- சோசலிசத்துக்கான நேரம்
- சமூக ஒழுங்குகளும் அரசியல் நிறுவனங்களுமே ஏற்றத் தாழ்வுகளுக்குக் காரணம்?
- சோசியலிசம்: நிறுவனங்களை பலவீனப்படுத்துவதா?
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இதற்கெல்லாம் பல்துறை இணைவுப் (interdisciplinary) படைப்பால் மட்டுமே விளக்கம் தர முடியும் . அதையேதான் (அவர் எழுதிய) காபிடல் அண்ட் ஐடியாலஜி (போதுமான அளவு பாராட்டுப் பெறாத நூல்) என்னும் பகுப்பாய்வு மற்றும் முறையியல்சார் (analytical and methodological) திருப்புமுனைப் படைப்பு வழங்கி இருக்கிறது : இது ஏற்றத்தாழ்வுப் பிரச்னையை மையமாக வைத்துப் படைக்கப்பட்ட ஒரு தற்கால ஒப்புநோக்கு அரசியல் வரலாறு. இந்த பகுப்பாய்வு அளந்து மதிப்பிடத்தக்க விவரணங்களில் இருந்து விலகி ஏற்றத் தாழ்வை உண்டாக்கியும் நீடிக்கவும் செய்கின்ற சக்தி குறித்த அச்சவுணர்வின் விளக்கமாக மாறியது. இது காலங்காலமாக கணக்கியலாகக் கருதப்பட்ட வரலாற்றுவழி ஒழுங்குகளைக் கைவிட்டு ஏற்றத் தாழ்வு ஆட்சிகள் (Inequality Regimes) என்று பிகெட்டியால் முத்திரையிடப் பட்டவற்றை வலுவுள்ள, கூராக்கப்பட்ட விசாரணைக்கு உட்படுத்தியது. அதாவது, கதைமாந்தர்களைக் கொண்ட ஒரு வரலாறு, சட்டம் இயற்றும் சண்டைகள், அரசியல் மையங்கள், நுண்ணறிவார்ந்த விவாதங்கள் ஆகியவற்றை முன்மொழிந்தது. காரணவியத்தின் (causation) அடிப்படை நெம்புகோல்கள் சந்தை அளவீடுகள் அல்லது தொழில்நுட்ப பெயர்வுகள் அல்ல, சமூக ஒழுங்குகள் மற்றும் அரசியல் நிறுவனங்களே என்று காபிடல் அண்ட் ஐடியாலஜி கண்டுபிடித்தது.

உண்மையில் இதுவே பிகெட்டியின் முக்கிய வாதம்: பொருளாதார உண்மை நிலை அல்லது தொழில் நுட்ப மாற்றம் அல்லது உற்பத்தி அமைப்பு முறை அல்லது தனி நபர்களின் திறமை, ஆற்றல் மற்றும் முயற்சி ஆகியவற்றில் இயற்கையாய் அமையப் பெற்ற வேற்றுமைகள்- நிச்சயமாக ஏற்றதாழ்வுகள் தோன்றுவதற்கு இவை எதுவுமே காரணமாக இருக்க முடியாது. இன்னும் சரியாக சொல்வதானால், அரசியல் வட்டாரத்தில் நிகழும் அதிகாரப் போட்டிகள் மூலமாகவே ஏற்றத் தாழ்வு தீர்மானிக்கப்படுகிறது. இப்போட்டிகள் சந்தையில் பணி நிபந்தனைகளை விதிக்கின்றன, அதன் நீட்சியாக சந்தையின் பகிர்மான விளைவுகளையும் விதிக்கின்றன.
சமூகத்தின் சில குழுக்கள் நாளுக்கு நாள் செல்வத்தை ஏன் குவித்துக்கொள்கிறார்கள்? ஏதாவது ஒரு தற்சார்பற்ற பொருளியல் அல்லது இயல்பான டார்வினிய புரிதலின்படி அவர்கள் அதிக தகுதியுள்ளவர்கள் என்பதால் அல்ல- மாறாக பிறருக்குtஹ் தாழ்வு ஏற்படுத்தி அதன் பயனாக தமக்கு நன்மை அளிக்கக் கூடிய அரசியல் சட்டங்களை இயற்றும் ஆற்றல் கொண்டவர்களாய் அவர்கள் இருந்ததால்தான்.
சொத்துரிமைகள் என்னும் கருத்தியலும் ஒரு வரலாற்றைப் பெற்றிருக்கிறது. தனிநபர் சொத்தின் அடித்தளத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய 20ஆம் நூற்றாண்டின் நடு காலகட்டத்து ஆஸ்ட்ரியன் சமூகவியலாளர் கார்ல் பொலான்யி போன்ற முன்னோடிக் கோட்பாட்டாளர்களின் வழிவகுத்தலை இங்கே பிகெட்டி பின்பற்றினார். இந்நோக்கில் தனிநபர் சொத்து எப்போதுமே தன்னிச்சையாக உருவாக்கப்பட்ட சட்ட சலுகைப் பொதியாகவே (bundle) இருந்து வந்திருக்கிறது. ஒரு நபர் மற்றொரு நபரை சொத்தாகப் பெற்றிருக்க முடியுமா?அது தலை தலை முறையாக கை மாறக் கூடுமா? கடந்த காலத்தில் அவ்வப்போது வன்முறையால் கையகப்படுத்தப் பட்டுள்ள சொத்துக்களை அரசியல் ஆட்சி அடையாளம் காணுமா? இயற்கை வளம், நிலம் அல்லது தொழில் நுட்பவியல் சார்ந்த அறிவு ஆகியவற்றை ஒரு நபர் சொந்தமாக்கிக் கொள்ள முடியுமா?- முடியுமென்றால் எவ்வளவு காலத்திற்கு? அதிகாரச் சமநிலை(balance of power) என்னும் கருத்துப் படிவத்தின் நீட்சியாக முதலாளிகள் மற்றும் உழைப்பாளிகள் இடையே வருவாய்ப் பகிர்மான சமநிலையைக் கொண்டுவருவதற்காக உழைப்புச் சந்தைக்குள் எந்தெந்த விதிமுறைகள் வரையறுக்கப் பட்டுள்ளன. உலகப் பொருளாதாரத்தில் அலுவல் நிபந்தனைகள் எவ்வாறுள்ளன? இந்த வணிகம் எந்த செலாவணியில் நடத்தப்படுகிறது? யார் செலாவணியை நடத்துபவர்? இந்த கேள்விகளுக்கான பதில்கள் வெளிப்படையாகத் தெரியக்கூடியதாகவோ அல்லது ஒளிவுமறைவு
இல்லாததாகவோ எப்போதும் இருந்ததில்லை; பெரும்பாலும் தொடர்ந்து கொண்டிருக்கும் போராட்டத்தின் பொருள் நிரல்கள்(subjects)அவை, என்றென்றும் அரசியல் அடித்தளத்தை நம்பியிருப்பவை. அவை சமூகங்கள் அனைத்திலும் காலங்காலமாக வேறு வேறாகவே இருக்கின்றன.அவையும் சில நேரங்களில் வியப்பூட்டும் வகையில் தீவிர மாற்றம் கொள்கின்றன-ஏதேனும் ஒரு பிரத்தியேகமான வருவாய்ப் பகிர்வு ஏதோ ஒரு குறிக்கோளையோ அல்லது இயற்கையின் ஒழுங்கையோ பிரதிபலிக்கிறது என்னும் பொய்த்தோற்றத்தை அம்பலப்படுத்தும் வகையில்.
மிகச் சரியாகக் கூறுமிடத்து, முன்னாள் அடிமைகளுக்கு இழப்பீடு பிரான்ஸ் தேசம் தர வேண்டும்; இழப்பீடு பெறுவது சரியல்ல என்றே பிரெஞ்சு பங்கேற்பாளர்கள் கருதினார்கள். வாழ்நாளில் ஒருபோதும் உழைத்திராத ஒரு இங்கிலிஷ் கனவான் ( ஜென் ஆஸ்டன் நாவல் பாத்திரம்), நில உடைமைகள், நிதிப் பத்திரங்கள் மற்றும் அடிமைகள் உழைக்கும் தோட்டங்கள் போன்ற லாபம் தரக்கூடிய சொத்துகளைக் கொண்டிருக்கும் நிலையிலும் ஆண்டு வருமானம் வெறும் 4000 பௌண்டாக இருந்தது எப்படி என்று ஜென் ஆஸ்டனின் வாசகர்கள் கேள்வி கேட்கவில்லை. பெரும்பாலும் அரசு நிதியில் நடைபெறும் ஆராய்ச்சி உருவாக்கிய அறிவின் அடிப்படையில் அளவற்ற வருவாய் குவிக்கும் தொழில் நுட்ப பில்லியனர்களின் செல்வத்தை நியாயமான சம்பாத்தியம் என்று நாம் இன்றைய வக்கிர மனப்பான்மையால் ஒப்புக் கொள்கிறோம்.ஆனால் இவ்வாறு சில நேரங்களில் கருத்தியலின் ஆற்றல் நொறுங்கி விடுகிறது என பிகெட்டி அவதானித்தார். இனிமேலும் அது தற்போதைய நிலைக்குப் போதிய நியாயம் வழங்காமலிருந்தால், அது புதிய கருத்தியல் மற்றும் புதிய சமூக ஒழுங்கு தோன்ற வழிவகுக்கும். மாபெரும் மாற்றம் படிப்படியாக, அமைதியாக நேரிடுவதில்லை. கருத்து வேறுபாடு, சிக்கல், ஆபத்து, நெருக்கடி மூலமாகவே தான் அது நேரிடுகிறது.
இவ்வாறாக பிகெட்டி பொருளாதாரக் கோட்பாட்டின் கணித மலைச்சிகரத்தில் (olympus) இருந்து கட்டாயமாக இறங்கி வந்து, அரசியல் மற்றும், பொருளாதார நெருக்கடிகள், பொது விவாதங்கள், சமூக எதிர்ப்புகள், போட்டியிடும் (competing) முன்னேற்றத் தொலைநோக்குகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சாக்கடைக்குள் காலை வைக்க நேர்ந்தது.காபிடல் அண்ட் ஐடியாலஜி (ஆசிரியரின் மற்றொரு நூல்) முற்றிலும் வேறான நிகழ்வுகளை ஒரு அழகிய கருத்துத் தொகுப்பாக நெய்தது. r>g எனப்படும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத அறுதியீட்டு வாதம் (determinism), ஏற்றத்தாழ்வு ஒரு வரலாற்று ரீதியாக தற்செயலாக நிகழக்கூடியது மற்றும் தேவைக்கேற்ப மாற்றியமைக்கத் தக்கது என்னும் புரிதலுக்கு வழி விட்டது. ஏற்றத்தாழ்வின் கதை என்பதே மாற்றம், நெருக்கடி, மறு கண்டுபிடிப்பு (reinvention) ஆகியவற்றின் வரலாறுதான் என்று ஆகிவிட்டது. பிகெட்டிக்கு மிகவும் பிடித்தமான வரலாற்றுத் தொடர்புடைய நிகழ்வு ஸ்வீடன் நாட்டுக்குரியது- 20ஆம் நூற்றாண்டு ஆரம்ப கால கட்டத்தில் சமத்துவம் பேணுகின்ற, குடியரசு மாண்புகளை ஏற்ற, யூரோப் சமூகங்களின் தகுதி மதிப்பீட்டில் கடைசி இடத்தில் இருந்த ஸ்வீடன், பின்னர் போற்றத்தக்க சமூகக் குடியரசு ஆகிவிட்டது. மாறாக, 1980க்கு முன்னர் தனி நபர் சொத்து மற்றும் வருவாய் பளுவான வரிவிதிக்கப் பட்டு இருந்த நிலையில் அமெரிக்கா (US), மேற்கு யூரோப் தொழிலக சமூகங்களை விட உயர்ந்த மனித சமூக சமத்துவம் பேணும் நாடாக இருந்தது. ஆனால் 1980க்குப் பிறகு, அது மேற்குலகின் உச்சபட்ச ஏற்றத்தாழ்வுகள் கொண்ட நாடாக மாறிவிட்டது. அண்மைய தசாப்தங்களில் பிரான்ஸ் மற்றும் இங்க்லாண்ட் மிகச் சமனற்ற சமூகமாக ஆகி விட்ட போதிலும் இன்றும் முதல் உலகப் போருக்கு முந்திய கால (belle epoque-அழகிய சகாப்தம் ) ஏற்றத் தாழ்வுகள் அளவைக்கு வெகு தொலைவிலேயே இருந்து வருகிறது.
ஸ்வீடிஷ் சமூகக் குடியரசு என்பதில் இயல்பாகவே ஸ்வீடிஷ் என்று குறிப்பிடத் தக்கது எதுவும் இல்லை, அதேபோல் கொள்ளையடிக்கும் முதலியம் என்பது தவிர்க்க முடியாதபடி அமெரிக்காவுடையது தான் என்றும் குறிப்பிட்டு விட முடியாது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பேரரசுக்குரிய நாடுகளாகத் திகழ்ந்த பிரான்ஸ் மற்றும் இங்க்லாண்ட், இன்று கம்பீரம் இழந்து காணப்படுகின்றன. எப்போதும் சமுதாயங்கள், வழக்கம் மற்றும் பாரம்பரியம் தொடர்வதற்கு உதவக் கடமைப் பட்டவை அல்ல. உண்மையில் ஏற்றத்தாழ்வு நிலைகள் மாற்றதுக்குள்ளாகும் திறந்த முனையுடையவை (dynamically open-ended) ; அவை போராட்டங்கள் மூலமாக காலப்போக்கில் உருவமைக்க/மறுஉருவமைக்கப் படுகின்றன.
காபிரல் இன் த ட்வெண்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி (காபிடல் இன் த ட்வெண்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி) என்பது மிகப் பெரும் அளவில் விற்பனையாகும் நூல். கோவிட் -19 தாக்குதலுக்கு சற்று முன்பாக வெளியிடப்பட்ட காபிடல் அண்ட் ஐடியாலஜி அதே போன்ற வணிக மற்றும் திறனாய்வு சார்ந்த வெற்றியைத் திரட்டிக் கொள்ளவில்லை. முந்திய நூலை வெகுவாகப் பாராட்டியிருந்த விமர்சகர்கள்-பால் க்ருக்மன் ( எப்போதும் பச்சோந்தியாய் இருப்பவர்)-ஐப் போல – பிந்திய நூலை நிராகரித்தார்கள்; அத்துடன் பிகெட்டியின் ராக்ஸ்டார் (Rockstar) தினங்கள் தீர்ந்து போய்விட்டன என்று வாசகர்களை எச்சரித்தனர். ஒரு பண்பாட்டுக் கிறுக்கனாக அறியப்பட்ட பிகெட்டியின் வியப்படையச் செய்கிற திடீர் வெளிப்பாடு, உரத்த அசை அழுத்தம் ஏறிய (heavily accented ) இங்கிலிஷ், நவ நாகரிக நடை உடை பாவனைகள் பற்றிய அறிவு துளியும் இல்லாமை மற்றும் வசீகரிக்கும் ஆளுமை ஏதும் இல்லாமை (நான் ஒரு சமூக அறிவியலாளன்)-இவை அனைவரையும் முகம் சுழிக்க வைத்தன. ஒருவேளை இந்நூல் அதிக நீளம் கொண்டது என்பதாலா? ஆனால் முதல் நூலும் இதே போல் நீளமானது , பக்கம் பக்கமாக வரை படங்கள் மற்றும் அட்டவணைகளைக் கொண்டிருந்தது; மேலும் அதன் ஆசிரியர் அப்போது முற்றிலும் அறியப்படாதவராக இருந்தார் . ஆனால் காபிடல் அண்ட் ஐடியாலஜி திடீர் பிரபலமாகி விட்ட நூலாசிரியரின் மிக பரபரப்பான(dramatic) எடுத்துரைப்பு (narrative ). பெருந்தொற்று காரணமாக அதன் நூல் உலா(book tour ) நடை பெறாமல் போனதாலோ? ஆனால் முழு அடைப்பின் போதும் நூல் விற்பனைகள் ஓங்கியே தான் இருந்தன.
காபிடல் அண்ட் ஐடியாலஜி –ன் அவப்பேறுக்கான (misfortune) உண்மைக் காரணம் அதன் நீளமோ அல்லது கோவிட் -டோ அல்ல. 2016-ஆம் ஆண்டைத் தொடர்ந்த கெடு விளைவுகளின் போது அது வெளியிடப் பட்டதே காரணம். பிரெக்ஸிட் மற்றும் டிரம்ப் -க்கு முந்திய கால கட்டத்தில் பிரபலமான மக்கள் குரலாக வெளிப்பட்ட பிகெட்டி பிரிவினையின் (disjuncture) உருவகமாக கருதப்பட்டார். ஒரு புறம் அவர், தொழில் நுட்பமும் (technocracy), தகுதியும் (meritocracy ), நிபுணத்துவமும் (expertise) இணைந்து ஆளும் கோட்பாட்டு மாற்றம் சார்ந்த புதிய தாராளவாதத்தின் (paradigmatically neoliberal) உருவகம் ஆகி இருந்தார். காபிடல் இன் த ட்வெண்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி -யில் சமூக வர்க்கத்தின்(social class) அடுக்குகளை வகைப்படுத்தும் மொழிசார்ந்த பெயர்களை பதின்மானங்கள் (deciles) மற்றும் நூற்றுமானங்கள் (percentile) என்னும் பகுப்புகளாக அவர் வரையறை செய்தது ஆதாரச் சான்றிதழ்களைப் பெற்றுள்ள(credentialed) துறை சகாக்களின் நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது; இது ஒரு கருத்தார்ந்த (serious )நூல் என்று ஏற்றுக்கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. ஆனால் பிகெட்டி தலைமையேற்று அறிமுகம் செய்த Excel விரி தாள்கள் மனம் ஒப்புக்கொள்ளாத அகக்காட்சிகளை உண்டாக்கின. அவருடைய புதுச் செவ்வியல் பொருளாதார ஆராய்ச்சி முறையியல் (Neoclassical economic methodology), முதலியம் இயல்பாக உருவாக்கும் இணைக்க முடியாத பிளவை (உடையவர்க்கும் வறியவர்க்கும் இடையே உள்ள பிளவு) தெளிவாக விளக்கியது.
சமூக இயக்கங்கள் இந்த பிளவு நிலையை சாதகமாக்கிக் கொண்டு இந்நூலின் ஆழ்ந்த செய்தியான பெருகும் ஏற்றத்தாழ்வு என்னும் கருத்தைத் தம் ஆயுதங்களாக ஏற்றுப் போராடின. 99 விழுக்காடும் நாங்களே (We are the 99 percent )என்ற அவர்களின் முழக்க வாசகங்கள் அதிகார வர்க்கத்தின் சலிப்பூட்டும் வழிமுறைகளை ஏளனம் செய்ததோடு கண்டனமும் தெரிவித்தன. இவ்வாறாக பிகெட்டியே முறிவு கணத்தை அறிவித்தவர் ஆனார்.
டைம் அண்ட் சோசலிசம் (Time for Socialism)– பிகெட்டி படைப்புகளின் பக்க அளவு நியமப்படி மிகவும் மெலிந்த படைப்பு என்று குறிப்பிட வேண்டிய இந்நூல், 2016-2019 காலகட்டத்தில் அவர் எழுதிய ளு மாண்ட் பத்திரிகைப் பத்திகளின் திரட்டு. காலவரிசைப்படி நகரும் இத்தொகுப்பில் உள்ள பத்திக் குறிப்புகளின் சாய்மானங்கள் நீண்ட கால நிகழ்வுகளைச் சார்ந்தோ அல்லது அன்றாடம் வெளிப்படும் நிகழ்வுகளைச் சார்ந்தோ மாறி மாறிச் செல்கின்றன.
பொருளியலாளர்கள் எழுதும் செய்தித்தாள் பத்திகள் விசித்திரமான வகையின. இவ்வகை நம் சகாப்தத்தின் குறிசொல்வோர்கள் கோப்பையின் அடியில் படிந்த தேயிலைத் துணுக்குகளைப் பார்த்து, எதிரில் அமர்ந்திருப்போருக்கு ஆரூடம் மற்றும் எதிர்கால முன்னறிவிப்பு கூறுவதற்கு நிகரானது. அந்தோ, சப் பிரைம் அடமான சந்தைகள் (subprime mortgages), உலகளாவிய வங்கி அமைப்பின்(global banking system ) அபாயம் , முக்கிய தேர்தல்கள் மற்றும் முக்கிய பிரச்னை குறித்த வாக்கெடுப்புகள் (காலநிலை பேரழிவுகள் அல்லது பொதுநலக் கேடுகள் போன்ற ஆபத்தான பிரச்னைகளை விட்டு விடுவோம்) போன்றவற்றை பற்றிப் பேசும்போது தேயிலைகள் குறிப்பிட்டுச் சொல்லும்படி எதிர்காலத்தை உணர்த்தும் திறன் இல்லாதவை என்று அடிக்கடி நிரூபணம் ஆகியுள்ளது. பிகெட்டியின் முறையியல் சார் பழமைவாதம் (methodical conservatism), அவர் இன்னொரு பண்டிதராக ஆவதைத் தடுத்து நிறுத்திய போதிலும், அன்றாடம் தோன்றி மறைகிற பற்றுகளின் (fads of the hours) தாக்கத்துக்குள்ளாகக் கூடியது.
இந்த கவனமான துய்ப்பறிவு வாதப் (cautious empiricism) பொறுப்பு நிச்சயமாக விரிவுரையில் (narrative) பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது அவருடைய பத்திகளைப் படிக்கும் போது இந்த ஐந்தாண்டுகளில்- Brexit, Trump, the Yellow Vests, the crisis in Catalonia, Bolsonaro – சந்தடி சச்சரவுகளை மீண்டும் கற்பனையில் அனுபவிப்பது, அவை மிகவும் நம்பத்தகுந்ததாக, ஆனால் அவ்வாண்டுகளுக்கான ஒட்டுமொத்த மனநிலை (mood ) முழுமையாக பிரித்தெடுக்கப்பட்ட நிலையில் திடீரென்று தோன்றும் காட்சிகளே. மாதாந்திர அனுப்புகைகள்- உண்மையில் கையேட்டுப் பதிவுகள் போன்றவை, மெலிதான இலக்கிய வளம் கொண்டவை- அந்த ஆண்டுகளில் பெரிய அச்சுறுத்தலாக எழுந்திருந்த பெருந்திரள் வாதம் (populism) பற்றிய ஊடக உருகல்களைப் (media meltdown) பொருட்படுத்தாதவை. வழக்கம் போலவும் மற்றும் செய்தித்தாள் தலையங்கங்களால் பாதிக்கப் படாமலும், பிகெட்டி,பொருளாதார ஏற்றத்தாழ்வு பிரச்னையின் மீது தன் லேசர் (laser) பார்வையின் குவியத்தை வைத்துக்கொண்டே, முறையாக தன் எப்போதும் பெருகிக்கொண்டும் மற்றும் எப்போது விரிவாகிக் கொண்டுமிருக்கும் தரவுத் தொகுப்புகளைப் பின்தொடர்ந்து அவற்றின் தர்க்க பூர்வமான கொள்கை முடிவுகளை (Logical policy conclusions ) எடுக்கிறார்: வரவு செலவுத் திட்டங்களில் (budget ) துண்டு வீழ்வுகள் எல்லாம் சிறு பிரச்னைகள்; தலையாய பிரச்னை ஆழ்ந்த மக்களாட்சி அனுசரிப்பின் பற்றாக்குறையே. அவர் நிகழ்வுகளை பண்பாட்டு நாடகமாகவோ, அடையாளமாகவோ அல்லது தேசிய கணக்கீடாகவோ கட்டமைக்கவில்லை. மேலும் வாக்காளர் சமூகத்தின் வெகுஜன உளவியலுக்குள் (mass psychology ) உற்றுநோக்க அவர் ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை. பதிலாக அளவிடக்கூடிய பயன்களை அளிக்கும் அமைதியான, அமல்படுத்தக் கூடிய அரசியல் சட்ட மாற்றங்களையே (constitutional) அவர் முன்மொழிந்தார்.
(தொடரும்)
பின்குறிப்பு:
Olympus: கிரேக்க பெருந்தெய்வங்கள் வாழிடமாகக் கருதப்பட்ட மலை