மித்ரோ மர்ஜானி-அத்தியாயம் 3

This entry is part 3 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி

“முழு உலகமுமே வேண்டுமானாலும் கேட்கட்டும். பார்க்கட்டும். எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. தங்கள் நகைகளும் ஆடைகளும் கொள்ளை போவதைப் பார்த்தபிறகும் வாயைப் பூட்டிக் கொண்டா இருக்க முடியும்?”

மித்ரோ இந்த சண்டையை நன்றாக ரசித்துக் கொண்டிருந்தாள். ஃபூலாவந்தியின் முதுகைத் தட்டி, ” சபாஷ்! சின்னவளே! சபாஷ்! இந்த வெள்ளை முடிக்காரிக்கு நீ நல்ல பாடம் கற்பித்தாய். ஆனால் ஒன்றைப் புரிந்து கொள் சின்னவளே! நான் மட்டும் உன் கணவனின் தாயாக இருந்திருந்தால், இந்நேரம் உன் தலையில் ஒரு முடி கூட மிச்சம் விட்டிருக்க மாட்டேன்” என்றாள்.

ஃபூலாவந்திக்கு ஓரகத்தியின் உச்சி முடியை கொத்தாகப் பிடித்து உலுக்க வேண்டும் போல மனம் பொங்கியது. இருப்பினும் என்ன நினைத்தாளோ, வாயை மூடிக் கொண்டு தொப் என்ற சத்தத்துடன் படுக்கையின் மீது அமர்ந்து கொண்டாள்.”யாருக்குத் தமது மானம் மரியாதை குறித்துக் கவலை இருக்கிறதோ, அவர்கள் தங்களுடைய பாதையில் நேராகச் செல்லட்டும். நான் யாருடைய வழிக்கும் வரமாட்டேன். என்னோடு யாரும் வம்புக்கு வருவதையும் விரும்ப மாட்டேன்,” என்றாள்.

மித்ரோ வேடிக்கை பார்ப்பது போல, மாமியாரின் முகத்தையும் ஓரகத்தின் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு, சிரித்துக் கொண்டே, ” ஃபூலாராணி, நான் ஏற்கெனவே கெட்டவளுக்கு கெட்டவள் என்று பெயர் பெயரெடுத்தவள். ஆனால், என் செல்லமே, நீ என்னையே முந்திவிடுவாய் போலிருக்கிறதே!” என்றாள்.

தனவந்தியின் நெஞ்சம் நிறைந்து தளும்பியது. எந்நேரமும் யாரைத் திட்டிக் கொண்டும் குறை கூறிக்கொண்டும் இருந்தாளோ, அந்த மருமகள் தான், மாமியாரை விட்டுக் கொடுக்காமல் பக்கபலமாக நிற்கிறாள். தனவந்தி தலையை அசைத்து, ” மருமகள்களே, நான் தவறாக ஏதாவது சொல்லி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நான் இந்த வீட்டுப் பிள்ளைகளின் அம்மா என்று என்னைத் தவறாகக் நினைத்துக்கொண்டு விட்டேன். நான் வெறும் வேலைக்காரி தான் என்பதை மறந்து விட்டேன். நான் வெறும் வேலைக்காரி மட்டுமே.”

மித்ரோவுக்கு உண்மையிலேயே மாமியாரை பார்க்க பரிதாபமாக இருந்தது. இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், போலியான கிண்டல் தொனியில், “அம்மா, தாயார்கள் ஆதியிலிருந்தே தம் குழந்தைகளுக்கு வேலைக்காரர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால், இந்த சிறிய மருமகளுக்கு எந்தப் பெயர் சொல்லி பூஜை செய்யப்போகிறீர்கள்? என் அருமை ஓரகத்தியே! என்னால் மட்டும் முடிந்தால் பாங்கே பிகாரிக்கு பதிலாக, ஃபூலா ப்யாரியின் கோவிலை கட்டி விடுவேன்!” என்றாள்.

தூரத்திலிருந்து இவர்களது சொற்போரை கேட்டுக் கொண்டிருந்த சுஹாக், தாள முடியாமல், மாமியாரிடம் வந்து கோபமாக, ” அம்மா, இவர்களது பைசாவுக்கு மதிப்பில்லாத வெட்டிப்பேச்சைக் கேட்காவிட்டால் உங்கள் வாழ்க்கை வீணாகி விடுமா என்ன?” என்றவாறே, மாமியாரின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.

மூத்த ஓரகத்தியுடன் மாமியார் செல்வதை பார்த்து, ஃபூலாவந்தி பின்னாலிருந்து குரல் கொடுத்தாள்.

” மாமியாரைத் தாராளமாகக் கூட்டிக்கொண்டு போங்கள் அண்ணி. எல்லாச் சொத்தையும் உங்களுக்குத் தானே எழுதிக் கொடுக்கப்போகிறார்கள்! ஆனால், என்னுடைய தலையணிகளை மட்டும் தயவுசெய்து திருப்பிக் கொடுத்து விடுங்கள்!” என்றாள்.

சுஹாக் ஃபூலாவந்தியிடம் திரும்பி வந்து, தீவிரமான குரலில், ” சிறியவளே, உன் வேடிக்கை கிண்டல் எல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும். வீட்டில், மரியாதை நிமித்தம், பெரியவர்களுக்கெதிரே முக்காடு அணிய மாட்டேன் என்று சபதம் ஏதும் செய்திருக்கிறாயா என்ன? என்றாள்.

ஃபூலாவந்தி சளைக்கவில்லை.

” எண்ணம் சரி இல்லாதவர்களுக்கு நான் என் மரியாதை தர வேண்டும்? என் திருமணத்தின் போது என் வீட்டார் எனக்கு சீதனமாகக் கொடுத்த மூன்று ஜோடி ஆடைகள், வேலைப்பாடு நிறைந்த பனாரசி துப்பட்டா, நெற்றிச்சுட்டி, தலையணிகள் எல்லாவற்றையும் என்னிடம் திரும்ப கொடுத்து விட்டால், எனக்கு யாருடனும் பகையும் இல்லை; யாரிடமும் விரோதமும் இல்லை,” என்றாள்.

“ஃபூலாவந்தி, பகையும் விரோதமும் அவரவர் மனதைப் பொறுத்தவை. உன்னுடைய ஆடைகளையும் நகையும் வைத்துக்கொண்டு நான் எந்த தேசத்துக்கு மகாராணி ஆகி விடப்போகிறேன்? இது குடும்பங்களின் கலாச்சாரம் பண்பாடு என்பதை புரிந்து கொள்.”

ஃபூலாவந்தி சரியாகப் பதிலடி கொடுத்தாள்.

” சரியாகச் சொன்னீர்கள் அண்ணி. உட்கார்ந்த இடத்திலிருந்து அடுத்தவர்களின் பொருளை அபகரித்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு வேண்டுமானால்இது குடும்பப் பண்பாடாக இருக்கலாம். ஆனால், பொருளை இழந்து நிற்பவர்களைப் பொருத்தவரை இது பகல் கொள்ளை!”

சுஹாகிற்கு உண்மையிலேயே வருத்தமாக இருந்தது. கைகளைக் கூப்பியபடி “வேண்டாம் சின்னவளே! நீ இப்படி எடுத்தெறிந்து பேசுவது நியாயம் இல்லை,” என்றாள்.

“நியாயம் அநியாயம் பற்றி நீங்கள் பேசுவது தான் மிகச் சரி அண்ணி. இரண்டுக்கும் இடையே யார் கோடு கிழித்திருக்கிறார்கள்? என் அம்மா எனக்குக் கொடுத்த நகைகள், சட்டப்படி யாருக்குச் சொந்தம்? இதையும் கொஞ்சம் சொல்லிவிட்டு போங்கள்,” என்றாள்.

சுஹாக் ஒரு நிமிடம் கூட அங்கு நிற்கவில்லை. வேகமாகப் போய் இரண்டு நகைகளையும் எடுத்துக் கொண்டு திரும்பி வந்தாள். ” இந்தா, ஃபூலாவந்தி உன் சொத்து,” என்று அவள் முன் வைத்தாள்.

ஃபூலா சந்தோஷத்தை மனதிற்குள்ளே மறைத்துக் கொண்டு, நெற்றிச்சுட்டியையும் தலையணியையும், இரு பக்கமும் திருப்பிப் பார்த்தபின், ஓரகத்தியிடம், “இதற்காக இவ்வளவு வாக்குவாதமும் சண்டையுமோ நடந்து விட்டது. தயவு செய்து என்னுடைய துணிமணிகளையும் கொடுத்து விடுங்கள். உங்களுக்குப் புண்யமாப் போகும். பிறகு சண்டைக்கு எந்த காரணமும் இருக்காது,” என்றாள்.

நடு மருமகள் மித்ரோ அவளை போலியாக புகழ்ந்து, ” ஃபூலாவந்தி, உன்னுடன் சண்டை என்பது முடிந்துவிடக் கூடிய விஷயமா என்ன? ஒன்று மட்டும் தெரிந்து கொள், உன் மனம் இப்படி பிச்சைக்காரத்தனமாக இருக்கும் வரை, நீ இந்த சண்டை சச்சரவுகளில் தான் உழன்று கொண்டிருப்பாய் ஃபூலா ராணி!”

சுஹாக் வந்த வழியே திரும்பி போனதும், மித்ரோ, சிறிய மருமகளைச் சீண்ட நினைத்து, அவளைப் பார்த்து கண்ணடித்தபடியே, ” மனமார்ந்த வாழ்த்துக்கள் ஃபூலாவந்தி! இன்று வெற்றி கிரீடம் உன் தலையில்! மேளம் வாசிப்பவர்களை கூப்பிட்டு உன் வெற்றியை பறைசாற்றச் சொல்! கூடவே இன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்” என்றாள்.

ஃபூலாவந்தி, நடுமருமகனின் கேலியையும் கிண்டலையும் ஒருசேர விழுங்கிவிட்டு, சுஹாக்வந்தி ஆடைகளைக் கொண்டுவரப்போவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

சுஹாக் தோளில் சுமந்து வந்த அவளுடைய துணிகளை பார்த்ததும், ஃபூலாவ்ந்தியின் மனம், ஏழு புண்ணிய நதிகளில் குளித்தது போல திருப்தி அடைந்தது.

மித்ரோ பாதி வழியிலேயே மூத்த ஓரகத்தியை நிறுத்தி அவள் கையிலிருந்து துணிகளை பிடுங்கிக் கொண்டாள். ” இனி இந்த துணிமணிகளின் கணக்கு வழக்கை சின்னவளோடு நான் முடித்துக் கொள்கிறேன்” என்றாள்.

சுஹாக் மித்ரோவை அதட்டி, ” மித்ரோ, ஒருவழியாக இத்தோடு சண்டை முடியட்டும். இப்போது நீ இன்னொரு புதிய யுத்தத்தை ஆரம்பிக்க போகிறாயா?” என்றாள்.

மித்ரோ தலையை அசைத்து, “ஒரு முறை இல்லை அண்ணி, ஆயிரம் முறை! இந்த பிச்சைக்காரிக்கு மூளை குழம்பி விட்டது அண்ணி! இந்த துணிகள் இல்லாமல் இவளுடைய முன்னோர் கரையேற மாட்டார்கள் போல!” என்றாள்.

பிறகு கண்களை உருட்டியப்படியே பூலாவந்தியிடம், “இந்தத் துணிகளை நீ மறந்து விடு சின்னவளே! இனி இவற்றை என்னிடமிருந்து அடுத்த ஜென்மத்தில் பெற்றுக் கொள்” என்றாள்.

ஃபூலாவந்தி கோபத்துடன் ஓரகத்தியை எரித்து விடுவது போல பார்த்து, கண்களாலேயே, “எப்படிக் கொடுக்காமல் இருக்கிறாய் என்று நானும் பார்த்து விடுகிறேன்” என்றாள்.

மித்ரோவும் ” முடியாது. முடியவே முடியாது” என்று கண்களாலேயே பதிலளித்தாள்.

ஃபூலாவந்தி அவளை ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்தாள். பிறகு கெஞ்சுகிற குரலில், ” சகோதரி, சம்பந்தப்பட்டவர்களே திருப்பிக் கொடுத்த பிறகு நடுவிலே குதிக்க நீ யார்?” என்றாள்.

மித்ரோ கையை விரித்தாள். ” நான்தான் உன் எமன், போதுமா? நீ மாமியாருடன் மோதிய போது நான் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்தேன். ஆனால் யாருடைய செருப்புக்கு கூட நீ ஈடாக மாட்டாயோ, அவளுடைய மானத்தையா கப்பலேற்ற நினைக்கிறாய்?

அடியே! எதுவும் பேசாமல் உன் நகைகளை எடுத்து உள்ளே வைத்துக் கொள். இல்லாவிட்டால் அதையும் நீ மறக்க வேண்டிவரும்,” என்றாள்.

ஃபூலாவந்தி வாய் திறந்து எதுவும் சொல்வதற்கு முன்பாக, ஒரகத்தியின் வில்லொலி கேட்டு, நெற்றிச்சுட்டியையும் தலையணியையும் முந்தானையில் முடிந்து கொண்டு, எதுவும் பேசாமல் படுக்கையில் போய் உட்கார்ந்தாள்.

மித்ரோ துணிகளை மூத்த ஓரகத்தியின் கைகளில் திணித்து, “நமது குருமார்களின் மீது ஆணை, நீங்கள் இதை ஃபூலாவிடம் திருப்பித் தரக்கூடாது அண்ணி. இந்த கூறு கெட்டவளிடம் திருப்பிக் கொடுப்பதை விட ஏதேனும் ஏழை பாழையிடம் கொடுத்து விடுங்கள்,” என்றாள்.

********

சண்டை சச்சரவினால் சிவந்த முகத்துடன் மித்ரோ தன் அறைக்கு திரும்பிய போது,

சர்தாரி லாலின் கலைந்து கிடந்த படுக்கையை வெகு நேரம் பார்த்துக்கொண்டு நின்றவாறே, தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தாள். வலிக்கும் எலும்புகளை இரண்டு மூன்று முறை நீவி விட்டுக்கொண்டாள். பிறகு, அலமாரியில் வைத்திருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து, முகம் பார்த்து தனக்குத்தானே சிரித்துக் கொண்டாள் – என் முட்டாள் கணவனுக்கு, நதி போலக் கட்டற்று ஓடும் என்னைப் போன்ற பெண்கள், எந்த குருவுக்கு அடிபணிவார்கள் என்பது தெரியாது. நான் இங்கு வேலை மெனக்கெட்டு சிங்காரித்துக் கொண்டு அமர்ந்திருந்தால், ஆறடி உயரமும் கட்டுமஸ்தான உடலும் படைத்த அவனோ, கடைத்தெருவில் வசூல் கணக்கைப் பார்க்க கிளம்பி விடுகிறான். அட, பெண்ணை வசப்படுத்தி கைக்குள் அடக்கி வைத்துக் கொள்ளத் தெரியாத இவனா பாலோ பெற்றெடுத்த இந்த அழகியை வசப்படுத்தப் போகிறான்?

வாசற் கதவருகே வந்து சுஹாக் குரல் கொடுத்தாள். “மித்ரோ உன்னை மாமனார் கூப்பிடுகிறார். எதற்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு” என்றாள்.

மித்ரோ எதையோ யோசித்தவறே சில நொடிகள் ஓரகத்தியைப் பார்த்துக் கொண்டே நின்றுவிட்டு, சற்று நேரத்தில் சுயநினைவுக்கு வந்தாள். ” மாமனார் கூப்பிடட்டுமே! எனக்கு யாரிடமேனும் பயமா என்ன? பிறகு, மோவாயில் விரல் வைத்து யோசித்தபடி, “நம் மாமனார் மிகவும் நல்லவர் தான். ஆனால் அவரது நீதிமன்றத்தில் நான் எதற்கு இன்று ஆஜராக வேண்டும்? சொல்லுங்கள் அண்ணி” என்றாள்.

சுஹாக், ஓரகத்தியின் கண்களைத் தவிர்த்து, “சகோதரி உன்னுடைய கொழுந்தனாரும் மாமனாரும் மிகவும் கோபமாக இருக்கிறார்கள். அவர்கள் ஏதாவது விசாரித்தால், நீ ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்து விடு.” என்றாள்.

கொழுந்தனாரின் பெயரை கேட்டதுமே மித்ரோ மிகவும் சந்தோஷம் அடைந்தாள். பார்வையைத் தாழ்த்தி, ” அண்ணி, உங்கள் இதயத்தில் வசிக்கிறார் அந்த ராஜா. அது மட்டும் இல்லாமல் போனால் நான் அவருடைய கோபம், அழுத்தம், எரிச்சல் எல்லாவற்றையும் ஒரு கை பார்த்திருப்பேன்” என்றாள்.

சுஹாக் மிகுந்த தயக்கத்துடன் வலுவற்ற குரலில், ” தயவு செய்து அவர்களுக்கு முன்னால் எதுவும் தாறுமாறாகப் பேசி விடாதே நடு மருமகளே. பெரியவர்கள் சொல்வதை கேட்டுக் கொள்” என்றாள்.

மித்ரா தலையசைத்து, ” பேஷ்! அண்ணி பேஷ்! என் கொழுந்தனாரைத் திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்தினால், என் தாயாக மாறி வாழ்நாள் முழுவதும் இப்படித்தான் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருக்க போகிறீர்களா?” என்றாள்.

எழுந்து நின்று கண்ணாடியில் மறுபடியும் தன் முகத்தை பார்த்துக் கொண்டாள். சுஹாகை அணைத்துக்கொண்டு, என் கொழுந்தனாரின் இதய ராணியே! வாங்க, மாமனாரின் தர்பாரில் ஆஜராகலாம்” என்றாள்.

இரண்டு மருமகள்களும் மாமனாரின் அறைக்கு வந்தபோது, அங்கு தனவந்தி ஏற்கனவே தன் இரண்டு மகன்களுடன் அமர்ந்திருந்தாள்.

சுஹாக் உள்ளே நுழைந்து மாமியாரின் அருகே அமர்ந்ததும், மித்ரோ மனதிற்குள் புன்னகைத்தபடியே சடாரென தன் கணவனின் அருகே சென்று அமர்ந்து கொண்டாள். தனவந்தி ஒவ்வொருவரையும் கூர்ந்து பார்த்துவிட்டு, பேச்சை ஆரம்பிக்கும் வகையில், ” சுமித்ரா ராணி நெற்றித் துணியை சற்று கீழே இழுத்து விட்டுக் கொள் மகளே! உன்னுடைய மாமனாரும் மூத்த கொழுந்தனாரும் அமர்ந்திருக்கிறார்கள்” என்றாள்.

மித்ரோ புதுமணப் பெண்ணை போன்று, ஒயிலாக துப்பட்டாவை நெற்றியை மறைக்குமாறு இழுத்து விட்டுக்கொண்டு, துப்பட்டாவுக்குள்ளிருந்து குறும்பாக புன்னகைத்தாள்.

குர்தாஸ், எதையோ சொல்ல விரும்பி, தொண்டையை கனைத்தார். மூத்த மகன் பன்வாரி தண்ணீர் நிறைந்த டம்ளரை அவர் முன் நீட்டினான். ஒரு வாய் தண்ணீர் குடித்ததும் தொண்டை கரகரப்பு நீங்கியது போல உணர்ந்தார். முதலில் மனைவி தன்வந்தியையும் பிறகு மகன் பன்வாரிலாலையும் பார்த்துவிட்டு, கையறு நிலையில் தலையை அசைத்தபடி,”வேண்டாம் இந்த வயதான கிழவனை சோதித்துப் பார்க்காதீர்கள். நான் கிழவனாகி விட்டேன் எனக்கு தினசரி சண்டை சச்சரவுகளிலிருந்து விடுதலை கொடுங்கள்,” என்றார்.

இள இரத்தத்திற்கே உரித்தான எரிச்சலுடன் பன்வாரிலால் முதலில் மௌனமாகத் தகப்பனாரைப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு அவரது தோளைத் தொட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ” அப்பா சர்தாரிக்கு தன் மனைவியோடு என்ன பகை? எதற்காக அவன் அவள் மீது பொய் பழி சுமத்தப் போகிறான்? என்றான்.

குர்தாஸ் மகனின் கையை சினத்துடன் தட்டி விட்டு, ” உளறாதே! நீ என்ன பேசுகிறாய் என்று தெரிந்து தான் பேசுகிறாயா? நீயே துணியை அவிழ்த்துவிட்டு, பிறகு நீயே அவர்கள் அம்மணமாக இருக்கிறார்கள் என்று பழி சுமத்துவாயா?” என்றார்.

குர்தாஸ் நடு மருமகளை பார்த்தார். அவள், அவருக்கு முக்காடிட்டுக் கொண்டிருக்கும் ஒரு சின்ன பொம்மையைப் போலத் தெரிந்தாள்.

பிறகு தலையசைத்து பன்வாரியைப் பார்த்து, ” இளமை வேகத்தில் கடுகை மலையாக்கி விடாதே” என்று எச்சரித்தார்.

சர்தாரிலால் எரிச்சலுடன் எதையோ சொல்ல முற்பட்டபோது, குர்தாஸ், அவனைத் தடுத்து, ” வேண்டாம் சர்தாரிலால், நான் ஒன்றும் கண் தெரியாத குருடன் இல்லை,” என்றார்.

பேச்சு திசை மாறுவதை உணர்ந்த பன்வாரிலால், தந்தையின் அருகே வந்து குனிந்து, ” அப்பா, என்ன பேசுகிறோம் என்ற முழு நினைவுடன் பேசுங்கள். பேச்சை திசை திருப்புவதற்கான நேரம் இல்லை இது. யாருக்கு புத்தி சொல்ல வேண்டுமோ அவர்களுக்கு புத்தி சொல்லுங்கள். யாரை கண்டிக்க வேண்டுமோ அவர்களை கண்டியுங்கள்,” என்றான்.

பிள்ளையின் அதட்டல் கேட்டு, குர்தாஸ், மூச்சுத் திணற கட்டிலில் சாய்ந்தார்.

தனவந்தியின் மனம் தவித்தது. குடும்ப கவுரவத்தை காப்பாற்றுமாறு, வீட்டுக்குப் பெரியவர் சொல்லாவிட்டால், வேறு யார் தான் இந்த பொறுப்பை தலையில் சுமந்து கொண்டு திரிவார்கள்?”

தனவந்தி புத்தி சொல்லும் குரலில், ” மகனே உன் தகப்பனாரின் உடல்நிலை சரியில்லை. அவர் சொன்னதை பொருட்படுத்தாதே. பன்வாரிலால், நீ சகோதரர்களில் மூத்தவன். நீயே உன் தம்பியிடமும் அவன் மனைவியிடமும் கேட்டு விடேன்,” என்றாள்.

ஏற்கனவே சர்தாரிலால் தன்னிடம் பகிர்ந்து கொண்டதைக் கேட்டு பன்வாரிக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. சற்று நேரம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ன கேட்பது என்று வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்து விட்டு, கணத்த, அதிகாரமான குரலில், “சர்தாரியின் மனைவியே! கடவுளை சாட்சியாக வைத்துக் கொண்டு, உன் கணவன் பார்த்தது- கேட்டது எல்லாம் பொய் என்று சொல்” என்றான்.

மித்ரோ துப்பட்டாவுக்குள்ளிருந்து முறுவலித்துக் கொண்டிருந்தாள்.

பன்வாரிலால் மறுபடியும், எது உண்மை எது பொய் என தெளிவுபடுத்தும் வகையில், தம்பியிடம், ” இவள் நீ தொட்டு தாலி கட்டிய மனைவி. நீயே உன் நெஞ்சைத் தொட்டு “எல்லாம் பொய்” என்று சொல்லிவிடு” எனறான்.

சர்தாரிலால் பதில் பேசாமல் தலையை குனிந்து கொண்டான். கட்டிய கணவனின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு மனைவி ஊர் மேயப் போகிறாள் என்று எந்த கணவன் தான் வாய்விட்டு ஒப்புக் கொள்வான்?

மகன் மௌனமாக நிற்பதை பார்த்து தனவந்தி, தூண்டி விடும் நோக்கத்தோடு, “பன்வாரி, உன் தம்பி என்ன சொல்லிவிடப் போகிறான்? மானமுள்ள எந்த ஆணால் மனைவியின் கெட்ட நடத்தையை பொறுத்துக் கொள்ள முடியும்?” என்றாள்.

பன்வாரிலால் இந்த முறை குரலில் கடுமையை வரவழைத்துக் கொண்டு, ” சுமித்ராவந்தி, சர்தாரிலால் எதை நிஜம் என்று சொல்கிறானோ, நீயே உன் வாயால் அதை பொய் என்று சொல்லிவிடு” என்றான்.

மித்ரோ, கை வளையல்கள் குலுங்க, நெற்றிக்கு கீழே தொங்கிக் கொண்டிருந்த துப்பட்டாவை, நெற்றிக்கு மேலாக ஒதுக்கிக் கொண்டாள். கண்களை உயர்த்தி முதலில் கொழுந்தன் பன்வாரியையும் பிறகு ஒரகத்தி சுஹாகையும் பார்த்தாள். பிறகு, தீர்மானமான குரலில், ” எல்லோரும் நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள் என் கணவர் சொன்னது உண்மை. அதேசமயம் அது பொய்யும் கூட” என்றாள்.

கணீர் என்ற குரலில் அவள் சொன்னதைக் கேட்டு, குர்தாஸ், பக்கவாதம் தாக்கியவரைப் போல துடித்தார்.

பன்வாரி தலையைக் குனிந்து கொண்டான். சர்தார் மார்பின் குறுக்காக கைகளை இறுகக் கட்டிக் கொண்டான்.

தனவந்தி மருமகளின் பேச்சைக் கேட்க முடியாமல் புலம்ப ஆரம்பித்தாள். “பேஷ்! பேஷ்! சுமித்ராவந்தி! ரொம்ப நல்லாயிருக்கு!

எல்லார் கண்ணிலும் இன்னும் கொஞ்சம் மண்ணைத் தூற்றம்மா! பித்தலாட்டக்காரி, உனக்கு நிஜமும் பொய்யும் ஒன்றுதான். கெட்டலையும் கண்கள் இரண்டு! வாயாடி, உன்னை பெற்ற அம்மா உனக்கு ஒரு புறம் உண்மையான பாலையும் மறுபுறம் பொய்யையும் புகட்டினாள் என்று சொல்லி விடுவது தானே!” என்றாள்.

இதைக் கேட்டு சுஹாக்வந்தி, ” துக்கப்படுவதற்கு இன்னொரு சுமித்ராராணி பிறந்து தான் வரணும்,” என்று முணுமுணுத்தாள்.

மித்ரோ நிறுத்தி நிதானமாக ஒவ்வொருவரையும் பார்த்தாள்.பிறகு, தன் ஓரகத்தியைப் பார்த்து, “என் அருமை மாமியாரின் செல்ல மருமகளே! கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல பாடம் புகட்டி என்னை கூட்டி வந்தீர்களே, இப்போது அதை திரும்பச் சொல்லவா அல்லது அம்மாவிடம் பால் குடித்த கதையைச் சொல்லவா?” என்றாள்.

சுஹாக்வந்தி மித்ரோவின் காதில், “சகோதரி, இப்போது இன்றைய பிரச்சனைக்கு தீர்வு காண்கிற வழியைப் பார்க்கலாம். நாளைய கதையை நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம். வயதானவங்களை மேலும் மேலும் தொந்தரவு செய்யாதே!” என்று கிசுகிசுத்தாள்.

மித்ரோவுக்கு, கோபம், தலைக்கேறிய வேகத்திலேயே இறங்கியது. அவளது முகத்தில், பரந்த மனம் கொண்ட அவளது அம்மா பாலோவைப் போலவே, விஷமச் சிரிப்பொன்று தவழ்ந்தது. பயமற்ற பார்வையுடன், கணீரென்ற குரலில், “யாருக்கு என்ன கேட்க வேண்டுமோ தயக்கமின்றி கேளுங்கள்.இந்த மித்ரோ ஏழு தவறு செய்திருக்கலாம். ஆனால், பொய் அவளை தீண்டாது. இது சத்தியம்,” என்றாள்.

பன்வாரி இன்னொரு கணையை தொடுத்தான்.”ஒரே நேரத்தில் உண்மையும் பொய்யும் என்று சொல்கிறாயே! சர்தாரியின் மனைவியே, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தால், என்ன உதாரணம் கொடுப்பாய்?” என்றான்.

மித்ரோவுக்கு தான் வேண்டிய வரம் கிடைத்துவிட்டது போல மகிழ்ச்சி ஏற்பட்டது. தன் உருண்ட பெரிய கண்களை உருட்டியபடி, “தங்கம் போன்ற இந்த தேகத்தை, வாட்டி வதைத்து தன்னைத்தானே எரித்துக் கொள்ளவா அல்லது குல்சாரியின் மனைவியைப் போல, ஊசிக்கும் சேலைக்கும் கணக்கு பார்த்துக் கொண்டு என் உயிரை விடவா? உண்மை என்ன தெரியுமா கொழுந்தனாரே, நான் இந்த உலகத்தாரின் கண் முன்பு, எல்லோரிடமும் சிரித்து பேசுகிறேன். பொய் எதுவென்றால், என் கணவன் எனக்கு அளித்திருக்கும்இந்த ராஜ வாழ்க்கையை விட்டுவிட்டு, நான் என்ன வேசியின் விடுதியிலா போய் உட்கார்ந்து விட்டேன்?” என்றாள்.

படுத்திருந்த குர்தாஸ் எழுந்து உட்கார்ந்து கொண்டார். மருமகளுக்கு பதிலாக, மகன்களை கடிந்து கொண்டு, ” அட புத்தி கெட்ட முட்டாள்களே! கடுகை மலையாக்கிட்டீங்களே! ஒரு பெண்ணிடம் மோதுகிறீர்களே!உங்கள் பலத்தை நிரூபிக்க ஆசை இருந்தால், தெருவில் இறங்கி, எதிர்ப்பட்ட ஆளிடம் மோதிப் பாருங்களேன்,” என்றார்.

சர்தாரி பெருமூச்சு விட்டபடி உறுமிக் கொண்டே எழுந்து நின்றான்.”த்தூ! வேசியிலும் கேடுகெட்ட வேசி நீ!. இன்று அப்பாவால் உன் நிஜத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், கண்டிப்பாக ஒருநாள் இவளுடைய சிநேகிதங்களும் இவள் அடிக்கிற கொட்டமும்……”

மித்ரோ இடுப்பில் கைவைத்து கொண்டு, குற்றம் சாட்டுபவள் போல மாமனாரைப் பார்த்தாள். அவரிடம், ” என் கணவன் பேசியதைக் கேட்டீர்களா அப்பா? ஒரு தாய்க்கு பிறந்த எவளாலும், இவரது வசவுகளைக் கேட்டுக் கொண்டு சும்மா இருக்கமுடியுமா?” என்றாள்.

குருதாஸ் மகன் சர்தாரியை மிகவும் மோசமாக திட்ட ஆரம்பித்தார். “மானக்கேடு சர்தாரிலால்! பெருத்த மானக் கேடு! மனைவியை வழிக்கு கொண்டு வர துப்பில்லை. போதாததற்கு இந்தப் பழியை வேறு சுமத்துகிறாயே” என்றார்.

வெற்றி தன் பக்கம் தான் என்பதை அறிந்து கொண்ட மித்ரோ, மாமனாரின் பாதங்களை தொட்டு கண்களில் ஒத்திக்கொண்டு, ” நமஸ்கரிக்கிறேன் அப்பா. இன்று உங்களிடமிருந்து கிடைத்த ஆதரவு, மித்ரோவுக்கு சொர்க்கத்தை விட உயர்ந்தது,” என்று பாசம் ததும்பும் குரலில் கூறினாள்.

காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் அழகி, பாலோவின் மகள், வயதான மாமனாரை ஏமாற்றி விட்டதை நினைத்து மனதுக்குள் சிரித்துக் கொண்டாள். பிறகு, மாமியார், ஓரகத்தி, கொழுந்தனார், கணவர் ஆகியோர் மீது வெட்டிக் காயப்படுத்தும் பார்வையை வீசி விட்டு, அறையை விட்டு அகன்றாள்.

******

பகல் முழுவதும் மண்டியில் அலைந்து திரிந்துவிட்டு, பன்வாரிலால் வீடு திரும்பிய போது சுஹாக் தட்டில் மாமனாருக்கு கோதுமை சாதமும் பருப்பும் எடுத்துக் கொண்டு செல்வதை பார்த்தான். நெற்றியிலிருந்து துப்பட்டாவை கண்களுக்கு கீழே இழுத்து விட்டுக்கொண்டு, அருகில் நின்றுகொண்டு மாமனாருக்கு சுஹாக் சாப்பாடு கொடுத்தாள். அவர் சாப்பிட்ட பிறகு தட்டை எடுத்துவிட்டு, அவரை வாய் கொப்பளிக்கச் செய்தாள். பிறகு முந்தானியில் முடிந்து வைத்திருந்த உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்து அவர் முன் வைத்தாள்.

குருதாஸ் நீண்ட ஆயுளுடன் சுகமாக வாழ அவளுக்கு ஆசி அளித்தார்.

சுஹாக் வாசற்படியை தாண்டும் போது அவர் அவளை நிறுத்தி ” மகளே சுஹாக்வந்தி! உன்னுடைய நல்ல குணத்துக்கும் அறிவுக்கும் விலையே இல்லை! நீ இந்த வீட்டுப் பொக்கிஷம்! உன்னை மருமகளாக அடைய நானும் உன் மாமியாரும் போன ஜென்மத்தில் கண்டிப்பாக ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

மாமனாரின் பாராட்டில் ஒரு சுற்று பெருத்தது போல உணர்ந்த சுகாதந்தி சமையலறை நோக்கிச் சென்றாள். அவள் சென்ற பிறகும் குர்தாஸ், படுத்தவாறே யோசித்துக் கொண்டிருந்தார். குடும்பம் என்னும் வலையில் சிக்கித் துடித்துக் கொண்டிருந்த போதும், மனிதனுக்கு எந்த இழப்பும் ஏற்படுவதில்லை. இந்த குடும்பம் என்னும் மாயையில் லட்சக்கணக்கான துக்கங்களையும் சோகங்களையும் அனுபவித்து தீர வேண்டியிருந்த போதிலும், அந்த அனுபவங்களே முதுமையில் கை கொடுக்கின்றன. மருமகளையே எடுத்துக் கொள்வோமே! எந்த ஊரைச் சேர்ந்தவளோ எந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவளோ, இங்கு திருமணம் ஆகி வந்து இந்த “கிழங்களுக்கு” சேவை செய்து கொண்டிருக்கிறாளே!

திடீரென மகள் ஜன்கோவின் உருவம் கண்முன் தோன்றியது. நேற்று வரை இந்த வீட்டு முற்றத்தில் துள்ளி குதித்து விளையாடியவள், இன்று இன்னொருவர் வீட்டில் குத்து விளக்காய் ஜொலித்துக் கொண்டிருக்கிறாள்! குர்தாஸின் மனம் ததும்பி வழிந்தது. பறந்து போய் மகள் குடும்பம் நடத்தும் அழகை பார்க்க வேண்டும் என விழைந்தது. போன வருடம் வந்து போனவள் தான். அதற்குப் பிறகு அவளை யாரும் அழைக்கவே இல்லையே! சம்மந்தி வீட்டார் என்ன நினைத்துக் கொள்வார்கள்!”

தனவந்தி உள்ளே வந்து, “பிள்ளைகளையும் மருமகளையுமே சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு நம் மகளின் நினைவு வருவதேயில்லை,” என்றாள்.

கதவைச் சாத்திவிட்டு, கட்டிலில் படுத்துக்கொண்டு, களைத்த குரலில், “ஜன்கோவின் கடிதம் வந்திருக்கிறது. வரும் சித்திரை மாதத்தில் நம் பேரனுக்கு மொட்டை அடிக்க போகிறார்களாம்,” என்றாள்.

இந்த தகவல் குர்தாசுக்கு தன் பெண்ணையே நேரில் சந்தித்தது போன்ற மகிழ்ச்சியை தந்தது. பாசத்துடன், “தன்வந்தி, கடவுள் கிருபையால் அவர்கள் வீட்டு முதல் பேரன் நம் ஜன்கோவின் வயிற்றில் பிறந்திருக்கிறான். அதனால் எந்த குறையும் இல்லாமல் நாம் பேரனுக்கு சீர் செனத்தி செய்து விட வேண்டும்,” என்றார்.

Series Navigation<< மித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 2மித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 4 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.