“இதை எவன் வாங்குவான்?”

ரவி நடராஜன், விஞ்ஞான உலகிலிருந்து, வெறுத்துப் போய், தமிழ் சீரியல் பற்றி எழுத ஆரம்பித்துவிட்டார் என்ற வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்! இந்தக் கட்டுரையைப் படிக்கும் பொழுது தமிழ் சீரியல்கள் நினைவிற்கு வந்தால், அது மிகவும் இயற்கையான விஷயம். ஏஜன்சிக்கும், வண்ணப்படக் கலைஞருக்கும் இருக்கும் தொடர்பு, தமிழ் சீரியல்களில் வரும் பாத்திரங்களைத் தோற்கடிக்கக்கூடியவை. உங்களுக்கு படிக்க ஜாலியாக இருந்தாலும், இந்த உலகில் ஈடுபடும் கலைஞரின் பாடு திண்டாட்டம்தான்.

இந்த ஏஜன்சிகள் சொல்லும் சக்கு போக்குகளை மையமாக இந்தப் பகுதியை எழுதியுள்ளேன்.

உங்களுடைய வண்ணப்படங்களைப் பற்றி நண்பர்கள் சொன்னது பெரும்பாலும் பொய்!

எந்த வண்ணப்படத்தை வானளாவ புகழ்ந்தார்களோ, அந்தப் படங்களை ஏஜன்சிகள் குறை சொல்லி நிராகரிக்கும் பொழுது, நிலைகுலைந்து, தமிழ் சீரியலில் இளையவனின் பின்னணி இசையுடன் சிலபல வாரங்களை சாதாரணமாக கடந்து விடலாம்! இன்றும், எனக்கு/ என் நண்பர்களுக்கு மிகவும் பிடித்த வண்ணப்படங்கள் யாருமே வாங்காமல் தூங்குகின்றன. இத்தனைக்கும், இவை கலை நுட்பத்திற்காக, பல ஒளிப்பட அமைப்புகளில் பாராட்டுப் பெற்றவை. இங்கு அவ்வகைப் படமொன்றை உதாரணமாக காட்டியுள்ளேன். இவ்வாறு தூங்கும் ஒளிப்படங்கள் கணக்கிலடங்காதவை. இந்தத் தொழிலில் ஈடுபட முடிவெடுத்தால், இதைத் தாண்டிதான் செல்ல வேண்டும்.

இதெல்லாம் பெரிய விஷயமா என்று அலுத்துப் போகக் கூடும்

உங்களது அழகிய வண்ணப்படத்தில், வெகு தூரத்தில் ஒரு விசைப்படகு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். எல்லோரும் புகழ்ந்த அந்த வண்ணப்படத்தை ஆராயும் ஏஜன்சி வல்லுனர் கண்ணில், தூரத்து விசைப்படகில் ‘Honda’ என்று எஞ்சினின் பெயர் அகப்படும்! உடனே மருமகளைக் குறை சொல்லும் தமிழ் சீரியல் மாமியார் போல, நிராகரிப்பு!

மேலே உள்ள இரு படங்களுக்கும் என்ன வித்தியாசம்? ஆறு வித்தியாச வல்லுனர்கள் நிச்சம் தோல்வியைத் தழுவுவார்கள். ஏனென்றால், இடது படம் ஒரிஜனலான பதிவு. வலது பக்க படம், சற்று மெருகேற்றப்பட்ட, ஏஜன்சியால் ஒப்புக் கொள்ளப்பட்ட, அதே படம். ஆனால், வலது படத்தை பல மடங்கு பெரிது படுத்தினால், ஒவ்வொரு படகிலிருந்தும் அதன் பெயர் நீக்கப்பட்டிருக்கும். சில படகுகளின் மேலிருக்கும் ஜி.பி.எஸ் பெயர் நீக்கப்பட்டிருக்கும். நல்ல வேளையாக, மென்பொருள் கொண்டு இவற்றை நீக்கிவிட முடியும். வியாபாரக் குறிகள் ஒரு பெரிய தடைக்கல் என்று சொல்ல வேண்டும். இப்படி அடி வாங்கிய பின், எந்த ஒரு வண்ணப்படத்தையும் சமர்ப்பிக்கும் முன், பல மடங்கு பெரிது படுத்தி வியாபாரக் குறிகளை நீக்குவது என் வழக்கமானது.

”கடற்கரைப் படமென்றால் இதுதான்”, என்று நண்பர்கள் புகழ்ந்த வண்ணப்படத்தில் எப்படித்தான், குறை கண்டு பிடிக்கிறார்களோ!

சாதாரணர்கள் புகழும் வண்ணப்படத்தில், தூரத்தில் ஒரு பெண், கடற்கரையை பக்கவாட்டில் உட்கார்ந்து கொண்டு ரசித்துக் கொண்டிருப்பது, பல முறை உங்களது படத்தைப் பெரிது படுத்திய ஏஜன்சி வல்லுனர் கண்ணில் சிக்கும்! அந்தப் பெண்ணிடம், இசைவு சான்றிதழ் வாங்காததால், நிராகரித்தோம், என்று சொல்லும் பொழுது, தமிழ் சீரியல் நடிகர் பேசும் 26 பக்க வசனமே பரவாயில்லை என்று தோன்றும்! இப்படி நிகழ்ந்தவுடன், ‘ஏன், அந்தப் பெண் கடற்கரையை நோக்கி திரும்பியிருக்கக்கூடாது என்றூகூடத் தோன்றும். எல்லா உழைப்பும் விரயம்! அதனால், இங்குள்ள படம் ஏஜன்சியால் குறை சொல்ல முடியாதபடி மனிதர்களை நிழலாக பிடித்து வெற்றி கண்ட படம்.

”வீட்டுப் பொருட்களை இவ்வளவு அழகாகப் படம் பிடிக்க முடியுமா? உங்களுக்கு நிகர் நீங்கள்தான்!” என்று நண்பர்கள் புகழ்ந்த உங்களது கற்பனைத் திறன், ஏஜன்சி கையில் சுக்குநூறாகும்!

உங்களது கற்பனைத் திறனை மிகையாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நான் எடுத்த சில அருமையான வீட்டுப் பொருட்களின் படங்கள் சம்பந்தமே இல்லாத காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளன. ஒரு ஏஜன்சி, “எங்களது வியாபார கொள்கைகளோடு இது ஒத்துப் போகவில்லை” என்றார்கள். இன்னொன்று, “இதை எவன் வாங்குவான்?” என்றது (We do not see any commercial value in this). தமிழ் சீரியலில், காரணமே இன்றி வரும் திருப்பங்கள் போல, இவற்றைக் கடந்து செல்வது உத்தமம்!

”இந்தப் படங்களில் உங்களது ஃபோகஸ் சரியாகவே இல்லை. அதனால் நிராகரிக்கிறோம்.”

ஏனோ குவியமில்லா, குவியமில்லா ஒரு காட்சி” (என்னமோ ஏதோ)

ஆலாப் ராஜுவுடன் பாடிய குழுப் பாடகர்(கி)கள் இந்த ஏஜன்சியில் எப்பொழுது வேலைக்கு சேர்ந்தார்கள்?

எத்தனை அனுபவம் இருந்தாலும், சில தவிர்க்க முடியாத காரணங்களால், சில சமயம் ஃபோகஸ் தவறுவது உண்மை. இவ்வாறு சரியான ஃபோகஸ் ஆகாத படங்கள் சிலவற்றை காமிராவிலேயே நீக்கி விடலாம். மற்றவற்றை கணினியில் நீக்கலாம். முப்பது ஆண்டுகள் அனுபவத்திற்குப் பிறகு, சரியான ஃபோகஸ் இல்லாத படங்களை நிராகரிப்பது என்னுடைய அன்றாட வழக்கம். அத்தகைய படங்களுக்கு மேலும் உழைப்பு என்பது தேவையற்றது. டிஜிட்டல் சரி செய்தல் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இப்படி இருந்தும், பட்ட பகலில் துல்லியமாக ஃபோகஸுடன் எடுத்த பல வண்ணப்படங்களை சில ஏஜன்சிகள் சாக்கு போக்கு சொல்லி நிராகரிக்கும் பொழுது ஏற்படும் கடுப்பு, எழுத்தில் சொல்ல முடியாதது. தமிழ் சீரியலில், முன்னும் பின்னும், அவசர ஜூம் செய்து திருப்பத்தைப் புரிய வைக்கும் கொடுமையை விட அதிகம் இது!

வேகமாக நகரும் கார் அல்லது SUV -ஐப் படம் பிடிப்பது கடினம். இதை pan shot என்று சொல்வதுண்டு. நகரும் வாகனம் துல்லியமாக இருக்க வேண்டும். ஆனால், அதன் பின்னுள்ள பின்னணி, வேகத்தைக் காட்டும் ஒரு blur உடன் இருக்க வேண்டும். ஒரு 100 படங்களில் ஒன்றுதான் இதற்கு சரியாக வரும். 99 -ஐ நிராகரித்து சரியான ஒன்றை ஏஜன்சியின் தளத்திற்கு மேலேற்றினால் வரும் நிராகரிப்பு காரணங்கள், எந்த ஒரு வண்ணப்படக் கலைஞரையும் ஆட்டம் காண வைக்கும்!

இப்படி உழைத்து, எல்லா உபரி வேலைகளையும் செய்து, ஏஜன்சிக்கு மேலேற்றினால், அவர்கள் கூறிய நிராகரிப்புக் காரணம், இன்னும் நினைவிருக்கிறது. “சமீபத்திய கார்கள் மற்றும் SUV -க்களை நாங்கள் எங்கள் தளத்தில் அனுமதிக்க மாட்டோம்”. இத்தனைக்கும், இந்த ஏஜன்சிக்காக, காரின் பெயர் மற்றும் வியாபாரக்குறி (commercial symbol) எல்லாவற்றையும் நீக்கி, காரை ஓட்டுபவரை நிழலாக்கி (ஓட்டுனரிடம் இசைவு சான்றிதழ் என்ற பழைய பல்லவியைத் தவிர்க்க) சமர்ப்பித்ததற்கு கிடைத்த பதில் இது! இதற்காக நான் பழங்கால ஃபோர்டு காரையா தேடிப் போக முடியும்? அது வேகமாக நகருமா என்பதே சந்தேகம். 400 வது தமிழ் சீரியல் episode -ல், மிக முக்கிய கதாபாத்திர நடிகரை மாற்றுவதை விடக் கொடுமையானது இந்த நிராகரிப்பு.

நீங்கள் சமர்ப்பித்த வண்ணப்படத்தில், மிகுந்த நடுக்கம் தெரிகிறது. இதனால் நிராகரிக்கிறோம் என்று நம் வண்ணப்படத்தை ஒரு தாத்தா காலத்து வண்ணப்படமாக மாற்றிவிடுவார்கள் ஏஜன்சிகாரர்கள்!

வண்ணப்படக்கலையில் சில காட்சிகளில் பார்வையாளரைக் கவர வேண்டும் என்று சில நுணுக்கங்களைப் பின்பற்றுவது வழக்கம். உதாரணத்திற்கு, ஒரு கொட்டும் நீர்வீழ்ச்சியைப் படம் பிடிக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீர்வீழ்ச்சி முன்னே உள்ள ஒரு பூச்செடி காற்றில் அசைகிறது என்று வைத்துக் கொள்வோம். நம் நோக்கம், விழும் நீர், பாலைப் போலக் காட்சியளிக்க வேண்டும். ஆனால், முன்னால் இருக்கும் பூச்செடி காற்றில் அசைந்து ஏஜன்சி வல்லுனரின் கண்ணில் பட்டு, உடன் நிராகரிப்பு, உங்களது வண்ணப்படத்தை உங்கள் கண்னியின் ஏதோ ஒரு ஓரத்திற்கு அனுப்பிவிடும்! தமிழ் சீரியல் அழுகைக் காட்சியில், ஒருவர் அழுது வசனம் பேசி முடித்த பின், இன்னொருவர் அழுது பேசும் பொழுது மீண்டும் ஃபோகஸ் செய்யும் காமிராவே பரவாயில்லை என்றாகிவிடும்!

உங்களது வண்ணப்படத்தில் டிஜிட்டல் இரைச்சல் (digital image noise) அதிகம் இருப்பதால், நிராகரிப்போம் என்ற காரணம் சற்று உங்களை நோக்கிக் கத்துவதைப் போலத் தோன்றும்.

குறைந்த ஒளியமைப்பில் படம் பிடிப்பது ஒரு கலை. குறைந்த ஒளியுள்ள சூழலில், டிஜிட்டல் வண்ணப்பட இரைச்சல் என்பது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய விஷயம். இதைக் குறைக்க இன்றைய காமிராக்களில் வழிகள் இருந்தாலும், சில நேரங்களில், நம்மையும் அறியாமல், சில நிழல் பகுதிகளில் இரைச்சல் தோன்றுவது மிக அரிதாக நடக்கும் விஷயம். பரீசிலனை செய்பவர், உங்களது படத்தைப் பெரிது படுத்தி, எப்படியோ இந்தக் குறையையும் கண்டுபிடித்து நிராகரிப்பார். அழகான கலையம்சத்துடன் கூடிய படங்கள் சில இப்படி நிராகரிக்கப்படும் பொழுது, சம்பந்தமே இல்லாத இடத்தில் ஒலிக்கும் தமிழ் சீரியல் புல்லாங்குழல் பின்னணி இசை போன்றது!

வண்ணப்படத்தில் தூசு தெரிகிறதே – இதை எல்லாம் ஒப்புக் கொள்ள முடியாது!

ஆரம்பத்தில் இவ்வகை நிராகரிப்புகள் சற்று உளைச்சலாக இருந்தாலும், ஒரு வருட ஏஜன்சி போராட்ட அனுபத்திற்குப் பிறகு, ஒவ்வொரு வண்ணப்படத்திலும், ஏதாவது உணர்வி தூசு தெரிகிறதா என்று பார்த்து விடுவேன். வெளியுலகில் அதிகம் பயன்படுத்தப்படும் Interchangeable lens camera எல்லாவற்றிலும், இவ்வகை பிச்சினை என்பது சாதாரணம். லென்ஸை மாற்றும் பொழுது வெளியுலக தூசு ஒளி உணர்வியில் சென்று உட்கார்ந்து விடும். இதனால், ஒவ்வொரு முறை இயற்கைப் படப்பிடிப்பிற்கு செல்லும் முன்பு, காமிரா ஒளி உணர்வி, லென்ஸ் எல்லாவற்றையும் சரி பார்த்து விடுவது என் வழக்கமானது. இங்கு ஏஜன்சிகாரர்கள் சொன்ன குறைகளில், நியாயமானது இந்தக் குறை.

.

திடீரென்று நின்று போன தொலைக்காட்சி நிரலைப் போல, “Technical Issues” என்று மொட்டையாக ஒரு காரணத்துடன் உங்களது வண்ணப்படம் நிராகரிக்கப்படும் பொழுது, சில்லரை விஷயத்திற்கு கலாட்டா செய்யும் கல்யாண மாப்பிள்ளை வீட்டுக்காரர்களே தேவலாம் என்று தோன்றும்!

அதென்ன Technical Issues”? விவரமாக சொன்னால் தானே சரி செய்ய முடியும்? மிகவும் சிரமப்பட்டு எடுத்த வண்ணப்படத்திற்கு ஒரு மரியாதை தர வேண்டாம்? இதற்காகத் தான், ஒரே ஏஜன்சியை நம்பி செயல்படவே கூடாது. ஒரு ஏஜன்சியின் Technical Issues” மற்றொரு ஏஜன்சிக்கு ஒரு விஷயமாகவே இருக்காது!

மாறி மாறி காரணங்கள் முன்வைத்து, கடைசியில் நிராகரித்து நம் பொருமையை சோதிக்கும் ஏஜன்சி வல்லுனர்கள் தமிழ் சீரியல் டைரக்டர்களை விட கொடுமையானவர்கள்

Series Navigation<< கையில் கேமிரா இருந்தால் வங்கியில் கோடிகள்! எப்படி?சந்தாதாரரின் ஒரு முறை பயன்பாடு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.