
” நிலைக்கதவுப் பிள்ளையாருக்கு
இந்தக் கண்ணியை
வைத்து விடு “
சாமந்தியை நீட்டுகிறாள் அம்மா
“லா.சா. ரா
தி.ஜா
கி.ரா வை
வாசித்து நாளாகிவிட்டதாம்”
பரணிலிருக்கும்
புத்தகத்தை
கீழிறக்கச் சொல்கிறார் அப்பா
மாதமொரு முறை
முகப்புக் காற்றாடித் துடைத்தெடுக்க
பழுதடைந்த மின்பல்புகளை
ஏணியின்றி
எளிதில் பொருத்த
அழுக்குப்பாசியடைந்த
மொட்டைமாடி
நீர்த்தொட்டியினுள்
வெளுப்புக் காரமிட்டு
தேய்த்துக் கழுவிவிடவும்
தேடப்படுகிறேன்
ஆயத்த உடை
அளவு பொருந்தாமை
பாதணிகளின் நீட்டுப் பத்தாமை
முழங்கால் இடிக்கும்
முன்னிருக்கையென
ஒன்றிரெண்டு இம்சைகள் எனக்கு மட்டும்தான்
உதவிக்கு நேர்ந்துவிட்டதுபோல்
என் உயரவாகு
எத்தனை தோதாயிருக்கிறது
பிறருக்கு.
***
கனகா பாலன்/ டிசம்பர் 2022