அதிரியன் நினைவுகள் -3

This entry is part 3 of 22 in the series அதிரியன் நினைவுகள்

எனது நோய் முற்றிக்கொண்டு வருவதை உனக்குத் தெரிவிக்க வேண்டுமென்று எழுத ஆரம்பித்த இக்கடிதம் தனது நோக்கத்தை மாற்றிக்கொண்டு மெல்ல மெல்ல அரசாங்க பிரச்சனைகளில் முன்பு போல கூடுதலாக தன்னைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல இல்லாத ஒரு மனிதனின் சோர்வை விவரிக்கும் மடல் என்கிற நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது. தவிர ஒரு நோயாளியின் எழுத்துவடிவ இத்தியானம் அவனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள பார்வையாளர்களை அழைத்துவரும் ஒருவகை முயற்சியாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம். இதைக் காட்டிலும் கூடுதலாக ஏதாவது செய்ய இயலுமா என்றும் பார்க்கிறேன். உண்மையில் எனது வாழ்க்கையை எழுத்தூடாக பகிர்ந்துகொள்வதுதான் திட்டம். அதன்படி கடந்த ஆண்டு எனது பணியின் அடிப்படையில் உத்தியோகபூர்வமான விவரம் ஒன்றை தயாரித்திருந்தேன். அவ்விவரத்தின் தலைப்பில் எனது செயலாளர் ஃப்ளோகன் (Phlegon)26 தமது பெயரைக் குறிப்பிட்டிருந்தார். பொய்களை முடிந்தவரை தவிர்த்திருந்தேன். இருப்பினும், பொது நலனை கருத்தில்கொண்டும் நாகரீகம் கருதியும் சில உண்மைகளை மறுபரிசீலனை செய்யவேண்டியதாயிற்று. இங்கே நான் அம்பலப்படுத்த உத்தேசித்துள்ள உண்மை, குறிப்பாக அதிர்ச்சிக்குரியதல்ல, பதிலாக அனைத்து உண்மையிலும் காணக்கூடிய அதிர்ச்சியின் அளவு இதிலும் குறையாமலிருக்கும். உன்னுடைய பதினேழுவயது பெரிதாக இவற்றைப் புரிந்து கொள்ளும் என்கிற எதிர்பார்ப்பும் எனக்கில்லை. ஆனாலும், உனக்கு சிலவற்றை விளங்க வைக்கவும் வேண்டும், அதிர்ச்சியும் தரவேண்டும் அதுதான் என்னுடைய உத்தேசம். உனக்கென்று நான், தேர்வு செய்த பிரத்தியேக ஆசிரியர்கள் கடுமையுடனும், பிரத்தியேக கண்காணிப்புடனும் சற்று அதிகமாகவே பாதுகாப்புத் தரவல்ல கல்வியை உனக்கு வழங்கியுள்ளனர், இதிலிருந்து உனக்குமட்டுமல்ல இந்த அரசாங்கத்திற்கும் ஒரு பெரிய நன்மை கிடைக்கும் என்று நம்புகிறேன். முன்னதாக தீர்மானிக்கப்பட்டது அல்லது தெளிவற்றது என்றில்லாமல் ஒர் விவரத்தின் திருத்திய படிவத்தை, ஒருமனிதனின் (வேறு யார், நானேதான்) சொந்த அனுபவத்தை உனக்கு வழங்க முடிவுசெய்திருக்கிறேன். இவ் விவரம் எத்தகைய முடிவுக்கு என்னைக் கொண்டு செல்லும் என்கிற கவலை எனக்கில்லை. என்னை வரையறுக்க, ஒருவேளை மதிப்பிட அல்லது இறப்பதற்கு முன் குறைந்தபட்சம் என்னை நன்கு புரிந்துகொள்ள, நான் முழுமையாக நம்புவது இந்த உண்மைகளின் சோதனையையே.

Mausoleum of Hadrian — Castel Sant’Angelo, Rome

அனைவரையும் போலவே எனது பணியிலும் மனிதர் இருப்பை மதிப்பிட மூன்று வழிமுறைகள். முதலாவது சுயபரிசோதனை, இது மிகவும் கடினமானது மட்டுமல்ல ஆபத்தும் இதில் அதிகம், இருந்தும் பயனுள்ள வழிமுறை. இரண்டாவது மனிதர்களை அவதானிப்பது. பொதுவில் மனிதர்கள் மொத்தபேரும் அவ்வப்போது இரகசியங்களை பொத்திவைப்பதில் கெட்டிக்க்காரர்கள் என்பதோடு தங்களிடம் அவை கணிசமாக உள்ளதென்பதை பிறர் நம்பவேண்டும் என்பதுபோல அவர்கள் நடத்தையும் இருக்கும். மனிதர் இருப்பை அளவிட நான் கையாளும் மூன்றாவது வழிமுறை புத்தகங்கள், வாசிக்கிறபோது, தீர்க்கதரிசனமாக சொல்லப்படும் வரிகளுக்கிடையில் உணரப்படும் பிழைகளும் எனக்கு முக்கியம். சரித்திர ஆசிரியர்களின் எழுத்துகள் கவிஞர்கள் எழுத்துக்ளைபோல பெரிதாகக் கொண்டாடக்கூடியவை அல்ல. கதைசொல்லிகளின் எழுத்துக்களையும் படித்திருக்கிறேன். உண்மையில் அவர்களுக்குச் சொல்ல என்னிடம்தான் நிறைய இருக்கின்றன, அவை எனது சொந்தவாழ்க்கையில் வித்தியாசமான சூழ்நிலகளில் கற்றவை. அசையாத சிலைகளின் உன்னத பாவங்கள் போதிக்கும் குறிப்புகளுக்குச் சமமாகப் பிறர் எனக்கெழுதும் மடல்கள் எழுதியவர்களின் குரல்களைக் செவிமடுக்க போதித்திருக்கின்றன. பிற்காலத்தில் புத்தகங்களைப் புரிந்துகொள்ள எனது வாழ்க்கையும் உதவியுள்ளது.

இதற்கு மாறாக வாழ்க்கை விஷயத்தில் புத்தகங்கள் உண்மை பேசுவதில்லை, இதில் நாம் நேர்மையானவையென நம்பும் நூல்களும் அடக்கம், எடுத்துரைக்கும் திறமைபோதாமலும், சொற்கள் மற்றும் வாக்கியங்கள் பற்றாக்குறைகளாலும் அரைகுறையாக முடித்துவைக்கபடும் நூல்களில் கிடைப்பதெல்லாம் நமது வாழ்க்கையைபற்றிய தட்டையான மற்றும் மோசமான சித்தரிப்புகள். அன்றியும் உதாரணத்திற்கு லூக்கன்(Lucan)27 கவிதைகளில் இருக்கிற செறிவோ, மிதமிஞ்சிய உன்னதமோ வாழ்க்கையில் காணமுடிகிறதா என்றால் இல்லை. வேறு சிலர் இதற்கு நேரெதிர், அவர்கள் நம்முடைய பெட்ரோனியஸ்(Petronius)28 போன்றவர்கள். வாழ்க்கையை எளிமையாக அணுகும் மனிதர்கள். அவர்களிடத்தில் வாழ்க்கை, பந்துபோல தட்டினால் துள்ளி எழவும் செய்யும், காற்றிழந்தால் அமைதியாவும் கிடக்கும். எடை அவசியமற்ற பிரபஞ்சத்தில் இப்பந்துடன் விளையாடுவது மிகவும் எளிது. நம்முடைய எதார்த்தஉலகை கவிஞர்கள் தங்கள் படைப்புகளில் காண்பிப்பதில்லை. அவர்கள் காட்டும் உலகம் பரந்துவிரிந்தது, மிகவும் அழகானது, கிளர்ச்சியூட்டுவது, இனிமை மிக்கது. நம்முடைய உலகினின்று முற்றிலும் வேறுபட்டது, நடைமுறையில் மனிதர் வாழ்க்கைக்குச் சாத்தியமற்றது என்றும் கருதலாம். தத்துவ வாதிகள் உண்மைதரும் நெருக்கடிக்கு ஆளாகவேண்டியுள்ளது – ஒர் உலக்கையோ அல்லது தீயோ அவற்றின் தாக்குதலுக்கு உட்படும் பொருளுக்குத்தரும் நெருக்கடி இவர்களுக்குண்டு. நாம் அறிந்திருப்பதுபோன்று எந்த ஓர் உயிரியும் அல்லது உண்மையும் இந்த மாற்றத்திற்குட்பட்ட பொருளிலோ, சாம்பலிலோ இருப்பதில்லை. வரலாற்றாசிரியர்கள் இறந்தகாலத்தின் முழுமையான அமைப்பு முறைகளை எடுத்துரைக்கிறார்கள். இவற்றில் தொடர்ச்சியாகச் சொல்லப்படும் காரணங்களும் விளைவுகளும் நிரந்தர உண்மையாக இருக்கவேண்டும் என்பதற்காக மிகவும் துல்லியமாகவும் மிகத் தெளிவாகவும் சொல்லப்படுகின்றன. வரலாறு என்பது உயிரற்ற உடல், தன்னை யார் இப்படி போட்டார்கள் என காரணம் கேட்காது, எனவே எங்கேயும் எப்படியும் இடம்மாற்றிப் போடலாம். வரலாற்றின்படி அலெக்ஸாண்டர் தத்துவ வாதியான புளுய்டார்க்கிடம்(Plutarch) ஒருபோதும் பிடிபடமாட்டார் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும. அதுபோல கதைசொல்லிகளும் ஆபாசக் கதையாசிரியர்களும் ஈக்களை ஈர்க்கின்றவகையில் மாமிசங்களைத் தொங்கவிடும் கசாப்புகடைகாரனுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. இத்தனை சிக்கல்களுக்கிடையிலும் புத்தகமற்ற உலகத்தை என்னால் நினைத்துப் பார்க்கமுடிவதில்லை. பிரச்சனை புத்தகங்களில் சொல்லப்படும் உண்மைகளால் அல்ல, அவை முழுமையாக ஒருபோதும் சொல்லப்படுவதில்லை என்பதால் நேர்வது.

மனிதர்களின் நேரடி அவதானிப்பு என்பது மேலும் ஒரு அரைகுறையான அவதானிப்பன்றி வேறில்லை, காரணம் மனிதரின் வன்மத்திற்குத் தீனிபோடும் இவ்வழிமுறை பெரும்பாலும் கீழ்த்தரமான பார்வைக்கு உட்பட்டவை. சமூக அமைப்பில் ஒருவரின் இடம், வகிக்கும் பதவி கிடைக்கும் வாய்ப்புகள் என அனைத்தும் மனிதர்களை அறியமுற்படுவோரின் பார்வைப் பரப்பை வரையறைக்கு உட்படுத்துகின்றன : என்னுடைய அடிமைக்கு என்னை அவதானிக்கவென்று கிடைத்துள்ள சௌகரியங்கள் அவனை நான் கவனிப்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை என்கிறபோதும், இவ்விஷயத்தில் வாய்ப்புகள் என்னைப்போலவே அவனுக்கும் வரையறைக்கு உட்பட்டவை. கடந்த இருபதாண்டுகளாக இந்த தளர்ந்த வயதிலும் எஃபோரியன் எனக்கு எண்ணெய்பாட்டிலையும், கடற்பாசியையும் தவறாமல் கொண்டுவந்து தருகிறார். எனக்கு அவரைபற்றித் தெரிந்ததெல்லாம், அவருடைய கடமைதவறாத இந்தசேவை மட்டுமே, அவரும் தனது தரப்பில் எனது குளியலைப் பற்றி அறிந்திருப்பார். அரசனோ அடிமையோ முயற்சி யாருடையதாயினும் விளைவுகள் இரண்டுமே அவரவர் ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டவை. எவரைக்குறித்தும் நாம் தெரிந்துவைத்திருப்பவை அனைத்துமே நமக்குமுன்பாக வேறொருவர் அறிந்தவையே. தற்செயலாக ஒருவன் குற்றத்தை ஒப்புகொள்கிறான் எனில் தன்னுடைய குற்றத்திற்கு வாதிடுகிறான் என்று பொருள் ; தவிர அவனுக்குரிய மன்னிப்பும் தயார் நிலயில் இருக்கிறது. அடுத்ததாக நம் கவனத்திற்குரிய அந்நபர் இதுபோன்ற பிரச்சனையில் தனியொருருவன் அல்ல என்பதும் தெரியவரும். ரோம் நகர காவலதிகாரியின் அறிக்கைகளை நான் வாசிக்க ஆசைப்படுகிறேன் என என்னைக் குற்றம் சாட்டியதுண்டு. தொடர்ந்து அவைதரும் தகவல்கள் என்னை வியப்பில் ஆழ்ந்த்துகின்றன : நண்பர்கள், சந்தேகத்திற்குரிய நபர்கள், கேள்விப்பட்டிராத மனிதர்கள், தெரிந்தமனிதர்களென அனைவரின் முட்டாளதனமான காரியங்களும் எனது தவறுகளை நியாயப்படுத்த உதவுகின்றன. அதுபோல நிர்வாண ஆசாமியையும், ஆடைதரித்தமனிதனையும் ஒப்பிட்டுப் பார்க்கின்ற விஷயத்திலும் எனக்குச் சோர்வென்பது கிடையாது. ஆனால் வெகுளித்தனமாகத் தாயரிக்கபட்ட இவ்வறிக்கைகள் வழங்கும் இறுதி தீர்ப்புக்கு, இம்மி அளவுகூட உதவாமல் மலைபோல குவிந்திருக்கும் எனது கோப்புகளோடு கோப்பாய் சேர்க்கப்படுகின்றன. ஏன் நமது குற்றவியல் நீதிபதியே கூட குற்றத்தை இழைத்திருக்கலாம் ஆனால் அவருடைய தவசித்தோற்றம் அதைப் புரிந்துகொள்ள சிறிதுகூட அனுமதிப்பதில்லை. தற்போது எனக்கு முன்பாக ஒன்றுக்குபதிலாக இரண்டு தோற்றங்கள் : ஒன்று நீதிபதி எனும் பொய்த் தோற்றம், மற்றொன்று அவர் இழைத்தக் குற்றம்.

தன்னைத்தானே ஒருவர் கவனத்திற்கொள்ளுதல் என்பது என்னைப்பொறுத்தவரை எந்தவொரு நபருடன் இறுதிமூச்சுவரை வாழ்க்கையைத் தொடரவேண்டிய நிர்ப்பந்தம் நமக்கு உள்ளதோ, அவருடன் கைகோர்ப்பது. அந்நபருடனான எனது பரிச்சயம் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளை நெருங்கியுள்ள கட்டத்தில் இந்த அணுகுமுறையில் பிழைகளே இல்லையென கூறமாட்டேன். முதலாவதாகச் சற்று ஆழமாக என்னை அறியமுற்படும் வழிமுறை. இம்முறையில் அனைத்தும் தெளிவற்றும், உள்விவரமாகவும், வெளிப்படைத் தன்மையில்லாமலும், கூட்டுக் களவாணிகளுக்கிடையிலான இரகசியத்தை ஒத்தவையாகவும் இருக்கின்றன. இரண்டாவது வழிமுறை என்பது யாரோஒருவர்போல அறிவின் துணகொண்டு எனது வாழ்க்கையை பாரதூரமாக கூர்ந்து கவனித்தல். இந்த வழிமுறையில் அறியப்படும் உண்மைகள் எண்களைக்கொண்டு நான் எழுதும் கோட்பாடுகளைபோல இறுக்கமாக, உறைநிலயில் இருக்கின்றன, தவிர வேறொரு நபரின் வாழ்க்கையை பார்ப்பதைபோன்ற அனுபவத்தையும் எனக்குத் தருகிறது. அறிதலுக்கு கையாளும் இவ்விரண்டுவழிமுறைகளுமே எளிமையானவை அல்ல. ஒன்று தனக்குள் பயணித்து அறிவது மற்றது தன்னிடமிருந்து வெளியேறி அறிவது. ஒருவித அசமந்தநிலையால், எல்லோரையும் போலவே மேற்கண்ட வழிமுறைகளுக்கு மாற்றாக அதிகம் நான் கையாளுவது வழக்கமான பாணிகள். விளைவாக எனது வாழ்க்கையின் ஒரு பகுதி வெளி உலகால், அவர்களின் முன்முடிவுகளால் வடிவமைக்கப்பட்டது, வேறு வார்த்தைகளில் சொல்வதெனில் முன்னதாக தயாரித்திருந்த ஓர் உடையை போதிய அனுபவமற்ற தையற் கலைஞன் ஒருவன் மிகுந்த பிரயாசையுடன் ஏடாகூடமாக எதையோ செய்து நம்முடையதென்று கொடுப்பதை ஒத்தது. அதாவது உரிய உபகரணங்கள் இல்லதது ஒரு குறையெனில், அவையும் கிட்டத்தட்ட தட்டையானவை, என்ன செய்ய ? தற்போதைக்கு இவற்றைத் தவிர வேறு எவையும் கைவசமில்லை ; விளைவாக இருப்பதைக்கொண்டு ஏதோ ஒருவகையில் என் மனித விதிக்குரிய ஒரு கருத்தை வடிக்கவேண்டியிருக்கிறது.

எனது வாழ்க்கையைப்குறித்து யோசித்துப்பார்க்கிறபோது, அதன் ஒழுங்கின்மை அதிர்ச்சி தருகிறது. காவியத் தலைவர்களின் இருத்தல் பற்றி நாம் கேள்விப்படுவன அனைத்தும் எளிமையானவை; ஓர் அம்பு போல நேராகச் சென்று இலக்கை அடைவது. மனிதர் வாழ்க்கையை ஒரு சூத்திரமாக சுருக்கிப் பார்ப்பதே பெரும்பாலான மனிதர்களின் விருப்பமாக இருக்கிறது, ஒரு சில நேரங்களில் அச் சூத்திரம் பெருமை பேசுதல் அல்லது புலம்பலாகவும் இருப்பதோடு நேரம் காலமின்றி பிறரைக் குறைகூறியும் காலம் தள்ளும். மனிதர்களுடைய ஞாபகத்திறன் கரிசனத்துடன் நினைவூட்டும் அனைத்துமே தெளிவாவையாகவும், வெளிப்படையானவையாகவும் இருக்கின்றன. எனது வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் அதன் வடிவ விளிம்புகளில் கெட்டித்தன்மை இல்லை. எனது தோற்றத்தை உண்மையில் தீர்மானிப்பது நான் என்னவாக இருப்பதில்லையோ அது, ஆம் எனது வாழ்க்கையில் இப்படி அடிக்கடி நிகழ்கிறது, அதுவும் மிகவும் அப்பட்டமாக. மிகப்பெரிய போர்வீரன் என்று பட்டம், உண்மையில் யுத்தங்களில் பெரிதாக எதையும் சாதித்திருப்பேனா என்றால் இல்லை. நீரோ இறக்கும்பொழுது தானொரு மிகப்பெரிய கலைஞன் என்ற பெருமிதத்துடன் இறந்தான், அப்படியொரு பெருமைக்கு நான் தகுதியானவனா எனகேட்டால் இல்லையென்பது என்னுடைய பதில் இருந்தும் கலைகளில் தீவிரநாட்டம் கொண்டவனென்று எனக்குப் பெயர், குற்றங்களை இழைப்பதில் வல்லவன் ஆனாலும் குற்றவாளி அல்ல. பெரிய மனிதர்களை அவர்கள் சமூகத்தில் அடைந்துள்ள உச்சத்தைக்கொண்டு, (விதிவிலக்காக் அந்நிலமையில் வாழ்க்கைமுழுதும் அம்மனிதர்களைத் தாங்கிப் பிடிப்பவை அரிய செயல்கள்) அவர்கள் பண்புகளும் தீர்மானிக்கப்படுகின்றனவோ என்கிற எண்ணமும் சில நேரங்களில் எனக்கு வருவதுண்டு. இம்மனிதர்கள் எதிரெதிர் துருவங்களைச் சேர்ந்தவர்கள்.எனக்கும் இங்கும் அங்குமான இருதுருவ வாழ்க்கை அனுபவமுண்டு, நிலையாக ஓரிடத்தில் இருந்த தில்லை. வாழ்க்கை அதன் இழுப்பிற்கு என்னைக் கொண்டு செல்வதில் குறியாக இருந்திருக்கிறது.இருந்த போதிலும் எனது இரண்டும்கெட்டான் வாழ்க்கை குறித்து ஒரு விவசாயியை போலவோ, நேர்மையான சுமைதூக்கியைப்போலவோ புலம்பவும் விருப்பமில்லை பெருமைபேசவும் ஆர்வமில்லை.

என்னுடைய வாழ்நாட்களின் இயற்கை வனப்பு என்பது மலைப்பிரதேசங்கள், ஒழுங்கின்றி குவிக்கபட்டப் பலவகையான பொருட்களால் உருவாக்கப்பட்டத் தோற்றத்திற்கு சொந்தமானது. உள்ளுணர்வும், அனுபவபாடமும் சமஅளவில் கலந்துருவான எனது இயற்கைத் தன்மையை எதிர்கொள்வதும் அங்குதான். உருண்டுடையும் கருங்கற்கள் கூராக புடைத்துக்கொண்டு ஆங்காங்கே கிடப்பதையும் தவிர்ற்கவியலாது. எனது வாழ்க்கையில் பின்னோக்கிப் பயணித்து அதிலிருந்து ஒரு திட்டத்தை கண்டறியும் யோசனையும் அதன்பொருட்டு ஈயம் அல்லதுபொன்னாலான இரத்தநாளத்தை தொடர்வது அல்லது பூமியின் ஆழ்பகுதியில் பாய்ந்தோடும் ஆற்றுடன் பயணிப்பதென கடும் முயற்சிகளுக்கு நான் தயார். ஆனால் பிரச்சனை என்னவெனில் இதுபோன்ற உபாயங்கள் அனைத்தும் நம்முடைய நினவுகளின் ஏமாற்றுத் தந்திரங்களாக இருக்கின்றன. அவ்வப்போது வாய்க்கும் சந்திப்புகள், சகுனங்கள், சங்கிலித் தொடர்போல நிகழும் சம்பவங்கள் அனைத்திலும் என்னால் ஊழ்வினையை உணரமுடிகிறது. எண்ணற்றபாதைகள் என்பதால் எங்குபோய் சேருவோம் என்பதில் குழப்பம், அவ்வாறே பெரும் எண்ணிக்கையிலான கூட்டுத்தொகைகளும் சரியான விடை காண உதவாதென்பதை அறிவேன். இத்தனை வேறுபாடுகளுக்கிடையிலும், இவ்வளவு அலங்கோலங்களுக்கிடையிலும் ஒரு மனித இருப்பை என்னால் உணர முடிகிறது. ஆனால் அம்மனித உருவம் சூழ்நிலைகளின் நெருக்கடிகள் வடித்தவைபோல் உள்ளது. அவனுடைய தோற்றம் நீரில் தெரியும் பிம்பம் போல தெளிவற்றதாகவும் இருக்கிறது. தங்கள் செயல்கள் தங்களைப் பிரதிபலிப்பதில்லை எனத் தெரிவிக்கிற மனிதர் கூட்டத்தைச் சேர்ந்தவன் நானில்லை. உண்மையில் மனிதர் செயல்பாடுகள் அவர்களைப் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும், ஏனென்றால் மனிதர்களை அளப்பதற்கென்று என் கைவசமிருப்பது அதுவொன்றுதான் அதுபோல பிறமனிதர்களின் நினைவுகளில் என்னைச் சித்தரிக்க உதவும் வழிமுறையும் அதுவொன்றுதான்; ஏனெனில், செயலின் அடிப்படையில் தன்னைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்திக்கொள்வதும், தன்அடையாளத்தை மாற்றி எழுதுவதும் ஒருவனுக்கு உயிரோடிருக்கிறபோது மட்டுமே சாத்தியம், மரணித்தபின் இயலாது. ஆனால் எனக்கும் செயல்களுக்கும் இடையே ஒரு வரையறுக்க முடியாத இடைவெளி உள்ளது. அதற்கான சான்று ஒவ்வொருநாளும், செய்த காரியங்களை எடைபோடுவதன்றி, செயல்கள் பற்றிய விளக்கத்தையும் எனக்குநானே தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விவகாரத்தில் சில காரியங்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் மிகவும் சொற்பம் என்பதால் பெரிதாக அவற்றைப் பொருட்படுத்தவேண்டியதில்லை. அதேவேளை வாழ்க்கை முழுவதும் நீடிக்கும் பணிகளைப் பற்றியும் பெரிதாக சொல்வதற்கில்லை. உதாரணமாக, நான் இதை எழுதுகையில், ஒரு பேரரசனாக இருப்பது கூட அத்தனை முக்கியமல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது.

என்னுடைய வாழ்க்கையின் முக்கால்பகுதிக்குச் சொந்தமான ஒட்டுமொத்த ஆசைகள், விருப்பங்கள் ஏன் எனது திட்டங்கள் உட்பட அனைத்தும் தெளிவற்றவை ; ஆவியைப்போல பிடிபடாமல் நழுவிச்செல்பவை என்பதால் செயல்கள் தரும் வரையறைக்கு உட்பட்டவையுமல்ல. எஞ்சியிருப்பது சற்று தெளிவான பகுதி, ஓரளவு உண்மைகளால் நிலை நிறுத்தப்பட்டது, அதேவேளை உறுதியாக வகைப்படுத்த இயலாதது, மேலும் சம்பவங்களின் வரிசை கனவுகளைப் போலவே குழப்பமானது. எனக்கென சொந்த காலவரிசை உள்ளது, ரோம் நிறுவப்பட்ட கால அடிப்படையையோ அல்லது ஒலிம்பியாட் (Olympiades)26 சகாப்தத்துடனோ இக்கால வரிசை இணக்கமானதல்ல. பதினைந்து ஆண்டுகாலம் நான் ராணுவத்தில் இருந்திருக்கிறேன் என்றால் உண்மையில் அது ஏதென்ஸ் நகர ஒரு நாள் காலைக்கும் குறைவானதே; வாழ்நாள் முழுக்க நான் சந்தித்த எண்ணற்ற மனிதர்கள் இருக்கிறார்கள, இவர்கள் எல்லோரையுமே ‘ஹேடீஸ்’ (Enfers-Hades) என்கிற கிரேக்க பாதாள உலகத்தில் அடையாளம் காண்பது இயலாது . நிலப்பரப்பின் எல்லைகளும் ஒன்றுடனொன்று சேர்ந்திருக்கின்றன, விளைவாக எகிப்தும், டெம்பே பள்ளத் தாக்கும் (la valée de Tempé) அருகருகே இருக்கின்ற உணர்வு. நான் திபூரில் (Tibur) இருக்கிறபோதும் எங்கோ இருப்பதைபோன்று உள்ளது. சிற்சில சமயங்களில் எதற்காக உயிர் வாழ்கிறோம் எனக்கூறும் அளவிற்கு வாழ்க்கை அர்த்தமற்றதாக இருக்கிறது, ஏதாவது அதைக்குறித்து எழுத மட்டுமல்ல சற்று கூடுதலாக அவதானிக்க வென்று கூட எனது கண்களுக்கு மட்டுமில்லை, முன்பின் அறிந்திராத மனிதர் பார்வைக்கும் எனது வாழ்க்கையில் ஒன்றுமில்லை. வேறு சில நேரங்களில், இவ்வாழ்க்கைத் தனித்துவம் கொணடதென்கிற எண்ணத்தைத் தருகிறது, அத்தனித்துவம் என்பது வேறொன்றுமல்ல, அதன் தகுதியின்மையும் உபயோகமின்மையும், சாமானியர்களின் அனுபவமாகக் கூட கருதவியலாத நெருக்கடியும் கூட்டாக உருவாக்கியது. எனது தீய குணங்கள் அல்லது நல்லொழுக்கங்கள் இரண்டுமே எனக்கு விளங்கவில்லை, இதற்கான காரணத்தை சொல்ல இயலுமாவெனில், நிச்சயம் சாத்தியமில்லை. வாழ்க்கையில் எனக்கு வாய்த்த யோகம் கூடுதல் தகவலை அளித்திருக்கலாம், ஆனால் அதுகூட தொடர்ந்து தொய்வின்றி தெரிவிக்கப்போதாது கால அவகாசம் தேவை என்பதுபோல இருக்கிறது, அப்படியே தெரிவித்தாலும் ஒப்புக்கொள்ளும் வகையில் இருக்காது. தமது வாழ்க்கையை அதிஷ்டத்தின் கருணையென்பதை முற்றாக மறுக்கும் மனித மனம் மட்டுமே, தான் « வாய்ப்புகளின் தற்காலிக தயாரிப்பு » என்பதை ஏற்கிறது, அதேவேளை அந்தவாய்ப்பிற்கு தானும் காரணமென்றும் கடவுள் மட்டுமே காரணமில்லை எனவும் நம்புகிறது. வாழ்வின் ஒரு பகுதி (தகுதியற்றவை என நாம் கருதும் வாழ்க்கைக்கும் இது பொருந்தும்) தமது பிறப்புக்கான காரணங்கள், அதன் ஆரம்ப புள்ளிகள், வாழ்க்கைக்கான ஆதாரங்கள் ஆகியவற்றைத் தேடி அறிவதில் காலத்தைச் செலவிடுகிறது. அவற்றை அறியப் போதாத நிலைமையில் சிற்சில சமயங்களில் புதிர்தனமான விளக்கங்களை ஏற்க வேண்டியுள்ளது, நமது வெகுசன புத்தி உரிய விளக்கத்தை பெற தவறுகிறபோது, மாயமந்திரங்களை நம்புகிறோம். அனைத்து சிக்கலான கணக்குகளும் தவறான விடையாக முடிகிறபோது, தத்துவ வாதிகளும் சொல்வதற்கு ஏதுமில்லை என்கிறபோது, பறவைகள் திடீரென எழுப்பும் ஒலி, வெகுதொலைவிலுள்ள கிரகங்களின் சுழற்சி எதுவாக இருந்தாலென்ன, தேடி எதையாவது புரிந்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

—————————————————————————————

26. ப்ளோகன் (Phlegon) வரலாற்றாசிரியர், எழுத்தாளர், சக்கரவர்த்தி அதிரியன் கீழ் பணியாற்றியவர், ஒலிம்பியாட் (Olympiad) என்கிற புகழ்பெற்ற வரலாற்றுத் தொகுப்பை எழுதியவர்.

27. லூக்கான் (Marcus Annoeus Lucanus – AD 39-65) ரோமானியக் கவிஞர்.

28. பெட்ரோனியஸ்(Petronius AD27-46) நீரோ காலத்தில் அரசவை அலுவலர்,எழுத்தாளர்;

Series Navigation<< அதிரியன் நினைவுகள்-2அதிரியன் நினைவுகள் – 4 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.