பணம் பணம்…

இருவரின் பெயர் ஒற்றுமையில் பழக்கம் ஆரம்பித்தது.

புதிய இடத்தில் இரண்டு மணி குறைவு என்பதால் இருள் பிரியுமுன்பே எழுந்து குளித்து சுத்தமான உடை அணிந்து, அலைபேசி காட்டிய கிழக்குத் திசையை நோக்கித் தரையில் அமர்ந்து, காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கினான்.

இந்த அற்புதப் பிரபஞ்சத்தின் இறை சக்தியில் ஆழ்ந்து, அது நம்மைப் பிரகாசப்படுத்த வேண்டுகிறேன்.

இனிமேலும் தொடர்ந்து இதைச் செய்ய வேண்டுமா? செய்வதில் என்ன தவறு? உடல் வாழ்க்கை நடத்துவதற்கு அவசியமான வருமானம் சம்பாதிக்க வேலை. அது முடிந்ததும் மீதி நேரத்தில் மன வாழ்க்கையை வளர்க்க தியானம். அத்துடன், பல வருஷப் பழக்கத்தை ஒரே நாளில் விடமுடியாது. மூளையின் இரு பாதிகளுக்கும் ஒத்துப்போகவில்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக…

இரண்டு, மூன்று… முப்பத்தியாறு.

ஜபம் முடிந்ததும், ஜன்னல் திரைகளை உயர்த்தினான். சூரியனின் வெம்மையும் வெளிச்சமும் வீட்டிற்குள் பரவின. தொகுப்புக் கட்டடங்களை இணைக்கும் பாதைகளில் பள்ளிக்கூட மாணவர்கள் நடந்துசென்றார்கள். எங்கோ புதர்களை வெட்டும் ஓசை. புதிய தினத்தை எதிர்கொள்ளும் சுறுசுறுப்பு வந்தது.

வீட்டின் சுற்றுப்புறத்தை அவன் கூக்கிலில் பார்த்து இருந்தான். அதை நேரிலே காண வெளியே கால் வைத்தான். வராந்தாவில் ஒரு வட்ட மேஜையும் இரண்டு நாற்காலிகளும். அவற்றைத் தாண்டி படிகளில் இறங்குவதற்கு முன்பு அவன் கண்ணில் பட்டது. முந்தைய தினம் அந்தத் தாற்காலிகத் தங்குமிடத்திற்குப் பயணக் களைப்போடு வந்தபோது இருட்டியிருந்ததால் அவன் கவனிக்கவில்லை. அடுத்த இல்லத்தின் நடைவழியில் பல தொட்டிகள். அகன்ற இலைகளுடன் காலிஃப்ளவர். காலை வெயிலில் சின்ன மின்சார பல்ப்கள் போல் பளிச்சிட்ட மஞ்சள், சிவப்பு மிளகாய்கள். குனிந்து அவற்றின் அழகை ரசித்தான். ஆராய்ச்சிப்பட்டம் வாங்கிய போது, இப்படி வெயில் படும் இடங்களில், காய்க்கும் தாவரங்களையோ கொத்தமல்லி, பேஸில் போன்ற வாசனைச் செடிகளையோ வளர்க்க அவனுக்கு விருப்பம் இருந்தது. ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை. இனி இம்மாதிரி நச்சுப்பிச்சு வேலைகளுக்கும் அவனுக்கும் சம்பந்தம் இராது.

அந்த வீட்டின் கதவு திறக்கும் சத்தத்தில் நிமிர்ந்தான். நிறம் மாறிய ஜீன்ஸிலும் டி-சட்டையிலும் சூரிய ஒளியில் பழுப்பு ஏறிய இளம் பெண்.

“ஹாய்! குட் மார்னிங்!”

அவளை ஏறிட்டுப்பார்த்து,

“ஹாய்! குட் மார்னிங்! சின்ன நடைவழியில் ஒரு பெரிய தோட்டம்.”

“தாவரங்கள் வளர்ப்பது என் பொழுது போக்கு.”

அவள் அங்கே நிரந்தரமாக வசிப்பவள் என்பது வெளிப்படை. அதனால் அவன் அறிமுகத்தை ஆரம்பித்துவைத்தான்.

“மனு சுப்ரமணியன். மனு என்றால் போதும்.”

“இன்னொரு தடவை சொல்!”

“மனு சுப்ரமனியன்.”

“நான் அனுஷ் சார்க்கேனியன். பெயரின் முடிவிலேயே என் அர்மீனியப் பூர்வீகம் வெளிப்படுகிறது. உன் பெயரில் கூட அர்மீனியப் பெயரின் ஓசை.”

“ட்ரூ. ட்ரூ. நான் பிறந்து வளர்ந்த சென்னையில் ஒரு காலத்தில் நிறைய அர்மீனியன்கள் இருந்தார்களாம். ஒரு தெருவின் பெயரே அர்மீனியன் ஸ்ட்ரீட். தெரு இன்னும் இருக்கிறது. ஆனால் அங்கே ஒன்றிரண்டு அர்மீனியன்கள் தான்.”

“இன்டரெஸ்டிங்.”

“என் கசின் ஒருத்தியின் பெயர் அனுஷா.”

“அனுக் என்று எனக்கு ஒரு மாமா” என்றாள் அவள்.

பெயர்களின் ஒற்றுமையை ஜீரணித்த பிறகு அனுஷ்,

“தேவைப்பட்டதைப் பறித்துக் கொள்! மிளகாய் காரமாக இராது.”

“தாங்க்ஸ்!”

“இதற்கு முன் சான் டியாகோ வந்தது உண்டா?”

“இது தான் முதல்முறை.”

“ஒரு விதத்தில் இது எனக்கு சொந்த ஊர். என்ன விவரம் வேண்டுமானாலும் கேட்கலாம். உணவு விடுதிகளுக்கு மட்டும் ‘யெல்ப்’. எனக்கு அவற்றைப் பற்றி அதிகம் தெரியாது.”

அதுவரை மனு வெளியில் சாப்பிட்டது அவசியம் நேர்ந்தபோது மட்டுமே. அப்போதும் எளிமையான இடங்களில்.

அவனுக்கு முக்கியமாகத் தெரிய வேண்டிய விவரம்…

“கொஞ்சம் அரிசி, காப்பிப் பொடி, சர்க்கரை, உப்பு, சமையல் எண்ணெய் – இவை தவிர இந்த இடத்தில் ஒன்றும் இல்லை. பக்கத்தில் எந்தக் கடை சௌகரியம்?”

“வடக்கிலும் தெற்கிலும் நடக்கும் தொலைவில் கடை வரிசைகள். வடக்கில் இருக்கும் ஒரு மளிகைக் கடைக்கு நான் போக வேண்டும். இருவரும் சேர்ந்து போகலாம்.”

“தாங்க்ஸ்.”

அனுஷ் தன் இல்லத்தில் நுழைந்தாள்.

அவள் சொன்னதற்காக மனு ஒரு சின்ன காலிஃப்ளவரும் நாலைந்து மிளகாய்களும் பறித்து எடுத்துக்கொண்டான்.

வீட்டிற்குள் சென்று அவற்றை வைத்துவிட்டு இரண்டு துணிப்பைகளுடன் படியிறக்கத்தில் காத்திருந்தான். கூந்தலை முடிந்து நீண்ட டெனிம் ஆடையில் அனுஷ் வெளியே வந்தாள். அவள் எடுத்துவந்த பெரிய பிரம்புக்கூடையில் விதவிதமான கீரைக்கட்டுகள். அவன் ஆச்சரியப் பார்வையைக் கவனித்த அவள்,

“இரண்டு மைலில் ஒரு சமுதாயப் பண்ணை. அதில் எனக்கு ஒரு சின்ன பகுதி. அங்கே பயிரானது. நேற்று மாலை வெட்டி எடுத்துவந்தேன்.”

குனிந்து பெரிதாக வளர்ந்த காலிஃப்ளவர், கோஸ் காய்களை வெட்டி அவற்றையும் கூடையின் மேல் வைத்தாள்.

படிகளில் இறங்கி நடந்தார்கள்.

“நான் சைக்கிளில் போவது வழக்கம். உனக்காக நடை.”

“முன்பு இருந்த இடத்திலும் நான் கடைகளுக்கு நடந்துதான் போவேன்.”

இங்கே கையில் கொஞ்சம் பணம் சேர்ந்ததும் ஒரு ப்ரையஸ்.

ஒரே மாதிரியான ஐந்தாறு கட்டடங்களைச் சுற்றி நடந்து வளாகத்தின் வெளியே வந்தார்கள். தென் திசையில் வேகமாக உயர்ந்த சூரியனைப் பார்த்து,

“என்ன பிரகாசம்!”

வானத்தின் ஆழ்ந்த நீலத்தை அவன் அதுவரை பார்த்தது இல்லை.

“இப்படியே எல்லா நாளும் இராது. குளிர்காலத்தில் தான் இங்கே மழை பெய்யும்.”

“தண்ணீர்ப் பற்றாக்குறையை ஈடுகட்ட நிறைய பெய்யட்டும். சில வாரங்களுக்கு வெளிவேலை எதுவும் எனக்குக் கிடையாது.”

பிரதான தெருவில் திரும்பினார்கள்.

“தென் கலிஃபோர்னியாவில் சௌகரியமான இல்லம் தேடுவதற்கு இந்தத் தாற்காலிகத் தங்குமிடம். யாரோ வருவதாகச் சொல்லி கடைசி நேரம் மனம் மாறியதால் இது கிடைத்தது,” என்றான்.

“உனக்கு சான் டியாகோ பிடிக்கும்,” என்பதைத் தொடர்ந்து, “சமையல், ஒளிவிளக்கு இரண்டும் அவசியம். கணினியும் அலைபேசியும் இக்காலத்தில் தவிர்க்க முடியாதவை. இவை தவிர வேறு எதற்கும் சக்தியைச் செலவிடாமல் வாழ வேண்டும் என்பது என் விருப்பம். இங்கே அது முடியும். டிசம்பர் ஜனவரி மாதங்களில் எப்போதாவது ஹீட்டர் தேவைப்படும். தடியான ஆடைகளால் அதைத் தவிர்க்கலாம். மற்ற சமயங்களில் ஜன்னல்களைத் திறந்துவைத்து மின்விசிறியை ஓட்டினால் ஏர்-கண்டிஷன் அவசியம் இல்லை.”

இரண்டு அடுக்ககத் தொகுதிகளுக்கு நடுவில் ஒரு நடைபாதை. அதில் நுழைந்ததும் நாயுடன் நடந்த ஒருசிலர் எதிர்ப்பட்டனர். ஒரு பக்கம் முழுவதும் போகன்வில்லா புதர்கள்.

“புது இடம் எப்படி?”

“யூ.எஸ். வந்ததில் இருந்து முதல்முறையாக, தனி சமையலறை, தனி குளியலறை.”

இனிமேலும் இது தொடரப் போகிறது.

பாதையில் ஏற்றம். அவனுக்காக அவள் நடந்துவருகிறாள் என்பதால்,

“நான் கூடையைத் தூக்கிவரட்டுமா?”

“மேடு ஏறும் வரையில்.”

அரைவட்டப் புல்வெளி அரங்கைச் சுற்றி நடந்தார்கள். மாவட்ட உடற்பயிற்சிக் கூடமும் குழந்தைகள் விளையாடும் இடமும். அவற்றைத் தாண்டியதும் ஒரு நீண்ட கடை வரிசை. முதலில் ஜம்போ’ஸ்.

“இங்கே விலை சற்று அதிகமாக இருக்கும். இன்னும் தள்ளிப்போனால் ஒரு சாதாரண சூபர் மார்க்கெட்.”

முகத்திரை அணிந்து நுழைந்தார்கள். அனுஷ் மேனேஜரின் அறைக்குச் சென்றாள். அவள் கொண்டுவந்த காய்களையும் கீரைக்கட்டுகளையும் மேனேஜர் ஒரு வண்டியில் வைத்ததை மனு கவனித்தான். அவற்றின் விலை அவள் கணக்கில் சேர்ந்திருக்கும்.

அவனுக்கு சொந்தமான சமையல் பாத்திரங்களுடன் கெட்டுப்போகாத உணவுப் பொருட்களையும் மனு தன்னுடன் கொண்டுவந்து இருந்தான். பால், தயிர், காய், பழங்கள் மட்டும் அளவோடு எடுத்துக்கொண்டான். அனுஷ் பால் தவிர வேறு எதுவும் வாங்கவில்லை.

திரும்பி நடந்தபோது, அவள் பொழுதுபோக்கிற்காக மட்டும் காய்கள் வளர்க்கவில்லை என்பதை மனம் சுட்டியது. ஆனால், காலிஃப்ளவருக்கும் மிளகாய்க்கும் பணம் தருவது அவள் நட்பை அவமதிப்பது போல. அதனால்,

“உனக்கு இந்திய உணவு பிடிக்கும் என்றால் இன்று மாலை என் இடத்தில்.”

“நீ அழைப்பதற்கு முன் நானே வருவதாக இருந்தேன். நான் வளர்ந்தபோது என் வீட்டில் அடிக்கடி இந்திய உணவு.”

“ஆச்சரியமாக இருக்கிறதே.”

“என் பெற்றோர்கள் லெபனானில் இருந்து வந்தவர்கள். மத்தியத்தரைக்கடல் உணவு அவர்களுக்குப் பழக்கம். ஆனால், இங்கே அதற்கு ஆரோக்கிய டயட் என்கிற பட்டம். அதனால் அதன் விலை மிக அதிகம். கிட்டத்தட்ட அதே போன்ற இந்திய உணவுக்கு மாறினார்கள். சமையலுக்குத் தேவையான சாமான்கள் இந்திய மளிகைக்கடைகளில் மலிவாகக் கிடைக்கும். எப்போதாவது வெளியே சாப்பிட்டாலும் கையைக் கடிக்காது. உனக்கு இந்திய மளிகை சாமான்கள் தேவைப்பட்டால் சொல்!”

“நான் கையோடு எடுத்து வந்தது இரண்டு வாரங்களுக்குப் போதும்.”

“மாதத்தில் ஒன்று இல்லை, இரண்டு நாள் நான் ‘டூரோ’ வழியாகக் காரை வாடகைக்கு எடுத்து, பல கடைகளுக்குப் போவேன். நேரம் மிச்சம் இருந்தால் கடற்கரை, பால்போவா பார்க் இங்கெல்லாம்.”

மாடிப்படிக்கட்டு உரையாடலை முடித்து அவர்களைப் பிரித்தது.

மாலை சூரியனின் கதிர்கள் வராந்தாவில் விழுந்தன. அவற்றின் வெம்மையில் நனைந்து நாற்காலியில் நிமிர்ந்து கால்களை மடக்கி உட்கார்ந்து மனுவின் சந்தியாகால வணக்கம்.

இந்த அற்புதப் பிரபஞ்சத்தின்…

…இறை சக்தியில் ஆழ்ந்து, அது நம்மைப் பிரகாசப்படுத்த வேண்டுகிறேன்.

முடிந்து கைகூப்பி சூரியனைக் கண்ணுக்குள் வைத்தான். இயந்திரங்களின் இடத்தில் இயற்கையை நிலைநிறுத்த விரும்பும் சூழலியலாளர்களுக்கு காயத்ரி மந்திரம் மிகப்பொருத்தம் என்று அவன் முன்பு எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது.

கண்களைத் திறந்தபோது மஞ்சள் வட்டப்பிழம்பு பார்வையில் இருந்து இறங்கி இருளும் தண்மையும் பரவத் தொடங்கிவிட்டன. அக்காட்சிக்குப் பதில் பிரகாசமான அனுஷ். கலைந்த கூந்தல் பின்னலாகி, முகம் இலேசான ஒப்பனையில் அழகு சேர்க்க நின்றிருந்தாள். அவள் கையில் ஒரு வெண்ணிறப் பாத்திரம்.

“உன் இறை வணக்கம் முடிவதற்குக் காத்திருந்தேன்.”

“பிரமாதமாக ஒன்றும் இல்லை. ஒரு மந்திரத்தைப் பலமுறை உச்சரிக்கும் தியானம்.”

வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

சுவரில் அறுபது அங்குலத் தொலைக்காட்சி. அனுஷின் ஆச்சரியப் பார்வை அதில் விழுந்ததைக் கவனித்த அவன்,

“இதுவும் எனக்குப் புதிது.”

“டிவி பார்க்க எனக்கும் நேரம் இருந்தது இல்லை.”

சின்ன மேஜையைச் சுற்றி நான்கு அரை-முதுகு நாற்காலிகள். மேஜைமேல் இருந்த பாத்திரங்களைத் திறந்து,

“இங்கே வருவதற்கு முன் நாஷ்வில்லில் கூட்டாகச் சமைக்கும் ஏற்பாடு. அதனால் எனக்குத் தெரிந்தது நாலைந்து இந்திய ரெசிபி தான்” என்றான்.

“விருந்துகளுக்கு, இல்லை சந்தையில் விற்பதற்கு சமைப்பது என் இன்னொரு தொழில். அதற்காக இத்தாலிய, மெக்ஸிகன், க்ரீக் என்று பல இனத்து சமையல்களில், எடுத்துத் தின்பதற்கு எளிதான சில பதார்த்தங்கள் தெரியும்.”

வெங்காயம், காலிஃப்ளவர், பச்சைப்பட்டாணியுடன் பிலாஃப் ரைஸ், மிளகாய்ப் பச்சடி, திராட்சையும் வால்நட்டும் சேர்ந்த ப்ரெட். வெள்ளரிக்காய், கேரட் துருவல், ஊறவைத்த பாசிப்பருப்பு கலந்த சாலட். அவற்றை நோட்டம் விட்டதும் அனுஷ்,

“வெள்ளை, மஞ்சள், பச்சை, சிவப்பு, இங்கே இல்லாதது நீலம். அதற்கு நான் செய்த மஃபின்.”

“உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டமும் கிடைக்க ஆறு சுவைகளும், ஐந்து வர்ணங்களும் சாப்பிட வேண்டும் என்று முன் காலத்தில் சொல்வது வழக்கம். அந்தக் கணக்குப்படி சரி.”

மனு கரண்டிகளுடன் இரண்டு சாப்பாட்டுத் தட்டுகளை வைத்ததும் மேஜையில் இடம் மிச்சம் இல்லை.

அனுஷ் தான் எடுத்துவந்த பாத்திரத்தை உயர்மேஜை மேல் வைத்தாள்.

எதிர் எதிராக அமர்ந்ததும் மனு,

“எங்களுக்கு ஊட்டமும் உயிரும் கொடுக்கும் காய்யாவுக்கு நன்றி!” என்று ஆபத்தில்லாத இறைவணக்கம் சொன்னான்.

அதைத்தொடர்ந்து சில அமைதியான கணங்கள்.

“உன் பெயர் என் மனதில் நெருடிக்கொண்டே இருந்தது. நீ காய்யா என்றதும் ஞாபகம் வந்துவிட்டது. ‘ரெசிலியன்ஸ்’ தளத்தில் உன்னுடைய காய்யானிசம் கட்டுரைகள் பார்த்து இருக்கிறேன்.”

அப்படியென்றால் படித்தது இல்லை. மனு அகன்ற கிண்ணத்தில் சாலட் வைத்தான்.

“தாங்க்ஸ், மனு! நான் சந்தித்த ஆண்களுக்கு, நிலையான மாதச் சம்பளம் இல்லாமல் ஒருத்தி பிழைக்க முடியுமா என்று ஆச்சரியம். அவர்கள் இரண்டாவது சந்திப்புக்கு என்னை அழைத்தால் தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.”

அவனுடைய கூட்டு இல்லத்தில் அவன் சமைத்த உணவைச் சாப்பிட்டு, செலவில்லாமல் நகரப் பூங்காவில் உலாவிய பிறகு அவனிடம் நம்பிக்கை இழந்த பெண்கள் மனுவின் நினைவுக்கு வந்து மறைந்தார்கள்.

“நான் அப்படிச் சொல்ல மாட்டேன். பயிர் வளர்த்தல், உணவு தயாரித்தல் என்று வாழ்க்கை நடத்த ஒரு திட்டம், அதற்கான திறமை உனக்கு இருக்கிறது.”

புன்னகையில் அவன் பாராட்டை ஏற்றுக்கொண்டாள்.

“ப்ரெட் நன்றாக வந்திருக்கிறது.”

“அதைச் செய்த இயந்திரத்துக்கு நன்றி!”

“பிலாஃப் சாதத்தின் காரத்தைக் குறைக்க பச்சடி” என்று இரண்டையும் அவள் தட்டில் வைத்தான்.

“தாங்க்ஸ்!”

“நீ சொன்னது போல் மிளகாயில் காரம் இல்லை.”

“பிலாஃப் கூடக் காரம் என்று சொல்வதற்கில்லை.”

பிரதான உணவைத் தின்பதில் சில நிமிடங்கள் கடந்தன.

“காய்யானிசத்தில் எப்படி ஈடுபாடு வந்தது?”

“என் அம்மாவின் தவறு.”

“பாவம்! அவள் என்ன செய்தாள்?”

“அவள் பெயர் பூமா. கிரேக்க புராணத்தில் காய்யா எப்படியோ அதற்கு மேல் ஹிந்து மதத்தில் பூமாதேவி. உலகம் மட்டுமல்ல செடி கொடி மரங்கள் உயிரினங்கள் அனைத்தும் அவள் உருவம். காற்று, ஆகாயம், நீர், நெருப்பு, நிலம் எல்லாம் அவளே. இந்தியாவில் இருந்தவரை மற்றவர்களைப் போல ஒரு தொழிலுக்குத் தேவையான பட்டம், அதை வைத்து நல்ல வருமானம் என்கிற சராசரி எதிர்பார்ப்பு. இங்கே ‘ரெஸ்டோரேஷன் பயாலஜி’யில் முழு மனதுடன் ஆராய்ச்சி செய்ததால் பூமாவின் மேல், காய்யானிசத்தில் மேல் ஆர்வம் வந்தது.”

“சுவாரசியமான மாற்றம். யுசிஎஸ்டியில் (யுனிவெர்சிடி ஆஃப் சான் டியாககோ) லிபரல் ஆர்ட்ஸ் பட்டம். தத்துவம், உயிரியல், வரலாறு என்று பலதரப்பட்ட பாடங்கள். உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளைச் செய்ய மனதைத் தயார் செய்தேன். என் தந்தையின் உதவியில் ஹார்டிகல்சர், தாயிடம் இருந்து சமையல்.”

“அவர்கள்…”

“சில ஆண்டுகளுக்கு முன் சான் ஹொசேக்கு இடம் மாறினார்கள். அங்கே அம்மா ஒரு ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியை.”

அனுஷ் தன் பாத்திரத்துக்கு எழுந்தபோது மனு இரண்டு சிறிய தட்டுகள் எடுத்துக்கொடுத்தான். ஒவ்வொன்றிலும் ஒரு மஃபினை வைத்து,

“மீதி இரண்டு நாளை உன் காலை உணவுக்கு.”

“நீயும் மிஞ்சிய பிலாஃப் சாதத்தை எடுத்துப்போக வேண்டும். மதிய உணவுக்கு.”

கோவிட், கலிஃபோர்னியா என்று சில்லறைப் பேச்சுகள். கடைசியில்,

“அழைத்தவுடன் நீ வந்ததில்-“

“அழைக்காமலே வந்திருக்கிறேன்.”

“எப்படியானாலும் எனக்கு மிகவும் சந்தோஷம்.

சிறு அணைப்பும் இலேசான முத்தமும் சந்திப்பை முடித்தன.

அவன் தென் கலிஃபோர்னியா வந்ததின் நிஜமான காரணத்தை அவளிடம் இருந்து மறைத்துவிட்டான். தாற்காலிகத் தங்குமிடத்தின் அடுத்த வீட்டுப்பெண்ணுக்கு அது ஏன் தெரிய வேண்டும்?

2

‘தேவை ஒரு புது மதம்’ என்ற புத்தகத்தில் இருந்து…

க்ருஷ்ணரின் பூலோக விஜயம்

மனு சுப்ரமனியன்

எப்போதெல்லாம் நியாயங்கள் குறைந்து பாவங்கள் அதிகரிக்கின்றவோ, அப்போதெல்லாம் நான் பூமியில் அவதரிப்பேன். - பகவத் கீதை 4-7 

பிரமன் படைத்த அகில அண்டத்தையும் பரிபாலனம் செய்வதில் உங்களுக்கு எத்தனையோ கவலைகள்” என்று நயமாக ஆரம்பித்தாள் ருக்மணி.

“என் கடமைகளில் நான் தவறி இருந்தால் நேரடியாகவே சுட்டிக்காட்டலாம்” என்றார் க்ருஷ்ணர்.

“பூமியின் உயிர்க்கோளம் இக்கட்டில் இருப்பதாகத் தெரிகிறது. பல உயிரினங்களின் மறைவு, குளறுபடியான சீதோஷ்ணம், மண்வளத்தின் சீரழிவு, தண்ணீர் தட்டுப்பாடு என்று பலதிசைகளில் ஆபத்து. நீங்கள் ஒருநடை மண்ணுலகம் போய் வரலாம் என நினைக்கிறேன்.”

“நிலைமை சரியில்லை என்று நானும் ஓரளவு அறிவேன்.”

தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடக்கும் யுத்தம் இல்லையே என அவர் அலட்சியம் செய்யாது இருக்க,

“உடனடியாகத் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் பூமி உருவானபோது இருந்த ஜீவனற்ற நிலை மறுபடி உண்டாகலாம்.”

“சரி, உடனே பூவுலகப் பயணம் மேற்கொள்கிறேன்.”

“பட்டுப்பீதாம்பரம் உங்களை அடையாளம் காட்டும் என்பதால்… சந்தன நிறத்தில் பட்டு பஜாமா மற்றும் குர்தா ஆடை, தலைமயிரை அடக்க ஒரு அகன்ற தொப்பி. அதில் குதிரைகள் பூட்டிய ரதத்தின் படம்.”

அவற்றை அணிந்ததும்,

“எப்படி இருக்கிறேன்?”

“நீங்கள் ‘க்ருஷ்ண பகவான்’ அடையாள அட்டையைக் காட்டினால் யாரும் நம்ப மாட்டார்கள்.”

பூமியை அருகில் வந்து பார்த்தபோது அதன் பல மாற்றங்கள் கிருஷ்ணருக்கு நிதர்சனமாகத் தெரிந்தன. ருக்மணியின் கவலைக்கான காரணங்களும் தெளிவுபட்டன. முன்னொரு காலத்தில் இயந்திரம் என்றால் மாவு அரைக்கும் உரல், நீரை இறைக்கும் ஏற்றம். அவற்றை ஓட்டுவதற்கு மனிதனின், மற்ற விலங்குகளின் தசைகளில் அடங்கிய சக்தி. இக்காலத்தில் எல்லா இயக்கங்களுக்கும் இயந்திரங்கள். தயிர் கடைவதைக்கூட மனித சக்தி தேவைப்படாத தானியங்கு மத்து செய்கிறது. கருடனைவிட பிருமாண்டமான பறக்கும் வாகனங்கள். நான்கு சக்கரத் தேர்களை இழுக்க எட்டு புரவிகளுக்கு பதில் நூறு இருநூறு இரும்புக் குதிரைகள். மனிதர்களின் அறிவு வளர்ச்சியைக் கண்டு அதிசயித்தாலும், அவருக்கு வேதனை கொடுத்த சில காட்சிகள். மாடுகள் புல்வெளிகளில் நிதானமாக அலைந்து, அப்போது தின்ற புல்லைப் பிறகு உட்கார்ந்து அசைபோடுவதும், கன்றுக்குச் சுரந்தபிறகு இடையர்கள் பால் கறப்பதும் காணாமல் போய்விட்டன. நூற்றுக்கணக்கான மாடுகள் வேலிக்குள் அடைக்கப்பட்டு, தீனி கொடுத்து கொழுக்கவைத்து, இயந்திரத்தால் பால் கறப்பது புதிய நியதி. கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் ஒரே பயிர். அதை அறுவடை செய்யவும் ராட்சச இயந்திரங்கள்.

குழந்தைகள் குறுகிய இடங்களில் அடைக்கப்பட்டு, வண்ணத்திரைகளில் கண்ணைப் பதித்து கண்ட நேரங்களில் கண்டதைச் சாப்பிட்டதைப் பார்த்து அவருக்கு, மண்ணைத் தின்று, திறந்த வெளிகளில் சுதந்திரமாகத் திரிந்து விளையாடிய தன் குழந்தைப் பருவம் நினைவுக்கு வந்தது. நல்லவேளை, ஆறுகளில் குளிப்பதும் அதன் நீரை அருந்துவதும் ஆபத்தானது என்ற எச்சரிக்கை அவர் காலத்தில் இல்லை.

இன்னும் எத்தனையோ மாற்றங்கள். அவற்றுக்குக் காரணமான மனிதர்களின் செயல்கள். அவருக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது மனோவேகத்தில் பலரைக் கொல்லும் இயந்திரத் துப்பாக்கிகள். அவற்றுக்கு இரையாகும் எவ்விதப் பாவமும் செய்யாத குழந்தைகள், பாமர மக்கள்.

ஆகா! எவனோ ஒருவன் வில்லில் அம்பைப் பூட்டி தோளின் சக்தியைப் பயன்படுத்தி அதை எய்கிறானே. அருகில் சென்று பார்க்கலாம்.

மரங்கள் சூழ்ந்த திறந்தவெளி. நெடுஞ்சாலையில் இருந்து அதற்கு ஒரு ஒற்றையடிப் பாதை. ஒரு இளைஞன் நிதானமாக ஒரு இலக்கை நோக்கிக் கணைகளை எய்தான். நீலம் சிவப்பு வளையங்களுக்கு நடுவில் மஞ்சள் உள் வட்டம். அதில் நான்கு அம்புகளும், சிவப்பு வளையத்தில் இரண்டும் குத்திக்கொண்டு நின்றன. ஆறு அம்புகளையும் எடுத்துவந்து தரையில் அம்பறாத்தூணி மேல் வைத்தான். மறுபடி ஒவ்வொன்றாக எய்வதற்குத் தயார் ஆனான். அவன் அருகில் சென்று…

“நமஸ்கார்! குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும்! நீ நன்றாகச் செய்கிறாய்.”

“பாராட்டுக்கு நன்றி!”

“நான் என் வாழ்நாளில் பல வில் வித்தகர்களைப் பார்த்து இருக்கிறேன். மனம்வைத்தால் அவர்கள் தரத்துக்கு நீ முன்னேறலாம்.”

“அது தான் என் ஆசை. உங்களை இதுவரை நான் பார்த்தது இல்லையே. ஊருக்குப் புதிதோ?”

“உண்மையில் நான் மிகமிகப்பழைய ஆசாமி.”

அவன் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

“உங்கள் பெயர்…”

“நான் ஒரு ரகசியச் செயல்திட்டத்தில் வந்திருக்கிறேன். என்னை வெளிக்காட்டாமல் இருப்பது நல்லது. க்ரு என்றால் போதும்.”

“எனக்கு அந்தக் கவலை இல்லை. என் பெயர் மனு.”

“எனக்குப் பரிச்சயமான பெயர்.”

வில்லையும் அம்புகளையும் க்ருஷ்ணர் கையில் எடுத்துப் பார்த்தார்.

“நான் முன்பு பார்த்தது போல் இல்லை.”

“அண்மையில் ஆக்கப்பட்ட பொருள்களில் தயார் செய்தவை.”

“இப்போதெல்லாம் வில்லும் அம்பும் வேட்டையாடவோ போர்முனையிலோ பயன்படுத்தப்படுவது இல்லை என அறிகிறேன்.”

“உண்மை.”

“இக்கலையில் உன் ஆர்வம் பொழுதுபோக்கவோ?”

“அப்படித்தான் ஆரம்பித்தது. இப்போது அதற்கு மிக ஆழமான காரணம்.”

“புரியவில்லையே.”

“ஆரம்பத்தில் இருந்து சொல்வது என்றால்… பத்து வயது வரை நான் ஒரு கிராமத்தில் வளர்ந்தேன். மூங்கில் வில், ஆலமரத்துக் குச்சிகள் அம்புகள், கட்டில் கயறு வில்லின் நாண். நான் அர்ஜுனன், நான் கர்ணன் என்று நாங்கள் சிறுவர்கள் அம்புவிட்டு சண்டை போடுவோம்.”

“அவ்விருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காத வீரர்கள். நான் நேரிலேயே- சரி, நீ சிறுவயதில் போட்ட சண்டை.”

“சென்ற ஆண்டு என் பாலபருவம் ஞாபகம் வர மறுபடி அந்த வித்தையை ஆரம்பித்தேன். பழகப்பழக அதன் ஆழத்தில் சிக்கிவிட்டேன்.”

“உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் நல்ல பயிற்சி.”

“நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. நாணின் சரியான இடத்தில் அம்பினை வைத்துப் பூட்டியதும் சுவாசத்தைக் கட்டுப்படுத்துவேன். அப்போது நானும் இந்த வில்லும் ஒன்று. விரல்களைப் போல அம்பு என் கையின் ஒரு அங்கம். என் கண்ணில் அந்தக் குறிவட்டம் மட்டுமே. மற்ற எதுவும் மனதில் இராது. இந்நிலையில் ஒரு நிமிடம். அம்பு வில்லில் இருந்து பாய்ந்ததும் மனதில் எழுச்சி அடங்கி ஒரு நிம்மதி.”

“இப்படி அனுபவித்து அம்பு எய்யும் நீ ஒரு ஏகலைவன்.”

“நன்றி! மந்திரம் உச்சரிப்பது போல இதை நான் திரும்பத் திரும்பச் செய்வது நிதானத்தைக் கொடுக்க, என் கவலைகளைச் சிறிது நேரமாவது மறக்க.”

“உன்னைப் பார்த்தால் ஆரோக்கியமான இளைஞன் போலத் தெரிகிறது. உனக்கு என்ன கவலை இருக்க முடியும்?”

“உலகின் நிலைமையை. பாருங்கள்! பூமாதேவியின் உடல்நிலை சீராக இல்லை. அடிக்கடி ஜுரம் வருகிறது. சில சமயம் வேர்த்து ஆறாகக் கொட்டுகிறது.”

“உன்னை சந்தித்தது என் அதிருஷ்டம். எனக்கும் அதே விசாரம். அதுபற்றிய என் அறிவை விஸ்தரிக்க ஆசை. மனிதனின் நிலைமையை விளக்கும், கீதையைப் போல சுருக்கமான நூல் உனக்குத் தெரியுமா?”

“சந்தேகம் இல்லாமல் அது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘த லிமிட்ஸ் டு க்ரோத்’. என்னிடம் ஒரு பிரதி இருக்கிறது.”

மனு தன் அலைபேசியின் சேமிப்பில் இருந்த மின்வடிவத்தை நொடியில் கொண்டுவந்து அவரிடம் நீட்டினான்.

“இது தான் புத்தகமா?”

அவர் கண்டிராத இன்னொரு ஆச்சரியம்.

“விரலால் பக்கங்களைத் தள்ளிக்கொண்டே போகலாம்.”

“பதினைந்து நிமிடம் கொடு!”

“அது போதுமா?”

“ம்ம்..”

அவர் தரையில் அமர்ந்து வாசிக்க, மனு அம்புகளை எய்யத் தொடங்கினான். ஒரு சுற்று முடிந்து அவற்றைச் சேகரித்து வந்தான்.

“எப்படி?”

“குறிப்பிட்ட பரிமாணங்களுடன் கோள வடிவில் இந்த பூமி. அதில் முடிவற்ற பொருளாதார வளர்ச்சி சாத்தியம் இல்லை.”

“புத்தகத்தை இரண்டே வாக்கியங்களில் அடக்கிவிட்டீர்கள். பிரமாதம்!”

“வாசித்து முடித்ததும் இன்னொரு புத்தகத்தை இந்த மாயக்கண்ணாடி சிபாரிசு செய்தது.”

“அதற்கு உங்களிடமிருந்து பிரிய மனம் இல்லை” என்று அதை வாங்கிப்பார்த்தான்.

‘எ சான்ட் கௌன்ட்டி ஆல்மனாக்’ பை ஆல்டோ லியோபால்ட் .

“அவர் ஒரு இயற்கையாளர். 1948-இல் அவர் இயற்கை எய்திய பிறகு இப்புத்தகம் வெளிவந்தது. படிக்க வேண்டும் என்று அதை வாங்கிவைத்தேன். நேரம் கிடைக்கவில்லை. நீங்கள் படித்துச் சொல்லுங்களேன்!”

இன்னொரு சுற்று அம்புகள் இலக்கை நோக்கிப் பாய்ந்தன.

மனுவின் கவனம் விழுந்தபோது க்ருஷ்ணரின் பார்வை தொலைவில், நெற்றியில் சிந்தனைக் கோடுகள். அவர் முன்னால் வந்து கைகூப்பி அமர்ந்தான். அவன் மேல் அவர் பார்வை குவிந்தது.

“என் தேடலின் முடிவு தெரிகிறது.”

அவர் எண்ணங்களைச் சேகரிக்க அவன் காத்திருந்தான்.

“நூலின் இறுதியில் ‘த லான்ட் எதிக்’ என்ற கட்டுரை. எது நீதி எது நியாயம் என்கிற தர்க்கம். இன்னொரு முறை வாசித்தால் அதன் முழு தாத்பரியம் புரியும். இப்போதைக்கு ஒரு சுருக்கமான ஆழமான வாக்கியம். ஒரு முதிர்ச்சி அடைந்த உயிர்க்குழுமத்தின் அழகை, முழுமையை, ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் முயற்சி சரியானது, அப்படிச் செய்யாத செய்கை தவறானது.”

மனு அதன் அர்த்தத்தை யோசித்தான். க்ருஷ்ணர் தொடர்ந்தார்.

“இந்த பூமியில் எதுவும் மனிதனுக்கு சொந்தம் இல்லை. அவன் நிலத்தை, ஜீவன்களை, மற்ற மனிதர்களைத் தன் உடைமை ஆக்கி தன் ஆதாயத்துக்கு மாற்றி அமைத்தது தான் பிரச்சினைகளின் மூல காரணம்.”

“நீங்கள் சொல்வது சரியாகப்படுகிறது. அப்படிச் செய்வதற்குத் தூண்டுதல் பொருளாதார வளர்ச்சி. அதற்குக் கனிமங்களையும், எரிபொருட்களையும் அகழ்ந்தெடுப்பது அவசியம். அப்போது வெளிப்படும் நச்சுப்பொருட்கள் உயிர்க்கோளத்தில் கலப்பதைத் தவிர்க்க முடியாது.”

“அப்படியென்றால், ஆல்டோ லியோபால்ட் சொன்னதை இப்படி மாற்றலாம். இயந்திரப் பொருளாதாரத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கும் எந்தச் செயலும் அறநெறி. இயந்திரப் பொருளாதாரத்தை வளர்க்கும் காரியத்தைத் தெரிந்தே செய்வது அழிநெறி.”

மனு யோசிக்க, க்ருஷ்ணர் காத்திருந்தார்.

“எளிமையான அறிவுரை. ஆனால்…”

“ஆனால்…”

“எளிமையாக இருப்பதால் பல பிரச்சினைகள்.”

“தீர்க்க முடிகிறதா என்று பார்க்கலாம்.”

“பொருளாதார விரிவில் பலரின் அடிப்படைத் தேவைகளும் அடக்கம். அதன் சுருக்கம் அவர்களைத் தீவிரமாகப் பாதிக்கும்.”

“இது எப்படி? உயிர்களுக்கு ஊறு நேராமல் இயந்திரப் பொருளாதாரத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கும் எந்தச் செயலும் அறநெறி.”

“ம்ம். ஏற்றுக்கொள்கிறேன். அடுத்ததாக… செயல்கள் தான் நம் வசம், அவற்றின் முவுகள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்று நமக்குப் பலகாலம் முன் ஒருவர் மொழிந்திருக்கிறார். பொருளாதாரத்தின் முன்னேற்றத்தை ஒரு காரியம் தடுக்கும் தடுக்காது என்று எப்படி முன்கூட்டியே சொல்ல முடியும்?”

“உண்மை தான். ‘சூழ்நிலை, ஒருவரின் ஆளுமை, அவர் வசத்தில் இருக்கும் கருவிகள், அவற்றைப் பயன்படுத்தும் திறன், மற்றும் கந்தரகோளமான இயக்கங்கள் – இவற்றில் இருந்து ஒரு செயலின் விளைவுகளை ஊகிக்கலாம்’ என்று அவரே சொன்னதாக ஞாபகம்.”

“அப்படியே வைத்துக்கொண்டாலும் நிலத்தைப் பண்படுத்தி பயிர்விளைவித்து, மாடுகளை வளர்த்து பால் கறந்து, யாருடைய தயவும் இல்லாமல் சுதந்திரமாக வாழ்வது முன்னொரு காலத்தில் நடந்திருக்கும். ஆனால் இன்றைய சமுதாயத்தில் ஒருவருக்கு அவசியமான பொருட்களைப் பெற பணம் அவசியம். பணம் இல்லாமல் சுத்தமான குடிநீர் கூட இக்காலத்தில் கிடைக்காது. அது பொருளாதாரத்தை வளர்க்கும் வேலைகளில் தான் – அவற்றுக்கு அர்த்தமோ சந்தோஷமோ இல்லாவிட்டாலும் – சம்பாதிக்க முடியும்.”

நவீன உலகத்தின் நிலையைப் புரிந்துகொண்ட க்ருஷ்ணர்,

“சரி, இன்னொரு திருத்தம். உணவு ஒரு குறிப்பிட்ட அளவு ஒவ்வொருவருக்கும் அவசியம், ஒரு எல்லைக்கு மேல் வயிற்றில் திணிக்க முடியாது. அதனால் தான் அன்னதானம் மிக உயர்ந்த தர்மமாகக் கருதப்பட்டது. அதற்கு அடுத்ததாக ஆடை. அதையும் அடுக்கடுக்காக உடலில் சுற்றிக்கொள்ள முடியாது. இவ்விரண்டையும் வழங்கும் தொழில்களைச் செய்யலாம். மற்ற மனிதனின் ஆசைகளுக்கு எல்லை இல்லை. அவற்றின் அடிப்படையில் இயங்கும் பொருளாதாரம் தறிகெட்டுப் போகும்.”

மனு கண்களை மூடிக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தான். க்ருஷ்ணர் மெல்ல மறைந்தார்.

3

ஒற்றையடிப் பாதையில் சில காலமாக நடந்த மனு அதில் இருந்து விலகி அகலமான நெடுஞ்சாலையில் சொகுசான ஊர்தியில் பயணம்போக முடிவு செய்துவிட்டான். அந்த மனமாற்றத்துக்கு ஊர் மாறியது எவ்வளவு நல்ல காரியம் என்று சான் டியாகோ வந்த முதல் வாரமே தெரிந்தது. அது அனிகா அவனுக்குக் கொடுத்த அறிவுரை.

அனிகா மனநல சிகிச்சையகம். முகமன்கள் முடிந்ததும் மனு,

“வரவேற்புப் பகுதியில் காத்திருந்தபோது எனக்குக் கிழப்பருவம் வந்ததாக ஒரு பிரமை” என்றான்.

அன்று அவனுக்கு முன் அனிகா பார்த்த மனநலம் குன்றியவர்கள் எல்லாருமே பதின்பருவத்தை எட்டாதவர்கள்.

“மனு! உன்னை சந்திக்க நான் ஒப்புக்கொண்டதற்கு முக்கிய காரணம்… வாழ்க்கையில் ஒரு தடத்தில் இருந்து இன்னொரு தடம் மாறும்போது தடுமாற்றமும் தவிப்பும் ஏற்படுவது எல்லா வயதினருக்கும் பொது. உன் பிரச்சினை எனக்குப் புதிது என்பதால் தெரியாத ஒன்றை நான் கற்றுக்கொள்ளலாம் என்பது இன்னொரு காரணம்.”

“நீ பிரச்சினைகளைப் பல கோணங்களில் பார்க்கிறாய் என்று பலர் புகழ்ந்ததால் உன்னை சந்திக்க வந்தேன். எனக்கு மனநல பாதிப்பு என்று கூட சொல்வதற்கு இல்லை.”

“தலைவலி போல ஒரு ஆஸ்பிரின் மாத்திரையில் உன்னை சரியாக்கி விடலாம்” என்று புன்னகை மருந்தைக் கொடுத்தாள்.

அந்த நம்பிக்கையில் மனு,

“கடந்த இருபது ஆண்டுகளைப் போல அடுத்த இருபது ஆண்டுகள் இராது என்பது என் எண்ணம். நீ என்ன நினைக்கிறாய்?”

சிறு யோசனைக்குப் பின் அனிகா,

“சில மாதங்களுக்கு முன் இங்கே வந்த ஒரு பதினான்கு வயதுப் பெண்ணுக்கு இதே மாதிரி ஒரு கேள்வி: இவ்வுலகம் இன்னும் இருபது ஆண்டுகள் இருக்குமா?”

“அவளால் இருபது ஆண்டுகள் பின்னோக்கிப் போக முடியாது என்பதால் அக்கேள்வி.”

“இறந்த காலம் போல எதிர்காலம் பொதுவாக இருப்பதில்லை. அதிலும் கால மாற்றத்தின் வேகம் அதிகரித்து வருகிறது. அண்மையில் பிரவாகமாக ஓடிய நதிகள் தற்போது சின்னஞ்சிறு நீரோடைகள்.”

“உன் பதில் எனக்குப் பிடித்து இருக்கிறது.”

“முதலில் உன்னைப் பற்றிய விவரங்கள்…”

“கான்செர்வேஷன் பயாலஜியில் பிஎச்.டி.”

“எங்கே?”

“சுனி (ஸ்டேட் யுனிவெர்சிடி ஆஃப் நியு யார்க்) காலேஜ் ஆஃப் என்விரன்மென்ட்ல் சயன்ஸ் அன்ட் ஃபாரஸ்ட்ரி.”

“அத்துறையில் அதற்கு மிக நல்ல பெயர்.”

“நான் செய்ததும் நல்ல தரமான ஆராய்ச்சி. அத்துடன் எழுத்துவன்மையை வளர்க்க வகுப்புகள் எடுத்தேன். அங்கே போவதற்கு முன்பே இயந்திரப் பொருளாதாரத்தின் மேல் கட்டிய மேற்கத்திய நாகரிகம் பலகாலம் தொடர முடியாது என்று எனக்குத் தெரியும். உயிர்க்கோளத்தில் பலகாலமாக நடந்துவரும் கார்பன், நைட்ரஜன் மற்றும் நீர் சுழற்சிகளின் பல இழைகளை சௌகரியத்துக்காக நாம் வெட்டிக்கொண்டு வருகிறோம். அதனால், அவை திசை திரும்பி வேண்டாத இடத்தில் சேருகின்றன. கார்பன் காற்றிலும் நைட்ரஜன் கடல்நீரிலும்.”

“அதில் எந்த சந்தேகமும் இல்லை.”

“ஆரம்பத்தில் இன்னும் இருநூறு ஆண்டுகளுக்கு இந்த நிலையற்ற நாகரிகம் ஓடும் என்று தோன்றியது.”

“அதன் முடிவை நாம் காண மாட்டோம்.”

“பிறகு, அது ஐம்பதாகக் குறைந்தது. அதைப் பார்ப்பதற்கு முன்பே என் முடிவு நேர்ந்தால் சந்தோஷம் என்று நினைத்தேன். பட்டம் வாங்கியபோது அது இன்னும் குறைந்து…”

“இப்போது இருபதில் நிற்கிறது.”

“அதற்கு நான் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். ‘ரெசிலியன்ஸ்’ வலைத்தளம் போனது உண்டா?”

“கேள்விப்பட்டு இருக்கிறேன். நான் பார்ப்பது ‘யேல் க்ளைமேட் கனெக்ஷன்’.”

“அதில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் அதிகம் வராது. ‘ரெசிலியன்ஸ்’ வித்தியாசம். அடுத்த பத்து இருபது ஆண்டுகளைப் பற்றித் தீவிரமாக சிந்திக்கும் பலரை அங்கே சந்திக்கலாம். அறுபது வயதைத் தாண்டிய சிலர் வீட்டைச் சுற்றிய நிலத்தில் சொந்தமாகப் பயிர்வளர்த்து வாழ்கிறார்கள். அப்படிச் செய்ய என்னிடம் பணம் இல்லை. நம்மை எதிர்நோக்கிய பிரச்சினைகளின் ஆழம், நாம் செய்யக் கூடியது என்ன என்று பலர் எழுதுகிறார்கள். ரிச்சர்ட் ஹைன்பெர்க், பால் கிங்க்ஸ்நார்த் போன்ற ஒருசிலருக்கு நிலையான வருமானம். அவர்களைப் போல நானும் எழுத்தைத் தொழிலாகச் செய்ய ஆரம்பித்தேன். என் கட்டுரைகளுக்கு ஒரு பொதுவான இழை…” என்று நிறுத்தினான். “காய்யானிசக் கொள்கை அறிவுபூர்வமானது என நினைக்கிறேன். நீ?”

“உயிரினங்கள் தங்களுக்குள் விவரங்களைப் பரிமாறி கூட்டாகச் செயல்படுகின்றன என்பதில் எனக்கு ஓரளவு நம்பிக்கை உண்டு.”

“காய்யானிசம் நோக்கில் அமைந்த கட்டுரைகளை ‘பூமாதேவி.காம்’ என்ற தளத்தில் வாரம் ஒன்றாக வெளியிட ஆரம்பித்தேன்.

“நீ அனுப்பிய ‘க்ருஷ்ணரின் பூலோக விஜயம்’ புதிய கருத்தை முன்வைக்கும் புதுமையான கற்பனை. உன் வில் வித்தையை வியக்கிறேன்.”

“தாங்க்ஸ். ‘தேவை ஒரு புது மதம்’ என்ற தலைப்பில் பலர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பில் இருந்து எடுத்தது.”

“ஒவ்வொரு வாரமும் ‘பூமாதேவி’யில் எழுதுவதற்கு புதிதாக ஒன்றை யோசிக்க வேண்டுமே.”

“அரசியல்வாதிகளும் பொருளாதார நிபுணர்களும் இருக்கும்போது விஷயத்துக்கு என்ன பஞ்சம்? நான்கு டாலர் ஸ்டார்பக்ஸ் காப்பியை நாற்பது சென்ட்டில் தயாரிக்கும் ரகசியம். ‘டோன்’ட் லுக் அப்’ போன்ற படங்களின் விமரிசனம். ‘த மஷ்ரூம் அட் த என்ட் ஆஃப் த வேர்ல்ட்’ போல சிந்தனையைத் தூண்டும் புத்தகங்களின் விவரங்கள். இப்படி. சில சமயங்களில் மற்றவர்களின் கட்டுரைகளும் அதில் இடம் பெறும். அவற்றில் ஒருசிலவற்றை ‘ரெசிலியன்ஸ்’ எடுத்துக்கொள்ளும். சன்மானம் அதிகம் இல்லை என்றாலும் அங்கிருந்து ஒரு சிலர் ‘பூமாதேவி’யைத் தேடி வருவார்கள். அவர்களின் காணிக்கை. என் இரண்டு புத்தகங்களின் புகழ்ச்சிகளைப் பார்த்து அவற்றை வாங்கும்போது ஒரு சிறு தொகை. எல்லாம் சேர்ந்து வங்கியில் சேமிப்புக் கணக்கு பத்தில் இருந்து இருபது ஆயிரத்துக்குள் ஊசலாடும்.”

“அதில் நீ வாழ முடிந்தது.”

“ஒரு பெரிய வீட்டில் தனியறை. பொதுவான சமையல் குளியல் அறைகள்.”

“எங்கே?”

“க்ரீன்ஹில்ஸில்.”

“சொந்த ஊர்தி?”

“கிடையாது. நான் போகும் எல்லா கடைகளும் நடக்கும் தூரத்தில்.”

“இப்படி வாழ்வதில் உனக்கு மகிழ்ச்சி கிடைத்திருக்க வேண்டும்.”

“எதிர்காலத்தில் இந்தவிதமான கூட்டு வாழ்க்கை தான் எல்லாருக்கும், நான் இப்போதே அதற்குத் தயார் செய்கிறேன் என்கிற கர்வம். என்னுடன் வசிக்கும் பலருக்கு தேவைப்படும்போது உதவி செய்ததில் வந்த திருப்தி. நண்பர்கள் தங்கள் தொழில் வாழ்க்கை, குழந்தைகளின் படிப்பு, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஓய்வுக்காலம் பற்றிப் பேசும்போது, ‘அட முட்டாள்களா! இன்னும் சில ஆண்டுகளில் உங்களுக்கு நிறைய ஏமாற்றம் காத்திருக்கிறது’ என்ற எக்களிப்பில் சிரிப்பு.”

“இப்படி சில காலம்.”

”கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள்.”

அறிமுகம் முடிந்து அடுத்த கட்டம். மனுவின் குரலில் ஒரு மெலிவு.

“சமீபத்தில் – கோவிட் காரணமாக இருக்கலாம் – என் கையிருப்பு மூவாயிரத்துக்கு இறங்கிவிட்டது. அது என் இரண்டு மாதச் செலவு. என்னை அச்சம் பற்றிக்கொண்டது. யாரிடமாவது கையேந்த வேண்டுமோ?”

“எனக்குத் தெரிந்த ஒருசில தனிப்பட்ட எழுத்தாளர்கள் ‘மீடியம்’, ‘சப்ஸ்டாக்’ இவற்றில் தங்கள் படைப்புகளை வெளியிட்டுப் பணம் சம்பாதிக்கிறார்கள்.”

“அதையும் யோசித்துப் பார்த்தேன். என் எழுத்துக்கு இவ்வளவு என்று மதிப்புப் போட வேண்டும். சந்தா கட்டுகிறவர்கள் மட்டும் என் தளத்தில் நுழையலாம் என்று வேலி போடுவது பிடிக்கவில்லை.”

“சில மாதங்களாக ஒரு பதின்பருவ இளைஞன் என் கண்காணிப்பில். அவனுக்காக ‘த மினிஸ்ட்ரி ஃபார் த ஃப்யுச்சர்’ வாசித்தேன். நீ அம்மாதிரி புனைவுகள் எழுதலாமே.”

“முதல் முயற்சிக்கு ஒரு வருஷம் ஆகும். அதைப் பிரபலப்படுத்த இன்னும் சில மாதங்கள்.”

அப்போது அவனுடைய செலவுகளை யாராவது ஏற்க வேண்டும். அப்படி யாரும் இருப்பதாக மனு சொல்லவில்லை.

“வேறு வழி தெரியாமல் ‘லிங்க்ட்-இன்’னில் முதன்முறையாக தயக்கத்துடன் என்னைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்தேன். ‘மொழிவன்மை, சுற்றுச்சூழலைப் பற்றிய ஆழ்ந்த அறிவு, ட்ரூத்-இன், ஓரியன் இங்கெல்லாம் வெளிவந்த என் எழுத்துக்கள்.’ உடனே ‘ஜிஎம்பிகே’யில் இருந்து வந்த அழைப்பு. அவர்களுக்குத் தேவை நிகழ்காலப் பிரச்சினைகளில் ஆரம்பித்து பிரகாசமான எதிர்காலத்தில் முடியும் கட்டுரைகள்.”

“அதாவது, பூமி சூடாகிறது என்பது உண்மை. ஆனால், கவலை வேண்டாம்! சூரியன் மற்றும் கதிரியக்கம் நமக்கு வேண்டிய மின்சாரம் கொடுக்கும்.”

“அது, அத்துடன் இன்னொரு முக்கியமான காரணம். நீ பொருளாதார செய்திகள் வாசிப்பது உண்டா?”

“அரசியலைப் போல தலைப்புச் செய்திகள் மட்டும்.”

“ஒரு வாரம் முன்னால், சத்யா நடெல்லா தன்னுடைய ஒரு மில்லியன் மைக்ரோசாஃப்ட் பங்குகளை இரண்டே நாளில் விற்றுவிட்டார்.”

“அப்படியென்றால்… பங்குச்சந்தை இறங்கலாம் என எதிர்பார்க்கிறார்.”

“அப்படி நடக்காமல் இருக்க மக்களுக்கு நம்பிக்கை தருவது என் பொறுப்பு. அவர்கள் தொடர்ந்து வால் ஸ்ட்ரீட்டில் பணத்தை முடக்கினால் தான் நிதி உலகம்.”

“‘சிஎன்பிஸி’ போன்ற செய்தி சான்னல்களில்’ அறிமுகத்தின்போது ‘முன்னாள் க்ளோபல் வார்மிங் ஆதரவாளர் மனு சுப்ரமனியன் ‘ என்று குறிப்பிட்டு உன் வார்த்தைக்கு மதிப்பை ஏற்றுவார்கள். எப்போதுமே ஒழுக்கமாக வாழ்கிறவர்களை விட பாவம் செய்து திருந்துகிறவர்களுக்குத் தான் பெருமை.”

“கரெக்ட்.”

மனுவின் அலைபேசி இசைக்க அவன் அதை எடுத்துப் பார்த்தான்.

“அனிகா! ஒரு நிமிடம்” என்று எழுந்து அறையின் எதிர் மூலைக்குப் போனான்.

ஒன்று ஐந்தாக நீடித்தது. அந்நேரத்தில் அனிகா ‘பூமாதேவி’யின் உலகில் நுழைந்தாள். கடைசியாக ‘க்ருஷ்ணரின் பூலோக விஜயம்’ ஒரு மாதத்திற்கு முன்பு பதிவேறியது.

இணையப்பக்கத்தின் வலப்புறத்தில் வாசகர்களைக் கவர்ந்த ஐந்து கட்டுரைகள். ஒவ்வொன்றாகப் பிரித்து மேலோட்டமாகப் படித்தாள்.

‘மேஸா வெர்டே’யில் ஒருநாள்.

கமிலா க்ரூஸின் ஏழாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எல்லாருக்கும் ஒரு பங்கு. கமிலாவின் தாய் கேக் செய்தாள். நான் ஊர்தி இல்லாத கமிலாவின் நண்பர்களை க்ரூஸின் மினிவேனில் பூங்காவுக்கு அழைத்து வந்தேன். எண்பத்திநான்கு வயதான க்ளியானோவிச்…

காய்யாவை பூஜிக்க காயத்ரி மந்திரம்.

காய்யாவும் காயத்ரியும் ஒரேபோல ஒலிக்கின்றன. உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமான சூரியக்கடவுள் எல்லாருக்கும் பொது. பொருட்செல்வம் எதுவும் கேட்கவில்லை. அறிவைப் பிராகசப்படுத்த வேண்டுகிறோம். அது நம்மைச் சுற்றிய உலகைப் புரிந்துகொள்ள உதவும் என்கிற ஆசையில்.

காய்யானிசம் – தத்துவக் கோட்பாடா இல்லை சமய நம்பிக்கையா?

இரண்டும். மனிதனுக்கும் பிற உயிரினங்களுக்கும் வளர்சிதை வேதியியல் மாற்றங்கள் பொது என்பதால் நாம் இயற்கையின் ஒரு அங்கம். இது அறிவியல் தத்துவம். ஆகாயத்திலும் பூமியிலும் நிறைந்து நிற்கும் பெண்தெய்வத்தை வணங்குவதிலும், அவள் இயற்றிய விதிகளைப் பின்பற்றுவதிலும் காய்யானிசம் ஒரு மதம்.

நேர்வழியில் பில்லியனர் ஆக முடியுமா?

முடியாது. யூ.எஸ்.ஸில் பிட்காய்ன் காசுகளை வாங்கி அன்றே அவற்றை ஜப்பானில் விற்று பணம் பண்ணுவதற்கும் கொள்ளை அடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?

சர்க்கரை தவிர்த்த வாழ்க்கை.

ராஜ் படேல் மற்றும் ஜேசன் மோர் எழுதிய ‘எ ஹிஸ்டரி ஆஃப் த வேர்ல்ட் இன் செவன் சீப் திங்க்ஸ்’ என்ற புத்தகத்தில் இருந்து தெரிந்துகொண்ட விவரம்: சர்க்கரையில் காலனி ஆதிக்கம், காடுகளின் அழிவு, அடிமைத்தனம், சக்தி விரயம் என்று பல சமுதாயத்தீமைகள் விரவி இருக்கின்றன. அதுவும் சத்து இல்லாத ஒரு உணவுக்கு. மனிதனுக்குப் பலவிதமான நோய்களைத் தரும் ஒரு மிதமான போதைப்பொருளுக்கு. அது இல்லாமல் ஒரு மாதம் வாழ்ந்துபார்த்தேன்…

அடுத்த பகுதி

தொடரும்…

One Reply to “பணம் பணம்…”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.