நாடு கடத்தப்பட்ட லூலூ

தமிழாக்கம் : மைத்ரேயன்

டங்கன் ஷூ தோற்றுப் போனவன். வெற்றி பெற்றவனான அவனுடைய சகோதரன் ஆர்னி ஷூவுக்கு சொந்தமாக ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் இருந்தது. அதற்கு இப்போது ஒரு அமெரிக்க அலுவலகமும், ஹாங்காங் அலுவலகமும் இருந்தன. ஆனால் தொழிற்சாலை ஷான்ஹாயிலும், இன்னொரு தொழிற்சாலை இத்தாலியிலும் இருந்தன, நாற்பது அதிர்ஷ்டசாலியான ஊழியரும் இருந்தனர். அவர்கள் எல்லாரும் வாழ்க்கையைப் பற்றி நல்ல மனோபாவம் கொண்டிருந்ததன் பலனாக, விமான நிறுவனங்கள் அடிக்கடி விமானப் பயணம் செல்வோருக்கு வழங்கும் சன்மானமான மைல்களில் ஏராளமானவற்றை தங்கள் வரவுக்கணக்கில் சேர்த்திருந்தனர். எல்லாரிலும் சிறப்பான மனோபாவம் தன்னுடையதென்று மெச்சிக் கொண்ட ஆர்னி, இத்தாலிய சூட்களை அணிந்தார், அவை வைடமின்களை நிறையக் கொண்ட கத்தரிக்காய் மற்றும் கேல் கீரை போன்ற காய்கறிகளின் நிறங்களில் இருந்தன. இவற்றோடு அவர் முகத்தைப் பக்கவாட்டில் சுற்றி மூடும் கருப்புக் கண்ணாடியை அணிந்திருந்தார், அவர் ஹாங்காங்கில் தன் இளமை பொங்கும் பெண் தோழி லூலுவோடு கடைகளில் பொருள் வாங்கி வரச் சுற்றி வரும்போது, தன் காரை உள்ளும் புறமும் கழுவிச் சுத்தம் செய்யக் கொடுத்தார். லூலுவின் மனோபாவம் நல்லபடியாக இருக்கத் தேவை இருக்கவில்லை, அவர் வயதில் பாதிக்கும் குறைவான வயதில் அவள் இருந்தாள், மேலும் அவளது கருத்துகள் எல்லாம் கோணலாக இருந்தாலும் வேடிக்கையானவையாக இருந்தன. உதாரணமாக, அமெரிக்காவில் அங்காடிக் கொட்டாரங்கள் எல்லாம் எத்தனை வளர்ச்சி குன்றிப் பின் தங்கியவையாக இருந்தன என்பதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பூங்காக்கள், புல்வெளிகளையே அதிகம் விரும்புபவர்களாக இருப்பதால், அமெரிக்கர்கள் பொருட்களை வாங்குவதில் தீவிர முனைப்பில்லாதவர்கள் என்று அவள் நம்பினாள்.

“மரங்கள் எதற்காக என்று எனக்கு விளக்குங்களேன்,” டங்கனிடம் ஒரு தடவை அவள் சொன்னாள், அப்போது ஆர்னிக்கு அவள் வாங்கிய ஒரு கழுத்துப் பட்டியை அவரிடம் காட்டிக் கொண்டிருந்தாள், ஆனால் ஆர்னி அதே பட்டியை ஏற்கனவே வைத்திருந்தார். “அமெரிக்காவுல மக்கள் கொசுக்கள் இருக்கிற வனங்களில் நடக்கிறத விரும்பறாங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா அவங்க ஏன் அப்படிப்பட்டத விரும்பறாங்க? நீங்க எனக்கு அதை விளக்க முடியுமா, என்ன சொல்றீங்க?” தன் கன்னக் குழிவுகளை அழகாகக் காட்டியபடி கேட்டவளுடைய குரல் நைச்சியம் செய்ய முயல்வதாக இருந்தது. “நான் உங்களுக்கு இந்த அருமையான கழுத்து டையை அன்பளிப்பாக் கொடுப்பேன்.”

லூலு அளவுக்கு ஹாங்காங்கை நேசித்தவர்கள் யாருமில்லை. முதலாவதாக, உயரமாக வளர்ந்த மாநகராக ஹாங்காங் இருந்ததால், காரோட்டி ஊழியர்கள் செலுத்தும் கார்களிலும், மின் தூக்கிகளிலும் சுலபமாக நகர் உலா போய்வர முடிந்தது, அதே நேரம் குதிகால் உயர்ந்த காலணிகளுக்கும் அந்நகரம் கச்சிதமாகப் பொருந்தியது. மேலும், அந்த நகரில் பெண்கள் பெண்களாக இருந்தார்கள், லூலு அங்கே எலுமிச்சைப் பச்சை நிறத்தில் தோளில் பட்டிகள் இல்லாத உடலொட்டிய தன் மேல்சட்டையை, செந்நிற மாஒ மேல் அங்கியோடு அணிந்து கொண்டு உலா வரும்போது, வடிவில்லாத கோணி போல உடுப்பும், ஹவாய் சப்பலும் அணிந்து போகும் அமெரிக்க உல்லாசப் பயணிப் பெண்களைப் பார்த்து நகைக்க முடிந்தது.

இப்போதோ, வரலாற்றுப் போக்கின் வினோதத்தால், அவள் எதிர்காலம் இங்கே (அமெரிக்காவில்) இருக்கிறது: இயற்கை நூலாடைகளுக்குப் புகலிடமான நாட்டில் அகதியாக இருக்க வேண்டி வந்திருக்கிறது. சீனாவிடம் திருப்பிக் கொடுக்கப்பட்ட பின் ஹாங்காங் நல்லபடியாகத்தான் இருக்கும் என்று சில ஜனங்கள் நம்பினார்கள், ஆனால் ஷுஷுகுடும்பத்தினர் அப்படி நினைக்கவில்லை. நீங்க பார்த்துகிட்டே இருங்க, நாம எல்லாரும் அருமையான அமெரிக்கப் புறநகர் ஒன்றில் போய் நிற்கப் போகிறோம், என்று அவர்கள் கணித்தார்கள் – லூலுவையும் அந்த ‘நாம எல்லாரும்’ என்பதில் சேர்த்துத்தான் சொன்னார்கள், அதெப்படி இருந்தாலும் ஆர்னி மற்றும் டங்கனின் அம்மாவுக்கு என்னவோ, லூலு நல்ல மனைவியாக அமைவாளா என்பதில் ஐயம் இருந்தது.

“அவளுக்குத் தெரிஞ்சதெல்லாம், எப்படிப் பணத்தைச் செலவழிக்கிறதுங்கறது ஒண்ணுதான்,” டங்கனிடம் குறை சொன்னாள் மார்ஜ், அவள் நேரடியாக அவனிடம் பேசவில்லை என்பதை விட்டு விடலாம். சமீபத்தில் அவள் அனைத்து விதமான கற்கும் திறன் குறைபாடுகளைப் பற்றி இப்போது பொதுவில் தெரிகிறவற்றை எல்லாம் சொல்லும் கட்டுரைகளை வெட்டி எடுத்து அவற்றை அவனுக்கு அனுப்பிக் கொண்டிருந்தாள், அவற்றில் ஏதாவது ஒன்று எதையோ அவனுக்கு விளக்கி விடும் என்பதைப் போல இருந்தது அது. “குழந்தைகளுக்கு என்ன செய்வது என்று அவர்களுக்குச் சொல்லக் கூடிய, நிஜமான ஒரு அம்மா தேவை. எது சரியான மனோபாவம், எது தவறானது, யார் அவங்க நண்பர்களா இருக்கணும் இப்படி. இல்லைன்னா என்ன ஆகும்? இல்லாட்டி யாரும் யூனிவர்ஸிடில மேல்படிப்புக்குப் போக மாட்டாங்க, அவ்வளோதான்.”

“இல்லாட்டி, எல்லாக் குழந்தைங்களும் என்னை மாதிரி ஆயிடுவாங்க.”
“ரொம்ப சரி.”

“அது எத்தனை மோசம்னா, அம்மாக்களால ராத்திரி தூங்க முடியாது, இது அவங்க செஞ்ச தப்புங்கற நினைப்பால.”
“அதென்ன சொல்ற நீ, என் தப்புன்னு?” மார்ஜ் சொன்னார். “நா எது சொன்னாலும் நீ கேட்கறதில்லை. உனக்கு எல்லாம் ஏற்கனவே தெரியும்னு நீ நெனக்கிற. அதான் உன்னோட மொத்தப் பிரச்சினையே. நீ முட்டாளா இருக்கேன்னு நா சொன்னா, அதை நீ கேட்கிறியா என்ன? இல்லையே. அதுக்குப் பதிலா நீ என்ன சொல்றே, “நான் அத்தனை முட்டாள்னா, எப்படி…இதைப்பண்ணினேன், அதைப் பண்ணினேன்னு ஆரம்பிச்சுடுவே.”

“ஆனாப் பாருங்கம்மா, அது உண்மைதானே. நான் அத்தனை முட்டாளுன்னா…” டங்கன் தன் அம்மாவுக்கு நினைவூட்ட முயன்றான், தனக்குப் பெண்டாட்டி, பிள்ளைகள் இருக்கிறார்கள், டீ விற்கிற ஒரு கடை இருக்கிறது, அது ஆர்னியின் கம்பெனியைப் போலப் பெரிய நிறுவனமாய் இல்லாமல் இருக்கலாம், ஆனால் போட்ட முதலுக்கு நஷ்டமில்லாமல் ஓடிக் கொண்டுதானிருக்கிறது, இத்தியாதி.

ஆனால் மார்ஜ் கொஞ்சமும் கேட்பாளில்லை.

“எது உண்மைங்கறதை மறந்துடு! அதுலதான் உன்னோட முழுத் தொல்லையுமே, எது உண்மைன்னு எனக்கு நீ சொல்லணுங்கிறே. ஏதோ நீதான் அம்மாங்கற மாதிரி! அதனாலெதான் நான் உங்கிட்டே இப்பல்லாம் பேசறதே இல்லை, ஏன்னா நான் தான் இங்கே அம்மா. எது உண்மைன்னு இங்க சொல்றவ நான் தான், இதைக் கேட்டியா நீ?”

“லேசா,” என்றான் அவன்.

அவன் அம்மா அவனோடு பேசுவதை நிறுத்தியது இதனாலோ அல்லது இதனால் இல்லையோ, ஆனால் இப்படித்தான் அவள் லூலுவிடம் தன் திட்டத்தை முன் நகர்த்தும்போது அது முழுவதும் அவளுடைய முடிவாக இருந்தது. ஆர்னி இதை நம்பவில்லை, ஆனால் இதுதான் உண்மையாக இருந்தது. நகரிலேயே மிக்க ஆடம்பரமான கடையைக் கூப்பிட்டு, சிவப்பு நிறப் பட்டுத் துணியில் நீண்ட மேலங்கி ஒன்றையும், அதே சிவப்பு நிறப் பட்டுத் துணியில் ஒரு ஜம்ப்-ஸூட்டையும், ஊடாகப் பார்க்கக் கூடியதான சிவப்பு மோட்டர்சைக்கிள் ஜாக்கெட்டையும் தருவித்தாள்- எல்லாவற்றுக்கும் அளவு எண் இரண்டு.
“போட்டுப் பாரு, போட்டுப் பாரு!” லூலூ அந்தப் பெட்டிகளைத் திறக்கும்போது மார்ஜ் ஊக்குவித்தார். “ஜம்ப்ஸூட்டோட மேலங்கியை இல்லன்னா ஜாக்கெட்டைப் போட்டுக்கலாம்! எந்த வழியும் சரி!”

லூலு தயங்கினாள். “ஆனா என்னோட அளவு ஆறு.”

”இல்லை, இல்லெல்ல,” என்றார் மார்ஜ். “உன்னோட மனசுலதான் நீ சைஸ்ல ஆறு. நான் சொல்றதுதான் சரி. உன் சைஸ் ரெண்டுதான். சைஸ் ஆறுங்கறதெல்லாம் குதிரைக்குத்தான் இருக்கும்.”

“நான் ஒண்ணும் குதிரை இல்லை!” என்று ஓலமிட்டாள் லூலு.

“நிச்சயமா இல்லைதான்,” என்றார் மார்ஜ். “நீ சைஸ் ரெண்டு.”

அத்துடன், லூலுவைத் தன்னோடு மதிய உணவுக்கு வரும்படி சொல்லி மசிய வைத்திருந்தார் மார்ஜ். “ஆர்னி சொல்றான் உனக்கு சாக்லேட் மூஸ் பிடிக்குமாமே,” என்றார் அவர். லூலு அதற்குப் பதிலாக, “இல்லை, இல்லை, இல்லை, இல்லை,” என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே மார்ஜ் அதைத் தருவிக்கக் கட்டளை பிறப்பித்து விட்டார்.

“ரொம்ப மரியாதை எல்லாம் பார்க்காதே,” என்றார் அவர். “ஒரு வாய் கூடச் சாப்பிடல்லை நீ.” மேலும், “உனக்குப் பிடிக்கல்லியா? நான் வேறெதாவது வரவழைக்கட்டுமா?”

“வேண்டாம், வேண்டாம், வேண்டாம்!”

ஆனால் நீள வாக்கில் வெட்டப்பட்ட ஒரு வாழைப்பழத்தில் வைக்கப்பட்ட ஐஸ்க்ரீம்i வந்தது, பிறகு ஸ்ட்ராபெர்ரி வைத்த ஷார்ட்கேக், அதற்குப் பிறகு இன்னொரு ஐஸ்க்ரீம் வகையான ‘பேக்ட் அலாஸ்கா’ என்பது வந்தது.

“நான் உங்களை நேசிக்கிறேன்,” அன்றிரவு லூலு ஆர்னியிடம் சொன்னாள். “நீங்க பெரிசா வெற்றி பெற்றவர்தான். ஆனா நம்மோட எதிர்காலம் பற்றி எனக்கு சந்தேகமா இருக்கு.”

“ஓ, லூலு,” என்றார் ஆர்னி, கண்களில் ஈரம் படர்ந்திருந்தது. “சந்தேகப்பட எதுவுமே இல்லை. நான் சரியான நேரம் பார்த்துக் கேட்கலாம்னுதான் இருந்தேன்.”

“அதைப் பத்தி இல்லை,”

“அதோட மோதிரம் வேணுமே. நீயே சொன்னே இல்லியா, என்ன மாதிரி அதைச் செதுக்கி இருக்கணும்னு உனக்குத் தெரியல்லேன்னு சொல்லலை?”

“உங்க அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம் அன்னிக்கி, அதனாலெ என்னை ஒவ்வொரு வாரமும் கடை கண்ணிக்கு அழைச்சிட்டுப் போகணுங்கிறார்.”

ஆர்னி பாதியில் நிறுத்தி விட்டு, குழப்பமாகப் பார்த்தார்.

“அவர் என்ன சொல்றார் தெரியுமா, நம்ம கல்யாணம் ஆனப்பறம், என்னை தினம் கடைகளுக்கு அழைச்சிட்டுப் போகப் போறாராம்.”

“ஆனா என்ன லூலு,” ஒரு கணம் தயங்கி விட்டு ஆர்னி சொன்னார், “உனக்குக் கடைங்களுக்குப் போய்வர ரொம்பப் பிடிக்குமே.”

“கடைங்களுக்குப் போனப்பறம், லஞ்ச்,” என்றாள் லூலு. “நாம கல்யாணம் பண்ணிகிட்டா, அவர் என்னைத் தினம் லஞ்சுக்கு அழைச்சிட்டுப் போவாராம்.”

“அப்படி என்ன பெரிசா கேட்டிருக்கார்? என் அம்மாவோட லஞ்ச் சாப்பிட முடியாதா? எனக்காக? நமக்காக? நாம் காதலிக்கிறோம்னு நினைச்சேனே நான்.”

“காதலிச்சோம்,” என்றாள் லூலு. அதற்குப் பிறகு அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை, விம்மல் அவளை மூழ்கடித்தது, அவள் ஆர்னியின் கழுத்து டையை சரி செய்து விட்டாள், கடைசி முறை ஒரு தடவையாக.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.