காசி தமிழ் சங்கமம் பேரானந்த அனுபவம்

காசி தமிழ் சங்கமத்திற்கு விண்ணப்பித்துக் கிட்டத்தட்ட மறந்துவிட்ட நிலையில் எனது பிறந்தநாள் பரிசாக(நவம்பர் 17) தேர்வாகியுள்ளதாகத் தகவல் வந்தது.பலமுறை காசி சென்றிருந்தாலும் காசி தமிழ் சங்கமம் இலக்கியக் குழுவில் செல்வதில் மகிழ்ச்சியோடு பயணத் தயாரிப்புகளில் ஈடுபட்டேன்.

முதல்நாளே கோவையிலிருந்து சென்னை சென்று தங்கி மறுநாள் கயா எக்ஸ்பிரஸில் செல்ல ஏற்பாடு.22.11.2022 காலையில் சென்னை சென்ரல் ரயில்நிலையத்தில் பூங்கொத்து, பூத்தூவல் மேளதாளங்கள்,பலத்த பாதுகாவலோடு (3Tier AC Coach) 9.15க்குப் பயணம் துவங்கியது. இக்குழுவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இலக்கிய ஆர்வலர்களும்,மாணவர்களும்,கவிஞர்களும் என 216 பேர் கலந்துகொண்டிருந்தனர்.

விஜயவாடா,நைன்பூர்,ஜபல்பூர்,அலகாபாத் ரயில்நிலையங்களில் காசி தமிழ் சங்கமத்திற்குச் செல்பவர்களுக்கு மலர்தூவியும்,மாலையிட்டும்,தேனீர்,சமோசா என வழங்கியும் ஜெய்ஸ்ரீராம்,வந்தே மாதரம் வணக்கம் காசி,வாழ்க தமிழ் கோஷங்களுடனும் வரவேற்பளிக்கப்பட்டது.

23.11.2022 அன்று இரவு 07.40க்கு தீனதயாள் உபாத்யாயா ரயில்நிலையம் (முகல்சராய்)சென்றடைந்தோம்.சிகப்புக்கம்பள வரவேற்பில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வரவேற்றனர். சந்தௌலி மாவட்ட ஆட்சியர் இஷா துகன்,எஸ்.பி. அன்கூர் அகர்வால் தலைமையில் அரசியல்வாதிகள், காவல்துறையினர், அதிகாரிகள், IRCTC நிர்வாகிகள், பொதுமக்கள் என வரவேற்பு கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. ‘பாரத் மாதாகி ஜே’ உள்ளிட்ட கோஷங்கள், மலர்மாலைகள், பெரிய அளவிலான உடுக்கை இசை என பிரமிப்பான வரவேற்பைத் தந்து அசத்தினர். வடஇந்தியப் பாணியில் திலகமிட்டுப் பெண்கள் “ஹரஹர மகாதேவ்” என முழக்கமிட்டனர்.

ஏற்கனவே ரயிலிலேயே 28 பேராகக் குழுக்கள் பிரித்துப் பெயர் சூட்டப்பட்டிருந்தது.நான் இருந்த குழுவின் பெயர் “ஔவையார்!” ஒவ்வொரு குழுவுக்கான பேருந்தில் ஏறிக் கொண்டோம். இருபுறமும் பொதுமக்கள் கையசைக்க,சாலை எங்களுக்கெனவே கான்வாய் போல முன்னும் பின்னும் காவலர்கள் சூழ எங்களின் வாகனங்கள் புறப்பட்டன.(AC,Fully Emission free Electronic buses with camera attached)

இரவு உணவுக்கென ஒரு பிரம்மாண்ட ஹோட்டலின்(Hotel yug) மாடியில் நமது தமிழகஉணவு வழங்கப்பட்டது. ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு தங்குமிடம் என ஐந்து வெவ்வேறு உயர்தரமான இடங்களில் ஒரு குளிர்சாதன அறைக்கு இருவர், இரு படுக்கை எனத் தங்க வைக்கப் பட்டோம்.

மறுநாள் 24.11.2022 காலையில் சிற்றுண்டி முடித்து அனைத்து குழுக்களும் இணைந்து புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு புறப்பட்டோம். Godowlia என்னும் நெரிசல் மிகுந்த சாலையில் ஆட்டோ, ரிக்க்ஷா, கார் போன்ற சிறு வாகனங்களைத்தான் அனுமதிப்பார்கள். ஆனால் எங்களின் பேருந்துகளையும் அனுமதித்து கோவிலின் வாசலிலேயே இறக்கி விட்டார்கள்.

இனிதான் பிரமிப்புகள் தொடங்கின. VVIP LOUNGE வழியாக நுழைவாயிலின் இருபுறமும் 50-க்கும் மேற்பட்ட கோவில் பண்டாக்கள், உயர் அதிகாரிகள், காவல்துறையினர், இசைக் கலைஞர்களின் மங்கள இசை உடன் பூத்தூவி நாங்கள் வரவேற்கப்பட்டோம். பொதுமக்களை நிறுத்தி வைத்து விட்டு எங்களை மட்டும் சிறப்பு வரிசையில் விஸ்வநாதரை தரிசிக்க அழைத்துச் சென்றனர். கிளம்பும்போது கங்கா தீர்த்தம் எடுத்துப் போக வழியில்லையே என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர்களே கங்கா தீர்த்தம் ஒரு பெரிய பித்தளைச் சொம்பில் அளித்து அபிஷேகம் செய்ய வழி செய்தார்கள்.

காசி ஆலயத்தின் வரலாற்றில் முதல்முறையாக அறங்காவலராகப் பதவி ஏற்றுள்ள திரு வெங்கட்ரமண கனபாடிகள் என்கிற தமிழர் எங்களை வரவேற்று வழிநடத்தி கேலரி போன்ற அமைப்பில் அனைவரையும் அமர வைத்து மாலையிட்டு பூக்கள் தூவி பிரசாதம் தந்து கோவிலின் சிறப்புகளை எடுத்துரைத்தார். அவருடன் கோயிலின் (CEO) தலைமை அதிகாரி சுனில்குமார் இணைந்து கோவிலின் கட்டுமானம் பற்றி விளக்கினார். தலைமை அதிகாரியின் இந்தி உரையைத் தமிழில் திரு. கோலாகல ஸ்ரீனிவாஸ் மொழி பெயர்த்தார்.

பாரதப் பிரதமரின் இப்பெரும் பணியால் தினந்தோறும் 2 இலட்சம்பேர் விசுவநாதரை தரிசிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாம். கேலரியில் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் ருத்ராக்ஷ மாலை,பிரசாதம், துண்டு, விசுவநாதர் படம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டோம். அங்கிருந்து ‘ஹர ஹர மஹாதேவ்’ கோஷத்துடன் கிளம்பி காரிடார் எனப்படும் பகுதி வழியாக கூட்டிச் சென்றார்கள். ராணி அகல்யா பாய் ஹோல்கர் 1777 இல் மறுநிர்மாணம் செய்தவர் என்பதால் அவரது சிலை தற்போது அமைக்கப்பட்டுள்ளது. எதிரில் பாரதமாதா சிலையும் அழகுற அமைந்துள்ளது. அதனைத் தாண்டிச் சென்றால் மணிகர்ணிகா காட் அருகே புதிதாகக் கட்டப்பட்டுள்ள படிக்கட்டுகளை அடையலாம். அங்கு அனைவரையும் அமர வைத்த பின் குழுவில் வந்திருந்த மருத்துவக் கல்லூரி மாணவர் ஆறுமுகம் சிவபுராணம் பாடினார். கங்காவை போற்றும் மந்திரங்கள் ஓதப்பட்டன. அங்கிருந்து கிளம்பி வரிசையாக விசாலாட்சி ஆலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். நகரத்தாரால் அமைக்கப்பட்ட சிறிய ஆலயம். அதனையும் பார்த்துவிட்டு அன்னபூரணி ஆலயத்திற்கு சென்றோம். அன்ன சூக்தம் உச்சரித்து சுவையான தமிழக உணவு பரிமாறப்பட்டு மனநிறைவோடு உணவு உண்டோம். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கும் மேல் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தி கோவில் தலைமை அதிகாரி இன்முகத்துடன் விடைகொடுத்தார்.அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு அடுத்து சென்ற இடம் காசியின் காவல் தெய்வமான கால பைரவர் ஆலயம்.

கால பைரவர் ஆலயத்தில் சிறப்பான தரிசனம். காலபைரவாஷ்டகம் சொல்லி காசிக் கயிறு பெற்றுத் திரும்பினோம். அங்கிருந்து ரவிதாஸ் காட் வரை பேருந்தில் சென்று படித்துறை(காட்)களைப் பார்வையிடல் மற்றும் கங்கா ஆரத்திக்காகக் கூட்டிச் செல்லப்பட்டோம். சொகுசான க்ரூஸ் கப்பலில் 216 பேர் மட்டும் இருக்க 52 படித்துறை(காட்)களைக் காண்பித்தனர். அதோடு 6.15-7.00 கங்கா ஆரத்தியும் பார்த்தோம். சொகுசுப் படகுப் பயணமும் ஆரத்தியும் அழகான, அற்புதமான அனுபவமாக இருந்தது. பூக்கள் விளக்குகள் கொண்ட தட்டை கங்கைக்கு சமர்ப்பித்தோம்.

நாள் இரண்டு: (25.11.2022) 5.30 க்கு எழுந்து கிளம்பி காசியின் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கங்கையில் குளிப்பதற்காக ஹனுமான் காட் சென்றோம். அனுமான் காட்,அரிச்சந்திரா காட்,கேதார்காட் மூன்றும் அருகருகே உள்ள படித்துறைகள். தமிழர்கள் அதிகமாக உள்ள பகுதி.குமரகுருபரரும் பாரதியும்,முத்துஸ்வாமி தீக்ஷிதரும் இப்பகுதியில் இருந்துள்ளனர். அழகான கங்கையில் சூரிய உதயத்தை பார்த்தபடி முன்னோர்களை நினைத்து குளித்து வழிபட்டோம். அங்கிருந்து காஞ்சி சங்கர மடத்தில் தேநீர், பிஸ்கட் அளித்தனர் அங்கு வெங்கட்ரமண கனபாடிகளைப் பார்த்து பேசி அறிமுகம் செய்து கொண்டோம். பாரதி நான்கு வருடங்கள் மூன்று மாதங்கள் வாழ்ந்த சிவமடம் கிருஷ்ண சிவன்- குப்பம்மாள் இல்லம் சென்றோம். அங்கு விரைவில் ஒரு நூலகமும் பாரதி சிலையும் அமைவதற்காக கட்டிட வேலைகள் நடந்து வருகின்றன. கே. வி. கிருஷ்ணன் அவர்களின் மகன், மகள் ஆகியோரை பார்த்துப் பேசினேன். கோவில் அருகில் உள்ள பாரதி சிலையை தற்போது நாட்டுக்கோட்டை நகரத்தார் பராமரித்து வருகிறார்கள். உடன் வந்தவர்கள் பாரதி சிலையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் சிலர் பாரதி பாடல்களை பாடியதும் எனக்கு நெகிழ்வாக இருந்தது.

இந்த சிலை சில வருடங்களுக்கு முன்பு பராமரிப்பின்றி இருந்ததையும் அதை முதலில் பார்த்து தமிழகத்தில் அதைப் பற்றி எழுதியதும் நினைவுக்கு வந்தது. புதிய தலைமுறையிலும் சொல்வனத்திலும் அது பற்றிய கட்டுரை வந்திருந்தது. பத்திரிகையாளர் ஜடாயு அவர்கள் இதனைப் பற்றி தனது கட்டுரையிலும் குறிப்பிட்டிருந்தார். காசி பயணம் புறப்படும் போது எங்கள் அனைவருக்கும் கொடுத்த ‘ஒரே நாடு’ என்கிற பத்திரிகையிலும் ஜடாயு எழுதிய கட்டுரையில் இந்த லிங்க் குறிப்பிடப்பட்டிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஜடாயு அவர்களுக்கு நன்றி. (சொல்வனம் லிங்க்- https://goo.gl/CPYuPa , பின்னிணைப்பாக பாரதி பற்றிய சில செய்திகள்). வயது முதிர்வின் காரணமாகவும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவிருந்ததாலும் கிருஷ்ணன் ஐயாவை சந்திக்க இயலவில்லை.(கடந்த பாரதி நினைவு நூற்றாண்டில் 10000 பேர்களுக்கு அளித்த ஓவியர் ஜீவாவின் வண்ணப்படத்தை அவர்களுக்கு அளித்து மகிழ்ந்தேன்)

அடுத்து BHU அழைத்துச் செல்லப்பட்டோம். பனாரஸ் இந்து பல்கலைக் கழக ‘எம்பியர் தியேட்டர்’ வளாகத்தில் ஆளுநர் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், எழுத்தாளர் மாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.காசிக்கும் தமிழுக்கும் உள்ள டிஎன்ஏ(The DNA Genetic ancestry) ஒற்றுமைகள்(Genatic perspective) பற்றி விளக்கப்பட்டன. அங்கு செம்மொழித் தமிழ் உயராய்வு மையமும் என்.பி.டியும் தங்கள் புத்தகக் கடைகளைத் திறந்திருந்தன.

அங்கு மதிய உணவு முடித்து சாரநாத் சென்றோம். புத்தர் ஸ்தூபி பார்த்து மீண்டும் நிகழ்ச்சிக்குத் திரும்பினோம். மாலையில் கலை நிகழ்ச்சிகளும் எங்களுக்கான நினைவு பரிசுகளும் உல்லன் சால் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. காசி தமிழ்ச் சங்கமம் கலந்து கொண்டதன் நினைவாக வழங்கப்பட்ட நினைவுப் பரிசு மிகச் சிறப்பாக இருந்தது

அடுத்த நாள் (26.11.2022) காலை சிற்றுண்டி முடித்துவிட்டு குளிர்சாதனப் பேருந்தில் புறப்பட்டு ப்ரயாக்ராஜ் (அலகாபாத்) அழைத்துச் செல்லப்பட்டோம். படகில் அழைத்துப் போய் கங்கை,யமுனை மற்றும் அந்தர்வாஹினியாக சரஸ்வதி மூன்றும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பலத்த பாதுகாப்புடன் அனைவரையும் நீராட ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கும் முன்னோர்களை நினைத்து குளித்து வழிபட்டோம். அருகிலுள்ள கோட்டையில் அக்ஷயவடம் எனப்படும் விஷ்ணு பாதம் தரிசித்தோம்.

அங்கிருந்து சந்திரசேகர் ஆசாத் பூங்கா போனோம். ராஜகுரு, சுகதேவ், பகத்சிங், சந்திரசேகர் ஆசாத் சுதந்திரத்துக்காக போராடியவர்களில் மற(றை)க்கப் பட்டவர்கள். இவர்களில் சந்திரசேகர் ஆசாத்தை 1931 ல் ஆல்பர்ட் பூங்கா என்றழைக்கப்பட்ட இப்பூங்காவில் காவலர்கள் சுற்றி வளைத்தனர். முடிந்தவரை போராடி கடைசி இங்குள்ள ஒரு மரத்தின் பின் நின்று தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். அந்த நினைவிடத்தில் அவரது கம்பீரமான சிலை வைக்கப்பட்டுள்ளது. இங்கு தஞ்சையைச் சேர்ந்த (பத்மஸ்ரீ) முனைவர் கோவிந்தராஜன் (கே.துளசி) அவர்களின் அறிமுகம் கிடைத்தது. இவர் தற்போது பிரயாக்ராஜ் -ல் வசிக்கிறார்.இவரது திருக்குறள் இந்தி மொழிபெயர்ப்பை சமீபத்தில் நமது பாரதப் பிரதமர் மோடிஜி வெளியிட்டார். தமிழின் சங்க இலக்கியங்களைத் இந்தியிலும்,துளசி ராமாயணத்தைத் தமிழிலும் மொழிபெயர்த்தவர்.

அங்கிருந்து கிளம்பி அயோத்தி புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்திற்கு இரவு வந்து சேர்ந்தோம். அயோத்தி மக்களின் கலை நிகழ்ச்சிகள், ஆடல் பாடல், அயோத்தியின் எம்.பி. லாலுசிங் அவர்கள் முன்னின்று வரவேற்றனர். எங்களுக்காக நடத்தப்பெற்ற கலை நிகழ்ச்சியில் பாடல் பாடியும் நடனமாடியும் வரவேற்ற ஒரு சிறு பெண் நிகழ்வு முடிந்ததும் அவசரமாக ஓடி தனது கைக்குழந்தைக்குப் பாலூட்ட அழைத்துச் சென்றது மனதுக்கு நெகிழ்வாக இருந்தது.யார் பெற்ற பெண்ணோ நமக்காக இவ்வாறு வந்து வரவேற்கிறாரே என்று ஒரு கணம் மனது கலங்கியது. விருந்தினரை வரவேற்கும் பண்பாட்டின் உச்சமாக இப்பெண் திகழ்ந்தாள். நடனக் குழுவைப் பாராட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

இரவு உணவை ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். உயர்தரமான பெரிய ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டோம். இங்கும் என்னுடன் காசியில் என்னுடைய தங்கிய பேராசிரியர் ராஜகோபாலன் உடன் இருந்தார். விடிகாலையில் எழுந்து முதலில் தமிழர்கள் நிர்வகிக்கும் கோதண்டராமர் கோவில் மற்றும் அனுமன் கோவில் சென்றோம். அடுத்து ராமஜென்ம பூமிக்கு அழைத்துச் சென்றார்கள். பொதுமக்களாகச் செல்லும்போது பேனா, பர்ஸ், பெல்ட், கேமரா போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது. ஆனால் தற்போது காசி தமிழ் சங்கமம் குழுவில் சென்றதால் எந்தவித சோதனையும் இன்றி வரவேற்புடன் சென்றோம். கோவில் கட்டுமானப் பணிகள் காரணமாகத் தற்காலிகமாகப் பாலாலயம் செய்யப்பட்டிருந்த ராம் லல்லா(குழந்தை ராமர்) முன்பு அரை மணிக்கு மேலாக அமர வைக்கப்பட்டோம். வழக்கம்போல பாண்டிச்சேரி மருத்துவ கல்லூரி மாணவர் ஆறுமுகம் ராம நாமம் மற்றும் பாடல்கள் பாடினார். பின்பு பிரசாதம் தந்து எங்களை கட்டிட வேலை நடக்கும் இடத்தில் சென்று அமர வைத்தார்கள். அங்கு தமிழகத்தை சார்ந்த பல பொறியாளர்கள் பணி செய்கிறார்கள். எல் அண்ட் டி- லிருந்தும் டாடா கன்சல்ட்டன்ஸி- லிருந்தும் எங்களுக்கு இந்தக் கட்டிடம் பற்றியும் இதன் வரலாறு பற்றியும் எடுத்துரைத்தார்கள்.

அங்கிருந்து கிளம்பி சரயூ நதியை காணச் சென்றோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நான் போயிருந்தபோது சேறும் சகதியுமாக இருந்த சரயூ நதி தற்போது இருபுறமும் கரைகள் கட்டப்பட்டு அழகுற சீர் செய்யப்பட்டிருக்கிறது. அங்கும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அங்கிருந்து மீண்டும் வாரணாசிக்கு திரும்பினோம். ஆறு மணி நேரப் பயணத்துக்கு பிறகு இரவு பனாரஸ் ரயில் நிலையத்தில் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் நாங்கள் சென்னை திரும்பினோம். போகும்போது இருந்த அதே வரவேற்பு வரும் போதும் இருந்தது. இப்படி ஒரு பயணத்தை சிந்தித்து அதனை சிறப்புற செயலாற்றிய நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜி அவர்களுக்கும் நாம் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். மேலும் இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த IRCTC அதிகாரிகள், அரசு அதிகாரிகள், நிகழ்வில் தொடர்புள்ள ஒருங்கிணைப்பாளர்கள், உடன் வந்த சக பயணிகள் அனைவருக்கும் நன்றியையும் மகிழ்வையும் தெரிவிக்கிறோம்.

சென்னை எழும்பூரில் காலை 8 மணிக்கு இறங்கிய பின் இங்கும் வரவேற்பும் நிறைய தொலைக்காட்சிகளிலிருந்து பேட்டியும் எடுத்தார்கள். எங்கள் குழுவில் வந்த இன்னொரு கோவைக்காரருடன் சேர்ந்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், பாரதி இல்லம் மற்றும் மயிலாப்பூர் ஆகிய மூன்று இடங்களுக்கும் சென்று இப்பயணத்தை நிறைவு செய்து மனமகிழ்வோடு கோவை திரும்பினேன்.

பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீனிவாஸ்,சௌதாமினி,அருட்செல்வப் பேரரசன்,டாக்டர் உமர்ஃபாரூக், திரைப்படப் பாடலாசிரியர் மலைமன்னன், சக்திவிகடன் பொறுப்பாசிரியர் ஹரிகாமராஜ்,விஜயபாரதம் குருசிவக்குமார் மற்றும் பலருடன் அறிமுகம் ஏற்பட்டது.

Kasi Tamil Sangamam 2022 Photos: https://photos.app.goo.gl/aBSE5R2FfCqHaCAN9

4 Replies to “காசி தமிழ் சங்கமம் பேரானந்த அனுபவம்”

  1. பிரகாஷ் அவர்கள் என் இனிய நண்பரும் கூட. அவர் பெற்ற அனுபவம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. காசியில் 3 ஆண்டுகள் இருந்த அனுபவமும் அவர் கூறிய இடங்களை நினைவு கூர்ந்ததும் மனதுக்கு இதமாக இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.