காசு, பணம், துட்டு, மணி, மணி

நோபல் பரிசு- 2022- பொருளாதார அறிவியல் (Economic Sciences) இது Sveriges Riksbank Prize என 1969 முதல் வழங்கப்படுகிறது.

அவள் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவள். பள்ளிக்கூடம் சென்றதில்லை. அவள் ஒரு வழிப் போக்கனை ஒரு நாள் சந்திக்கிறாள். அவள் கொடுக்கும் கஞ்சியைக் குடித்தவாறே அவன் கண்ட நிலக்காட்சியை அவளிடம் சொல்கிறான் “ஆச்சி, அம்பாரமா உப்பு வெளஞ்சுக் கடக்கு.” அவள் உடனே சொல்கிறாள் : ‘நல்லதில்ல ஐயா, மழ கொறைஞ்சா உப்பு அதிகம் வெளையும்; பயிரு கொறயும், வெள்ளாம தடுமாறும், ராசாவுக்கு வரி கிட்டாது; கருவூலம் நெறையாது, பசியும், பஞ்சமும் கூடும்.’ அவன் அசந்து போகிறான், போகிற போக்கில் அவள் எத்தனை அழகாக பொருளாதாரத்தை எளிமையாகச் சொல்லி விட்டாள் என்று.

அத்தகையதொரு எளிமை தான் இந்த வருடத்து நோபல் பரிசை பொருளாதார அறிவியலுக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.

1983-ல் எழுதி வெளியிடப்பட்ட “வங்கிகள் ஸ்தம்பிப்பதும், (வங்கிகளின் மீதான ஓட்டம்) வைப்புக் காப்பீடும், நீர்மை நிலையும்” (Bank Runs, Deposit Insurance, and Liquidity) என்ற கட்டுரைக்காக டக்ளஸ் டபிள்யூ டயமண்ட், (Douglas W Diamond) மற்றும் பிலிப்ஸ் ஹெச் டிப்விக் (Philips H Dybvig) என்ற இரு பேராசிரியர்களுக்கும், “பெரும் பொருளாதார மந்த நிலை பரப்புதலில் நிதிச் சிக்கல்கள் ஏற்படுத்தும் பணம் சாரா விளைவுகள்” (Non Monetary effects of Financial Crisis in the propagation of Great Depression) என்ற கட்டுரைக்காக அமெரிக்காவின் நிதி அளிப்புக் கட்டுப்பாட்டுக்குப் பொறுப்பெடுக்கும் நிறுவனமான அமெரிக்க ஃபெடரல் ரிஸர்வின் முன்னாள் தலைவரும், (US Federal Reserve Chairman) தற்போது ப்ரூக்கிங்க்ஸ்அமைப்பில் ( (Brookings Institution) பதவி வகிப்பவருமான பென் எஸ் பெர்னேன்கேயும் (Ben S Bernanke) கிடைத்துள்ளது. மூவரும் அமெரிக்காவில் பணி புரிகின்றனர்.

இந்தப் பரிசினைப் பற்றி சில முணுமுணுப்புகள் எழாமலில்லை. வங்கிகள் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்படுவது, ஏற்கெனவே அனைவரும் அறிந்த ஒன்று, அதைப்பற்றிக் கணித ரீதியாக ஒரே ஒரு கட்டுரையை எழுதிய டயமண்ட் மற்றும் டிப்விக் இருவருக்கும் இத்தகைய அங்கீகாரம் ஏன் என சில பொருளாதார நிபுணர்கள் கேள்வி கேட்கிறார்கள். அதைப் போலவே பென்னைப் பற்றியும் விமர்சனங்கள் எழாமலில்லை. ஆய்விற்காக அதைப் பெறும் தகுதியைக் காட்டிலும், கொள்கை வகுத்தவர் (Policy Maker) என்பதால் அவருக்கு இது வழங்கப்பட்டுள்ளது என்று பலர் சொல்கின்றனர்.

அரசியல் அறிவியலாகவும், பண அறிவியலாகவும் கொண்டாடப்படும் ‘அர்த்த சாஸ்திரம்’ கிட்டத்தட்ட 2500 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒன்று. கௌடில்யர் என்ற சாணக்கியர் அதில் கீழ்க்காணும் சில அம்சங்களை விரிவாகப் பேசுகிறார்:

  • உழவு, வணிகம், வர்த்தகம், கலை போன்ற பல பொருளாதாரச் செயல்பாடுகளின் மூலம் அரசு நிதியைப் பெறுகிறது.
  • அரசின் சக்தி, கருவூலத்தின் சக்தியைச் சார்ந்துள்ளது.
  • பொருளாதாரச் செயற்பாடுகள் தான் பொது வாழ்வின், சமூகத்தின் முக்கிய அங்கங்கள்.
  • சாதாரணச் சூழல் நிலவும் சமயங்களிலும், போர், பஞ்சம், இயற்கைச் சீற்றங்கள் போன்ற அசாதாரண நிலைகளிலும், அரசின் நிதிச் சக்தியே மையப் பொருளாக இயங்க முடியும்.
  • பணச் சுழற்சி என்பது சந்தையைச் சார்ந்து இயங்க வேண்டும். தேவைக்கேற்ற பணப்புழக்கம் இன்றியமையாதது. பணம் கிடைப்பதில் தடைகள் கூடாது. தங்கம், வெள்ளியைக் கொடுத்து தங்களுக்குத் தேவையான நாணயங்களை அரசின் பண மையத்தில் ஒரு தொகை செலுத்தி பொது மக்கள் பெற்றுக் கொள்ளலாம். அதாவது, பொருளாதாரச் செயல்களை, பணம் கிடைப்பது என்பது பாதித்துவிடக் கூடாது.
  • வளரும் சந்தையில் முதலீடு செய்யும் மனிதர்கள், அத்தகைய நிறுவனங்களில் இரு முக்கிய அம்சங்களை எதிர் பார்க்கிறார்கள் 1) முதலீடுகளைச் சரிவர செய்யும் திறன் பெற்றிருப்பது. 2) நிர்வாகத் திறமைகள் இருப்பது.
  • அடிப்படையில் ஒரு வங்கி (அப்போதெல்லாம் தனி நபர் அல்லது குடும்பத் தொழிலாகத் தலைமுறையாகச் செய்பவர்) நேர்மையாளரை, சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பவரைத் தலைவராகக் கொண்டிருக்க வேண்டும். அவர், பொது மக்கள் அல்லது சங்கங்களிடமிருந்து வைப்புத் தொகையைப் பெற்று, பணம் தேவையான தொழிலுக்கு கடனாகக் கொடுக்கலாம். வைப்புத் தொகையாளர் காலத்திற்கேற்றவாறு வட்டியும், கடன் பெற்றவர்கள் காலத்திற்கேற்றவாறு வட்டியும் முறையே பெறுவார்கள், செலுத்துவார்கள். எனவே, அவர் எப்போதும் இரு நிலைகளையும், வைப்புத் தொகை பெறுவதும், கடனளிப்பதும், வைப்புத் தொகையாளர் கேட்கையில் பணத்தைத் திருப்பிச் செலுத்தும் வகையில் நிதி நிர்வாகம் செய்யத் தெரிந்தவராக, கடனை வசூலிக்கும் திறமையானவராக இருக்க வேண்டும். பார்க்காத பயிரும், கேட்காத கடனும் பாழ்.

இன்றைய பொருளாதார நிலைப்பாடுகளுக்கும், செயல்பாடுகளுக்கும் பொருந்திப் போகும் விதிகளை அவர் வகுத்திருக்கிறார்.

அனைவரும் அறிந்த ஒன்றை கணித ரீதியாகச் சொன்னதற்கு நோபல் பரிசு தரலாமா என்ற கேள்வியை நாம் பரிசீலனை செய்வோம். சார்ல்ஸ்கின்டில்பெர்கர், (Charles Kindleberger) ஹைமேன் மின்ஸ்கி (Hyman Minsky) போன்ற, விவாதங்களில் நாட்டம் கொண்டோருக்குமான பதிலாக இதை நாம் சிந்திக்கலாம்.

டயமண்ட்- டிப்விக் மாதிரி

மிக அலங்காரமான சொல்லாடல்களில்லை, பெரும் தொகுப்பாக புள்ளியியல் எண்களில்லை, இதைப் பாதிக்கும் காரணிகளைப் (Sensitivity Analysis) பற்றிய ஆய்வுமில்லை. இவர்களின் தேற்றம், நீர்மை நிலைக்கும், ஈட்டுவதற்குமான வர்த்தகம் என்றே பேசுகிறது. (Trade 0ff between Liquidity and Returns)

நாம் நம் வருமானத்தை பணமாக மட்டுமே வைத்திருப்பதில்லை. அதில் ஒரு பகுதியை பல ஆண்டு சேமிப்புக் கணக்காக, சிறு பகுதியை நடப்புக் கணக்காக வங்கியில் அல்லது அதைப் போன்றதொரு அமைப்பில் வைத்திருப்போம். வருமானத்தில், செலவு போக மீதி இருப்பதை, கடன் பத்திரங்களாக, முதலீட்டுப் பத்திரங்களாக, வீடாக, நகைகளாக, நிலங்களாக அவரவர் சக்திகேற்றவாறு வைத்திருப்போம். ஆனால், எதிர்பாராத பெரும் செலவுகள் திடீரென ஏற்படும் போது வங்கிப் பணத்தை உடனடியாகப் பயன்படுத்த முடியும்; மற்ற அனைத்துமே உடனடிப் பணம் என்ற உருவெடுக்காது. எனவே நீர்மைப் பணம் (Liquid Cash) ஒரு முக்கிய அங்கம். வங்கிகள் அல்லது அதைப் போன்ற அமைப்புகள் இல்லையெனில் நம் வருமானங்களை நாம் உடனடி நீர்மையற்றவைகளில் முதலீடு செய்து அவசரத் தேவை வரும் போது கிடைத்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவோம்.

இப்படி நம்மிடமிருந்து பெறும் வைப்புத் தொகையை வங்கி முதலானவைகள் அதிக வட்டிக்கு அல்லது கூடுதல் வட்டிக்குக் கொடுக்கும். அவைகள் பெரும்பாலும் உடனடி நீர்மையற்ற சொத்துக்களாக இருக்கும். ஒரு சிறு உதாரணத்தின் மூலம் இதைப் பார்ப்போம்.

  • ‘அ’ என்பது வங்கி.
  • ‘ஆ’ என்பவர் அதில் ரூபாய் 1000/- ஒரு வருடத்திற்குப் போட்டிருக்கிறார்.
  • மத்திய வங்கியில் வைக்க வேண்டிய நிதிச் சட்டப்படி ‘அ’ என்ற வங்கி ரூபாய் 200/ஐ அங்கே செலுத்தி விட்டது.
  • ‘இ’ என்பவர் வங்கியை அணுகி ரூபாய் 800/- கடன் கேட்கிறார். மூன்றாண்டுகளில் தவணையாகச் செலுத்துவதாக ஒப்பந்தம்.
  • ‘ஆ’ பெறும் வட்டி 5%
  • ‘இ’ தரும் வட்டி 9%
  • ‘ஆ’ விற்கு அவசரமாகப் பணம் தேவை. வட்டியைக் குறைத்தாலும் பரவாயில்லை, தன் இருப்பான ரூபாய் 1000/த்தை இரு நாட்களில் கொடுத்துவிடுமாறு அவர் வங்கியிடம் கேட்கிறார். வங்கி இப்போது என்ன செய்ய முடியும்? சட்ட இருப்புத் தொகையான ரூபாய் 200/ உடனே கிடைக்கும், ஆனால் ‘இ’யை ரூபாய் 800/- ஐயும் உடனே செலுத்தும்படி சொல்ல முடியாது. அந்தக் கடனை அவர் வாணிபத்தில் போட்டிருப்பார். இங்கே வருவது நீர்மைச் சிக்கல்.

பல வங்கிகளில் சொத்து- கடன் மேலாண்மை (Assets Liabilities Management) என்றொரு துறை செயல்படுகிறது. அது வருவாய்க்கு வழி காட்டும் அதே நேரத்தில் நீர்மையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும்.

பணமாகப் பெற்று அந்த நீர்மைப் பணத்தை அதிக வருவாய் தரும், ஆனால் உடனடி நீர்மையற்ற சொத்துக்களில் முதலீடு செய்யும் வங்கிகள் போன்றவற்றிற்கு ஒரு தனி நபர் சந்திக்கும் நிதிச் சிக்கல்களை, கூட்டாகச் சந்திக்கும் நிலை பொதுவாக ஏற்படாது. பலவாறாக, அது, சமச்சீர் பேணுவதாக நினைத்து, உடனடி நீர்மையற்ற சொத்துக்களில் முதலீடு செய்து விடும். அதாவது நடப்புக் கணக்கு வைத்திருப்போர் அனைவரும் ஒரே நாளில் அவசரத் தேவையென பணத்தை எடுக்க நேரிடாது என்பது நம்பிக்கையாகும்.

ஆனால், மொத்தமாகத் திரண்டு வங்கிகள் போன்றவற்றிலிருந்து ஏராளமானோர் பணம் எடுக்கக்கூடும் என அறிந்தாலே, பிறரும் தத்தமது பணத்தை எடுக்க முந்துவார்கள். இந்த நிலை பல்வேறு காரணங்களால் ஏற்படும். வங்கியால் இதை உடனே சமாளித்து அனைவருக்கும் பணத்தைக் கொடுக்க முடியாது. இந்த நிலையில் பொதுக் கொள்கை மிக அவசியமான ஒன்றாகிறது. மத்திய வங்கி போன்றவை, தானாகவே உருவாகும் இந்தப் பதட்டத்தை வைப்புக் காப்பீட்டினாலும், தானே இறுதியில் கடன் கொடுத்து உதவுவதாலும் சரி செய்ய முடியும். எனவே பாதுகாப்பு வலை, வங்கிகளுக்கு அவசியம் என்று இந்த இரண்டு பேரும் ஒரு சிறு கணித மாதிரியை வைத்து, வங்கிகள், பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றும் பங்கு அதிகம் தான், ஆனால், அதன் சரிவு, அமைப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணமும் இருக்கிறது என்று எடுத்துக் காட்டினார்கள்.

இந்த எளிமையான கருத்து பொருளாதார பகுப்பாய்விற்கும், பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதற்கும் மிகவும் அவசியமான ஒன்று என்பதை முதலில், அதாவது 90களில், பலரும் புரிந்து கொள்ளவில்லை; விளைவு 2008ன் மிகப் பெரிய நிதிச் சிக்கல். பென் இதைப் புரிந்து கொண்டு நிதிக் கொள்கையை வகுத்தார். மிகப் பெரும் பொருளாதார சீர்குலைவு, 2008ஐப் போன்றது மீண்டும் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.

இந்த ‘டி’ ஜோடியினர் வங்கிகள் என்று குறிப்பிடும் போது அரசின் பாதுகாப்பு பெற்ற (ஃபெடரல் வைப்புக் காப்பீடு) வைப்பு நிதி பெறும் வங்கிகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. பொது மக்களிடமிருந்து வைப்புத் தொகை பெற்று கடன் கொடுக்கும் வங்கிகள், அவ்வாறல்லாமல், இடை நிலையில் செயல்படும் வங்கி அமைப்புகள் போன்ற அனைத்துமே இவர்களைப் பொறுத்த அளவில் பண அல்லது நிதி செயல்பாட்டுத் துறையைச் சார்ந்தவை. பெரும்பாலும் அனைத்துமே நீர்மைத் தொகையைப் பெற்று நீர்மை குறைவான அல்லது உடனடி நீர்மம் தராத சொத்துக்களில் முதலீடு செய்கையில், ஏதேதோ காரணங்களால், அத்தகைய அமைப்புக்களின் மீது மக்களின் நம்பிக்கை ஆட்டம் காணும் போது, இந்த வங்கிகள் மற்றும் அதைப் போன்ற அமைப்புகள் சமநிலை குலைந்து பொருளாதாரச் சூழலில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன. இந்த இடைநிலை என்னும் அமைப்பில், “மீண்டும் வாங்குதல்” முதலீட்டு வங்கிகள், (Repo Investment Banks) நிதிச் சந்தை அமைப்புகள், நிழல் வங்கிகள் அனைத்துமே அடங்கும்.

இந்த இருவரும் வெளிப்படையாகச் சொல்வது வங்கிகள் முதலானவைகளில் நீர்மையற்ற நிலை ஏற்படுகையில், நிதிப் பெருக்கம் குறைகிறது என்பதைப் பற்றியோ, சந்தையில் பணத் தட்டுப்பாடு ஏற்படும் என்பதையோ அல்ல; மாறாக அவர்கள் சொல்வது உண்மையான செல்வ அழிப்பைப் பற்றியே. 2008ன் சிக்கல் இவர்கள் சொல்வதில் உள்ள உண்மையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. நிதி வழங்கலில் இருந்திருந்த நிழல் வங்கிகளின் கடன்களைப் பற்றிய சிந்தனையே இல்லாததால் அவைகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாயின; பாரம்பரிய, பாதுகாப்பு வளையத்தில் இருந்த, காப்பீடுகள் பெற்றிருந்த வங்கிகளில் அந்த அளவிற்குப் பாதிப்புகளில்லை.

எனவே, வைப்புத் தொகை பெறும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளைப் போலவே, நிதிச் சந்தையில் பங்கேற்கும் இடைநிலை அமைப்புகளுக்கும் பாதுகாப்பு அவசியம் என்று அவர்கள் நிறுவினார்கள். அது சுயச்சிக்கலில் தவிக்கும் அவைகளுக்கான பாதுகாப்புக் கவசமாக இருக்கும். ஆனால், இது தார்மீகமானதா? இந்தியாவில் முன்னரும் சரி, இப்போதும் சரி, சில தனியார் நிதி நிறுவனங்கள், சிட் நிதிகள், மக்களிடமிருந்து அதிக வைப்புத் தொகை பெற்று, தன் உற்றார், உறவினர், பினாமிகளுக்குக் கடன் கொடுத்து, மறைமுகமாகச் சொத்து சேர்த்த பின்னர், அவைகள் திவாலாகி விட்டன என்று ‘மஞ்சக் கடிதாசு’ கொடுத்து தப்பிக்கப் பார்க்கின்றன. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுதும் இந்த நிலை இல்லை என்று சொல்வதற்கில்லை. அப்படிப்பட்ட அமைப்புகளுக்கும் பாதுகாப்பு வலை கொடுக்கப்பட வேண்டும் என்பதில் தார்மீகக் கேள்வி எழுகிறதல்லவா? எனவே அவைகளையும் வரைமுறைக்குள் கொண்டு வந்து சட்ட வரையறைப்படி அவைகளைச் செயல்படச் செய்ய வேண்டும். சொல்வது எளிது, செயற்படுத்துவதோ கடினம்.

2008 சிக்கலிற்குப் பிறகு, அமெரிக்காவில் டாட்-ஃப்ரேங் (Dodd-Frank Act) சட்டம் வந்தது. அது ‘அமைப்பு ரீதியில் முக்கியமான நிறுவனங்களை’ (Systemically Important Financial Institutions) வரைமுறைப்படுத்துவதைப் பற்றிப் பேசியது. ஆனால், அத்தகு அமைப்புகளை எப்படி அடையாளம் செய்வது? கல்யாணம் செய்தால் பைத்தியம் தெளியும்; பைத்தியம் தெளிந்தால் கல்யாணமாகும்.

இந்த இருவர் செய்ததெல்லாம் 1873ல் வால்டர் பாஜெட்டின் (Walter Bagehot) ‘லாம்பார்ட் ஸ்ட்ரீட்’ (Lombard Street) என்ற கொள்கையை முறைப்படுத்தியதுதான். மின்ஸ்கி, கின்ட்லெபெர்கர் போன்ற தரமான, உண்மையான ஆய்வினை மேற்கொள்ளும் பொருளாதார அறிஞர்களை விட்டுவிட்டு இந்த இருவருக்குப் பரிசு கொடுத்ததில், ஆடம் டூஸ் (Adam Tooze) என்ற வரலாற்றறிஞருக்கு மன வருத்தம். மின்ஸ்கி மற்றும் கின்டில்பெர்கரின் கூற்று இதுதான்- ஒரு கால கட்டத்தில் நிலைத்திருக்கும் நிதிச் சந்தை, அதிகத் தன்னம்பிக்கையால், பகுத்தறிவற்ற உற்சாகத்தை உண்டாக்கி, அதன் மூலம் அதிகச்சக்தி பெற்றுள்ளதாக நினைத்து, பலூனை மிதமிஞ்சி ஊதுகையில் வெடித்து விடுவதைப் போல, சரிந்து வீழ்ந்து, வெறித்தனமான மனச்சோர்வையும், மந்த நிலையையும் உண்டாக்குகிறது. இது நிதி நிலையாமைக்கு இட்டுச் செல்கிறது. பிறகு சுழற்சி மீண்டும் தொடங்குகிறது.

டயமண்ட் மற்றும் டிப்விக் கோட்பாடு மேலே சொன்னவற்றிலிருந்து மாறுபடுகிறது- அடிப்படைச் சக்தி வாய்ந்த நிதிச் சந்தை இயங்குகையிலும் கூட, வங்கிகள் நீர்மைச் சிக்கலைச் சந்தித்துள்ளன. அதற்கு முன்னாளைய முட்டாள்தனங்களும், அதீத செலாவணியும் காரணங்களாக இருக்கத் தேவையில்லை. பதட்டங்களைக் குறைப்பது நோக்கமாக இருக்க வேண்டும்.

கெய்ன்ஸ் (Keynes) என்ற பொருளாதார நிபுணருக்கு முன்னரும், பின்னரும் எழுந்துள்ள கூற்றுக்களில், இவ்விரண்டு ஜோடிகளின் சார்பினைப் பார்க்க முடியும். ஹாபெர்லர் (Haberler-1937) கெய்னிசியருக்கு முன்னான கோட்பாடுகளை இணைத்து ஒன்றைக் கேட்டார்: “பெரு வளர்ச்சியும், பெரு வெடிப்பும் வணிகங்களில் ஏன் நிகழ்கின்றன?” அதீத உற்சாகமும், அளவிற்கதிகமான பயமும் என்று பதிலும் சொன்னார். இது மின்ஸ்கி, மற்றும் கின்ட்லெபெர்கரின் கூற்றை ஒத்திருக்கிறதல்லவா? இது மனித இயற்கையான தூய்மையாக்குதலின் பாற்பட்டு பெரு வளர்ச்சிக் காலத்தில் ஆடம்பரத்துடன் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் பேசுகிறது; ஆனால், அத்தகைய மிகைகள் ஏன் வேலையின்மைக்கு இட்டுச் செல்கின்றன என்ற வினாவிற்கான விடையாக இல்லை.

தன் ‘பொதுத் தேற்றத்தில்’ கெய்ன்ஸ் சற்று மாற்றி யோசித்தார்- ‘ஒரு பொருளாதாரம் ஏன் மந்த நிலையில் அதிகக் கால கட்டத்தில் இருக்கிறது?’ இது சரிவை நோக்கிய மையக் கேள்வி- அதற்கு முந்தைய அதீதம் அல்லது அத்தகைய மிகை இல்லாதது என்ற சிந்தனையை அவர் எடுத்துக் கொள்ளவில்லை. சுருக்கமாகச் சொல்லப் போனால், வீழ்ச்சி காலத்தில் மறு எழுச்சி பெற ‘ஊக்குவிப்புகள்’ தேவை என அவர் சொன்னார். அது சரியாகவும் இருந்தது.

இதைப் போலவே ‘நிதி நிலையாமை’ தத்துவம், வரலாற்றைப் புரிந்து கொள்ளவும், மன நிறைவிற்கான திருத்தங்கள் செய்யவும் ஏதுவாக இருக்குமே தவிர, நாம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வழி காட்டியாக இருப்பதில்லை.

எனவே, ‘டி’ இருவரின் மாதிரி, சுருக்கமாக, பாதுகாப்பு வலைகளையும், நெறிமுறைப் படுத்துதலையும் முன் வைத்து ஒரு சிறந்த கோட்பாடாக விளங்குகிறது.

நிதிச் சக்திகள் பொருளாதாரச் சரிவுகளை ஏற்படுத்துகின்றன என்ற ஃப்ரீய்ட்மான் – ஷ்வார்ட்ஸ் (Friedmen-Schwarz) கூற்றை 1983ம் வருடம் வெளியிட்ட கட்டுரையில் பென் உள்ளீடாக மறுத்தார். ஆயினும் பென் பெற்ற விருது அவரது கோட்பாடுகளுக்காக என்பதும். அவரது ஆய்வுகளுக்காக அல்ல என்றும் எண்ணங்கள் இருக்கின்றன.

கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்னர் வெளியான கட்டுரைகள், 2022-ல் நோபல் பரிசு பெறுகின்றன என்றால், அதன் தரமும், அவசியமும் இன்று உணரப்படுகின்றன என்பதே பொருள். 2008-ல் மட்டுமல்ல, இந்த 21-ம் நூற்றாண்டிலும், நிதிக்கலக்கங்கள் இருந்து கொண்டுதானிருக்கின்றன. யூரோ பரப்பில் பார்த்த சிக்கல்கள், சமீபத்தில் பிரிட்டனில் ஏற்பட்ட கடன் பங்குச் சந்தைக் கலவரங்கள் இவையெல்லாம் இந்த ‘டி’ இருவரின் பகுப்பாய்வால் முழுதும் அறியப்படக் கூடியவையாக இருந்தனவா என்றால், அது அப்படியில்லை, புரிந்து கொள்ள உதவும் ஒரு கருவி எனச் சொல்லலாம். அந்தக் கேள்விக்கு ஒரே பதில் கிடையாது. (பொருளாதார நிபுணர்கள் பிழைக்க வேண்டாமா?)

இந்தியா

இந்தியாவில், வணிக வங்கிகள், மத்திய, மானில, நகர, கூட்டுறவு வங்கிகள், ஊரக வங்கிகள், இங்கே செயல்படும் அயல் நாட்டு வங்கிகள், காப்பீட்டைக் கோரும் நிதி நிறுவனங்கள் போன்றவைகளுக்கு, வைப்புத் தொகை காப்பீடுகள், இந்திய ரிசர்வ் வங்கியின் துணைக் குழுமமான ‘வைப்புத் தொகை காப்பீடு, கடன் உத்திரவாத குழுமம்’ (DI&CGC- Deposit Insurance and Credit Guarantee Corporation) மூலமாகக் கிடைக்கின்றன. வைப்புத் தொகை காப்பீடு உயர்ந்த பட்சம் ரூபாய் ஐந்து இலட்சத்திற்குக் கிடைக்கும்- எத்தனை வங்கிகளில் கணக்கு வைத்திருந்தாலும் காப்பீடு ரூபாய் 5,00,000/- வரை தான். இது 04/02/20 முதல் ரூபாய் ஒரு இலட்சத்திலிருந்து ஐந்து இலட்சமாக உயர்ந்துள்ளது.

காப்பீட்டுக் குழுமம் வங்கிகளிடமிருந்து 2021-22 நிதியாண்டில் ரூபாய் 19,491 கோடிகள் பிரிமீயமாகப் பெற்றுள்ளது. இதில் 93.6% வணிக வங்கிகள் செலுத்தியது; மீதமுள்ள 6.4% கூட்டுறவு வங்கிகள் செலுத்தியது.

12. 94 இலட்ச வைப்புக் கணக்காளர்களுக்கு 2021-22 நிதியாண்டில் ரூபாய் 8516.16 கோடி நிவாரணம், காப்பீட்டுக் குழுமத்தால் வழங்கப்பட்டுள்ளது. இது திவாலான மற்றும், இணைக்கப்பட்ட வங்கிகளின் வைப்புத் தொகை வாடிக்கையாளர்களுக்கும், ரிசர்வ் வங்கியின் ‘ஆல் இன்க்ளுசிவ் டைரெக்க்ஷன்’ (AID- All Inclusive Direction) என்ற திட்டத்தின் கீழும் கொடுக்கப்பட்டுள்ளது. ரூபாய் 76 இலட்சம் கோடி காப்பீட்டுக் குழுமத்தால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 98% வங்கிகளின் வைப்புத் தொகை காப்பீடு பெற்றுள்ளன.

வீடுகளில் உண்டியலில் பணம் சேர்ப்பார்கள். இந்துக்கள் அதை தெய்வ காணிக்கை எனச் சேர்ப்பார்கள். அது எதிர்பாரா நிகழ்வுகளின் போது உடனடியாகக் கை கொடுக்கும். பின்னர் அதை சேமித்து தெய்வத்திற்கான காணிக்கையையும் செலுத்துவார்கள். சிறு தொழிலாளிகள் கூட சிட் நிறுவனங்களில் சேமிக்கிறார்கள், ஏலம் எடுத்து மொத்தத் தொகையைப் பெறுகிறாரகள்.

எலிகளின் வயல் கிடங்குகள், மாபெரும் தானியக் களஞ்சியம். மழைக் காலத்திற்கென்று எறும்புகளும் உணவைச் சேமிக்கும்.

திருவள்ளுவம் என்ன சொல்கிறது எனப் பார்ப்போமா?

‘அருள் இலார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு.’ – தனி நபருக்கானது

‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு.’- அரசுகளுக்கானது

‘ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடையார்.’- முதலீட்டு அமைப்புகளுக்கானது

உசாவிகள்:

One Reply to “காசு, பணம், துட்டு, மணி, மணி”

  1. well written article. The capital will always tend towards greedy profits, that is where the bank run and loss of savings to the customers. In the era of Finance Capital, the market should not only be controlled but also be in government’s domain. India was saved from 2008 financial meltdown because of this reason. In my opinion, all these research papers should not end up in prizes, but in safeguarding the hard earned saving of the people. It is heartening to note that the author had touched all these aspects and wishing the author all success

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.