா. நாளைக்கு சிரிக்கறேன்” என்று சொல்லி மெலிதாய்ப் புன்னகைத்த விக்னேஷ் நீ கூப்பிடுவதைக் கண்டுகொள்ளாமல் திரும்பி அவன் வீடு நோக்கி நடந்து நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே உன் பார்வையிலிருந்து மெதுவாக மறைகிறான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.