
“ஏராளமான வளர்ச்சித் திட்டங்களால் சிறப்பாக மிளிரும் திருச்சி மாநகராட்சி” என்று ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிக்கு எதிரே உள்ள சாலை குண்டும் குழியுமாக இருந்தது. முதல் நாள் இரவு பெய்த மழையால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சகதியும், பள்ளமான இடங்களில் தேங்கியிருந்த கலங்கலான நீருமாக காவிரி மாநகரத்தின் வரவேற்பே அவனைக் கதி கலங்க வைத்தது.
காற்பதனி வசதியுடன் கூடிய அறைக்கு ஆயிரத்தி நானூறு ரூபாய் நாள் வாடகை என்று லாட்ஜ் வரவேற்பில் இருந்த ஆசாமி சொல்ல பர்ஸிலிருந்து ஆறாயிரம் ரூபாயை எடுத்துத் தந்து ‘நான்கு நாட்களுக்கு’ என்றான். ‘பேலன்ஸை செக் அவுட் செய்யும் போது வாங்கிக்குங்க ஜி’ ரிசப்ஷன் குரலுக்குத் தலையாட்டினான். ‘ஆதார் கார்டு தந்து, விஜயத்திற்கான காரணத்தைச் சொல்லி சம்பிரதாயங்களை முடித்து இரண்டாம் தளத்திலிருந்த அறைக்குள் நுழைய கால் மணித்தியாலம் பிடித்தது. ஆதார் கார்டைப் பார்க்கும் போதே எள்ளலான நகைப்பு எட்டிப்பார்த்தது. ரிசப்ஷன் ஆசாமி தந்த கின்லே பாட்டிலை டேபிளில் வைத்து விட்டு அறைக்கு வெளியே வந்து நோட்டமிட,. ஓரமாக நான்கு அறைகள் தள்ளி அதே சாரியில் வாட்டர் டிஸ்பன்ஸர் ஒன்று உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.
தோள் பையில் இருந்த லேப்டாப்பை எடுத்து வைத்த பின். ப்ளாஸ்டிக் கவரிலிருந்த பேஸ்ட், ப்ரஷ் மற்றும் சோப்பை எடுத்து வைத்தான். அலைபேசி காலை மணி ஏழு இருபது என்று காட்டியது. மின்விசிறியின் காற்றே தேகத்திற்குப் போதுமானதாக இருந்தது. பிரிக்கப்படாத புதிய டீ ஷர்ட், ஜீன்ஸ் மற்றும் உள்ளாடையைக் கட்டிலில் எடுத்து வைத்து விட்டு, மேஜை அருகே இருந்த நிலைக் கண்ணாடியில் முகத்தை கவனித்தான். இரவு சவரம் செய்திருந்ததால் தெளிவான வதனம் என்று மனது சொன்னது. தோள் பை உள்ளே பொருள் சாதுவாக உறை சுற்றப்பட்டு நித்திரையில் இருந்தது.
தில்லை நகர் முதல் க்ராஸ் சென்று டவுன் பஸ் பிடித்து மத்தியப் பேருந்து நிலையம் செல்ல வேண்டும். அங்கிருந்து மெயின்கார்ட் கேட் போய் தெப்பக்குளம் தாண்டி நந்தி கோயில் தெரு கடந்து காளியம்மன் கோயில் தெரு சென்றால், அவ்விடம் பணிக்கு ஏதுவாக இருக்குமென கணக்கிட்டது மனம்.
இந்திரா காந்தி கல்லூரியின் பின் வழி வாசல், எஸ்ஆர்ஸி கல்லூரி, ஏராளமான சாலையோரக் கடைகள், சிறு கோயில்கள், ஜன சந்தடி என கனகச்சிதமாக பொருந்தக் கூடிய இடம். அங்கு தனக்கான காரணத்தை நிறுவுவது எப்படி? என்ன செய்யலாம்? யோசித்தபடி இருந்தான்.
காலை பத்தரை மணி வாக்கில் நந்தி கோயில் தெருவில் நடக்கும் போது வழமையான நகர வெயில் இல்லை. முந்தைய நாள் மழையா? நவம்பர் மாதத்திற்கு நகரம் தம்மைப் புதிதாக மாற்றிக் கொண்டு விட்டதா என்று விளங்கவில்லை. சிவன் கோயில் தாண்டி வடக்கு ஆண்டார் வீதி, வாணப்பட்டரை தெரு, காளியம்மன் கோயில் தெரு என நான்கு தெருக்களுக்கு நடுவே நிற்கும் போது இடம் பொருத்தமாக இருந்தாலும் சுய காரண விளக்கம் சொல்ல, பற்றிக் கொள்ள எதுவும் கிட்டாது என்று தோன்றியது.
தமிழின் சகல சஞ்சிகைகளையும் சுமந்தபடி காட்சியளித்த அந்தப் பெரிய பெட்டிக்கடை கவனத்தை ஈர்த்தது. துக்ளக், ஜூவி, ரிப்போர்ட்டர், நக்கீரன், குமுதம், குமுதம் பக்தி, ஆ.வி, குடும்ப மாத நாவல்கள், தினசரிகள், ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல்கள் தாண்டி காலச்சுவடு, உயிர்மை, தீராநதி போன்ற ‘ஆழ்ந்த வாசிப்புக்கு’ என்று சொல்லப்படும் பத்திரிகைகளும் புலப்பட்டன. ‘ஹரிகிருஷ்ணா’ என்ற கடையின் பெயரைப் பார்த்துவிட்டு நக்கீரனும், கிங்ஸ் சிகரெட்டும் வாங்கிக் கொண்டு நூறு ரூபாய் தாளை நீட்ட கடைக்காரர் ஒரு ரூபாய் கேட்டுப் பெற்று அறுபது ரூபாய் மீதி தந்தார். கிங்ஸ் பதினாறு ரூபாய், பாக்கெட்டாக வாங்கினால் நூற்றி ஐம்பத்தைந்து ரூபாய் என்று ஆச்சர்யத்தை விலக்க விளக்கம் தருவதாகக் கூடுதல் வியப்பைக் கொடுத்தார்.
யோசிக்காது மூன்று சிகரெட் பாக்கெட்களை வாங்கிப் பையில் பத்திரப்படுத்திக் கொண்டு ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் உடனடி பயன்பாட்டிற்கு வைத்திருந்த பாக்கெட் கதையை நினைத்துப் பார்த்தான். தில்லை நகரில் ஒரு பாக்கெட்டாக வாங்கினாலும் நூற்றி எண்பது ரூபாய் என்ற கடை ஆசாமியிடம் ‘என்னங்க இதெல்லாம்?’ என்று சலித்துக் கொண்ட போது வேண்டா வெறுப்பாக இருநூறு ரூபாய் தாளுக்கு இருபத்தைந்து ரூபாய் மீதம் தரப்பட்டது.
மகராணி தியேட்டர் வரை நடந்து. சந்தானம் வித்யாலயா பள்ளியைப் போய் பார்த்துத் திரும்பிக் காளியம்மன் கோயில் தெரு வந்தவன் அம்பீஸ் கஃபேயில் ஃபில்டர் காஃபி பருகினான். கடை முழுதும் டிகாக்ஷன் வாசம் நாசியைத் துளைத்தாலும் காஃபி காவிரி ஆறாய் இருந்து ஏமாற்றத்தைத் தந்தது. ஃபில்டர் காஃபி ருசி, பலகாரப் பக்குவம், புளிக்காத தயிர், தக்காளி எலுமிச்சை ரசம் என நாப்பழக்கத்தைக் கற்றுத் தந்த விக்னேஷின் நினைவுகள் அலைமோதின.
பள்ளிக்கூட காலத்தில் சித்தப்பா வீடு ஆண்டார் வீதியில் இருப்பதாக விக்னேஷ் சொல்லி இருக்கிறான். மதியம் ஒன்றரை மணி வரை அப்பகுதியிலே வட்டமடித்து நோட்டம் விட்டும் சுய காரண பிடிமானம் சிக்கவில்லை. மாயவரம் லாட்ஜில் மதிய போஜனத்தை முடித்து வெளியே வந்து ஹரி கடை வாசலில் புகைத்துக் கொண்டிருந்த போது பழைய வாழ்க்கையிலிருந்து வெகு தொலைவு போய் விட்டது தெளிவாகப் புரிந்தது.
‘பார்க்காத போது போது…’ நாகநாதர் டீக்கடையில் பாடல் பலமாக ஒலிக்கத் துவங்கியது. சிம்புவுக்கு உன்னி கிருஷ்ணன் பின்னணி பாடிய பாடல் அது. அதன் பிறகு அவர் சிம்புவுக்குப் பாடியதே இல்லை. தன்னுடைய விலகலையும், மாற்றத்தையும் அத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க ஏதோ முறிந்தது. அறைக்குப் போய் நீண்ட நேரம் உறங்க வேண்டும். இரவு சாஸ்திரி ரோடு ஆஸிஃப் பிரியாணியில் ஒரு கட்டு கட்ட வேண்டும். திடமாகி என்.எஸ்.பி. ரோடுக்கு பாதங்கள் நகரத் துவங்கின. ஒரு ரெடிமேட் துணிக்கடைக்குப் போய் அரைக்கை சட்டை, பேண்ட், உள்ளாடை வாங்கிக் கொண்டு. சிங்காரத் தோப்பு, வெஸ்ட் பொலிவார்ட் ரோடு என்று கால் போன போக்கில் திரிந்து சோஃபீஸ் கார்னர் பேருந்து நிறுத்தம் சென்று உறையூர் வழியாக மத்தியப் பேருந்து நிலையம் செல்லும் பஸ்ஸில் ஏறி அமர அலைச்சல் முடிவுக்கு வந்தது.
தூங்கி எழுந்தவனுக்கு மணி இரவு எட்டு ஆகியிருந்ததைப் பார்த்த போது இன்னும் தூங்கலாம் என்னும் சோம்பல் உணர்வு உசுப்பியது. புறந்தள்ளி எழுந்து வாய் கொப்பளித்து முகம் கழுவிய பின் இயல்பாக இருந்தது. ஆஸிஃப் பிரியாணி கடைக்கு நடந்தே போய் வர முடிவு செய்த போது, தேக உறுப்புகளைப் பொறுத்த வரை கால்களின் அலுவல் என்பதையே விலக்கி வாழ்வதாகத் தோன்றியது. ஆட்டோ, இரு சக்கர வாகனம், கார், தொலை தூரப் பயணங்களுக்கு சொகுசுப்பேருந்து, ரயில், விமானம் என வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது. இது போன்ற தருணங்களில் தான் நடை கால் கூடுகிறது. ஷார்ட்ஸைத் துறந்து ஜீன்ஸ், டீ ஷர்ட் அணிந்து கொண்டது வசதியாக இருந்தது.
ஸ்லாகிக்கும் படி ருசி இல்லை எனினும் பிரியாணி திருப்தியாக இருந்தது. நெஞ்சைக் கரிக்கவில்லை. காரம் அதிகமில்லாது வயிற்றுக்குப் பாதகமில்லாத உணவு. பீஸிலும் குறைவில்லை. மனதில் பதிந்த சுவையைத் தவிர்த்துப் பார்த்தால் பிரியாணி ஏற்கக்கூடிய விதத்தில் தான் இருந்தது.
பெட்டிக் கடையில் கடலை மிட்டாய் வாங்கித் தின்று விட்டு புகைத்தபடி சாஸ்திரி ரோட்டில் நடக்கத் துவங்கினான். காளியம்மன் கோயில் தெரு சகல அம்சங்களும் பொருந்தக் கூடிய விதத்தில் இருந்தாலும் சுற்றத்தாரின் சந்தேகத்தை நீக்கக் கூடிய காரண அம்சம் எதையும் உருவாக்க இயலவில்லை. அது அவ்வளவு முக்கியமா? காரியம் தானே அத்யாவசியம் என்ற யோசனைக்கு மனம் சமாதானமாகவில்லை. அண்ணா சிலை தாண்டி ஆண்கள் பள்ளிக் கூடம், காவிரியாறு பாலம் நோக்கிச் செல்லும் சாலையைத் தேர்வு செய்தால் என்ன? புது யோசனை மூளையில் உதித்தது. நாளை போய் பார்த்து முடிவெடுக்கலாம். எதற்கும் அவசரமே கூடாது. நிதானம் மிக முக்கியம். பன்னிரெண்டு மணி வாக்கில் அறைக்குத் திரும்பியவன் டிவியைப் பார்க்க அரை மணித்தியாலம் கூடக் காணச் சகிக்கவில்லை.
டிவியை அணைத்து, ரூமைச் சாத்தி விட்டு படிகள் வழியே கிழே இறங்கி விடுதிக்கு வெளியே போய் ஓரமாக நின்று கொண்டு சாலையைப் பார்த்தபடி புகைக்க எப்படிச் செய்வது? இன்னும் இடமே ஊர்ஜிதமாகவில்லை. எல்லாம் சரியாக முடியுமா? எதையும் கணக்கிட முடியவில்லை. எண்ணவோட்டம் தடுமாறியது.
அறைக்குத் திரும்பிய உடனே மொபைலை எடுத்துத் தொடு திரையை ஸ்பரிசித்து டேட்டாவை உயிர்ப்பித்து யூ ட்யூபில் பாடலைக் கேட்கத் துவங்கியது ஆதுரமாக இருந்தது. பார்க்காத போது போது… ஆஆஆ ஹம்மிங்கை கேட்கக் கேட்க ஆ ஆ ஆ பெண்ணே உன் கண்ணாளன் பிறை ஏறி வருவானே விண் கொண்ட மீனெல்லாம் விளையாடத் தருவானே என்று சிரித்தபடி மெலிதாகப் பாடி முடித்தான்.
காலை எட்டு மணிக்கெல்லாம் அறையிலிருந்து புறப்பட்டு மத்தியப் பேருந்து நிலையம் போய் கேகே நகர் செல்லும் நகரப் பேருந்தில் ஏறி டெர்மினஸ்ஸில் இறங்கி வேக வேகமாக வயர்லெஸ் ரோடு நோக்கி நடையைத் தொடர்ந்தவன் இடது புறம் வயர்லெஸ் ரோடு திரும்ப வேண்டிய இடத்தில் நின்றபடி தென்றல் நகர் போகலாமா என யோசிக்க கால்கள் இடது புறமே திரும்பின. கால் மணித்தியாலம் வேக நடை முடித்த பிறகு அலைபேசி பட்டன்களைத் தட்டிப் பேச, சம்பாஷணை முடிய நாற்பது நிமிடங்களும் இரண்டு சிகரெட்களும் தேவையாய் இருந்தன.
பேசி முடித்த பின் மொபைலை ஆஃப் செய்து செம்பட்டு ஏர்போர்ட் பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
ஏர்போர்ட்டிலிருந்து டவுன் பஸ் ஏறி டிவிஎஸ் டோல்கேட்டில் இறங்கி. அங்கிருந்து மற்றொரு டவுன் பஸ் பிடித்து மெயின்கார்டு கேட் செல்லும் போதே, இது போன்ற தலையை சுற்றி மூக்கைத் தொடுவது வழமையாகிப் போனதே என்ற சலிப்பும் வழமையாக எட்டிப் பார்த்தது.
சிகரெட் கையிருப்பு இருந்ததால் ஹரி கிருஷ்ணா கடையில் ஒரு பாக்கெட் மட்டும் வாங்கிய போது அந்தக் குரல் கவனத்தைக் கணிசமாக ஈர்த்தது.
“உளுத்தம் பால், சத்தான பானம் உளுத்தம் பால், எலும்புகளுக்கு வலு சேர்ப்பது உளுத்தம் பால், குளிர், மழைக்காலத்திற்கு ஏற்றது உளுத்தம் பால், கர்ப்பிணிகளுக்கு வலிமை தருவது உளுத்தம் பால், உளுத்தம் பால், உளுத்தம் பால், உளுத்தம் பால்” மிதிவண்டியில் கேன் கட்டியபடி விளம்பரம் ஸ்பீக்கரில் ஒலிக்க அந்த ஆசாமி ஜரூராக வியாபாரம் செய்து கொண்டிருந்தார். உளுத்தம் பால் என்று முடிக்கும் போது குரலில் எழும்பிய அழுத்தம் மனதில் பதிந்தது.
பலகாரக் கடைக்காரர், நகைக் கடைப் பணியாளர்கள், வெண்ணை, நெய் விற்பனை ஸ்தாபன ஆள் போன்றோர் வாங்கினார்கள். வாடிக்கையாளர்கள் போல! விளம்பரத்தை சொன்ன குரலின் மாறுபட்ட த்வனி, அசாதரணமான முறையில் இருந்தாலும் தெளிவான உச்சரிப்பு… யாராலும் மறக்கவே முடியாது. தனித்துவம், தனி முத்திரை. இது போன்ற வேறுபடுத்தி நிலை நிறுத்திக் காட்டும் அடையாளங்கள் வியாபாரத்தின் ஏற்றத்திற்கு உதவும் ஆனால் தன் பணிக்கு இடையூறான சங்கதி. அவசியம் தவிர்க்க வேண்டிய அம்சம். அண்ணா சிலை நோக்கி நடை ஆரம்பமானது. திருச்சியில் இரு நாட்களாகத் தொடரும் நடைப்பயணம் துவக்கத்தில் உபாதையாகத் தெரிந்தாலும் தற்போது பழகிவிட்டது. உற்சாகத்தைத் தந்தது. வெயில் இல்லாததால் தேக அசதி, வியர்வை, மூச்சிறைப்பு போன்றவை அறவே இல்லை.
மேல்நிலைப்பள்ளிக்கு எதிர்புறம் இருந்த கட்டிடத்தில் ஒரு செவிலியர் பயிற்சி நிலையம் இயங்கிக் கொண்டிருந்தது. அதனருகே ஒரு டீக்கடை வேறு. டீ சொல்லி சிகரெட்டுடன் குடிக்க இதமாக இருந்தது. பயிற்சிப் பள்ளியைப் பார்த்த உடனே சுய காரணங்கள் மனதினுள் விரியத் துவங்கின. அது தொடர்பான ஒத்திகை, எப்படி அரங்கேற்றம் செய்வது என்ற திட்டமிடல்கள் தனியாக நடந்தேறின.
“நர்ஸிங் க்ளாஸ் டைமிங் எப்படிங்க?” கடைக்காரரிடம் விசாரிக்க, காலை 9.30 மணிக்குத் துவங்கி மாலை 4 மணி வாக்கில் முடியும் என்ற தகவல் வேலையையும் எளிதாக்கும் என்று தோன்றியது.
எதிரே ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மறுபுறம் பயிற்சி நிலையம், அருகே சில லாட்ஜ்கள், சின்ன கோயில், நான்கு சக்கர வாகன சர்வீஸ் கடை, பேக்கரிகள்… இது தான் தோதான இடம். மாற்று சிந்தனையே இனி தேவையில்லை. அழுத்தமான நிலைப்பாடுடன் பர்ஸிலிருந்த ஒரு விஸிட்டிங் கார்டை சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு நர்ஸிங் பயிற்சி நிலையத்திற்கு உள்ளே செல்லும் போதும் மனதுள் ஒத்திகை தொடர்ந்தபடி இருந்தது.
ஒரு மணித்தியாலம் கழித்து வெளியே வந்து மீண்டும் டீக்கடைக்குப் போய் கோக் வாங்கி புகைக்க ஆரம்பிக்க. ‘சளைக்காம தம் அடிப்பீங்க போல’ கடைக்காரர் கேள்விக்கு சிரித்தவன், ‘சிகரெட்டே பிடிக்காம மாசக்கணக்குல இருக்கவும் முடியும்’ என்றான். எதிர்பார்த்தபடி கடைக்காரர் நர்ஸிங் கூடத்திற்கு சென்றது குறித்து விசாரிக்க இரண்டாவது முறையாக அரங்கேற்றம் செய்ய கடைக்காரர் திருப்தியடைந்தார்.
“நான் ஒரு என்ஜிஓல இருந்து வரேன். இந்த மாதிரி செவிலியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு இலவசமா சில ஸ்டடி மெட்டீரியல்ஸ், மருத்துவ உபகரணங்கள், ஸ்டூடண்ட்ஸ்க்கு உதவிகள்னு செய்வோம். அதற்கு தகுதி வாய்ந்ததா தரமான கோச்சிங் தராங்களான்னு பார்த்துட்டு ஒரு பேக்கேஜா எல்லாத்தையும் செய்து தருவோம். அதை விரிவா எடுத்து சொன்னேன்.”
“கூல் ட்ரிங்ஸ் வாங்கறீங்க, டீ வாங்கறீங்க, பலகாரம் எடுத்து சாப்டீங்க, சிகரெட் மட்டும் நம்ம கிட்ட வாங்கறதில்லை, எப்பவும் கைல ஸ்டாக் வைச்சுருக்கீங்க ஏன்?”
“உங்க கிட்ட கிங்ஸ் என்ன விலை?”
“பதினெட்டு ரூபாய்”
“ஒரு சிகரெட் பதினாறு ரூபாய், ஹரிகிருஷ்ணா, பாக்கெட் நூற்றி ஐம்பதைந்து” என்று சலிக்காமல் கதை சொல்லி முடித்த பிறகும் கடைக்காரர் விடவில்லை.
“மாயவரம் லாட்ஜ் பக்கத்துல இருக்கிற கடையா?
“ஆமாம்”
“அங்க தான் தங்கி இருக்கீங்களா?”
“இல்ல, பக்கத்துல இன்னொரு லாட்ஜ்”
ஒரு வயதான பெண்மணி கடைக்கருகே வந்து ‘மணி’ என்று குரல் தர, கடைக்காரர் ஒரு பிளாஸ்டிக் சாக்குப் பையை எடுத்துத் தந்தார். வயதான அம்மாள் பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.
‘யாரிவங்க?’
‘அது பெரிய கதை, இந்தம்மா புருஷன் சிறு வயசுலயே இறந்து போக, இவங்க வீட்டு வேலை பார்த்து பசங்களை ஆளாக்கி விட்டாங்க. கல்யாணமும் பண்ணி வைச்சாங்க. பேரன், பேத்தின்னு இரண்டு பேருக்கு கல்யாணம் ஆகிடுச்சு. வயசான அம்மாவை பசங்களும் கண்டுக்கல, பேரனும் வைச்சுக்கல, பொறுக்கிப் பயலுக. பேக்கரி கடைக்காரர் தன் வீட்டுப் பக்கத்துல கடை ஜாமான் வைச்சுருக்கிற ரூம்ல ஒதுங்க இடம் தந்து சாப்பாடும் கொடுத்தார். இந்தம்மா சாப்பாடை வாங்காம அஞ்சு வீட்ல வேலை செய்து வயித்தைக் கழுவுது. தன்னால முடிஞ்சதுன்னு சொல்லி மாச வாடகையா ஆயிரம் ரூபாய் தருது. வைராக்கியமான பொம்பளை. பசங்க மேல கேஸ் போட்டு ஒரு வழி செய்யலாம்னு பல முறை சொல்லிப் பார்த்துட்டோம். கேட்க மாட்டேங்குது. ப்ளாஸ்டிக் ஜாமான், பழைய பேப்பரை எல்லாம் கட்டி வைப்பேன். வாரத்துக்கு ரெண்டு வாட்டி வந்து எடுத்துட்டுப் போகும்’
‘தங்கி இருக்கிற வீடு எங்க?’ விசாரித்தான். மேற் கொண்டு என்ன பேசுவது என்று தெரியவில்லை.
‘பக்கத்துல சாப்பிட நல்ல சைவ ஹோட்டல் எதாவது இருக்கா?’
‘நல்லா கேட்டீங்க, மதியம் சைவ சாப்பாடுன்னா சத்திரம் பஸ் ஸ்டாண்ட் தான். இங்க எதுவும் கிடையாது’
உணவு, சிகரெட், டீ, பலகாரம் என்ற அடையாளம் அவனுக்கே கேலியாகப்பட்டது. உலவ விட இந்த பிம்பமும் நல்லதுக்குத் தான் என நினைத்துக் கொண்டான். மணி நான்கரை ஆகி இருந்தது, பள்ளிக்கூடத்திலிருந்து மாணவர்களும், பயிற்சி நிலையத்திலிருந்து மாணவிகளும் பெருமளவு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். பசித்தது. எதிரே சாலையைக் கடந்து பேக்கரிக்குப் போய் பஃப்ஸ் சாப்பிட்டு பள்ளியருகே வந்து சுற்றி கவனமாக ஆராய வாகான இடம் கிடைத்துவிட்டது என்று மனம் கும்மாளமிட்டது.
வஸந்தபவனுக்குப் போய் உண்டு முடித்து மீண்டும் என்எஸ்பி ரோடு சென்று மற்றொரு ரெடிமேட் உடுப்பு கடையில் இரண்டு செட் டிரஸ் வாங்கிக் கொண்டு அறைக்கு மாலை ஐந்து மணி வாக்கில் திரும்பியவனுக்கு முதல் நாள் இரவு துவைத்து வைத்த உடுப்புகள் உலர்ந்து போயிருந்தது. மடித்து ஒரு கவரில் திணித்து பைக்குள் வைத்தான். நாளை காரியத்தை முடித்து விடலாம். மனம் தெளிவாக திட்டமிட்டது. பார்த்த இடங்கள், தேர்ந்தெடுத்த இடம் என அனைத்தையும் வரிசைப்படுத்தி அகக் காணொளி ஒன்றை அப்டேட் செய்து பார்த்தான். துல்லியமாக இருந்தது. திருப்தியான உணர்வு வெளிப்பட்டது. இரவுக் காட்சிக்கு ஏதாவது சினிமா பார்க்க வேண்டும். நாளை திட்டம் குறித்துப் பேசிவிட வேண்டும். அடுக்கடுக்காக சிந்தனைகள் ஓய்வின்றி மூளையை ஆக்ரமித்தன. உடுப்பைத் துவைத்து உலர்த்தி, பெர்முடாஸ் மற்றும் டீ ஷர்ட்டுடன் சினிமா தியேட்டர் செல்ல ஆட்டோ பிடித்தான்.
திரைப்படம் பார்த்து முடித்து ரம்பா தியேட்டரிலிருந்து காலாற நடந்து வந்தவன் சிலைக்கு மறுபுறம் திறந்திருந்த டீக்கடையில் தேநீர் அருந்தினான். பள்ளிக்கூடமருகே சாலையில் இருந்த சிறு பள்ளம் வசதியாக இருக்குமென மனதிற்குப்பட்டது. நாளை மதியம் சற்று ஜன சந்தடி குறைந்த நேரத்தில் செட் செய்து மாலை நான்கரை மணிக்கு சத்திரத்திலிருந்து டவுன் பஸ்ஸில் அறைக்குத் திரும்பும் போது ரிமோட்டை… பாதகமான சாத்தியக்கூறுகள் பலவற்றை மனது யோசித்தாலும் சாதகமாக முடியும் என்று பலமாக உள்ளுணர்வு சொன்னது. இது தான் என்று இறுதி முடிவானது. ஆட்டோ பிடித்து அறைக்குப் போய் சேர்ந்த போது தெளிவாக இருந்தது.
உறக்கம் வசப்படவில்லை. உடுப்புகள் உலர்வதற்காக மின்விசிறி முழு வேகத்தில் சுழன்றபடி இருந்தது. காலை மூன்று மணிக்குப் பல் துலக்கி வெளியே போய் டீ குடித்து சிறிது நேரம் அறையில் அமர்ந்திருந்த பின் குளித்து புது ஆடை அணிந்து வெளியே புறப்பட்டான். அனைத்து ஆடைகளும் தோள் பையில் குடியேறி இருந்தது. ஒரு பாலிதீன் கவரில் ஷார்ட்ஸ் மற்றும் டீ ஷர்ட்டை மடித்து பையின் மேற்புறம் வைத்துக் கொண்டு ஆட்டோ பிடித்து ‘தீரன் நகர் போஸ்ட் ஆஃபிஸ்’ என்றான்.
ஆகாயத்தில் கருமை தாராளமாக குடி கொண்டிருந்தது. செல் ஃபோனை ஆன் செய்து பட்டனை அழுத்தி டயல் செய்தான்.
‘இன்னிக்கு ஈவ்னிங்’
‘…’
‘பக்காவா எல்லாம் பார்த்தாச்சு, இடம் மாத்தினதால ஒரு நாள் லேட்’
‘…’
‘எதுவும் தப்பாது, நாலு மாசத்துக்கு முன்ன நம்ம ஆளு பார்த்துட்டு வந்து தந்த இன்புட்ஸ் யூஸ்ஃபுல்லா இருக்கு’
‘…’
‘இடம் நான் செலக்ட் பண்ணது, பக்காவா இருக்கும்’
‘…’
‘இருக்கட்டும் நம்ம ஆளுங்க அங்க கொஞ்சம் அதிகம் அதுவும் நமக்கு அட்வான்டேஜ், சந்தேகம் வராது’
‘…’
‘கவலையே படாத, நமக்கு சொம்படிக்க ஒரு கூட்டமே திரியுது, சோஷல் நெட்வொர்க், மீடியா, பாலிடிக்ஸ்னு எக்கச்சக்கமா இருக்கிற கும்பல் தான் நமக்குப் பலம், இந்த மண்ணோட ஸ்பெஷாலிட்டி அது’ பலலமான நக்கல் சிரிப்பு வெளியேறியது.
பேசி முடித்து பையில் சுருட்டி வைத்திருந்த காகிதங்களை ஒரு ஓரமாக ஆள் யாருமில்லாத இடத்தில் லைட்டரை மூட்டிப் பற்ற வைத்தவுடன் லேப்டாப் மற்றும் செல் பேசிகளை முடிந்த அளவு உடைத்து நெருப்பில் போட பையில் இருந்த பிளாஸ்டிக் குடுவையில் சேமித்து வைத்திருந்த பெட்ரோலையும் மேலே ஊற்றினான். தீ கொழுந்து விட்டு எரிந்தது. உள்ளாடைப் பொட்டலத்தை தள்ளி வீசியெறிய, கேட்ஜெட்கள் முழுதும் அக்னிக்கு இரையானதைப் பார்த்து மனத் திருப்தியுடன் கிளம்ப முடிந்தது.
மாரீஸில் காலைக் காட்சி சினிமா பார்த்து பனானா லீஃபில் சாப்பாடை நிறைவு செய்து அண்ணா சிலை டீக்கடைக்குப் போய் சேர்ந்த போது வயதான அம்மா பேசிக் கொண்டிருந்தார். பார்த்து சகஜமாகச் சிரித்தான்.
கடைக்காரரிடம் இயல்பாக காட்டிக் கொண்டு பேசியவனின் இயல்பை வயதான அம்மா அசைத்தார்.
“மகளுக்கு நேத்து சமயபுரத்துல முடி இறக்கியாச்சு. வேண்டுதல் நிறைவேறியது திருப்தியா இருக்கு. இந்தா குங்குமம்” ஒரு பொட்டலத்தைப் பிரித்து கடைக்காரர் நெற்றியில் இட்டவளிடம் “தம்பிக்கும் வை” என்றார் கடை ஆள்.
அடையாளம் ஏதுமில்லாதவன் போல் கவனமாய் இருந்தவனுக்கு இடறியது. பதறி அவளைத் தடுத்தான். அவனை மீறி ‘அவன்’ வெளிப்பட்டதை கடைக்காரர் அதிர்வுடன் உள்வாங்க, திணறியவன் “பேப்பர்ல மடிச்சுத் தாங்க, குளிச்சுட்டு ஈவ்னிங் ரூம்ல வைச்சுக்கிறேன்” என்று சமாளித்து பெண்மணி மடித்துத் தந்ததை பேண்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்தி, நொந்து கொண்டான்.
கஷ்டப்பட்டுக் காட்சிப்படுத்திய சௌஜன்ய நிலைப்பாடை இந்த உடல்மொழி சிதைத்து விட்டது. அம்மா கிளம்பிய பின் ‘யாரந்த மகள்?’ என்று வினா எழுப்பினான்.
‘பக்கத்து வீட்ல லேடி ஒன்னு இருக்கு. நாற்பது வயசாகியும் பிள்ளை பிறக்கல, நம்ம அம்மா சமயபுரத்துக்கு வேண்டிக்க சொல்லிச்சு. பிள்ளையும் பிறந்துடுச்சு. வேண்டுதலை இன்னிக்கு நிறைவேத்தி இருக்காங்க. பிரசாதம் தரதுக்காக நம்ம கடைக்கு வந்துட்டுப் போறாங்க. இன்ஸ்ட்டிட்யூட் போகலியா?
‘இல்ல. டீடெயில்ஸ் சம்பந்தமா நிறைய மேட்டர் தயார் பண்ண வேண்டி இருக்கு. நாளைக்கு தான்’.
கடைக்குப் பின்புறம் இருந்த தெருவில் ஒரு வீடு ஷாமியான பந்தல், ஆட்கள் வருகை என பரபரப்பாக இருந்தது. துக்க வீடு என அறிவதில் சிரமமேதும் ஏற்படவில்லை.
‘தவறிப் போனது யாரு?’
‘வயசானவர் தான், உறையூர்ல ஃபேன்ஸி ஸ்டோர் இருக்கு, மகன் பார்த்துக்கிறான். உடம்பு முடியாம இருந்தாரு. காலைல ஆஸ்பத்திரியில…’
‘கேட்டுக் கொண்டே இருந்தவன் பள்ளத்தை கவனித்தான். சாலையில் ஆள் நடமாட்டம் ஏனோ குறையவில்லை. சாவு வீடு காரணமாக இருக்குமோ என்ற சிந்தனை கலவரமூட்டியது. ‘எப்போ எடுப்பாங்க?’
‘காலைல ஆறு மணிக்கெல்லாம் காலமாயிட்டாரு. சொந்தக்காரங்க எல்லாம் பக்கத்துல தான் இருக்காங்க. எல்லாரும் ஆஜர் ஆகிட்டாங்க. மூனு மணிக்கு கிளம்பிடும்னு சொல்றாங்க’
காத்திருந்தான். தாள சப்த ஒலி கூடியது. இறுதிப் பயணத்திற்கு ஊர்தி கிளம்பிவிட்டது. தெரு உள்ளே இருந்து மெதுவாக வந்த வாகனம் பிரதான சாலையிலிருந்து இடுகாடு செல்ல இடப்புறம் திரும்பியது. வண்டி முன்னே நான்கு பேர் ஆட சர வெடி முழங்கியது. டீக்கடையைத் தாண்டி வண்டி ஊர்ந்து போக, சலனமின்றி பார்த்துக் கொண்டிருந்தான்.
சைரன் சத்தமொன்று செவியருகே பலமாக கேட்கத் திரும்பிப் பார்த்தால் ஒரு ஆம்புலன்ஸ் நோயாளியைச் சுமந்தபடி தவித்துக் கொண்டிருந்தது. முன்னே நடந்து செல்லும் மக்கள், பிண ஊர்தி, ஆட்டம் போடும் ஆட்கள், வெடி என ஆம்புலன்ஸிற்கு அடுக்கடுக்காக வேகத் தடைகள்.
ஒரு நிமிடத்தில் சாலை சீதோஷ்ணம் மாற ஆரம்பித்தது. ஊர்தி ஓரமாக ஒதுங்க, நடந்து போன மக்களும், ஆடிக் கொண்டிருந்தவர்களும் சாலையின் இடப்புறமாக வரிசை கட்டி ஒதுங்கிக் கொண்டார்கள். வெடி வைப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. நெற்றி வழிய திருநீறு பூசி ஈர வேட்டி அணிந்து மீசை, தலை சிகை மழித்துக் காணப்பட்ட ஆள் ஆம்புலன்ஸைப் பார்த்து ‘வழி விட்டாச்சு, வேகமா ஆஸ்பத்திரி போங்க’ என்று உரக்க முழங்கினான். தடைகள் விலக சீரான வேகத்தில் ஆம்புலன்ஸ் ஜீவனுடன் ஜீவனற்ற ஊர்தியைத் தாண்டிப் போனது.
பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஏதோ நொறுங்குவது போல மனம் ஊசலாட்டம் கொண்டது. உணர்வு, புத்தி, திட்டம் என்று வகுத்துப் பார்த்த யோசனை நீடிக்கவில்லை. உணர்வு மேலோங்கியது. சகலமும் துறந்தவன் பர்ஸில் சில ஆயிரம் ரூபாய் தாள்களை எண்ணிப் பார்த்தான். நான்கைந்து விஸிட்டிங் கார்டுகளை லைட்டர் துணையுடன் சாம்பலாக்கி எழுந்தவன், ஒரு கேரி பேக்கில் பர்ஸை வைத்துக் கட்டி எழுந்தான்.
‘ஸ்கூல் தாண்டி பக்கத்து ரைட் உள்ள தானே அம்மா வீடுன்னு சொன்னீங்க?’ கடைக்காரருக்கு கேள்வி ஒன்றை உதிர்த்தான்.
‘ஆமாம்’
‘திரும்ப காவிரி ஆறு பாலம் போக ரிட்டர்ன் வந்து மெயின் ரோடு போறது தானே பெட்டர்?’
‘உள்ள வழி உண்டு ஆனால் அது சுத்து இது தான் பக்கம்’
வயதான அம்மா வீட்டுக்குப் போய் அழைக்க அவனைக் கண்டு கொண்டவர் ‘என்னப்பா மோர் சாப்பிடறியா?’ கேட்டார்.
‘வேண்டாம்மா, இந்தப் பைகளை வைச்சுக்குங்க, ரிடர்ன் வந்தா வாங்கிக்கிறேன்’ என்றவன் தயங்கி ‘மோர் தாங்கம்மா’ என்றான்.
பர்ஸ் உள்ள கேரி பேக், துவைத்து மடித்த உடுப்பு, புது உடுப்பு வைத்திருந்த கேரி பேக்கை கொண்டு போய் வீட்டிற்கு உள்ளே வைத்து விட்டு மோர் சொம்பை நீட்டினார்.
ஒரே மிடறில் முழுதாகக் குடித்து முடித்தவன் ‘தேங்ஸ், போறேன்மா’ விடை கொடுத்தான்.
பேண்ட் பாக்கெட்டில் இருந்த குங்கும பொட்டலத்தை சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டவன், பைக்குள் இருந்த ரிமோட்டை உறையில் இருந்துப் பிரித்துக் கையில் தயார் நிலையில் வைத்த படி காவிரி ஆறு பாலம் நோக்கி வேகமாக நடக்கத் துவங்கினான். எந்த பாதிப்புமின்றி ‘தனி’த்துவம் கொண்டதாக நிறைவேறும் என்று நம்பினான்.
கதையோட போக்கு இப்படி இருக்கும்னு படிக்க ஆரம்பிக்கும் போது தெரியல. திருச்சியை சுத்திக் காட்டுவது போல துவங்கி இறுதியில் வித்தியாசமா முடியுது.
ஆம்புலன்ஸ், சவ ஊர்தி… மாறுபட்ட தீம்.
ஆன்ட்ராய்ட் டச் ஃபோன், பட்டன் ஃபோன்… இதெல்லாம் எதுக்குன்னு ஆழமா யோசிச்சா புரியுது. ரெணாடாவது முறை படிக்க வைக்கிற எழுத்து. எங்கேயாவது மிஸ்டேக்கான்னு க்ராஸ் செக் செய்ய செகண்ட் டைம் படிச்சேன். அது தான் உண்மை.
ரெகுலர் பேட்டர்ன்ல இல்லாத கதை.
கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்.
சிறப்பான மொழிநடை