இறுதி வாக்குமூலம்

அவன்

சங்கர சுப்பிரமணியன் வந்திருந்தான். அவன் என்னோடு படிச்சவன். மேல ரத வீதியில வீடு. மொதல்ல பாத்தரக் கட நடத்தினான். பிறகு வெறகுக் கட நடத்தினான். எதையுமே பெரிசா செய்ய முடியல. இப்போ வீட்டுலயே வடை, முறுக்குன்னு போட்டு யாவாரம் பண்ணுதான். அவனும், அவன் பொஞ்சாதியுமா சேந்து யாவாரம் பண்ணுதாங்க. எப்பமாவது வருவான். ரெண்டு பேரும் பள்ளி நாட்கள், ஆத்துக்கு குளிக்கப் போனது, சினிமா பாத்தது, தசரான்னு எதை எதையோ பத்திப் பேசுவோம். பாளயங்கோட்ட செந்தில் டாக்கீஸ், டவுன்ல சங்கர் டாக்கீஸ் எல்லாம் நடத்துன நாராயண பிள்ளயப் பத்தி பேச்சு வந்தது. நாராயண பிள்ள பஸ் சர்வீஸ் எல்லாங்கூட நடத்துனாரு. கீழ ரத வீதியில பெரிய வீடு. சங்கர சுப்பிரமணியனுக்கு நாராயண பிள்ள மாமா மொறை வேணும்.

அவர் பையன் கல்யாணத்துக்கு எம்.எல். வஸந்தகுமாரி கச்சேரி எல்லாம் வச்சாரு. ரொம்ப போர்ஸா வாழ்ந்த ஆளு. அந்தக் கல்யாணத்துக்கு நடிகர் நரசிம்ம பாரதி எல்லாம் மெட்ராஸுல இருந்து வந்திருந்தாரு. நாராயண பிள்ளயப் பத்தி பேச்சு வந்ததும் , அவன் மோட்டையே பாத்துக்கிட்டு இருந்தான். ”என்னத்தச் சொல்ல மாப்ள” என்றான்.

”இப்பம் அவங்க வீட்டுல யாருடே இருக்கா?..” என்று கேட்டேன்.

”என்னத்தச் சொல்ல மாப்ள… கெவர்மெண்டு பஸ்ஸ எல்லாம் தேசியமயமாக்கினம் பொறவு, அவங்க வீட்டுல ஓட்டிக்கிட்டிருந்த பஸ் எல்லாம் போயிட்டுது. எல்லா ரூட்டுலயும் கெவர்மெண்டு பஸ்ஸு ஓட ஆரம்பிச்சிட்டுது. கடைசியில ஒண்ணு ரெண்டு டவுன் பஸ்ஸை வச்சு ஓட்டிக்கிட்டு இருந்தாங்க. கட்டுபடி ஆகலன்னு டவுன் பஸ்ஸையும் நிறுத்திட்டாங்க. சினிமா கொட்டகய மூடி ஏழெட்டு வருசமாச்சு. டி.வி. வந்தம் பொறவு யாரு சினிமா பாக்க கொட்டகைக்கி வாரா? மூடிக் கெடக்க கொட்டகய விக்கவும் முடியல. வேண்ட ஆளு இல்ல. பஸ் கம்பெனியக் க்ளோஸ் பண்ணுனதுல, பங்காளிகளுக்குக் குடுத்ததெல்லாம் போவ பெரிய தொக ரெண்டோ மூணோ வந்திச்சு. அதப் பேங்கில போட்டு வட்டிய வேண்டிச் சாப்புட்டு காலத்த ஓட்டுதாங்க மாப்ள” என்றான்.

எனக்கே அவன் சொன்னதைக் கேட்டு மனசுக்குக் கஷ்டமாத்தான் இருந்துச்சு. அன்னைக்கி நடந்த எம்.எல்.வி. கச்சேரிய நானும் பந்தல்ல உக்காந்து கேட்டிருக்கேன்.

”ஒரே தொழில நம்பி இருந்தா இப்பிடித்தான் ஆகும்” என்றேன்.

”எல்லாம் போற நேரம்… என்னத்த மாப்ள சொல்ல” என்றான்.

எனக்குக் க.நா.சு.வோட வாந்தவர் கெட்டால் நாவல் ஞாபகத்துக்கு வந்தது.

தமிழ் இலக்கியம் பூரா பெரும்பாலும் வாழ்ந்து கெட்டுப் போனவங்களைப் பத்தித்தானே இருக்கு. அதுதான எழுத்தாளங்களுக்கு லேசா எழுத வருது. சோகத்த எழுதுறது சுலபமா இருக்கு என்று தோன்றியது. இந்த மாதிரி, நாராயண பிள்ள மாதிரி சின்னச் சின்னப் பணக்காரங்கதான் அரசியல், சமூக மாத்தங்களிலே தாக்குப் பிடிக்க முடியாமே சில பேரு நொடிச்சுப் போயிருதாங்க. டாடா, பிர்லா மாதிரி பெரும் பணக்காரங்களை ஒலகத்துல நடக்கிற மாற்றங்கள் ஒண்ணும் பண்ணுதது இல்லே. அம்பானி குடும்பம், அதானி குடும்பம் எல்லாம் எத்தன தலைமொறை ஆனாலும் நொடிச்சுப் போகாது. இவங்க எல்லாம் பல தொழில்கள்ள மொதலீடு செஞ்சு நிரந்தரப் பணக்காரங்களா இருக்காங்க. பொருளாதார ஏற்ற எறக்கங்கள் எல்லாம் பெரிசா அவங்களப் பாதிக்காது. ஒலகத்துல மேலயும் போக முடியாம, கீழயும் போக முடியாமே ரெண்டுங் கெட்டானா நின்னு அவஸ்தைப் படுதது மிடில் கிளாஸ்தான். எங்க வாக்குமூலம் மிடில் கிளாஸோட வேல்யூஸ்கள் பத்தினதுதான். ஆனா, மிடில் கிளாஸ்தான் கலைகளை வளர்க்குதுன்னு சொல்றாங்க.

வாழ கலை மட்டும், அழகுணர்ச்சி மட்டும் போதுமா? இதுதான் என்னோட வாக்குமூலம்.

(முற்றும்)

Series Navigation<< வாக்குமூலம் – அத்தியாயம் 15

2 Replies to “இறுதி வாக்குமூலம்”

  1. இன்னும் சில மாதங்கள் தொடர்ந்து இருக்கலாம். சட்டென முடிந்தது என்னவோ நீண்டகால நண்பருடன் பேசித் திடீரெனக் கிளம்பி விட்டாற்போல..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.