மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து

2000

Gathering pepper in India. Ambroise Paré. Paris, Gabriel Buon, 1579. National Library of Medicine.

கஜானன் விநாயக் மோதக் வருடா வருடம் இல்லாவிட்டாலும் முகம் மறந்து போகாமல் வைத்திருக்கத் தக்க விதமாக, அவ்வப்போது அம்பலப்புழைக்கு வந்துவிடுவார்.

அம்பலப்புழை கிருஷ்ணன் கோவிலில் பிரசாதமாக அளிக்கப்படும் பால் பாயசத்துக்கு மிகப் பெரிய ரசிகரும் கூட, மோதக்.

நாற்பத்தைந்து வருடமாக ஒரு மராட்டிக்காரருக்கும் ஒரு மலையாள பூமித் தமிழருக்கும் இடையே நிலவும் நல்ல நட்பும் இணக்கமும் இவர்களில் ஒருத்தர் மறைவது வரை கண்டிப்பாக இதே நிலையில் தொடரும்.

மும்பாய் பம்பாயாக இருந்த 1960-களில் தொடங்கிய பரிச்சயம் அது. அப்போது மதறாஸிகளை வெளியேற்ற நடைபெற்ற போராட்டத்தின் போது மோதக் புத்திளைஞன். பத்து நிமிஷம் முன் வந்த கல்யாண் – தாதர் லோக்கல் ரயிலில் இடம் கிடைக்காமல் அடுத்த ஐந்தாவது நிமிடம் அடுத்த லோக்கலில் போகவேண்டி வந்தால் கூட, இது மதறாஸி சதி என்று எதிர்த்துப் போராடக் கிளம்பி வந்த மராட்டிய வீரன் மோதக்.

திலீப் ராவ்ஜி? அவர் அப்போது வேலை தேடிக் கொண்டிருந்தவர். கிடைக்காமல் மராட்டிய இளைஞரானவர். திலீப் அம்மா வழியில் மராட்டியும் அப்பா வழியில் மதறாஸியும் ஆனபடியால் இது சாத்தியமானது.

உடுப்பி ஓட்டலில் கல்லாவில் உட்கார்ந்திருக்கும் மதறாஸி பிராமணனை முதுகில் ஒரு போடு சும்மா வலிக்காமல் போட்டு அனுப்பிவிட்டு, கல்லா பணத்தில் ஐந்து ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு வர மோதக்கால் முடியும். அந்த ஐந்து ரூபாயும் வெளியே போகும்போது ஜாக்கிரதையாக திருப்பி எறியப்படும். அது ஒரு காலம்.

மோதக் மும்பையிலிருந்து ஆலப்புழை வந்துகொண்டிருக்கிறார்.

ஆலப்புழை ஜங்க்‌ஷன் நெருங்கும்போதே மோதக் பரபரப்பாகி விடுவார். வண்டி நிற்காது போய் விடக்கூடும் என்று ஒரு பயம் அவருக்கு எப்போதும் உண்டு. இவ்வளவுக்கும் தாதர்-ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ஆலப்புழையோடு பயணம் முடித்து நிற்கும் ரயில். அடுத்து போகவேண்டும் என்றால் ஜங்க்‌ஷன் வந்து சேர்ந்த ரயில் வண்டிகள் இளைப்பாறும் யார்ட்-க்குத்தான் அவை நகர்ந்து போக வேண்டி வரும்.

ஒரு தடவை மோதக் சரிக்கும் உறக்கத்தில் இருந்தபோது ஆலப்புழை வந்ததும் அங்கே இருந்து யார்டுக்குப் போனதும் நடந்தது தான். அது மோதக்கின் கனவுக்குள் வந்த கனவில் நிகழ்ந்ததாகும்.

இல்லையென்றாலும் அந்தச் சூழலை மோதக் துல்லியமாக அறிவார். காலியான ரயில் பெட்டிகளில் கழிப்பறைகள் தண்ணீரின்றி கெட்ட வாடை எழுப்பியிருக்கும். இருக்கைகளில் இறுதியாக அமர்ந்தவர்களின் கந்தமும், வெளியேற்றிய அபான வாயுவும், இருமல் வாடையும் கனமாகச் சூழ்ந்திருக்கும். கம்பார்ட்மெண்ட் இருக்கைகளில் சாப்பிட்டு மிஞ்சிய மேரி பிஸ்கட் பாக்கெட்டில் கடைசி ஒற்றை பிஸ்கட் மொறுமொறுப்போடு இன்னும் நல்ல வாடை எழுப்பிக் கொண்டிருக்கும்.

பயணம் செய்த பெண்கள் தலையில் சூடியிருந்த மல்லிகைச் சரங்கள் வெதும்பிக் குழைந்து விழுந்து நாற்றம் எழுப்பும் இடம் அது. கழிப்பறைக்கு ஈடான, அதற்கும் சில சமயம் கூடுதலாக துர்க்கந்தம் பரப்ப அந்தப் பூச்சருகுகள் தம் இயல்பாக மணம் துறந்திருக்கும். சூட்டியிருந்த உடல்களின் வெப்பமும், நறுமணமும், நீராக ஒழுகி உலர்ந்த கழிவுகளின் நாற்றமும் கலந்து மல்லிகைச் சருகுகளில் எளிதாக ஏறி நிற்கும்.

அந்த வாடையிலும் வெம்மையிலும் காமம் துய்க்க விழைந்து, துணை தேடுகிறவர்களை மோதக் அறிவார். ரயில் பெட்டிகளில் அடைத்த ஜன்னல், கதவுகள் உள்ளே சிறைப்பட்டிருக்கும் வெப்பத்தைப் பெருக்கி கழிவு வாடையோடு மங்கிய வாடையையும் நரகல் பதத்தில் அப்பியிருக்க, யார்ட் அப்படித்தான் இருக்குமென்பதை மோதக் அறிவார். அதனாலேயே வண்டி அங்கே போய்ச் சேரும்வரை இறங்காமல் இருப்பதைத் தவிர்த்து விடுவார்.

ரயில்வேகாரர்களும் அவர்கள் பங்குக்கு ரயில்கள் யார்டுக்குப் போவதற்குள் பெட்டி பெட்டியாக நுழைந்து ஏதாவது விலையுயர்ந்த பொருள் பயணிகளால் விடப்பட்டிருக்கிறதா, பிரயாணம் முடிந்தது என்று தெரியாத பயணி யாரும் இன்னும் பெட்டியில் இருக்கிறாரா என்று தேடுவார்கள். இல்லையென்று உறுதியாக்கிய பிறகு ரயில் ஓய்வெடுக்க நகர அனுமதிக்கப்படும்.

மோதக் நேரடியாகப் பார்த்ததில்லை எனினும் அவர் கேள்விப்பட்டது உண்டு. பல வருஷங்கள் முன்பு ஒரு வண்டித்தொடர் ஆலப்புழை சந்திப்பில் வந்து நின்று பயணிகள் இறங்கிக் காலியானதாம். பெட்டி பெட்டியாகப் பார்த்து வந்த ரயில்வே ஊழியர்கள் ஒரு கம்பார்ட்மெண்டில் துணிப் பொதிவுக்குள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த சின்னஞ்சிறு சிசு ஒன்றைக் கண்டெடுத்தனராம்.

அதற்கு அப்புறம் ஒரு வாரம் சென்று அந்தக் குழந்தையின் பெற்றோர் என்று எட்டு ஜோடிகள் வந்து போனதாகக் கேள்வி. ஜோடி இல்லாமல் ஒற்றையாக ஒரு பெண்ணும் குழந்தையைக் கேட்டு வந்தாளாம்.

என்றாலும் ஸ்டேஷன்மாஸ்டர் சொல்லே மந்திரமாக, வந்தவர்களில் பணம் படைத்தவர்களாகப் பார்த்து குழந்தையை ஒப்படைக்கலாம் என்று வெகுஜன அபிப்பிராயம் இருந்தபோது கண்ணில் செயற்கை என்று கருதப்படக் கூடாத கண்ணீரும், குழந்தையைக் கண்டதும் அருகே நிற்கிறவர்கள் மேலும் படர்ந்திறங்கும் பாசமும் பிரியமுமாக அந்தப் பெண் ஓஓஓ என்று விதும்பினாளாம் குழந்தையைப் பார்த்து. விழித்துக்கொண்ட குழந்தை உடனே சிரித்ததாம். வீட்டுக்காரன் இல்லாததால் குழந்தையைத் துறக்க மனம் ஒருப்பட்டாலும், அதைக் கடந்து குழந்தை இல்லாமல் இனி ஒரு பொழுதும் போகாமலிருக்கத் திரும்பி ஓடி வந்தாளாம்.

மோதக் சுவாரசியத்துடன் கேட்ட, பரப்பிய கதைகளில் இதுவுமொன்று. பள்ளிக்கூடத் துணைப்பாடப் புத்தகங்களுக்கே உரிய கதை அது.

எர்ணாகுளம் ஜங்க்‌ஷன் வரும்போதே மோதக் மலையாளி ஆகிவிடுவார். பைஜாமாவையும் குர்த்தாவையும் களைந்து மடித்து வைத்துவிட்டு எட்டு முழ வேட்டியும் கருப்பு நிறத்தில் டீ ஷர்ட்டுமாக வேஷம் மாறிவிடும். மலையாளி போல நெற்றியில் சந்தனம் அணிந்து கொள்ள அவருக்கு ஆசைதான். ஆனாலும் நகரும் ரயில் கம்பார்ட்மெண்டில் சந்தனத்துக்கு எங்கே போக?

கிட்டத்தட்ட இருபது வருஷமாக வந்து போவதால் கொஞ்சம் போல மலையாளம் அவர் நாவில் படிந்து வரும். அது ரெண்டாம் பட்சம். ஒரிஜினல் மலையாளியாக வேட்டியை முழங்காலுக்கு மடித்துக் கட்டியபடி நடக்கவும், தேவையான இடங்களில் மடித்ததை இறக்கி காலில் தடுக்காமல் நடக்கவும் அவருக்குப் பழகி இருந்தது.. தமிழ் நாட்டில் சுற்றுவேட்டி வலது பக்கத்தின் மேல் இடப்பக்கம் படிந்து வரும். கேரளத்திலோ இடப்பக்கத்தின் மேல் வலப்பக்கம் படிந்து வரும். இரண்டு வகையிலும் வேட்டி கட்ட மோதக்குக்குத் தெரியும். வேட்டி மடித்துக் கட்டியபடி ஓடவும் இறக்கி விட்டு முழங்காலில் இருந்து கணுக்காலுக்கு மூட மெல்ல ஓடவும் அடுத்துப் பயிற்சி எடுக்க வேண்டும். இந்தப் பயணத்தில் அதைப் பழகி விடலாம் என்ற நம்பிக்கை உண்டு அவருக்கு.

அம்பலப்புழைக்கு டவுண் பஸ் பிடிக்கவேண்டும். ஆட்டோ, டாக்சி எல்லாம் கூட உண்டு. தேவையில்லாத வெட்டிச் செலவு என்பார் மோதக். அவருடைய நண்பர் திலீப் ராவ்ஜி சொல்வது இது –

“மோதக்கே, வரப் போறேன்னு ஒரு போஸ்ட் கார்ட் போடக் கை வராதா உனக்கு? எந்த தேதி, எந்த ரயில்னு மட்டும் போட்டிருந்தா கரெக்டா ரயில்வே ஸ்டேஷனுக்குக் கார் அனுப்பியிருப்பேனே”.

அவருக்கு கார் அனுப்பும் அதிர்ஷ்டம் இதுவரை வாய்க்கவில்லை.

மோதக் எப்போது அம்பலப்புழை பயணம் புறப்பட்டாலும் இரண்டு கான்வாஸ் பையில் பாதிக்குத் துணி அடைத்து எடுத்துக் கொள்வார். அப்புறம் வாய் சிறியதாகவும், அடிப்படைப் பரப்பு அகலமும் ஆழமுமானதாகவும் இரண்டு பாத்திரங்களையும் மறக்காமல் எடுத்துக் கொள்வார்.

“திலீப்-பாவுக்கு மிட்டாய் செஞ்சு தரேன்” என்று மோதக்கின் மனைவி நிச்சலா மோதக் ஓவ்வொரு பயணத்தின்போதும் உரிமையோடு பர்ஃபி செய்து அந்தப் பாத்திரங்களில் ஒன்றில் பாதி வரை நிறைத்துக் கொடுப்பாள்.

மோதக் போய்ச் சேர்ந்ததும், ‘ஏண்டா மோதக்கே, தங்கச்சி செய்து கொடுத்த பர்பியோடு வர்றியே. அவளை ஒரு தடவை கூட்டி வரணும்னு தோணாதா உனக்கு” என்று பர்ஃபி சுவையில் ஆழ்ந்து கண்மூடியபடி திலீப் ராவ்ஜி கேட்பது மோதக்குக்குப் பிடித்த ஒரு காட்சி.

அவருக்கு தன் மனைவியை வெளியே கூட்டிப் போகப் பிடிக்கும். ஆனால் நிச்சலாவுக்குத்தான் சிறு பிரச்சனை. பத்து நிமிடம் சேர்ந்தாற்போல் நின்றாலோ நடந்தாலோ கால் துவள ஆரம்பித்து விடும். டாக்டர் பார்த்துவிட்டு இதற்கு உடம்பில் வலு இல்லாதது காரணம். வைடமின் டானிக் எடுத்துப் பாருங்கள் என்று காரணமும் தீர்வும் சொல்லி விட்டு அடுத்த பேஷண்டைக் கவனிக்க ஆரம்பித்தார்.

சமையல் செய்யும்போது ஒரு முக்காலி ஸ்திரமாக சமையல்கட்டில் இருப்பதோடு, உட்கார்ந்து சமைக்கும் உயரத்தில் சமையலறை பளிங்குப் பாளம் அமைத்தது மோதக்கின் யோசனை. சந்தேகமே இல்லாமல் இந்த முப்பது வருடத்தில் உபயோகமான புத்திசாலித்தனத்துக்கு அரசாங்க விருது ஏதாவது ஏற்படுத்தப்பட்டிருந்தால், தொடர்ந்து அவர் விருது பெற்றிருப்பார்.

திலீப் ராவ்ஜி நிச்சலாவை எரணாகுளத்தில் ஆயுர்வேத மருத்துவமனையில் தாரா, நவரக்கிழி, பிழிச்சல், இன்னும் விநோதப் பெயர் உள்ள மற்ற ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு உட்படுத்தினால் நிற்பதென்ன, நடப்பதென்ன, ஓடவே செய்வாள் என்று உறுதி தெரிவித்தார். மோதக் நன்றி சொல்லி, அடுத்த முறை கூட்டி வரேன் அண்ணா. உங்களை அதிகம் கஷ்டப்படுத்த வேணாம்னுதான். அண்ணி இல்லாம நீங்க படற துன்பம் தெரியாமலா இருக்கேன் என்பார். திலீப் மௌனமாக நகர்ந்து விடும் பொழுது அது.

கால்வலிக் காலத்துக்கு முன் மோதக் தன் மனைவி நிச்சலாவை ஒரே ஒரு தடவை, செம்மீன் சினிமா வந்த வருஷம் அது, அம்பலப்புழை கூட்டி வந்திருந்தார். செம்மீன் சினிமா பார்க்க எல்லோரும் போனார்கள். முண்டு ப்ளவுஸில் பெண்களைப் பார்க்கவும் போனார்கள். பார்த்து நிச்சலா அகல்யாவிடம் அஸ்லி ஹை க்யா ஏ தோனோ பஹுத் படா லக்தா-ரெண்டும் அசல்தானா – என்று கேட்டது அடுத்த வரிசையில் கேட்டு சிரிப்பு எழுந்தது.

இந்தியில் விசாரித்தால் யாருக்கும் புரியாது என்று நிச்சலா நினைத்திருந்தது தப்பாகப் போகுமென்று யாருக்குத் தெரியும்? திலீப்புக்கு அப்புறமாக அகல்யா சொல்லிச் சிரித்த நிகழ்ச்சி அது. அசல்தான்.

பழைய ஞாபகம் எல்லாம் ஒழுங்கு வரிசை இல்லாமல் அலையடித்து மனதில் நிரம்ப, மோதக் டவுண் பஸ்ஸுக்காக நிற்க, சொல்லி வைத்தாற்போல் ஒன்று கூட வரவில்லை.

வெற்றிலை பாக்கு விற்கும் கடையில் தன் மலையாளத்தில் விசாரிக்க, அவர் ப்யூஜியாமா எரிமலை எர்ணாகுளத்தின் எல்லையில் இருப்பதாகவும், அது விழித்து நெருப்புக் குழம்பை லாவா லாவா என்று சிதறடிப்பதாகவும் கருதிக்கொண்டோ என்னமோ, பஸ்ஸு பஸ்ஸு பஸ்ஸு வராது வராது வராது என்பது மட்டும் மோதக்குக்கு புரிய கடமுடவென உருட்டினார்.

அப்புறம் ஒரு டாக்சி ஏற்பாடு செய்து அம்பலப்புழை கிளம்பினார் மோதக்.

பாதி தூரத்தில் டாக்சியில் மீட்டர் இருப்பதையும் அது இயங்காமல் இருப்பதையும் கவனித்த மோதக் டாக்சி ட்ரைவரோடு கருத்து வேறுபாடு காட்ட, டிரைவர் முணுமுணுத்தபடி மீட்டரை இயக்கினார்.

அம்பலப்புழையில் திலீப் ராவ்ஜி வீட்டுக்குப் போகும் பாதையில் டாக்சி மீட்டரைப் பார்த்த மோதக் அது காட்டிய கட்டணத்தைப் பார்த்து மயக்கம் போட்டு விழாத குறைதான். ஏழாயிரத்து முன்னூற்றைம்பத்தேழு ரூபாயும் ஐம்பது பைசாவும்.

அந்தப் பணத்துக்கு இரண்டு அதே ஸ்திதியிலுள்ள டாக்சிகள் செகண்ட் ஹாண்ட் மோட்டார் சந்தையில் வாங்கி விடலாம். அவற்றில் மீட்டர் பொருத்தி மீட்டர் படி கட்டணம் வாங்கத் தொடங்கினால், அந்தப் பணத்தில் இன்னும் நான்கு டாக்சி என்று சுவாரசியமான கணக்கு மனதில் விரிய, திலீப் ராவ்ஜி வீட்டு வாசலில் டாக்சி நின்றது.

டிரைவர் திலீப் ராவ்ஜிக்கு சலாம் வைத்து, ”உங்க சிநேகிதர் மீட்டர் படி காசு தரேன்னார். எட்டாயிரம் ரூபாய் தரணும் சார்” என்றார்.

திலீப் துள்ளிக் குதித்து எழுந்து அந்த அபூர்வ மீட்டரைப் பார்க்க, அது டாக்சி ஓடாமலேயே ஏதோ சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட மாதிரி தன்பாட்டுக்கு மேலே மேலே போய்க் கொண்டிருந்தது.

திலீப் ராவ்ஜி கட்டணமாகத் தன் சட்டைப் பையிலிருந்து நூற்றிருபது ரூபாய் எடுத்துக் கொடுத்தார்.

”வேண்டாம் சார், நம்ம ஓட்டலுக்கு இலைக்கட்டு விடிகாலை ஏற்றிக்கிட்டு வந்தபோது, நாலு தடவை இருக்கும், இட்லி கடப்பா சாப்பிட்டுக் காசு தரலே. நீங்க வேணாம்னீங்க. நானும் நன்னி சொல்ல சந்தர்ப்பம் வராதான்னு பார்த்தேன். வந்துடுச்சு சார்” என்று சிரித்தபடி டாக்சியைக் கிளப்பினார் ட்ரைவர்.

கொஞ்சம் இரு, படபடப்பாக இருக்கு என்று திலீப் ராவ்ஜி மோதக்கிடம் சொல்லியபடி அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸ் முகப்பு வாசல் படியில் உட்கார்ந்தார். மோதக் திலீப் கால் பக்கம் கீழ்ப் படியில் உட்கார்ந்து அண்ணா சௌக்கியமா என்று காலை தெருவில் நீட்டியபடி கேட்டார்.

“ஏண்டா மோதக்கே, இப்படி கவனக் குறைவாக கால் ஒரு இடத்தில் நீ ஒரு இடத்திலாக இருந்து ஷேமலாபம் கேட்டால், தெருவில் போகிற வாகனம் ஏதும் உன்னை பதம் பார்த்து விடும். நலம் விசாரிக்கக் கைகால் இருக்கணுமா வேண்டாமா?” என்று பலமாகச் சிரித்தபடி மோதக்கின் தோளில் தட்டியபடி எழுந்தார்.

மோதக்கின் கான்வாஸ் பைகளைக் கைக்கு ஒன்றாகத் தூக்கிக்கொண்டு திலீப் நடக்க, அண்ணா அண்ணா என்று சுமையை வாங்க பின்னாலேயே மோதக் ஓடினார்.

”எடோ மோதக்கே, கான்வாஸ் பேக்கில் கட்டெறும்பு வாடை அடிக்கறதே, என்ன கொண்டு வந்தே?” என்று திலீப் கேட்க, மோதக் அவசரமாக கான்வாஸ் பையை வாங்கித் திறந்து கவிழ்த்தார். ஹால் முழுக்கக் கட்டெறும்பு ஊர்ந்தது. நிச்சலா உட்கார்ந்தபடிக்கே செய்து கொடுத்திருந்த தேங்காய் பர்ஃபி கரைந்திருக்க மிச்சம் இருந்த துண்டு துணுக்குகளையும் பம்பாயிலிருந்து முப்பத்தாறு மணி நேரம் ரயிலேறி வந்த எறும்புகள் தொடர்ந்து உண்டபடி இருந்தன.

”மோதக்கே பையில் வேறே என்ன இருக்கு?” திலீப் ராவ்ஜி கேட்டார்.

“இன்னொரு பாத்திரம் அண்ணா. அதுக்குள்ளே ஒண்ணுக்குள்ளே ஒண்ணா ரெண்டு பாத்திரம். ரெண்டு ஸ்பூன். ஒரு தட்டு. ஒரு சின்ன கிண்டி”. அவர் அடுக்கிக்கொண்டே போக திலீப் ராவ்ஜி சின்னக் கிண்டியை எடுத்து வைத்துக்கொண்டு இது இங்கே என்ன செய்கிறது என்கிறதுபோல் குழம்பினார்.

”இது காணிக்கை விட்டுட்டு வரச் சொன்னா நிச்சலா”. மெதுவாகச் சொன்னார் மோதக். ஒரு நிமிடம் கனத்த மௌனம். இந்த வயதில் மோதக்குக்கும் நிச்சலாவுக்கும் குழந்தை பிறந்தால் என்ன ஆகும்?

திலீப் ராவ்ஜி நினைப்பதற்கு முன் மோதக்கே சொல்லி விட்டார். ”அண்ணா நீங்க போன தடவை வந்தபோது சொன்னீங்களே, கிருஷ்ணன் விளையாடற வீட்டில் வேறே குழந்தைகள் எதுக்கு? இது அந்தக் குழந்தைக்கு ப்ரசெண்ட் பண்றா என் பொண்டாட்டி”.

திலீப் ராவ்ஜிக்கும் கண் கலங்கியது.

”அப்பா, இவர் யார்னு சொல்ல மறந்துட்டேன். என் பெஸ்ட் பாம்பே ஃப்ரண்ட். பாண்டுப்லே நம்ம சர்வ மங்களா சால் இருக்கே குவாரி ரோட் க்ராஸ் அங்கே இருந்தவன் தான்”.

“மாமாஜி, ஃப்ரண்ட் இல்லே. பாவு ஆஹே. யங்க் ப்ரதர்”

பரமன் சுறுசுறுப்பானார். சில பெயர்கள். சில அடையாளங்கள். பத்தே நிமிடத்தில் மோதக் அவருக்கு வேண்டப்பட்ட நண்பரின் மருமகன் என்று நிரூபணமானார்.

”எப்படி இருக்கார், குருஜி மோதக்?”

“மாமாஜி அவர் வியோகம் ஆச்சு. இருபது வருஷம் முந்தி”.

”ஆமா, பின்னே இருக்காதா, என்னை மாதிரியா கல்லுக்குண்டு கணக்கா உசிரை வச்சுண்டு நூறு வயசும் மேலேயும் ஜீவிக்கிறது? கஜா, நீ என்ன வேலையா இருக்கே? ரிடையராயிட்டியா?” என்று ஆதூரத்தோடு கேட்டார்.

பரமன் கேட்க, மோதக் நெக்குருகி, ”கஜான்னு எங்கம்மா அப்பாவுக்கு அப்புறம் கூப்பிட யாருமில்லேன்னு நினைச்சேன் மாமாஜி. நீங்க இருக்கீங்க” என்றபடி குனிந்து அவர் பாதத்தைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொள்ளப் பார்க்க, தாங்குகட்டைகள் தான் கண்ணில் பட்டன. அவற்றையே தொட்டு ஒற்றிக்கொண்டார் மோதக்.

”மாமாஜி நான் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆபீசரா ஆகணும்னு நினைச்சேன். இல்லேன்னா கம்பெனியிலே ப்யூன் அதுவுமில்லாட்டா ஓட்டல் சர்வராக ஆவது வரணும்னு நினைச்சேன். வந்திருக்காமலேயே ரிடையர் ஆயிட்டேன்” என்றார் பரமனின் கையைப் பற்றியபடி. ”கொஞ்சம் பூர்வீக சொத்து, கொஞ்சம் பொண்டாட்டி கொண்டு வந்ததுன்னு சாப்பாடு போடறது. கட்சி கட்சின்னு நாற்பது வயசு வரை போச்சு.. இப்போ அதுவும் இல்லை. நான் இருக்கற பாண்டுப் ஃப்ளாட், உங்களுக்குத் தெரியுமாக இருக்கும், சால் ஆகத்தான் இருந்தது எல்லாத்தையும் இடிச்சு புது ப்ளாட் சிஸ்டமா ஆக்கி கொடுத்துட்டாங்க. மூணாவது மாடி சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட். அது நல்ல மதிப்பு ஆச்சே”.

“பின்னே இல்லியா? சபாஷ் மோதக்கே. சபாஷ்”. பரமன் மனம் திறந்து பாராட்டினார்.

பையன் ஹோட்டலில் இருந்து மூன்று பேருக்கும் இட்டலி, தோசை, மோதக்குக்கு மட்டும் கூடுதலாக ரவா கேசரி, காரமான சட்னி என்று கொண்டு வந்து இறக்கிப் போனான். ”குளிச்சுட்டு வா. நாங்க வெயிட் பண்றோம்” என்றார் திலீப். வேறு வழியே இல்லை. மோதக் குளித்துத்தான் ஆகணும்.

வந்து தலை துவட்டி தட்டுச் சுற்று வேட்டி அணிந்து சந்தனம் நெற்றியில் தொட்டு உட்கார்ந்தபோது நல்ல பசி மோதக்குக்கு.

“சங்கோஜப்படாமல் சாப்பிடு. உனக்காக கூடுதல் சாம்பார் வச்சிருக்கேன்” என்றார் திலீப் ராவ்ஜி. மோதக் சாப்பிட உட்கார்ந்தாலும் ஒரு துண்டு இட்டலி வாயில் போட்டதும் பசி போனமாதிரி அவருக்கு உணர்வு. எல்லா சாப்பாட்டிலும் தூக்கலாக மிளகு வாசனை அடித்தது. இட்டலியிலும் தோசையிலும் ஏன் ரவா கேசரியிலும் மிளகைப் பொடி செய்து போட்டவர் யாராக இருக்கும்? மோதக் குழம்பினார். ஒரு வேளை அவருக்கு மட்டும் நாசியில் இந்த மணம் தட்டுப்படுகிறதோ.

பரமன் பாதி இட்டலி மட்டும் உண்டு விட்டு கை நடுங்க அருகில் தாங்குகட்டைகளை அவசரமாக எடுத்து நிறுத்தி பற்றியபடி நின்றார்.

“சாப்பிடுங்க. கொஞ்சம் தலை சுற்றலாக இருக்கு. ஒரு பத்து நிமிஷத்துலே வந்து சாப்பிடறேன். ப்ளீஸ் ப்ரசீட் வித் யுவர் ப்ரேக்பாஸ்ட்”.

ஐந்தே நிமிடத்தில் அந்த இடத்தில் கவிந்திருந்த மிளகு வாடை காணாமல் போக, மோதக் தோசையை விண்டபடி திலீப்பிடம் சொன்னது – ”திடீர்னு மிளகுப் பொடி வாடை வந்தமாதிரி இருந்தது”.

“ரயில்லே பல வாடை பிடிச்சு மூக்கிலே தங்கிட்டதா இருக்கும்” என்றார் திலீப். ஆச்சரியத்தை வெளியே தெரியாமல் மறைத்துக் கொண்டார். அவருக்கும் மிளகு வாடை அனுபவப்பட்டிருந்தது.

பரமன் ஊன்றுக்கோல்களை ஊன்றி நடந்து ஜன்னல் பக்கம் போனார். யாரையோ தேடியது போல் அவர் பார்வை இருந்தது.

”யாரை அப்பா தேடறேள்?” திலீப் ராவ்ஜி கேட்க, ”அப்பா அப்பான்னு யாரோ யாரையோ தொடர்ந்து கூப்பிடற மாதிரி இருந்தது. ரொம்ப பழக்கமான குரல். யார் யாரை கூப்பிட்டா எப்போ எங்கே? தெரியலே” என்றார் பரமன்.

“என் குரல் மாதிரியா?” திலீப் ராவ்ஜி கேட்டார். இல்லையென்றபடி பாதி உண்டு வைத்த இட்டலியின் மிகுதியை உண்ணத் தொடங்கினார் பரமன்.

மோதக் அவருக்காக வாங்கி வைத்திருந்த சாம்பாரை திலீப் ராவ்ஜி எதிர்பார்த்தபடி பாத்திரத்தில் இருந்து டம்ளரில் ஊற்றி வழக்கம் போல் பருகவில்லை. ஒரு ஸ்பூன் எடுத்து வடையோடு சேர்த்து உண்டதோடு சாம்பாருக்கும் தனக்கும் உறவு இல்லை என்று பிரகடனப்படுத்தும் விதமாக இஞ்சித் துவையலையும். தக்காளி சட்டினியையும் சாப்பிட்டபடி பசி திரும்பிடுத்து என்றார் திலீப் ராவ்ஜியிடம் சந்தோஷத்தை மறைக்காமல்.

அவர் பலகாரத்தை ரசித்து உண்பது அனந்தனுக்கு ரொம்பப் பிடித்த விஷயம்.

”அனந்தன் எப்படி இருக்கான் அண்ணா?” மோதக் திலீப் ராவ்ஜியைக் கேட்டார். ஓ பிரமாதம் என்று சொல்லி நிறுத்தினார் திலீப். வாசு என்ற பையனைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறான் அனந்தன் என்ற செய்தி கஜானன் மோதக்கின் காலைச் சாப்பாட்டை மறுபடி இல்லாத ருசி காட்டியோ ருசியில்லாதபடி தற்காலிகமாக மாற்றியோ, ஏதாவது செய்து விடக்கூடும்.

காப்பியா டீயா என்று திலீப் ராவ்ஜி கேட்டார். இரண்டு ப்ளாஸ்க்கள் வரவேற்பறை சிறு மேஜை மேல் இருப்பதை மோதக் பார்த்தார்.

“ஒரு வாய் டீ போதும் அண்ணா. வயத்திலே கொஞ்சம் இடம் வேணுமே” என்றார் கள்ளச் சிரிப்போடு.

”அதானே பார்த்தேன், பால் பாயசம் குடிக்க அம்பலத்துக்குப் போகணும்னு சொல்லலியேன்னு பார்த்தேன். கிண்டியைக் கொடுத்துட்டு வாசுதேவன் பாயசம் வாங்கிக் குடிக்க வயற்றிலே இடம் இருக்காதா என்ன? திருச்சூர் பூரத்திலே பதினைந்து ஆனை வந்து பூரப் பரம்பே நிரம்பியிருந்தாலும் வடக்கும்நாதன் கோவில்லே இருந்து பதினாறாம் ஆனை வந்து சேர்ந்தா அதுவும் நிற்க இடம் உடனே கிடைக்குமே அதுபோல் பால் பாயசம்”.

எங்கேயோ கேட்ட தகவல் துணுக்கை திலீப் ராவ்ஜி சலிப்பு இல்லாமல் ஏற்றுமதி செய்தார்.

“மாமாஜி, கோவில் போய்ட்டு வரேன். உங்களுக்கு ஏதாவது வேணுமா?” என்று மோதக் கேட்க, திலீப் ராவ்ஜி சிரித்தார்.

“என்ன சூப்பர் மார்க்கெட்டா போறே மோதக்கே. பாயசம், உன்னியப்பம், வேறே என்ன வாங்கப் போறே? நான் உனக்கு அதெண்டிக் அசல் கோவில் பால் பாயசம் உண்டாக்கித் தரச் சொல்றேன். வேணுமா” என்று கேட்டார். ”அண்ணா நீங்க கேட்டா வேணாம்னா சொல்லப் போறேன்? அது பாட்டுக்கு அது. ஆனா முதல் டோஸ் கோவில்லே தான் வாங்கணும்னு சாம்னாவிலே எழுதியிருக்கு” என்று மோதக் சொன்னார்.

“நீ புத்திசாலி மராட்டிக்காரன்டா மோதகமே” என்றபடி கார்ச் சாவியை விரலில் சுழற்றிய்படி திலீப் படி இறங்கினார். மோதக் பரமனிடம் அதுவும் இதுவுமாக ஒரு இருபது நிமிடம் பேசியபடி இருந்தார். கான்வாஸ் பையில் இருந்து மடித்த குடை ஒன்றை எடுத்தார். அதை விரித்து மூடிக் கையில் ஆயுதம் போல் பிடித்துக் கொண்டு தரைபுரளும் வேஷ்டியில் மலையாளி ஆனார். கோவிலில் பாயசம் விற்கும் கவுண்டர் திறக்க முப்பது நிமிடம் முன்னால், நடுப் பகலில் ’மாமாஜி போய்ட்டு வரேன்’ என்று கிளம்பி விட்டார்.

கஜானன் மோதக் வீட்டிலிருந்து அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி அம்பலம் நடந்து போக பத்து நிமிடம் ஆனது. கோவிலில் நிம்மதியான தரிசனம் பதினைந்து நிமிஷம் அடுத்து. ஐந்து நிமிடத்தில் பாயச கவுண்டர் திறக்க முதல் ஆளாக மோதக்தான். மூன்று லிட்டர் பாயசத்துக்குப் பாத்திரங்களை எடுத்து வைத்து பணம் அடைக்கிறவரை கவுண்டர்காரர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பனிரெண்டரை மணியிலிருந்து பனிரெண்டே முக்கால் மணிவரை பாயச விற்பனை. முடிந்து கவுண்டரை தேவஸ்வ ஊழியர்கள் விரைவாக அடைத்தார்கள். அதில் ஒருத்தர் உள்ளே போய்ப் பார்த்துவிட்டு வந்து ரெண்டு லிட்டர் தான் பாயசம் பாக்கி இருக்கு என்றார்.

“ஆமாம் சார், காலையிலேயே குஜராத் டூரிஸ்ட்கள் வந்து பதினைந்து லிட்டர் வாங்கிட்டுப் போய்ட்டாங்க” என்றார் மற்றவர்.

”சார் வருஷா வருஷம் வர்ற ரெகுலர் கஸ்டமர். அவருக்கு ஒரு லிட்டர் தரமுடியாமல் ரீஃபண்ட் கொடுத்தா நன்னா இருக்காது. சார் நீங்க ஒரு உதவி பண்ணனும்”.

மோதக் பேய்முழி முழித்தார். அடுத்த வருஷம் வரும்போது பாயசம் டெலிவரி வாங்கிட்டுப் போன்னு சொல்றாங்களா, திலீப்பைக் கூட்டி வந்து விடலாமா என்று யோசித்தார்.

“இப்போ ரெண்டு லிட்டர் வாங்கிட்டுப் போங்க. இன்னும் ஒரு மணி நேரத்திலே இன்னொரு லிட்டர் தரேன்”.

இவ்வளவுதானா? ரெண்டு லிட்டரில் திலீப் ராவ்ஜி, அவர் தகப்பனார், அவர் மகன் அனந்தன் ஆளுக்கு ஒரு டம்ளர் பால்பாயசம் குடிக்கலாம். மீதி நான்கு டம்ளராவது மோதக்குக்கு குடிக்கக் கிடைக்கும். மீதி ஒரு லிட்டர் ராத்திரி கொஞ்சம், நாளைக் காலையில் பாக்கி என்று குடித்து விடலாம் என மனம் சந்தோஷத்தோடு கணக்குப் போட்டது.

ரெண்டு லிட்டர் பாயசத்தோடு வீட்டுக்குள் நுழைய, அனந்தனும் அவனுக்கு ரொம்ப நெருக்கமாக இன்னொரு பையனும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததை மோதக் கண்டார். சிநேகிதம்னா இது இல்லையோ. எவ்வளவு அந்நியோன்யம் என்று நினைத்தபடி அனந்தனிடம் அனந்தன், எப்படி இருக்கே என்று விசாரித்தார். கையில் பாயச பாத்திரத்தோடு நலம் விசாரிப்பது அவ்வளவு நன்றாக இருக்காது. அதை முன்னாலேயே சொல்லி விடலாம் என்று பட்டது அவருக்கு.

“மாஜா புத்தன்யா (மருமகன்) அனந்தா, கோவிலுக்கு போயிருந்தேன். பிரசாதம் வாங்கினேன். பால் பாயசம். எடுத்துக்குங்க”.

அனந்தன் இன்னொரு பையனை தலை தடவிப் பிரியத்தோடு பார்த்து, ”மோதக் மாமா, இவன் வாசு, என் பொண்டாட்டி ஆகப் போறான்” என்றான்.

நல்ல ஜோக் இல்லையே, இதுக்கு என்ன சிரிக்கறது என்று மோதக் யோசித்து ”பொண்டாட்டி மாதிரி பிரியமா இருப்பானா, இல்லே பொண்டாட்டி மாதிரி பேலனால அடிச்சு விரட்டுவானா?” என்று கேட்டார்.

”பேலன்னா?”

வாசு கேட்க, ”தம்பி அது சப்பாத்தி இடற ரோலர்” என்றார் மோதக்.

“அனந்தா கல்யாணத்துக்கு அப்புறம் நீ வீட்டு வேலை என்னோடு பங்கு போட்டு செய்யாட்ட பேலன் அடிதான்” என்றான் வாசு விசில் அடித்தபடி. உள்ளே இருந்து கட்டைகளை ஊன்றிக்கொண்டு பரமன் வந்து கொண்டிருந்தார்.

”மாமாஜி கோவில் நைவேத்தியம் பால் பாயசம் எடுத்துக்குங்க. இன்னும் ஒரு லிட்டர் தர வேண்டியிருக்கு. அதோடு உன்னியப்பம் கொஞ்சம் வாங்கிட்டு வரேன்”. மோதக் சிறு பையன் போல் உற்சாகமாகச் சொன்னார்.

”அனந்தா, பாயசம் எடுத்துக்கோ. உன் சிநேகிதனுக்கும் கொடு”.

”என் பெண்டாட்டி இனிப்பு சாப்பிடமாட்டான். சாரி மாமா”.

அனந்தன் சொல்ல, இதென்ன கூத்து ’பாயசம் வாங்கி வந்தா பூதமும் கூட வந்துடுத்தே’ என்று மோதக்குக்கு தோன்றியது.

மோதக் பாத்திரத்தை சமையலறையில் வைத்து விட்டு, ”ஒரு லிட்டர் பாக்கி இருக்குன்னு சொன்னேனே. போய் வாங்கிட்டு வரேன்” என்று கிளம்பி விட்டார். பரமன் இந்தக் கல்யாணம் பற்றி என்ன நினைக்கிறார் என்று மோதக்குக்கு அறிய ஆர்வமாக இருந்தது.

மோதக் வாசலில் இறங்கும்போது உன்னியப்பத்துக்குப் பை அல்லது மூடி போட்ட ஓவல்டின் டப்பா இப்படி ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சும்மா சும்மா உள்ளேயும் வெளியேயும் போய் வந்தால் கிறுக்குத் தனமாகத் தெரியும். ஏற்கனவே ஆம்பளைக்கு ஆம்பிளைப் பிள்ளை கல்யாணம் பண்ணிக்கப் போறதாக அவர் தலையைக் கண்டதும் ஏதோ சொல்கிறார்கள். தாத்தாவையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு இதெல்லாம் பேசுவார்களா என்ன?

மோதக்கும் திலீப் ராவ்ஜி அண்ணாவும் இளைஞர்களாக இருந்தபோது இப்படியா இருந்தார்கள்? ஒழுங்குமுறைக்குக் கட்டுப்பட்டு மதறாஸி ஓட்டல் வாசலில் கொடிபிடித்து நின்று மதறாஸிகளை மதறாஸ் போகச்சொல்லிக் கோஷம் முழங்கினதும், சாம்பாரையும் வடையையும் மட்டும் எடுத்துக்கொண்டு காசைக்கூட வேண்டாம் என்று நேர்மையாக மறுத்தும் நடந்து அவர்கள் எவ்வளவு நியாயத்துக்கு நின்றார்கள்?

அப்போது மதறாஸி போ என்று கட்சி சொல்லச் சொன்னதால் போ என்று கோஷம். அப்புறம் மதறாஸி இரு. குஜராத்தி போ என்று உள்ளூரச் சொல்வதைக் கேட்டு நடக்க கட்சி தயாராக இருக்கிறதா தெரியவில்லை. என்றாலும் ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் கல்யாணம் செய்துகொள்ள சித்திவிநாயகர் கோவில் பூசாரிகள் ஒத்துக் கொள்வார்களா? அவர்களுக்கு என்ன போச்சு?

பகவதி கோவில் கடந்து சர்ப்பக்காவு திரும்பி கோவிலுக்கு வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நடக்கும்போது மிட்டாய் ஸ்டால் ராஜஸ்தானி ரகுவீரோ என்னமோ பெயர் உள்ளவர் மோதக் ஜி மோதக் ஜீ என்று அழைக்கும் ஒலி.

விளிச்சோ என்று மலையாளத்தில் பதில் கேள்வி கேட்கும்போது மோதக்குக்கு ஒரே சந்தோஷம். ஸ்வீட் ஸ்டாலில் இன்னும் இரண்டு பேர் வேஷ்டியும் டீ ஷர்ட்டுமாக நின்று சாயா குடித்துக் கொண்டிருந்தார்கள். ராஜஸ்தானி டீக்கடைக்காரர் உலகத்திலேயே ரகுவீர் மட்டும்தான் இருப்பார் என்று மோதக் நினைத்துக் கொண்டார்.

”என்ன திலீப் சார் வீட்டுலே விசித்திரமாக ஏதோ நடக்குதாமே. அவர் வீட்டுப் பெரிய மனுஷன்னு நூறு வயசுக்கு மேற்பட்டவர் ஒருத்தர் வந்திருக்காராம்”.

மிட்டாய்க்கடைக் காரனை குடையால் தடுத்து நிறுத்தினார் மோதக். முகத்தில் கோபமும் சிடுசிடுப்பும் படர இந்தியும் மராட்டியுமாகப் பொழிந்து தள்ளிவிட்டார். முடிவில் சொன்னது – ”அம்பலப்புழைக்கு சாமி கும்பிடவும், பாயசம் வாங்கவும் வரேன். வம்பு வாங்க வரலே”.

சொல்லிவிட்டு பழைய இந்தி சினிமாவில் கண்ணியமான பள்ளி ஆசிரியர் மாதிரி குடையை இறுகப் பிடித்து காற்றில் வட்டம் போட்டு மறுபடி இறக்கி கம்பீரமாக நடந்தார் அவர்.

வாங்கி அந்த ஒரு லிட்டரையும் வீட்டில் எடுத்துப் போய் குளிர்பதனப் பெட்டியில் வைத்தாகி விட்டது. பரமன் உறங்கிக் கொண்டிருந்தார். அனந்தன் நேற்றைய பத்திரிகையை சிரத்தையாகப் படித்துக் கொண்டிருந்தான்.

மோதக்கைப் பார்த்தவுடன் முகம் மலர்ந்து, ”உட்காருங்கோ மாமாஜி, மாமி உடல்நலம் இல்லைன்னு அப்பா சொன்னார். அப்பா மூலமாக ஏற்பாடு செய்து எரணாகுளத்திலோ, மதறாஸிலோ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யலாமே? அவங்களை நான் பார்த்ததே இல்லை எப்படி இருப்பாங்க?” என்று ஆவலோடு கேட்டான்.

சட்டைப் பையில் இருந்து பர்ஸ்ஸை எடுத்து அதிலிருந்து ஒரு பழைய கருப்பு வெள்ளை பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை உருவி எடுத்துக் கொடுத்தார் மோதக். அனந்தன் பார்க்கும்போது பக்கத்தில் குனிந்து, ”நூதன் மாதிரி இருக்கா இல்லே?” என்று வாத்சல்யத்தோடு கேட்டார்.

அனந்தனுக்கு நூதன் யாரென்று தெரியாது. என்றாலும் ஆமா என்று தலையாட்டினான். ”நிச்சலா மாமி பார்க்க என் அம்மா சாயல் கொஞ்சம் இருக்கு”. அவன் சொல்லும்போது மோதக் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீரோடு அனந்தன் கையைப் பற்றியபடி இருந்தார்.

அழகும் அறிவும் அகல்யாதாய் மாதிரி அதிகம் தான். ஆயுள் ரேகையும் அவங்க மாதிரி குறுகித்தான் இருக்கு. இதுக்கு மேலே ட்ரீட்மெண்ட் கொடுக்க என்கிட்டே பணம் கம்மி அனந்தா. திலீப் அண்ணா கிட்டேயும் இனிமேல் வாங்கறது தப்பு. பார்க்கலாம், தானே குணமாகுதான்னு”. ஆனாலும் அனந்தனின் பிரியம் மோதக்கின் மனதை உருக்கியது.

மதியம் ஹோட்டல் காலிஃப்ளவர் பொரியலும் கிருஷ்ணன் கோவில் பிரசாதமாக வந்த உன்னியப்பமுமாக ஆகாரம் கழித்தபோது அனந்தனும் பரமன் தாத்தாவும் 1960களில் இடதுசாரி கட்சிகள் பிளவுண்டது பற்றி யார் குற்றம் என்று பேசியது மோதக்குக்கு ரசிக்கவில்லை.

பரமன் அனந்தனை மாறிய இடதுசாரிகளின் ஒற்றைப் பிரதிநிதியாக ஆவாஹனம் செய்து, அவர்கள் செல்லும் வழி சரிதானா என்று பரிசீலித்தார்களா எனக் கேட்டார்.

“எங்கே போறிங்க? எங்கே போறீங்க?” நாடகீயமாகக் கேட்டார் அவர். கூடவே பழைய இந்தி சினிமா பாட்டைத் திருத்தி நல்ல குரலில் பாடினார் – ”ஜாயே தும் ஜாயே கஹாங்?” எங்கே போறீங்க?

மோதக் முகம் மலர்ந்தது. அவர் டாக்ஸி ட்ரைவர் இந்தித் திரைப்படத்தில் ’ஜாயே தோ ஜாயே கஹாங் என்ற தலத் முகம்மது பாடிய அந்தப் பாடலை சிலாகித்து அது போல் அபூர்வமான கீதங்கள் இப்போது இல்லை என்று விசனம் தெரிவித்தார்.

அடுத்த நிமிடம் ஸ்ரீபாத அமிர்த டாங்கேயும் பி ராமமூர்த்தியும் ஜோதிபாசுவும் வெளியம் பார்க்கவனும் உடைந்த கட்சியோடு அந்தரத்தில் நிற்க what a vibrating silky voice என்று தலத் மொஹம்மத்தின் சற்று அதிர்வுறும் குரலில் பாட ஆரம்பித்தார் பரமன்.

’ஜாயே தோ ஜாயே கஹான்?’

பகல் சாப்பாடு மூன்றரை மணி வரை நீண்டு போனதை யாரும் லட்சியம் செய்யவில்லை.

ராத்திரி ஊர் உறங்கும் நேரம். பரமன் உறங்கி விட்டார். திலீப்பும் அனந்தனும் ஒரே ஒரு சோட்டா பெக் என்று விஸ்கியும் ரம்மும் பருகியபடி இருக்க, அம்பலப்புழை பால் பாயசத்தோடு மோதக் அவர்கள் கூட இருந்தார்.

அகல்யா அக்கா இருந்தவரை இப்படி ஒரு காட்சி இந்த வீட்டில் அரங்கேறி இருக்குமா என்று மோதக்குக்கு வருத்தம். அது சின்ன பிரச்சனை தான். பெரியது ஒன்று வந்து கொண்டிருக்கிறதே. கேட்கலாமா வேண்டாமா என்று நிறைய யோசித்து ஒரு வழியாக பாயசத்தை கையிலெடுத்து வைத்தபடி பேச ஆரம்பித்தார்.

”மாமாஜி உங்களுக்கு சிரமம் இல்லேன்னா கொஞ்சம் பாயசம் எனக்குத் தர்றேளா?” என்று விஸ்கி கோப்பையை நீட்டினான் அனந்தன். அவனுக்கு வார்த்ததும், திலீப் ராவ்ஜி, ”எடோ மோதக்கே எனக்கும் அந்த அமிர்தத்தைக் கொடு” என்று தன் கிளாஸையும் நீட்டினார். அவருக்கும் வார்த்தார் மோதக். அப்புறம் மெல்லப் பேச ஆரம்பித்தார்.

”அண்ணா, அனந்தனுக்கு இங்கே பொண்ணு கிடைக்கலேன்னா போறது. பம்பாயிலே நூதன் மாதிரி, மதுபாலா மாதிரி எத்தனை பொண்ணு வேணும் சொல்லுங்க, கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றேன். வடிவா, மராட்டி பொண்ணுங்க, கொங்கணிக்காரி, மதறாஸி என்ன மாதிரி வேணும்? சொல்லுங்க. ஏற்கனவே கல்யாணம் ஆகாதவளாக இருக்கிற எந்தப் பொண்ணையும் பேசி முடிச்சுடலாம். உலகம் இப்படி அரம்பையர் சூழ்ந்து இருக்க, இது என்ன எங்கேயும் இல்லாத வழக்கமா ஒரு பையனைப் பிடிச்சு மகனுக்கு கல்யாணம் பண்ணிவைக்கறது. அவனும் பார்க்க அப்படி ஒரு அப்சரஸ் இல்லையே. உங்க மகளுக்கு நாளைக்கு கல்யாணம் ஆகுமே. சம்பந்தி வீட்டிலே நேரடியாகவே பேச மாட்டாங்க? எப்படி சம்பந்தம் வரும்? அண்ணா, சொல்றதை சொல்லிட்டேன் நான். உங்களுக்கு பேரன் பேத்தி வேணாமா? மகள் மூலமா கிடைக்கும்தான். அவங்க வேறே வீட்டுப் பசங்க இல்லியா? அனந்தனோட பிள்ளைகள் உங்களுக்கு சீராட்ட கிடைக்குமா சொல்லுங்க. பகவான் கிருஷ்ணன் எதுக்கு உலகத்திலே ஆண் பெண்ணைப் படைச்சது? வம்சம் விருத்தி ஆகி தலைமுறை தலைமுறையாக பாரம்பரியத்தை முன்னால் எடுத்துப்போகத் தானே? எனக்கும் என் மனைவி நிச்சலாவுக்கும் ஏனோ குழந்தை பாக்கியம் தரலேதான் ஆனா திலீப் அண்ணாவை அவன் இந்த விஷயத்திலே நல்லாத்தானே கவனிச்சிட்டிருக்கான்? அப்புறம் இன்னொண்ணு”.

அவர் சொல்லி முடிப்பதற்குள் அனந்தன் தன் அறைக்கும் திலீப் ராவ்ஜி ஹால் சோபாவுக்கும் தள்ளாடி நடந்து போனார்கள். அவர்களை போதை தழுவியது.

***

Series Navigation<<  மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்குமிளகு அத்தியாயம் முப்பத்தாறு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.