அதிரியன் நினைவுகள் – 4

This entry is part 4 of 32 in the series அதிரியன் நினைவுகள்

தமிழாக்கம் : நா. கிருஷ்ணா

எத்தனைவகை (Varius)
எத்தனை மடங்கு (Multiplex)
எத்தனைத் தோற்றம் (Multiformis)

ரூலினுஸ்(Marulinus), என்னுடைய பாட்டனார். கிரகங்கள், நட்சத்திரங்களை நம்புகிறவர். நல்ல உயரம், மெலிந்த உடல், முதுமை காரணமாக பழுத்த தேகம். பத்திரமாக அவர் பாதுகாத்துவரும் விண்கற்கள், அவருடைய நிலங்கள், பண்ணையிலுள்ள கால்நடைகள் ஆகியவற்றிடத்தில் அவர் காட்டும் அன்பில் கனிவிருக்காது, அவற்றில் அன்புக்கான அறிகுறிகளை வெளிப்படையாக உணர முடியாது, வார்த்தைகளையும் உபயோகிக்கமாட்டார், அத்தகைய பிரியத்தை    எனக்கும் வழங்கியவர். நீண்டநெடிய பரம்பரையினரான அவர் முன்னோர்கள் ஸ்கிப்போஸ் (Scipions)1 காலத்திலிருந்து  ஸ்பெய்ன் தேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர் செனட்டர் ஆகவும்  இருந்தார், எங்கள் குடும்பத்தில் அப்பெருமையைப் பெற்ற மூன்றாவதுநபர் அவர், தவிர அதுநாள்வரை எங்கள் குடும்பம் ரோமானிய சமூகத்தில் எக்குவெஸ்ட்ரியன் பிரிவின் (Equestrian orde)2 கீழ் இருந்துவந்தது.   டைட்டஸின்(Titus)3 கீழ் பொதுவிவகாரங்களில் எளிய பங்களிப்பும் செய்தார். மாகாணவாசி என்பதால் அவருக்கு கிரேக்கம் தெரியாது, பதிலாக லத்தீன் மொழியை ஸ்பானிஷ் உச்சரிப்புடன் கரகரப்பான குரலில் பேசுவார், பின்னர் அவரிடமிருந்து எனக்கும் அது தொற்றிக்கொள்ள ரோம் நகரில் நகைப்புக்கும் காரணமானது. அவரை ஞான சூன்யம் என்றும் சொல்லிவிட முடியாது, அவரது மரணத்திற்குப் பிறகு எங்கள் வீட்டில் கண்டெடுத்தப் பெட்டிநிறைய இருபது ஆண்டுகளாக அவர் தீண்டாமல் வைத்திருந்த கணிதக் கருவிகளும்  புத்தகங்களும் இருந்தன. ஒரு பாதி அறிவியல், மறுபாதி குடியானவனென  இரண்டும் சேர்ந்தது எங்கள் பாட்டனார் ஞானம். அடுத்து  அவரிடம் காண்கிற குறுகிய ஒருதலைபட்சமான  கருத்துக்கள் மற்றும் மூதறிவு கலப்பில் பண்டைய கேட்டோவை(Caton)4 நினைவுகூரமுடியும். அதேவேளை கேட்டோ தனது வாழ்நாளை  செனெட் அவையிலும் மத்திய தரைக்கடல் பிரதேசமான கார்த்தேஜ்(Carthage)  யுத்தத்திலும் கழித்தவர், தயவு தாட்சண்யத்தை அறிந்திராத உரோமைக் குடியசை உதாரணம் காட்ட பொருத்தமான ஆசாமி. எனது பாட்டனார் மரூலினுஸின் சற்று அசைக்க முடியாத கடினத்தன்மையை விளங்கிக்கொள்ள வெகுதூரம் பின்னோக்கிச் செல்லவேண்டும், சரியாகச் சொல்வதெனில் புராதனக் காலத்திற்கு.   பழங்குடியினர் மரபில் வந்த அவர் அனைத்தும் புனிதமென கருதப்பட்டு அஞ்சி வாழ்ந்ததொரு உலகின் பிரதிநிதி, அவரிடம் சிற் சில சமயங்களில் இறந்தவர்களை அழைத்து குறிகேட்கும் மாரண வித்தை நிமித்திகர்களான  ஏத்ருஸ்கஸ் (Nécromanciens étrusques) மனிதர்களின் சாயலையும் நான் கண்டதுண்டு. வெறும் தலையுடன் வெளியில் போகாவேண்டாமென  எனக்கு உரிமையானவர்கள் என்னைக்  கடிந்துக் கொண்டிருக்கிறார்கள், என் பாட்டனும் வெளியில் செல்லும்போது தலைக்கு அணியவேண்டியதை அணிவதில்லை; அவருடைய காய்ப்பேறிய முரட்டுப் பாதங்களுக்கு காலணிகளும்  வேண்டியதில்லை. சாதாரண நாட்களில் அவருடைய ஆடைகளுக்கும், குத்துகாலிட்டு வெயில் காய்ந்தபடி உடார்ந்திருக்கும்  முதிய பிச்சைக்காரர்கள் அல்லது  வறிய விவசாயிகள் ஆடைகளுக்கும் வேறுபாடுகளைக் காண முடியாது. அவரை மந்திரவாதி என்று சொல்பவர்களும் உண்டு.  கிராமவாசிகள் அவரது பார்வையை தவிர்த்திருக்கிறார்கள். விலங்குகள்மீது தனிப்பட்டவகையில் ஒருவித சக்தியை அவரால் பிரயோகிக்க முடிந்தது. அவருடைய நரைத்த தலை எச்சரிக்கையுடனும் சினேகித பாவனையுடனும் விஷப் பாம்புகளின் கூட்டை நோக்கிச் சென்றதும், அப்போது அங்கிருந்த ஓணானொன்று கணு கணுவாக வீங்கிப் புடைத்திருக்கும் அவர் விரல்களைக் கண்டு ஒருவித நடனத்தை நிகழ்த்தியதும் எனக்கு நினைவிருக்கிறது. 

கோடை இரவுகளில், வானத்தை அவதானிக்க வறண்ட ஒரு குன்றின் உச்சிக்கு என்னை அழைத்து செல்வார். நான் எரி நட்சத்திரங்களை எண்ணிமுடித்த அலுப்பில் உழவுசால்போன்ற பள்ளங்களில் அயர்ந்து உறங்கிவிடுவேன். அவர் உட்கார்ந்த நிலையில் இருப்பார், தலை உயர்ந்திருக்கும் பார்வை நட்சத்திரங்களுடன் பயணிக்கும், ஆனால் அதனை பிறர் உணர்வது கடினம். அவர் தத்துவஞானி பிலோலாஸ்(Philolaus), வானசாத்திர அறிஞர் ஹிப்பார்க்கஸ் (Hipparchus) சிந்தனைகளை தெரிந்து வைத்திருந்தார்.  பிற்காலத்தில்  எனது விருப்பத் தேர்வாக இருந்த வானசாத்திரம் மற்றும் கணிதசாத்திர அறிஞர் சமோசுவின் அரிஸ்டார்கஸ் (Aristarque de Samos)சிந்தனையையும் அறிந்திருந்தார், ஆனால் ஒரு கட்டத்தில் உறுதிபடுத்தவியலாத அவர்களின் சிந்தனைமுறைகள் என்னுடைய பாட்டனுடைய ஆர்வத்தைக் குறைத்துவிட்டன. அன்றிலிருந்து நட்சத்திரங்கள் அவருக்குத் தீ கங்குகள், கற்களையொத்தப் பொருட்கள், மெல்ல ஊர்ந்துசெல்லும் சிற்றுயிர்கள். அவற்றைக்கொண்டு சகுனங்களைக் கணிக்க அவரால் முடிந்தது. விண்மீன்களை மாய பிரபஞ்சத்தின் ஒரு கூறெனவும் கருதினார். அவரைப் பொறுத்தவரை அக்கூறு கடவுள்களின் விருப்பங்களையும், சாத்தான்களின் குறுக்கீடுகளையும், மனிதர்களின் ஊழ்வினைகளையும் உள்ளடக்கியது. அவற்றின் அடிப்படையில் எனது எதிர்காலத்தையும்  கணித்தார். ஒரு நாள் இரவு உறக்கதிலிருந்த என்னை உலுக்கி எழுப்பி, பண்ணை விவசாயிகளிடம் « இந்த வருடம் மகசூல் அமோகமாக இருக்கும் » என ஆரூடம் சொல்ல உபயோகிக்கின்ற அதே குரலில், இரத்தின சுருக்கமாக «  நீ உலகாளப் பிறந்தவன் » என்றார். பின்னர், தமது ஆரூடத்தை சந்தேகித்தவர்போல, குளிர் காலங்களில், வெப்பமூட்ட  எரிந்துகொண்டிருந்த சுள்ளிகளில் ஒன்றுடன் என்னை நெருங்கினார்,  அப்போது எனக்குப் பதினோருவயது, எனது தடித்த உள்ளங்கையை எரியும் சுள்ளியின் உதவியுடன் அவதானித்தார். விண்ணுலகம் எவ்வகையான ஊழ்வினைக் கோடுகளை எனக்கு விதித்திருக்கிறதென்பது  தெரியாது.  உலகம் அனைத்தும் அவருக்கு ஒரு கண்டம்;   கையைப் பார்த்து அவரால் நட்சத்திரங்களை உறுதிப்படுத்த முடிந்தது. அவரது ஆரூடம் நீங்கள் நினைக்கும் அளவிற்குத் தாக்கத்தை என்னிடம் ஏற்படுத்தவில்லை: பால்ய வயதில் எல்லா குழந்தைகளையும்போல  எது நடந்தாலென்ன என்கிற மனநிலைதான் எனக்கும். பிறருடைய எதிர்காலத்தைக் கணிக்க முடிந்த அவர் தம்மைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை கணிக்கத் தவறி இருக்கவேண்டும், முதுமைக்கே உரிய நிகழ்கால  எதிர்கால சம்பவங்களிலுள்ள அக்கறையின்மை அதற்குக் காரணமாக இருக்கலாம். ஒருநாள் காலை செஸ்நட் மரங்களடர்ந்த தோப்பில் அவருடைய எல்லையை அடைந்ததின் அடையாளமாக பிணமாகக் கிடந்தார் –  குளிரின் பற்களுக்கு இரையாகி  கிடந்த அவரை ஊனுண்ணி பறவைகள் கொத்திக்கொண்டிருந்தன. இறப்பதற்கு முன்பாகத் தமது கலைஞானத்தை எனக்கு கற்பிக்க முயன்று தோற்ற மனிதர், காரணம் அறிவியலுக்கென்றுள்ள சிக்கலான மற்றும் ஓரளவு எரிச்சல்தரும் விவரங்களைக்குறித்து குழப்பிக்கொண்டிராமல், இயற்கையிலேயே உடனடியாக முடிவை எட்டவேண்டுமென்பதில் எனக்கு ஆர்வம். அதேவேளை சில ஆபத்தான அனுபவங்ககளிடத்தில் எனக்குள்ள ருசி இன்றுவரை நீடிக்கிறது, சொல்லப்போனால் சற்றுக் கூடுதலாகவே.

என் தந்தை, ஏலியஸ் அஃபர் அத்ரியானுஸ்(Aelius Afer Hadrianus) நல்லொழுக்கங்கள் நிறைந்த  மனிதர்.  தேசம், அரசாங்கம் என அவர்  உழைத்தபோதும், பலனடைந்தவரில்லை.  செனெட் அவையில், அவர் குரல் எடுபட்டதில்லை. வழக்கமாக நம்முடைய ஆதிக்கத்தின் கீழிருக்கும் ஆப்ரிக்க பகுதி நிர்வாகிகள் செல்வத்தில் கொழிப்பதுண்டு, ஆனால் இவர் அங்கும் எதையும்  சம்பாதித்தவரில்லை. திரும்பிய பின் இங்கும் ஸ்பெயின் நாட்டில் நமது கைவசமிருந்த    இட்டாலிகா (Italica) நகராட்சியில் ஓயாமல் உள்ளூர் சர்ச்சைகளைத் தீர்த்துவைத்து சோர்வுற்றதுதான்  அவர் கண்ட பலன். இலட்சியங்களற்ற மனிதர், வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் பெரிதாக அனுபவித்தவரில்லை. பெரும்பாலான மனிதர்களைப்போலவே  ஆண்டுதோறும் மேலும்மேலும் நிறமிழந்து, இறுதியில் அற்பவிஷயங்களில் வெறித்தனமாக ஒரு முறைமையைக் கையாண்டு தம்மை சிறுமைபடுத்திக்கொண்டார். எந்த ஒன்றிலும் தீவிர கவனத்தைச் செலுத்தியதோடு தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது  என்பதிலும் அவருக்கிருந்த உன்னதமான அக்கறையை நானே அறிந்திருக்கிறேன். அதன் காரணமாக, மனித உயிர்கள் அனைத்தையும் அசாதாரணமாகச் சந்தேகித்தார். நான் சிறுவன் என்கிறபோதும் என்னையும் அப்பட்டியலில் சேர்த்திருந்தார். எனவே அவர் உயிரோடிருந்து நான் அடைந்த வெற்றிகளைக் கண்டிருந்தால்கூட, அவ்வெற்றிகள் அவரைக் குறைந்தபட்சம் வியப்பில் ஆழ்த்துவதற்குக்கூட  சாத்தியமில்லை.  குடும்பப் பெருமைகள் மிகவும் வலுவாக இருக்கிற்போது, புதிய பெருமைகளை எப்படி அனுமதிக்கமுடியும் ? பெரும்பாரமாக இருந்த அந்த மனிதர் எங்களைப் பிரிந்தபோது எனக்கு பன்னிரண்டுவயது. அதன் பிறகு என்னுடைய தாய்  தன்னுடைய எஞ்சியஆயுளைக் கழிக்க விதவைகளுக்கான மடத்தில்  சேர்ந்துவிட்டார். ரோம் நகரிலிருந்து எனக்கென நியமிக்கப்பட்ட காப்பாளார் அழைக்க நான் அங்கு சென்றேன், அன்றுதான் என்னுடைய தாயை கடைசியாகப் பார்த்தேன், அதன் பிறகு அவரைத் திரும்பக் காணும் சந்தர்ப்பம் எனக்கு அமையவில்லை. ஆனால் இன்றைக்கும் முன்னோர்களின் நினைவாக சுவரில் உள்ள மார்பளவு சிலையையொத்த   முகத்துடன் இனிமையும் துயரமும் சுமந்து படுத்திருக்கும் ஸ்பெய்ன் பெண்ணுருவம் மனதில் இருக்கிறது, இப்பெணுருவத்திடமும்  கடே (Gadès)5 நகரப் பெண்களைபோலவே குறுகிய மிதியடிகளுக்குள் அடங்கிய சிறு பாதங்களும்,  குறைசொல்லமுடியாத கடே மீனவப்பெண்களிடம் காண்கிற  நடனக்கலைஞர்களின் மெல்லிய ஊசலாட்ட  இடையும் இருக்கிறது.

ஒரு மனிதன் அல்லது ஒரு குடும்பம், தம்முடைய  இருத்தலை உணர்ந்து தங்கள் காலத்திய  முக்கிய நிகழ்வுகள், சிந்தனைகளில் பங்கெடுப்பது அவசியம் என்கிற தவறான அபிப்ராயம் நம்மிடம் உள்ளது இதைக் குறித்து நான் அடிக்கடி யோசித்திருக்கிறேன். எதிர் நடவடிக்கைகளாக ரோமானியர்கள் தீட்டிய திட்டங்கள் ஸ்பெயினின் தேசத்தின் எங்கோ ஒரு மூலையில் வசித்த எனது பெற்றோரை எட்டுவதில்லை,  இருப்பினும் நீரோவுக்கு எதிரான கிளர்ச்சியின் போது, ஒருநாள் இரவு  என் தாத்தா கல்பாவிற்கு(Galba) வழங்கிய  விருந்தோம்பலை இங்கே குறிப்பிட வேண்டும். அப்போதெல்லாம் எங்கள் நினைவில் இரண்டு ஃபேபியஸ்கள் இருந்தனர்: ஒருவர்  ஃபேபியஸ் ஹட்ரியானஸ்(Fabius Hadrianus),  உத்திகா(Utique -வட ஆப்ரிக்கா)  முற்றுகையில் கார்தேஜேனியர்களால்(Carthaginois)  உயிருடன் எரிக்கப்பட்டவர். இரண்டாவது ஃபேபியஸ், ஆசியா மைனரில்  போண்ட்டாஸின் மித்ரிடேட்ஸைத் (Mithridate du Pont) துரத்திச் சென்ற அதிர்ஷ்ட்டமற்ற மனிதர், சாதனை ஆவணங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்ட மாவீரன். என் தந்தை அவர்காலத்தில் வாழ்ந்த எழுத்தாளர்களில் ஒருவரையும் அறிந்தவரில்லை, உதாரணத்திற்கு லுய்க்கேன் (Lucain),செனெக்(Sénèque)6 இருவரையும் யாரென்று அவருக்குத் தெரியாது, இத்தனைக்கும் அவர்கள் எங்களைப் போலவே ஸ்பெயின் தேசத்தைப் பூர்வீகமாக கொண்டவர்கள். கல்வியாளரான என் பெரிய தந்தை எலியாஸ்(Aelias),தனது வாசிப்பு எல்லயை அகஸ்டஸ் காலத்திய மிகவும் பிரபலமான எழுத்தாளர்களுக்கென்று குறுக்கிக்கொண்டார். தங்கள் கால சமூகப் போக்கிடம் கடைபிடிக்கபட்ட இந்த ஒவ்வாமை, பல ரசனை குறைபாடுகளிலிருந்து இவர்களைக் காப்பாறியதோடு, எல்லைமீறாமலிருக்கவும் உதவியது. கிரேக்க பன்மைவாத இறையாண்மையும் (L’hellénisme ), கீழை  நாடுகளும்(L’Orient) நாங்கள் அறிந்திராதவை, அல்லது தூரத்திலிருந்து முகச்சுளிப்புடன் பார்த்தவை; மொத்த தீபகற்பத்திலும் தேடினாலும் கூட, ஒரு நல்ல கிரேக்க சிலையை  காணமுடியாத நிலமை.  சிக்கனமும், பணமும் கைகோர்த்திருந்த காலம்; அதாவது சற்று கெடுபிடியுடன் சடங்குகளை ஆடம்பரமாக நிறைவேற்ற முடிந்த காலம். என் சகோதரி போலினா(Paulina) கடுமையான நெறிகளை பின்பற்றியவள்,   அமைதியானவள், கலகலப்பாக இருக்கமாட்டாள்,  முதியவர் ஒருவருடன் நடந்த இளம்வயது திருமணம் அவளுடையது. நேர்மையிலும் நாணயத்திலும் கறாராக இருந்தோம், ஆனால் அடிமைகளிடம் கடுமையாக நடந்துகொண்டோம்.  எந்த ஒன்றிலும் எங்களுக்கு ஆர்வமில்லை; ரோமானிய குடிமகனுக்கு எவையெல்லாம் உகந்ததோ அவற்றில் கவனம் செலுத்தினோம். நற்பண்புகளுக்கு இங்கு பஞ்சமில்லை, ஆனால் எவையெல்லாம்  உண்மையில் நற்பண்புகளுக்கு உரியதோ அவற்றை சிதைத்தவனாக நான் இருந்திருக்கக்கூடும்.

உத்தியோகபூர்வ புனைவுகளின்படி ரோமானிய பேரரசர் என்பவர் ரோமில் பிறந்திருப்பார், ஆனால் நான் பிறந்தது ஸ்பெயினில் அடங்கிய இத்தாலிகா(Italica) என்ற நகரம்;  இந்த வறண்ட அதேவேளை வளமான தேசத்தோடுதான் பின்னர் உலகின் பல பகுதிகளையும் அடுக்கடுக்காக  என்னால் இணைத்துக் கொள்ள முடிந்தது. புனைவுகளிலும்  ஏற்பதற்குரிய விஷயங்கள் இருக்கின்றன. மனம் எடுக்கும் முடிவுகளும்,  அவற்றைச்  செயல்படுத்த வேண்டுமென்கிற ஆர்வமுமே சூழ்நிலைகளில் முன்னுரிமைபெறும்  என்பதையே புனைவுகள் தெரிவிக்கும் தகவல்கள்  நிரூபித்துள்ளன. ஒரு மனிதனின் உண்மையான பிறந்த இடம் என்பது  எங்கே முதன் முதலாக தன்னை  அறிவுக்கண்கொண்டு பார்க்கமுட்டிந்ததோ அந்த இடம்:  என்னுடைய முதல் தாயகம், புத்தகங்கள், பிறகு சிறிய எண்ணிக்கையில் பாடசாலைகள். ஸ்பெயினில் உள்ள பள்ளிகள், பிராந்திய பொழுதுபோக்கு அம்சங்களால் பெரிதும்  பாதிக்கபட்டன. ரோமில் உள்ள டெரென்டியஸ் ஸ்காரஸ்(Terentius Scaurus)  பள்ளி, தத்துவவாதிகள், கவிஞர்கள்  பற்றி போதித்தவை அனைத்தும் சுமார் ரகம் என்றாலும் மானுட  வாழ்க்கையில்  நிகழும் ஏற்றத்தாழ்வுளைச் சந்திக்க மாணவர்களை அது தயார் செய்தது. அதேபள்ளியில்தான் ஆசிரியர்கள், நான்  மனிதர்கள் மீது பிரயோகிக்கத் தயங்கும் வெட்கக்கேடான அடக்குமுறைகளை மாணவர்கள் மீது பிரயோகித்தனர். குறுகிய ஞானவரம்பிற்குள் அடைபட்டுக்கிடந்த அந்த ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் நெருங்கிய தங்கள் சக ஊழியர்களை வெறுத்தனர், பிறவிஷயங்களிலும்  அவர்கள் அறிவு குறுகியதென்றே சொல்லவேண்டும். எனினும் அகங்காரத்திலும் குறைவின்றி இருந்ததால் உச்சக்குரலில் வார்த்தைப் போரில் இறங்குவர். முன்னுரிமைகோரி நடக்கும்   இத்தகைய  வாதங்களும், சூழ்ச்சிகள்  அவதூறுகள் ஆகியவற்றில் எனக்கேற்பட்ட அனுபவங்களும்  பிற்காலத்தில்,  சமூகத்தில் எங்கெல்லாம் நான் அங்கம் வகிக்க நேர்ந்ததோ அங்கெல்லாம் எனக்குக் கைக்கொடுத்தன. அவ்வாறான நேரத்தில் குழந்தை பருவத்தில் பெற்றிருந்த முரட்டு குணங்களும் உதவின. ஆயினும்கூட, ஒருசில ஆசிரியர்களை, ஆசிரியர் மாணவர் உறவில் காணப்பெற்ற விசித்திரமான நெருக்கத்தை,  புதிரான அதன் பிடிபடாத தன்மையை ; பிறகு, முதன்முறையாக உன்னதபடைப்பு அல்லது  புதுமையானதொரு கூற்றென தெரியவரும் கடற்கன்னிகளின் அடித் தொண்டையிலிருந்து எழும் கரகரப்பான பாடலை,  இப்படி அனைத்தையும் விரும்பினேன். இவையெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், சீடர்களை ஈர்ப்பதில் மிகவும் கெட்டிக்காரர் அல்சிபியாட்ஸ்(Alcibiade)7 அல்ல, சாக்ரடீஸ்.

இலக்கணவாதிகள் மற்றும் சொற்பொழிவாளர்களின்  வழிமுறைகள் மோசமானவை என நினைத்த காலம் உண்டு,  அதாவது அவற்றுக்கு உடன்படவேண்டிய நெருக்கடியில் இருப்பதாக நினைத்து உருவான  எண்ணம், உண்மையில் நான் நினைத்த அளவிற்கு அவை மோசமானவை அல்ல. இலக்கணங்களை எடுத்துக்கொண்டால் அதனுடைய தர்க்கத்திற்கு  இசைந்த, இசைய மறுக்கிற விதிகளின் கலவையைக்கொண்டு  இளம் உள்ளங்களுக்கு, ஒரு முன்உணர்வை வழங்குகின்றன, அதாவது பிற்காலத்தில்  மனிதர் நடத்தைகள், உரிமைகள், அறநெறிகள் என்ற பெயரால் அறிவியல்களும்;  உள்ளுணர்வு அனுபவத்தைக்கொண்டு மனிதர் வகுத்துக்கொள்கிற முறைமைகளும் எவற்றையெல்லாம் போதிக்கக் காத்திருந்தனவோ அவற்றைப்பற்றிய முன் உணர்வு.  நல்ல பேச்சாளருக்குரிய பயிற்சியைப் பொறுத்தவரை, நாங்கள் தொடர்ச்சியாக செர்க்சஸ்(Xerxes), தெமிஸ்டோக்ளீஸ்(Thémistocle), அகஸ்டஸ்(Octave) மற்றும் மார்க் ஆண்ட்டனியாக(Marc Antoine)8 இருந்திருக்கிறோம், அவர்கள் அனைவரின் நாவன்மையிலும் மயங்கியுள்ளேன். என்னை புரோத்தியூஸ்(Proteus)9 ஆக கற்பனை செய்துகொள்வதுண்டு. இவர்கள் ஒவ்வொருவரும் மனிதர்  மனங்களில் உட்புகவும், மனிதர் அனைவரும்  தங்களுக்கென விதிமுறைகளை வைத்திருப்பதாகவும், அவற்றின்படியே தீர்மானிக்கவும், வாழவும், இறக்கவும் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவும்  கற்றுக் கொடுத்தார்கள். கவிஞர்களைப் படித்ததால் ஏற்பட்ட விளைவு, இன்னும் கூடுதலாக மனதைப் புரட்டிப்போட்ட  அனுபவம்:  அன்பின் மகிமையை முதன்முதலாக அறியவந்தபோது அது கவிதையைக் காட்டிலும் கூடுதல் இன்பத்தை அளிப்பது நிச்சயமென என்னால் உறுதிபடுத்த இயலவில்லை. கவிதை எனக்குள் மாற்றத்தை நிகழ்த்தியது: உதாரணத்திற்கு, என்னைப் பிறிதொரு உலகம் உண்டென நீண்டதூரம் அழைத்துசென்றதில், மரணத்தின் தொடக்கம் பற்றிய எனது சொந்தப் புரிதலைக் காட்டிலும் கவிஞர் விர்ஜிலின் (Virgile) ‘அந்தி நேரத்திற்கு பங்களிப்பு அதிகம்.  பின் நாட்களில் உயர்குணத்தை இயல்பாகப் பெற்றிருந்த ஹோமர்(Homère), எளியதோற்றத்திற்குரிய கவிஞர் ஹெசியோட்(Hesiode) போன்றோரைப் பார்க்கினும்  மரியாதைக்குரிய நமது பூர்வீகத்திற்கு மிகவும் நெருக்கமாகவும், முரட்டு சுபாவமும் கொண்ட ஏன்னியூஸையும்(Ennius)10, கசப்பான அனுபவ ஞானத்தினால் அறியபட்ட லூக்ரேஸ்(Lucrèce)11வையும் அதிகம் போற்றினேன். என்னுடைய சிந்தனைக்கு கடுமையான பயிற்சியை அளிக்க வல்ல குறிப்பாக  மிகவும் சிக்கலான, தெளிவற்ற கவிதைகளையும் சுவைத்துள்ளேன்.  கவிஞர்கள் அண்மைக் காலங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம் அல்லது பழைய ஆசாமிகளாகவும் இருக்கலாம் எனக்குப் புத்தம்புது பாதைகளைக் காட்டுகிறவர்களாகவோ அல்லது நான் தொலைத்த பாதைகளைத் திரும்பப்பெற உதவுகின்றவர்களாகவோ அவர்கள் இருக்கவேண்டும். அப்போதெல்லாம் எனது விருப்பம், குறிப்பாக கவிதைக் கலையில் உடனடியாக புலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆக்கங்களாக இருந்தன  என்பதையும் தெரிவிக்க வேண்டும். அது ஹொராஸ்(Horace) என்பவரின் மெருகூட்டப்பட்ட  உலோகத்தை ஒத்த கவிதையாக இருக்கலாம்  அல்லது மனிதர்  தசைபோல மிக மென்மையான ஒவிட் (Ovide) படைப்பாகவும் இருக்கலாம். « நான் என்றுமே மிகவும் சாதாரணமானதொரு  கவிஞனாக மட்டுமே இருக்கமுடியும் » என்ற ஸகவ்ரூஸ்(Scaurtus)12 கூற்று எனக்குப் பெரும் ஏமாற்றத்தத்தை அளித்தது, ஒரு கவிஞனுக்குத் தேவையான பேறும், இடைவிடாதமுயற்சியும் என்னிடமில்லை என்பது அவர் கருத்து. இக்கருத்தில் அவர் தவறிழைத்ததாகவே வெகுகாலம் நானும் நம்பினேன்: எங்கோ ஓரிடத்தில் ஒன்று அல்லது இரண்டு கவிதைகள் தொகுப்பை பூட்டிவைத்துள்ளதாக ஞாபகம், அவ்வளவும் காதல் கவிதைகள், கட்டால்லஸ் (Catullus)கவிததைகளை அப்படியே நகலெடுத்து எழுதியிருந்தேன்.  இன்றைய தேதியில், எனது படைப்புகள் ஏற்கக் கூடியவையா, அல்லவா என்பதெல்லாம் எனக்கு முக்கியமும் அல்ல.

தொடரும்…..

——————————————————————————-

பிற்குறிப்புகள்

1 . ஸ்கிப்போஸ் (Scipions) ரோமானியர் அரச பரம்பரையில், செல்வாக்கும் அதிகாரமும் கூடுதலாகப் பெற்றவர்கள்.

2.  எக்வெஸ்த்ரியன் பிரிவினர்  (equster ordo) பிரெஞ்சு மொழியில் செவாலியெ(Chevalier) ஆங்கிலத்தில் னைட் (knight) என்றும், லத்தீன் மொழியில் எக்வெஸ் (eques). ரோமானிய அரசுக்கு யுத்தகாலத்தில் கணிசமாக குதிரகளையும் அதற்குரிய வீர ர்களையும் கொடுத்துதவினர். செனெட் அவைக்கு அடுத்து அரசவையில் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டது. இவர்கள் செனெட் ஆகவும் தேர்வு செய்யப்பட்டவர்கள்.  

3. டிட்டூஸ் (Titus) கி.பி.39- கி.பி.81- ரோமானிய அரசர். 

4. கேட்டோ (Caton) அரசியல் மேதகை , கல்வியாளர்

5. கடே(Gadès) தற்போது கடிக்ஸ் என அழைக்கபடும் பண்டைய கிரேக்க நகரம். 

6. லுய்க்கேன்(Lucain) (கி.பி 39- கி.பி 64) இலத்தீன் மொழிக் கவிஞர். செனீக்கா (Senec) (கி.மு.4-கிபி 65) மெய்யியலாளர், நாடக ஆசிரியர்.

7. அல்சிபியாட்(Alcibiade) – பண்டைய கிரேக்க மரபில் வந்த ஓர் அரிஸ்டோகிராட், இலக்கிய வாதி, சாக்ரடீஸ் சீடர் 

8. அ.செர்கஸ் (Xerxes) கி.மு 519-  கி.மு. 465, பாரசீக மன்னர். இரண்டாம் பாரசீக கிரேக்கயுத்தத்தில் கிரேக்கர்களால் வெல்லப்பட்டவர். 

  ஆ. தெமிஸ்டோக்ளீஸ்(Themistocles) கிமு 524 – கிமு429 ஏதெண்ஸ் அரசியல் மேதகை.

  இ. அகஸ்டஸ்  அல்லது அக்டேவியஸ் கி.மு 27 – கி.பி 4 வரை ரோமை ஆண்ட முதல் மன்னர். 

 ஈ. மார்க் ஆண்ட்டனி, .கிமு 85 – கி.மு 30. உரோமைப் பேர ர சு நிறுவப்பட காரணமானவர்களில் ஒருவர் 

9. பெரேகிரீனுஸ் புரோத்தியூஸ்(Peregrinus Proteus கி.பி.95 – கி.பி165)கிரேக்க தத்துவவாதி.

10. ஏன்னியுஸ் குயிண்ட்யுஸ்( Quintus Ennius கி.மு 239-169)இலத்தீன் கவிதைகளின் தந்தை. 

11. லூக்ரேஸ் (Lucrèce) முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த லத்தீன் மொழி கவிஞர், தத்துவவாதி.

12 மார்க்குஸ் எமேலியுஸ் ஸ்கவ்ரூஸ் (Marcus  Aemilius Scaurus கி.மு163-கி.மு89) தீர்ப்பாய நடுவர், இலக்கியவாதி, பேச்சாளர் அரிஸ்டோகிராட் செனெட் தலைவர்.

Series Navigation<< அதிரியன் நினைவுகள் -3அதிரியன் நினைவுகள் – 5 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.