தேவியின் வாளும், தேவ தண்டமும்

அரவிந்தன் நீலகண்டனின் ‘ஹிந்துத்துவா’ நூல் வெளியீட்டு விழா பற்றி

“Hindutva: Origin, Evolution and Future” என்ற தலைப்பில் திரு.அரவிந்தன் நீலகண்டன் எழுதிய புத்தகம் பாஜக தமிழ்மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை,பாஜக தேசிய இளைஞரணி தலைவர் திரு.தேஜஸ்வி சூர்யா MP மற்றும் ஜே.என்.யூ பேராசிரியர் மகரந்த் பரஞ்சபே,பாஜக தேசிய இளைஞரணி துணைத் தலைவர் அபிநவ் பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் இந்திய அரசியலமைப்பு கழகக் கூடத்தில் வெளியிடப்பட்டது..

அதைத்தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலே சிறப்பான விவாதங்கள் அங்கே நிகழ்ந்தது.அந்த விவாதத்தில் முக்கியமான கலந்துரையாடல்களை ஒவ்வொருவர் பேசியதிலும் இருந்து தெறித்த முத்துக்களை இந்த கட்டுரையில் கொடுத்துள்ளேன்..

————–

தமிழகத்தில் கட்டமைக்கப்பட்ட போலி சமூகநீதி,இந்து வெறுப்பு பிரச்சாரம்,திராவிட மாடல் ஆட்சியின் கோவிலுக்கு எதிரான செயல்பாடுகள் என எல்லாவற்றை பற்றியும் பேசினார் திரு.அண்ணாமலை.

இது ஒரு அரசியல் கூட்டம் இல்லை என்றாலும்,இந்த பண்பாட்டிற்கு எதிராக உந்தப்பட்ட அரசியல் சித்தாந்தத்தின் ஆட்சி எப்படிப்பட்டது என விளக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது தெரிந்தது.

“தமிழகத்தில் திமுக சார்ப்பான கட்சிகள் எல்லாமே எதற்கெடுத்தாலும் ‘சநாதன தர்மத்தை’ பழிப்பதையே நோக்கமாக வைத்துள்ளார்கள்.சநாதன தர்மம் என்பது ஆரிய வாதம்,மேல்ஜாதி ஆட்சி என்றெல்லாம் தங்களுடைய அபத்தமான திரிபுவாதத்தை பரப்புகிறார்கள்.ஆனால் உண்மை என்ன? சநாதன தர்மம் என்பது இயற்கையோடு இணைந்த வாழ்வு முறை.

நான் சபரிமலைக்கு மாலை போட்டுள்ளேன்,அதற்காக விரதம் இருக்கிறேன்.என்னைப் பொறுத்தவரை இந்த மண்ணுக்காக இணக்கமாக என்னை இந்த வழிபாடு மாற்றுகிறது.இந்த விரதமுறையே நான் இயற்கையுடன் இணைந்த வாழ்வுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்கிற உந்துதலை தருகிறது.இதுதான் சநாதன தர்மம்” என்று பேசினார் அண்ணாமலை..

திமுக அரசு இந்து அறநிலையத்துறை வழியாக பழம்பெருமை மிக்க கோவில்களின் நகைகளை உருக்க தீட்டிய திட்டம் குறித்து கொதித்தெழுந்தார் திரு.அண்ணாமலை.விரைவாக பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்,அப்போது உறுதியாக சொல்கிறேன் இந்த வடிவத்தில் இருக்கும் இந்து அறநிலையத்துறை முற்று முழுதாக கலைக்கப்படும் என்று உறுதி கூறினார்.

இது போல பல தவறுகளை திமுக கடந்த 16 மாதங்களில் செய்வதாகக் கூறிய அண்ணாமலையை இடைமறித்த தேஜஸ்வி சூர்யா,”சிசுபாலனின் நூறு தவறுகள் அனுமதிக்கப்பட வேண்டியது” என்று சொன்னவுடன் அதை சிரித்தபடியே ஆமோதித்தார் அண்ணாமலை..

அடுத்து தமிழகத்தில் தேசியத்திற்கு எதிரான அரசியல் நடப்பதை பற்றிய கேள்விக்கு தெளிவான தன் பதிலை கொடுத்தார் அண்ணாமலை..

“தமிழகம் என்றும் தேசியப்பாதையை விட்டு விலகியது இல்லை.உலகத்திற்கு எப்படி பாரதம் விஸ்வ குருவோ அது போலதான் பாரதத்திற்கு தமிழகம்.இதை நான் வெறும் அரசியலுக்காக சொல்லவில்லை.இங்கிருந்து உருவான பக்தி இயக்கம் இந்தியா முழுமைக்குமான ஆன்மீக மீட்சியை கொடுத்தது.மாபெரும் தத்துவங்களை இந்தியா முழுமைக்கும் முன் வைத்தவர்கள் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள்.

இப்போது கூட உதாரணமாக ZOHO நிறுவனர் திரு.ஸ்ரீதர் வேம்புவை குறிப்பிட விரும்புகிறேன்.பெருநகரங்களை நோக்கிச் செல்வதே வெற்றிக்கான திறவுகோல் என்கிற வணிகப்பார்வையை உடைத்து தென்காசி என்ற சிறுநகரத்தில் ஒரு கிராமத்தில் போய் அமர்ந்து பெருநிறுனத்தை நடத்துகிறார்.

அங்கே ஒரு பாரதிய வாழ்வை எளிமையான முறையில் மேற்கொள்கிறார்.ஒரு மாபெரும் மாற்றத்தை அந்தப்பகுதியில் உண்டு செய்கிறார்.இது உலகம் முழுமைக்குமே ஒரு பாடம்.தன்னுடைய வாழ்வையே ஒரு செய்தியாக மாற்றியுள்ளார்.இது போல எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன..”

அடுத்து இந்தியாவுக்கான தர்மப்பாதையை தேர்ந்தெடுப்பதில் தமிழகத்தை சேர்ந்த சைவ ஆதீனங்களின் பங்கு என்னவென்பதை திரு.அண்ணாமலை பேசினார்.

“1500 வருடங்கள் பழமையான ஆதீனங்கள் இங்கே உள்ளன.ஆங்கிலேயரிடம் பெறுகிற சுதந்திரத்தை எப்படி அங்கீகரிப்பது என்ற குழப்பம் 1947 ல் உருவாகிய போது,சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் நமது திருவாவடுதுறை ஆதீனத்தை அணுகினார்.

ஒரு செங்கோலை ( தர்ம தண்டம்) செய்து அதை மௌன்ட்பேட்டன் வழியாக பண்டிட் நேருவிடம் கொடுக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்து  அதை தயார் செய்து ஆதீனத்தம்பிரானை டெல்லி வர வைத்து அருள்நல்க வைத்தார்..

மாறாத நிலத்தை தர்மத்தை நிலைநாட்ட இதைவிட சிறந்த பணியை யாராலும் செய்ய முடியாது.இந்த நாடு தர்மத்திற்கு கட்டுப்பட்டது என்பதற்கு இதுவே சான்று.ஆனால் அந்த செங்கோல் இப்போது எங்கே உள்ளதென யாராலும் தேடிக் கண்டடைய முடியவில்லை.

என்னுடைய ஆசையெல்லாம் புதிய நாடாளுமன்றத்தை கட்டி முடித்து நடத்தப்படும் விழாவில்,தமிழகத்தில் உள்ள ஆதீனங்களை அழைத்து மீண்டும் அந்த செங்கோலை பிரதமரிடம் வழங்கப்பட வைக்க வேண்டும்.அது அங்கேயே காட்சிக்கு வைக்கப்பட வேண்டும்..” என்று பேசினார்..

பாரதத்தின் இந்த தர்மப்பாதை உலகத்திற்கே பயன்படும் புனிதப்பாதை என்று அண்ணாமலை பேசினார்.

“இன்று G20 க்கு இந்தியா தலைமை பொறுப்பேற்றுள்ளது.தர்மத்தை லட்சியமாகக் கொண்ட தேசமான நம்மால் மட்டுமே உலகத்தின் பிரச்சனைகளுக்கு உண்மையான தீர்வினை கொடுக்க முடியும்.இதை வருங்காலத்தில் பார்ப்போம்..

இன்று உலகம் முழுக்க ஹிந்து வெறுப்பு பேச்சு அதிகமாவதை பார்க்க முடிகிறது.ஹிந்துத்துவத்திற்கு எதிராக செயல்படும் லாபிக்களை பார்க்கிறோம்.இதற்கு காரணத்தை கண்டறிவது சுலபம்..

நெப்போலியன் போனோபார்ட் சீனாவை பற்றி சொன்ன கருத்து ஒன்று உள்ளது.அதாவது,”சீனாவை உறங்க விடுங்கள்,அந்த நாடு விழித்துக் கொண்டால்;அது உலகத்தையே அசைத்துப் பார்க்கும்” என்று அவர் சொன்னதுதான் இந்தியாவுக்கும் பொருந்தும்..

சீனா ஒரு காலத்தில் விழித்துக் கொண்டதைப் போலவே இந்திய தேசம் விழித்துக் கொண்டால் அது உலகத்தை அசைத்துப் பார்க்கும் என்ற உண்மையும் கூட இன்று நடக்க ஆரம்பிக்கிறது.இதில் நாம் வெற்றி பெறக்கூடாது என்றே நம்மீதான வெறுப்பு பேச்சுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது..” என்று திரு.அண்ணாமலை பேசினார்..

————–

திரு.தேஜஸ்வி சூர்யா MP அவர்கள் பேசிய போது பல கருத்துக்கள் நெருப்பினைப் போல வந்து தெறித்ததை பார்க்க முடிந்தது.இந்தியாவின் ஆன்மா எது,இவ்வுலகை பற்றிய நம்முடைய விசாலமான பார்வை எப்படிப்பட்டது என்பதை எல்லாம் மிக அழகாக விளக்கினார்.

“ஹிந்து தர்மத்தின் அடிப்படையே பன்முகத்தன்மை,சுதந்திரம்தான்.

அனைத்து ஜீவராசிகளுக்கும் நம்மால் நியாயத்தை வழங்க முடியும். 

உதாரணமாக ஒன்று சொல்கிறேன்.நான் அவ்வப்போது செல்லும் பேருந்து நிறுத்தத்தின் அருகே வழக்கம் போல ஒரு ஆட்டோ நிறுத்துமிடம் இருக்கும்.அங்கே ஓட்டுனர்களின் அரவணைப்பில் ஒரு குரங்கு வாழ்ந்தது.அவர்கள் தரும் உணவுப் பொருட்களை உண்டு அங்கேயே சுற்றித்திரியும்.

அந்தக்குரங்கு திடிரென ஒருநாள் இறந்துவிட்டது.அந்த குரங்கினை அங்கேயே புதைத்து ஒரு செங்கல்லை நட்டு வைத்தார்கள்.வேறு யாரோ சிலர் அதைச்சுற்றி காவிநிற பெயிண்ட்டை அடித்தார்கள்..பின்பு பரீட்சைக்கு போகும் சிறு குழந்தைகள் ஹனுமனிடம் ஆசீர்வாதம் வாங்குவதாக இங்கே வழிபட ஆரம்பித்தார்கள்..

இந்த மொத்த நிகழ்வும்,யாராலும் வழிநடத்தப்படவில்லை,யாரும் இன்னொருவருக்கு சொல்லித் தரவில்லை.நம்முடைய இயல்பிலேயே இந்த பண்பு உள்ளது.இதைத்தான் இயற்க்கையோடு இணைந்த சனாதன தர்மம் என்று அண்ணாமலை அவர்கள் சொன்னார்கள்..

நமக்குரிய இஷ்டதேவதையாக எதையும் தேர்ந்தெடுக்கும் உரிமை ஒரு ஹிந்துவுக்கு உண்டு.இந்த பன்முகத்தன்மை உலகத்தில் எங்கேயும் இல்லை..” இப்படியாக பேசினார் திரு.தேஜஸ்வி.

அதே போல, இடதுசாரிய அறிவுஜீவிகளால் முன் வைக்கப்படும் கருத்துக்களை விமர்சித்தார். குறிப்பாக அவர்கள் அம்பேத்கர் Vs சாவர்க்கர் என்று கட்டியமைக்கும் சித்தாந்த புரட்டை உடைத்தார்.

“மார்க்ஸியர்களை பொறுத்தவரை எப்போதுமே இருதுருவ எதிரிகள் நிரந்தரமா இருக்க வேண்டுமென எல்லா விஷயங்களிலும் கருதுவார்கள்.அப்போதுதான் அவர்களுடை சித்தாந்த விற்பனை சூடுபிடிக்கும்.ஆசிரியர் × மாணவர்,ஆண் × பெண்,பணக்காரன் × ஏழை என்ற எதிரெதிர் தரப்புகள் இருந்தே தீர வேண்டுமென அவர்கள் நினைப்பது புதிதில்லை..

இதே போலத்தான் நமது ஜே.என்.யூ. இடதுகள் சாவர்க்கர் × அம்பேத்கர் என்ற இருதுருவ பார்வையை உண்டு செய்கிறார்கள்.ஆனால் உண்மையில் சாவர்க்கரும்,அம்பேத்கரும் என்பதே சரி.சாவர்க்கர் எதிர் அம்பேத்கர் என்பது தவறு.சில ஆண்டுகளுக்கு முன்பு அரவிந்தன் நீலகண்டன் சுவராஜ்யாவில் எழுதிய அம்பேத்கர் குறித்ததான கட்டுரை எனது பார்வையையே மாற்றியது.

சாவர்க்கரும்,அம்பேத்கரும் பிறப்பின் அடிப்படையில் உருவாகும் ஏற்றத் தாழ்வுக்கு எதிராக பேசினார்கள்.இருவரும் ஒற்றை பாரதம் என்பதை நம்பினார்கள்.இருவருடைய அறிவியல்பூர்வமான சமூக பார்வையும்,பொருளாதார பார்வையும் ஒரே போலத்தான் இருந்தது..ஆகவே,இடதுசாரிகளின் இந்த இருதுருவ விளையாட்டு இதில் பொருந்தாது..” என்று பேசினார் தேஜஸ்வி..

எதிர்காலத்தில் நம்முடைய கலாச்சாரத்தை நிலைநிறுத்த வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றி பேசினார் தேஜஸ்வி சூர்யா.

“நாம் முதலில் காக்க வேண்டியது நமது குடும்ப அமைப்பையே.பல்லாயிரம் வருடமாக நமது பழம்பெருமைமிக்க கலாச்சாரம் நீடித்து வருகிறது என்றால் அதற்கு காரணம் இங்கே நீடித்து வரும் குடும்ப அமைப்பாலே.ஆனால் என் வயதை ஒத்த அல்லது இன்னும் கீழே உள்ள நபர்களை பார்க்கும் போது,ஒரு Woke கலாச்சாரம் அவர்களை பீடித்து ஆட்டுவதைக் காண முடிகிறது..

திருமணத்தின் மீதான ஒருவித விலகல் மனநிலையை நாம் எல்லா பக்கத்திலும் உள்ள இன்றைய இளைஞர்களிடம் கவனிக்க முடிகிறது.இதிலிருந்து நாம் வெளியே வர வேண்டும்.இல்லை என்றால் மேற்குலத்திற்கு நடந்த கலாச்சார அழிவு நமக்கும் நிகழும்..” என்று விவரித்தார்..

அதே போல இரண்டாவது நாம் காக்க வேண்டியது நம்முடைய தாய்மொழி என்று பேசினார்.

“பெங்களூரில் பிரபலமான உணவகத்தில் அமர்ந்திருந்தேன்.அப்போது எனக்கருகே ஒரு மத்தியத்தரவர்க்க குடும்பம் அமர்ந்திருந்தது.அவர்கள் பேசுவதை கவனித்தேன், அவர்களுக்குள் ஆங்கிலத்தில் மட்டுமே பேசினார்கள்.

உடனே,நான் மெல்லமாக பேச்சுக் கொடுத்தேன்.முழுக்க முழுக்க கன்னடத்தில் மட்டுமே பேசினேன்.ஆனால் அவர்கள் எனக்கு ஆங்கிலத்திலேயே பதில் சொன்னார்கள்.ஏன் கன்னடம் தெரியாது என்று கேட்ட போது,பணிபுரியும் இடம், குழந்தைகள் பயிலும் இடம் என எங்கும் ஆங்கிலமே புழங்குவதால் ஆங்கிலமே எங்களுக்கு எளிமையான பழகு மொழியாக ஆகிவிட்டது என்று சொன்னார்கள்..

உண்மையில் எனக்கு இது அதிர்ச்சியே. இப்படி ஒரு நிலை பெருகி வந்தால் நம்முடைய தாய்மொழி எப்படி வாழும்? மொழி அழியுமானால் இந்த பண்பாடு எப்படி நிலைக்கும்? ஆகவே எதிர்கால இளைஞர்கள் குடும்ப அமைப்பு, நம்முடைய மொழி இவற்றை பேணிக் காப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்..” என்ற கருத்தை தெளிவுபட பேசினார்..

அடுத்து,மிக உருக்கமான அதே சமயம் கறாரான உண்மையை பேசினார் தேஜஸ்வி..அது கீழே 👇

“கேரளாவில் ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் தொடங்கி பல நூற்றுக் கணக்கான கார்ய கர்தாக்கள் இடதுசாரிகளாலும்,ஜிஹாதிகளாலும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்..இந்த பொழுதிலும் அது நிற்கவில்லை.உள்ளூர் காவல்துறை,கீழமை நீதிமன்றம் என அனைத்தும் அரசியல் மயமாக்கப்பட்டது நமக்கான நியாயம் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது..

இப்படி எண்ணற்ற சக்திகளோடு நாம் உடலாலும்,உள்ளத்தாலும்,அறிவாலும் மோத வேண்டிய கையறு நிலையில் உள்ளோம்..

இந்நிலையில் “Hindutva: Origin, Evolution and Future” என அரவிந்தன் நீலகண்டன் எழுதிய இந்த புத்தகம் நமது இளைஞர்களுக்கு மிகப்பெரிய தத்துவபலமாக நிற்கும் என்பதில் சந்தேகமில்லை..”

இப்படி தேஜஸ்வி சூர்யாவின் மொத்த பேச்சும் மிக ஆழமாக இருந்தது.

————–

பாரதமாதா என்ற படிமம் எப்படி இந்தியா முழுக்க ஒன்று போல எழுந்தது.அது ஒரு துர்க்கையின் சாயலில் உருவானது என்று ஏற்கனவே அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருப்பதை சுட்டிக்காட்டிய அபினவ் பிரகாஷ் இன்னொரு உதாரணத்தை காட்டினார்..

தர்மத்தை காக்கும் பொருட்டு சிவாஜிக்கு தேவி கொடுத்த வாள்,குருகோவிந் சிங்கிற்கு தேவி கொடுத்த அனுமதி என இந்த அந்நிய படையெடுப்புகளுக்கு எதிராக கிளறும் இந்த தேவி வடிவத்தின் குறியீட்டினை விளக்குமாறு அரவிந்தன் நீலகண்டனிடம் அபினவ் கேட்டார்..

‘Hindutva’ புத்தகத்தின் ஆசிரியரும்,சிந்தனையாளருமான திரு.அரவிந்தன் நீலகண்டன் மிக தெளிவானதொரு விளக்கத்தை கொடுத்தார். 

“தமிழ் இலக்கணங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என ஐந்திணைகளாக நிலத்தை பிரிக்கிறது.ஐந்திணைகளுக்கும் தெய்வம்,மக்கள் என தனித்தனியாக உள்ளார்கள்..இதை விளக்கும் இலக்கியமாக சிலப்பதிகாரம் அமைந்திருந்தது.

அதில்,பாலை நிலமென்பது குறிஞ்சியும் – முல்லையும் திரிந்து கெடுவதால் உருவாகிறது..தவறான ஆட்சியால் நாடு பாழ்படுவதை போலவே,மாறிய பருவமுறையால் செழிப்பான வனங்கள் பாலைவனமாக மாறுகிறது என்று குறிப்பிடப்படுகிறது..

இந்த பாலைநிலத்தின் அதிதெய்வமே கொற்றவையாக உள்ளது.இந்த தெய்வத்தை போர்கடவுளான குறிஞ்சி நில முருகனின் தாய் என்று பேசுகிறது சிலப்பதிகாரம்.

இதே போல,வேதகாலத்தில் நிருத்தி என்றொரு பெண் தெய்வம் குறிப்பிடப்பட்டுள்ளது.எங்கே இயற்கையின் அமைதி கெடுமோ,எங்கே நிலத்தின் வாழ்வியல் ஒழுங்கு சேதமாகுமோ,இதற்கு காரணமானவர்களை அழிப்பதற்கு நிருத்தி தேவதை எழுகிறது..

இதை ஒத்தே பாரதமாதா என்கிற தேவி சுதந்திர போராட்டத்தில் எழுகிறாள்.நமது பன்முகத்தன்மை பாதிக்கப்படுகிற போது,நாமொரு மத – கலாச்சார மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் போது கொற்றவையாக,நிருத்தியாக பாரதமாதா எழுவது மாறாத பேரறக் குறியீடாக உள்ளது..” என்பதாக பேசி முடித்தார் அரவிந்தன் நீலகண்டன்..

திரு.அண்ணாமலை சொல்கிற செங்கோலும்,அரவிந்தன் சொல்கிற தேவியின் வாளும்தான் பாரதத்தின் பல்லாயிரம் வருட பண்பாட்டு விழுமியம்.இதை கண்டடைகிற இந்திய மனங்களே எதிர்கால இந்தியாவை வழிநடத்தும் மகாபுருஷர்கள் என்று நமக்குக் கருதத் தோன்றுகிறது..

ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான சமூகப்புரட்சி ஆங்கிலயேக் கல்வியால் விளைந்தது என்பது மேம்போக்கான தட்டைவாதம்.உண்மை வேறுவிதமானது என்பதை அரவிந்தன்  நீலகண்டன் கீழ்கண்டவாறு விலக்குகிறார்..

” ஹிந்துத்துவர்களே பல சமூகப்புரட்சிகளுக்கு வித்திட்டார்கள்.நாராயண குரு,ஐயா வைகுண்டர் என யாரும் ஆங்கிலயேக் கல்வியின் வழியே வந்தவர்கள் இல்லை.அவர்கள் பாரம்பரிய சாஸ்த்திரக் கல்வியின் வழியாகவே தங்கள் சமயப் புரட்சியை முன் வைத்தார்கள்.அம்பேத்கர் கூட தன்னுடைய ஆன்மீக அறிவுணர்ச்சியே ஜாதிக் கொடுமைக்கு எதிரான பார்வையை உறுதி செய்தது என்கிறார்..

அம்பேத்கரின் ஆன்மீக அறிவுணர்ச்சி கபீர் தாஸிடமிருந்து வந்தது.கபீரின் குரு ராமானந்தர்,ராமானந்தரின் குரு ராகவானந்தர்,ராகவானந்தரின் குரு ராமானுஜாச்சாரியார்.தமிழகத்தில் இருந்து சென்ற ஸ்ரீவைஷ்ணவ பக்தி இயக்கமே அம்பேத்கரின் ஏற்றத்தாழ்வுக்கெதிரான பார்வையை கொடுத்தது என்பது இந்த காசி சங்கமம் நடக்கும் போது நமக்கு பெருமைதரும் இன்னொரு விஷயமாகும்..” என்று பேசினார் அரவிந்தன் நீலகண்டன்..

அடுத்தது,சீதாராம் கேசவ் போலே 1923 ல் கொண்டு வந்த பம்பாய் தீர்மானம் குறித்து பேசினார்..

“இந்த 100 ஆண்டுகளில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நாமடைந்த எல்லா உயரங்களுக்கும் தோற்றுவாயாக 1923 ல் சீதாராம் கேசவ் போலே கொண்டு வந்த தீர்மானமே.போலே ஒரு ஹிந்துத்வராவார்.அகில பாரத ஹிந்து மகாசபாவின் தலைவராக பின்னாளில் இருந்தார்.பாரதத்தின் தேசிய கொடியாக காவியை வைக்க வேண்டுமென அம்பேத்கரிடம் கோரிக்கை வைத்தவர்..

ஆக இவர்களை எல்லாம் இருட்டடிப்பு செய்யும் வரலாற்றை நாம் உடைத்துக் காட்ட வேண்டும்.இந்தியாவில் சமூக சீர்திருத்தத்தை உண்டு செய்தது ஆங்கிலக் கல்வியும்,மதமாற்றமும் என்பது திரிபுவாதம்.எல்லா புரட்சிக்கும் பின்னால் ஹிந்துத்துவர்களே இருக்கிறார்கள் என்பது எதார்த்த உண்மை..” 

இப்படியாக மிக தெளிவான விளக்கத்தைக் கொடுத்தார் திரு.அரவிந்தன் நீலகண்டன்.இறுதியாக எதிர்கால பாரத்தின் நம்பிக்கை யார் என்று பேசும் போது திரு.அண்ணாமலை – திரு.தேஜஸ்வி சூர்யா – திரு.அபினவ் பிரகாஷ் ஆகியோரை குறிப்பிட்டு பேசினார்..

“இந்த இளைஞர்களை வெறுமனே ஒரு அரசியல் கட்சியின் பிரதிநிதியாக மட்டுமே பார்க்கவில்லை.எந்த விதமான பின்புலமும்,யாருடைய சிபாரிசும் இல்லாமல் எளிய குடும்பத்தில் இருந்து தன் உழைப்பினாலும்,தகுதியினாலும் இந்த இடத்தை அடைந்துள்ளார்கள்.இவர்களே நாளைய பாரதத்தின் எதிர்காலம் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை..”

“குறிப்பாக திரு.அண்ணாமலையை பார்க்கும் போது,சிறுவயதில் நான் படித்த அமர்சித்ர கதைகளில் தனியொரு மனிதனாக கொடும்பாறையை உடைத்து நீரூற்றினை மேலே கொண்டு வரும் லலிதாதித்யன் நியாபகம் வருகிறது…

திராவிட அரசியல் என்னும் பாறையை அண்ணாமலை என்கிற தனி மனிதன் உடைதெறிந்து,தமிழகத்தின் தேசிய – ஆன்மீக நீரூற்றினை மேலே கொண்டு வருவார் என்று உறுதியாக நம்புகிறேன்..” என்று தீர்க்கமாக பேசி முடித்தார்..

———————

மகரந்த் பரஞ்சபே தேவாசுர யுத்தம் எப்படி நம் மூளைக்குள்ளே,உடலிலேயே நடக்கிறது என்று பேசினார்..ஹிந்து தர்மம் எப்படி ஒரு அறிவியல்பூர்வமான தத்துவத்தை முன் வைக்கிறது என்று விரிவுபட பேசினார்..

நேர்மறை அம்பேத்கரியம்,எதிர்மறை அம்பேத்கரியம் என்ற இரு சொற்றொடரை பயன்படுத்துகிறார். இந்திய ஒற்றுமை,ஆன்மீக அறிவுணர்ச்சி,பொருளாதார வெற்றி,சமதர்மம் இவற்றை வென்றெடுக்க பாடுபடுவது நேர்மறைத்தன்மை கொண்டது.

ஆனால், இந்திய எதிர்ப்பு, சமூகங்களுக்கு இடையே வன்முறையை பரப்பி குழப்பத்தை விளைவிப்பது எதிர்மறைத்தன்மை கொண்டது. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று பேசினார்.சிலப்பதிகாரத்தையும்,கண்ணகி என்ற பெண் சக்தியையும் பாரத்தின் தன்னித்தன்மை கொண்ட ஆன்மீக எழுச்சியாகவும், கலாச்சார குறியீடாகவும் காட்டி பேசினார்..

மொத்தமாக இந்த நிகழ்வை அழகாகத் தொகுத்து, அற்புதமான உரையாடலை துவக்கும் விதம் கேள்விகளை கேட்டவர் திரு.அபினவ் பிரகாஷ்தான். முழுமையான உரையாடல்களும் வலுவான வார்த்தை பிரயோகங்களால் வெளிவரக் காரணமே அபினவ் என்று சொன்னால் கூட மிகையில்லை.

***

One Reply to “தேவியின் வாளும், தேவ தண்டமும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.