
கரீபியன் கடல் தீவு கூட்டங்களில் ஒன்றான குவாடலூப்பில் (Guadeloupe.) நவம்பர் 4, 1493’ல் தனது இரண்டாம் பயணத்தின் போது வந்திறங்கிய கொலம்பஸுக்கு அத்தீவின் ஆதிகுடிகள் உணவளித்து வரவேற்றார்கள். தனது முதல் பயணத்தின் படுகொலைகளால் ஏற்கனவே அத்தீவுக்கூட்டங்களில் அறியப்பட்டிருந்ததால் அங்கு கொலம்பஸுக்கு எதிர்ப்புகள் ஏதும் இல்லை.
அவர்கள் அளித்த ஒரு வகை சாறு நிரம்பிய புளிப்பும் இனிப்புமான பழமொன்று கொலம்பஸ் அதுவரை கண்டிராத சுவை கொண்டிருந்தது. ஆதிகுடிகள் அதை ‘பழம்’ என்னும் பொருளில் நனாஸ் அல்லது ’மிகச் சிறந்த பழமென்னும்’ பொருளில் அனானஸ் (Ananas) என்றும் அழைத்தனர். (துபி மொழியில்). அப்பழம் கடினமாக உச்சியில் கூர்நுனி கொண்ட சிற்றிலைகளுடன் பொன்மஞ்சள் நிறத்தில் இருந்தது.
அப்பழத்திலிருந்து தயாரிக்கப்படும் மதுவும் கொலம்பஸுக்கு அளிக்கப்பட்டது, அச்சுவையில் கிறங்கிய கொலம்பஸ் அந்த பழம் கிடைக்கும் செடியை காணச்சென்றார். நான்கடி உயரத்தில், வாள் போன்ற விறைப்பான இலைகளுடன் மத்தியில் கிரீடம் போன்ற சிற்றிலை கொத்துக்களுடன் பழங்களை கொண்டிருந்த அச்செடி ஆதிகுடிகளால் சாகுபடி செய்யப்பட்டு கொண்டிருந்ததையும், ஒவ்வொரு குடிசை வாசலிலும் அப்பழம் வரவேற்பின் அடையாளமாக தொங்கவிடப் பட்டிருப்பதையும் கண்டார்.
கொலம்பஸ் அங்கிருந்து அக்கனியின் விதைகளையும் தன்னுடன் வந்திருந்த 17 கப்பல்களில் ஏராளமான பழுத்த கனிகளையும் ஸ்பெயினுக்கு திரும்பிச் செல்லுகையில் கொண்டு வந்தார். அவற்றுடன் அனானாஸ் என்னும் பெயரும் பயணித்தது. இன்றும் நாம் தமிழில் அன்னாசி என்று அழைக்கும் பைனாப்பிள் தான் அன்று கொலம்பஸால் கண்டறியப்பட்டது.
கொலம்பஸின் பால்யகால நண்பரும் இரண்டாம் கடற்பயணத்தின் போது உடனிருந்தவருமான மைக்கேல் டி குனியோ (Michael de Cuneo) //ஆர்டிசோக்கை போல இருந்த அச்செடியில் பைன் மரங்களின் கோன்களை போல தோற்றமளித்த, அவற்றைக் காட்டிலும் இரு மடங்கு பெரிய, நல்ல ருசி கொண்ட கனிகள், டர்னிப்புக்களை போல கடினமான அவற்றை கத்தியால் மட்டுமே வெட்டி உண்ண முடியும். இக்கனி சத்துக்கள் நிரம்பியது// என்று தனது பயணக் கட்டுரைகளில் முதன்முதலாக குறிப்பிட்டிருந்தார்.
நீண்ட பயணம் ஆதலால் கொலம்பஸ் கொண்டு வந்திருந்தவற்றில் சில மட்டுமே கெட்டுப்போகாமல் இருந்தன. அந்த பழத்தை அப்போதைய இளவரசி இஸபெல்லாவிற்கு கொலம்பஸ் பரிசளித்தார். அது போன்ற புதிய உணவு பொருட்களில் நஞ்சிருக்கும் என்னும் சந்தேகத்தினால் வழக்கமாக பிறர் உண்டபின்பு அரசகுடியினர் உண்பது வழக்கத்தில் இருந்தது. எனவே இளவரசியின் ஆசிரியர் பீட்டர் அதை முதலில் உண்டு ஆபத்தில்லாதது என உறுதி செய்த பின்னர் இஸபெல்லா அதை சுவைத்தார். புளிப்பும், இனிப்பும், வாசனையுமான அது அவருக்கு மிக பிரியமானதொன்றாகி விட்டது.. இஸபெல்லாவின் காலையுணவில் மறுநாளிலிருந்து அவை தவறாமல் இடம் பிடித்தன
பீட்டர் தனது நாட்குறிப்பில் ’அந்த’ நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட மற்றொரு பழத்தை தான் சாப்பிட்டதாகவும், அது வடிவத்திலும் நிறத்திலும் ஒரு பைன் நட்டை போன்றது, செதில்களால் மூடப்பட்டது மற்றும் முலாம் பழத்தை விட உறுதியானது அதன் சுவை மற்ற அனைத்து பழங்களையும் விட சிறந்தது. என பதிவு செய்திருந்தார்
அப்பழங்கள் பைன் கோன்களை போல இருந்ததால் கொலம்பஸ் அதற்கு இண்டீஸ் பைன் என்று பெயரிட்டார். இன்று இந்த பழம் ஆங்கிலத்தில் பைனாப்பிள் எனவும் டச்சு மற்றும் ஜெர்மன் மொழிகளில் அனானாஸ் என்றும் அழைக்கப்படுகிறது கொலம்பஸ் அக்கனியின் விதைகளை ஸ்பெயினில் பயிரிட்டார். எனினும் வெப்ப மண்டலபயிரான அது அங்கு வளரவில்லை.
அன்னாசியின் தோற்றம்:
அன்னாசியின் காட்டு மூதாதை பயிர்கள் பிரேசிலுக்கும் பராகுவேவிற்கும் நடுவில் பரனா-பெராகுவே ஆற்று வடிகால்களில் வளர்ந்தன. இவற்றை வடக்கு பராகுவேயின் காருனி பழங்குடி இந்தியர்கள் முதன் முதலாக சாகுபடி செய்தனர்.
அவை எவ்வாறு பழங்குடியினரால் கண்டு கொள்ளப்பட்டு சாகுபடி செய்யப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனினும் அவை பழங்குடியினரால் ஏராளமாக சாகுபடி செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்தன. பெரு மற்றும் மெக்ஸிகோவின் அகழ்வாய்வுகளில் 200 கிமு – கிபி 700 காலகட்டத்தில் அன்னாசி பயன்பாட்டில் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. மாயன்களும் அஸ்டெக்குகளும் அன்னாசியை சாகுபடி செய்து அதன் மதுவை அருந்தியிருக்கின்றனர். பிரேசிலின் தென்பகுதியை சேர்ந்த அன்னாசி 15 ம் நூற்றாண்டில் மத்திய மற்றும் வடஅமெரிக்காவிலும் புழக்கத்திலிருந்து.
1400களில் சாகுபடி செய்யப்பட்ட அன்னாசி அமெரிக்க பழங்குடியினரின் அன்றாட உணவுகளில் ஒன்றாக இருந்திருக்கிறது அதன் பிறகே கொலம்பஸ் அதனை கண்டறிந்து ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தினார்

பெயர்கள்
1577ல் கத்தோலிக்க இறைப்பணியாளரான André Thevet’s தனது “The New Found World.” ’புதியதாக கண்டறிய பட்ட உலகம்’ என்னும் தனது பயண அனுபவங்களின் தொகுப்பு நூலில் பைனாப்பிள் பழத்தை பற்றிய குறிப்புகள் கொடுத்திருந்தார். அவர் அன்னாசியை குறிக்க Hoyriri, என்னும் சொல்லை உபயோகித்திருந்தார்.
முதன்முதலாக பைனாப்பிள் என்னும் ஆங்கிலச்சொல் 1398’ல் ஊசியிலை மரங்களின் இனப்பெருக்க உறுப்புக்களை குறிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டது. அன்னாசி பழத்தை முதலில் பார்த்தபோது ஐரோப்பியர்களுக்கு முட்செதில்கள் கொண்ட உருளை வடிவ அப்பழம் காண்பதற்கு பெரிய அளவு பைன் மரக்கோன்களை போலிருந்ததால் அதையும் பைனாப்பிள் என்றே அழைத்தனர். 1964ல் அன்னாசியின் ஆங்கில பெயர் “pineapple” என்பது அச்சில் குறிப்பிடப்பட்டது.
ஸ்பேனிஷ் மொழியில் இவை பைனா என்றழைக்கப்படுகின்றன எனினும் கப்பலில் அன்று கொலம்பஸுடன் பயணித்த அனானஸ் என்பதுதான் உலகின் பல மொழிகளிலும் இதன் பெயரக இருக்கிறது.1 தமிழிலும் இது அன்னாசிதான். செந்தாழை என்றும் தமிழில் அன்னாசிக்கு பெயருண்டு.
17ம் நூற்றாண்டில் தாவரவியலாளர் சார்லஸ் ப்ளுமரால் இதன் தாவரவியல் தகவல்கள் பதிவு செய்யப்பட்டன. சார்லஸ் அந்த தாவரத்துக்கு Ananas aculeatus fructu ovato, carne albida. என்று பெயரிட்டார். ஸ்வீடன் தாவரவியலாளரான ப்ரோமெல்லை கெளரவப்படுத்த ப்ரோமீலியா என்னும் பேரினம் சார்லஸால் பெயரிடப் பட்டிருந்தது. பின்னர் 1753’ல் வகைப்பாட்டியலின் தந்தையான லின்னேயஸ் Bromelia ananas/ Bromelia comosa. என அன்னாசிக்கு அறிவியல் பெயரிட்டார்.
பிரபல அமெரிக்க தாவரவியலாளரும், ஆசிய பசிஃபிக் பிராந்தியத்தின் அனைத்து தாவர வகைகளையும் பதிவு செய்து ஒரு மில்லியன் உலர் தாவர சேகரிப்புக்களை வைத்திருந்த மெரில் என்பவரால் அன்னாசி (Elmer Drew Merrill) Ananas comosus என்று இறுதியாக பெயரிடப்பட்டது.2
பிரேசில் பழங்குடியினரின் டுபி (Tupi) மொழியில் நனாஸ் என்றால் பைன் அல்லது பழம், காஸ்மோஸஸ் என்பது அன்னாசி செடியின் அடர்ந்த இலைகளை குறிக்கிறது. இதன் அடிப்படையில்தான் இந்த அறிவியல் பெயர் வைக்கப்பட்டது.
ஹவாயில் அன்னாசி ’வெளிநாட்டு பழம்’ எனும் பொருளில் ஹலா -காஹிகி (Halakahiki) என்றழைக்கப்படுகின்றது, ஹலா என்றால் கனி காஹிகி என்றால் வெளிநாடு. பிரேசில் மற்றும் பராகுவேயை சேர்ந்தவை என்பதால் அன்னாசி முதன் முதலாக ஹவாய்க்கு அறிமுகமான போதுஅவற்றை வெளிநாட்டு பழம் என்று அம்மக்கள் அழைத்து அதே பெயர் இன்று வரை நிலைத்து விட்டிருக்கிறது
அன்னாசி ஆங்கிலத்தில் பைன் ஆப்பிள் என்றழைக்கப்பட்டாலும் இது பைனுக்கோ அல்லது ஆப்பிளுக்கோ தொடர்புடையது அல்ல .பெரி எனப்படும் சதைப்பற்றான கனிவகையை சேர்ந்தது. coenocarpium எனப்படும் பல நுண் கனிகளின் கூட்டுக்கனிதான் அன்னாசி.

தாவரவியல் தகவல்கள்
அன்னாசியின் முதல் சித்திரம் ஸ்பெயினை சேர்ந்த ஓவியரும் தாவரவியலாளரும், வரலாற்றாய்வாளருமான ஒவியெடோவால் (Oviedo) 1535 ல் அவரது Historia General de Las Indias என்னும் நூலில் வெளியானது.
ப்ரோமிலியேசியை சேர்ந்த அன்னாசி பல வருடங்கள் வளரும் ஒருவித்திலை பல்லாண்டுத் தாவரம். குறைந்தது 50 ஆண்டுகள் இது வளர்ந்து பலன் தரும்
அன்னாசி செடி வளர்ந்து 3 வருடங்களில் தன் முதல் கனியை அளிக்கும் . ஒரு வருடத்தில் ஒரு செடியில் ஒற்றை கனிதான் உருவாகும்
30லிருந்து 40 விறைப்பான சதைப்பற்றான நெருக்கமாக அமைந்திருக்கும் வாள் போன்ற இலைகள் வட்ட அடுக்குகளில் இருக்கும். இலை நுனி ஊசி போல கூர்மையாக இருக்கும். நட்ட 20 வது மாதத்தில் மலர்த் தண்டு செடியின் மையத்திலிருந்து உருவாகி மஞ்சரி தோன்றும். 100லிருந்து 200 வரை சிவப்பு அல்லது இளம் ஊதா நிற தனித்தனி சிறு மலர்கள் இணைந்து ஒற்றை மஞ்சரியாக காணப்படும். அவை கருவுற்று 5 அல்லது 6 மாதங்களில் 50 லிருந்து 200 வரை இருக்கும் ஒவ்வொரு சிறு மலரின் அடிச்சூலகங்களும் மையத்தண்டுடன் இணைந்து அன்னாசி என்னும் கூட்டுக்கனி உருவாகும் . சுமாராக ஒரு கனி 1லிருந்து 2 கிலோ எடை கொண்டிருக்கும்,
அன்னாசியின் கடினமான சொறசொறப்பான செதில்கள் கொண்டிருக்கும். வெளிப்புறம் இருக்கும் பலகோண வடிவங்கள் அனைத்தும் பழுத்த சூலகங்கள்தான். அன்னாசி விதைகளற்றது. தென்னமெரிக்க காட்டு அன்னாசிகள் மட்டுமே இறகுகள் கொண்ட சிறு விதைகள் கொண்டவை .
வரலாறு மற்றும் பரவல்
கொலம்பஸ் அறிமுகப்படுத்திய பின்னர் ஸ்பெயின் அரச குடும்பங்களில் காலை உணவுகளில் அன்னாசி தவறாமல் இருந்தது. அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்தே ஐரொப்பியர்களின் பிரியத்துக்குரியதாகிய அப்பழம் அப்போதிலிருந்தே பிரபுத்துவம் மற்றும் கலைத் திறனுக்கு அடையாளமாக இருந்தது
வெப்ப மண்டலங்களில் வளரும் அன்னாசி ஐரோப்பாவின் குளிர்ந்த காலநிலைகளில் வெப்ப அறைகளில் அதிக பொருட்செலவில் சாகுபடி செய்யப்பட்டது. எனவே அன்னாசி செல்வத்தின், வளமையின், செல்வாக்கின் அடையாளமாக கருதப்பட்டது மேலும் தோட்டக்கலைத்துறையாளர்களின் பெருமிதங்களில் ஒன்றாகவும் இருந்தது
ஐரோப்பாவிலும் இங்கிலாந்திலும் விருந்து மேசைகளின் மத்தியில் ஒரு ஆடம்பர பொருளாக அன்னாசி காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது அங்கு அன்னாசி அதிக அளவில் சாகுபடி செய்ய முடியாததால் பெரும்பாலும் அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யப்பட்டது. எனவே தங்கள் செல்வச்செழிப்பை அப்போது பலரும் இப்படி அன்னாசியை காட்சி படுத்துவதன் மூலம் காட்டிக்கொண்டர்கள். ஒரு சிலர் அன்னாசியை ஒரு மாலை விருந்துக்கு கடன் வாங்கியும் சென்றார்கள். பல சமயங்களில் காட்சிப்படுத்தப்படும் அன்னாசி உண்ணப்படாமல் அழுகிப்போகும்.
வீடுகள் பெரும் கட்டிடங்கள், தேவாலயங்கள், அரண்மனை, எல்லாம் அன்னாசி வடிவம் தவறாமல் இடம் பெற தொடங்கியது.
அக்காலத்தில் அன்னாசியின் சுவைக்கு பலரும் அடிமையானதற்கு அதன் இனிப்பு சுவையே பிரதான காரணம். அக்காலத்தில் கரும்புச்சர்க்கரைக்கு மிக அதிக விலை இருந்தது எனவே இயற்கையாகவே இனிப்புச்சுவை கொண்டிருந்த அன்னாசி மக்கள் நாவில் நீங்கா இடம்பெற்றது. அன்னாசியை பழரசமாகவும், இனிப்புகளில் சேர்த்தும் உண்டு மகிழ்ந்தார்கள்.பல சிறார் பாடல்களிலும் அன்னாசி இடம்பெற்றிருந்தது.
1500களில் அன்னாசியின் இலைகளிருந்து நாரெடுத்து துணிகளும் பிலிப்பைன்சில் உருவாக்கப்பட்டன
1510ல் கோவாவுக்கு போர்ச்சுக்கீசியர்கள் அன்னாசியை அறிமுகப்படுத்தினார்கள். K T Achaya தனது The Historical Companion to Indian Food- ‘இந்திய உணவுகளின் வரலாறு’ என்னும் நூலில் 1564 ல் இந்தியாவில் அன்னாசிப்பழங்கள் இருந்ததை குறிப்பிட்டிருக்கிறார்
அனைவருமே ஒரு துண்டு அன்னாசியாவது சுவைக்க வேண்டும் என பேராவல் கொண்டிருந்தனர். எனினும் அரசகுடும்பத்தினருக்கு அதில் முன்னுரிமை இருந்தது.
ஐரோப்பாவில் வெப்ப அறைகளை உருவாக்கி அவற்றில் அன்னாசி சாகுபடி வெற்றிகரமாக நடைபெற்றது. வெப்ப அறைகளில் ஓக் மரப்பட்டைகளை அரைத்து தூளாக்கி எரித்து 27 பாகை எப்போதும் இருக்கும்படி சுவர்களின் துளைகள் வழியே வெப்பமூட்டப்பட்டது.
பலர் கரீபியன் தீவுகளுக்கு அன்னாசிகளுக்கென்றே கடற்பயணம் மேற்கொண்டார்கள். 16ம் நூற்றண்டின் இறுதிக்குள் உலகின் வெப்ப மண்டல நாடுகள் அனைத்திலும் அன்னாசி சாகுபடி துவங்கி இருந்தது.
1655,ல் தென்னாப்பிரிகாவில்,16’ம் நூற்றண்டின் இறுதியில் சீனா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸில் அன்னாசி சாகுபடியானது
1675 லிருந்து 1680,க்குள் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸ் அவரது அரண்மனை தோட்டக்காரர் ஜான் ரோஸ் முழந்தாளிட்டு அவருக்கு அங்கு விளைந்த முதல் அன்னாசியை அளிக்கும் காட்சியை பிரபல ஓவியர் ஹெண்ட்ரிக்கைக் (Hendrick Danckurts) கொண்டு வரைந்து காட்சிப்படுத்தினார், அதன்பிறகு அன்னாசிகள் அரசர்களின் அடையாளமாகியது
உயர்குடி பிரிட்டன் மக்கள் வசித்த பார்ன்படோஸ் நாக்ரில் Barbados, அன்னாசி பசுங்குடில்களில் சாகுபடி செய்யபட்டது. இங்கிலாந்துக்கு சென்ற பலர் அன்னாசியை கண்டதை பயணக்குறிப்புக்களில் குறிப்பிட்டனர்.
இங்கிலாந்தின் இரண்டாம் வில்லியமுக்கு அளிக்கவென 1699ல் உருவாக்கப்பட்ட ஒரு வெள்ளி சிறு மேசையினடியில் அழகிய அன்னாசியின் உருவம் இருந்தது.. உயர்குடியினரின் நாற்காலிகளின் மெத்தைகளில் கூட அன்னாசி உருவம் வரையப்பட்டிருக்கும் துணிகளே உபயோகப்படுத்தப்பட்டன.1700 களில் அன்னாசிக்காயச்சல் எங்கும் பரவி இருந்தது விக்டோரிய காலத்தில் கண்ணாடிக்குடில்களில் அன்னாசி வளர்க்கப்பட்டது
16, 17ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா முழுவதிலும் அன்னாசி உயர்குடிகளின் பழங்களாக கருதப்பட்டது. அச்சமயத்தில் போர்த்துக்கீசியர்கள் உலகின் பிறபகுதிகளுக்கு கரீபிய தீவுகளிலிருந்து அன்னாசியை அறிமுகப் படுத்திதாதல் ஐரோப்பாவில் அன்னாசி பழங்கள் கிடைத்துக்கொண்டே இருந்தன.
இங்கிலாந்தில் அன்னாசி அறிமுகமாவதற்கு 100 வருடங்கள் முன்பே இந்தியாவில் போர்ச்சுக்கீசியர்களால் 15ம் நூற்றாண்டில் அறிமுகமாயிருந்தது அக்பரின் அரசாட்சியை குறித்த 16ம் நூற்றாண்டு நூலான அயினி அக்பரில் அன்னாசி பழங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. முகலாய பேரரசர் ஜஹாங்கீரின் அரண்மனை கணக்கு வழக்குகளில் ஒரு அன்னாசியின் விலை பத்து மாம்பழங்களின் விலைக்கு இணையானது என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது
1681ல் அன்னாசி கிருஸ்துவத்தின் அடையாளமாகவும் கருதப்பட்டது ரோமானிய கட்டிட கலைகளில் இடம்பெறும் பைன் கோன்களுக்கு இணையாக உலகின் பல நாடுகளின் கட்டிடங்களில் அன்னாசி வடிவங்கள் இடம் பெற துவங்கின.
ஐரோப்பியர்களின் உணவு மேசைக்கென உலகின் பல நாடுகளில் அன்னாசி விளைந்தது. அன்னாசிப் பழங்களுக்கென்றே ஐரோப்பாவின் விரைவு கப்பல்கள் பிரத்யேகமாக இயங்கின.
1687ல் பூச்சிகள் மற்றும் மலர்களின் சித்திரங்களை தொகுத்தற்காக உலகப்புகழ்பெற்ற, ஆக்னஸ் (Agnes Block) நெதர்லாந்தில் இருந்த தனது வெளிநாட்டு தாவரங்களுக்கான பிரத்யேக தோட்டத்துக்கு அன்னாசி செடியை கொண்டு வந்தார்.
ஹாலந்தில் முதல் கனி 1690களில் அறுவடை செய்யப்பட்டது அங்கு முதல் வெற்றிகரமான பசுங்குடில் அன்னாசி சாகுபடியும் அறுவடையும் 17ம் நூற்றாண்டின் இறுதியில் நடந்தது
அப்போது அன்னாசி செடிகளை செயற்கையாக , வலுக்கட்டாயமாக மலரவைப்பது குறித்த தொழில்நுட்பங்கள் தோட்டக்கலை சஞ்சிகைகளில் வெளியாகின. 17 மற்றும் 18 ம் நூற்றாண்டுகளில் நெதர்லாந்தில் அன்னாசி சாகுபடி செழித்திருந்தது.
1807களில் அன்னாசி திருட்டுக்கள் குறித்த பல செய்திகள் உலகின் பல நாடுகளின் நாளிதழ்களில் வெளிவந்தன. ஆஸ்திரேலியாவில் ஏழு அன்னாசி திருடிய ஒருவருக்கு ஏழாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது
அன்னாசிகளை கரீபியன் தீவுகளில் இருந்து ஐரோப்பா கொண்டு செல்வது 1800களில் நீராவி கப்பல்கள் வந்தபின்னர் மிக எளிதாகியது
நீராவிக்கப்பல்கள் இயங்க தொடங்கியபோது இங்கிலாந்தை சேர்ந்த குடுவை தோட்டத்தை (Terrarium) கண்டுபிடித்தவரான வார்ட் (Nathaniel Bagshaw Ward) கண்ணாடிகூண்டுகளை பிரத்யேகமாக அன்னாசி பழங்களை கொண்டு செல்லவேண்டியே வடிவமைத்து கொடுத்தார். அதிலும் அன்னாசி பழங்கள் பல நாடுகளுக்கும் பயணித்தன
வார்ட் 1842 ல் வெளியான தனது தனது On the Growth of Plants in Closely Glazed Cases என்னும் நூலில் அன்னாசியின் இந்த மூடிய கண்ணாடிக்கூண்டு பயணத்தை விவரித்திருக்கிறார்.
ஐரோப்பாவின் அன்னாசி சாகுபடி மையமாகவே நெதர்லாந்து இருந்தது, 1816 ல் அறிமுகமான கொதிநீர் வெப்ப சாகுபடி முறைகளுக்கு பின்னர் அன்னாசி எளிதாக சாதாரண மக்களும் வாங்கும் படியான ஒரு பழமானது
சார்லஸ் டிக்கின்சனின் டேவிட் காப்பர்ஃபீல்ட் புதினத்தில் கோவண்ட் கார்டன் மார்க்கெட்டில் பார்த்த அன்னாசிப்பழத்தால் கதாநாயகன் ஈர்க்கப்பட்டு
//,,அல்லது நான் கோவண்ட் கார்டன் சந்தை வரை நடந்து சென்று அன்னாசிப் பழங்களை உற்றுப் பார்த்திருக்கிறேன்// என்றுசொல்வதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது
“… or I have strolled, at such a time, as far as Covent Garden Market, and stared at the pineapples.”
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் Big Pineapple என்னும் மிகபெரிய அன்னாசி வடிவ கட்டிடம் கட்டப்பட்டது அது இப்போதும் பிரபல சுற்றுலா தலமாக இருக்கிறது. தென்னாப்பிரிக்காவின் பாத்ரஸ் (Bathurst) நகரில் குயின்ஸ்லாந்தின் அதே மாதிரியில் பெரிய அன்னாசி என்னும் கட்டிடம் அமைக்கப்பட்டது 16.7 மீ உயரம் கொண்ட மூன்று மாடிகள் கொண்ட இக்கட்டிடத்தில் அன்னாசியை குறித்த ஆய்வுகள் நடக்கின்றன.
அன்னாசி வடிவம் கதவுகளில் செதுக்கப்பட்டன மேசைவிரிப்புகள், கைக்குட்டைகள், போர்வைகளில் அன்னாசியின் சித்திரம் வரையபட்டது கட்டிடக்கலையில், இறையியலில், சுவர் சித்திரங்களில் இடம்பெற துவங்கிய அன்னாசி இங்கிலாந்தில் விருந்தோம்பலின் அடையளமாக இருந்தது. இன்றும் இங்கிலாந்து விருந்துகளில் அன்னாசிக்கென சிற்ப்பான இடம் இருக்கிறது.
கிரீடம் போன்ற இலைக்கொத்தும் கொண்டிருந்த்தால், 1800 களில் பழங்களில் அரசனாக இருந்த அன்னாசி சுவையின் உலகை ஆண்டது. என்றே சொல்லலாம்
பிரான்சுக்கு 1730’ல் அன்னாசி அறிமுகமானது. இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அதிக கடினமான இலைகளுடன் கூடிய அன்னாசி செடிகள் 1838ல் அறிமுகமாயின. இங்கிலாந்தின் கியூ தோட்டத்தில் இலங்கை, ஜமைக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட பல புதிய அன்னாசி ரகங்கள் வளரத் துவங்கின
அன்னாசியின் வரத்து அதிகரித்ததால் அதை சாதாரண மக்களும் வாங்க முடிந்தது குறிப்பாக மாலுமிகள் கடற்பயணம் முடித்து திரும்புகையில் வீட்டின் கதவில் அன்னாசிப் பழத்தை கட்டி தொங்கவிடுவது ஒரு வழக்கமாக இருந்தது.18ம் நூற்றாண்டில் அன்னாசி எளிதாக இறக்குமதி செய்யப்படும் ஒன்றாகிய போது அதன் புகழ் மங்கியது அப்போதிலிருந்து அன்னாசி செல்வத்தின் அடையளமாக இல்லாமல் அசலான அதன் ஆதி உபயோகமான உணவு, மது மற்றும் வரவேற்புக்கானதாகியது என்று பதிவு செய்கிறார் வரலாற்றாய்வாளர் நிக்கோலா கர்னிக் (Nicola Cornick)
ஹவாய் அன்னாசி
1886 ல் ஜேம்ஸ் டோல் என்பவரால் ஹவாயில் முதல் வணிக ரீதியான அன்னாசி சாகுபடி துவக்கப்பட்டது. அது மிக வெற்றிகரமாக இருந்ததால் ஜேம்ஸின் தொழில் 30 வருடங்களில் பன்மடங்கு விரிவடைந்தது 1911ல் அவரது நிறுவன ஊழியர் ஒருவரால் அன்னாசியின் கடினமான வெளித்தோலையும் நடுப்பகுதியையும் பிரித்தெடுக்கும் இயந்திரமும் கண்டு பிடிக்கபட்ட போது அந்நிறுவனம் மாபெரும் சாம்ராஜ்யம் ஆகியது.
1900’ல் ஜேம்ஸினால் ஹவாயில் மிகப்பெரிய அளவில் சாகுபடி செய்யப்பட்ட போது அங்கு மட்டுமே உலகின் 75 சதவீத அன்னாசி உற்பத்தியானது. ஜேம்ஸ் டோல் அனைவராலும் அன்னாசி அரசரென்று அழைக்கப்படலானார்.
1970 ல் இருந்து குளிர்சாதன வசதி கொண்ட கப்பல்கள் அன்னாசியை உலகெங்கும் சேதமின்றி கொண்டு சென்றபோது, உலகின் அன்னாசிக்கான ஹவாயின் தேவை குறைந்தது, இதனால் ஹவாயின் அன்னாசி சாகுபடி குறைய தொடங்கியது. டோல் தனது அன்னாசி தயரிப்புக்களை முற்றிலுமாக நிறுத்தினார்.2013ல் ஹவாயில் இயங்கிய உலகின் மிகபெரிய காய்கறி மற்றும் பழங்களுக்கான பன்னாட்டு நிறுவனமான டோல் வயல்களின் (Dole Plantation ) உற்பத்தி உலக அன்னாசி உற்பத்தியில் 0.1 % தான் இருந்தது எனினும் ஜேம்ஸ் ஹவாயின் அன்னாசி அடையாளமாகவே நீடிக்கிறார்
அவர் பெயரில் ஹவாயில் 3 ஏக்கரில் அமைந்திருக்கும் அன்னாசி செடி வடிவிலான புதிர்வழித்தோட்டம் உலகின் மிகப்பெரியது.(Dole Plantation’s Pineapple Garden Maze) இது சுமார் 14000 வண்ணமயமான ஹவாயின் தாவரங்களைக் கொண்டு 3 மைல் நீள சிக்கலான புதிர் பாதை அமைக்கப்பட்டு மத்தியில் அன்னாசி வடிவம் இருக்கும்படி உருவாக்கபட்டுள்ளது.
ஹவாயில் பிசுபிசுத்து தூறும் மழையை அன்னாசிச்சாறு மழை என்பார்கள். பல வருடங்களுக்கு இதன் அடித்தண்டிலிருந்து இலைகள் முளைத்து வருடா வருடம் கனிகள் உருவாவதால் ஹவாயில் வயதான தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் அன்னாசி பயல், அன்னாசி பெண் என்று செல்லமாக அழைக்கப்படுவார்கள்
சாகுபடி
19’ம் நூற்றாண்டில் தோட்டக்கலை விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளின் மேம்பாடு நிகழ்ந்தபோது, 1816’ல் அறிமுகமான கொதிநீர் வெப்பமூட்டும் முறை மற்றும் 1833 ’ல் அறிமுகமான கண்னாடித்தட்டு சாகுபடி, இவை இரண்டும் அன்னாசியின் சாகுபடியை வேகம் பிடிக்கச் செய்தன.
அப்போதிலிருந்து வெப்பமூட்டப்பட்ட கண்னாடிஅறைகளில் அன்னாசி வளர்கின்றது. ஐரோப்பாவின் அன்னாசி பசுங்குடில்கள் பைனரிகள் என அழைக்கப்பட்டன
உடல் இனப்பெருக்கம் செய்யும் அன்னாசியின் கிரீடம் போன்ற கனிகளின் உச்சியில் இருக்கும் இலைத்தொகுதியை மட்டும் கத்தரித்து நிலத்தில் நட்டு வைத்தால் அன்னாசி செடி அதிலிருந்து உருவாகி பலனளிக்க துவங்கும்
ஒரு ஏக்கரில் 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் செடிகள் சாகுபடி செய்யப்படும். அன்னாசியின் அடிப்பகுதி தண்டுகள் மூலமாகவும் இவை சாகுபடி செய்யப்படுகின்றன
பல வகைகளில் முதல் வருடம் செடியின் மையத்தில் உருவாகும் கனியை அறுவடை செய்த பின்னர் கூடுதல் இனிப்புடைய பல சிறுகனிகள் மஞ்சரிதண்டில் உருவாகும்.அவையும் அறுவடை செய்யப்படும்.
வகைகள்
உலகெங்கிலும் அதிகம் சாகுபடியாகும் அன்னாசியின் இரு வகைகள் cayenne மற்றும் Queen. வகைகள்
Cayenne group: மென்மையான வெளிப்புறமும் உருளை வடிவமும் கொண்டவை, மஞ்சள் நிற சதைப்பகுதி கொண்டவை. இந்தியாவின் கோவா மேகாலாயா வங்காளம் ஆகிய பகுதிகளில் அதிகம் விளைபவை
Queen group: சிறிய அதிக முட்கள் கொண்ட செடிவகை. தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் அதிகம் விளைகின்றன
பிற பிரபல வகைகள்:
- “Hilo” 1 -கிலோ கச்சிதமான அளவுள்ள ஹவாய் வகை
- “Kona sugarloaf” -3 கிலோ எடைகொண்ட வெள்ளை சதைப்பகுதி கொண்ட அதிக சர்க்கரை கொண்ட வகை
- “Natal queen”- 2 கிலோ எடை கொண்டிருக்கும் இது மஞ்சள் சதைப்பகுதியும், மென்மையான நறுமணமும் கொண்டது
- “Pernambuco”- 4 கிலோ எடை கொண்டிருக்கும் இவ்வகை இளமஞ்சள் நிற சதைப்பகுதி கொண்டது. அதிகதூரம் பயணித்தாலும் இயல்பு மாறாமல் இருக்கும் .
- “Red Spanish” 1லிருந்து 2 கிலோ எடை கொண்ட பிரபல வகை. ஸ்பெயினிலிருந்து பிலிப்பைன்ஸுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சிவப்பு ஸ்பானிஷ் அன்னாசி வகை இலை நார்களுக்காகவும் 17ம் நூற்றாண்டில் இருந்து வளர்க்கப்படுகிறது,
- “Smooth cayenne”- 3 கிலோ எடை கொண்டிருக்கும் பிரபல வகை. உருளை வடிவ பழங்கள் அதிக சர்க்கரை அளவும் அமில அளவு கொண்டவை கேன்களின் பதப்படுத்தப்படும் வகை. இலைகள் முட்கள் இல்லாது மென்மையாக இருக்கும்
- comosus ‘Variegatus’ – மிகசிறிய உருளை வடிவ பழங்களுடன் அலங்காரசெடிகளக தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன
- Vazhakulam pineapple -கேரளாவின் வாழக்குளம் அன்னாசி . வாழக்குளம் பகுதில் விளையும் இந்த அன்னாசிப்பழம் புவிசார் குறியீடு பெற்றிருக்கிறது. சுமார் 1500 கிராம் எடை கொண்டிருக்கும் இப்பழங்கள் நல்ல நறுமணம் கொண்டிருக்கும் .சதை பொன்மஞ்சள் நிறத்தில் இனிப்பு சாறு நிரம்பியதாக இருக்கும்
- Spanish group: அன்னாசி செடிகள் குட்டையானவை, மங்கிய நிறம் கொண்ட சதைப்பகுதி கொண்ட கனிகள்
- Abacaxi group: லத்தீன் அமெரிக்க பகுதிகளின் அன்னாசி இது அன்னாசி சாறுக்கான பிரத்யேக வகை
- Maipure group: மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் விளைகின்ற வகை
- comosus var. parguazensis உருண்டையான பழங்களுக்கான வகை
- comosus var. Bracteatus, A. bracteatussensu & A. fritzmuelleri- உயரமாக வளரும் உயிர் வேலி வகைகள்.
- A. comosus var. erectifolius மிகசிறிய சுவையற்ற கனிகளை அளிக்கும். இலை நார்களுக்கானவை. இலைகள் மென்மையாக நீளமாக இருக்கும்
- Antigua Black- உலகின் மிக அதிக சர்க்கரை கொண்ட அன்னாசி வகை
வேதிப்பொருட்கள்/சத்துக்கள்
அன்னாசியின் தோலில், சதைப்பகுதியிலும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. அவற்றில் பாலிஃபீனால்கள், கேலிக் அமிலம், சிரிஞ்சிக் அமிலம், ஃபெருலிக் அமிலம், வனிலின், ப்ரோமெலைன் ஆகியவை முக்கியமானவை
ப்ரோமெலைன் நொதி மருத்துவ குணங்களை கொண்டது. தசையை தளர்த்தி ஜீரணத்தை எளிதாக்கும், கட்டிகளை கரைத்து உடல் நலத்தை காக்கும்.
அன்னாசியில் அதிக கால்சியம், நீர்ச்சத்து, பொட்டசியம், நார்ச்சத்து ஆகியவையுடன் வைட்டமின் B1, B6, ஆகியவையுமுள்ளன. மேலும் அன்னாசியின் அதீத வைட்டமின் C, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்
உணவு வகைகள்
அன்னாசிப்பழங்களின் சதையும், சாறும் உலகெங்கிலும் பல வகையான உணவுகளில் சேர்க்கப்படுகின்றது.
பால்டிமோரில் முதன்முதலாக 1865ல் அன்னாசி பதப்படுத்தப்பட்டு கேன்களில் அடைக்கப்பட்டு சந்தப்படுத்தபட்டது
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் தெருவோரக்கடைகளில் அன்னாசி ஒரு தின்பண்டமாக கிடைக்கிறது. மேற்கத்தைய நாடுகளில் பன்றி இறைச்சி உணவுகளை சீவிய அன்னாசி துண்டுகளால் அலங்கரித்து அளிப்பது வழக்கமாக இருக்கிறது
அன்னாசிபழத்துண்டுகளை பழக்கூழ்களில் கலப்பது உலகெங்கிலும் பொதுவான வழக்கமாக இருக்கிறது, அன்னாசிப்பழம் பீட்ஸாவிலும் இருக்கிறது. 3
நூற்றாண்டுகளாக பிலிப்பைன்ஸில் அன்னாசிச்சாற்றில் வேகவைக்கப்பட்ட பன்றி இறைச்சி உணவு Hamonado பிரசித்தம். அதைப்போலவே அங்கு afritada என்னும் அன்னாசி சாற்றில் வேகவைக்கப்பட்ட கோழிக்கறி உணவும் பிரபலம்.
kaeng som pla என்னும் தாய்லாந்து, மலேசியாவின் பிரபல மீன் உணவும் அன்னாசி சாற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது,
ஹவாயின் haystack என்பதுவும் அன்னாசி கலந்த அசைவ உணவுதான்
உலகெங்கிலும் அன்னாசிச்சாறு அருந்தப்படுகிறது அன்னாசி சாறு தயிரில், இனிப்புகளில், ஐஸ்கிரீம்களிலும் கலந்து விரும்பி உண்னபடுகிறது Puerto Rico வின் பிரபல பானமான piña colada அன்னாசிச்சாறு, தேங்காய்ப்பால் மற்றும் ரம் ஆகியவற்றின் கலவைதான்.
மெக்ஸிகோவின் பிரபல மது வகையான tepache. அன்னாசிப்பழத்தின் வெளித்தோலை அரைத்து நொதிக்கச்செய்து அத்துடன் கரும்புச்சர்க்கரை சேர்த்து தயரிக்கப்படுவது
அன்னாசி வினிகர் ஆப்பிரிகா பிலிப்பின்ஸ் நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது
18 ம் நூற்றண்டில் இருந்து பிலிப்பைன்ஸின் பரம்பரிய உணவுகளில் ஒன்றாக இருப்பது nata de piña என்னும் அன்னாசி ஜெல் உணவு. பப்பிள்கம் போல மென்று உண்ணவேண்டிய இது Komagataeibacter xylinus எனும் பாக்டீரியாவால் அன்னாசி சாற்றை நொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது.
அன்னாசியை நொதிக்கச்செய்து பல நாடுகளில் அன்னாசி மதுவும் உருவாக்கப்படுகிறது
நாம் உண்ணுகையில் நம்மை உண்ணும் அன்னாசி
அன்னாசியை நாம் விரும்பி சாப்பிடும் போது நம்மையும் அன்னாசி சாப்பிடுகிறது. இது எதோ சிறார்களுக்கான மாயாஜால கதையல்ல உண்மையிலேயே அன்னாசியிலிருக்கும் புரோமெலைன் (Bromelain) புரதத்தை உடைத்து அழிக்கும் இயல்புகொண்டது எப்பொதெல்லாம் அன்னாசி உண்ணப்படுகிறதோ அப்போதெல்லாம் நாக்கின் புரதத்தை கொஞ்சம் இந்த நொதி அழிக்கிறது
ப்ரோமெலைன் அன்னாசியின் பழங்கள், தண்டு, இலைகள் இலைக்கொத்து ஆகியவற்றில் காண்படுகின்றது
அன்னாசியை சாப்பிடுகையில் கவலைப்படவேண்டிய அளவுக்கு அதில் ப்ரோமெலைனின் அளவு இல்லை
மேலும் ப்ரோமெலைன் குடல்பகுதிக்கு செல்வதற்குள் உருமாறி விடுவதால் அதிகம் அச்சம் கொள்ள தேவையில்லை
எனினும் அன்னாசி தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பழங்களை அறுவடை செய்கையில் இந்த நொதி சருமத்தில் பட்டுக்கொண்டே இருப்பதால் கைகள் அரிக்கபட்டு கைரேகைகள் முற்றிலும் அழிந்துபோகின்றன.
இதே புரோமெலைன் மூட்டுவலிகளுக்கும் நிவாரணமளிக்கிறது
அறுவடைக்கு பின்னர் அன்னாசி
அன்னாசிப்பழங்கள் பச்சையாக உறுதியாக இருக்கையில் அறுவடை செய்யப்பட்டு அவை கனிவதற்காக எதிலீன் வாயு செலுத்தப்படுகிறது அதன்பிறகே அன்னாசிப்பழங்கள் பொன்மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறம் பெறுகின்றன
அதற்குப் பின்னர் அவை மேலும் கனியாது . நாம் வீடுகளுக்கு அன்னாசி வாங்குகையில் பொன்மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறம்கொண்ட கனிந்த பழங்களை வாங்கவேண்டும். 2 நாட்களில் கெட்டுப்போய்விடும் அன்னாசி பழங்களை மேலும் சிலநாட்கள் பாதுகாக்க அவற்றின் இலைகள் கீழிருக்கும் படி தலைகீழாக வைக்கலாம்.
பச்சைநிற பழங்கள் சிலநாட்களில் கனிந்துவிடும் என்று நினைக்கக்கூடாது. எனினும் பழுக்காத அன்னாசிப்பழங்களை தக்காளி , ஆப்பிள், வழைப்பழம் ஆகியவற்றுடன் சேர்த்து வைக்கையில் அவை வெளியிடும் எதிலீனால் சிறிது பழுக்க வாய்ப்புள்ளது
அறுவடைக்கு பின்னர் கனிகளின் கடினமான வெளித்தோலும் மையத்தண்டும் நீக்கப்பட்ட பின்னர் அன்னாசி உலரச்செய்தோ, பதப்படுத்தப்பட்டோ அல்லது சாறாக்கியோ பல வகையாக சந்தைப்படுத்தப்படுகிறது.
பைனா நாரிழை
பிலிப்பன்ஸின் ‘Red Spanish’ அன்னாசி இலைநார்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பிலிப்பைன்ஸில் புழக்கத்தில் இருக்கின்றது
பிலிப்பன்ஸின் ஆண்களுக்கான தேசிய உடையான barong tagalog மற்றும் பெண்களின் தேசிய உடையான baro’t saya, ஆகியவை பைனா நாரிழைகளை கொண்டு உருவாக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் உயர்குடிபெண்களுக்கான பிரத்யேக உடையான traje de mestiza மற்றும் பெண்களின் கைக்குட்டைகள் ஆகியவையும் பைனா நாரிழைகளைக்கொண்டே உருவாகின்றன
உற்பத்தி
வெப்ப மண்டல பயிர்களில் வாழைக்கும் மாங்கனிகளுக்கும் அடுத்தபடியாக முக்கியமான பயிராக இருப்பது அன்னாசிதான் .. பிலிப்பைன்ஸ் , பிரேஸில் மற்றும் கோஸ்டாரிக்கா உலகின் மூன்று முன்னணி உற்பத்தியாளர்கள்
நெதெர்லாந்து உலகின் முன்னணி அன்னாசிச்சாறு இறக்குமதியாளராக இருக்கிறது. 2017 நிலவரப்படி மிக அதிக அன்னாசிச்சாறு உபயோகிப்பாளர்களாக தாய்லாந்து இந்தோனேசியா மற்றும் பிலிபைன்ஸ் நாடுகள் இருந்தன
அதிக மக்கள் தொகை இருந்தும் சீனாவும் இந்தியாவும் அன்னாசி பயன்பாட்டில் மிக கடைசி இடத்தில் இருக்கின்றன
2020ல் உலக அன்னாசி உற்பத்தியில் 28 மில்லியன் டன் பிலிப்பைன்ஸ் கோஸ்டாரிக்கா, பிரேசில் இந்தியா மற்றும் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டது.
உலக அன்னாசி சந்தையில் பதப்படுத்தப்பட்ட அன்னாசி பொருட்கள் அதிக அளவு இருக்கின்றன. 250 மில்லியன் அமெரிக்க டால்ர்களை காட்டிலும அதிகமாக அன்னாசி சாறும், 600 மில்லியன் டாலர்களுக்கு அதிகமாக டின்களில் அடைக்கப்பட்ட அன்னாசியும் சந்தைப் படுத்தப்படுகின்றன
அன்னாசியில் இருக்கும் புரோமெலைன் இறைச்சியை மென்மையாக்குவதால் உணவுத்தொழிற்சாலைகளில் இதன் தேவை அதிகம். அன்னாசியின் கழிவுகள் கால்நடை தீவனங்களில் கலககப்படுகின்றது
அன்னாசி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் முதல் 6 நாடுகள்
- கோஸ்டா ரிக்கா
- பிரேஸில்
- பிலிப்பைன்ஸ்
- தாய்லாந்து
- இந்தோனேஷியா
- இந்தியா
தழைகீழ் அன்னாசிப்பழ சித்திரங்களை தங்களது கைப்பையில் லேப்டாப்புகளில் சூட்கேஸ்களில் வரைந்துகொள்வதற்கு விபரீதமான அர்த்தம் இருக்கிறதென்கிறது இணையம்.4
பொதுவாக ஆசிய பகுதிகளில் அன்னாசியை கர்ப்பிணிப்பெண்கள் உண்டால் கருக்கலைப்பு நிகழும் என்னும் நம்பிக்கை நிலவுகிறது. இதற்கு எந்த அறிவியல் ஆதாரங்களும் இல்லை. ஒரு கர்ப்பிணிப்பெண் ஒரே சமயத்தில் 10 அன்னாசிகளை சாப்பிட்டால் மட்டுமே அது கவலைக்குரிய விஷயமாகிறது.
2011ல் உலகின் மிகப்பெரிய அன்னாசி பழம் ஆஸ்திரேலியாவில் கிரிஸ்டைன் என்பவரால் உருவாக்கப்பட்டது. 32 செமீ நீளமும்,66செமீ சுற்றளவும் கொண்டிருந்த அந்த அன்னாசிப்பழம் 8.3 கிலோ எடை கொண்டிருந்தது 5
அன்னாசிகளுக்கு புகழ்பெற்ற பிலிப்பைன்ஸின் பைன்யாசான் திருவிழா ( Pinyasan Festival,) ஏப்ரல் 14, 1993லிருந்து நடத்தப்படுகிறது
அடுத்த முற அன்னாசியை சுவைக்கையில் 1640ல் ’’இனிப்பு மணமும் வைனும் பன்னீரும் சர்க்கரையும் கலந்த சுவையும் போல’’ என்று தாவரவியலாளர்களால் 1640ல் விவரிக்கப்பட்ட அதன் அசல் சுவையை அனுபவிக்கலாம்
உதவிய கட்டுரைகள்-ஆதாரங்கள்
- https://www.indifferentlanguages.com/words/pineapple#region-1
- .https://www.ipni.org/n/12322-2
- .https://soyummy.com/pineapple-pizza-history/
- https://parade.com/living/upside-down-pineapple-meaning#:~:text=much%20different%20meaning.-,What%20Does%20an%20Upside%2DDown%20Pineapple%20Mean%3F,What%20is%20an%20Open%20Relationship%3F
- https://www.worldrecordacademy.com/nature/heaviest_pineapple_8_point_2_kilo_pineapple_sets_world_record_112607.html#:~:text=The%20Guinness%20world%20record%20for,Britain%20Province%2C%20Papua%20New%20Guinea.
- chromeextension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://stars.library.ucf.edu/cgi/viewcontent.cgi?article=1029&context=lib-rosen-exhibits
- https://storymaps.arcgis.com/stories/fd88a460a28343cca0206dbfa2f0de27
A thouroughly researched article. Excellent presentaton. Congratulations to the author.