
1. அற்புதம்
இந்த நிமிடங்களை
அற்புதமாக்க
இப்பொழுதே எதும் நடக்கத் தேவையில்லை
அன்றொரு நாள்
எலியாட்ஸ் கரையில்
புறா எச்சமிட்டுத் துவைக்காத சட்டை
எத்தனை முறை துவைத்தாலும்
சட்டையை விட்டுப் போகாத
அக்கா மகளின் மூத்திர வாடை
நீடித்த அரவணைப்பில்
உடல் நனைத்து வழிந்த
வியர்வை வீச்சம்
பறக்க எத்தனித்து
மச்சுப் படி ஏறி குதித்து
உண்டான நீள் தழும்பு
என்று ஏதாவது ஒரு
அற்பமான நினைவு
இப்பொழுதினை அற்புதமாக்க போதுமாகிறது…
2.குறுக்கீடு
வெப்பச்சலனத்தை விடவும்
கூடுதல் வெப்பம்
இம்முனைக்கும் அம்முனைக்கும் இடையில்
மாலை சாலை கடக்கையில்.
தேநீர் சூட்டில் ஆறிவிட்டு
கார்களின் சூட்டில்
வெந்து தணிகிறேன்.
இடைநில்லாது செல்லும்
நெரிசலுக்கிடையில்
வலிந்து வழிவிடும்
வழிப்போக்கன் ஆற்றுகிறான் மீண்டும்.
அவர் அவசரத்தில்
எனக்கான சிறு நிறுத்தமும்
என் அவசரத்தில்
அவருக்கான சிறு புன்னகையுமாக
கடந்துபோகிறது தினம் ஒரு மாலை…
3. விடுவிப்பு
சபிக்கப்பட்ட நாள் இன்று
நனையக்கூட வாய்க்கவில்லை
பேருந்து வரும்வரை நிழற்குடைக்குள்
உடனிருக்கும்வரை அவள் குடைக்குள்
தரைபட்டு சிதறும் துளிகள்
ஆசிர்வதிக்கின்றன கால்களை
முழுதாய் மூழ்க எத்தனித்தால்
ஏதோவோர் குடை வரும்
இல்லை மழை நிற்கும்
இந்நாளின் சாபம் நீக்க
நாய்குடை கீழ் நின்று
மழை பார்த்தால் போதும்…
4. சலனம்
இன்று போல் என்றும்
இந்த சாலையை
கடந்ததே இல்லை.
வழக்கமான நெரிசல் இல்லை
சிகப்புக்கும் பச்சைக்கும் வேலை இல்லை
சாலையை ஒருவன் கடக்கும் நேரத்தில்
மனிதனைக் கடக்கத் துடிக்கும் வாகனங்கள்
ஒன்றுமே இல்லை.
புகைகளின் ஊடே புகுந்துப் பழகியதால்
நெரிசலே இல்லாத
இந்த சாலையைக் கடக்க
நெருடலாக உள்ளது.
சில நிமிட காத்திருப்புக்குப் பின்
சீறி வரும் சில கார்களின்
ஊடே புகுந்து
கடக்கிறேன் இந்த சாலையை…
5. கர்வம்
யாருக்கும் கிடைக்காததெல்லாம்
கிடைத்துவிடுகிறது எனக்கு
உன்னிடமிருந்து.
யாருக்கும் ஒதுக்கப்படாத
உன்னுடைய நேரங்கள்
எனக்காய் ஒதுக்கப்படுகின்றன.
யாரிடமும் சொல்லப்படாத
உன்னுடைய பொய்கள்
எனக்காய் சொல்லப்படுகின்றன.
யாரிடமும் பொழியப்படாத
உன்னுடைய அன்பு
எனக்காய் பொழியப்படுகிறது.
யார் பேசியும் வராத
உன்னுடையப் புன்னகை
என் இருப்பால் வருகிறது.
யாருக்கும் கிடைக்காத இதெல்லாம்
எனக்குக் கிடைத்துவிடுவதால்,
யாருக்கும் கிடைக்காதவனாய்
நான் ஆகின்றேன்,
உனக்காய் ஒதுக்கப்பட்டவனாய்…
6. ஆற்றாமை
வேறென்ன செய்ய
ஆற்றாமைப் பெருவெளியில்…
சுக்கு நூறாய்ப் போன
கொண்டாட்டக் கண்ணாடிகள்
காய்ந்த இலைச்சருகாய்
காற்றிலும் மிதக்கலாம்
கழிவிலும் வீழலாம்.
சில மிடறு
மதுவோ தேநீரோ
ஆற்றலாம்.
குட்டி நண்டு போல்
மிகக் குட்டியான
பொந்துக்குள் புகுத்திக்கொள்ளலாம்.
யாருக்கோ யாரோ
எழுதிய வரிகளுக்குள்
தஞ்சமடையலாம்.
பிரக்ஞை அற்று
பலகணி ஓரம்
சாய்நாற்காலியில்
ஆசுவாசம் மட்டும் தேடலாம்…
ஆற்றாமைப் பெருவெளியில்
வேறென்ன செய்ய…