பிரதிபிம்பம்

போர் ஆரம்பித்த நாளிலிருந்து திருஷ்டத்யும்னன் தினமும் இரவில் தன் தந்தையை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். நாள் முழுதும் தேரில் நின்று கொண்டிருப்பதால் துருபதரின் கால்களில் சற்று வீக்கம் இருக்கும். தன் கையாலேயே தினமும் திருஷ்டத்யும்னன் தைலம் தடவிவிடுவான். அன்றையப் போரைப் பற்றி, நாளை வகுக்கப் போகும் வியூகத்தைப் பற்றி ஏதாவது பேசிக் கொண்டிருப்பான். துருபதர் அன்று துரோணர் என்ன செய்தார், எப்படி போர் புரிந்தார் என்று அறிந்து கொள்வதைத் தவிர வேறு எதிலும் பெரிதாக அக்கறை இல்லாதவர்.

அருகில் இருக்கும் ஒவ்வொரு நாளும் இரவில் அஸ்வத்தாமன் தன் தந்தையை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். துரோணரின் கால்களைப் பிடித்துவிடுவான். ஆனால் துரோணர் கௌரவப் படைத்தலைவராக பதவி ஏற்றபின் துரோணரைத் தனிமையில் சந்திக்க முடிந்ததே இல்லை. துரோணர் இரவுகளில் தூங்குவதே இல்லை, கர்ணன், துரியோதனன், சகுனி, சல்யர், பூரிஸ்ரவஸ், பகதத்தன், ஜயத்ரதன் என்று யாராவது சந்திக்க வந்து கொண்டே இருந்தார்கள். கிருபர் தவிர்த்த மற்றவர் முன்னிலையில் அஸ்வத்தாமன் தனக்கு பணிவிடை செய்வதை துரோணர் விரும்புவதில்லை. அதனால் அஸ்வத்தாமனும் கிருபரும் எப்போதும் இரண்டு அடி தள்ளி அமர்ந்திருப்பார்கள், அவ்வப்போது ஆலோசனைகளில் கலந்து கொள்வார்கள். துரோணர் ஆசனத்தில் அமர்ந்தபடியே ஓரிரு நாழிகைகள் சற்று ஓய்வெடுத்துக் கொள்வதோடு சரி. அயலவர்கள் யாரும் அருகில் இல்லாதபோது அஸ்வத்தாமன அவரது காலைப் பிடித்துவிடுவான். துருபதர் அன்று யாரோடு போரிட்டார், வென்றாரா பின்வாங்கினாரா என்று சொல்வான். துரோணர் அரைக்கண் மூடியபடியே, அக்கறை இல்லாத மாதிரி கேட்பார், ஆனால் கூர்மையாகக் கவனிப்பார்.

பதினான்காம் நாள் இரவுப் போர் முடித்து மறு நாள் போருக்கான திட்டங்களை வகுத்துவிட்டு திருஷ்டத்யும்னன் துருபதரின் கூடாரத்துக்குள் நுழைந்தபோது அவர் அயர்ந்திருந்தார். முதுமையின் தளர்ச்சி, முனைப்புடன் போர் புரிவதில் உள்ள களைப்பு அவர் உடலில் நன்றாகவே தெரிந்தது. திருஷ்டத்யும்னன் கண்ணிலும் தூக்கமின்மையின் அயர்ச்சி இருந்தது. இரவு உணவு இருந்த தட்டில் இருந்து அவர் அரைக்கவளம் மட்டுமே சாப்பிட்டிருந்தார். அடுத்த நாள் அணிவதற்காக வெண்ணிற ஆடையும் வெள்ளிக் கவசமும் தயாராக இருந்தன. திருஷ்டத்யும்னன் அவர் காலைத் தொட்டு வணங்கிவிட்டு செல்ல எத்தனித்தான். துருபதரின் கை அவனது தலை முடியை அளைந்தது.

பதினான்காம் நாள் இரவுப் போர் முடித்து மறு நாள் போருக்கான திட்டங்களை வகுத்துவிட்டு கர்ணனும் துரியோதனனும் மற்றவர்களும் சென்றனர். ஓரிரு நாழிகை மட்டுமே தூங்கினாலும் துரோணரின் உடலில், கண்ணில் களைப்பு கொஞ்சமும் இல்லை. அவர் தனது அம்புகளை சரிபார்த்து தூணியில் அடுக்கிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் அணிவதற்காக வெண்ணிற ஆடையும் வெள்ளிக் கவசமும் தயாராக இருந்தன. அஸ்வத்தாமன் துரோணரின் அருகில் வந்து அவர் கால்களைப் பிடித்துவிட ஆரம்பித்தான். துரோணரின் கை அவனது தோளை அழுத்தியது.

‘நாளை துரோணனுடன் போர் புரிவேன்’ என்று துருபதர் மிருதுவான குரலில் சொன்னார்.

‘துருபதன் என்னுடன் தனிப்போர் புரியத் துடிக்கிறான், நாளை அவனைத் தவிர்க்க முடியுமா என்று தெரியவில்லை’ என்று துரோணர் மிருதுவான குரலில் சொன்னார்.

திருஷ்டத்யும்னன் துள்ளி எழுந்தான். துருபதரை நோக்கினான். துருபதரின் கண்கள் கூடாரத்தின் மேல் கூரையில் நிலைத்திருந்தன. ’வேண்டாம்’ என்று மன்றாடும் குரலில் சொன்னான்.

‘அவர் தற்கொலை செய்து கொள்ள விரும்பினால் யார் என்ன செய்ய முடியும்?’ என்று சலிப்போடு சொன்னான் அஸ்வத்தாமன்.

‘என் ஆத்மா இறந்து பல ஆண்டுகள் ஓடிவிட்டன, என் உடலும் களைத்துவிட்டது’ என்றார் துருபதர். திருஷ்டத்யுமனை நோக்கினார். அவன் கண்கள் லேசாக கலங்கி இருந்தன. மீண்டும் ‘வேண்டாம் அப்பா’ என்றான்.

‘அவன் ஆத்மாவை பல ஆண்டுகளுக்கு முன்பே கொன்றுவிட்டேன் அஸ்வத்தாமா! கணக்கை முடிக்கத்தான் அவன் உடல் காத்திருந்தது, ஆனால் அவன் களைத்துவிட்டது எனக்குத் தெரிகிறது’ என்றார் துரோணர். அஸ்வத்தாமன் உச்சுக் கொட்டினான்.

‘நிமித்திகர்கள் நான் இந்தப் போரிலிருந்து திரும்பமாட்டேன் என்று கணித்திருப்பது நீ அறியாததா? துரோணன் கனன்று கொண்டிருக்கிறான். சினமும் வஞ்சமும் நன்றிக்கடனும் தோல்வியும் புத்திரபாசமும் அவனை எரித்துக் கொண்டிருக்கின்றன. மகா ஆசாரியன், மூன்று தலைமுறையாக க்ஷத்ரியர்களுக்கு பயிற்சி அளிப்பவன், போர் நெறிகளை போதிப்பவன் இன்று என்ன செய்தான் என்று பார்த்தாய் அல்லவா? இரவில் போர் புரிகிறான்! தனியனாக நின்ற அபிமன்யுவை எந்தத் தயக்கமும் இல்லாமல் கொன்றது அவன்தான், ஜயத்ரதனோ துருமசேனனோ அல்ல. அவன் மேலும் மேலும் வீழ்வதை நான் பார்க்க விரும்பவில்லை திருஷ்டத்யும்னா!’

‘அர்ஜுனனை என்னால் மட்டுமே வெல்ல முடியும், பீஷ்மராலும் கர்ணனாலும் கூட வெல்ல முடியாது என்று நான் என் ஆழ்மனதில் தருக்கிக் கொண்டிருந்தேன்., அஸ்வத்தாமா! அவன்தான் என்னை வென்று கொண்டிருக்கிறான். அவனை எப்படி வெல்வது என்று தெரியாமல்தான் எழுந்த ஆங்காரத்தில்தான் என் வீழ்ச்சி தொடங்கி இருக்கிறது. தனியனாக நின்ற அபிமன்யுவை எந்தத் தயக்கமும் இல்லாமல் வீழ்த்தினேன், இரவில் போர் தொடங்கினேன். நான் செய்யும் ஒவ்வொரு இழிசெயலும் பத்து மடங்கு இழப்பைத்தான் நம் தரப்புக்கு கொண்டு வந்திருக்கின்றன. நாளை துருபதன் என்னிடம் அறைகூவல் விடுத்தால், அவனுடன் நான் போர் புரிவதற்கும் அவனைக் கட்டிப் போட்டு அவன் கழுத்தை அறுத்து கொல்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று தெரிந்தாலும், இது இழிசெயல் என்று அறிந்திருந்தாலும், அவனை என்னால் தவிர்க்க முடியுமா என்று தெரியவில்லை அஸ்வத்தாமா!’

‘அவர் இறப்பு என் கையால்தான் என்பது ஊழ் என்கிறார்கள். என்னால் அவரது சுண்டுவிரல் நகத்தைக் கூடத் தாக்க முடியவில்லை. அவரை வெல்லும் திறமை எனக்கில்லை, குருநாதர் என்ற உணர்வு வேறு என் ஊக்கத்தை அழிக்கிறது. அவர் உங்களைக் கொல்வது என்று தீர்மானித்துவிட்டால் அர்ஜுனனால் கூட உங்களைக் காக்க இயலாது, வேண்டாம் அப்பா!’

‘போர் என்று வந்துவிட்டால் வலியவன் வெல்வதுதான் இயற்கை. உங்கள் சுண்டுவிரல் நகத்தைக் கூட அசைக்க முடியாது என்று தெரிந்தும் உங்களை எதிர்த்து அறைகூவினால் அவர் விதி அது, அதற்காக நீங்கள் மனம் வருந்துவதில் பொருளில்லை அப்பா!’

“எல்லாம் ஏற்கனவே பிரம்மனால் எழுதப்பட்டுவிட்டது மைந்தா! “ என்று துருபதர் பெருமூச்செறிந்தார்.

“எல்லாம் ஏற்கனவே பிரம்மனால் எழுதப்பட்டுவிட்டது மைந்தா! “ என்று துரோணர் பெருமூச்செறிந்தார்.

திருஷ்டத்யும்னன் எதுவும் பேசவில்லை. அப்படியே மௌனமாக தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் இடது கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்தது.

அஸ்வத்தாமன் எதுவும் பேசவில்லை. அப்படியே மௌனமாக தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் முகத்தில் சலிப்பு தெரிந்தது.

திருஷ்டத்யும்னன் திடீரென்று தலையை நிமிர்த்து துருபதரை நோக்கினான். ‘உங்களிடம் வெகு காலமாக சில கேட்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்’ என்றான்.

அஸ்வத்தாமன் திடீரென்று தலையை நிமிர்த்து துரோணரை நோக்கினான். ‘உங்களிடம் சில கேட்க வேண்டும்’ என்றான்.

‘துரோணரின் இறப்பு என் கையில்தான் என்ற நிமித்திகர் கூற்று துரோணருக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருந்தும் அவர் என்னை பயிற்றுவிக்க ஏன் ஒப்புக்கொண்டார்? எனக்கு முழு விழைவோடு கற்பித்தார், அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் கூட அப்படி பயிற்சி அளித்திருப்பாரா தெரியவில்லை’

‘உங்களைக் கொல்லவே பிறந்தவன் அவன். அவனை உங்களிடமே கல்வி கற்க ஏன் துருபதர் அனுப்பினார்? நீங்கள் மறுத்திருந்தால்? அவனுக்கு சரியானபடி பயிற்சி அளிக்காமல் இருந்திருந்தால்? தேர்க்காலிலே கட்டி இழுத்த பிறகும் உங்கள் மீது அவருக்கு எப்படி நம்பிக்கை இருக்கிறது?

துருபதர் புன்னகைத்தார்.

துரோணர் புன்னகைத்தார்.

‘என் மகனுக்கு முழு வீச்சோடு பயிற்சி அளிக்காமல் வேறு யாருக்கு பயிற்சி அளிப்பான்? நீ இன்னும் கொஞ்சம் திறமையாளனாக இருந்திருந்தால் அர்ஜுனனுக்குக் கொடுத்த வாக்கை உடைத்து உன்னையே உலகின் சிறந்த வில்லாளியாக ஆக்கி இருப்பானடா!’

‘துருபதன் மகனுக்கு முழு வீச்சோடு பயிற்சி அளிக்காமல் வேறு யாருக்கு அளிப்பது? அவன் இன்னும் கொஞ்சம் முனைப்போடு பயின்றிருந்தால் அவனையும் உன் தரத்துக்கு, அர்ஜுனன், கர்ணன் தரத்துக்கு கொண்டு வந்திருப்பேன்!’

‘அவர் உங்கள் மீது கொண்டிருக்கும் வஞ்சம் உலகறிந்தது. தேர்க்காலிலே கட்டி இழுத்து வரச் செய்தார். ஒரு க்ஷத்ரியனை இதை விட இழிவு செய்ய முடியாது. நீங்கள் என்னவோ அவர் உங்கள் மீது கொண்டிருந்த அன்பும் நட்பும் பாசமும் மாறாமல் அப்படியே இருப்பது போலப் பேசுகிறீர்கள்!’

‘அவர் உங்கள் மீது கொண்டிருக்கும் வஞ்சம் உலகறிந்தது. உங்களைக் கொல்லும் ஊழ் கொண்ட ஒரு மகன் வேண்டும் என்று யாகம் செய்து திருஷ்டத்யும்னனை மகனாகப் பெற்றார. நீங்கள் என்னவோ அவர் உங்கள் மீது கொண்டிருந்த அன்பும் நட்பும் பாசமும் மாறாமல் அப்படியே இருப்பது போலப் பேசுகிறீர்கள்’

‘அன்றும் சரி, இன்றும் சரி, அவன் என்னை உயிர்த்தோழனாகத்தான் கருதுகிறான். அதனால் என்னுடன் போர் புரிவதைத் தவிர்த்துக் கொண்டே இருக்கிறான். என்னை விடு, நீயே சொன்ன மாதிரி உன்னாலும் அவன் சுண்டுவிரல் நகத்தைக் கூடத் தொடமுடியாது என்று தெரிந்திருந்தும் உன்னுடனும் போர் புரிவதைத் தவிர்த்துக் கொண்டே இருக்கிறான். நீ கூடவா இதைப் புரிந்து கொள்ளவில்லை?’

‘அன்றும் இன்றும் என்றும் நாங்கள் உயிர்த்தோழர்கள்தான். என்னாலும் அவனுக்கு எதிராகவோ, அவன் மைந்தர்களுக்கு எதிராகவோ வில்லெடுக்க முடியவில்லை. நீ கூடவா இதைப் புரிந்து கொள்ளவில்லை?’

‘என்னவோ போங்கள்! எப்போதோ சிறுவர்களாக இருந்தபோது சொன்ன வார்த்தையை வைத்துக் கொண்டு பாதி நாட்டைத் தா என்று கேட்க வேண்டியது, உங்களைத் தேர்க்காலில் கட்டி இழுத்து வரச் செய்ய வேண்டியது, நட்பாம், தோழமையாம்!’

‘என்னவோ போங்கள்! வளம் பொருந்திய பாஞ்சாலத்தின் அரசன், உயிர்த்தோழனுக்கு ஒரு பசுவைத் தர மனதில்லை, அவமானப்படுத்தி அனுப்புகிறான். உங்களைக் கொல்லும் மகன் வேண்டும் என்று யாகம் புரிகிறான். நட்பாம், தோழமையாம்!’

துருபதர் பெருமூச்செறிந்தார்.

துரோணர் பெருமூச்செறிந்தார்.

‘அவன் பாதி நாட்டைக் கேட்டது நியாயம்தான், திருஷ்டத்யும்னா! நான் அவனை அப்படி கோபப்படுத்தி இருக்கக் கூடாது’

‘அவன் பசுவைத் தர மறுத்தது நியாயம்தான், அஸ்வத்தாமா! நான் அவனை அப்படி சினமூட்டி இருக்கக் கூடாது’

திருஷ்டத்யும்னன் ஆவேசத்தோடு எழுந்தான். அருகிலிருந்த நீர்க்குடுவையை பலமாக அறைந்தான். மண் குடுவை உடைந்து நீர் தரையெங்கும் ஓடியது.

அஸ்வத்தாமன் ஆவேசத்தோடு எழுந்தான். அருகிலிருந்த நீர்க்குடுவை அவன் கை பட்டு உடைந்து நீர் தரையெங்கும் ஓடியது.

‘நீங்கள் அவரை நண்பராக கருதலாம், அவர் உங்களுடைய எதிரி மட்டுமே! அந்தணர்களுக்கான நிதானமும் பொறுமையும் இல்லாத வஞ்சமே உருவான மனிதன்!’ என்று திருஷ்டத்யும்னன் கூவினான். அவன் முகம் இறுகி இருந்தது. பற்கள் அறைபட்டன.

‘நீங்கள் அவருடைய நண்பராக இருக்கலாம், அவர் உங்களுடைய எதிரி மட்டுமே! ஷத்ரியர்களுக்க்கான பெருந்தன்மையும், அற உணர்வும் இல்லாத அற்பத்தனமே உருவான மனிதன்!’ என்று அஸ்வத்தாமன் கூவினான். அவன் முகம் இறுகி இருந்தது. பற்கள் அறைபட்டன.

துருபதர் படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தார், அவர் கை ஓங்கியது. பிறகு மெதுவாகத் தாழ்ந்தது.

துரோணர் ஆசனத்திலிருந்து துள்ளி எழுந்தார், அவர் கை ஓங்கியது. பிறகு மெதுவாகத் தாழ்ந்தது.

‘உன் தந்தை மீது கொஞ்சம் கருணை காட்டு மைந்தா! அவனை இழிவாகப் பேசாதே!’ என்று துருபதர் மிருதுவான குரலில் சொன்னார்.

‘உன் தந்தை மீது கொஞ்சம் கருணை காட்டு மைந்தா! அவனை இழிவாகப் பேசாதே!’ என்று துரோணர் மிருதுவான குரலில் சொன்னார்.

திருஷ்டத்யும்னன் சரிந்து தரையில் உட்கார்ந்தான். துருபதர் அவன் தலை முடியைத் தன் கையால் மீண்டும் அளைந்தார்.

அஸ்வத்தாமன் சரிந்து தரையில் உட்கார்ந்தான். துரோணர் அவன் தோளை மீண்டும் மெதுவாக அழுத்திவிட்டார்.

‘அவன் ஒரு பிடி மண்ணுக்கும் ஆசைப்பட்டவனில்லை. வில்லைக் கரை காண வேண்டும் என்ற ஒரே ஒரு விழைவு மட்டும்தான் அவனுக்கு இருந்தது. இன்று வஞ்சமும் சினமும் கொண்ட கொடுந்தெய்வமாக எழுந்திருக்கிறான், அவனை இந்த நிலைக்குத் தாழ்த்தியவன் நானே’ என்றார் துருபதர். திருஷ்டத்யும்னன் அவரை நிமிர்ந்து நோக்கினான். துருபதரின் பார்வை எங்கோ நிலைத்திருந்தது. ‘என் தவறு!’ என்று திடீரென்று கூவிய துருபதர் தன் நெஞ்சில் அறைந்து கொண்டார். திருஷ்டத்யும்னன் பாய்ந்து அவரது கைகளைப் பிடித்துக் கொண்டான். துருபதர் தளர்ந்து மீண்டும் படுக்கையில் சாய்ந்தார்.

‘சொன்ன சொல் தவறாதவன் அவன். நாடு செழிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு விழைவு மட்டும்தான் அவனுக்கு இருந்தது. இன்று வஞ்சம் கொண்டு எழுந்திருக்கிறான். அவனை இந்த நிலைக்குத் தாழ்த்தியவன் நானே’ என்றார் துரோணர். அஸ்வத்தாமன் அவரை நிமிர்ந்து நோக்கினான். துரோணரின் பார்வை எங்கோ நிலைத்திருந்தது. ‘என் தவறு!’ என்று திடீரென்று கூவிய துரோணர் தன் நெஞ்சில் அறைந்து கொண்டார். அஸ்வத்தாமன் பாய்ந்து அவரது கைகளைப் பிடித்துக் கொண்டான். துரோணர் தளர்ந்து மீண்டும் இருக்கையில் சாய்ந்தார்.

‘தானம் கேட்பதிலும் ஒரு நாகரீகம் வேண்டும். இரவு வேளையில் வந்து உறங்குபவரை எழுப்பிக் கேட்டால் எரிச்சல் வரத்தான் செய்யும்’ என்று திருஷ்டத்யும்னன் முணுமுணுத்தான்.

‘ஆயிரம் ஆயிரம் பசுக்கள் உள்ள கொட்டிலிலிருந்து ஒரு பசுவைத் தர மனமில்லை, சொன்ன சொல் தவற மாட்டாராம்!’ என்று அஸ்வத்தாமன் முணுமுணுத்தான்.

‘சபையை விட்டுவிட்டு வெளியேறியபின் மீண்டும் வருவான், என்னை மன்னித்துவிட்டேன் என்று சொல்வான் என்று வெகு நாள் காத்திருந்தேன். ஆனால் அவனும் அதே எதிர்பார்ப்புடன் எனக்காகக் காத்திருப்பான் என்று எனக்குத் தோன்றவே இல்லை’ என்றார் துருபதர்.

‘என்னைத் தேடி வருவான், என்னை மன்னித்துவிட்டேன் என்று சொல்வான் வெகு நாள் காத்திருந்தேன். ஆனால் அவனும் அதே எதிர்பார்ப்புடன் எனக்காகக் காத்திருப்பான் என்று எனக்குத் தோன்றவே இல்லை’ என்றார் துரோணர்.

திருஷ்டத்யும்னன் எதுவும் சொல்லவில்லை. பெருமூச்செறிந்தான்.

அஸ்வத்தாமன் துள்ளி எழுந்தான். ‘அவர் உங்களை மன்னிப்பதா! மன்னிக்கும்படி நீங்கள் என்ன தவறு செய்தீர்கள்?’ என்று கூவினான்.

துருபதர் எதுவும் சொல்லாமல் எங்கோ வெறித்தார். பிறகு ‘நீயும் புரிந்து கொள்ளவில்லையா?’ என்றார். அவர் முகத்தில் சிறு புன்னகை இருந்தது.

துரோணர் எதுவும் சொல்லாமல் எங்கோ வெறித்தார். பிறகு ‘நீயும் புரிந்து கொள்ளவில்லையா?’ என்றார். அவர் முகத்தில் சிறு புன்னகை இருந்தது.

‘பசுவைக் கேட்க வந்தவன் ஏன் நாட்டைக் கேட்டான்? நீ என்ன நினைக்கிறாய்?’.

‘பெரும் செல்வம் படைத்தவன், ஏன் ஒரு பசுவைக் கொடுக்க மறுத்தான்? நீ என்ன நினைக்கிறாய்?’

‘அவன் நாட்டைக் கேட்டது அந்த நிமிஷத்தில் எழுந்த கோபம். தான் என்னதான் தவறு செய்திருந்தாலும், அதற்காக நான் சினம் கொள்வேன், சபையில் அந்த சினத்தை வெளியே காட்டுவேன் என்று அவனுக்கு தோன்றியே இருக்காது. நாங்கள் இருவரும் தனியாக இருக்கும்போது அடித்திருந்தாலும் அது அவனுக்குத் தவறாகத் தெரிந்திருக்காது. அந்தக் கணம் வரைக்கும் அந்த உரிமை கொண்டவன் நான் ஒருவனே, ஏன் இன்றும் அந்த உரிமை கொண்டவன் நானே!’ என்று துருபதர் சொன்னார்.

‘அவன் பசுவைத் தர மறுத்தது மறுத்தது அந்த நிமிஷத்தில் எழுந்த கோபம். தான் என்னதான் தவறு செய்தாலும், அதற்காக நான் சினம் கொள்வேன், சபையில் அந்த சினத்தை வெளியே காட்டுவேன் என்று அவனுக்கு தோன்றியே இருக்காது. நாங்கள் இருவரும் தனியாக இருக்கும்போது அவன் என்னை அடித்திருந்தாலும் அது தவறல்ல. இன்றும் அந்த உரிமை கொண்டவன் அவனே!’ என்று துரோணர் சொன்னார்.

திருஷ்டத்யும்னன் தன் முகத்தைத் திருப்பி துருபதரை நோக்கினான். அவனது குழப்பம் அவன் கண்களில் தெளிவாகத் தெரிந்தது.

அஸ்வத்தாமன் தன் முகத்தைத் திருப்பி துரோணரை நோக்கினான். அவனது குழப்பம் அவன் கண்களில் தெளிவாகத் தெரிந்தது. ‘ஒரு பசுவைத் தர மறுத்ததற்கு நீங்கள் கோபப்படலாம். ஆனால கேட்டதற்கு துருபதர் உங்கள் மீது கோபம் கொள்வதா?’

‘அவனுக்கு எப்போதும் என் செல்வப் பின்னணியைப் பற்றி கொஞ்சம் தாழ்வுணர்ச்சி உண்டு. நான் எத்தனையோ முயற்சித்தாலும் அந்த உணர்ச்சி அவனை விட்டு நீங்கவில்லை. என்னிடம் எதையும் கேட்கக்கூடாது என்றே அவன் என்னைத் தவிர்த்து வந்திருக்கிறான். அவன் உறுதி அவன் மகனால்தான் உடைந்தது. தன் எல்லா தயக்கங்களையும் தாண்டி அவன் தானம் கேட்க வந்தான். என் உயிரின் மீதும் அவனுக்கு உரிமை இருக்கிறது என்று தெரிந்தும் போயும் போயும் ஒரு பசுவை தானமாக கேட்டான். அந்த நிமிஷத்தில் ஏற்பட்ட கடுகடுப்பு…’

‘பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு பசுவுக்காக மட்டுமே அவனை சந்திக்க வந்திருக்கிறேன். அதுவும் தானமாகக் சபை நடுவில் கேட்கிறேன். நான் உன்னை விட்டுப் பிரிந்து பல ஆண்டுகள் கழித்து உன்னிடம் வந்து ஒரு பசுவை தானமாகக் கொடு என்று கேட்டால் நீ சினம் கொள்ள மாட்டாயா அஸ்வத்தாமா? எல்லாம் உங்களுடையதுதான், என்ன தானம் கேட்கிறீர்கள் என்று சிடுசிடுக்கமாட்டாயா? அவனுக்கும் அதே கடுகடுப்புதான்.’

‘நீ ரோஷக்காரன், என்னிடம் எந்த உதவியையும் கேட்கமாட்டாய், சரி. ஆனால் மணம் ஆன தகவலைக் கூட சொல்லமாட்டாயா? அஸ்வத்தாமன் பிறந்த மகிழ்ச்சியைக் கூட என்னுடன் பகிர்ந்துகொள்ள மாட்டாயா? அவனுக்கு சிறிய தந்தையாக இருக்கும் உரிமை எனக்கில்லையா?’

‘மணம் ஆன தகவலைக் கூட நான் அவனுக்கு சொல்லவில்லை. நீ பிறந்த மகிழ்ச்சியைக் கூட அவனுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. உன் சிறிய தந்தையாக இருப்பது அவனுடைய வாழ்வின் மிகப் பெரிய சந்தோஷங்களில் ஒன்றாக இருந்திருக்கும்…’

துருபதரின் உடல் தளர்ந்தது. ‘நான் புரிந்து கொண்டிருந்திருக்க வேண்டும். பால் வாங்கவே வசதி இல்லாதவன், தகவல் எப்படி அனுப்புவான்? அவன் எத்தனை அவமான உணர்ச்சியைத் தாண்டி வந்து என்னிடம் தானம் கேட்டிருப்பான்? அந்த நிமிஷமே நான் அவனை ராஜகுருவாக இல்லை, பாஞ்சாலத்தின் மஹா ஆசார்யனாக இல்லை இணை அரசனாக நியமித்திருக்க வேண்டும். பசு என்னடா பசு, பாதி ராஜ்யமே உன்னுடையதுதான் என்று சொல்லி இருக்க வேண்டும். ஒரு புன்னகை புரிந்திருந்தால், இத்தனை ஆண்டுகள் கழித்து அவனை சந்திப்பதில் ஏற்பட்டிருந்த அகத்தின் மலர்ச்சியை முகத்திலும் காட்டி இருந்தால், அவன் என்னைத் தோள் தழுவி இருப்பான். அவன் நிலையிலிருந்து நான் ஒரு கணம் யோசித்திருந்தால் கூட என் தவறு எனக்கும் புரிந்திருக்கும். ஒரு நிமிஷ கோபத்தால் மறுத்தேன். அதில் எழுந்த கோபத்தால் அவன் பாதி நாட்டைக் கேட்டான். வீம்பு அதிகரித்து அவனை அவமானப்படுத்தினேன். அவன் வஞ்சம் கொண்டு என்னைத் தேர்க்காலில் கட்டி இழுத்தான். அவனைக் கொல்ல யாகம் செய்து உன்னை அடைந்தேன். இன்று நாங்கள் எதிரிகள். ஆனால் கோடைக்காலத்து நீர்நிலைகளில் தண்ணீரின் மேல்பரப்பு சூடாக இருந்தாலும் அடியில் குளிர்ச்சியாக இருப்பது போலத்தான் எங்கள் நட்பு இன்றும் உயிரோடுதான் இருக்கிறது!’

துரோணரின் உடல் தளர்ந்தது. ‘நான் புரிந்து கொண்டிருந்திருக்க வேண்டும். உயிரும் நண்பனுடையதே என்று நினைத்திருந்தவனிடம் போயும் போயும் ஒரு பசுவைக் கேட்டால், அதுவும் சபை நடுவே தானமாகக் அவன் எப்படி உணர்ந்திருப்பான்? ஒரு புன்னகை புரிந்திருந்தால், இத்தனை ஆண்டுகள் கழித்து அவனை சந்திப்பதில் ஏற்பட்டிருந்த அகத்தின் மலர்ச்சியை முகத்திலும் காட்டி இருந்தால், அவன் என்னைத் தோள் தழுவி இருப்பான். நான் தானம் கேட்பதின் தவறை நானும் உணர்ந்திருப்பேன். அவன் நிலையிலிருந்து நான் ஒரு கணம் யோசித்திருந்தால் கூட என் தவறு எனக்கும் புரிந்திருக்கும். அவன் சினம் கொண்டு மறுத்தான், உண்மையாக அல்ல. விஷமம் செய்யும் குழந்தையிடம் அன்னை பேச மாட்டேன் போ என்று கோபித்துக் கொள்வதைப் போலத்தான் மறுத்தான். என் முட்டாள்தனத்தால் கோபம் கொண்டு பாதி நாட்டைக் கேட்டேன். வீம்பு அதிகரித்து அவன் மறுத்தான். வஞ்சம் கொண்டு அவனைத் தேர்க்காலில் கட்டி இழுத்தேன். என்னைக் கொல்ல யாகம் செய்து திருஷ்டத்யும்னனைப் பெற்றான். இன்று நாங்கள் எதிரிகள். ஆனால் கோடைக்காலத்து நீர்நிலைகளில் தண்ணீரின் மேல்பரப்பு சூடாக இருந்தாலும் அடியில் குளிர்ச்சியாக இருப்பது போலத்தான் எங்கள் நட்பு இன்றும் உயிரோடுதான் இருக்கிறது!’

திருஷ்டத்யும்னன் கண்களில் நீர் துளிர்த்தது. அவன் துருபதரைத் தழுவிக் கொண்டான்.

அஸ்வத்தாமன் கண்களிலும்.

3 Replies to “பிரதிபிம்பம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.