வாக்குமூலம் – அத்தியாயம் 15

அவள்

எனக்கு தீபாவளியை விடப் பொங்கல்தான் பிடிக்குது. பொங்கலப் பத்தி கல்யாணியண்ணன் நெறைய லெட்டர்ல எழுதியிருந்தாங்க. பொங்கல்னு இல்ல எந்தப் பண்டிகையா இருந்தாலும் அதத் திருநவேலியில கொண்டாடினாத்தான் நல்லா இருக்கும். மெட்ராஸ் ஊருக்கு வந்து முப்பது வருசத்துக்கு மேல ஆச்சு. கீதா காலேஜ் முடிக்கப் போறா. ரவி அடுத்த வருசம் காலேஜுக்குப் போயிருவான். திருநவேலியில நான் சின்னப் பிள்ளையா இருக்கும்போது, பொங்கலுக்கு ஒரு மாசத்துக்கு முந்தியே பொங்கல் வேல ஆரம்பிச்சிரும். மொதல்ல வீட்ட எல்லாம் ஒதுங்க வச்சு, வீடு பூரா வெள்ளையடிப்பாங்க. கொரவர் தெரு மாரியப்பன்தான் வருசா வருசம் வெள்ளை அடிச்சுத் தருவான்.

பேட்டை ரோட்டுப் பக்கம் சுண்ணாம்புக் காளவாசல் இருந்திச்சு. அங்க போயி சாக்குல சுண்ணாம்பு வாங்கிட்டு வருவான். கல் சுண்ணாம்பை விட சிப்பி சுண்ணாம்புதான், அடிச்சா நல்ல வெள்ளையா இருக்கும். இப்பல்லாம் வீட்டுக்கு டிஸ்டம்பர், பெயிண்டுன்னுல்லா அடிக்கிறாங்க. அப்பம் மர நெலை, கதவு, ஜன்னலுக்குத்தான் பெயிண்டு அடிப்பாங்க. சொவத்துக்கு சுண்ணாம்புதான். சிப்பிச் சுண்ணாம்ப பெரிய மண் பானையில போட்டு தண்ணி விடுவான் மாரியப்பன். தண்ணிய விட்டதும் சுண்ணாம்பு தறதறன்னு கொதிக்கும். ரெண்டு மூணு நாளு அந்தத் தண்ணியிலேயே கெடந்து சுண்ணாம்பு நீறும். இதுக்கு சுண்ணாம்பு நீத்ததும்பாங்க.

பொங்கல் டயத்துல கடைகள்ள வெள்ளை அடிக்கிற மட்டைகள் விப்பாங்க. அது பனை மட்டை. அதை மாரியப்பன் வாங்கிட்டு வருவான். ஒரு பக்கம் கல்லை வச்சு மட்டைய நைப்பான். சுண்ணாம்புல நீலத்தக் கலந்து அடிச்சா வீடு பளீருன்னு ஆயிடும். எல்லா அறைகளையும் அடிச்சம் பெறவுதான் அடுப்பாங்கரைய அடிப்பான். ஏன்னா அடுப்படிச் சொவர் எல்லாம் பொகை பட்டு கருப்பா இருக்கும். மொதல்லயே அடுப்படி அடிச்சா நல்ல சுண்ணாம்புத் தண்ணியெல்லாம் கருத்திரும்ன்னு கடைசியிலதான் அடிப்பான். வெள்ளையடிச்சதுமே வீட்டுக்குப் பொங்கல் களை வந்துரும்.

பெறகு ஒரு வாரங் கழிச்சு களி மண்ணை எடுத்தாந்து, சின்னக் குத்துப் போணி இல்லைன்னா ஒசரமான தகர டப்பாவ வச்சு பொங்கக் கட்டி போடுவான். ஆறு கட்டி போடணும். அது அஞ்சாறு நாள், ஒரு வாரம் கூட வெயில்ல நல்லாக் காயும். நல்லாக் காஞ்ச பெறவு அதுக்கும் வெள்ளை அடிப்போம். அந்த வெள்ளை மேல செவப்புக் காவிப் பட்டை அடிப்போம். கோவில் மதில் சொவர் மேல காவிப் பட்டை அடிக்கிற மாதிரி வீட்டுத் திண்ணையில எல்லாம் காவி அடிப்போம்.

பொங்கலுக்கு முந்தின நாள் போகியன்று வீட்டிலுள்ள பழைய பித்தளை, வெங்கலப் பாத்திரங்கள், நாற்காலி, ஸ்டூல் எல்லாத்தையும் வாய்க்காலில் கொண்டு போய் கழுவுவோம். பொங்கலுக்கு முந்தின நாள் ராத்திரி அம்மா வீடெல்லாம் மாக்கோலம் போடுவாள். காலம்பற பொங்கலிட்டு முடிஞ்சதும் கரும்பை வெட்டி தோலை உரித்துச் சாப்பிடுவோம். திருநவேலில சிறு வீட்டுப் பொங்கல்ன்னு இன்னொரு பொங்கலும் ரொம்ப விசேஷம். அம்மா ஆவணி ஞாயித்துக் கெழம தோறும் கூடப் பொங்கல் விடுவாள். பொங்கலுக்கு மறுநா எல்லாரும் வளவோட, பொங்கச் சோறு, சிறு கெழங்கு பொரியல் எல்லாம் சாம்பார்ல போட்டுச் சுண்ட வச்ச சுண்டக்கறி எல்லாத்தையும் தூக்குச் சட்டிகள்ள எடுத்துக்கிட்டு ஆத்துக்குப் போவோம். ஆத்துல மனம் போனபடிக் குளிச்சிட்டு, தண்ணிக்குள்ள நீட்டிக்கிட்டு இருக்கிற பாறையைக் களுவி, அதில பழய சோத்தையும் சுண்டக்கறியவும் போட்டுச் சாப்புடுவோம். தீவாளிக் கொண்டாட்டம் ஒரே நாள்ல முடிஞ்சிருது. பொங்கல் கொண்டாட்டம் அப்பிடியா? மெட்ராஸுல அந்த மாதிரி எல்லாம் கொண்டாட முடியலையேன்னு ஒரே ஆத்தாமையா இருக்கு.

இந்த ஊர்ல பொங்கலுக்கு ரெண்டாவது நாள் காணும் பொங்கல்ன்னு சொல்லிக்கிட்டு எல்லாரும் கடக்கரைக்கும், சினிமா, பொருக்காச்சிக்கும் போறாங்க. ஊருக்கு ஊர் ஒவ்வொரு மாதிரியா இருக்கு. அப்பம் பொங்கல், தீவாளிக்கெல்லாம் புது சினிமா ரிலீஸாகும். நான் அன்னைக்கெல்லாம் சினிமாக்கும் போக மாட்டேன். கேட்டாலும் அப்பா விட மாட்டா. ஆனா, அண்ணன் அன்னைக்கெல்லாம் தியேட்டர்ல போயிப் படம் பாத்துருவான். எதுன்னாலும் அவனுக்கு மட்டும் வீட்டுல தனிச் சலுகை. அண்ணன் எம்.ஜி.ஆர். ரசிகன். அவர் படம் ஒண்ணு விட மாட்டான். எல்லாத்தையும் பாத்துட்டு வந்து எதுத்த வீட்டுச் செட்டியார் தாத்தா கிட்ட கத சொல்லுவான்.

ஒரு தடவ பாப்புலர் டாக்கீசுல நாடோடி மன்னன் படம் நூறாவது நாள் அன்னைக்கி மேடையில எம்.ஜி.ஆரெல்லாம் வரம் போறாருன்னு, அப்பா கிட்ட அழுது விழுந்து துட்ட வாங்கிட்டுப் போனான். அண்ணனோட ஃப்ரெண்டு தொரையும் அன்னைக்கி அண்ணங் கூட எம்.ஜி.ஆரப் பாக்கப் போனான். எம்.ஜி.ஆர். படம்ன்னு இல்ல அனேகமா எல்லாப் படத்தையும் அண்ணன் எப்பிடியாவது பாத்திருவான். ஒண்ணு அப்பா கிட்ட அழுது விளுந்து துட்ட வாங்கிட்டுப் போவான், இல்லன்னா அம்மா கிட்டக் கெஞ்சிக் கூத்தாடி துட்ட வாங்கிட்டுப் போயிருவான். அவன் ஒரு சினிமாப் பைத்தியம். என்னை எல்லாம் வீட்டுல எல்லாப் படத்துக்கும் விட மாட்டாங்க. ரெண்டு மூணு வாரம் அல்லது அம்பதாவது நாள்ன்னு ரொம்ப நாளா ஒரு படம் ஓடுச்சின்னா வளவுல எல்லாரும் அந்தப் படத்தப் பாக்கப் போவாங்க. அப்பம்தான் என்னையவும் அப்பா படத்துக்கு அனுப்புவா. அந்த மாதிரி எங்க வீட்டுப் பிள்ள, பணமா பாசமா எல்லாம் பாத்துருக்கேன்.

ஆனா கோயிலுக்குப் போறதுன்னா வீட்டுல யாரும் ஒண்ணுஞ் சொல்ல மாட்டாங்க. நெல்லையப்பர் கோயிலுக்கு சில சமயம் அம்மாவே கூட்டிட்டுப் போவா. மேலக் கோபுர வாசல் பக்கத்துல பெரிய ஒசரமான ஷெட்டுக்குள்ள தங்கத் தேர் நிக்கும். தகரக் கதவு இடைவெளியில தேரைப் பாப்போம். இப்பமும் இந்த ரெண்டாயிரத்து இருவத்தி ரெண்டுல அதே தகர ஷெட்டுக்குள்ளதான் தங்கத் தேரு நிக்கிதோ என்னம்போ. ஆறுமுக நயினார் சன்னதியில அவ்வளவா கூட்டமே இருக்காது. அந்தச் சன்னதியில வச்சுதான் ஒரு நாள் வல்லநாட்டுச் சாமியாரப் பார்த்தேன். அன்னைக்கி நான், அச்சுக்கூடத்துப் பிள்ள வீட்டு ராமலட்சுமி, பெரிய வீட்டுக் குஞ்சமக்கா எல்லாரும் கோயிலுக்குப் போயிருந்தோம். வல்லநாட்டுச் சாமியார் இடுப்புல துண்டு மட்டும் கட்டிக்கிட்டு மொழுமொழுன்னு குண்டா இருந்தாரு. நாலஞ்சு ஆம்பளயாட்கள் அவரச் சுத்தி நின்னாங்க.

முன்னால அதே ஆறுமுக நயினார் சன்னதியில காவி எல்லாம் கட்டிக்கிட்டு, சடை முடியோட அம்மாசிச் சாமியார் இருப்பாரு. அங்க போனா, அவரு கால்ல விழுந்து கும்புடுதது வழக்கம். அந்த மாதிரி நெனச்சுக்கிட்டு நாங்க மூணு பேரும் வல்லநாட்டுச் சாமியார் கால்ல விழுந்தோம். அவர் ஒடனே ஏதோ தீயை மிதிச்சிட்ட மாதிரி, காலை இழுத்துப் பின்னால நகர்ந்துட்டாரு. நாங்க விழுந்து எந்திரிச்சதும் அவரு எங்க மூணு பேரு கால்லயும் குனிஞ்சு விழுந்து ”தாயே ஈஸ்வரி” ன்னு கும்புட்டாரு. அப்பந்தான் தெரிஞ்சிது, அவரு கால்ல யாரும் பொம்பளைக விழுந்தா, அவரு அவங்க கால்ல விழுந்து கும்பிடுவாருன்னு சொன்னாங்க. அதனாலே, விஷயம் தெரிஞ்ச பொம்பளைங்க யாரும் அவரு கால்ல விழுந்து கும்புடமாட்டாங்க. பெண்களை அம்பாளாவே பாக்குறவரு வல்லநாட்டு சாமியாரு. இந்த விஷயம் தெரியாம நாங்க, சாமியாருன்னு நெனச்சு அவரு கால்ல விழுந்து கும்புட்டுட்டோம். இன்னைக்கி நெல்லையப்பர் கோயிலுக்குப் போனாலும், அன்னைக்கு நடந்தது ஞாபகத்துக்கு வரும். மனசு ஒரு மாதிரி ஆயிரும்.

சாயந்தரம் ஆனா எல்லாரும் கள்ளன் – போலீஸ் வெளையாடுவோம். செல நாள், கழச்சி, தாயம்ன்னு வெளையாடுவோம். குஞ்சமக்கா வீட்டுத் திண்ணையில நெரந்தரமா சிமெண்டுல தாயக்கட்டம் போட்டிருக்கும். பள்ளிக்கூடம் லீவு விட்டாச்சுன்னா தாயம், பல்லாங்குழிதான். சாப்புடக் கூடத் தோணாது. கள்ளன் – போலீஸ்ல வில்லைத் தாத்தா வீட்டு நீலா ஒளிஞ்சான்னா அவளக் கண்டு பிடிக்கவே முடியாது. அப்பிடி ஒளிஞ்சிக்கிடுவா நீலா. இப்பம் எல்லாரும் எந்தெந்த ஊர்கள்ள இருக்காங்களோ?

ஆச்சிக்கி கேலண்டரப் பாக்காமயே எந்தெந்த மாசத்துல நெல்லையப்பர் கோயிலில என்னென்ன திருவிழான்னு தெரியும். என்ன சப்பரம்ன்னு கூடச் சொல்லிருவா ஆச்சி. இன்னைக்கி ரிஷப வாகனம்பா, இன்னொரு நாள் சூரிய வாகனம்பா. சப்பர அலங்காரத்தைக் கூட ஆச்சி ஞாபகம் வச்சிருப்பா. வெள்ளை சாத்தியா, பச்சை சாத்தியான்னு கரெக்டாச் சொல்லிருவா ஆச்சி. திருநாரு பூசாம சாப்பிட உக்கார மாட்டா. காலையில, அவளுக்கு ஒடம்பு தெடமா இருந்த வரைக்கும் குறுக்குத் தொறைக்கிப் போயி ஆத்துல குளிச்சிட்டுக், கொடத்துல ஆத்தண்ணியும் கொண்டுட்டு வருவா. அந்தத் தண்ணிய விட்டுத்தான் வீட்டுல பூசையில இருக்கற லிங்கம், பிள்ளையார், வேலுக்கெல்லாம் அபிஷேகம் பண்ணுவா. அவ பூசையெல்லாம் பண்ணி, தேவாரம் எல்லாம் படிச்சிட்டுத்தான் சாப்புட வருவா. பக்தின்னா அம்புட்டுப் பக்தி ஆச்சிக்கு. அவள மாதிரி பக்தி எங்க வீட்டுல வேற யாருக்கும் கெடையாது. சாவும் போது கூட சிலரை மாதிரி நோய், நொடி, படுக்கைன்னு கெடக்காம போயிச் சேர்ந்தா. ரெண்டு நாள் ஒடம்பு சுடுதுன்னு படுத்தா. அவ்வளவுதான். உசுரு போயிட்டுது. அவளோட பக்திதான் அவளப் படுக்கையில படுக்க விடாம சட்டுன்னு கொண்டுட்டுப் போயிட்டுன்னு சொல்லுவேன். அதுக்கு கீதாவோட அப்பா, “அதெல்லாம் ஒண்ணுமில்லை… சாவு ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரி வரும். ரமணருக்கு கேன்ஸர் வந்துது. அவருக்கு இல்லாத பக்தியா?”ன்னு கேட்டாங்க. எனக்கு என்னவோ, நல்ல பக்தியா இருந்தா கடவுள் நல்ல சாவைக் குடுப்பாருன்னுதான் தோணுது.

பாளையங்கோட்டையில நாங்க கொஞ்ச நாள் வாடகைக்கி இருந்தோம். அங்க முத்தையான்னு ஒரு ரவுடி இருந்தான். கேடி முத்தையாம்பாங்க எல்லாரும். அவன் ஜவஹர் மைதானத்துல இருக்கிற பிள்ளையார் கோயில் முன்னாலே படுத்துக் கெடந்திருக்கான். அவன் தலையில யாரோ கல்லைத் தூக்கிப் போட்டுக் கொன்னுட்டாங்க. அவன் ஊருல பண்ணுன அட்டகாசத்துக்கு நல்ல சாவு வந்து சாகலை.

இதச் சொன்னா இவங்க அப்பா நம்ப மாட்டேங்கிறாங்க. “அப்ப சாமி தப்புப் பண்ணினா தண்டனை குடுக்கும்கிறியா?”ன்னு கேட்டாங்க.

“நிச்சயமா தண்டனை கெடைக்கும்”ன்னு சொன்னேன்.

“கோடி கோடியா லஞ்சம் வாங்கி, ஊழல் பண்ணி சொத்து சேத்த மந்திரிக எத்தனை பேரு சௌகரியமா இருக்காங்க. அவங்களை எல்லாம் கடவுள் தண்டிக்கலையே?”

“நேரு ஊழல் பண்ணலை… லஞ்சம் வாங்கலை. அவருக்கு நல்ல சாவு கெடச்சிது. ஆனா இந்திரா காந்தி எமர்ஜென்சி கொண்டு வந்தாங்க. அவங்க செக்யூரிட்டியே அவங்களைக் கொன்னுட்டான். அவங்க மகன் சஞ்சய் காந்தி எமர்ஜென்சியில ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுனான்… ப்ளேன ஓட்டிட்டுப் போயி ஆக்ஸிடெண்ட் ஆகிச் செத்தான்… கடவுள் கெட்டவங்களைத் தண்டிக்கத்தான் செய்யிதாரு.”

“நீ ஒங்க செல்லையா மாமா ரொம்ப நல்லவங்கன்னு சொல்லுவே. ஆனா அவங்க கடைசி காலத்துல அவுஹளுக்கு ரெண்டு கண்ணுலயும் பார்வை இல்லாமே போயி, ரொம்பக் கஷ்டப்பட்டுல்லா செத்தாங்க. நல்லவங்களுக்கு ஏன் கடவுள் கண் பார்வையை எடுக்கணும்?”

“அதெல்லாம் கர்ம வெனை. போன ஜென்மத்துப் பலனை அனுபவிக்காம கடவுள் விட மாட்டான்.”

“அப்ப கடவுள் நல்லவரா, கெட்டவரா? எந்த ஜென்மத்திலேயோ செஞ்ச தப்புக்கு இந்த ஜென்மத்துல நல்ல மனுஷனா வாழுகிறரைப் போயி ஏன் தண்டிக்கணும்?”

“எத்தனை ஜென்மம் ஆனாலும் செஞ்ச கர்ம வெனை விடாது. செல்லையா மாமா அடுத்த ஜென்மத்துல நல்லாதான் இருப்பாங்க.”

“ஜென்மம், கர்மம், விதின்னு அப்பிடியெல்லாம் ஒண்ணும் கெடையாது. தப்புப் பண்ணினா தண்டிக்கிறதுக்கு சட்டம் இருக்கு.”

“கவர்மெண்டு சட்டம் வேற, கடவுளோட சட்டம் வேற. தெய்வம் நின்னு கொல்லும்பாங்க. இந்த ஜென்மத்துல தப்பிச்சிட்டாலும் அடுத்த ஜென்மத்துல தண்டனை கெடைக்கும்.”

“அப்போ கடவுள் ஈவு, எரக்கம் இல்லாதவரா?”

“நீங்க வெதண்டாவாதமா பேசறீங்க… நல்லது செஞ்சா நல்லது நடக்கும் கெட்டது செஞ்சா கெடுதல்தான் நடக்கும்.”

“அப்போ கீதையிலே எல்லாத்தையும் நான்தான் இயக்குகிறேன். நன்மை – தீமை எல்லாம் நான்தான்னு சொல்றாரே. எல்லாத்தையும் கடவுள்தான் இயக்குறார்னா, நன்மை – தீமை எல்லாம் அவருடையதுதானே?”

இதற்கு எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. கீதாவோட அப்பா சிரிச்சாங்க. “எல்லாமே கருத்துக்கள், நம்பிக்கைகள்… அவ்வளவுதான். எல்லாரும் சொல்லுததைத்தான் நீயும் சொல்லுதே. இதெல்லாம் மத நம்பிக்கைகள், மதக் கருத்துக்கள்”ன்னு சொன்னாங்க.

Series Navigation<< வாக்குமூலம் – அத்தியாயம் 14இறுதி வாக்குமூலம் >>

2 Replies to “வாக்குமூலம் – அத்தியாயம் 15”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.