அஷ்டத்யாயீ

இந்துக்களுக்கு எட்டு என்ற எண் சிறப்பு வாய்ந்தது. அஷ்ட லக்ஷ்மி, அஷ்ட ஐஸ்வர்யங்கள், அஷ்ட திக் பாலர்கள், அஷ்ட வசுக்கள், எட்டுத் திசைகள், புவியைத் தாங்குவதாகச் சொல்லப்படும் எட்டு யானைகள், எட்டு சக்திகள், அஷ்டாவதானம், நிறையச் சொல்லலாம்.

அஷ்டவக்ரர் என்றொரு முனிவர், நம் வேத காலத்தைச் சேர்ந்தவர். அவர் உடலில் எட்டு கோணல்களுடன் பிறந்ததால் வந்த காரணப் பெயர் அது. இதன் பின்னே ஒரு சுவையான சரித்திரம் இருக்கிறது. அவரது தந்தையும் வேதம் ஓதும் விற்பன்னர். அஷ்டவக்ரர் கருவில் இருந்த காலத்தில், தன் தந்தை சரியான உச்சரிப்பின்றி, வேதம் சொல்வதைத் திருத்துகிறார். அதனால் எரிச்சலுற்ற தந்தை கொடுத்த சாபத்தால் தான் அவர் எட்டுக் கோணல்களுடன் பிறக்கிறார். ஒரு வேத சபையில் இவரது தந்தையான கஹோதா தோற்று நீர் நிலையில் சிறை வைக்கப்படுகிறார். அதே சபையில், வாதில் வென்று நீர் நிலையிலிருந்த அனைத்துப் பண்டிதர்களையும் அஷ்டவக்ரர் விடுவிக்கிறார். இவரது அஷ்டவக்ர கீதை புகழ் வாய்ந்தது. உண்மையான விடுதலையைப் பற்றியும், பிரபஞ்சம் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருப்பதைப் பற்றியும், தன்னை அறிவதே ஆன்மவிடுதலை என்றும் சொன்னவர்.

இது நமது பாரம்பரியத்தைப் பற்றிச் சொல்வதற்காக மேலே தரப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் இந்திய வடமொழி இலக்கணத்தைத் தந்த பாணினியைப் பற்றியும், பல்லாயிரம் ஆண்டுகளாகத் தீர்வு காண முடியாதிருந்த அவரது இலக்கண கூற்றிற்கு தீர்வு கண்டுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலை ஆய்வாளர் முனைவர் ரிஷி அதுல் ராஜ்போபட் (Rishi Atul Rajpopat) அவர்களைப் பற்றியும் சிறிது தெரிந்து கொள்வோம்.

பாணினி ( Pānini ) கி மு 350ல் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் வசித்தவர் எனக் கூறப்படுகிறது. இந்திய மொழியியலின் தந்தை என்று மதிக்கப்படுபவர். அவர் எழுதியது, (சிற்சில முன் தொகுப்புக்களின் உதவி கொண்டும், தானே பெரும்பாலும் வடிவமைத்தும்) அஷ்டத்யாயீ என்னும் வடமொழி இலக்கண புத்தகம். எட்டு அத்தியாயங்கள் கொண்டுள்ள நூல். இங்கே அத்தியாயங்கள் என்று குறிப்படுவது புத்தகங்களை. ஒவ்வொரு புத்தகத்திலும் நான்கு பாடாந்தரங்கள். வடமொழி இலக்கணத்திற்கான 4000 நெறிமுறைகள் கொண்டுள்ளது. இதன் சிறப்பே இது வெறும் இலக்கண நூல் மட்டுமில்லை; படிப்படியான வழிமுறைகளின் படி, இதைக் கொண்டு இலக்கண சுத்தமான வார்த்தைகளையும், வாக்கியங்களையும் அமைக்க முடியும் என்பதால் இது முழு அளவிலான ஒரு மொழி இயந்திரம். வார்த்தைகளை எவ்விதம் அமைக்க வேண்டும் என்பதற்கான சொல் விதிகளையும், அவை, வாக்கியங்களில் எவ்வாறு பொருத்தப்பட வேண்டும் என்பதற்கான விதிகளையும் வகுத்துத் தந்தவர். உதாரணமாக ‘தே’ என்ற எழுத்தை எடுத்துக் கொள்வோம். அதிலிருந்து ‘தேவ்’ என்ற சொல்லைப் பெறலாம். அதன் இடது கைப்புற எழுத்தான ‘தே’ அப்படியே இருக்க, வலக்கை பகுதியில் பின்னொட்டுக்களாக, ‘தேவ’ ‘தேவு’, ‘தேவதா’ போன்ற வார்த்தை அமைப்புகளை ஏற்படுத்தும் விதிகள் செய்து முறைப்படுத்தியவர் அவர்.

அவரது இந்த இலக்கண நூலில் முதல் இரண்டில் வரையறை விதிகளும், (Definition rules) பரிபாஷை (परिभाशा सूत्रास् ‘metarules’) விதிகளும் சொல்லப்படுகின்றன. இதிலேயே செயல்முறை விதிகளும் இருக்கின்றன.

மூன்றாது வாய்மொழிச் சொற்களின் வேரிலும் தண்டிலும் (verbal roots and stems) பலவிதமான பின்னொட்டுக்களை (Affixes) இணைப்பதைச் சொல்கிறது.

நான்கும், ஐந்தும் வெவ்வேறான இணைப்புகளை, தண்டுகளில், (அதாவது பெயரளவு மொழித் தண்டுகளில்) (nominal stems) சேர்ப்பதன் விதிகளைப் பேசுகிறது.

ஆறு, ஏழு, எட்டு ஆகியவை மொழி இலக்கணக் கட்டுமானத்திலும், அதன் இணைப்புகளிலும் எந்தெந்த உருவ ஒலிச் (morpho- phonological) செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற விதிகளைச் சொல்கிறது. ஒரு வார்த்தையை அறிய பல புத்தகங்களிலிருந்து பல வேறு விதிகளின் மூலம் அணுகத் தேவையிருக்கிறது.

பாணினியின் படைப்பைப் புரிந்து கொள்ள அவர் எந்தெந்த அணுகுமுறையைப் பயன்படுத்தினார் என்பதும், எப்படி அவற்றை அமைத்திருக்கிறார் என்பதும் புரிவது அவசியம். அவர் மிகத் திறம்பட, சரியாக, இரத்தினச் சுருக்கமாக தன்னுடைய சூத்திரங்களைத் தந்துள்ளார். சில வார்த்தைகளில் பல செய்திகள். சரியாகப் புரிவது என்பது எனவே கடினமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக 6.1.9- சன்யானோ(ஹ்)வில் (सन्यानोह्) அவர் சொல்கிறார்: ஒரு வார்த்தையின் அடிப்படை, அது பெருகாதிருக்கையில், பின்னொட்டைச் சேர்க்கும்போது பெருகுதலுக்கு உள்ளாகும்.

முந்தைய விதிகளின் தொடர்ச்சியாக அவர் தன் விதிகளைக் கட்டமைத்திருக்கிறார் என்றும், நேர்க்கோட்டியல் வழி என்றும் அறிஞர்கள் பலர் சொல்கின்றனர். ஆனால், இந்தத் தொடர்ச்சி என்பதை அந்தச் சாரத்தின் பாற்பட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே எந்த வழி முறையில் இந்த விதிகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிவது கடினம். அதில் தெளிவு கிடைத்த பின்னரும் கூட, இரு விதிகள் ஒரு சூழலில் பொருந்தும் என்றால் அதில் எதைத் தேர்வு செய்வது? அப்போது ஒரு விதி மற்றொன்றை தடை செய்யும், அல்லது இரண்டுமே ஒன்றையொன்று தடுக்கும். இதுதான் ‘விதிச் சிக்கல்.’ (Rule Conflict); ‘விப்ரதிசேதே பரம்கார்யம்’ (विप्रथिसेथेपरम्कार्यम्) (1.4.2) என்று இதற்கான தீர்வு விதிகளையும் அவர் சொல்கிறார். ஆயினும், அதை சரியாகப் புரிந்து செயலாற்ற இதுவரை சில சூழ்நிலைகள் அமையவில்லை. இது அவர் இலக்கணத்தின் குற்றமல்ல. அந்தச் செயற்பாட்டு வழிமுறையை, 2500 வருடமாக புதிராக இருந்த ஒன்றை, ரிஷி ராஜ் போபட் என்னும் இந்திய ஆய்வாளர் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் சமர்ப்பித்து, பாணினியின் இலக்கணத்தை கணினிகளுக்குச் சொல்லித் தரமுடியும் என நிரூபித்துள்ளார். முழுமையான மொழி இயந்திரமாக இது வடிவு பெறும்.

பாணினியின் இந்த இலக்கண நூலிற்கு முந்தைய ரிஷிகளும் விளக்கம் தந்திருக்கிறார்கள். காத்யாயனா தனிப்பட்ட முறையில் படித்து, விவாதித்து, எழுதி, (வார்த்திகா) சீடர்கள் மூலம் இந்த அறிவை வளர்த்தார். இலக்கணத்தின் தனிப்பட்ட, சிறப்பான அம்சங்களோடு, அஷ்டத்யாயீயை அவர் ஒரு ஒருங்கிணைப்பட்ட இயந்திரமாக அதன் வீச்சு அதிகம் எனவும் காட்டினார்.

காத்யாயனரின் ‘வார்த்திகா’விற்கு பதஞ்சலி ‘மகாபாஷ்யா’ என்ற விளக்க உரை எழுதினார். இதில் அவர் தன் கருத்துக்களையும், மெடா விதிகளையும் இணைத்துப் பின்னி, பாணினியின் படிப்படியான வழிமுறைகளைப் பற்றி பெரும் தெளிவு அளித்தார்.

இதற்குப் பின் பலர் பாணினியின் இலக்கண நூலைப் பற்றி எழுதினார்கள் அவர்கள் பொதுவில் ‘பரிபாஷைக்காரர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். இதிலும் இரு கட்சிகள் உண்டு- பாணினி பள்ளி, அது அல்லாதது- ஆயினும் இந்த இரு கட்சிகளையும் ‘விதிச் சிக்கல்’ ஈர்த்தது.

சில அயலக அறிஞர்களும் இதில் உண்டு. ஹுபன் (Houben) அஷ்டத்யாயியின் நேர்கோட்டுத்தன்மையையும், நிலைத்த சிக்கல் தீர்க்கும் வழிமுறைகளையும் ஏற்கவில்லை. ரூட்பெர்கென் (Roodbergen) இது நேர்க்கோடானது, மேலும் விதிகளின் பயன்பாடும், விதிச் சிக்கலின் தீர்வும் தனித்தனியானவை என்றார். ப்ரோன்(ங்)ஹார்ஸ்ட் (Bronkhorst) இதை நேர்கோட்டு முறையிலும், நிலைத்த சிக்கல் தீர்க்கும் முறையிலும் இணைத்துப் பொருள் கொள்ளலாம் என்று காட்டினார். ஜோஷி, கிபார்ஸ்கி, கார்டோனா (Joshi&Kipaarsky,Cardona) நேர்கோட்டியலை ஏற்காவிட்டாலும், இதன் இயந்திர சக்தியை முழுதும் ஏற்கிறார்கள்.

விதிச்சிக்கல் என்றால் என்ன? அதை எப்படிக் கையாள்வது?

காஷிகா என்ற ரிஷி சொல்வது :

  • சம சக்தியுள்ள இரு விதிகள் மோதுகையில், வரிசைப்படி கடைசியில் வந்ததை எடுத்துக் கொள்ள வேண்டும். சமமற்ற சக்திகளுக்கிடையே இந்தப் பேச்சே இல்லை;
  • நித்யா, அனித்யா செயல்பாடுகளில், நித்யா சக்தி மிக்கது. அந்தரங்க, பகிரங்க செயல்பாடுகளில் அந்தரங்கத்திற்கு வலிமை

இதற்கு பல மாற்றுக் கருத்துக்கள் எழுந்திருந்தாலும், இதனுடைய முக்கியத்துவத்தை மறுக்க முடியாது. பாணினி, அவரது கிரந்தத்தை நாம் துல்யபலா, அதுல்யபலா என்றெல்லாம் பகுப்போம் என்று நினைத்திருக்க மாட்டார். விவாதத்திற்கு உள்ளாகிய 1.4.2வை, நூலின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே அவர் எழுதவில்லை, முழு அஷ்டத்தாயியீக்கும் பொருந்துவது போலத்தான் படைத்துள்ளார் என்று ரிஷி போபட் காட்டியுள்ளார்.

1.4.2ன் அர்த்தம் தான் என்ன?

நாம் முன்னரே பார்த்தோம் அல்லவா- இரு அல்லது அதற்கும் மேலான விதிகள் ஒரு செயல்முறைக்கு ஏற்புடையதாக இருந்தால், வலியது வெல்லும் என்று. அதை நாம் ஓர் படியில் (Steps) விதிகளின் தொடர்பு- {SSRI- Same Step Rule Interaction} என்று அழைப்போம்.

ஒரு உதாரணம்

முதல் மாதிரி: அ+ஆ

‘அ’வில் விதி எண் 1அ மற்றும் விதி எண் 2அ செயல்படும் சாத்தியங்கள் உள்ளது என எடுத்துக் கொள்ளுங்கள்.

இரண்டாம் மாதிரி அ+ஆ-

விதி எண் அ, ‘ அ’ வில் செயல்படும்.

‘ஆ’விற்கு விதி எண் ஆ

இதில் முதல் மாதிரியை, ஒரே செயல்பாட்டின் தொடர்பு- (SOI- Same Operand Interaction) என்றும், இரண்டாம் மாதிரியை, மாறுபட்ட செயல்பாட்டின் தொடர்பு (DOI- Different Operand Interaction) என்றும் அழைப்போம். இந்த SOIக்கும், DOIக்கும் இருக்கும் துல்லிய வேறுபாட்டை முன்னவர்களும், இன்றைய அறிஞர்களும் உணரவில்லை. இதைப் புரிந்து கொண்டால், முழு அஷ்டத்தாயியின் அமைப்பும், விதி 1.4.2ன் முக்கியத்துவமும் புரியும். பொது விதியும், விதிவிலக்கைச் (exceptional rules) சொல்லும் விதியும் இருக்கையில் விதிவிலக்கு விதியே எடுக்கப்படும். எனவே SOI சூழலில் விதிவிலக்கு பயனாகும். DOIயில் வலதுகைப் புறம் இருக்கும் விதி, இடதில் இருப்பதை எடுக்க வேண்டாம். வலது கைப்புறத்தில் இருக்கும் விதியை அவர் ‘பரா’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒன்றுக்கொன்று எதிரானவை-(விப்ரதிசேதா) என 1.4.2 சுட்டுவது DOIயை. இங்கே ஒன்றை கவனியுங்கள்- பெரும்பாலும் விதிச் சிக்கல் என்றே சொல்லப்பட்டு வந்த ஒன்றை ஒன்றுக்கொன்று எதிரானவை என்று குறிப்பிடுகிறார் ஆய்வாளர் ரிஷி. ‘பரா’ என்பது, செயல்பாட்டுப் படி நிலைகளில் இடமிருந்து வலம் வருவது, ‘பின்னால் வருவது’ என்பதாகும். அதை மேலிருந்து கீழ் என முன்னர் புரிந்திருந்தார்கள். அதாவது விதிகளின் வரிசைக்கிரமம் என்று நினைத்துவிட்டார்கள். DOI, மற்றும் SOI இடையில் உள்ள முக்கிய வேறுபாடு என்பது, இரு செயற்பாட்டு முறைகளின் இடையே நிலவும் போட்டியில், அவைகள் ஈடுபடுகின்றனவா, இல்லையா என்பதுவே.

ஆய்வாளர் ரிஷி சொல்கிறார்- விதிச்சிக்கலை பற்றிப் பேசியவர்கள், சிக்கலில்லாத நிலையைக் குறித்துப் பேசவில்லை. இதில் பாரம்பர்யமாக உள்ளவர்கள் இந்தச் சிக்கலற்ற நிலையைத் தொட்டுச் சென்றிருக்கிறாரகள் நவீன அறிஞர்கள் இதை நினைக்கவேயில்லை. ‘இ’, ‘ஈ’ இரண்டிற்கும் இடையே மோதலில்லை என எடுத்துக் கொண்டால், செயற்பாட்டின் இந்தப் படி நிலையில், ‘இ’ பயன்பாட்டால், அடுத்ததில் ‘ஈ’ பயன்படும். அல்லது இங்கு ‘ஈ’ அங்கு ‘இ’.

இதை ஒரு விளக்கப்படம் மூலம் பார்க்கலாமா?

RE14TypeBlockingConflict
1SOIunidirectional15Yes
2SOImutualYes
3DOIunidirectionalYes
4DOImutualYes
5SOInoneNo
6DOInoneNo

ஒரு கூட்டுச் சொல் எப்படி வருகிறது எனப்பார்க்கலாம்- பானு+ உதயா- (ஆதவன் உதயம்) பானுதயா என ‘உ’ வை உட்கொண்டு கூட்டுச் சொல்லாக வரும். {Banu + Udaya- Two separate words- When joined the letter U is dealt as follows: it becomes Banudaya भानु + उदय –भानुदय}

2500 ஆண்டுகளாக சரியான வழிமுறையை அறிய இயலாமல் இருந்த புதிரை ராஜ்போபட் இப்போது விடுவித்திருக்கிறார். “பாணினியின் அறிவு, கூர்மையானது, அபூர்வமானது. மனித வரலாற்றில் இணை சொல்ல முடியாத ஒரு இயந்திரத்தை அவர் கொடுத்திருக்கிறார். நாம் அவருடைய விதிகளில் புதுமைகளைப் புகுத்தத் தேவையில்லை.” என்று சொல்கிறார் அவர்.

நாம் முன்பு பார்த்த SSRI- Same Step Rule Interaction- ஒரே படி நிலையில் விதித் தொடர்புகள் என்பதை தன் 1.4.2 மூலம் விளக்கிச் செயல்முறை ஒன்றை பாணினி கொடுத்தார். ஆனால், அதைப் பொருள் கொள்வதில் சிக்கல் எழுந்து அது இப்போது ராஜ்போபட்டால் தீர்வு கண்டுள்ளது. பாணினியின் தனிச் சிறப்பென்பதே அந்த சூத்திரங்களின் சுருக்கமும், அவை விரிவடையும் அர்த்தங்களும் தான். இந்த SSRIகுத் தீர்வாக, பாணினி சொல்லியிருப்பது பெயரளவிலான ஊடுருவலுக்கு மட்டுமில்லை, வார்த்தை ஊடுருவல், ஒன்று, இரண்டு என்று செல்லும் பலவித வழிகளுக்குமானது.

அந்த இலக்கண நூலில் SSRI ஐப் பற்றி சொல்லப்பட்டுள்ள அல்காரிதமை விளக்கியவர் ராஜ் போபட்.

இதனால் என்ன இன்றைய உலகிற்குக் கிடைக்கும்?

  • கணினியில் சம்ஸ்க்ருத மொழியியலைக் கொண்டு வரலாம்.
  • அடிப்படை வேர்ச் சொற்களையும், பின்னொட்டுச் சேர்க்கைகளையும், நம்முடைய விருப்பம்/ எண்ணம் ஆகியவற்றை கணினியில் செலுத்தினால், நாம் அதன் பல்வேறு கணக்கீட்டு வழிகளின் படி வாக்கியங்கள் போன்ற அனைத்தையும் இலக்கண சுத்தமாகப் பெறலாம்.
  • இயற்கை மொழிச் சிக்கலை அறிவது, செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும்.

பாணினி தன்னுடைய தீர்மானமற்ற இயந்திரத்தின் மூலம் காட்டும் சாத்தியங்கள் அபரிமிதமானவை- ஏனெனில் அவை பல்வேறு வழிகளை/விதிகளை/ செயல்முறைகளைப் பார்த்து, ஒரு தீர்மானமான வழிக்கு வந்து, அல்காரிதம் சொல்லும் பாதையில் செல்ல உதவிகரமாக இருக்கும். பல சரியான வழிமுறைகளைச் சொல்வதால் மட்டுமல்ல, இணையாகத், தவறானவற்றை பாணினியின் அல்காரிதம் புறக்கணித்து விடுகிறது.

காலப் போக்கில் இது பலத் துறைகளிலும் பயன்படலாம்.

இந்தியாவில் நிலவும் தட்ப வெப்ப சூழலில் தென்னகத்தில் நல்லெண்ணெயும், வடக்கில் கடுகெண்ணையும் (குளிர் காலங்களில்) பயன்படுத்துவது நல்லது. ஆனால், ஆலீவ் எண்ணெய்க்கும் சந்தை இருக்கிறது.

ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ் போன்றவை, நம் குருணைக் கஞ்சியை விட மதிப்பு பெற்று விட்டன.

ஆடைகளில் மாற்றம், உணவுகளில் மாற்றம்; தவறில்லை. ஒரு மசால் வடைக்குக்கூட அனைத்து மாநில இடு பொருட்கள் தேவைப்படுகின்றன. எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட நாம், மொழியில் மட்டும் இவ்வளவு பிடிவாதமாக இருப்பதேன்? மொழி அரசியல் இல்லை என்றால் பாரதம் இன்னமும் உச்சத்திற்கு போகக்கூடுமோ? நம் மொழிகளை மறக்கக் கூடாது/ மறுக்கக் கூடாது. நம் மொழியின் சிறப்பை நாம் வெளிக் கொணர வேண்டும். ஆனால், அது அடுத்த மொழியை புறக்கணிப்பதால் அடையும் ஒன்றல்ல. ராஜ்போபட்டிற்கு வாழ்த்துக்கள்.

கீழே பாணினியின் விதி; காப்புரிமை கேம்ப்ரிட்ஜ் பல்கலை. எடுத்துக்காட்டிற்காகத் தரப்பட்டுள்ளது.

உசாவி: In Pāṇini We Trust

Discovering the Algorithm for Rule Conflict Resolution in the Aṣṭādhyāyī -Rishi Atul RajpopatSt. John’s College; Faculty of Asian and Middle Eastern Studies; Supervisor: Dr. Vincenzo Vergiani; University of Cambridge 15/12/2022

  1. The Ashtadhyayi of Panini. Translated into English by Srisa Chandra Vasu
    Published by Sindhu Charan Bose at The Panini Office, Benares – 1897
  2. Panini
  3. Panini –His place in Sanskrit Literature  by   Theodor Goldstucker, A.Trubner & Co., London – 1861
  4. Simulating the Paninian System of Sanskrit Grammar by  Anand Mishra
  5. India as Known to Pānini by V. S. Agrawala, Lucknow University of Lucknow, 1953
  6. Computing Science in Ancient India by Professor T.R.N. Rao and Professor Subhash Kak
  7. Panini’s Grammar and Computer Science by Saroja Bhate and Subhash Kak
  8. How Sanskrit Led To The Creation Of Mendeleev’s Periodic Table
  9. Indian Tradition of Linguistics and Pānini by Prof. Rama Nath Sharma
  10. Pāṇini: Catching the Ocean in a Cow’s Hoofprint by Vikram Chandra
  11. Panini: His Work and Its Traditions by George Cardona
  12. A Brief History of Sanskrit Grammar  by James Rang
  13. Introductionto Prakrit by  Alfr ed C . Woolner
  14. Chandah Sutra of Pingala Acharya, Edited by Pandita Visvanatha Sastri , Printed at the Ganesha Press, Calcutta – 1874
  15. Hartmut Scharfe : Grammatical Literature (Otto Harrassowitz, 1977)
  16. Rajpopat, R. (2021). In Pāṇini We Trust: Discovering the Algorithm for Rule Conflict Resolution in the Aṣṭādhyāyī (Doctoral thesis). https://doi.org/10.17863/CAM.80099
  17. Dr.Émilie Aussant paper -‘Sanskrit Grammarians and the ’Speaking Subjectivity
  18. Paniniya-Shiksha ; and here for the meaning
  19. Please click here  for : Paniniya-Dhatu Patha , without pronunciation marks; and for the version with pronunciation marks click here.
  20. Sivasutra (with Vartika)
  21. The Nighantu and the Nirukta by Sri Lakshman Sarup
  22. Text of the Nirukta – Based on the edition by Sri Lakshman Sarup
  23. A critical study of some aspects of Nirukta by Tarapada Chakrabarti
  24. Etymology and magic: Yaska’s Nirukta, Plato’s Cratylus, and the riddle of semantic etymologies by Johannes Bronkhorst
  25. Indian Semantic Analysis: The Nirvacana Tradition  by Eivind Kahrs

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.