மல்லாதி வசுந்தராதேவி எழுதிய நாவல் தஞ்சாவூர் பதனம்

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

1947 ஆகஸ்ட் இந்திய விடுதலைக்குப் பிறகு பெண்கள் படைத்த நாவல் இலக்கியத்தின் வரலாறு மல்லாதி வசுந்தராவின் நாவல்களோடு தொடங்குகிறது. இவருடைய முதல் நாவல் 1952 ல் வந்த ‘தஞ்சாவூர் பதனம்’ (தஞ்சாவூரின் அழிவு). 1973 ல் வெளிவந்த ‘பாடலி’ என்ற நாவலுக்கு முன்பே – தூரபு கொண்டலு, யுக சந்தி, ராமப்ப குடி. த்ரிவர்ண பதாகை – ஆகிய நாவல்கள் வந்திருந்தன. யுக சந்தி, ராமப்ப குடி என்ற நாவல்களின் முதல் பிரசுரப் பிரதிகளில் வெளியிட்ட வருடம் பற்றி குறிப்பிடப்படவில்லை. யுகசந்தி என்ற நாவலுடைய அட்டையின் பின்னால் நாவலாசிரியையின் பிற படைப்புகள் என்ற தலைப்பில் தூரபு கொண்டலு, தஞ்சாவூர் பதனம், சப்த வர்ணி, ராமப்ப குடி ஆகிய நாவல்களோடு கூட அச்சில் இருந்த நாவல்களாக த்ரிவர்ண பதாகை, வங்கர கீதலு, அனங்க லேகா ஆகியவை பற்றிய குறிப்புகள் உள்ளன. ‘பாடலி’ என்ற நாவலுக்கு நாவலாசிரியை எழுதிய முன்னுரையில் த்ரிவர்ண பதாகை குறித்தும் கூறியுள்ளார். ஆதலால் வங்கர கீதலு, அனங்க லேகாவைத் தவிர மீதி உள்ள நாவல்கள் அனைத்தும் 1973 க்குக் முன்னதாகவே அச்சானதாகக் கருத வேண்டும். ‘நர மேதம்’ என்ற நாவலின் முதல் பிரசுரம் எப்போது என்பது தெரியவில்லை. ஆனால் 1979ல் அதன் இரண்டாவது பிரசுரம் வந்தது. ‘பாடலி’ என்ற நாவலுக்கு எழுதப்பட்ட முன்னுரையைக் கொண்டு அவர் ‘பாஞ்சாலி’ என்ற புராண நாவல் எழுதுவதற்கு சமாச்சாரம் அனைத்தும் சேகரித்து வைத்திருந்ததாக அறிய முடிகிறது.

வசுந்தராதேவி தெலுங்கு எம்.ஏ படித்துள்ளார். ஆழமான சம்ஸ்கிருத, ஆந்திர, பிரபந்த அறிவு அவருடைய நாவல்களில் வெளிப்படுகிறது. விஸ்வநாத சத்திய நாராயணாவுக்கு இவர் பிரதம சிஷ்யை. வசுந்தரா தேவி நாவல்கள் எழுதுவதற்கு உந்து சக்தியாக இருந்தவர் அவரே. ‘பாடலி’ நாவலுக்கு எழுதிய பீடிகையில் அத்தியாயங்களின் பிரிவு, ஆரம்பம், முடிவு, கதா பாத்திரங்களின் நடையுடை பாவனைகளின் சித்தரிப்பு, எதை எழுத வேண்டும், எதை வாசிப்பவரின் ஊகத்திற்கு விட வேண்டும் முதலான பல விஷயங்களை விசுவநாத சத்யநாராயணாவின் உபன்யாசங்களில் இருந்து கிரகித்ததாகக் கூறியுள்ளார். இலக்கண மொழிநடை, பிரபந்தப் படைப்பு முறையில் வாக்கிய அமைப்பு முதலானவற்றில் விஸ்வநாத சத்யநாராயணாவின் தாக்கம் இவருடைய நாவல்களில் தெரிகிறது.

வசுந்தராவின் நாவல்கள் அதிகம் ஆந்திர விஸ்வ வித்யாலயம் (ஆந்திர விஸ்வகளா பரிஷத்) போட்டிகளுக்காக எழுதப்பட்டு பரிசு பெற்றவை. 1934 ல் முதல் முறையாக இந்த அமைப்பு வைத்த நாவல் போட்டியில் விஸ்வநாத சத்ய நாராயணா எழுதிய ‘வேயி படகலு’ நாவலும், அடவி பாபிராஜு எழுதிய ‘நாராயண ராவு’ நாவலும் பரிசு பெற்றன. அதன் பிறகு அந்த அமைப்பு இன்டர்மீடியட் மாணவர்களுக்கு துணை நூலாக போதிப்பதற்கு வரலாற்று நாவல் போட்டியை நடத்தியது. அவ்வாறு வசந்தரா எழுதிய தஞ்சாவூர் பதனம் நாவல் 1952 ம் ஆண்டு பரிசு பெற்றது. அந்த வரிசையில் சப்த வர்ணி, பாடலி ஆகிய நாவல்களும் பரிசு பெற்ற நாவல்களே.

வசந்தராவின் நாவல்கள் பிரதானமாக வரலாற்று நாவல்கள். தஞ்சாவூர் பதனம் அவற்றில் முதன்மையானது. 16, 17 ம் நூற்றாண்டுகளில் தமிழர்களின் பகுதியை ஆண்ட தெலுங்கு அரசர்கள் தஞ்சாவூர் நாயக்கர்கள். 14 வது நூற்றாண்டில் விஜயநகர அரசர்கள் தமிழ் தேசத்தை மதுரை, தஞ்சாவூர், செஞ்சி என்ற மூன்று பகுதிகளாகப் பிரித்து நியமித்த பிராவின்ஷியல் கவர்னர்கள் 16வது நூற்றாண்டின் இடைக்காலத்தில் விஜயநகர அரசர்களுக்கு கப்பம் கட்டி சுதந்திர சக்திகளாக உருவானார்கள்.

1532 ல் செவ்வப்ப நாயக்கரோடு ஆரம்பமான தஞ்சாவூர் நாயக்கர் ஆட்சி 1673 ல் மதுரை அரசரான சொக்கநாத நாயகரோடு நடந்த போரில் விஜயராகவ நாயக்கரின் தோல்வியோடு முடிவுக்கு வந்தது. விஜயராகவ நாயக்கர் தன் புதல்வியை

சொக்கநாத நாயக்கருக்கு அளித்து திருமணம் செய்வதற்கு நிராகரித்ததால் நடந்த இந்த யுத்தம் தஞ்சாவூர் நாயக்க அரசர்களின் தோல்விக்குக் காரணமானது.

இது உடனடி காரணமாக இருந்தாலும் இதற்குப் பின்னணியில் நடந்த பிற தார்மீக, ஒழுக்கம் தொடர்பான காரணங்களையும் கற்பனை செய்து வளர்க்கப்பட்ட கதையம்சத்தோடு உருவான நாவல் தஞ்சாவூர் பதனம். அந்த காரணங்களில் விஜயராகவ நாயக்கருக்கு ரங்காஜம்மாவோடு ஏற்பட்ட தொடர்பும் அதன் பரிணாமங்களும் ஒரு அம்சம். நாவலின் கதை தொடங்குவதற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே விஜயராகவ நாயகர் ரங்காஜம்மாவை அழைத்து வந்து அவளுக்கு ஆதரவளித்ததாகவும் அதன் பலனாக அப்போதிலிருந்து உணவு விஷயத்தில் தவிர மகாராஜாவின் தரிசனம் அரிதாகிப் போனதால் மகாராணி மனவேதனைக்கு ஆளானதாகவும் அதனைத் தன் பிறந்து வீட்டிலிருந்து காணிக்கையாக அழைத்து வரப்பட்ட அந்தணர் சோமயாஜுலுவிடம் கூறியதாகவும் கதையின் தொடக்கம் அமைந்துள்ளது. மகாராணிக்கு வந்த சங்கடத்தைத் தீர்ப்பது எப்படி என்று அவர் ஆலோசனையில் ஆழ்வது கதையின் ஓட்டத்தை நடத்தும் அம்சம்.

விஜயராகவ நாயக்கரின் காலத்தில் பெனுகொண்டாவை தலைநகராகக் கொண்டு விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருந்த அரவீடு வம்சத்தைச் சேர்ந்த மூன்றாவது ஸ்ரீரங்கராயரின் ஆட்சி நடந்து வந்தது. மதுரை, தஞ்சாவூர், செஞ்சி ஆகியவற்றை ஆண்ட நாயக்க அரசர்கள் ஒன்று சேர்ந்து விஜயநகர ஆட்சியை அழித்து ஒழிக்கும் முயற்சியில் இருக்கிறார்கள் என்று அறிந்து பிரித்தாளும் முறையில் அந்த பிரச்சனையை எதிர்கொண்டு ஸ்ரீரங்கராயரின் அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கு தளபதி ராமராஜு வியூகம் தீட்டுவதற்கு வாய்ப்பு அளித்தது கூட விஜயராகவ நாயக்கருக்கு இருந்த பெண்களின் அழகில் மயங்கும் போக குணமே, சங்கீத நாட்டியக் கலையின் மேலிருந்த மோகமே என்று நாவலின் கதை அம்சப் பின்னலில் அதனை ஒரு இழையாகச் செய்துள்ளார் வசுந்தரா.

இந்த வியூகத்தை நடைமுறைப்படுத்தும் மனிதர் இந்த நாவலில் உள்ள நியோகி வெங்கன்னா என்ற கதாபாத்திரம். ரங்கராயரின் ஆஸ்தான நர்த்தகி சந்திரரேகாவை இரையாக வைத்து விஜயராகவ நாயக்கரை தனிமைப்படுத்தி மதுரை, செஞ்சி நாயக அரசர்களை யுத்தத்தில் தோல்வி அடையச் செய்ததால் இந்த வியூகம் வெற்றியடைந்தது.

தந்தைக்கு இருந்த போகங்களின் மேலான பிரியத்தால் தாய்க்கு நடக்கும் அவமானம் பற்றிய கவலை மகன் மன்னாரு தாசுவுக்கு இருந்தது. அதையே காரணமாகக் கொண்டு அவன் மீது ராஜ துரோகக் குற்றம் சுமத்தி விஜயராகவ நாயக்கரை உசுப்பி விடுவதும், சிற்றன்னையின் சகோதரர்களிடமும் மன்னாரு தாசுவுக்கு விரோதத்தை ஏற்படுத்துவதும், அதன் மூலம் உள்நாட்டு கலகத்தை உருவாக்கி, தஞ்சாவூரைக் கைப்பற்றுவதும் தொடர்ச்சியான திட்டங்கள். இதுவும் வெங்கன்னாவின் திட்டமே. அதன் பலனாக விஜயராகவ நாயக்கர் தன் மகனையே சிறை பிடித்து சிறைச்சாலையில் அடைத்தான்.

ரங்காஜம்மா வந்தது முதல் பதினைந்து ஆண்டுகளாக கணவரின் அன்புக்கு ஏங்கும் கவலை மகாராணியின் இதயத்தில் ஒரு புண் போல எரிந்து கொண்டிருக்கும் போது அரசர் தம் மகனையும் சிறையில் தள்ளிய செய்தி மகாராணியை ஆத்திரமடையச் செய்தது. அவளுடைய மௌனமான எதிர்ப்பும், பட்டத்தரசியாக அவளுக்கு உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தும் ஊக்கமும் அதன் விளைவுகளும் நாவலை உச்சத்திற்கு எடுத்துச் செல்கின்றன.

ஒருபுறம் வெங்கன்னாவின் நடவடிக்கைகள் மீது கட்டுப்பாடுகளைப் பிறப்பிப்பதும், மறுபுறம் ரங்காஜம்மா யார்? அவள் வரலாறு என்ன? என்பது பற்றி ஆராய்ந்து அறிவதும், இறுதியில் ரங்காஜம்மா, ரகுநாத நாயக்கருக்கு ஒரு விலைமாது மூலம் பிறந்த மகள் என்று தெரிந்து கொள்வதில் முடிகிறது. தான் இத்தனை நாட்களாக சகோதரியிடம் மோக எண்ணத்தோடு நடந்து கொண்ட விஷயத்தை அறிந்து விஜய ராகவ நாயகர் நிலை குலைந்தார்.

இந்த உண்மைகளை வெளிச்சத்திற்கு எடுத்து வந்ததற்கு ராணியின் மீதும் அவளுக்கு உதவிய சோமையாஜுலு மீதும் அவளிடம் இரக்கமும் கௌரவமும் காட்டிய பெத்த தாசு மீதும் வெறுப்பு, கோபம், பழி தீர்த்துக் கொள்ளும் ஆர்வம், சகோதரியோடு இத்தனை நாட்கள் தான் கொண்ட அதர்மத் தொடர்பால் ஏற்பட்ட அந்தரங்க வேதனை – இவை அனைத்தும் விஜயராகவ நாயக்கரை மனப் போராட்டத்திற்கும் மன வேதனைக்கும் உள்ளாக்கி செய்யக்கூடாத செயல்களைச் செய்யும்படி தூண்டின.

மகாராணி கௌரவிக்கும் பெத்த தாசுவை அரச சபையில் விவாதத்தில் இழுத்து அவமதிக்க வேண்டும் என்று பார்த்தும் அது சாத்தியம் ஆகாததால் கழுதைக்கு அலங்காரம் செய்து பெத்த தாசுவுக்கு சன்மானம் என்று கூறி ஊரில் ஊர்வலமாக நடத்துவது நடந்தது. பெத்த தாசுவுக்கு வந்த கனவு வடிவத்தில் விஜயராகவ நாயக்கரின் அழிவைக் காண்பிப்பதோடு இந்த நாவல் முடிகிறது.

விஜயராகவ நாயக்கரின் எட்டு ராணிகளில் ஞானாம்பிகை ஒருவர். அவளுடைய மகள் அச்சுதாம்பிகா. நாவலில் தங்கள் மகளின் திருமண விஷயம் குறித்து கணவருக்கு நினைவூட்டுவதும் வெங்கன்னாவிடம் அந்த செய்தியைக் கூறுவதும் அதை வைத்துக் கொண்டு மதுரை சொக்கநாத நாயக்கரோடு சம்பந்தம் ஏற்பாடு செய்வது குறித்து வெங்கன்னா முயற்சிப்பதும் கதையின் போக்கில் அறியமுடிகிறது. பெத்த தாசுவுக்கு வந்த கனவில் அந்த திருமணப் பேச்சு வார்த்தைகள் தோல்வியடைவதன் மூலம் யுத்தம் கண்ணுக்குத் தென்படுகிறது. விஜயராகவ நாயக்கர் தன் மகளை சொக்கநாதருக்கு ஏன் திருமணம் செய்ய மாட்டேன் என்றார்? அவருடைய அக்காவை மணம் புரிந்த திருமலசௌரி, தான் கட்டிய கோட்டை பற்றி அவருடைய அபிப்ராயத்தைக் கேட்டபோது, “அழகாகவே இருக்கிறது. ஆனால் எங்கள் தந்தையார் கட்டிய கோட்டையில் சிற்ப சாமர்த்தியம் அதிகம்” என்று சொன்ன பதிலால் கோபமுற்று அவளை குத்திக் கொன்று விட்டான். அக்காவைக் கொலை செய்தவனுடைய வீட்டுக்கு பெண்ணை அனுப்ப மாட்டேன் என்பதில் அவன் நிச்சயமாக இருந்தான். இது யுத்தத்திற்கு காரணமானது. இதுவே தஞ்சாவூரின் அழிவுக்கும் காரணமானது. அதோடு கூட விஷ்ணு பக்தரான பெத்த தாசுவை அவமதித்ததும் ஒரு காரணம் என்று அவனுடைய கனவு குறிப்பிடுகிறது.

எத்தனை மனைவியர்கள் உள்ளனர் என்று கூடத் தெரியாமல் வாழ்ந்த அரசர்களின் போகமயமான வாழ்க்கை, பெண் மோகம் போன்றவை அவர்களின் ஒழுக்கம் அழிவதற்குக் காரணமாக இருந்தன. அதிகாரத்தை தீய வழிகளில் பயன்படுத்தி பிராமணர்களையும் பக்த ஜனங்களையும் அலட்சியம் செய்த செயல் அந்த அரசர்களின் தார்மீகமான அழிவுக்கு வழி வகுத்தது.

சாம்ராஜ்யங்களின் அழிவுக்கு அரசியல் மற்றும் பொருளாதார காரணங்கள் எத்தனை இருந்தாலும் அவற்றுக்கு மூல காரணமாக ஒழுக்கமின்மை, அதர்மச் செயல்கள் போன்றவற்றை இந்த நாவலில் குறிப்பிடுவது வசுந்தராவின் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்திற்கான எடுத்துக்காட்டு.

பல பெண்களைத் திருமணம் செய்யும் சமுதாய அமைப்பில் பெண்கள் மூச்சு விடக் கூட முடியாமல் புழுங்குவதையும், கணவனின் அன்புக்கும் ஆதரவுக்கும் கொடுத்து வைக்காத பெண்களின் பரிதாபமான நிலையையும் சூட்சும முறையில் காட்டியப்படியே அந்த விதமான வாழ்க்கைப் போராட்டங்களில் இருந்து தன்மானத்தோடும் சைதன்யத்தோடும் பெண்கள் தம் சுய அதிகாரத்தை வெளிப்படுத்தும் நிலைக்கு எவ்வாறு உயர்ந்தார்கள் என்பதை ராஜ கோபாலாம்பிகா என்ற கதாபாத்திரத்தின் வளர்ச்சி மூலம் நிரூபித்துள்ளார் வசுந்தரா தேவி.

வசுந்தரா தேவியின் நாவல் ராமப்ப குடி (ஆலயம்)

காகதிய அரசன் கணபதி தேவனின் காலத்தில் ரேச்சர்ல ருத்ர சேனானி என்ற அரசன் முலுகு என்ற இடத்திற்கு அருகில் உள்ள பாலம்பேட்டையில் நிர்மாணித்த ஆலயம் ராமப்பா கோவில். அந்த ஆலயத்தில் சிவனின் பெயர் ராமலிங்கேஸ்வரர். இது காகதிய சிறபக் கலை வைபவத்திற்கு பிரபலமான எடுத்துக்காட்டு. ஆலய நிர்மாணத்தில் பங்கு பெற்ற பிரதான சிற்பியான ராமப்பாவின் பெயரில் இந்த கோவில் புகழ்பெற்றது. சிற்பி ராமப்பாவை மையமாகக் கொண்டு வசந்தராதேவி எழுதிய நாவல் ராமப்ப குடி. சிற்பக் கலையில் நிபுணத்துவம் பெற்ற பிராமணரான ருத்ரப்பாவின் மகன் ராமப்பா. தலைமுறையாக தந்தையிடமிருந்து சிற்பக் கலையை கற்றார் ராமப்பா. தந்தையின் மரணத்திற்குப் பிறகு அவருடைய நீண்ட நாள் ஆசையான சிவாலய நிர்மாணத்தின் பொறுப்பு மகனுடையதானது. ராமப்பாவின் நண்பர் ம்ருத்யுஞ்சயர் ஒரு கிருஷ்ண பக்தர். மகா விஷ்ணுவின் ஆலயம் கட்ட வேண்டுமென்பது அவருடைய விருப்பம். இவ்விரண்டு விருப்பங்களின் இடையில் இருந்த வேறுபாட்டால் மனப்போராட்டத்திற்கு உள்ளான காலத்தில் ‘ஒருகல்லு’ (வாரங்கல்) லிருந்து ‘காட்டய பாண்டய’ சேனாபதிகள் வந்து ருத்ரனின் ஆலய நிர்மாணப் பொறுப்பை ராமப்பாவிடம் அளித்தனர். தன்னுடைய விஷ்ணு தேவாலய நிர்மாண ஆசை நிறைவேறாது என்று எண்ணிய நண்பன் நிராசைக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்கிறான். அனந்தசர்மாவின் போதனையால் வருத்தத்தை போக்கிக் கொண்டு ராமப்பா சிவாலய நிர்மாணத்திற்கு தயாராவது இதில் உள்ள கதை.

அனந்தசர்மா ராமப்பாவுக்கு போதித்தது அத்வைதம். ‘ஹரிஹர அபேதம்’ – ஹரிக்கும் ஹரனுக்கும் இடையே வேறுபாடு இல்லை என்பது. சைவ, வைணவப் பிரிவுகளின் கருத்தொற்றுமையை ஏற்றுக்கொண்டு தேவாலய நிர்மாணத்தில் ஈடுபடுவது அதன் மூலம் சாத்தியமானது.

சிவனுடைய ஆலயத்தில் ‘க்ஷீர சாகர மதனம்’ – பாற்கடலைக் கடைவது போன்ற காட்சிகளைச் செதுக்கியதற்கு ஆதாரமாக இந்த கற்பனை நாவலாசிரியைக்கு உதவியது. சிற்பம் என்பது ஒரு கலை. அழகியல் பார்வை அதற்கு மிகவும் முக்கியம். கோவிலின் சிற்ப சௌந்தர்யத்திற்குக் காரணமான சம்ஸ்காரத்தை கற்பனை செய்வதற்குத் துணையாக உலகில் ஒப்பில்லாத மகா சௌந்தர்யவதியான ஒரு பெண்ணைக் காதலிப்பது அவசியம் என்று ராமப்பாவிடம் அனந்த சர்மா தெரிவிக்கிறான். ஆனால் அந்தப் பெண்ணை விட்டுவிட்டு ஒரு எல்லையற்ற சௌந்தர்ய பாவனையாக அந்தக் கற்பனை வளரும்படி சாதனை செய்ய வேண்டும் என்ற ஷரத்தும் விதிகிறான். அந்த சாதனையில், அந்த மனப்போராட்டத்தில் ஆழ்ந்து வெளிப்பட்ட சௌந்தர்ய பாவனை ராமப்பாவின் சிற்பங்களில் பிரவகிப்பதாக கதை நடத்தப்படுகிறது. அந்த சௌந்தர்யத்திற்கு ஆதாரமான பெண்மணியாக ருத்ரமாதேவி இருப்பதும், அவளுடைய பட்டாபிஷேகமும் நாவலுக்கான கதையம்சத்தைக் கட்டமைப்பதில் உதவின.

தான் ஒரு பிராமணனாக இருந்தும் சூத்திரப் பெண்ணின் மீது மனதை நிலை நிறுத்தியதில் உள்ள அதர்மத்தைப் பற்றி சிந்திகிறான் ராமப்பா. பிராமணனாக இருந்தும் சிற்பக் கலையில் நாட்டம் கொண்ட தன் பூர்வீகர்களின் குற்றத்தின் பலனே அது என்று எண்ணமிடுகிறான். இறுதியில் சன்னியாசம் ஏற்பது வரை அவனுடைய குற்ற உணர்வு அவனை வழி நடத்துகிறது. இங்கும் சம்பிரதாயமான வர்ண தர்மத்தின் மேல் நாவலாசிரியைக்கு இருக்கும் அர்ப்பணிப்பு வெளிப்படுகிறது.

முலுகு காடுகளையும் ராமப்பா ஆலயத்தின் சிற்பச் சிறப்புகளையும் வர்ணிப்பதில் நாவலாசிரியையின் திறமை வெளிப்படுகிறது. தேசிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிற்பச் செல்வம், மதம், வாழ்வின் கலாசாரம் போன்றவை இந்த நாவலில் தேசிய பாவனையை முழுமையாக்குகின்றன. இந்த நாவல் அப்போது ஆந்திர விஸ்வ வித்யாலயத்தில் பேராசிரியராக இருந்த ஏஎல் நாராயணா என்பவருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

வசுந்தரா தேவியின் நாவல் யுக சந்தி

யுக சந்தி 11 வது நூற்றாண்டில் ஆந்திர தேசத்தை ஆண்ட சாளுக்கிய அரசர்களின் வரலாற்றோடு தொடர்புடையது. இன்னும் சூட்சுமமாக கூற வேண்டும் என்றால் ராஜராஜ நரேந்திரனின் காலத்தைச் சேர்ந்தது. அவனுடைய மனைவி அம்மங்கி தேவிக்கு இருந்த பாகவத பக்தி, பிராமண பக்தி ஆகியவற்றோடு கூட அரசை பாதுகாப்பதற்குத் தேவையான சக்தி சாமர்த்தியங்களையும் மையமாகக் கொண்டு அன்றைய பெண்களின் சக்தி, சாமர்த்தியங்களை நிரூபிக்கும் கதையம்சத்தோடு நடக்கிறது இந்த நாவல்.

மகாபாரதத்தை தெலுங்கில் படைத்த நன்னயா கூட இதில் ஒரு முக்கிய பாத்திரமாக வருகிறார். நாராயண பட்டரோடு அவருக்கிருந்த நட்பு, வளர்ப்பு மகள் கௌதமி, மகாபாரதப் படைப்பில் அவளுடைய பங்கு போன்றவை கூட கதையம்சத்தின் கட்டமைப்பில் ஒரு பகுதியாக இணைந்துள்ளன. நன்னய பட்டரின் மரணத்தோடு இந்த நாவலின் கதை முடிகிறது. இந்த நாவலை வசுந்தராதேவி, தன் தாய் மல்லாதி அலிவேலு மங்கம்மாவின் பவித்ராத்மாவுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.

வசுந்தரா தேவியின் நாவல் நர மேதம் (சமுதாயப் படுகொலை)

நரமேதம் நாவல் 1979, 80 கல்வி ஆண்டில் இன்டர்மீடியட் மாணவர்களுக்கு துணைப் பாடமாக தீர்மானிக்கப்பட்டது. இது ஐந்தாவது, ஆறாவது நூற்றாண்டுகளில் ஆந்திர தேசத்தை ஆண்ட விஷ்ணு குன்டின அரசர்களின் சரித்திரத்தை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது. விஷ்ணு குண்டின அரசர்களில் நர மேதம் செய்த இரண்டாவது மாதவ வர்மா கிபி 456லிருந்து 503 வரை பரிபாலித்தான். இந்த நாவலுக்கு நாயகனான மாதவ வர்மா, சந்திரகுப்த சக்கரவர்த்தியின் மகள் சந்திராவதியை தன் வீர பராக்கிரமங்களை ஒதுக்கி வைத்து விட்டு திருமணம் செய்து கொண்ட நான்காவது மாதவ வர்மா. இவன் 573 லிருந்து 623 வரை ஆண்டான்.

நாவலாசிரியை இரண்டாவது வர்மா செய்த சமுதாயக் கொலைகளை நான்காவது மாதவ வர்மா செய்ததாக கதையை நடத்தியுள்ளார். யாகங்கள், யக்யங்கள் ஆனாலும், பரஸ்பரம் வெற்றி பெறவேண்டும் என்ற ஆர்வத்தோடு செய்யும் யுத்தங்கள் ஆனாலும் நடப்பது நர மேதம் தானே! அந்த நர மேதத்தில் மனித சம்பந்தங்கள் அனைத்தும் ஆகுதி ஆகக்கூடியவையே. ஆனாலும் யக்யம் வைதிக தர்மம் என்று ஸ்தாபித்து நியாயப்படுத்துவதை இதில் பார்க்க முடிகிறது. ராஜ்யத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் அண்ணன் தம்பிகளின் இடையே அரச குடும்பங்களில் நடக்கும் சதித்திட்டங்களின் மீது விமர்சனப்பூர்வமான சர்ச்சை இடையிடையில் நடந்தாலும் அந்த வரிசையில் உள்மனப் போராட்டங்களுக்கு உள்ளாகிய மனிதர்களின் பதற்றம், உணர்ச்சி வசப்படுதல், இரட்டை மனம் போன்றவை இந்த நாவலில் சித்தரிக்கப்பட்டன.

வசுந்தரா தேவி எழுதிய நாவல் பாடலி

‘பாடலி’ நாவல் சாதவாகனர்களின் காலத்தைச் சேர்ந்த சமூக வாழ்க்கையை கதைக் களமாகக் கொண்டது. ‘சாதவாகன சஞ்சிக’ முதலான நூல்களைப் படித்து அப்போதைய சமுதாய, அரசியல் சூழ்நிலைகளையும் மொழி, நடையுடை பாவனைகளையும் பற்றி அறிந்து கொண்டு இந்த நாவலை எழுதியதாகக் கூறுகிறார் வசுந்தரா.

அந்நாளைய கிராம வாழ்க்கை பற்றித் தெரிந்து கொள்வதற்கு ‘காதா சப்த சதி’ யை மிஞ்சிய நூல் இல்லை. பாடலி நாவலில் ஒவ்வொரு அத்தியாயத்திற்கு முன்பும் காதா சப்தசதியில் உள்ள ஒரு ஸ்லோகத்தை பொருளோடு கூட கொடுத்து கதையை நடத்துவது இந்த நாவலில் உள்ள தனிச் சிறப்பு.

இந்த நாவலின் தலைவனும் தலைவியும் மரணித்து வில்லன் உயிரோடு இருப்பதாக முடிகிறது. இது கலை ரசனைக்கு உகந்தது அல்ல என்று தெரிந்து கூட அவ்வாறு எழுதுவதற்குக் காரணம், காவியத்தில் கலை ரசனைக்கு இருக்கும் அத்தனை முக்கியத்துவம் நாவலில் தேவையில்லை என்ற அபிப்பிராயத்தால்தான் என்று கூறுகிறார் வசுந்தரா.

கதாநாயகி பாடலியை மிகவும் திறமையும் புகழும் வாய்ந்தவளாக சித்தரித்த ஆசிரியை, ஒரு பெண்ணாக, தான் அப்படிப்பட்ட பெண்ணை உருவாக்கியது மனித இயல்பான குணம் என்று நியாயப்படுத்திக் கொள்கிறார்.

தூரபு கொண்டலு (தூரத்து மலைகள்), த்ரி வர்ண பதாகை (மூவர்ணக் கொடி) போன்ற சமூக நாவல்களை எழுதியிருந்தாலும் வசுந்தரா தேவி வரலாற்று நாவல் எழுத்தாளராகவே அடையாளம் காணப்படுகிறார்.

அவர் எழுதிய த்ரி வர்ண பதாகை என்ற நாவல் சமூக சீர்திருத்ததில் ஆர்வம் கொண்ட இளம் பெண்கள் இருவரில் ஒருவர் முஸ்லிமையும் ஒருவர் ஹரிஜனனையும் திருமணம் செய்து கொள்வதும் அவர்களுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டச் சம்பவங்களையும் கதைப் பொருளாக கொண்டது. அவர்கள் வாழ்க்கையை எதிர்கொண்டு நடத்திய விதம், மேலும் இரு இளம் பெண்கள் குல மதத்துக்கு அப்பாற்பட்டு திருமணம் செய்து கொள்வதற்கு ஊக்கமளித்ததாக கதையை நடத்தியுள்ளார் ஆசிரியை. ஹிந்து மதத்தில் குலங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை குறைப்பதால் தேசிய ஒற்றுமையை சாதிக்கலாம் என்று தேசியவாதிகள் முயற்சித்த விஷயம் பற்றி குறிப்பிட்டுள்ளதைக் கொண்டு இந்த நாவலில் கதை சுதந்திர போராட்டப் பின்னணியிலிருந்து உருவானது என்று கருத இடமுண்டு. (தெலுகு நவல- தீண்டாமை பிரச்சனை –நனுமாச சுவாமி, 1990, பக்கம் 154- 160).

எது எப்படியானாலும் வசுந்தராவின் நாவல்களில் நவீன பெண்ணின் சுதந்திரமான குரலும், சுய அதிகார நடத்தையும் காதில் விழுகிறது, கண்ணில் படுகிறது.

(தொடரும்)

Series Navigation<< அயிதம் இந்திரா, பாரதி தேவி, காவேரிபாய், தேவமணி சத்யநாதன்மாலதி சந்தூர், ரேணுகா தேவி >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.